You are here
நூல் அறிமுகம் 

நீவாநதி என்னும் நாவல் வாழ்க்கை

ச.ஆறுமுகம்

வா                டைக்ரீஸ், தேம்ஸ், சிந்து, கங்கை, காவிரி மட்டுமின்றிப் பாலைப் பனிவெளியும், மானாவாரியும் கொங்கும் கரிசலும் நாஞ்சிலும் நொய்யலும் நெய்தலுமெனப் பதிவாகியுள்ள வாழ்க்கைகளை அறிந்த தமிழ் இலக்கிய உலகிற்கு கவிப்பித்தன் எழுதிய “நீவாநதி“ நாவல் தரும் பொன்னையாற்றங்கரையின் எளிய மனிதர்களின் வாழ்க்கை ஒரு புதிய வரவு.
ஆந்திர மாநிலத்தின் மலைகளில் பெய்யும் மழை பெருவெள்ளமாக உருமாறி பலமநேரி காட்டைக் கடந்து, சித்தூரைத் தாண்டி, தெங்கால் கிராமத்துக்குச் சற்று முன்னால் தமிழ்நாட்டுக்குள் பொன்னை நதியாக நுழைந்து, பொன்னை, வசூர், மேல்பாடி, திருவலம் வழியாகப் பாலாற்றில் சங்கமமாகின்றது. இந்த ஆற்றின் குறுக்கே 1855-ல் வசூர் கிராமத்தில் வெள்ளைக்காரன் 252.3 மீட்டர் நீளத்துக்கு அணைக்கட்டு ஒன்றினை அமைத்து, அதிலிருந்து இடதுபுற மற்றும் வலதுபுறக் கால்வாய்கள் வழியாக வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 129 ஏரிகளை நிரப்பி 8850 ஹெக்டேர் நிலத்தில் முப்போகம் விளைவிக்கும் அளவுக்குப் பாசனவசதி அளித்தான். இளநீர் போலத் தெளிந்த நீர் பாய்ந்த இந்த ஆறு, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட பொன்னை, சோளிங்கர், வேலூர் எனப் பல நகரங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது. ஆனால், இன்று சொட்டு நீர் கூட வரவின்றி வறண்டுபோனதுடன் அந்த ஆற்றங்கரை மனிதர்களின் வாழ்க்கையும் பாழ்பட்டுப் போனது. ஆறு உயிரோடிருந்த காலத்தின் வாழ்க்கையையும் ஆறு மாண்டு போனதால் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் வாழ்க்கையை இழந்து தவிக்கும் வேளாண் சமூகத்தின் துயரங்களையும், சிப்காட் என்ற பெயரில் வந்த தோல் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளால் தண்ணீரும் காற்றும் மொத்தச் சூழலும் மாசுபட்டு, மொத்த விவசாயமும் ஒழிந்து, பெயர் தெரியாத நோய்கள் தாக்கும் அவலங்களையும் இந்நாவல் அப்பட்டமாகப் பதிவுசெய்துள்ளது.
ஒரு படைப்பினை இலக்கியத் தரத்திற்கு உயர்த்துவதில் நிலவியல் பதிவுக்கு மிக முக்கிய இடமுண்டு. தமிழ் இலக்கியத்தில் நிலவியல் பதிவு என்பது உயிர்ப்புடன் மேற்கொள்ளப்படுவது. அதன் தொடர்ச்சியாகவே நீவாநதி நாவலும் நஞ்சை, புஞ்சை நிலங்கள், அவற்றில் பயிராகும் கம்பு, நெல், சோளம், கேழ்வரகு, கடலை, மொச்சை, காராமணி, துவரை, அவரை, மிளகாய், கத்தரி, வெண்டை, தக்காளி, பூசணி எனப் பயிர்வகைகளையும் வள்ளிமலை, கரிமலை, நெச்சிகுட்டை மலை, தாமரைக்குளம் மலை, கரிங்கல் குன்றுகள், கரம்புகள் என மலை மற்றும் காட்டுவெளிகள், ஆறு, ஏரி, மாரியம்மன் குளம், கொள்ளாபுரியம்மன் குளம், சின்னனான் குளம், சதுரகுட்டை, ஏரிக்கால்வாய், வெள்ளைக்காரன் கால்வாய் என நீர்நிலைகள், ஆடு, மாடு என மேய்ச்சல் விலங்குகள், உழவு மாடுகள், கறவை மாடுகள், கழுதை, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகளோடு, குரத்தி, நரி, முயல் எனக் காட்டு விலங்குகள், கிளி, கொக்கு, புறா, மைனா, கவுதாரி, பருந்து, காகம், கீச்சாங்குருவிகள், பீக்குருவிகள் எனப் பறவைகள், மா, புளி தைலந்தோப்பு மற்றும் இலுப்பைத் தோப்புகளையும் அரசு, அவிஞ்சி, நுணா, கொன்றை, இலுப்பை, ஈந்து, நாவல், வேம்பு, புங்கை, பனை, எட்டி, பன்னீர்ப்பூ, கருவேலம், பீவேலம் என மரங்களையும், வெள்ளெரி, ஆவாரம், பாலைப் பூண்டு, மொளகாப் பூண்டு, புர்தண்டு, பிரண்டை, பூனைக்காய்ச்சல், கடல்பால் செடிகள், நரிவெங்காயம், கப்புச் செடி, காரை, கள்ளி, சீக்கம் முட்செடிகள், வேலஞ்செடிகள், துளசி, கோரை, கருகம்புல், சாணிப்புல் மஞ்சம்புல் எனத் தாவர வகைகளையும், குரவை, கெளுத்தி, முட்டைக் குரவை, பரக்குரவை, உளுவை, வெளிச்சி, தேளி, குள்ளக்கெண்டை, ஜப்பான் கெண்டை, ஆரால், வரால் என மீன்களையும், சிங்க வலை, தூரி வலை, கண்டவலை என மீன்பிடி வலைகள், அட்டங்கால், சூறாக்கோல், ஒட்டந்தட்டால் தேவிப் பிடித்தல், சால்வைத்துத் தண்ணீர் இறைத்துப் பிடித்தல் போன்ற மீன்பிடி முறைகளையும் நெல், கேழ்வரகு போன்ற தானியங்கள் அறுப்பு அடிப்பு முறைகள், புல் சேகரிப்பு முறைகளையும், முயல் வேட்டையையும் உயிர்ப்புடன் பதிவுசெய்துள்ளது.
ஆண்டுக்கு மூன்றுமுறை தண்ணீர்ப் பெருக்கு ஏற்படும் இந்த ஆறும் உழவுத்தொழிலும், சைவம், வைணவம், கௌமாரம் மற்றும் கங்கையம்மன், எல்லையம்மன் எனச் சிறுதெய்வ இறை நம்பிக்கைகளும், சாதிமுறைகள், அவற்றின் இணக்கம், ஆதிக்கம் மற்றும் அவமானத்துக்குரிய அடக்குமுறைகள், வள்ளிமலைத் தேர் திருவிழா மற்றும் உள்ளூர் விழாக்கள், பண்டிகை, யாத்திரை, கூத்து, திருமண மரபுகள், பாலியல் வன்முறை, இயற்கை மீறிய வல்லுறவு, சாதி மறுப்புக் காதல், ஊர்ப்பஞ்சாயத்து, தாயம், ஆடுபுலி ஆட்டம் எனக் கிராமிய வாழ்முறை மற்றும் நடைமுறைகள், விதிவிலக்குகள் அனைத்துக்குள்ளும் நம்மை இழுத்துச் செல்லும் இந்த நாவல் நல்லதொரு வாழ்வனுபவத்தைத் தருகிறது.
பதமான வேக்காட்டில், கையில் பிட்டு எடுத்தால் விரல்களில் ஒட்டாத பதத்தில் வெண்ணெய் எடுப்பதுபோல இருக்கும் களி, அதற்குத் தொட்டுக்கொள்ளும் கருவாட்டுக்குழம்பு, கத்திரிக்காய்க் காரக்குழம்பு, மொச்சைக் குழம்பு, வெண்டைக்காய்க் கடைசல், வடகம் போட்டுத் தாளித்த முருங்கைக்கீரைக் கடைசல், மீன் குழம்பு, கறிக்குழம்பு, காராமணி வடை, துளசி சேர்த்து அவித்த பச்சை மொச்சை போன்றவற்றிலேயே மகிழ்ந்து போகும் கிராமத்தினரின் எளிய உணவு வகைகளைச் சுவையூற விவரிக்கும் இந்நாவல், அவற்றின் சுவையறியா வாசகனுக்குள் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.  கனவுக்கன்னிகளின் இதழ்களை நினைத்துக்கொண்டே பனை நுங்கு உறிஞ்சும் பதின்பருவக் காளைகளைக் காணுந்தோறும்  நகை எழுவது இயல்புதான்.
ஊர்நலத்தில் அக்கறைமிக்க நாட்டாண்மை சின்னசாமி மற்றும் அவரது நண்பர் குப்பன் இருவரும் ஊர்ப் பிரச்னைகளை அலசுவதும், விவாதித்துப் புரிந்துகொள்வதும் அவற்றைத் தீர்ப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவதுமாக, அவர்களின் உரையாடல் மூலமாகவே அப்பகுதிக்கேயுரிய பேச்சுமொழியில், பழகுநடையில், கிராமத்துப் பழமொழிகள், சொலவடைகளில், சலிப்பின்றி விரையும் இந்நாவல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  அயரா உழைப்பில் மகிழ்ச்சி காணும் விவசாய மனமும், கூட்டு முயற்சியின் வெற்றியும் பண்பாட்டு உறுதியும் அனுபவப் பொருத்தமான உவம உவமேயப் படிமங்களில் கவித்துவ விவரிப்பாகத் தெறிக்கின்றன. உறவுகளின் நெருக்கத்தில், அன்பும், ஆதரவும், துயரமும் அவலமும் வெளிப்பட்டு நிற்கிறது. எள்ளல் சுவைக்கும் குறைவில்லை.
புஞ்சை நிலந்தானே கையகப்படுத்தப்படுகிறதென்ற வாதத்துக்கு இந்த நாவல் நல்லதொரு பதிலைத் தருகிறது. நஞ்சை விளைந்தாலும் அது வீடுவந்து சேர்வதில்லை. களத்திலிருந்தே சந்தைக்குப் போய்விடும். புஞ்சை வெள்ளாமையே விவசாயி வீட்டை நிறைக்கும். புஞ்சையில் கிடைக்கும் கடலை, மொச்சை, துவரை, காராமணி வீட்டில் மிதிபடும். உழவன் குடும்பத்தின் வயிறை நிறைக்கும் புஞ்சைதான் அவனிடமிருந்து பிடுங்கிக்கொள்ளப்படுகிறது
நிலத்தைக் எடுத்துக்கொண்ட பின்னும் உரிய விலை கொடுக்காமல் நீதிமன்றத்துக்கு அலையவைப்பதும், நீதிமன்ற ஆணைக்குப் பிறகும் இழப்பீட்டினை வழங்காமல் இழுத்தடிப்பதும், நிலம் கையகப்படுத்தலில் அரசு மற்றும் அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் அனைத்துப் புனைவேடங்களும் இந்நாவலில் வெட்டவெளிச்சமாக்கப்படுகிறது.
ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் காலியாகக் கிடக்கின்றன. முதல் பருவ மழை பெய்கிறது. உழவனின் கைகள் பரபரக்கின்றன. பட்டினி கிடக்கும் உழவன் காலியாகக் கிடக்கும் அவனது நிலத்தைப் பார்த்துப் பதைபதைக்கிறான். நிலத்தில் இறங்கினால் பயிர் நட்டத்தோடு கைதாகும் நிலைமையும் ஏற்படலாம். துயரத்தோடு தன்னை அடக்கிக்கொள்கிறான்.
ஆந்திர அரசு அணையினைக் கட்டி, தண்ணீர் வராமல் தடுத்தது. அதனைக் கண்டும் காணாமலிருந்த உள்ளூர் அரசு நிலத்தைப் பிடுங்கி வயிற்றிலடித்தது. ‘சர்க்காரே சோற்றைப் பிடுங்கிக் கொண்டால் விவசாயி என்ன செய்ய முடியும்?’ என்பதுதான் இந்நாவல் மனிதர்களின் கேள்வி.
நாவலின் தொடக்கத்தில் உற்சாகத்துள்ளலோடு ஏரிக்குத் தண்ணீர் திருப்ப மணல்செராயோடு செல்லும் நாட்டாண்மை சின்னசாமி ரெட்டியார், நாவலின் முடிவில் மண்செராயை பழைய இரும்பு வியாபாரியிடம் போடுகிறார். அவன் ஒன்றரைக்கிலோ வெங்காயம் கொடுக்கிறான். அந்த வெங்காயத்தைச் சாப்பிடும்போது ரெட்டியாரின் கண்கலங்குகிறது. ”ரொம்பக் காரமா இருக்கிறதா?” என மனைவி கேட்கிறார். ‘’ஒரு ஆத்தையே வித்து வாங்கிய வெங்காயமாச்சே’’ எனப் பதில் சொல்கிறார்.
வளர்ச்சி, தொழில்மயம், அந்நியமுதலீடு எனப் பரபரக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயப் பெருங்குடிகளின் வாழ்க்கையைக் காப்பாற்றும் கடப்பாடு கிடையாதா? திட்டங்கள் தீட்டுவோரின் காதுகளுக்கு இக்கூக்குரல்கள் எப்போது போய்ச் சேரும்? என்ற சிந்தனைக் கேள்விகளோடும் கனக்கும் மனத்தோடும்தான் நம்மால் நாவலைக் கீழே வைக்க முடிகிறது.

Related posts

Leave a Comment