You are here
மற்றவை 

தமிழும் மலையாளமும் நேருக்கு நேர்

தொகுப்பு: ஜெயஸ்ரீ

இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மூன்றாம்தர எழுத்தாளர்களையும் நாமறிவோம். தொப்புள் கொடி உறவுள்ள தமிழின் இலக்கியச் சலனங்களைப் பற்றியோ, கன்னடத்தின் எழுத்து முறைகளையோ நாம் அறிவதில்லை. தெலுங்கின் 5 எழுத்தாளர்களின் பெயர் சொல்ல முடியுமா என்று கேட்டாலும் தெரியாது. இது பெரியதொரு குறைபாடுதான். இலக்கியத்தின், திரைமொழியின், இதர கலைகளின் தமிழ்ப் பார்வைகள் என்ன? அவற்றுடனான மலையாள உறவுகள் எவ்வளவு திடமானது.
‘சந்திரிகா’ ஓணப் பதிப்பிற்காக தமிழ் – மலையாள எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் திருவண்ணமலையில் பவா செல்லதுரையின் வீட்டில் ஒருங்கிணைந்தனர். பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கின், தமிழ்-மலையாள எழுத்தாளர் ஷாஜி சென்னை, மொழிபெயர்ப்பாளர்களான     கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, தமிழின் இளம் எழுத்தாளன் ராஜகோபால், திரைப்பட செயற்பாட்டாளன் தமிழ் ஸ்டூடியோ அருண், பிரபல தமிழ் இலக்கியவாதி பவா செல்லதுரை, சிஹாபுதீன் பொய்த்தும்கடவு என்று இவர்கள் உரையாடலில் பங்கேற்றனர். தமிழ்-மலையாள இலக்கிய வடிவங்களின் வரலாறு, கலை கலாச்சாரப் பின்புலம், சைபர் இலக்கியம், இலக்கியத்தின் நவீன முகம் என்றிவை உரையாடல் வழி கடந்து வந்தது.
ஷாஜி: இசை விமர்சகர்
மலையாளம் என்றொரு மொழி கடந்த 450 வருடங்களுக்கு முன் இருந்திருக்கவில்லை. இன்றைய வடிவத்தில் இல்லை. அதற்கு முன் தமிழும் மலையாளமும் கலந்த ஒரு மொழியும், அதற்கும் முன்னால் தமிழ் மட்டுமேதான் இந்த இரண்டு கலாச்சாரங்களின் மொழி. இன்று இரண்டு மொழிகளுக்கிடையில் மனிதனை நிறைத்து ஆட்களை அடையாளப்படுத்தும் ஒருவிதமான தாழ்ந்த செயல் சமூகத்தில் அரங்கேறிக் கொண்டியிருக்கிறது. ஜாதி, மதம், மொழி, வர்க்கம் என்று இப்படி துண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் மலையாளம் எதற்கும் உதவாது; கொல்லம் மலையாளம் பரவாயில்லை; மத்திய கேரள மலையாளம் ரம்மியமானது என்றெல்லாம் சொல்வது சரியல்ல. திருவனந்தபுரம் மலையாளத்தில்தான் ஜெயமோகன் எழுதுகிறார். சமஸ்கிருதத்தை முற்றிலுமாகத் தவிர்த்து அவர் அந்த வட்டார மொழியில் எழுதுகிறார். வட கண்ணூர் முஸ்லீம் மொழியின் சுவாதீனம் சிஹாபுதீனின் எழுத்தில் காணமுடியும். ஒவ்வொரு பகுதியின் உணவின் ருசியும் வேறுபட்டிருக்கும். அதேபோல அந்தந்த இடங்களின் மொழிக்கும் அவற்றிற்கே உரிய அழகுண்டு. ஆனால் அதிகார மையத்தின் பிரிவினை காரணமா என்று தெரியவில்லை, மக்கள் மனதில் பிரிவினை எண்ணம் ஏறியிருக்கிறது. அதன் காரணமாகத் தான் தமிழனை ‘பாண்டி’ என்று மலையாளிகள் அழைக்கிறார்கள். தமிழனைப் பற்றி மொத்தத்தில் மலையாளிகள் என்ன நினைக்கிறார்கள் என்று ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார். குளிக்காத, பல் தேய்க்காத Low Level Hygine உடன் வாழ்பவர்கள் பாண்டிகள். ‘ஒரு பாண்டி ஸ்டைல் இருக்கே’ என்று என்னிடம் கேட்பார்கள். பாண்டிய மன்னர்கள் ஆண்டிருந்த ‘பூதப்பாண்டி’ என்றொரு இடமே திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ளது. ‘பாண்டி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொண்டு மலையாளத்தில் – மலையாள இலக்கியத்தில் நிறைய – references இருக்கிறது. “பாண்டிக்குப் போனவன் பத்தாயத்தில்’ என்று சொல்வார்கள். பாண்டிக்குப் போவதென்றால் ஒரு நீண்ட யாத்திரை அது. ஆனால் நம்ப முடியாது. சிலசமயம் அவன் வீட்டின் கொல்லையிலேயே இருப்பான். பாண்டிகளை நம்பக் கூடாது என்றும் சொல்வார்கள். தமிழிலும் இப்படியெல்லாம் பேசப்படுகிறது. மலையாளியை நம்பக் கூடாது என்று இங்கேயும் சொல்வார்கள். ‘கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதீர்கள்’ என்றொரு வழக்கு இங்கே உண்டு. இதெல்லாம் ஒரு கலாச்சாரத்திற்கு ஒத்து வராத தரம் தாழ்ந்த செயல்கள் என்றே நான் நம்புகிறேன். எங்கிருந்தோ வந்து சேர்ந்ததுதான் இச்செயல்கள். ஆனால் இன்றைய புதிய தலைமுறை மலையாள இளைஞர்களைக் கவர்ந்திருப்பவர் இயக்குநர்  மிஷ்கின். தமிழ் சினிமா எடுக்கவே அவர்கள் விரும்புகின்றனர். மலையாள சினிமா உலகில் வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் ‘பிரேமம்’ என்ற படத்தின் கதாநாயகி ஒரு தமிழ்ப் பெண்தான். ‘பாண்டி’ என்றெல்லாம் சொன்னாலும் தமிழ் சினிமாவும், பாடலும், கலாச்சாரம் என எல்லாவற்றின் மீதும் அவர்கள் மிகுந்த மோகம் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட கலாச்சாரப் பரிமாற்றங்கள் பற்றியும் நாம் பேசலாம். தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘பிரேமமும்’ இங்கே ஹிட்தான். உங்களுக்கு ‘Thank you card’  போடுகிறார்கள். ‘நேரம்’ என்ற பெயரில் ஓர் இளைஞன் தமிழிலும் மலையாளத்திலும் ஒரு படம் செய்திருக்கிறான்.
மலையாளப் படங்களைப் பற்றிய மிஷ்கினின் பார்வை என்ன?
மிஷ்கின் (திரைப்பட இயக்குநர்) : 20–30 வருடங்களுக்கு முன் இந்தியாவில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்திருந்தது. இந்தியா முழுமையையும் அது ஒன்றிணைத்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் மலையாள சினிமாவும் பார்க்க முடிந்தது. என் அறிவில் சிவாஜிக்குப் பிறகு, சிறந்த நடிகன் பரத் கோபிதான். என் பதிமூன்றாம் வயதில்தான் நான் முதல்முதலாக பரத் கோபியைப் பார்க்கிறேன். வழுக்கைத் தலையும் ஒற்றை வேட்டியும், எளியவர்களின் மொழியுமாக அவர் நடிக்கும்போது வாழ்க்கையை மிக அருகே காண்பதாகத்தோன்றியது. இந்தியாவில் வேறெந்த நடிகனும் அவரைக் கடந்து சென்றதில்லை. என்னுடைய ஒரு ஆதர்ஷ புருஷனாக, நடிகனாக, முற்றிலும் ஒரு புதிய இடத்தில் நின்றுகொண்டு தன் வாழ்க்கையை ஒரு சாதாரணன் போல புரிந்துகொண்டு மொழியையும் சேர்த்து மிகுந்த மரியாதையோடு என் இதயத்தின் மிக அருகே என்னை அழைத்துச் சென்றதாகவே நான் கருதுகிறேன். சிவாஜியும் கமல்ஹாசனும் பெரியவர்கள். அவதாரங்களாகத் தான் அவர்களைப் பார்க்கிறேன். ஆனால் கோபி என்னருகே இருக்கிறார். ஓர் இயக்குநராகச் சிந்திக்கும்போது, ஒரு செய்தி தெளிவானது. நானறியாமலே நடிப்பைக் கற்றுக் கொண்டதும், என் பார்வைகளை வளர்த்திக் கொண்டதும் கோபியின் மூலம்தான். மலையாளப் படங்கள் நான் அதிகமாகப் பார்த்ததில்லை. ‘செம்மீன்’ போல சில படங்களையே பார்த்திருக்கிறேன். ஆனால் ஓர் எளிமை மலையாள சினிமாவில் இருக்கிறது. பார்த்த சினிமாக்கள் எல்லாவற்றிலும் வேட்டி கட்டி, துண்டு சுற்றி தங்களுடைய கிராமங்களில் வாழும் மனிதர்களாக இருந்தனர். என் ஆதியைத் தான் அவை நினைவுபடுத்தின. நானும் கிராமத்திலிருந்துதான் வந்திருக்கிறேன். என் முன்னோர்களைத் தான் அவர்களில் கண்டேன். ஆனால் மொழி வேறாக இருந்தது. சினிமாவிற்கு மொழி தேவையில்லையே 2 வார்த்தைகள்கூட மலையாளத்தில் எனக்குப் பேசத் தெரியாது. ஆனால் என்னுடைய முதல் படம் தொடங்கி இப்போதுவரை என் உதவியாளர்கள் மலையாளிகள்தான். அவர்கள் பேசும்போது தமிழாகத்தான் தெரிகிறது. சிலரெல்லாம் என்னையும் ‘பாண்டி’ என்று அழைத்திருக்கின்றனர். ஆனால் என் நண்பர்கள் அன்போடுதான் பழகியிருக்கிறார்கள்.
ஷாஜி: நீங்கள் பிறந்தது கேரளத்தில் தானென்று விக்கி பீடியா சொல்கிறதே?
மிஷ்கின்: அது அப்படியே இருக்கட்டும். என்னுடைய சகோதரர்கள் தான் அவர்கள். அது என்னுடைய நாடுதான். என்னுடைய நாடு சார்ந்த ஒரு மலையைச் சேர்ந்தவர்கள்தான் அவர்கள். அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்றேன். என் வாழ்வில் பெரும் புதிர்தான் நான் மலையாளியா, தமிழனா என்பது. முதலில் நான் ஒரு மனிதன். அந்தச் சிந்தனை மனதில் உறைந்து விட்டால் பிறகு இந்தப் பிரிவினைகள் எனக்குத் தேவையேயில்லை. நான் என் முதல் கதாநாயகனான ‘திரு’வை மலையாள நடிகனான நரேனில்தான் கண்டேன். எல்லா வகையிலும் ‘திரு’  ஒரு தமிழ்க் கதாபாத்திரம்தான். ஆனால் நான் என் திருவை அவன் முகத்தில்தான் கண்டேன். திருச்சூரில் சென்று கதை சொன்னேன். நீ ரிகர்சலுக்கு வரும்போது முழுக்க முழுக்க திருவாக மாறியிருக்க வேண்டுமென்று சொன்னேன். ஒன்றரை மாதம் கழித்து அப்படியே வந்து நின்றான். மலையாளி, தமிழன், கன்னடக்காரன், தெலுங்கன் என்றெல்லாம் சொல்வது பரிதாபகரமானது. என் வலதுபக்கம் இருக்கும் ஒரு நாட்டில் வேறொரு மொழி, கலாச்சாரம் பேசப்படுகிறது என்ற காரணத்தாலேயே அங்குள்ளவர்கள் என் சகோதரர்கள் அல்ல என்று சொல்ல முடியாது. அதுவும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அப்படிச் சிந்திப்பது மிக அபத்தமானது. அவர்கள் என் சகோதரர்கள் அல்ல. என்னில் ஒரு பகுதிதான் அவர்கள். நான் மலையாளிகளை இப்படித்தான் பார்க்கிறேன்.
ஷாஜி: பவா, நீங்கள் மலையாளத்திலும் அறியப்படும் எழுத்தாளராக இருக்கிறீர்கள். உங்கள் கதைகளும் கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்பட்டு அங்கே வந்து கொண்டிருக்கிறது. தேசாபிமானியில் தொடர் வந்தது. உங்களுடைய மலையாள அரசியல் நண்பர்களில் கம்யூனிஸ்டுகள்தான் அதிகம்பேர் இருக்கின்றனர். நீங்களும் ஒரு கம்யூனிஸ்ட் அனுதாபிதான் என்று நான் நினைக்கிறேன், பார்ட்டி மெம்பர் இல்லையென்றாலும், மலையாளிகளின் கம்யூனிசம், இலக்கியம், இலக்கியத்துடனான நெருக்கம் இவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பவா செல்லதுரை (எழுத்தாளர்) : குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கென்று ஒரு பாலிடிக்ஸ் இருக்கணும்னு நான் நெனச்சிருக்கேன். ஆனால் அது கட்சிசார்ந்த பாலிடிக்ஸ் கிடையாது. எனக்கொரு இடதுசாரி ஐடியாலஜி இருந்திருக்கிறது. அவ்வளவுதான். அதுக்கும் மேல நான் முன்னால் போகவேயில்லை. பார்ட்டி சார்ந்த ஆட்களும் நான் அதுக்கும் மேல மூவ் ஆகக் கூடாதுன்னே நெனச்சாங்க. போதுமென்றே நினைத்தார்கள். இரண்டு நாளைக்கு முன்னால் சுந்தர ராமசாமியின் கதைகள் சொன்னேன். கூட்டத்திலிருந்த ஒரு பையன், தமிழ் முற்போக்கு  உலகத்தில் சுந்தர ராமசாமியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் ஒரே எழுத்தாளர் நீங்கள் மட்டும்தான் என்றான். அது உண்மைதான். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஜெயமோகனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்திற்கு (த.மு.எ.ச.) அழைத்து வந்தது நான்தான். அது பெரிய சர்ச்சையாகவும் மாறியது. ஆனால் இவன்தான் முக்கியமான எழுத்தாளன். உண்மையான எழுத்தாளன் என்பதை அடையாளம் காட்டினேன்.  சில தவறான அபிப்பிராயங்களும் வந்தன. ஆனால் பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்தியாவின் நவீன இலக்கியம் சற்றேறக்குறைய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து  ஆரம்பமாவதாக சொல்லலாம்.  நவீன இலக்கியத்தின் அனைத்து கூறுகளையும் வெகு விரைவாக தம் மொழிக்குள் கொண்டுவந்த பெருமை வங்காளம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு உண்டு. உலக இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகள் அனைத்துமே இந்த மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்தன. அதிலும் முன்னணியில் இருந்தவை வங்க, மலையாள மொழிகள். நான் இங்கே இரு மொழிகளிலும் உள்ள வாசிப்பின், வாசகர்களின் அடிப்படையிலேயே பேசுகிறேன்.
தமிழில் மலையாள  இலக்கியத்தின் பாதிப்புகள்      (Impact )
1960 களில் தொடங்கி 1990 களின் மத்தி வரையிலான 35 வருட காலம் தமிழில் மலையாள இலக்கியத்தின்  பாதிப்பு மிக அதிகம். மலையாள இலக்கியத்தின் பிதாமகர்கள் என அறியப்படும் அனைவருமே தமிழில் கிடைத்தார்கள். தமிழ் இலக்கியத்தின் பிதாமகர்கள் வரிசையில் அவர்களுக்கும் முக்கிய இடம்  இன்றளவும் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்வதென்றால், தமிழில் ஒருவர் இலக்கிய வாசகர் என்றால் அவருக்கு பஷீரும், எம்.டி. யும், பால்சக்கரியாவும், பி.கே.பாலக்ரிஷ்ணனும்,தகழியும், கேசவதேவும், பாலசந்திரனும்  தெரிந்திருக்கவேண்டியது கட்டாயம். அவர்களைப் படிக்காமல் தமிழில் ஒருவன் தன்னை தமிழ் இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவான்.இன்று எழுதிக்கொண்டிருக்கும் கல்பற்றா, மனோஜ் குரு, கெ.ஆர்.மீரா, ஷிகாபுதீன் வரையிலான படைப்பாளிகளின் எழுத்துகள் வரை தமிழ் இலக்கிய உலகம் தொடர்ந்து மலையாள இலக்கிய உலகை சுவிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழும், மலையாளமும் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்டு மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளை தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார்கள். தகழியை தமிழுக்குக் கொண்டுவந்த சுந்தரராமசாமி தமிழின் முக்கிய படைப்பாளி.  அவரைத் தொடர்ந்து ஆ.மாதவன் என்று அந்த மரபு, மலையாளத்தின் இன்றைய இலக்கியப் போக்குகளை தமிழுக்கு அறியக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை இன்றும் விடாமல் தொடர்கிறது. தேர்ந்த இலக்கிய வாசகர்களாக அறியப்பட்ட மூன்று தலைமுறையினர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியினை இடைவிடாமல் செய்து வருகிறார்கள். நாகர்கோவிலின்  எம்.எஸ்.(எம்.சுப்பிரமணியம் ) தொடங்கி குளச்சல் எம்.யூசுப் வழியாக கே.வி.ஷைலஜா வரையிலான தலைமுறைத் தொடர்ச்சி மலையாள தமிழ்  மொழிபெயர்ப்புகளில் இடைவிடாமல் இயங்கிவருகிறார்கள்.    மலையாளத்தின் இலக்கியப் பிதாமகர்கள்   தமிழ் இலக்கியத்திலும்  அதே மரியாதையுடனும், மதிப்புடனும் வைத்து வாசிக்கப்படுகிறார்கள்.
மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும் – வளர்ச்சிப் போக்கு :
மலையாளத்தில் இப்படி பாய்ச்சல் நிகழ அதன் அரசியல், சமூகக்காரணிகள் முக்கியப் பங்காற்றி யிருப்பதாக நான் நினைக்கிறேன். மலையாள மொழி தனது நவீன காலகட்டத்தை அடைந்த அதே காலத்தில், கேரளத்தின் அரசியல், சமூக சூழலின் மாற்றங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கேரளத்தின் சமூக மாற்றத்திலும், அரசியலிலும் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்த கம்யூனிச இயக்கங்கள் வாசிப்பினை தமது முக்கிய கருவிகளில் ஒன்றாகக் கொண்டிருந்ததன. அதன் சித்தாந்தங்கள் மட்டுமல்லாமல் அதனை ஒட்டிசெல்லும் அனைத்து இலக்கியப் படைப்புகளும் வாசிப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டன. பெருமளவு பேசப்பட்டன. ஆழமான முறைகளில் விவாதிக்கப்பட்டன. நவீன மலையாள இயக்கமும், கேரள அரசியல்-சமூக இயக்கங்களும் இரண்டறக் கலந்தவை. அந்த வாசிப்புப் பழக்கத்தில் வந்த மலையாளத் தலைமுறைதான் இன்றும் மலையாள இலக்கிய உலகின் வாசகத் தலைமுறையாகத்  தொடர்கிறது.
மாறாக, தமிழுக்கு  இப்படியான அரசியல், சமூக காரணிகள் எவையும் மேடை அமைத்துக் கொடுத்ததில்லை. சமூக இயக்கமாக உருவாகி வந்த காங்கிரஸ் இயக்கம் கூட விடுதலைப் போராட்ட காலத்தின் லட்சியவாதத்தை தமிழின் இலக்கியகர்த்தாக்களுக்குக் கொடுத்ததேயன்றி வாசிப்பின் பரவலுக்கு எதுவும் செய்ததில்லை. விடுதலை கிடைத்த கையோடு அதுவும் முடிந்தது. தமிழில் பெரும் செல்வாக்குடன் உருவாகி வந்த திராவிட இயக்கங்களும் பரப்பிலக்கியம் என்ற வகையில்தான் தமிழ்மொழியைக் கையில் எடுத்ததேயன்றி,  தமிழின் நவீன இலக்கியத்திற்கு எந்தப் பங்களிப்பையும் தரவில்லை. தமிழைப் பொறுத்தவரை  அதன் இலக்கியம் என்பது இலக்கியத்தாலேயே வளர்ந்த ஒன்று. தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாக்கள் தமது பொருள், உழைப்பு , நேரம் என தம்மிடமிருந்த அனைத்தையும் இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்து எந்தப் பலனும் எதிர்பாராமல் உரமாகிப் போனார்கள். அந்த மரபு இன்றுவரை தொடர்கிறது. சி.சு. செல்லப்பாவும், க.நா.சுப்ரமணியனும் தொடக்கி வளர்த்த தனிநபர் இலக்கிய இயக்கங்களே தமிழில்  நவீன இலக்கிய வாசகனின் வாசல். சிறுபத்திரிக்கை மரபு வழியாக இதைத் தொடங்கிய முன்னோடி இலக்கியகர்த்தாக்களின் மரபு இன்றும் தமிழில் வெளிவரும் 15 சிறுபத்திரிக்கைகள்  மூலம் தொடர்கிறது. இந்த பிடிவாதமான இலக்கிய வெறிதான் இன்று தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் ஆளுமைகளை உருவாக்கி எடுத்தது. தமிழின் நவீன இலக்கிய வாசகப் பரப்பு அளவில் குறைந்ததென்றாலும் ஆழமும், வீச்சும் நிரம்பப் பெற்றது.
மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும் – இன்றைய யதார்த்தம்:
1990 கள் வரையிலும் கூட மலையாள  இலக்கிய உலகத்தின் பாய்ச்சல் தமிழுக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் 90களின் மத்தியில் இருந்து தமிழ் இலக்கியத்தின் போக்கு துரிதமாகத் தொடங்கியது. இன்டர்நெட்டின் வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் புதிய பரிணாமமாக மாற ஆரம்பித்தது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மிகத் துரிதமாகப் பயன்படுத்திக் கொண்டது தமிழ். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது தமிழ் மொழி பேசும் மக்கள் பெருவாரியாக உலகின் பல பாகங்களுக்கும் செல்ல ஆரம்பித்ததுதான். தகவல் தொழில் நுட்பமும், ஸாப்ட்வேர்  நிறுவனங்களின் வளர்ச்சியும் மட்டும் இதற்குக் காரணம் அல்ல. அதற்கும் முன்பே தலைமுறைகளாக உலகெங்கும்  விரிந்திருந்த  தமிழ் பேசும் மக்களின் கூட்டமும் தான். இதனுடன் இலங்கையிலிருந்து அயல்நாடுகளுக்கு சென்று தங்களது வருவாயை ஸ்திரப்படுத்தி மேலெழுந்து வந்த இலங்கைத் தமிழர்களும் ஒரு காரணம். அதே வேளையில் தமிழில்  சிறு பத்திரிகைகள்  வாயிலாக பெருமளவு வாசகர்களை அடைந்த எழுத்தாளர்கள் 2000 களின் தொடக்கத்தில் இணையத்திற்கு வந்தனர். இன்று தமிழில் செயலுடன் இருக்கும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் இணையத் தளம் உண்டு. அவற்றுக்கு கணிசமான வாசகர்களும் உண்டு. இந்த வாசகர்கள் உலக அளவில் இருப்பவர்கள்.
இணையம் தரும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் இன்றைய தமிழிலக்கியம் எடுத்துக் கொள்கிறது.  இதன் வெகு முக்கிய பலன் இன்று தமிழ் இலக்கிய உலகத்திற்கு கிடைத்திருக்கும் புதிய வாசகர்களின் பரப்பு. 30 வயதிற்கு உட்பட்ட பெரும் இளைஞர் கூட்டம் உலகளாவிய அளவில் தமிழ் இலக்கியத்திற்கு இன்று கிடைத்திருக்கிறது. நவீன தமிழிலக்கிய உலகிற்கு இன்றிருப்பதைப் போன்ற இளைய வாசகர் கூட்டம் இதற்கு முன்பு இருந்ததில்லை.  தமிழ் இலக்கியத்தின் முந்தைய தலைமுறை, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் கூட இன்று இந்த வாசகர்களால் ஒளியுடன் எழுந்து வருகிறார்கள்.
ஒப்புநோக்க மலையாள இலக்கிய உலகம் இன்னும் அச்சுப் பதிப்புகளை விட்டு வெளியே வரவில்லையோ எனும் சந்தேகம் பலமாக எழுகிறது. இன்னும் அடுத்த கட்டம் நோக்கி நிற்கும் தமிழும், மலையாளமும் இனி தொழில்நுட்பத்தால் ஒரே எழுத்துருவை சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று தமிழிலக்கியம், மலையாள இலக்கியம் என்ற பிரிவிற்கு பொருளேதும் இருக்கப்போவதில்லை. அதுவரை காத்திருப்பதை விட நாம் இப்போதே சொல்லிக் கொள்வோம் – நாமெல்லாம் இலக்கிய வாசகர்கள், இலக்கியம் தமிழில் ஆனாலும், மலையாளத்தில் ஆனாலும், சிறு பத்திரிகைகள் மிகுந்த energyயைக் கொடுக்கின்றன என்றுதான் நான் புரிந்துகொண்டு இருக்கிறேன். மலையாளத்திலும் இதுதான் நிகழ்ந்தது. Parallel Magazines  பெரியதொரு சக்தியாகத் தான் மலையாளத்தில் இருக்கிறது. இங்கே சிறுபத்திரிகைகளின் நிலை என்னவென்று சொல்லுங்கள்?
பவா: நாங்கள், ராமகிருஷ்ணன், ஜெயமோகன் தொடங்கி அனைவரும் சிறுபத்திரிகைகளில் எழுதிக் கொண்டுதான் எங்கள் எழுத்தைத் தொடங்கினோம். பின்னர் வணிகப் பத்திரிகைகளான ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்றவற்றிற்கு எங்கள் எழுத்தும், tone உம் வேண்டுமென்று தோன்றின. சுந்தர ராமசாமி இந்த விஷயத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். நேர்காணல்களிலெல்லாம் சிறு பத்திரிகைகளைப் பற்றி, தொடர்ந்து பேசியும், அறிமுகப்படுத்தியும் வந்திருக்கிறார். வாசகர்கள் தேட ஆரம்பிப்பார். அப்படித்தான் கோணங்கி அறியப்படத் தொடங்குகிறார். தமிழ் வாழ்வியலை சரியாக அந்த சிறுபத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்டன.
வேறு வழியின்றி வணிகப் பத்திரிகைகளுடன் இந்த எழுத்தாளர்களை அணுகத் தொடங்கின. சிறுபத்திரிகைகளில் எழுதும்போதுள்ள சந்தோஷம் தனியானது. மலையாளத்தில் அதிகமாக இருப்பது middle magazines தான். அதில் வரும் கதைகள் நவீனமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. சில மொழிபெயர்ப்புகளை நான் வாசித்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில்தான் சிறுபத்திரிகை ஒரு இயக்கமாக இன்றும் அது தொடர்கிறது. இங்கே ஓர் ஊரில் பத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு சிறு பத்திரிகை தொடங்கி விடுவார்கள். 200 பிரதிகள் அச்சடித்து தோள்பையில் போட்டுக் கொண்டு விற்பனையையும் தொடங்கி விடுவார்கள். இது ஓர் ஆரோக்கியமான movement என்றுதான் சொல்லவேண்டும். சென்சார் செய்ய வேண்டியதும் இல்லை. நினைத்ததை எழுதிவிடலாம்.
ஷாஜி: மலையாளியான ஷைலஜா இப்போது தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். நிறைய மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஷைலஜா: நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவண்ணாமலைதான். வீட்டில் அனைவரும் மலையாளமே பேசுவோம். அதுதான் என் தாய்மொழிக்கான base. நான் வளர்ந்தது தமிழ்க் கலாச்சாரத்தில்தான். தமிழில்தான் படித்தேன். அம்மாவிடமிருந்து வாசிப்புப் பரிச்சயம் கிடைத்தாலும், தீவிர வாசிப்பின் பக்கம் வந்தபோதுதான் பாத்தும்மாவின் ஆடெல்லாம் எங்களோடு வந்தது. ஆனால் மலையாளம் எழுதவோ வாசிக்கவோ தெரியாது. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஒரு முற்றம் நிகழ்விற்காக வந்தபோது அவர் எங்கள் வீட்டில் தங்கினார். ஒருநாள் அவருடைய ‘சிதம்பர ஸ்மரண’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை எங்களுக்கு வாசித்துக் காட்டினார். என்னவொரு குரல்! ஓர் ஆன்மா இருந்தது அதில்! அன்றெனக்கு மலையாளம் வாசிக்கவோ எழுதவோ தெரியாது. சகோதரி ஜெயஸ்ரீயின் மகள் சுகானா கேரளாவில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். விடுமுறையில் அவள் இங்கே வந்தபோது என் குருவாக இருந்து என் தாய்மொழியை எனக்குக் கற்றுத் தந்தாள். 1970 காலகட்டத்தோடு மலையாள இலக்கியத்தின் உன்னதங்கள் முடிந்துவிட்டதென ஒருமுறை சக்காரியா இங்கே வந்திருந்தபோது சொன்னார். தமிழ் வளர்ச்சி அடைகிறது என்றும் சொன்னார்.
ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற நிலையில் சொல்ல வேண்டுமெனில், தமிழும் மலையாளமுமே சவாலாக இருக்கிறது. கெ.ஆர்.மீராவின் கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். பிரபல தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கெ.ஆர்.மீராவின் கதைகளை வாசித்துவிட்டு என்னைப் பாராட்டியிருக்கிறார். சில தமிழ்ப் பெண் எழுத்தாளர்களுக்கு மீராவின் ‘சூர்ப்பனகை’ தொகுப்பைக் கொடுத்துமிருக்கிறார். தமிழில் சந்திரா, மனோஜ், ஜே.பி.சாணக்யா, செந்தில் குமார் போன்றோர் காத்திரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஷாஜி: ஜெயஸ்ரீ! நீங்களும் மொழிபெயர்ப்பாளர் அல்லவா? மலையாளம் எப்போது கற்றுக் கொண்டீர்கள்? உங்களுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்கள், தமிழ்–மலையாள இலக்கியங்கள் தம்மிலான வித்தியாசங்கள் இவையைப் பற்றிச் சொல்லுங்கள்?
ஜெயஸ்ரீ: அம்மாவின் மூலமாகத் தான் நானும் இலக்கிய உலகத்துக்குள் நுழைகிறேன். 10ஆம் வகுப்பு விடுமுறையில்தான் நான் மலையாளம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். உறவினர்கள் கொண்டு வரும் வாரப் பத்திரிகைகள் மூலம். அப்போதெல்லாம் மொழிபெயர்ப்பில் எனக்கு ஈடுபாடு இல்லை. கல்லூரியில் எனக்கு சீனியரான பவா செல்லத்துரையின் நட்புதான் தீவிர இலக்கியத்தின் பக்கம் எங்கள் வாசிப்பை நகர்த்தியது. அம்பை, பிரபஞ்சன் என எங்கள் வாசிப்பு மாறியது. சங்க இலக்கியங்களை விடவும் நவீன இலக்கியங்கள் மீதான விருப்பமே அதிகமிருந்தது. ஷைலஜாவின் பச்சை இருளனின் சகாவான பொந்தன் மாடன் தொகுப்பிற்காக நான் மொழிபெயர்த்துக் கொடுத்த பால்சக்காரியாவின் “இரண்டாம் குடியேற்றம்” என்ற கதை எனக்கு நல்ல அபிப்பிராயத்தைத் தேடித் தந்தது. அதிலிருந்து மொழிபெயர்ப்பில் கவனம் செலத்தினேன். சக்காரியாவின் அதிகபட்சக் கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். சந்தோஷ் ஏச்சிக்கானம், ஐயப்பன் போன்றோரின் எழுத்துகளையும் மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஷௌக்கத்தின் ஹிமாலயம் என்ற பயணக் கட்டுரையையும் மொழிபெயர்த்துள்ளேன். மொழிபெயர்ப்பும் ஒரு கிரியேஷன் என்றே நான் நம்புகிறேன்
சிஹாபுதீன் : தமிழ்-மலையாள மொழி பெயர்ப்பில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?
ஜெயஸ்ரீ : பவாவின் ‘ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’ என்ற கதையை மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கிய போதுதான் மலையாள மொழியில் எனக்கிருக்கும் limitations பற்றி நான் உணர்ந்தேன். மூலமொழியை விடவும் மொழிபெயர்க்கப்படும் மொழியில் திறன்கள் அதிகம் இருக்கவேண்டும். எனவே தமிழில் கவனம் செலுத்தினால் மட்டும் போதுமென்று நான் தீர்மானித்தேன். மொழிபெயர்ப்பில் வட்டார மொழி – slang – பெரிய பிரச்னைதான். உதாரணமாக திருச்சூர் மொழி நான் அந்த மொழியை தமிழின் எந்த வட்டார மொழிக்கும் மொழிபெயர்க்க முடியாது. அதை திருநெல்வேலி மொழியிலும் மாற்ற முடியாது. ஏனெனில் எனக்கு அந்த வட்டார மொழி தெரியாது. நானறிந்த வடாற்காடு வட்டார மொழியில் தான் எழுத வேண்டியிருக்கும். வேறு வழியில்லை.
ஷாஜி : அரசியலோடு ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளாத எழுத்தாளர்கள் எக்காலத்தும் இருந்திருக்கிறார்கள். அதேபோலக் கலைஞர்களும். ஒரு இயக்கத்தினூடே வளர்ந்து பெயர்பெற்றபிறகு மாறிப் போனவர்களும் இருக்கின்றனர்.
ராஜகோபால் : அரசியல் இயக்கங்கள்தான் கேரள இலக்கியத்தின்  basement முக்கியமாக நாடகங்கள். நேரடியாகவும், அல்லாமலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அங்கே அதிகம். தமிழில் அப்படியான இடம் குறைவுதான்.
பவா : அண்ணாதுரையும், கருணாநிதியும் அதைத்தானே செய்தார்கள்? அவர்கள் இலக்கியத்தில் பரிணமிக்கவே இல்லை. இலக்கியம் என்பது புதுமைப் பித்தன் மூலமாக, ஒரு தனிப் பாதையில் தானே போய்க்கொண்டிருந்தது.
சிஹாபுதீன் : அப்படீன்னா சுப்ரமணிய பாரதியின் கவிதைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பவா : சுப்ரமணிய பாரதியார்  modern tamil literature உடைய base. சுப்ரமணிய பாரதியை உள்வாங்காமல் ஒரு நவீனத் தமிழ்க் கவிஞன் இருக்கவே முடியாது. பாரதியின் தோள்களில் நின்றுதான் நாங்கள் எங்கள் கவிதைகளைப் பற்றிப் பேச முடியும். பாரதிதான் மொழியை உருவாக்கினார்.
சிஹாபுதீன் : இலக்கிய – சமூக வெளிகளில் பக்தர்களின், யுக்திவாதிகளின் சிந்தனை வெளிப்பாடு ஆழமாக இருந்ததல்லவா? இன்றைய நிலை என்ன?
ஷாஜி : Athiesm, Rationalism  என்ற இரண்டிற்கும் இங்கே ஆழமான வேர்கள் இருக்கின்றன. அதேபோல பக்திக்கும். இரண்டும் இணைகோடுகளாகவே இங்கே இருக்கின்றன. பகுத்தறிவுபோலவே பக்திஇயக்கங்களோடு தொடர்புடையவர்களும் இங்கே அதிகம்தான். மாற்றங்கள் வரலாம். அதற்கான சாத்தியங்கள் உள்ளன.
பவா : ராஜகோபால், ஒரு வாசகன் என்ற நிலையில் இன்றைய தமிழ் இலக்கியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
ராஜகோபாலன் : ஒரு  frame work  வச்சுப் பேசித்தான் நாம் பழகியிருக்கிறோம். இதுவரை தமிழிலக்கியம் ஒரு movement வழியாக வரவேயில்லை. அதாவது ஒரு   Social movement ஐப் பிடித்து தமிழிலக்கியம் வளர்ந்திருக்கவில்லை. இலக்கியம் இலக்கியமாகவே வளர்ந்திருக்கிறது. இதுதான் தமிழ்-மலையாள இலக்கியத்துக்கிடையேயான பெரிய வித்தியாசம். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தமிழ் இலக்கியவாதிக்கு மலையாள இலக்கியம்தான் bench mark. மலையாள இலக்கியவாதிக்கு வங்காள இலக்கியமே bench mark.
ஷாஜி : ராஜகோபால் சொல்வதில் ஓர் உண்மை இருக்கிறது. பெரிய உண்மை. தமிழில் ஏதாவது ஒரு பத்திரிகையாசிரியர், ஏதாவது ஒரு எழுத்தாளனிடம் இந்த மாதிரியான ஒரு கதை, இந்த மாதிரியான ஒரு கட்டுரை வேண்டுமென்று கேட்டதேயில்லை, கேட்க முடியாது. ஆனால் மலையாளத்தில் நிலைமை அப்படியே மாறுகிறது.
ராஜகோபால் : லேசா இடதுசாரி சாயலுள்ள பத்திரிகை ஆசிரியர்கள்தான் கேரளத்தில் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இலக்கியத்தோடு ஒரு touch இருக்கும். அதனால்தான் அவர்கள் தங்களுக்கு இந்த விதத்தில் வேண்டுமென்று dictate  செய்கிறார்கள்.
ஷாஜி : தமிழில் அப்படியொரு விஷயமே இல்லை. நீங்கள் எழுதுவதை அவர்கள் பிரசுரிப்பார்கள். இங்கே எழுத்தாளன் சுதந்திரமானவன்.  technology யின் வரவுக்குப் பிறகு எழுத்தாளனே எடிட்டரும் எஜமானனுமாக மாறியிருக்கிறான்.
ராஜகோபால் : தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன நிகழ்ந்ததென்றால், எனக்கான வாசகனை, என் எழுத்தை ஆராதிக்கும் வாசகனை என்னால் identify செய்ய முடிந்திருக்கிறது என்பதே.
பவா : உண்மைதான். ‘விஷ்ணு புரத்தை’ யாரெல்லாம் வாசித்திருக்கிறார்கள் என்று ஜெயமோகனால் தெரிந்துகொள்ள முடியும்.
ஷாஜி : ஆனால் அதற்குப் பிரதிபலனும் இல்லை; காசும் கிடைக்காது.
ராஜகோபால் : அதனாலேயே இலக்கியம் இலக்கியமாகவே நிலை கொள்கிறது.
ஷாஜி : ‘பாஷா போஷினி’ ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அய்யாயிரம் ரூபாய் தந்தனர். எம்.எஸ்.விசுவநாதனைப் பற்றி ஒரு கட்டுரையைத் தமிழில் எழுதினேன். ஐந்து பைசா கூடக் கிடைக்கவில்லை. ‘மலையாளம்’ வாரப் பத்திரிகைக்காக கடந்த வருடம் ஒரு கவர் ஸ்டோரி எழுதினேன். நாலாயிரம் ரூபாய்க்கான இரண்டு செக் கிடைத்தது. மலையாளத்தில் எழுதினால் காசு கிடைக்கும். தமிழில் கிடைக்காது.
ராஜகோபால் : இன்றும் அச்சு ஊடகங்கள் வழியாகவே இலக்கியம் உயிர்ப்போடு நிற்கிறது. கேரளத்திலும் அப்படியேதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில்நுட்பம் வந்தபிறகு இலக்கியம் வேறொரு இடம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓட்டம்தான் தமிழ் இலக்கியத்தை மலையாள இலக்கியத்தைவிட முன்னால் நிற்க வைத்திருக்கிறது.  English group of writers & readers இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அந்த தரத்தில் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு  canvass மலையாளத்தில் வந்திருக்கவில்லை.
ஷாஜி : சரிதான். ஆங்கிலத்தோடு சேர்ந்து தமிழும் கணினியில் வளர்ச்சியடைய அயல்நாட்டுத் தமிழர்கள் மிகவும் உதவியிருக்கின்றனர். ஆங்கிலம் தட்டச்சு செய்யும்வேகத்தில் என்னால் மலையாளத்தைச் செய்ய முடியாது. Computerization  வந்தபோது முதலில் இடதுசாரிகள் எதிர்த்திருந்தனர். அது காரணமாக மலையாளிகள் மிக மெதுவாகத்தான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வருகின்றனர். அதற்குள் தமிழ் மிக நீண்ட தூரம் சென்றுவிட்டிருந்தது. இங்கே எழுத்தாளர்கள் பலரும் கணிப்பொறியிலேயே நேரடியாக எழுதுகின்றனர். மலையாள வார்த்தைகள் சிலவற்றைத் தட்டச்சுவது இப்போதும் எனக்கு சிரமமாகவே இருக்கிறது.
ராஜகோபால் : தமிழிலக்கியம் உலகின் எந்தப் பகுதிக்கும் கடந்து செல்லக்கூடிய நிலைமை இன்று கைவந்திருக்கிறது. கனடாவிலும், பிரிட்டனிலும் “base” உண்டு. அயல்நாடுகளில் மலையாளிகள்தான் அதிகம் இருக்கிறார்கள். பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மலையாளிகள் அபிமானம் கொள்பவர்கள். ஆனால் என்ன காரணமென்று தெரியவில்லை. வேண்டிய விதத்தில் வாய்ப்பைப் பிரயோசனப் படுத்தாமலிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
சிஹாபுதீன் : மலையாளிகள் மொழியோடு அவ்வளவு பற்று கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத்  தோன்றவில்லை. தமிழனின் மொழிப்பற்று அளவுக்கு இல்லை. சினிமாவுக்குப் பெயர் வைக்கும்போதும் ஒரு ஆத்ம பரிகாசம் இருக்கும். ஒரு self parady.  (எடு) “மலையாளி மாமனு வணக்கம்” என்ற பெயர். ஆனால் ‘தமிழன்’ என்று தமிழ்நாட்டில் சினிமா பெயர் வருகிறது. அபிமானச் சின்னம்தான் மொழி உங்களுக்கு. இதைப் பற்றிய ஷாஜியின் அபிப்பிராயம் என்ன?
ஷாஜி : மலையாளிக்கு மொழிப்பற்று என்பது சற்றுமில்லை. கொஞ்சம்கூட இல்லை. இன்றைய மலையாளம் ஒரு மணிப்ரவாள நடைதான். தமிழனைவிட ஆங்கில மோகம் மலையாளிக்கு அதிகமிருக்கிறது. நானூறு வருடப் பாரம்பரியமுள்ள மலையாளம் அடுத்த 200 வருடங்களுக்குள் இறந்துவிடும். தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது ஆங்கிலம் கடந்து வருமெனினும் அரங்கில் உரையாற்றும்போது தமிழில் மட்டுமே பேசுவார்கள். கேரளத்திற்கு வெளியே ஓணம் கொண்டாடுகின்றனர் என்பதாலேயே மலையாளிக்கு மொழிப்பற்றோ, தங்களின் கலாச்சாரத்தின்மீது அபிமானமோ உண்டென்று என்னால்  சொல்ல முடியாது.
சிஹாபுதீன் : இதைப் பற்றிய ஷைலஜாவின் அபிப்பிராயம் என்ன?
ஷைலஜா : ஷாஜி சொன்னதை முழுமையாக ஒத்துக் கொள்கிறேன்.
சிஹாபுதீன் : முழுமையாக?
ஷைலஜா : ஆமாம்.
ஷாஜி : இன்றைய மலையாள எழுத்து மலையாளமும் அல்ல, ஆங்கிலமுமல்ல. அது ஒரு Google எழுத்து. இரண்டும் கெட்ட எழுத்து.
பவா : இந்த விபத்து தமிழிலும் இருக்கிறது. சுந்தரராமசாமியைப் பற்றியும் ஜானகிராமனைப் பற்றியும் மரியாதையோடு இன்றும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய மொழி விபத்துகளைப் பற்றி அருண் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அருண் : இப்போது எழுதுகிறவர்களிடம் கதைகள் இல்லை. சம்பவங்கள் தான் இருக்கின்றன. அதையும் தாண்டி மொழி ஆளுமை இல்லை. information எழுத்தாளர்கள் இவர்கள். கதைகளாகவும் கவிதைகளாகவும் இவைதான் வருகின்றன. இந்த download writing concept-ல் நீங்கள் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமெனினும் படைத்துவிடலாம். விர்ஜீனியா வுல்ஃப் பற்றி ஒன்றும் அறியாமலேயே ஒரு கட்டுரை எழுதலாம். Google இல் இருந்து கிடைப்பதை  re arrange  செய்தால் போதும். ஆனால் அதற்கு ஆயுள் இருக்காது. இலக்கியத்தின் நோக்கம் மனித மனதில் கசடுகளை, அழுக்குகளை வெளியேற்றுவதே. ஆனால் இப்போது அந்தக் கசடுகள் உள்ளேயிருப்பதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்பது மாதிரி இருக்கிறது. இதற்குக் காரணம் ஆழ்ந்த வாசிப்பு இல்லையென்பதே. தமிழிலக்கியப் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் – சங்க இலக்கியத்தை வாசிக்காமல் – புதிதாக ஒன்றை உருவாக்க முயலும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. உள்ளே சொந்தமாக ஏதாவது இருக்க வேண்டும். அப்போதுதான் வெளியே அது வரும்.
ராஜகோபால் : இதுக்குக் காரணம்  technology என்றே சொல்லலாம். முதலில்  blog  வந்தது. பின்னர்  whatsapp ஆனது. அதற்கு முன்னால் face book வந்தது. இப்போது twitter. அதுவும் போய்விட்டது. அப்படியான எழுத்துகளுக்கு ஆயுள் மிகக் குறைவே. அதிகபட்சம் மூன்று வருடங்கள் அவ்வளவே.
சிஷாபுதீன் : கூகுளில் தேடினால் மனிதனின் Anatamy கிடைத்துவிடும். ஆனால் மனசு கிடைக்காது.
பவா : இண்டர்நெட் நெட்ஒர்க் – இண்டர்நெட் எழுத்தாளர்கள் என்றெல்லாம் ஒரு groupism வளர்ந்திருக்கிறது. தங்களுக்குள் புகழ்ந்துகொள்ள ஆயிரக்கணக்கில்  ‘likes’. இதெல்லாம் சாத்தியமேயில்லை. இவை என்ன தந்துவிடுகிறதென்று தெரியவில்லை. ஒரு real artist ஐ இந்த மாதிரியான  technology   பயமுறுத்துகிறது. அது பல பேரை எழுத வைக்காமல் செய்கிறது. இதற்கிடையில்தான் இவை எதிலும் மாட்டிக் கொள்ளாமல் ஒரு ஓரமாக இருந்துகொண்டு இமையம், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் போன்றோர் எழுதும் இலக்கியங்கள் இந்த technology ஐ மீறி நிற்கிறது.
சிஹாபுதீன் : மலையாளத்திலும் இதே பிரச்னை இருக்கிறது. Face book  ஒரு சுய இன்பத்தைத் தருகிறது. selfic யும் அப்படித்தான். அவனவன் தன்னையே promote செய்வது. இதை  selfic poems என்று அழைக்கலாம். நான்…. நான் மட்டும் போதும். என் விருப்பங்களும் பிரச்னைகளும் மட்டும் போதும் என்ற அவஸ்தைக்கு மனிதன் நகர்ந்து விட்டிருக்கிறான் use and throw என்பதற்கான போக்கு. Social network எல்லையற்ற சுதந்திரத்திற்கான வாசலைத் திறந்து விட்டிருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்துபவனுக்கு அவன் மனதிற்கு உணர்வும் உயர்ச்சியும் வேண்டும். மூலதன விருப்பங்களின் பின்னால் சஞ்சரிக்கும்போது printing mediaவுக்கு நிறைய விட்டுக் கொடுத்தல்கள் தேவைப்படுகிறது. விருப்பங்கள் வருகிறது. இங்கேதான் social network இன் சாத்தியங்கள் நிகழ்கின்றன. ஆனால் தொழில்நுட்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொண்டோம் என்று சொல்ல முடியாது.
ஷாஜி : நிஜத்தில் இந்தத் தொழில்நுட்பம் நம்மை சக்திப் படுத்தவில்லை. நாசமாக்கிக் கொண்டுதான் இருக்கிறதென்று பலமுறையும் தோன்றுகிறது.

Related posts

Leave a Comment