You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 9: மஹாபாரதம் என்னும் இலக்கியப் பிரதி

ச.சுப்பாராவ்

மஹாபாரதம் பற்றிய சமீபத்திய படைப்புகள் எல்லாம் இருவிதமான கண்ணோட்டங்களின் அடிப்படையில்தான் எழுதப்படுகின்றன. ஒன்று அதைக் கேள்விக்குள்ளாக்குவது என்ற பெயரில் அதன் பிரும்மாண்டத்தை, அதன் ஆழமான இலக்கியச்சுவையையும் சேர்த்து மறுதலிக்கும் விதமாய் எழுதுவது. மற்றது, அதில் இல்லாததே இல்லை என்று தேவைக்கு    அதிகமாகவே அதற்கு அதிமுக்கியத்துவம் தரும் ஒரு மதவாதப் பார்வை. இரண்டும் இல்லாமல் ஒரு இலக்கியப் பிரதியாக அதன் பலம், அழகு ஆகியவற்றையும் அதன் பலவீனங்கள், முரண்கள் பற்றியும் நடுநிலையோடு எழுதுவது மிக அபூர்வமாகத்தான் நிகழ்கிறது. 1970களில் வெளியான ஐராவதி கார்வேயின் ‘யுகாந்தா’ அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் முதல் அற்புதமான   படைப்பு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்துள்ள அபிஜித் பாசுவின் மார்வல்ஸ் அண்ட் மிஸ்ட்ரீஸ் ஆஃப் மஹாபாரதா ( Marvels and Mysteries of Mahabharatha – Abijit Basu) அதற்கு இணையான சிறந்த ஆய்வுக்    கண்ணோட்டத்தோடு வந்துள்ள ஒரு சிறந்த படைப்பு.
அபிஜித் பாசு மேற்கு வங்கத்தின் படித்த, உயர் அரசுப் பதவிகளில் இருந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் வம்சாவளியில் வந்தவர். விஞ்ஞானியாக இருந்து, பின்னர் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து, மத்திய அரசின் நிதித் துறையில் உயர் பொறுப்புகளில் இருந்து எழுத்தாளரானவர். அவரது சீரிய ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளியாகியுள்ள இந்த நூல் மஹாபாரதம் எனும் இலக்கியப் பிரதி குறித்து இதுநாள் வரை நாம் அறியாத, கவனிக்கத் தவறிய பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி, பல புதிய ஆய்வுகளுக்கான கதவுகளைத் திறந்து வைக்கிறது. எனினும், அக்கதவுகள் வழியே புதிய ஆய்வுகளுக்குள் நுழையும் அளவு படிப்பும், ஆழந்த ஞானமும் நம்மிடையே உள்ளனவா என்பது சந்தேகம்தான்.
உலக இதிகாசங்களில் தலைசிறந்ததாக பாரதம் ஏன் கருதப்படுகிறது என்பதை அபிஜித் அழகாகக் கூறுகிறார். விர்ஜிலின், இனியட் 9000 வரிகள் கொண்டது. ஹோமரின் இலியட் 12000 வரிகளும், ஒடிஸி 15000 வரிகளும் கொண்டவை. மஹாபாரதத்தில் குறைந்த பட்சம் 2 லட்சம் வரிகள் என்பதே அது ஒரு மாபெரும் இதிகாசம் என்பதற்குப் போதுமானது என்கிறார் அவர். ஆனால் எழுதப்பட்ட காலத்தில் அதன் வரிகள் மொத்தம் எத்தனை என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதும் உண்மை. பல வெளிநாட்டு இந்திய அறிஞர்களின் கூட்டு முயற்சியாக ஒரு கிரிடிகல் எடிஷன் செம்பதிப்பு கொண்டுவர 1923ல் ஒரு பெரிய திட்டம் தீட்டப்பட்டது. பல அறிஞர்களின் தொடர்ந்த கடினமான உழைப்பில் 1966ல் 13000 பக்கங்கள் கொண்ட 19 பாகங்களாக பாரதம் வெளியிடப்பட்டது. இது புனே எடிஷன் என்று           அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 93650 சுலோகங்கள் உள்ளன. இதற்காக 12 மொழிகளில் எழுதப்பட்ட 1259 ஓலைச்சுவடிக்கட்டுகள் ஆராயப்பட்டன. இதில் மிகப் பழமையான சுவடிகள் நேபாள மொழியில் கிபி 1511ல் எழுதப்பட்டவைதான் என்பதால் சுவடி ஆதாரங்களைக் கொண்டு பாரதம் எழுதப்பட்ட காலத்தை முடிவு செய்ய இயலாது என்றும் கூறுகிறார். அத்தனை காலம் கழித்து சுவடிகளில் எழுதப்பட்ட போது ஏற்பட்ட பல      இடைச் செருகல்கள் பற்றியும் அவர் கூறுகிறார்.
ஒரு இலக்கியப் பிரதி அதிகத் தொன்மை வாய்ந்ததாக இருக்கும் போது, அது குறித்துக் கிடைக்கும் ஆதாரங்கள் பலவும் முரண்பட்டவைகளாக அமைவதும், அவற்றை நம்புவதா, வேண்டாமா என்று குழப்பம் விளைவிப்பவைகளாக அமைவதும் இயற்கைதான். இது போன்ற பல குழப்பங்களையும் அவர் மிகச் சுவையாகக் கூறுகிறார். வேதகால இலக்கியங்களில் பாண்டவர்களின் கொள்ளுப் பேரனான ஜனமேஜெயன் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் பாண்டு, பாண்டவர்கள் பற்றி ஒரு வரி கூட கிடையாது. அதே போல், தர்மனின் தந்தை என்று சொல்லப்படும் தர்மதேவன் என்ற கடவுள் பற்றி வேத இலக்கியங்களில் ஒன்றுமே இல்லை. இதை வைத்துப் பார்க்கும் போது விதுரன்தான் தர்மனின் உயிரியல் தந்தையாக இருக்க வேண்டும் என்ற ஐராவதி கார்வேயின் கணிப்பை ஏற்கத்தான் வேண்டும் என்கிறார் அபிஜித்.
மற்றொரு முக்கியமான விஷயம் ஆரம்பகால மூல மஹாபாரதக் கதை கிருஷ்ணன் என்ற பாத்திரம் இல்லாமல் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற ரூபன் என்னும் அறிஞரின் ஆய்விற்கு அபஜித் அதிக முக்கியத்துவம் தரும் விஷயம்.  கிருஷ்ணன் என்ற புதிய கடவுள் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு கிருஷ்ணன் தொடர்பான பகுதிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். முழு பாரதத்திலும் கிருஷ்ணன் 11 இடங்களில் தலையிடுகிறான். மற்றபடி யதார்த்தமான பங்காளிச் சண்டைக் கதையாக நகரும் பாரதத்தில் கிருஷ்ணன் வரும் இடங்கள் மட்டும் மாயா ஜால சித்து விளையாட்டுக்கள் நடக்கும் காட்சிகளாக இருக்கின்றன என்பது ரூபனின் வாதம் என்கிறார் அபிஜித்.
தான் எழுதும் படைப்பில் கதாசிரியன் தானே நேரடியாகக் களத்தில் இறங்குவது பற்றிய சுவையான ஆய்வும் இதில் இருக்கிறது. கதாசிரியன் வியாசன் பாரதத்தில் 41 இடங்களில் தலையிடுகிறான். ஒவ்வொரு   தலையீட்டிலும் கதையின் போக்கு மாறுகிறது என்பது எத்தனை ஆச்சரியமான விஷயம்! கதைமாந்தர்களை வியாசன் போல் நுட்பமாக யாராலும் வர்ணிக்க முடியாது என்று புகழ்கிறார் அபிஜித். இத்தனை பெரிய கதையில் ஓரிரு இடங்களில் மட்டுமே தலைகாட்டும் மிகச் சிறிய கதாபாத்திரம் துரோணரின் மனைவி கிருபி. அவளுக்கு தலைமுடி அத்தனை அடர்த்தியாக இல்லை என்று வர்ணிக்கிறான் வியாசன். வீரத்தின்  அடையாளமாக இன்று வரை ஆண்ட பரம்பரைகள் முகத்தின்  ரோமத்தைத்தான் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். பாரதக்கதையின் மாபெரும் வீரனும், மிகுந்த பலசாலியுமான பீமசேனனுக்கு முகத்தில் தாடி மீசை சரியாகவே வளரவில்லை என்பது வியாசனின் வர்ணனை என்றால் நமக்கு வியப்பாக இருக்கும். பிறரை மிக நுட்பமாக, அவர்களது அழகை பல்வேறு வார்த்தைகள் போட்டு வர்ணிக்கும் வியாசன் தன்னையும் வர்ணித்துக் கொள்கிறான். ஆனால் தன்னை அசிங்கமானவனாக, கறுப்பு நிறத்தினனாக, துர்நாற்றம் வீசும் உடலோடு, அழுக்கு ஆடைகள் அணிந்து கொண்டிருப்பவனாக வர்ணித்துக் கொள்ளும் மனோபாவம் நமக்கு வியப்பைத் தருகிறது. மிக நேர்மையாக எழுதி யிருக்கிறானோ என்று எண்ண வைக்கிறது.
மறுபுறம் பாத்திரங்களின் யதார்த்தமான படைப்பில் பாரதம் ராமாயணத்தை விஞ்சி நிற்கிறது. பல உயர்ந்த நற்குணங்கள் வாய்ந்த ராமன் தன் வனவாசத்தை வெறுமனே வேட்டையாடி வீணாகக் கழிக்கிறான். சராசரி மனிதனின் பலவீனத்தோடு சூதாடி நாட்டை இழந்த தருமனோ தன் வனவாசத்தில் பல முனிவர்களோடு விவாதித்து, தன் தத்துவ ஞானத்தை விரிவுபடுத்திக் கொள்கிறான். யட்சனுடனான அவனது 126 கேள்வி பதில் தர்க்கத்தில் 65 கேள்விகள் ஆழமான உலக விஷயங்கள் குறித்தவை. அதற்கான தர்மனின் பதில்களும் இணையான ஆழமுடையவை. இராமாயணத்தில் ராமனின் மனைவியும், தம்பிகளும் அவனை எதிர்த்துப் பேசாதவர்கள். இதில் திரெளபதி எதிர்த்துப் பேசும் சராசரி மனைவி! வனபர்வத்தில் 29வது அத்தியாயம் முழுவதும் அவள் தர்மனை எதிர்த்துப் பேசுவதுதான். அதற்கு அடுத்த அத்தியாயத்தில் பீமன் அதைத் தொடர்கிறான். ஒன்று நீ சந்நியாசியாகப் போ! அல்லது சத்ரியனாக இரு! நடுவில் இருந்து கொண்டு எங்கள் உயிரை வாங்காதே! என்கிறான் அவன். மற்றொரு கட்டம் வனவாசத்தில் கிருஷ்ணனின் மனைவி சத்யபாமா ‘ஒரு கணவனையே எங்களால் சமாளிக்க முடியவில்லையே நீ எப்படி ஐந்து பேரைச் சமாளிக்கிறாய்?’ என்று கேட்பதும், அதற்கு பாஞ்சாலி பதில் தருவதும் இரு பெண்கள் மிக அந்தரங்கமாகப் பேசிக்கொள்ளும் அழகான, யதார்த்தமான இடம். பெண்கள் கணவனுக்குப் பணிவிடை செய்வது போன்ற பல உபதேசங்கள் இருந்தாலும் கூட இப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கதையில் வைத்தது வியாசனின் திறமைதான்.
மஹாபாரதத்தில் ரசிக்கத் தகுந்த இடங்கள், இடைச் செருகல் என்று தவிர்க்க வேண்டிய இடங்கள், சரியாக விளக்கப்படாத இடங்கள், அதன் காலத்தை துல்லியமாக நிர்ணயிப்பதில் உள்ள சிக்கல்கள் என ஒரு திரில்லர் நாவலைப் போன்று விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஆய்வு நூல் இது. பாரதத்தை மறுவாசிப்பு செய்ய நினைப்போர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.  அதைவிட முக்கியமாக, குறுகிய மதவாதக் கண்ணோட்டத்தோடு மறுவாசிப்புச் செய்ய நினைப்போருக்கு மஹாபாரதத்தை ஒரு இலக்கியப் பிரதியாக எவ்வாறு அணுக வேண்டும் என்று விரிவாகப் பாடம் கற்பிக்கும் ஆழமான ஆய்வு நூல்.

Related posts

Leave a Comment