You are here
கட்டுரை 

கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் ஈர்க்கும் எழுத்துக்கள்…

தொகுப்பு எம்.கண்ணன்

எளிய மனிதர்கள். கிராமத்து மனிதர்கள், பாவப்பட்ட ஜனங்களின் அன்றாட வாழ்வின் துயரத்தையும், வலியின் ரணமும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்முன் வந்து செல்கிறது. சிறுவர், சிறுமியர், தொழிலாளர்கள், பெண்கள் என சமூகத்தின் மனித முகங்கள் எப்படி சுருங்கி, விரிகிறது என சொல்லாடல்கள் உரக்கப் பேசுகிறது.
குதிங்காலிட்டு உட்கார்ந்து பார்த்தாள், சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தாள். ஒரு காலை சப்பணமிட்டு ஒரு காலை நீட்டியும், இப்படியும் அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தாள். ம்கூம் எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது. குதிங்காலிட்டு வயிற்றில் முழங்கால்கள் அழுத்த உட்கார்வதில்தான் கொஞ்சம் பசியும் வலியும் தெரியாமலிருந்தது. ஒட்ட வேண்டிய தீப்பெட்டிப் பெட்டிகள் இன்னும் ரெண்டேதான் இருந்தன…. இப்படியாக தீப்பெட்டி ஒட்டும் பெண்ணின் கந்தக நெடி கலந்த வாழ்க்கை பாவனை என்ற கதையின் கீழ் பற்றி எரியும் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறது.
அதேபோல் ஆண், பெண் உறவின் சிக்கல்களை தன் கதையின் மூலம் மிக நுட்பமாக பேசுகிறார்.. பேசுவது மட்டுமல்ல, தனது வாழ்க்கையிலும் நூலாசிரியர் கடைப்பிடித்து வருகிறார் என்பதை,  ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது  என்ற நூலின் வரிகள் சாட்சியாக நிற்கிறது. ஒரு பெண் ஒரு நாளைக்கு எவ்வளவு சப்பாத்தி சுடுகிறார். அதனை எத்தனை முறை திருப்பித் திருப்பிப் போடுகிறார். இப்படி ஒரு வாரத்திற்கு எத்தனை சப்பாத்தி சுடுகிறார். எத்தனை முறை திருப்பித் திருப்பிப் போடுகிறார். இப்படியாய் கணக்குப் போட்டு ஒரு வருடத்திற்கு எவ்வளவு முறை என்று கணக்கிடும் போது என் கண்கள் கலங்கின….. ஏனென்றால் எனது மனைவியின் கை மூட்டு தேய்ந்து தற்போது அவதியில் இருக்கிறார்… இப்படி நாம் மறந்தும் சிந்திக்காதவை, பதிவுகளாய் வந்து நம் சிந்தனையை தூண்டுகிறது. நம்மை நோக்கி நம்மையே கேள்வி கேட்க வைக்கும் பதிவுகளாக இருக்கிறது.
சொல்ல வருவது…. என்ற கதை படிப்பவரின் கண்களையும் குளமாக்கிவிடும். உருக்கமான, மதிநுணுக்கமான, நாயின் உண்மையான நட்பையும், நன்றிஉணர்வையும் உயிர்ப்பிப்போடு பேசுகிறது. சாதிய ஆதிக்கமும், அதிகாரமும் சேர்ந்ததால் சாதாரணப்பட்ட ஜனங்களின் வாழ்க்கைப் பாடும், அதிகார போதையின் கொலை வெறியும் அரங்கேறிய தாமிரபரணி ஆற்றங்கரையின் ஈரம் காயாமல் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கொத்தனார் குருசாமி வளர்க்கும் டைகர் நாய். குருசாமிக்கு அது நாயல்ல, தன் தம்பி.. எதிலும் பாகுபாடு இல்லை. சொந்த சகோதரனாய்… எப்பவுமே இணைபிரியாத சகோதரர்களாய் வேலையிடம் மட்டுமல்ல, வெளியூரும் கூட.. அப்படி ஒரு முறை திருநெல்வேலி கட்சிக் கூட்டத்திற்குச் செல்கிறார் டைகருடன் குருசாமி.. ஊர்வலம் அமைதியாய் செல்கிறது. ஆரம்ப முதல் போலீஸ் அதிகார தோரணையுடன் வீம்பிற்கு மக்கள் மீது விழுகிறது. அதில் டைகரும் தப்பவில்லை. ஒதுங்கியே வந்தாலும் கவனமெல்லாம் குருசாமியின் மேல்தான்… அசம்பாவிதம் ஏதுமின்றி தேவர் சிலையையும் கடந்து ஊர்வலம் நகர்கிறது, திடீரென என்ன ஏதுவென்று சொல்லாமல் காவல்துறை தடியடித் தாக்குதலைத் தொடுக்கிறது.. முன் வரிசையில் நின்று பெண்கள் தொடங்கி சகட்டுக்கு தடியடிதான்.. ஒரே கூப்பாடாக கலவரமாக மக்கள் அலறியபடி ஓடினார்கள். ஒரு பகுதி தப்பிக்க தாமிரபரணி ஆற்றங்கரைப் பக்கமாக ஓடுகிறது.. அந்தத் திசையில் குருசாமியும் இருந்தான். கவனித்த டைகர் குரைத்தபடியே, குருசாமியைப் பின்தொடர்கிறது.
அப்போது, கெட்ட வார்த்தைகளில் திட்டியபடியே ஒரு போலீஸ் குருசாமியின் தலையில் அடிக்க, அடுத்த வினாடி அடித்த கையை டைகர் தாவிப் பற்றிக் கடித்தது. கையை உதறிய காவலர் இடதுகையில் லத்தியைப் பிடித்து டைகரை அடித்துக் கொண்டே இருந்தான். ஆனால் டைகர் பிடித்தபிடியை விடவே இல்லை. அதற்குள் இன்னொரு போலீஸ்காரன் வந்து அடிக்கத் துவங்கினார். அப்போது குருசாமி தலையில் வழிந்த ரத்தத்தை கையில் பிடித்த படி  ‘டைகர் வந்திரு! ஓடிடலாம்’ என கத்தியபடியே இருந்தான். அப்போதுபிடியை விட்டுத் திரும்பியபோது தாமிரபரணிக்குள் குதித்து விட்டிருந்தான். டைகரும் குதித்தது. கைச்சதையில் பாதியைக் காணாமல் போனதால் வெறிகொண்ட போலீஸ்காரர்கள் கல்லை எடுத்து டைகர் மீதும், மக்கள் மீதும் எறிந்து கொண்டே தங்களின் கொலைவெறியை அரங்கேற்றினர். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் ஆற்றின் ஓட்டத்தில் மயக்கமாக, ஆற்றின் போக்கில் குருசாமியும் அடித்துச் செல்லப்பட்டான், டைகரும் கூடவே நீந்திச் சென்றது.
மறுநாள் கரை ஒதுங்கிய  பிணங்களில் குருசாமியும் கிடந்தான். மொத்தமிருந்த 17 பிணங்களையும் போலீசார் லாரியில் தூக்கி போட்டனர். அப்போது குருசாமியின் உடல் தூக்கி போடப்பட்ட போது, டைகரும் லாரியில் குதித்து ஏறியது. அப்போது போலீஸ் மீண்டும் டைகரை அடித்துத் துரத்தினர். பின்னர் தர்மாஸ்பத்திரிக்கு சடலங்கள் கொண்டு செல்லப்பட டைகரும் பின்தொடர்ந்தது. தர்மாஸ்பத்திரியை இரண்டு நாளும் டைகர் சுற்றிச் சுற்றி வந்தது. பிணத்தை வாங்க உறவினர்கள் மறுத்த நிலையில், போலீசே அனைத்துப் பிணங்களையும் ஆளுக்கொரு திசையில் கொண்டு சென்று புதைக்க முடிவு செய்தனர். அப்போதும், ஓலைப்பாயில் சுற்றப்பட்ட குருசாமியின் உடல் ஏற்றப்பட்ட லாரியை அடையாளம் கண்டு அந்த லாரியின் பின்னாலேயே டைகர் பின்தொடர்ந்து சென்றது.
குருசாமியை  நல்லபடியாக அடக்கம் செய்து குழிப்பால் ஊத்தாமல் ஓலைப்பாயில் பாத்தமானக்கி வந்துட்டமே என ஒவ்வொரு நாளும் குருசாமியின் ஆத்தாவின் மனத்தில் பெரிய பாரமாக அழுத்திக் கொண்டே இருந்தது.
விசாரணைக் கமிஷன், அது இது என வருடம் கடந்தது. முதலாமாண்டு அஞ்சலி செலுத்த செல்லலாம் என கட்சி எடுத்த முடிவை ஏற்று பிணங்களைப் புதைத்த இடங்களை ஊர்காரர்கள் தேடிச் சென்றனர். அதில் ஒரு வேனில் நடக்கக்கூட தெம்பில்லாத நிலையில் குருசாமியின் ஆத்தாவும் ஏறிச்சென்றார். காலை 8 மணி முதல் ஊர் ஊராக அலைந்து திரிந்து ஒரு வழியாக மதியம் 12 மணிக்கு ஒரு ஊரை அடையாளம் கண்டு வேனை நிறுத்திக் கீழே இறங்கினர். அப்போது குருசாமியின் ஆத்தாவும் முனங்கியபடியே கீழே இறங்கினார். அப்போது ஊருக்குள் இருந்து ஒரு நாய் குரைத்தபடி, ஓடி வந்து ஆத்தா மேல் தாவியது. ஆத்தாளும் டைகரை அடையாளம் கண்டு ஏ.. தங்கம் என ஆவி சேர கட்டிக்கொண்டாள். டைகர் வள் வள் என சோகமாக ஊளையிட்ட படி ஆத்தாவிடம் ஏதோ சொல்ல முயன்றது. அப்போது ஆத்தாளும் டைகரைப் போல ஊளையிட்டு அழுதாள். உன்கூடதான் அண்ணன் வந்தான்.. அண்ணன் எங்கய்யா.. அண்ணன் எங்கய்யா என கேட்டுக் கொண்டே அழுதாள். டைகரும் குரைத்தபடியே அழுதது.. இந்தக் காட்சி உடன் வந்தவர்களையும் கண்ணீர் மல்கச் செய்தது.
அப்போது டைகர் ஆத்தாளின் பிடியில் இருந்து தன்னை விலக்கி, குருசாமி புதைத்த இடம் நோக்கி வழி காட்டியவாறு ஓடியது. அதனைப் பின்தொடர்ந்து வேனில் வந்தவர்கள் சென்றனர். அங்கே விஏஓவும் வந்து சேர்ந்தார். பால்ராஜ், ஆதிமூலம் இந்த மூவரையும் இங்கேதான் பிதைத்தோம். குருசாமி என்று எழுதி தொங்க விடப்பட்டிருந்த இடத்தைக் காண்பித்து, இதுதான் குருசாமியைப் புதைத்த இடம் என விஏஓ காண்பித்தார். அப்போது பால்ராஜ் என எழுதித் தொங்க விட்டிருந்த மண் மேட்டை டைகர் குரைத்தபடி சுற்றி சுற்றி வந்தது. இதனைப் புரிந்து கொண்டவர்கள் விஏஓ வை, சரியாக தெரிந்தால் சொல்ல வேண்டும். இப்படி தவறாக பெயரை எழுதி வைக்கக் கூடாது. டைகர் கரைட்டா குருசாமி இருக்கிற இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறான் பாருங்கள் எனக் கூறி சத்தம் போட்டனர். அப்போது, ஆத்தாள்  உன்னை இப்படி கண் காணாத கட்டாந்தரையில் போட்டுட்டு நிழலாக வீட்டில் இருந்தனே என தலையில் அடித்துக் கொண்டு கதறினான். அந்தக் காட்சியைக் கண்ட பலரும் விசும்பியும், வெடித்தும் அழுதாள். டைகர் மனிதனல்ல எல்லாவற்றையும் மறந்து திரிவதற்கு.. அது நாய். மனிதனின் ஆதித் தோழன்.. என முடியும். படித்து முடிக்கும் போது ஈரமுள்ள நெஞ்சம் குளமாகிவிடும்.. இதுதான் தமிழ்ச்செல்வனின் படைப்புகள்.. சாதாரணப்பட்ட மக்களை, மனிதத்தை பேசும்.. என பேராசியர் சு.துரை தனது தலைமை உரையையே ஆய்வுரையாக முன்வைத்து அமர்ந்தார்.
அடுத்து வந்த கவிஞர், தங்கமூர்த்தி.. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றான்.. பாரதி அது போல் தமிழ்ச் செல்வனின் ஒவ்வொரு படைப்புகளும் சமூக உண்மையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அதுதான் எதிர் முகாம் என்று கருத்து ரீதியாக மாறுபடுபவர்களும் தமிழ்ச் செல்வனின் படைப்புகளை புறக்கணிக்க முடியவில்லை. நேசிப்பவர்களாக இருக்கின்றனர். மிகப்பெரிய தத்துவங்களைக் கூட மிக எளிதாகப் பதிய வைக்கக்கூடிய வகையில் அவரின் படைப்புக்கள் இருக்கின்றன. வெயிலோடு போய்.. ஏவாளின் குற்றச்சாட்டுகள்.. கதைகளில் இந்த சமூகத்தின் எதார்த்தமும், அதனால் பெண்களுக்கு ஆண்களின் மீது ஏற்படுகிற சந்தேகமும், அதனை ஆண்கள் நிரூபிக்கிற முயற்சியும் அதில் பொதிந்து கிடக்கிறது. அதுவும் நகைச்சுவைத் துள்ளலோடு, சமூகப் பொறுப்புணர்வோடும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பெண்மை என்ற ஒரு கற்பிதம் என்று மாறுபட்ட கோணத்தில் உண்மையை படம்பிடித்துக் காட்டும் படைப்புகள் மிக நேர்த்தியாக இருக்கின்றன.
அதுமட்டுமல்ல, நம்மையே ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆற்றலும் அந்த எழுத்திற்குள் இருப்பதை பார்க்க முடிகிறது. தேன்மொழி கதைகளில் ஓர் ஆண் பெண்ணை சாதாரண பெண் என்ற பார்வையில் வக்கிரமங்களையும், ஆதிக்கத்தை செலுத்துவதைப் பார்த்து, நான் எல்லாவற்றையும் தாங்குகிற ஆளா என அந்த பெண் சமூகத்தை பார்த்து காரித் துப்புனா, என தேன்மொழி சொல்வதைப் படித்து விட்டு, புத்தகத்தை கீழே வைத்து விட்டு தேன்மொழி காறித் துப்பிய எச்சி எனது முகத்தின் வழியே வழிவது போல் துடைத்துப் பார்த்தேன் என எழுதுகிறார்.. அதுதான் ஒரு படைப்பாளியின் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வு. வலையில் விழுந்த வார்த்தைகள் என்ற தலைப்பில் 5 பாகங்கள் எழுதியிருப்பதில், தமிழ்ச் செல்வனின் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ், அவரது அப்பா உள்ளிட்டவர்களின் வரலாற்றையும் பதிவு செய்கிறார். அதுவும் ஒரு பாடமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல! இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு என இளைஞர்களின் பட்டியலை சமூகம் முன்வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல! வாஞ்சிநாதன் உள்ளிட்டோரை எழுதுகிறார். ஆஸ்துரை என்ற பெயரில் கூட ஆஸ் என்றால் அயோக்கியன் எனத் தெரிந்து விட்டது.  அப்புறம் ஏன் துரை என பெயர் வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருப்பார். மற்றவர்களில் இருந்து நல்லதை தரிசிப்பதால்தான் தமிழ்ச்செல்வனின் சகப்பயணிகள் என்ற படைப்பு வந்திருக்கிறது. இந்த சமூகத்தை தான் கண்டதை விட மேம்பட்டதாக படைக்கிறாரோ அவர்தான் சிறந்த எழுத்தாளர். அதில் தமிழ்ச் செல்வனின் படைப்புகள் முன்னிலையில் இருக்கிறது என கவி நயத்தோடு ஆய்வை முன் வைத்தார்.
எழுத்தாளர் ஜாகீர் ராஜா: பாவனைகள் என்ற கதையில் கிராமத்து வறுமையையும், வாழ்க்கையையும் அப்படியே கண்முன் வந்து நிறுத்துகிறார். மிச்சர் வண்டிக்காரன் கொண்டு வரும் பலகாரங்களை கிராமத்துச் சிறுவர்கள் வாங்கிச் சாப்பிட வசதியின்றி, அதனை பாவனையில் சாப்பிடுவது போல் நடித்து விளையாடும் அந்தக் காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். அதேபோல் அந்த சிறுவர்களில் ஒருவன் அதனை வாங்கிச் சாப்பிடுவது போல் பாவனை செய்யும் போது, தவறுதலாக கை கண்ணாடியில் பட்டு, டப் என சத்தம் வர, வண்டிக்காரன் சிறுவனின் காதைப் பிடித்துத் திருகுவான். அப்போது அவன் அண்ணன் வந்து அம்மாவிடம் அழைத்துச் செல்வான், அப்போது நாளைக்கு அப்பாவிடம் சொல்லி அல்வா வாங்கி வரச்சொல்கிறேன் என்று சமாதானம் செய்வாள்.. அப்போதும் அவன் அழுகையை நிறுத்த மாட்டான். அடுத்ததாக அண்ணன் சொல்வான். நான் இரவு அப்பாவிற்கு சாப்பாடு கொண்டு போயிட்டு வரும் போது, அந்த ஆயில் மில்லில் இருந்து எள்ளுப் புண்ணாக்கு கொண்டு வருகிறேன் அமைதியாக இரு என சமாதானம் செய்வான். இது நடக்கும் என்பதைப் புரிந்து அந்த சிறுவன் சமாதானமடைவான். அல்வா கிடைக்காது என்பது தெரியும், ஆனால், அப்பா வேலை பார்க்கும் மில்லில் இருந்து புண்ணாக்கு கிடைக்கும் என்ற எதார்த்தம் அந்த சிறுவனை சமாதானப்படுத்தும்.. இந்த ஏழ்மை வாழ்நிலையும், எதார்த்தமும் அதன் வாழ்நிலை அழுத்தமும் அனைத்துப் பதிவுகளிலும் அப்படியே இருக்கும்.. இதுதான் தமிழ்ச் செல்வனின் படைப்புகள் என ஒவ்வொரு கதைகளில் இருந்தும் அதன் ஆழம் பொதிந்த எதார்த்தத்தை எடுத்துரைத்தார்.
கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் கண்ணுக்குப் பக்கத்தில் இருக்கும் இமை தெரியாது என வள்ளுவன் சொல்லியதைப் போல், காலமும், சமூகமும் கொண்டாடுகிற மிகச்சிறந்த படைப்பாளியாக இருக்கும் தமிழ்ச் செல்வனின் எழுத்துக்களுக்கு, நம் இயக்கம் ஆய்வரங்கம் நடத்தவில்லை. ஆனால் எழுத்தின் ஆழமும், சமூக அக்கறையும், எதார்த்தமும், உயிரோட்டமும் என்ன!  தமிழ்ச் செல்வனின் எழுத்துக்களுக்கு ஆய்வரங்கம் நடத்த வேண்டும் என விஜயா பதிப்பகத்தின் வேலாயுதம் அண்ணாச்சி முன்னெடுத்திருப்பது.. என்னை குற்ற உணர்ச்சிக்குத் தள்ளியிருக்கிறது.. எல்லோரையும் நாம் கொண்டாடுகிறோம். நம்முள் ஒருவராக இருக்கும் ஒருவரைக் கொண்டாட அவ்வளவு எளிதில் யோசிப்பதில்லையே..
தமிழ்ச் செல்வனின் படைப்புகளில், இரு துருவங்கள் உண்டு. ஒன்று சமூக சிக்கல்களில் இருக்கும் துன்பங்கள், அதன் ரணவேதனை என அடி ஆழத்திற்கும் செல்லும். அதோடு  வாழ்வதாகவே மாறிவிடும். மற்றொன்று எழுத்துக்களில் நகைச்சுவை, அதன் நடையோட்டம். எல்லாம் கண்முன் வந்து நின்று நம்மை குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும். இதுதான் ஒரு படைப்பின் வெற்றி எனச் சொல்லலாம். அதுமட்டுமல்ல, இந்தப் படைப்புகளை உருவாக்கும் போது அந்த படைப்பின் கருவாகவே மாறிவிடுவதும் அதனால் கண்ணீர் விட்டு அழுவதும் பெரும்பாலான படைப்புகளில் இருந்திருக்கிறது என தமிழ்ச்செல்வன் பதிவு செய்கிறார். அதே நேரத்தில் எதார்த்தை தாண்டிச்செல்வதில்லை. பாவனைகள் கதையில் பலகார வண்டி வரும் அது வேண்டும் என்று அப்பாவிடம் மகன் கேட்பான்.. அதற்கு அப்பா, அதெல்லாம் ஆயி.. அதனைச் சாப்பிடக்கூடாது என தன் இயலாமையில் இருந்து அல்வாவை ஆயாக மாற்றிச் சொல்லுவதையும் அப்படியே பதிவு செய்திருப்பார். இதுதான் இன்றைய எதார்ததம். இன்னும் நம்மில் பலரின் பெரும்பகுதி வாழ்க்கையே பாவனைகளாக, பாசாங்காகவே நகர்ந்து செல்கிறது.
7ம் திருநாள் என்ற கதையில், ஒரு கிராமத்துத் தாய் தன் குழந்தையின் நலன் குறித்து படும் பாட்டை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.. அந்தத் தலைப்பே அலாதியானதுதான்.. அதாவது, கோவில் திருவிழாக்களுக்குத்தான், 1 ம் திருநாள், இரண்டாம் திருநாள் என பெயர் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்தக் கதைக்கு 7ம் திருநாள் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார் என்று பார்த்தால், அதன் வீரியம் புரியும். ஒரு தாய் தன் குழந்தைக்கு உடம்பு சவுரியம் இல்லாமல், வாய்லையும், வயிற்றாலையும் போய்க் கொண்டே இருக்கிறது. எம்புட்டு ஓடி ஓடி வைத்தியம் பார்த்தாலும் நின்னபாடில்லை. அப்படி ஒவ்வொரு நாளும் பாடாய் படுகிறார். வேதனையில் வெந்து தணிகிறார். அப்போது ஒரு நாள் வாயாலை மட்டும் ( வாந்தி ) நிற்கிறது. அதனையே அவள் ஏழாம் திருநாள் என கொண்டாடுகிறார். இப்படி அந்தத் தாய் குழந்தையின் நலன் குறித்த பறி தவிக்கும் இயல்பை அப்படியே வெளிக்காட்டியிருப்பார்.  இப்படி வாளின் தனிமை என அர்த்தம் பொதிந்த கதையாக விடுதலைப் போராட்டக் களத்திலும் நுட்பமான அரசியலையும் அங்கு கொண்டு வந்து கண் முன் நிறுத்துகிறார். அதே போல் அவரது படைப்புகளில் தொழிற்சங்க அனுபவத்தைக் கூட ஒரு திறன்மிக்க படைப்பாக கொண்டுவர முடியும் என்பதை ஜிந்தாபாத், ஜிந்தாபாத் என்ற தலைப்பில் படைத்திருக்கிறார். இவரது படைப்புகள் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் கண்ணாடி போல் பளிச்சென பிரதிபலிக்க செய்யும் பிம்பமாக நிற்கிறது.. பாரதி புத்தகாலயம் தமிழ்ச்செல்வனின் 32 கதைகளையும் ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. நமக்கான இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலமே இன்னும் தமிழ்ச் செல்வனின் படைப்புகளின் ஆழத்தையும் வீரியுத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்றார்..
ஏற்புரையில் ச.தமிழ்ச்செல்வன்: நான் ஒரு தனி மனிதனல்ல.. எல்லோரும் ஒரு அமைப்பின் பின்புலத்தில்தான் இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். நான் சிறுகதை எழுத்தாளர் ஆவதற்குக் காரணம் அமைப்பு அல்ல. ஒரு படைப்பை, ஒரு படைப்பாளியை வெளியில் இருக்கும் ஒரு சக்தியால் ஆதிக்கம் செலுத்த முடியாது.. அதே நேரத்தில் ஒரு எழுத்தாளனுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அந்த சமூக பொறுப்புணர்வில் இருந்துதான் இயங்க முடியும்.
ரஜினி திப்புசுல்த்தான் வேடத்தில் நடிக்க கூடாது என்று ராமகோபாலன் கூறுகிறார். இப்படி சமூகம் தறிகெட்டுச் செல்வதை எப்படி பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? எனக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. நான் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான அணுகுண்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் நா.பார்த்தசாரதி நாவல்களைப் படித்து, ராணுவ வீரனாகி நாட்டுக்காக சாக வேண்டும் என நினைத்தேன். அதனாலேயே ராணுவத்தில் சேர்ந்தேன். இமயமலை உச்சிக்கு 10 நாள் நடந்தே செல்ல வேண்டும். அப்படிச் சென்று உச்சியில் நின்ற போதுதான் எனக்குள் ஒரு எண்ணம் பிறந்தது. யாரைக் காப்பற்ற இங்கு வந்து நிற்கிறோம். நாம் இங்கு நிற்பதால், அனுதினமும் வெந்து மடியும் உழைப்பாளி மக்கள் காப்பாற்றப்படுவார்களா? என்றைக்கோ வரும் போரின்போது உடமையாளர்களையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாக்க ஏன் இங்கு நிற்க வேண்டும். அன்றாடம் அல்லலுறும் உழைக்கும் மக்களைக் காக்கும் இடத்தில் நேரடியாக நிற்க வேண்டும் என்று நினைத்தேன். ஆகவே நாட்டுக்காக சாவது என்றால் ராணுவத்தில் போய்த்தான் சாக வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
என்னை வளர்த்தது தமிழ்ச் சிறுகதை எழுத்துக்கள்தான். தமிழ்ச்சிறுகதைகளின் விளைச்சல்தான் நான். அந்த எழுத்துக்கள் தான் இடதுசாரியாக மாற்றியது. வாழ்க்கையின் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்ததும் இந்த எழுத்துக்கள்தான். மக்களின் மன சாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கெட்டவர்கள் தைரியமாக சுற்றுகிறார்கள். நல்லவர்கள் எல்லாம் அமைதியாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். பத்துபேர் மட்டும் உள்ள கெட்டவர்கள் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு போய் ஒரு எழுத்தாளனை சுட முடிகிறது.இதற்கெதிராக நம்மால் என்ன செய்ய முடிந்தது. தற்போதைய கல்வியில் உள்ள உள்ளடக்கம் எதைக் கற்றுத் தருகிறது. அந்தக் கல்விக் கூடங்களிலிருந்து நம் குழந்தைகளையும் கல்வியையும் விடுதலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை எப்படிச் செய்யப் போகிறோம். தெரியவில்லை. சமூகத்தையும், கல்வியையும் வகுப்பறைகள் இணைக்க வேண்டும்.
இங்கே ஆண்களின் காதல், உடைமைகள் கொண்ட காதலாக இருக்கிறது. பெண்களின் காதல் தன்னிடம் உள்ள எல்லாமே ஒப்படைக்கிற காதலாக இருக்கிறது.
காதலிக்க மறுத்த இஞ்சினியரிங் மாணவி வினோதினி ஆசிட் வீச்சிற்கு ஆளாகிறாள். முகம் சிதைந்து கருகிய நிலையில் ரணத்தோடு மருத்துவமனையில் இருக்கிறார்.. அப்போதும் கூறுகிறார் தன் தாயிடம்.. நான் மீண்டு வருவேன்.. மீண்டும் படித்து வேலைக்கு சென்று உன்னைக் காப்பாற்றுவேன்.. நீ கண் கலங்காதே.. என தன் தாய்க்கு ஆறுதல் சொன்ன வினோதினியின் உயிர் ஓரிரு நாட்களில் பறிபோகிறது. அந்த துயரத்தில் இருந்து மீளாத அந்தத் தாயைச் சந்தித்து, ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருக்கும் மாணவ, மாணவியர் நாங்கள் எல்லாம் உங்கள் பிள்ளைகளாக இருக்கிறோம்.. கலங்காதீர்கள் என ஆறுதல் கூறினர். தங்களின் சிறுசேமிப்பின் நிதியை எடுத்து அந்தத் தாயின் கையில் கொடுத்தனர்.. அப்போது சிறிது நம்பிக்கை பிறந்தது. பின்னர் வீடு திரும்பிய தாய்க்கு வினோதினியே கண் முன்னே வந்து சென்றாள்.. துயரம் தாங்காமல் சில தினங்களில் அந்தத் தாயும் தற்கொலை செய்து கொண்டார்..
சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் உமா மகேஸ்வரி அன்றாடம் வேலைக்குச் சென்று தனது ஹாஸ்டலுக்குத் திரும்புகிறார். அப்போது, மேற்கு வங்கத்தில் இருந்து வந்து தங்கி கட்டிட வேலை பார்க்கும் இளைஞர்கள் உமா மகேஸ்வரியை கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இது அனுதினமும் தொடர்கிறது. முதலில் உமா மகேஸ்வரி எச்சரிக்கிறார். பலனில்லை. மீண்டும் தொடர்கிறது. இன்னொரு நாள் செருப்பைக் கழற்றிக் காண்பிக்கிறார்.. பலனில்லை.. அடுத்த நாள் சீண்டல் மிக நெருக்கமாக தொடர, காலில் இருந்த செருப்பு கிண்டல் செய்தவரின் கன்னத்தில் பதிகிறது. அடுத்த நாள் இரவு வேலையை விட்டுத் திரும்பும் போது, அடிபட்ட இளைஞர்கள் இணைந்து உமா மகேஸ்வரியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி, கத்தியால் குத்தி கொடூரமாக துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கின்றனர்.. (என்று கூறும் போதே தமிழ்ச் செல்வனின் கண்களில் இருந்து கண்ணீர் முட்டி வழிந்தோடியது. அரங்கமே.. அமைதியானது.. மேடையில் இருந்த வேலாயுதம் அண்ணாச்சியின் கண்களும் குளமாகின.. இருக்கை கொள்ள முடியாமல் சிறு குழந்தையைப் போல் எழுந்து அங்கும் இங்கும் அலைந்தார்.. பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து பார்த்தார்.. அப்போதும் துக்கம் அடங்கவில்லை. நாஞ்சில் நாடன் அருகில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள முயன்றார் ) சில நிமிடங்கள் அரங்கம் மௌனிக்கிறது..
பின்னர் தொடர்கிறார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது.. செருப்படி வாங்கிய இளைஞர்களின் அடி மனதில் வேரூன்றி இருந்த ஆணாதிக்கம் என்ற கற்பிதம் உமா மகேஸ்வரியை நர வேட்டையாட வைத்திருக்கிறது. இதற்கு அவர்கள் மட்டும் பொறுப்பல்ல, சமூகமும் பொறுப்புத்தான்.. இந்த சீழ் பிடித்திருக்கும் சமூகத்தை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பதுதான் முதலில் வந்து நிற்கிறது.. இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி சிறுகதை எழுத்த முடியும். சிலநேரம் நான் நினைப்பது உண்டு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு உயிரோடு இருப்பதற்கு தூக்குப் போட்டு செத்து விடலாமே எனத் தோன்றும். ஆனால் அப்போதெல்லாம்.. என்னை நம்பிக்கை ஊட்டி அநியாயங்களுக்கு எதிராக களம் இறங்கச் செய்வது எனது இயக்கம்தான்.. என்னை இப்போது வரை நம்பிக்கையுடன் இயங்கச் செய்வதும் எனது இயக்கம்தான்..என்று தனது ஏற்புரையிலும்.. போராட்ட விதைகளை விதைத்தார்.
(கோவையில் 13.9.15 அன்று விஜயா பதிப்பகத்தின், விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர்       ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் அன்பு சிவா தொகுப்புரை வழங்கினார்)

Related posts

Leave a Comment