You are here
வாசித்ததில் யோசித்தது 

விரும்பி வாசித்த விஞ்ஞான நூல்கள் 30

கமலாலயன்

1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும்
இரா.முருகவேள்  / பாரதி புத்தகாலயம்
தென்னை மரத்தின் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டிவிடும் என்பதுபோல, ஒரிசாவின் படபகால் கிராமத்திலும் தமிழ்நாட்டின் அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் ஜப்பானின் நிதியுதவியோடு மரங்களை நடுவது எதற்காக என்று கேட்டால் – கிடைக்கிற பதில் இது: ‘ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லுமாம்!’  மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன்? மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி? காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா? வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது? கார்பன் வணிகம் நடத்துவதற்காக காடுகளைத் தனியாரும், அரசும், பன்னாட்டு சுற்றுலா நிறுவனங்களும் பங்கு போட்டுக் கொள்வதற்காகத்தான் ‘புலிகள் காப்பகங்கள்’ என்ற பெயரில் காடுகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனவா? 32 பக்க நூலுக்குள் முன்னூறுக்கும் மேல் இப்படியான கேள்விகளை எழுப்புகிறார் முருகவேள். படிக்கப் படிக்க இரத்தம் கொதிக்கும். விடைகளைத்தேடும் உந்துதல் பிறக்கும்.
2. விஞ்ஞானிகள் வரிசை… தேலீஸ் முதல் ராமகிருஷ்ணன் வரை…
பேரா.கே.ராஜு  / மதுரை திருமாறன் வெளியீட்டகம்
கி.மு.585இல் ஓர் அறிவிப்பை தேலீஸ் என்ற வானியல் நிபுணர் வெளியிட்டிருக்கிறார்: “இந்த ஆண்டு மே 28 அன்று இரவானது பகலில் படையெடுத்து வரும். சூரிய ஒளி முழுவதுமே சந்திரனால் சிறிது நேரம் மறைக்கப்பட்டு விடும்.” கிரகணம் ஏன் உருவாகிறது என்ற காரணத்தை விளக்கிய இவரைப் போன்றவர்களிடமிருந்து தொடங்கிய நவீன அறிவியல் நதி, நமது சமகாலத்திய வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வரை பல்வேறு தடைக்கற்களையெல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு தொடர்ந்து பெருகியோடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியின் வெள்ளப்பெருக்கில் பெண் அறிவியலாளர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை தியானோ, அக்லோனிகே, என்ஹெடு அன்னா, அக்லோடைக் போன்ற பெண்களைப் பற்றிய கட்டுரை தெளிவாக்குகிறது. ஃபாரடே, டார்வின், ஆர்க்கிமிடீஸ், சர்.சி.வி.ராமன் போன்ற, உலகம் நன்கறிந்த அறிவியலாளர்களைப் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. சந்திரன் தெய்வம் அல்ல’ என்று ஆனெக்ஸாகரஸ் எழுதி வெளியிட்டதும் அவரைக் கொன்றுவிட முடிவெடுக்கிறது அன்றைய உலகம். இன்று மட்டும் என்ன வாழ்கிறதாம்? மாதொரு பாகனால் பெருமாள் முருகன் பட்ட பாடு மறந்துவிடுமா?
3. விண்மீன்கள் வகை வடிவம் வரலாறு
த.வி.வெங்கடேஸ்வரன்                       பாரதி புத்தகாலயம்
தொண்ணூறாம்  ஆண்டுகளின் தொடக்கத்தில், பிஜிவிஎஸ் கலைப்பயணத்தின் போது ‘பிரபஞ்சம்’ பற்றிய நழுவு படக் காட்சிகளின் போது சி.இராமலிங்கம், த.வி.வெ. போன்ற நண்பர்கள் விளக்க உரைகள் ஆற்றுவதைக் கேட்டபோது எழுந்த வியப்பு, இந்நூலைப் தொடர்ந்து வாசிக்கும் போது ஏற்படுகிறது. அழகான இரவு வானின் சொக்க வைக்கும் அழகிற்குப் பின்னால், வான்முகில்களே விண்மீன்களின் கருப்பை என்பது போன்ற அறிவியல் உண்மைகளும் கவிதையினுள் ஊடாடும் கருப்பொருள் போல உறைகின்றன என்கிறது இந்நூல். கிரேக்க மொழியில் கோள்களுக்கு ‘பிளானட்’ எனப் பெயர். இதற்கு ‘அலைபவன்’ எனப் பொருளாம். இரவு வானில் விண்மீன்களிடையே ‘அலையும்’ ஐந்து கோள்களை, அவற்றின் பாதையை அறிமுகம் செய்கிறது ஒரு கட்டுரை. திருவாதிரையை சிவப்பு ராட்சஸன் எனவும், சிரியஸ் B-யை வெள்ளைக்குள்ள விண்மீன் எனவும் அழைப்பதற்கு அறிவியல் விளக்கம் தருகிறது மற்றொரு பகுதி. விண்மீன்களின் தொலைவு, உண்மைப் பிரகாசம், நிறை ஆகிய மூன்று முக்கியப் பண்புகளை அறிய நவீன அறிவியல் வழிவகை செய்துள்ளதை வேறொரு கட்டுரை வழி அறிகிறோம். பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு கடவுளின் கை அவசியமில்லை என்று லாப்லாஸ் நெப்போலியனிடம் சொன்னாராம். ஏராளமான விளக்கப் படங்களுடனும்,                                 த.வி.வெங்கடேஸ்வரனின் செழுமையான அறிவியல் மொழிநடையுடனும் வெளியீடாக வந்துள்ளது.
4. அக்னி நட்சத்திரம்
சி.ராமலிங்கம்  / அறிவியல் வெளியீடு
அக்னி நட்சத்திரம் வந்தாலே அனலிற்பட்ட புழுக்களைப்போல் சூரியக் கதிர்களின் சுட்டெரிக்கும் தகிப்பில் மக்கள் தவித்துப் போகின்றனர். எதை இப்பெயரிட்டு அழைக்கிறோம் என்ற கேள்விக்குப் பதில் தருகிற சிறுநூல். முப்பத்தி ஏழு கேள்விகளுக்கு, முப்பத்திரண்டு பக்கங்களே கொண்ட இச்சிறு நூல் விடை தருகிறது. சூரியனுக்கும்  – பூமிக்குமிடையே உள்ள தூரம் எவ்வளவு, சூரியப் புள்ளிகள் எவை, சூரியன் எரிந்து கொண்டுள்ளதா, துருவ ஒளி என்றால் என்ன, ஒளி ஆண்டு என்பதென்ன, நமது சூரியன் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தால் என்ன ஆகும்?  – என்பன போன்ற மிகச் சுவையான கேள்விகளுக்கு இராமலிங்கம் மிக எளிமையான விதத்தில் பதில் தருகிறார். பல்லாண்டு கால அறிவியல் இயக்க அனுபவம் அவரது பதில்களில் பதிவாகிறது.
5. வாழ்வே அறிவியல் கே.கே.கிருஷ்ணகுமார்
கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் (K.S.S.P.) மிக வலுவான ஓர் அறிவியல் அமைப்பு. அதன் நிறுவன செயற்பாட்டாளர்களுள் முன்வரிசைக்காரரான கே.கே.கிருஷ்ணகுமார் எழுதிய இந்த நூல், மனித வாழ்க்கையில் அறிவியல் விளைவித்த விந்தைகளைப் பொன்னுசாமித் தாத்தா என்ற ஒரு கதை சொல்லியின் மூலம் எளிமையாக விவரிக்கிறது. அறிவியலின் ஐந்து வகையான செயற்கூறுகளை, சமுதாயம்பிறந்து வளர்ந்து மாற்றங்களைக் கண்ட சமூக அறிவியலின் கூறுகளுடன் இணைத்து உரையாடல் வடிவில் சுவையாகச் சொல்லுகிறது. ஏழு பதிப்புகள் கண்ட இந்த நூல், தமிழில் அறிவியல் வெளியீடுகளின் வெற்றிகரமான சில நூல்களுள் ஒன்று. தன்னுடைய கிராமத்தில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்து, ஒலிப்பிக்கில் பி.டி.உஷாவின் ஓட்டப்பந்தயத்தைக் காண வழிவகை செய்த ஒலிம்பிக் தாத்தாவான பொன்னுசாமி மெத்தப்படித்த மேதையல்ல. ஆனால், செயலூக்கமும், புதியன கண்டறியும் ஆர்வமும் அவரை உந்தித் தள்ளுகின்றன. ஒவ்வொரு வினாடியும் வளர்ந்து கொண்டிருக்கிற அறிவுலகத்தின் சாதனைகளை, அம்மாளு பாட்டியின் பார்வையிலிருந்து பார்த்து சில கேள்விகளை எழுப்புவது சிந்தனையைக் கிளறுகிறது. உதாரணமாக, “டெலிவிஷன் பெட்டி மூலமா செய்திகளையும், படங்களையும் அனுப்பறது மாதிரி, வாரா வாரம் நம்மள மாதிரி இருக்கறவங்களுக்கு ஒரு மூணு  – நாலு லிட்டர் அரிசியையும் அனுப்பி வைக்க முடியுமா, இல்லையா?”  என்று அம்மாளுப் பாட்டி கேட்கிறாள். மாற்றங்களைத் தோற்றுவித்த தீப்பொறிகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் கனன்று கொண்டிருப்பதை வாசிப்பவர்கள் உணரமுடியும்.
6. வாடகைத் தொட்டில் ஜி.பிரஜேஷ்ஸென்  தமிழில்:யூமா வாசுகி  / நல்லநிலம் பதிப்பகம்
‘தாய்மையை விலைபேசி விற்கும் புதிய காலத்தின் கணக்குப் புத்தகம்’ என்ற முத்திரையும், சோதனைக்குழாயிலிருந்து கருவடிவில் வெளிப்பட்டு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்து, உண்மைத் தாய்க்கு யாதொரு வலியோ, பிரசவ வேதனையோ இல்லாமல் ‘குழந்தைகளாய்ப் போய்ச் சேருகிற பிஞ்சுப்பிறவிகளின் வேதனைக் கதையும் வாசிக்கிற நமது நெஞ்சில் அறைகின்றன. குழந்தை பிறக்க வழியே இல்லை என மருத்துவரீதியாகக் கைவிடப்பட்ட பெண்களின்‘மலடிப் பட்டத்தை நீக்குவதற்கு ஒரு வழியாக அறிவியல் கண்ட அற்புதவழி ‘வாடகைத் தாய்’ முறை. ஆனால், இன்றைய வணிகமய  – தனியார்மய உலகின் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், மலட்டுத்தன்மை மேலாண்மை மற்றும் இனப்பெருக்க உதவி மையங்களும் கைகோர்த்துக் கொண்டு அடிக்கிற பகற்கொள்ளைகளில் மிகநவீன  – மிக விலையுயர்ந்த கருத்தரித்தல் முறையாக மேற்கண்ட செயல்முறையை மாற்றிவிட்டன. சமூக முக்கியத்துவமுள்ள, நலவாழ்வுத் துறையில் சிறந்த, மனித உரிமை சார்ந்த சிறந்த செயற்பாட்டிற்கான, புலனாய்வு அறிக்கைக்கான 5 விருதுகள் பெற்றிருக்கிறது இந்த நூல் எனில், அதில் வியப்படைய ஏதுமில்லை. யூமா வாசுகியின் கவித்துவமும், உள்ளார்ந்த சமூகப் பொறுப்புணர்வும், உண்மையொளி வீசும் விமரிசனங்களும் கலந்து பிரவகிக்கும் ஆற்றொழுக்கான மொழியாக்கம் கண்களில் நீரை வரவழைப்பதாக அமைகிறது. ஒரே ஓர் உதாரணம்: “…ஓடிச்சென்று எடுத்து முத்தங்கள் கொடுத்து அதிகாரத்தை நிறுவுவதற்கு சட்டத் தடை உள்ளதால் பார்க்க மட்டுமே செய்யுங்கள், பெற்ற வயிற்றின் தாகம் தீரும் முன்பே, விசாலமான உலகத்தின் தலையில் இரக்கமற்றுக் கைவிடப்பட்ட அவள் உங்களுக்கு நன்றி சொல்லக்கூடும். இரவின் மறைவில் பழந்துணி சுற்றிக்கட்டி சாக்கடையில் எறியாமல், சேற்றுக் குட்டையில் அமிழ்த்தாமல், நதியில் மிதக்க விடாமல், ‘அம்மா’க்களின் கரங்களில் உயிருடன் ஒப்படைத்ததற்கு அவள் கடமைப்பட்டவளாயிருப்பாள்….”
7. வானியல் வினா வங்கி                                                                     புதுவை அறிவியல் இயக்கம்
கொஞ்சம் வரலாறு, கணிசமாக அறிவியல் விளக்கங்கள் கொண்டதாக வானியல் அறிமுகப் பகுதி முன்வருகிறது. கெப்ளர் முதல் இன்று வரையிலான வானியல் ஆய்வாளர்களின் கண்ணோட்டங்கள் மிகச் சுருக்கமாக இடம்பெறுகின்றன. கலைச் சொற்களின் பட்டியல் அடுத்து இடம்பெறுகிறது. சரியா, தவறா; கோடிட்ட இடங்களை நிரப்புதல்; பலவற்றினுள் தேர்வு செய்தல், ஒரு சொல் வினா – விடைகள்; குறுவிடைகள் தருதல்; சரியான விதத்தில் பொருத்துதல்  என செயற்பாட்டு அடிப்படையிலான ஆறுபகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது. இன்றைய கல்விச் சூழலில், வினாவங்கி நூல்களுக்கான இடம் விரிவடைந்து கொண்டுபோகிறது. புதுவை அறிவியல் இயக்கம், இந்தவினா வங்கி வடிவத்தைக் கையிலெடுத்து ஏராளமான சிறுசிறு வினாக்களின் மூலம் அறிவியல் உண்மைகளை நமக்குத் தந்துள்ளது. ஒரு பாடப்புத்தகம் வாசிப்பதைப்போன்ற உணர்வு எழுந்தாலும், இது மாணவர்களுக்கு மிகப்பயனுள்ள புத்தகமாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
8. கோள்கள் – குள்ளக் கோள்கள் – புறக்கோள்கள்
முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் / அறிவியல் வெளியீடு
மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும்  கோள்களின் இருப்பிடமும், அவை இடம்பெயர்வதுமே நிர்ணயிப்பதாக சோதிடர்கள் சொல்கின்றனர். புராண மரபில் பிரகஸ்பதியும், சுக்கிரனும், புதனும் இன்னபிற கோள்களும் உருவான கதைகளின் திரட்டில் தொடங்குகிறது இந்நூல். இந்திய அறிவியல் பாரம்பரியத்தில் “சூரியன், விண்மீன்கள் கிழக்கிலிருந்து மேற்கு முகமாக நகர்வது போலத் தோன்றுவது பூமியின் “சுழற்சியினாலேயே” என்று சொன்ன ஆரியபட்டரின் கருத்து உட்பட பல நுணுக்கமான செய்திகளின் தொகுப்பு தொடர்கிறது. இந்திய எண்கணிதத்தில் மிகமிகப் பெரிய எண்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன என்பது போன்ற செய்திகள் வியப்பைத் தருகின்றன. ஞாயிறு போற்றுதும் பகுதியில் சூரியனின் நான்கடுக்கு அமைப்பும், அவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம், சூரியப்புயல் பற்றிய உண்மைகள் இடம்பெற்றுள்ளன. புதன், வெள்ளி, நிலவாகிய சந்திரன் எனும் துணைக்கோள், இந்தியப் பெயர்களைக் கொண்ட குறுங்கோள்கள் என தகவல்களின் களஞ்சியமாக கட்டுரைகள் தொடர்கின்றன. சொலவடைகள், பழமொழிகள், திரைப்படப் பாடல்களின் வரிகள் என த.வி.வெங்கடேஸ்வரனின் அறிவியல் மொழிநடையில் அழகிய பல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை இந்நூலும் மெய்ப்பிக்கிறது. ‘எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேனே’ என்று தன் கோள் பதவி பறிபோன புளூட்டோ புலம்புகிறதாம். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ என பூமி வருந்தும்படி ஆண்டுதோறும் நிலவு விலகிச் செல்லுவது ஏன் என ஒரு கேள்வி எழுப்பி விடையளிக்கிறார். மிக அரிய ஏராளமான புகைப்படங்களுடன் சிறப்பான வடிவமைப்பில் வந்துள்ளது இந்நூல்.
9. உலகை மாற்றிய உயிரியல் அறிஞர்கள்                ப.ரவிச்சந்திரன்  / அறிவியல் வெளியீடு
பென்சிலின் என்ற உயிர்காக்கும் மருந்தைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃபிளம்மிங், ஆய்வுக்கூடத்தின் சன்னல்களைக் காற்று-வெளிச்சம் வருவதற்காகத் திறந்து வைத்திருந்தாராம். தோட்டத்துப் பக்கமிருந்து வீசிய காற்று பூஞ்சைகளைக் கொணர்ந்து சேர்த்திருப்பதை அறிந்ததும், ஃப்ளம்மிங்கின் தொடர் ஆய்வின் விளைவாக பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டதாம். மிகச் சரியான, அறிவியல்பூர்வமான மனித உடற்கூற்றியல் நூலை 500 ஆண்டுகட்கு முன்னரே ஆண்ட்ரியா வெசாலியஸ் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். வெந்தணலில் வேகாமற் தப்பிப் பிழைத்த நூல் இது என்பது கூடுதல் தகவல். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை முதலில் கண்டறிந்த லியூவன் ஹாக்; ஏறக்குறைய 4000 சிற்றினங்களை 8 படிநிலைகளில் வரிசைப்படுத்தி விளக்கவுரையுடன் ‘இயற்கை நியதி’ எனும் நூலாக வெளியிட்ட லின்னேயஸ் – இன்சுலின் சார்ந்த உயிர் எதிர்ப் பொருளைக் கண்டுபிடித்த ரோசலின் யாலோ  உட்பட பல உயிரியல் அறிஞர்களைப் பற்றிய மிகச் சுருக்கமான நூல்.
10. இந்திய விண்வெளி இயலின் தந்தை –             விக்ரம் சாராபாய்  I   எம்.ஏ.பழனியப்பன்                          ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
இந்திய அறிவியலின் மகாத்மா’ என விக்ரம் சாராபாயை மறைந்த ஏ.பி.கே. அப்துல் கலாம் போற்றுகிறார். இந்தியாவும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் என 1957இல் விக்ரம் சாராபாய் அறிவிப்புச் செய்தபோது, அன்றைய இந்தியச் சூழலில் இது என்ன வேண்டாத வேலை என்ற பிரதிபலிப்புதான் எழுந்தது. அகமதாபாத்தில் அம்பாலால் என்ற வர்த்தகரின் மகனாகப் பிறந்து (12.08.1919), தந்தை உருவாக்கிய மாண்டிசோரி கல்வி முறைப் பள்ளியில் பயின்றவர். பிற்காலத்தில் மனைவி மிருணாளினி, மகள் மல்லிகா, விக்ரம் சாராபாய் மூவரும் உலகறிந்த பெயர்கள். தனது “Physical Research Laboratory (PRL)” மூலம் ஆய்வுகளை முன்னெடுத்தவர். இந்திய மேலாண்மைக் கல்லூரி, தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம், அகமதாபாத் பஞ்சாலைத் தொழில் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு எனப் பல புதிய அமைப்புகளை உருவாக்கித்தந்த முன்னோடி யுமாவார். அணு ஆற்றல் நிறுவனத் தலைவர் ஹோமி பாபாவுக்குப் பின் அந்தப் பதவியை ஏற்றுப் பணியாற்றிய சாராபாய், இந்தியாவின் முதல் செயற்கைக் கோளை ஏவிய கதையை இந்நூலில் வசீகரமான எளிய நடையில் விவரித்துள்ளார் எம்.ஏ.பழநியப்பன்.
11. ஹிக்ஸ்போஸான் வரை  – இயற்பியலின் கதை
ஆயிஷா இரா.நடராசன்                       புக்ஸ் பார் சில்ரன்
இயற்பியல் என்பது என்ன? அதற்கு இந்தப் பெயரை வைத்தது யார்? என்ற கேள்விகளுடன் அதற்கு விடை சொல்லப் புறப்படுகிறது இந்நூல். இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பை ஆராய்வது இயற்பியல் என்று கூறலாம் என்ற விளக்கத்துடன் அதன் பல கூறுகளாக விளங்கும் வானியல், அணுவியல், மின் அணுவியல் போன்ற பல பிரிவுகளின் வளர்ச்சியை 1900 வரை, 1900 -1920 வரை 1921 முதல் 1950 வரை 1950-2000 வரை எனப் பல காலகட்டங்களாக விளக்குகிறது, கிரகணங்கள் நடைபெற்ற காலம், நோபல் பரிசு பெற்றோர் விவரங்கள், விண்வெளி ஆய்வில் இந்தியா, அமெரிக்காவின் முயற்சிகள் எனப் பல விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள், 20ம் நூற்றாண்டு சாதனையாளர்கள் என்றும் தகவல்கள் விரிகின்றன. இயற்பியல் என்பது பிரபஞ்சத்தை உள்ளடக்கியது. அதனை இவ்வளவு எளிதான மொழியில் சிறு நூலில் அழகாக விளக்க முடியும் என ஆயிஷா நடராசன் நிரூபித்துள்ளார்.
12. நந்தியின் முதுகிலுள்ள திமில்
தாமோதர் தர்மானந்த் கோசாம்பி / தமிழில் முனைவர் ஆர்.உமா / தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு
டி.டி.கோசாம்பி, இந்திய வரலாற்றியலின் தந்தை எனப் புகழப்படும் அளவிற்குச் சிறந்த வரலாற்றாளர். சிறுவர், சிறுமியருக்காக என அவர் எழுதிய ஒரே ஒரு கதை இது. காளை மாட்டின் முதுகில் திமில் உண்டு. எருமைக்கோ, குதிரைக்கோ அப்படியேதுமில்லை. இதற்கு மட்டும் எவ்வாறு திமில் வந்தது? கால்நடைகளின் ஆண்டுவிழாவையொட்டி, தனது காளையை மேய்ப்பதற்கு அழைத்துப் போகிற இராமனிடம் அவனது கானக நண்பர்கள் கேள்வியை எழுப்புகின்றனர். உரையாடல் வளர்கிறது. ஆங்கிலம் – தமிழ் என இருமொழிகளில், படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்புத்தகம் ஒரே மூச்சில் வாசித்துவிட முடிந்த சிறுநூல்.
13. எங்கும் எதிலும் இயற்பியல்
சி.எஸ்.வெங்கடேஸ்வரன்  / அறிவியல் வெளியீடு
இயற்பியல் என்றவுடன் நியூட்டன், ஸ்டீஃபன்  ஹாகிங் போன்ற அறிவியலாளர்களும், சோதனைக் கூடங்களும் நம் நினைவிற்கு வந்துவிடுகின்றன. ஆனால், நமது அன்றாட வாழ்வியக்கங்கள் ஒவ்வொன்றிலும் இயற்பியலின் விதிகள் தொழிற்படுகின்றன என்பதை நாம் அறிவதோ, நினைவிற் கொள்வதோ கிடையாது. இந்நூல், மிக எளிய மொழியில் அந்த விதிகளை விளக்கிச் சொல்கிறது. லேசர் பிரிண்டர் முறையில் எப்படி அச்சடித்தல் நிகழ்கிறது என அறியும்போது வியப்பேற்படுகிறது. வாகனங்களின் டயர்களில் கரடுமுரடான விதத்தில் மேடு-பள்ள அமைப்பில் தடிமனான கோடுகள் உள்ளன. அவ்வாறு டயர்களை உருவாக்குவது ஏன் என ஒரு கட்டுரை கூறுகிறது. வெறும் கையின் மூலம்’(கராத்தே) ஒரே அடியில் செங்கற்களை உடைத்துக் காட்டுவது எப்படி?             சினிமா ஃபிலிம் தனித்தனியான படங்களால் ஆனது; எனினும் நாம் பார்ப்பது வேகமாக மாறிக் கொண்டிருக்கும் தொடர் சலனமற்ற படங்களே; அவற்றில் இயக்கத்தை நாம் காண்பது நமது மூளையின் காரணமாகவே. என்பன போன்ற இயற்பியல் உண்மைகளை வெங்கடேஸ்வரன் விளக்குகிறார். தெளிவான, வெகு எளிய நடை.
14. உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்
ஏற்காடு இளங்கோ  / அறிவியல் வெளியீடு
ரஷியா, சோஷலிசக் குடியரசாக இருந்த காலத்தில்  விண்வெளியில் முதல் உயிரினமாக லைக்கா என்கிற நாயும், பின் யுரி ககாரின் என்ற முதல் மனிதரும் பூமியைச் சுற்றி வந்தனர். இந்த வரிசையில் 12-வது விண்வெளி வீரராக வாலண்டினா விளாடிமிர்ரோவ்னா, தெரஸ்கோவா விண்வெளிக்குச் சென்று திரும்பினார்.விண்வெளிப் பயணத்தின்போது  – ஒரு பெண்ணின் உடலில் என்னென்ன விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை உலகம் அறிவதற்கு வாலன்டினாவின் பயணம் உதவியது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் பள்ளிப்படிப்பு 1945ல் தொடங்கி 1953ல் இடையிலேயே நின்றுவிடுகிறது. பாட்டியின் ஆதரவில் தங்கியிருந்து டயர் தொழிற்சாலையில் பயிற்சியாளராகச் சேர்கிறார். பாராசூட்டிலிருந்து குதிக்கும் சாகசம் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைக்கையில், அதன் மூலம் பிரபலமாகி வோஸ்டாக்-6 என்ற விண்கலத்தில் விண்வெளியில் வெற்றிகரமாகப் பயணம் செய்து பல ஆய்வுகளை மேற்கொள்கிறார். 48 முறை பூமியைச் சுற்றி வந்து, G-விசையை ஆண்களைவிட பெண்ணால் அதிகம் தாங்கிக் கொள்ள முடிகிறது என நிரூபிக்கிறார். தனியாக இவ்வாறு சென்ற ஒரே பெண் வாலண்டினா மட்டுமே. விண்வெளியில் சோவியத் ரஷியாவும், அமெரிக்காவும் போட்டியிட்டதில் பல வெற்றிகளைச் சாதித்தது வாலண்டினாவின் பயணமே என்பது புத்தகத்தின் விரிவான தகவல்களிலிருந்து பெறப்படும் உண்மையாக அமைகிறது.
15. அறிவியல் ஆனந்தம் அறிவியல் வெளியீடு
அறிவது – புதிய உண்மைகளைப் படித்தறிவதும், பட்டு (அனுபவத்தில்) அறிவதும், செய்து பார்த்து அறிவதுமான செயல்முறை. இப்புத்தகத்தில் அறிவியல் பரிசோதனைகளை நாமே செய்துபார்க்க உதவும் வகையில் 80 வகையான செயற்பாடுகள் தரப்பட்டுள்ளன. உயிரியல், உடற்செயலியல், நீர், காற்று, ஒளி, ஒலி, இயந்திரங்கள் – விசைகள் என வகைப்படுத்தப்பட்ட பொருள்கள் சார்ந்த எளிய பரிசோதனைகள் இவை. வரைபடங்கள், கற்பனையும் கைத்திறனும், திறன் விளையாட்டுகள் ஆகியன பிற்பகுதியில் உள்ளன. தீக்குச்சி மூலம் நாடித் துடிப்பறிதல், உயரத்திலிருந்து வீழும் நீரின் விசையறிதல்  என ஆவலைத் தூண்டும் அறிவியல் விந்தைகள். கற்றலின் மகிழ்ச்சியை அறிகையில் குழந்தையாகி விடுகிறோம் நாம்.
16.  100க்கு 100 அறிவியல் நேனோ தொழில்நுட்பம்
ஆயிஷா இரா.நடராசன்  / புக்ஸ் பார் சில்ரன்
உலகம் சிறியதாகிக் கொண்டே போகிறது. தொழில்நுட்பம் அனைத்தையும் சிறியதாக்குகிறது. துவக்கத்தில் ஒரு பெரிய அறையை அடைத்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் இன்று கைக்குள் அடங்கி விடுகிறது. பாட்டைப் பதிவு செய்வதில் முதலில் இசைத் தட்டு, பிறகு கேசட், பிறகு சி.டி. இன்று நக அளவிலான மெமரி கார்டில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பதிவு செய்துவிட முடிகிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை நேனோ தொழில்நுட்பம். மிரட்டும் இந்தத் தொழில்நுட்பம் குறித்த 100 தகவல்களை கைக்கடக்கமாக சிறு புத்தகமாக அளித்துள்ளார் ஆயிஷா நடராசன்.
மீட்டரைத் தெரியும். செ.மீ., மி.மீ. தெரியும் ஒரு மீட்டரில் 1,000,000,000 நேனோ மீட்டர் உள்ளது என்று துவங்கி அதை முதலில் அளவிட்டவர் யார், இயற்பியல், வேதியல், உயிரியல் தொழில் நுட்பங்களில் நேனோ தொழில்நுட்பம் எவ்வாறு உபயோகப்படுகிறது. அது குறித்த பல்வேறு விதிகள் என்ன, அதன் பல்வேறு பயன்பாடுகள் என்ன, அதில் எடுத்த முயற்சி என்ன என விரித்து செல்லும் விஷயங்கள் அதன் எதிர்காலம் என்னவென்பதுடன் முடிகிறது.
17. உயிரின் உயிரே பேரா.பொ.ராஜமாணிக்கம்              அறிவியல் வெளியீடு
உயிரித் தொழில்நுட்பம் [Bio-Technology] அறிமுகமான ஆரம்ப நாட்களில், அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக 2004 அனுசரிக்கப்பட்டது. அகில இந்திய வானொலியில், அறிவியல் இயக்கம் தயாரித்தளித்த ஓர் உரையாடல் தொடர் நிகழ்வு ‘உயிரின் உயிரே’ என்பது. உரையாடல், நாடகம், பாடல், பட்டிமன்றம், விவாதமேடை, நேர்காணல் எனப் பல வடிவங்களில் இது தயாரிக்கப்பட்டு வானொலி மூலம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதன் முக்கியமான பகுதிகள் இந்நூலில் எழுத்து வடிவில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சர்க்கரை போடாத காபி, மரபணு ரேகை, அழுகாத தக்காளி, மறுசுழற்சி, பயோடெக்-இயற்கை-எதிர்-செயற்கை என 13 தலைப்புகள். சுவையான ஓர் ஒலித் தொடரின் வரி வடிவம்.
18. ஸ்டீபன் ஹாக்கிங் -வாழ்வும் பணியும்
கிட்டி ஃபெர்கூசன் / தமிழில்:பேரா.ச.வின்சென்ட்   எதிர் வெளியீடு
இயற்பியலில், குறிப்பாக அண்டவெளி இயலில் முதன்மையான ஓர் அறிஞரின் வாழ்க்கை வரலாற்று நூல். கிட்டி ஃபெர்கூசன் என்ற அமெரிக்க எழுத்தாளரால் ஸ்டீபன் ஹாகிங்கின் வரலாறும்  – அறிவியல் பயணமும் இந்தப் பெரு நூலில் அழகுற விளக்கப்பட்டுள்ளன. அண்டவெளி இயலில் பெரும்பாலும் அனுமானங்களையே முன்வைத்தாக வேண்டிய நிலையில், ஹாக்கிங் தனது ஆய்வுப் பயணத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தொடங்குகிறார். அந்த நிலையில் ALS என்ற கொடிய நோயின் தாக்குதலால் ஹாக்கிங்கின் உடல் செயற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோகின்றன. மூளை மட்டுமே செயற்படுகிற நிலை. சில ஆண்டுகளே இனி உயிர் வாழ்வார் எனக் கருதப்பட்ட போது, ஹாகிங்கின் மனஉறுதி இன்றுவரை அவரை முன்னணி ஆய்வாளராக நிலை நிறுத்தியுள்ளது. இந்த வெற்றிப் பயணத்தில் ஜேன் என்ற பெண்ணின் பங்கு அளப்பரியது. ஆனால், ஸ்டீபன் ஹாகிங் வெற்றிச் சிகரங்களில் மேலேறிக் கொண்டிருக்கும் போது, ஜேன் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்ட சோகத்தையும் இந்நூல் வலியுடன் வெளிக்கொணர்கிறது. ‘காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற மக்கள் அறிவியல் நூலை முதன்முதலில் பிறர் உதவியுடன் எழுதி வெளியிட்டுப் பணம் சம்பாதித்து கடும் துயரங்களிலிருந்து மீண்டு வந்த நிகழ்வுகள் நம்மை உலுக்கும். மூளையை ஒரு கணினியாகக் கருதுகிற ஹாகிங், தனது சக்கர நாற்காலியுடன் இணைக்கப்பட்ட ஒரு கணினியின் உதவியினால்தான் ‘பேசவும்  எழுதவும் முடிகிறது. ‘எதிர் வெளியீடு’ களின் கனமும், ஆழமும், விரிவும் இந்த நூலிலும் பளிச்சிட்டுத் தெரிகின்றன. பேராசிரியர் ச. வின்சென்ட்டின் மொழியாக்கம் செறிவானது. சவால் நிறைந்த ஒரு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் அவர்.
19. இயற்கை, சமுதாயம், விஞ்ஞானம் 0
கே.கே.கிருஷ்ணகுமார்  / அறிவியல் வெளியீடு
1986இல் பிஜிவிஎஸ் கலைப்பயண காலத்தில், கே.எஸ்.எஸ்.பி.யின் மலையாள மொழி நூல்கள் பலவும் தமிழில் வெளியாகின. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இப்பணியில் பெரும் சாதனை செய்துள்ளது எனலாம். கே.கே.கிருஷ்ணகுமாரின் இந்த நூல் இதுவரை பதிநான்கு பதிப்புகளைக் கண்டிருக்கிறது என்பதே இதன் வெற்றிக்குச் சான்று. காலை எழுந்ததும் நமது அறையில் நாம் காணும் பொருட்களைப் பட்டியலிடுவதில் தொடங்கி பிரபஞ்சத்தின் அகன்று விரிந்த எல்லையற்ற பெருவெளியின் விந்தைகள் வரை விவரிக்கிறார் ஆசிரியர். பூமியை ஒரு பாடநூலாகக் கொண்டால், அறிவியலின் கதை ஒரு தனிச் சிறப்புமிக்க பகுதி. அணுக்கள் முதல் அண்டம் வரை, இயற்பியல், வேதியியல், பரிணாம இயல் என இயற்கையையும், சமுதாயங்களின் வரலாற்றையும், அறிவியல் -தொழில்நுட்பங்களின் வளர்ச்சியையும் சுவையான விதத்தில் விவரிக்கிற நூல்.
20. கலகக்காரர் ஐன்ஸ்டீன்
த.வி.வெங்கடேஸ்வரன்  / அறிவியல் வெளியீடு
ஐன்ஸ்டீன் மேதை; ஒரு கலகக்காரரும் – போராளியும் கூட என்று நிறுவுகிற நூல். அணுகுண்டு செய்வதற்கு இவரே காரணம் என பொதுப் புத்தியில் நிலவுகிற கருத்து அப்பட்டமான தவறென்கிறார் ஆசிரியர். “நம்மிடம் இருப்பதில் மிக மிக உண்மையானதும், உன்னதமானது அறிவியலைத் தவிர வேறு எதுவுமில்லை” என்று அறுதியிட்டுக் கூறியவர் ஐன்ஸ்டீன்.
வறட்சியான அறிவியல் விளக்க நூலாக இது இல்லை என்பதற்கு சக மாணவி மிலீவாவுடன் காதல் வயப்பட்டு, கல்யாணமும் செய்துகொண்ட ஐன்ஸ்டீனைப் பற்றிய அத்தியாயம் சான்று. “நான்கு கண்கள், ஆனால் ஒரே கனவு” என இருவரும் ஒருமித்து எடுத்த முடிவு சுவையானது. அரசியல் வெளிகளை வலியுறுத்தி “ஐரோப்பியர்களுக்கான அறிக்கை”யைத் தயாரித்தளித்தது. ஐன்ஸ்டீனை முட்டாள், மனநோயாளி என்று அவருடைய முன்னாள் நண்பர் உட்பட பலரும் தூற்றியது – இவையெல்லாம் கவனத்திற்குரியவை. தூற்றியவர்களின் பெயர்களை யாரறிவார் இன்று? அறிவியல் உண்மைதான் வென்றது, வெல்லும் என்பதே இந்தக் கலகக்காரரின் வாழ்வு காட்டும் வெளிச்சம்.
21. நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?
ஆயிஷா இரா.நடராசன்  / புக்ஸ் பார் சில்ரன்
விஞ்ஞானி ஆவது என்றால் சும்மாவா? பிறந்தேன் / வளர்ந்தேன் என்று வாழ்ந்து செத்தவர்கள் பலகோடி. இதில் விஞ்ஞானிகள் வித்தியாசமாக எதையாவது சிந்தித்து புதிது புதிதாகக் கண்டுபிடிக்க முயல்பவர்கள். இதில் பல சமயங்கள் அவர்கள் கிறுக்குத்தனமாக எதையாவது செய்து நகைப்புக்கிடமாவார்கள். பலர் உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னதால் உயிரையே இழக்கவும் நேரிட்டது.
“நீங்களும் விஞ்ஞானி ஆக ஆசைப்படுகிறீர்களா?” என்ற கேள்வியுடன் இந்நூலைத் தொடங்கும் ஆயிஷா நடராசன் இத்தகைய பல விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த சுவாரசியமான (பல சமயங்களில் சோகமான) சம்பவங்களை சேகரித்து செறிவான மொழிநடையில் விவரிக்கிறார். அந்த விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புக்களை மனித இனத்துக்கு அளிக்கத் தமது உயிரைக் கொடுக்கவும் தயங்கவில்லை. இன்று நாம் இவ்வளவு வசதியாக தொழில் முன்னேற்றத்தின் உதவியுடன் வாழ்கிறோம் என்றால் அதற்கு அவர்களின் பங்களிப்பே அடிப்படை. அதன் பலனை முதலாளிகள் சுருட்டுவது வேறு கதை. விஞ்ஞானிகளின் கஷ்டத்தை அறிய நிச்சயமாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
22. எளிய அறிவியல் உண்மைகள்
கே.காத்தவராயன்  / அறிவியல் வெளியீடு
காற்று, நீர்  – இவ்விரண்டின் தன்மைகளை விளக்கும் 24 எளிய பரிசோதனைகள் அடங்கிய சிறு நூல். காற்றில் மிதக்கும் பந்து, எய்தவர் மீதே பாயும், மிதக்கும் ஊசி, சொன்னபடி கேளு, குதிக்கும் காகிதக் குவளை, நீர்த் தாரையை மூடி போட முடியுமா, பறவைகளின் குடிநீர்க் கிண்ணம் – போன்ற சோதனைகள் சட்டென்று மனதைக் கவர்கின்றன. எளிய முறையில், சுருக்கமான விளக்கங்களும், படங்களுமாக நூலின் அமைப்பு பாராட்டத்தக்கதாக உள்ளது.
23. சோதிடமும் வானவியலும்
பேரா. பி.ஆர்.ரமணி  / அறிவியல் வெளியீடு
அறிவியல், தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெறும் இதே நாட்களில், மூடநம்பிக்கைகளையும் – கட்டுக்கதைகளையும் அதே விஞ்ஞான சாதனங்களின் துணையுடன் பரப்பி மனிதகுலத்தை அறியாமை இருளுக்குள் தள்ளிவிட முனையும் காலம் இது. சோதிடம் என்ற புனைவின் பிடி மேலும் மேலும் இறுகி வரும் இன்றைய சூழலில், இதன் தோற்றம் முதல் இன்றைய நிலை வரை இந்நூல் விவரிக்கிறது. இந்து மதத்தில் மட்டுமின்றி கிறித்துவத்திலும், இஸ்லாமிலும் கூட சோதிடம் செல்வாக்குடன் இருப்பதைச் சொல்கிறார். வராக மிகிரரும், பிரம்ம குப்தரும் முன்வைத்த சரியான வானியல் கருத்துகளைப் பாராட்டிய அல்-பரூணி, அவர்கள் பூசாரிகளுக்காக சில கருத்துகளில் சமரசம் செய்துகொள்வதை எள்ளி நகையாடுகிறார். இந்த நூல், மரபின் அம்சங்களை நன்கறிந்து விளக்குகிறது. வெறுமனே விமரிசனங்களை மட்டும் முன் வைக்காமல், ஆரம்ப கால சிந்தனைகளிலிருந்து இன்றுவரை அறிவியலும் – பழமைவாதமும் முன்வைக்கும் கருத்துகளை அருகருகே தந்து ஒப்புநோக்கில் அலசுவது மிக வித்தியாசமான தொனியைத் தருகிறது.
24. காற்று ஆற்றல் சுனில் பி. அதாவாலே                   தமிழில்: ஜீவா  / நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
“காற்று” – மகாகவி பாரதியின் வசன கவிதைகளில் ஒன்று. மெதுவாக வா, காயிதங்களைக் கலைத்துப் போட்டு விடாதே என்றெல்லாம் பாரதி காற்றை வேண்டுவார். காற்று ஆற்றல் சிக்கனமானது; எரிசக்திப் பற்றாக்குறையைத் தீர்க்க அது உதவும் என்பது இன்றைய நிதர்சனம். சாமானிய மனிதனுக்கு காற்று ஆற்றல் துறையைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை இந்நூல் வழங்குகிறது. கி.மு.4000-வது ஆண்டிலேயே காற்றின் ஆற்றலை வெளிக்கொணர்தல் பற்றிய கருத்தும், பாய்மரக் கப்பல்களை எகிப்தியர் பயன்படுத்திய செய்தியும் இடம்பெறுகின்றன. சீனாவில் மாவீரன் செங்கிஸ்கான் காற்றாலைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறான். ஆரம்ப கால காற்றாலைகளின் வடிவமைப்புகள் குறித்த ஓவியங்கள் இந்நூலின் சிறப்பம்சமாக உள்ளன. டெக்சாஸ் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் திறந்தவெளி அருங்காட்சியகத்தின் காற்றாலை புகைப்படம் பிரமிக்க வைக்கிறது. எளிதாகக் கிடைப்பதாகவும், தடையின்றிக் கிடைப்பதாகவும், தீர்ந்து போகாததாகவும் உள்ள காற்றுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. எண்ணெய், எரிவாயு, யுரேனியம் போன்ற பொருட்களின் மீது வணிகக் கட்டுப்பாடுகளை விதித்து வளர்ந்த நாடுகள் முடக்கிவிட முடியும். ஆனால் காற்றின் மீது எந்த நாடு கட்டுப்பாட்டை விதிக்க இயலும்? ஆனால் காற்று இலவசமாகக் கிடைத்தாலும் காற்றாலைத் தொழில்நுட்பங்களும், மின்சார உற்பத்திக்கான இயந்திரங்களும் மிகுந்த செலவு பிடிப்பவை என்பதால், காற்றாலைகளின் அமைவிடத்தில் கூடுதல் கவனம் தேவை என விளக்குகிறார் ஆசிரியர்.
25. பி.டி.கத்தரி
டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி  / அறிவியல் வெளியீடு
‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’ [GMCS] என்ற சொல்லாடல் நமது விவசாயிகளை அச்சுறுத்துவதாக  ஆகி வருகிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லைகளால் கடந்த அறுபது ஆண்டுகளில் மரணத்தைத் தழுவியிருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பி.டி.கத்தரியின் பயிரிடலால் விளையும் சாதக-பாதக அம்சங்களை இச்சிறுநூல் குறிப்பாக ஆராய்கிறது. பயமுறுத்தும் விதமாகவும், மக்களை அறிவியல் – தொழில்நுட்பங்களுக்கு எதிரான மனப்பான்மை கொள்ளும் விதத்திலும் அல்லாமல் விழிப்புணர்வூட்டும் விதத்தில் இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க வேண்டுமென  ஆசிரியர் முன்வைக்கும் கருத்து முக்கியமான ஒன்று. பின் அட்டைப் புகைப்படமே பல்லாயிரம் வரிகளுக்குச் சமமானது.
26. சார்லஸ் டார்வின்
என். மாதவன் / அறிவியல் வெளியீடு
பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வண்ணமயமானது. அவரது 200-வது ஆண்டையொட்டி சிறப்பு வெளியீடாக வந்துள்ள நூலை அறிவியல் இயக்க செயற்பாட்டாளரும், ஆசிரியருமான மாதவன் எழுதியுள்ளார். நூலின் நடை மாணவர்களுடன் உரையாடும் விதத்தில் உள்ளது. இளம் வயதில் செடிகொடிகள், முத்துச் சிப்பிகள் போன்றவற்றை சேகரிப்பதில் டார்வின் காட்டிய ஆர்வத்திலிருந்து தொடங்குகிறது கதை. தீவுக் கூட்டத்தில் ஆராயும்போது, மூன்று வண்டுகளைப் பிடித்துக் கொண்டுவரப் பட்டபாடு போன்ற குறிப்புகள் சுவையான விதத்தில் உள்ளன. நடந்தும், குதிரைமீதும், கப்பல் மூலமும் என டார்வின் மேற்கொண்ட எண்ணற்ற பயணங்களின் கதை இது.” முடிவில்லாமல் அழகான உயிரினங்கள் உண்டாகின்றன. மேலும் மிகவும் அதிசயமானவைகளாக இருந்தன, இருக்கின்றன, மேலும் உருவமாற்றமடைகின்றன” என முடிகிற டார்வினின் நூல் மட்டுமின்றி, இத்தகைய அறிவியல் உண்மைகளைப் புரிந்துகொள்ள நிகழ்த்தப்படும் பயணங்கள், எழுத்துகள், உரையாடல்களும் முடிவற்றவைதான் அல்லவா?
27. அன்றாட வாழ்வில் அறிவியல்
பெ.திருவேங்கடம்  / அறிவியல் வெளியீடு
‘துளிர்’ அறிவியல் இதழையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தையும் பற்றி நினைத்ததும், நினைவிற்கு வருபவர்களுள் திருவேங்கடமும் ஒருவர். “பூக்கள் எல்லோருடைய கண்ணிலும் படுகின்றன. செடி, வேர், மண்ணாக அமைந்த பல திறமைகள் தாங்கள் கவனிக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கின்றன”  என்ற முகப்பு வாக்கியம் அர்த்தச் செறிவுடையது. மனித வாழ்வில் அடுப்படியில் தொடங்கி அண்டவெளி வரை இன்று அறிவியல் வகிக்கும் பங்கினை இந்நூல் எளிமையாகச் சொல்கிறது. எடிசன், கிரகாம் பெல், கலிலீயோ உட்பட பலரின் கண்டுபிடிப்புகள் ஆற்றிவரும் பங்கை அன்புக்கரசியுடனான உரையாடல் வழி விளக்குகிறது.
28. உலக விஞ்ஞானிகள்
சி.பி.சிற்றரசு  / அங்குசம் வெளியீடு
சிந்தனைச் சிற்பி’ எனப் புகழ்பெற்ற சி.பி.சிற்றரசு, திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முகப் பரிமாணங் கொண்டவர். பன்னிரண்டு அறிவியல் அறிஞர்களின் வரலாறுகள் இந்நூலில் அடங்கியுள்ளன. மிக ஆரம்பகால அறிவியல் நூலுக்கேயுரிய நடை. உடுக்கைகள் போன்ற சொற்கள் அக்காலகட்டத்தின் பதிவுகள்.
29. உயிரியல் யுகம்
த.வி.வெங்கடேஸ்வரன்  / அறிவியல் வெளியீடு
21-ஆம் நூற்றாண்டு உயிரியல் யுகமாகக் கருதப்படுவதற்கு ஏழு போக்குகள் அடிப்படையாக அமைகின்றன என்று இந்நூல் தொடங்கி அவை என்னென்ன என விவரிக்கிறது. மரபணுக்கள்,             டி.என்.ஏ., மனித இனப்பரவல், தமிழன் என்றோர் இனமுண்டா, மரபணுநோய்கள், இயற்கைத் தேர்வு, அது வெற்றிகாண நடக்கும் போராட்டம் – இவ்வாறு உயிரியல் சார்ந்த பல அம்சங்களை இந்நூல் ஆராய்கிறது. முகஅமைப்பு, மதிநுட்பம் போன்றவற்றில் மரபணுக்கள் ஆற்றும் பங்கும் விளக்கப்படங்களுடன் விவரிக்கப்படுகிறது. இந்த நூலின் பாடுபொருள் மரபணுவும் – உயிரியலும் என்பதால் மொழிநடையும் அதற்குரிய செறிவுடன் அமைந்திருக்கிறது. வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் அதே தவறினை மீண்டும் செய்வர்” என எச்சரிக்கிறார் ஆசிரியர்.
30. கணிதத்தின் கதை
ஆயிஷா இரா.நடராசன்  / பாரதி புத்தகாலயம்
சிந்திக்கிறேன், எனவே நானாக இருக்கிறேன் என்ற புகழ்பெற்ற வாசகத்தைச் சொன்ன கணித மேதை டெஸ்கார்ட்டஸ் ராணுவ முகாமில் வாட்ச்மேனாக இருந்தார் என்பதுபோன்று கணிதத்தின் வரலாறு சுவாரஸ்யமான தகவல்களோடு விரிகிறது. ஆர்க்கிமெடிஸின் மரணம், முதல் பெண்கணித நிபுணர் ஹைப்பாஷியாவின் கோர முடிவு, அதற்குக் காரணமான பெண்கல்வி எதிர்ப்பு மதவாதிகள், ராமானுஜத்தின் இறுதி நாட்கள் என கதையும் கணிதமும் இணைந்த ரசவாதம். எல்லாவற்றிற்கும் மேலாக, புத்தகத்தின் பின்னட்டை குறிப்பிடும் நடராசனின் அங்கதம் கலந்த நகைப்புணர்வு. டெஸ்கார்ட்டஸ் மரணம் நிகழ்ந்த போது நியூட்டன் 8 வயதுப் பையனாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தார், நியூட்டன் பாராளுமன்ற உறுப்பினராகிப் பேசிய ஒரே பேச்சு ‘ஜன்னலத் தெறந்து வைங்கப்பா’ என்றதுதான் என்பது மாதிரி பல வரிகள் நம்மை புன்னகையோடு படிக்க வைக்கின்றன. சீரியஸ் வாசகர்களைப் புன்னகைக்க வைக்கும் சீரியஸ் புத்தகங்கள் மிகவும் குறைவு அல்லவா? எனினும் புத்தகத்தின் நோக்கத்தை எந்த இடத்திலும் ஆசிரியர் மறக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும் கணிதத்தின் ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சிப் போக்கைச் சொல்லும்போது, அதன் நடைமுறைப் பயன்பாட்டையும் பட்டியலிட்டுள்ளார்.
சாதாரண ஆர்வலர்களும் படிக்க முடிந்த எளிய நடையில் இது அமையவேண்டும் என்று விரும்பியதாக முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அது முழுமையாக நிறைவேறியுள்ளது. அதற்கு இந்த சாமானிய ஆர்வலனின் இந்த விமர்சனமே சாட்சி!

Related posts

Leave a Comment