You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் – 6: மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு

பேரா.மோகனா

“மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல”…                        – மாக்சிம் கார்க்கி
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்
உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..   – டெஸ்கார்டஸ்
சமீபத்தில் நான் வாசித்து முடித்த சில  புத்தகங்கள், மீண்டும் மீண்டும் இந்த சமூகத்தின்பால் கோபம் கொள்ள வைத்து, உங்களுக்குள் ஓடும் ரத்தம் ஒன்றுதான்.. சாதியில்லை என என்று உணரப்போகிறீர்கள்  எந்த DNA விலும் சாதியில்லையடா.. என்ற குமுறலையும் ஒரு புயலையும் என்னுள் உருவாக்கியது,
தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்” இது 1947 ல் முதன் முதல் மலையாளத்தில் வந்தது. பின்னர் 2000 த்தில்தான் தமிழுக்கு அறிமுகம்..சுந்தர ராமசாமி மூலம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.. எழுதியவர்: தோழர். ஜீவசுந்தரி.. எனக்கு அன்பளிப்பாகத் தந்தது.. இதுவும் ஒரு மீள் வாசிப்பு கட்டுரைக்காக
இந்துமத தத்துவமும், மனு தர்மமும்..டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர். (சாதாரண மனிதனைக் கொலை வெறி கொள்ள வைக்கும் மனு தர்மம் என்னும் கொலைகாரர்கள்..சூத்திரன் வேதம் படித்தால், நாக்கை வெட்டுவானாம், பிராமண குலக் கொழுந்துகள்..பெண்ணுக்கு எப்போதும் விடுதலையே கிடையாதாம்..இது எப்படிப்பா இருக்கு?)
சாய்வு நாற்காலி..தோப்பில் மும்மது மீரான்..
முதல் காம்ரேட்..(லெனின் )..மருதன்
தோட்டியின் மகன், சரஸ்வதி இதழில் வந்த தொடர்.. பின்னர் 1947ல் நாவலானது. இதில் 4 களில்  சேரியில், முக்கியமாக மலம் அள்ளும் தோட்டிகளின் வாழ்நிலை, மனநிலை, மலக்கிடங்கு, அவர்களின் மனப்பாங்கு, அவர்களின் ஆசாபாசங்கள், தந்தை இசக்கிமுத்துவைக்  கூட  புதைக்க முடியாத நிலை..துக்கம் கூட அனுபவிக்க முடியாத நிலை, காலம் அவர்களின் அடி மனத்தில் ஏற்றிய நெருப்பு, பின்னர் பயந்து, பயந்து போய், சங்கம் உருவாக்கியது., வேலை நிறுத்தம், துப்பாக்கிச் சூடு, புரட்சி, தலைமை.. வழக்கம் போல் காவல்துறையால் மார்பில் குண்டு  துளைத்து ஏராளமான பேர் இறப்பு, ஆனாலும் ஊர்வலம் தொடர்ந்தது. இன்னமும் அங்கே வெட்ட வெளியில் எலும்புகள் நடனமாடித் திரிகின்றனவாம்.. என்று முடிக்கிறார்  ஆசிரியர்… என்ன கொடுமை இது.!
ஆனால் இன்னும் இங்கே  நிலை அப்படியே  60 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்வது தான் கொடுமை.. சாதீயத் தீ..
கடந்த 2015,ஆகஸ்ட் 16 அன்று விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் தலித் இன மக்கள் மேல் நடந்த  தாக்குதல், கீழ்வெண்மணிப் படுகொலைகள், இன்றைய தலித் இளைஞர்கள் மேல் சாதி வெறிக்கொலைகள்.. என்பவை எல்லாம் ..என்ன?
மூவலூர் இராமாமிர்தம் அம்மாளை தோழர் ஜீவசுந்தரி மூலம் தரிசித்தேன். மூவலூர் இராமாமிர்தம் அம்மாளின் தைரியம், வீரம், நேர்மை, போராளிக் குணம்,  பெரியார் இயக்கம், அவர்  தாசி வீட்டுப் பெண் என சோர்ந்து போகாத் தன்மையையும்   நான் நேர் கண்டு, பிரமிப்புடன், பூரித்துப் போகிறேன்.பெண் என்பதால்,மேலும் கிட்டத்தட்ட அதே போர்க்குணம்தான்  எனக்கும். என்னையறியாமல் என்னுள் வேர் விட்டதால். எப்படி? எப்படி? நிச்சயம் எதனையும் நேரிடையாக நேர்மையாய் சந்திக்கும் திறனும், எனது இயல்புத்தன்மையும், புத்தக வாசிப்பும் தான். என்னையும், என் போர்க்குணத்தையும், தைரியத்தையும்  புடம் போட்டவை. தோழர் ஜீவாவும், நானும் ஒரே ஊர்க்காரர்கள் தான். ஆனாலும் ஒருவருக்கொருவர் தெரியாது, சந்தித்ததும் இல்லை. சமீபத்தில்தான்  பழக்கம், இராமாமிர்தம் அம்மாள் வாழ்ந்த மூவலூரும் எங்க சோழம்பேட்டையும், காவிரியின் எதிர் எதிர் கரைகளில் உள்ள ஊர்கள்தான். ஒரு 1 கி.மீ தொலைவில் உள்ள ஊர்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மாளைப்பற்றி படிக்கும்போது, எனக்கு, எங்க சோழம்பேட்டை ஊரில், நிகழ்ந்த நினைவுகள், பார்த்த, கேட்ட தகவல்கள் நெஞ்சுக்குள் எட்டிப் பார்க்கின்றன.
1962 ஆம் ஆண்டு அப்போதுதான்  இந்தியாவின் மூன்றாவது  பொதுத் தேர்தல் நடந்து முடிந்து, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று இருந்தது. காமராஜர் மூன்றாம் முறையாக முதல் அமைச்சர் பொறுப்பேற்றார். எட்டு அமைச்சர்கள்.. கக்கன் விவசாய அமைச்சர். (ரொம்ப நேர்மையான மனுஷன்.. அவர் இறக்கும்போது சாதாரண ஓட்டு வீட்டில் தான் இருந்தார் ) பூவராகவன் தகவல் மற்றும் விளம்பர மந்திரி. எங்க கொரநாடு நகராட்சிப் பள்ளிக்கு வந்து பேசினார். பக்தவத்சலம்  கல்வி மந்திரி. சுப்ரமணியம் நிதியமைச்சர். இதெல்லாம் எப்படி தெரியும்கிறீங்களா? எங்க சைக்கிள் கடைக்கு தந்தி பேப்பர்வரும். தெனம் காலையிலே. ஒரு ரவுண்டு படிச்சிடுவேன். மத்தவங்களுக்கும் படிச்சு காமிப்பேன். சைக்கிள் கடை, டீக்கடை, சலூன் கடைகள்தான்.. தற்காலிக நூலகங்கள். ஏனென்றால் இங்குதான் தினசரி பேப்பர்கள், வார சஞ்சிகைகள், மாத புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும்.
அப்ப,.. 1962 ஆம் ஆண்டு, நான் 9 ம் வகுப்புக்கு வந்தாச்சு.. எட்டாம் வகுப்பிலிருந்து அடுத்தது  9ம் வகுப்புதானே  போக வேண்டும். ஆனால் அப்போது கல்வி முறையில் சின்ன மாற்றம். பெயர் பயன்படுத்தலில். 6 ம் வகுப்பு முதலில் I form என்பார்கள். 7 ம் வகுப்பு, II form,  8 ம்வகுப்பு, III form எனப்பட்டது. பின்னர்            1962 ல்,  ஸ்டாண்டர்ட் (standard) என்ற சொல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்கள், class என்பது இல்லை என்று சொன்னார்கள். எனவே நான் 1962-63ம் ஆண்டில் 9th std படித்தேன். நமக்கு என்னாங்க தெரியும். என்னமோ  வாத்தியார்கள் சொன்னதுதான். அவங்களுக்கும் அப்ப எதுவும் தெரிஞ்சிருக்காது என்றே நினைக்கிறேன். இப்போது அறிவியல் இயக்கத்தில் இருப்பதால், காமராஜரின் கல்விப் பணியையும், முந்தைய கல்வி நிலையையும்  பற்றி படித்த போது, “அன்றைய தமிழக அரசு,               1962ம் ஆண்டு ஆரம்பக்கல்வி மட்டுமின்றி மேல்நிலைக் கல்வியை மேம்படுத்தவும் காமராஜர் அரசாங்கம் பாடுபட்டதும்,  அதற்காக அமைக்கப்பட்ட இலட்சுமணசாமி முதலியார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, 7 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, 4 ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி, உள்ளடக்கிய 11 ஆண்டுகள் பள்ளிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கணிதமும், அறிவியலும், சமூக அறிவியலும் கட்டாயப் பாடங்களாக்கப்பட்டதும் தெரிய வந்தது.”
ம், ம், அதெல்லாம் போகட்டும். அந்த வருஷம் நிகழ்ந்த இன்னொரு  சுவாரசியமான விஷயத்துக்கு வருவோம். அப்பத்தான்  நான் பாவாடை சட்டையிலிருந்து , தாவணிக்கு சந்தோஷமாய் மாறியிருந்தேன். வலுக்கட்டாயமாய் நான் தாவணி போடவேண்டும் என்று ரகளை பண்ணி, பள்ளிக்கூடத்துக்கு  தாவணி போட்டுகிட்டு போவேன். இன்னும் அந்த செவப்பு கலர் தாவணி கண்ணுக்குள்ளேயே நிக்குது… ம். இப்ப நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது. அது நான்  டீன் ஏஜ்ஜுக்குள் நுழைந்த புதிது.. டீன் ஏஜ் சேட்டை அனைவரும் அறிந்த ஒன்றுதானே. ஆனால் வீட்டில் இன்னொரு விஷயமும் ஓடிக்கொண்டு  இருந்தது. அதுதான் எப்ப வயசுக்கு வருவேன். எனது பள்ளிப் படிப்பை நிறுத்தலாம், என எனது சுற்றுசூழல் (அதான்பா, என் சொந்த பந்தம் எல்லாம் ) முச்சூடும் காத்துக் கிடந்தது..எதுக்கு? கல்யாணம் முடிக்கத்தான்! எப்படா பெயில் ஆவேன்.. பள்ளிக்கு டாடா சொல்ல வைக்கலாம் எனத் திட்டமிட்டனர். நல்லவேளை ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். அதனால்தான் என் பெயருக்குப் பின்னால் இன்றைக்கு பட்டம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
அப்ப எனக்கு கொஞ்சம் விபரம் தெரியும், மற்றவற்றை பெரியவர்கள் என்னிடம் சொல்ல மாட்டார்கள் எனக்கு தாவணி போட்டதும், கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அடுத்த தெருவில் உள்ள வீடுகளுக்கு செல்லக் கூடாது.  எங்க தெருவுக்கு அடுத்த தெருவின் பெயர் சொல்ல நா கூசுகிறது.. “தேவடியா தெரு” நெசமாவே இதாங்க அந்தத் தெருவின் பெயர். பின்னர் 10 ஆண்டுகள் கழித்து, நான் கல்லூரியில் படிக்கும்போது “வடுகத்தெரு”  என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் புத்தகத்தில், ஜீவா தோழர் குறிப்பிடுவது போல், தாசி/தேவதாசி வீட்டில் பிறந்த பெண்கள் நாடகத்தில் நடிப்பார்கள், செமையாய் பாட்டுப் பாடுவார்கள், நட்டுவனார் வைத்து டான்ஸ் சொல்லித் தருவார்கள்.. அழகாகவும் இருப்பார்கள்..தன்னை ரொம்ப ரொம்ப அழகாகவும் வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்கள் நாதஸ்வரம் வாசிப்பார்கள்.. நட்டுவாங்கம்தான். வேறு தொழில் இல்லை. நான் அந்தத் தெருவில் எல்லார் வீட்டுக்கும் போவேன்.. எல்லோரும் என்னிடம் அன்பாக இருப்பார்கள்.. எங்க தெருவிலும் கூட அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் எனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி. அவரின் நிலை தெரிந்தே நான் அவரிடம் நட்பாக இருந்தேன். அவருக்கும் எனக்கும் 30 ஆண்டுகள் வித்தியாசம். அவருக்கு கடிதம் எழுதித் தருவது நான்தான். எனக்கு எங்க வீட்டுக்குப் பின்னால் உள்ள பெரிய குளத்தில்.. அவரின் கையைப் பிடித்துக் கொண்டு எனக்கு நீச்சல் சொல்லித் தந்த ஆசான் அவர்தான். நான் வேலைக்கு வந்து திருமணம் முடிந்து, மகன் பிறந்த வரை அவர் எனது இனிய நண்பர்தான். இதனை எழுதும்போதும கூட, கண்கள் குளமாகவே எழுதுகிறேன். அந்த நல்ல உள்ளத்தின் மேன்மையை நினைத்து நெஞ்சம் கனக்கிறது. அவர்தான் அவர் குல வழக்கப்படி பொட்டுக் கட்டிக் கொண்டார். ஆனால் ஒருவருடன்தான் வாழ்ந்தார். அவரின் பையன் என் வகுப்புத் தோழன்.. காவல்துறையில்  இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரின் மகள்கள் அனைவருக்கு திருமணம் முடித்து வைத்தார். அவர்கள் யாரும் இந்த குலவழக்கத்துக்குப் போகவில்லை என்பது எனக்கு நிம்மதியையும் மகிழ்வையும் தருகிறது.
1962 ம் ஆண்டு என்பது மிகப் பெரிய திருப்பு முனையாகவே இருந்தது எனக்கு. ஏராளம், ஏராளமான நிகழ்வுகள், என் உடலில்,  என் படிப்பில், என் வாசிப்பில், எனது நட்பில், எனது சூழலில், இந்திய வரலாற்றில், அரசியலில். கல்வியில் என.. அடுத்து   பயணிப்போம்..விரைவில் அவற்றை..நோக்கி…
மீண்டும் வாசிப்பின் ருசிக்கும், தாளலயத்துக்கும் வருகிறேன்… என்னை ஈர்த்தும், இழுத்தும் செல்லும் புத்தகங்களுக்கே வருகிறேன்.
ஒரு மாதத்துக்கு முந்தைய பேருந்துப் பயணத்தில்  எனக்குத் துணையாக வந்தவர்.. மருதனின் “முதல் காம்ரேட்” அதான் லெனின் தான்ங்க. அது ஒரு மீள் வாசிப்பு.. முதலில், எனது புற்று நோய் சமாசாரங்களுக்கு முன்,. 2010, ஜூலை 11ல், ஊட்டி சென்று.. வாலிபர் சங்கத் தோழர்களுக்கு, வானவியலும் சோதிடமும் வகுப்பு எடுத்து விட்டுத் திரும்பும்போது பேருந்தில் படித்துக்கொண்டே வந்தேன். மீண்டும் பேருந்தில் நாகர்கோவில் டூ திண்டுக்கல்… 170 பக்கங்களை ஒரே மூச்சில் படிச்சாச்சு. இது ஒண்ணும் புதிசில்ல.. இதான் நம்ம பழக்கம். கல்லூரிக்குள் நுழைந்ததிலிருந்து.. பேருந்துப் பயணம் தான் எனது வாசிப்பின் திறவுகோல்.
“லெனின் இந்த உலகில் இல்லை என்பதை.. நேற்று கூட நன்றாகத்தான் இருந்தார்”..  என்று சொல்லிவிட்டு வெடித்துச் சிதறுவார்.. தோழர்.காலினின்..
அன்றும் அதனைப் படிக்கும்போது.. பேருந்து என்றும் அறியாமல், பொது இடம் என்றும் அறியாமல். கண்ணீர் உருண்டது.. மீண்டும் பேருந்து  இரவு திண்டுக்கல்லை நெருங்கும்போது.. அதே நிலைதான்.
இப்போது 2015 ஜூலை 12ல்.. என் புற்று நோய் அறுவை சிகிச்சைக்கு.. 5 ஆண்டுகளுக்குப் பின்.. முதல் காம்ரேட் மீள் வாசிப்பு..
இதனை இன்று நினைத்துப் பார்க்கிறேன். என்னை இன்னும் இன்னும் உருக்காக மாற்ற.. இன்னும் இன்னும் அதிகம் பணி புரியக்கூடியவளாக.. மாற்ற இன்னும். அதிக உந்து சக்தியாக.. அதிகமான கிரியா ஊக்கியாக.. முதல் காம்ரேட்   அற்புதமாக முதல் காம்ரேட்டை உருவாக்கியுள்ள மருதனை எப்படிப் பாராட்டினாலும் தகும்.’
“விளாதிமிரின் இளமை அறிமுகம்.. நெஞ்சைக் கவ்விப் பிடிக்கும். அவரின் அண்ணனை..சிறைப்பிடித்ததை ஆசிரியர், குழந்தை விளாதிமிரிடம் சொல்வது.. விளாதிமிர்..(லெனின்) சட்டமாய்த் தொங்கும் தன் அப்பாவிடம்.. “அப்பா, நான் கணிதத்தில் முதல், கிரேக்கத்தில் முதல்”, எனத் தன் திறமையை..ஆதங்கத்தைத் தெரிவித்தல்,  ஜார் மன்னன் பற்றிய தகவலில்.. அடிமைகளைப்பற்றி அறிந்து..இவர்கள் அசையும் சொத்துகள் என்பது..
Terrible ஜார் மன்னன்.. எதிர்த்துப் பேசினான் என்பதற்காக மகனையே மண்டையை உடைத்துக் கொன்றவர். ரஷ்யாவை உய்விக்க மார்க்சியம் படிக்க வேண்டும். அதுதான் அரிச்சுவடி,..
பொருளாதாரம், வரலாறு தெரியாமல் மார்க்சீயம் பயில முடியாது. புத்தகங்களிலிருந்து நாலுகால் பாய்ச்சலில் கற்றுக்கொள்ள விரும்பி அப்படியே படித்தவர். நாலு ஆண்டுகள் சட்டப் படிப்பை..தனியாக ஒண்ணரை ஆண்டுகளில் கரைத்துக் குடித்தவர்.
“நான் ஒரு அறிவு ஜீவி. என்னிடம் உலகத்தை உய்விக்கும் மந்திரம் இருக்கிறது”.. என்று உயரத்தில் உட்காராமல், மக்களிடம் இறங்கி வர வேண்டும், விவசாயிகளிடம், தொழிலாளிகளிடம்.. இறங்கி வரவேண்டும்” என சொன்னதோடு செய்தவர்.. விளாதிமிர்.
அதனோடு ”..தொழிலாளர்கள்தான் தேச வளர்ச்சிக்கு அச்சாணி. படித்த பண்டிதர்கள் அல்ல.படிக்காத ஏழைத் தொழிலாளிகளால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். தொழிலாளிகளின் உழைப்பு சுரண்டப்படக் கூடாது.. புரட்சி என்று சாத்தியமானால்,..
காரல் மார்க்சை ரஷ்ய மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர்.  தன வாழ்நாள் முழுவதும் விளாதிமிர் இலியீச் உலியானவ்..(இதுதான் லெனினின் இயற்பெயர்) அலைந்து கொண்டே இருந்தார். காலையில் ஓரிடம், மதியம் வேறிடம்,, மாலை மற்றோர் இடம், இரவும் வேறிடம்..
இரவு தொடங்கி நள்ளிரவு, அதிகாலை என்று ஓயாமல் வாசிப்பு, பிறகு எழுத்து,, மொழிபெயர்ப்பு.. இதுதான் லெனினிடம் இருந்து எனக்குக் கிடைத்த பூஸ்ட்.. உத்வேகம்.. ஊக்கி… தொடர் பணிகள்..தொடர் செயல்பாடு.. ஓய்வறியாப்பணி. லெனின் என்பது அவரே வைத்துக் கொண்ட பெயர்..
அது போல ஜோசப் இவானோவிச் என்ற பெயர் கொண்ட மனிதருக்கு, ஸ்டாலின், இரும்பு மனிதன் என்ற கம்பீரமான பெயரைச் சூட்டியவரும் லெனின்தான்..
1902ல், லண்டனில் மார்க்ஸ் அமர்ந்து படித்த நூலகத்துக்குள் நுழைந்த லெனின்,..
நூலக அறைகளைப் பார்வையால் விழுங்கி, புத்தக அலமாரிகளை நெருங்கி, நேசத்துடன் அவற்றைத் தடவி..
“கார்ல் மார்க்ஸ், இதோ இந்த புத்தக அலமாரிகளில்தான் உங்கள் விரல்களை மேயவிட்டிருப்பீர்கள்.. இந்த நாற்காலிகளில் ஒன்றில்தான் அமர்ந்திருப்பீர்கள்,”
“இந்த அறையில் இப்போதும் உங்கள் சுவாசம்..நீங்கள் சுவாசித்த காற்று இப்போதும் நிறைந்திருக்கக் கூடும்..”என்று உணர்வு மிக்க விளாதிமிரின் மன நெகிழ்ச்சி.. படிப்பவரின் நெஞ்சையும் கனமாக்கி, உள்ளார்ந்து சுவாசித்து நேசிக்க வைக்கச் செய்யும் சாகச வரிகள் இவை;
மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் சுவாசித்த காற்றைத் தான் இன்றும் நாமும் சுவாசித்துக்கொண்டிருக்கிறோம் தோழர்களே..
அது மட்டுமா?லெனின் அந்த புத்தகங்களைப் பார்த்து, மானுட குலத்துக்கு, நீங்கள் அன்பளித்த மகத்தான சித்தாந்தத்துக்கு உருவமும் உயிரும் கொடுப்பது தான் என் லட்சியம்..என் கனவு நிறைவேற வேண்டும் கார்ல் மார்க்ஸ்..நிறைவேறுமா? என்று உள்ளம் தழுதழுக்க அவரிடம் பேசும் பாணி.
இறுதியில் நிறைவேற்றிய வல்லமை மிகு விளாதிமிர் லெனின். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்றால் என்ன என்று தெரியாத மக்களை.. போதித்து மாற்றி. அரசை அவர்கள் அரசாக மாற்றிய மந்திரக்கோல் லெனின்.. இந்த மாற்றத்தைப் படிக்கும்போது, ஜாரின் அட்டகாசத்தை.. அதிகார ஆணவத்தை ஒடுக்கி, தொழிலாளர்களைப் போராட்ட குணமுள்ளவர்களாக உருவாக்கி,.ரஷ்யாவை சோவியத் அரசாக.. ஒற்றை மனிதனால் எப்படி? எப்படி?
இதனைப் படிக்கப் படிக்க, ஒரு திரைக்கதையைப் பார்ப்பது போலவே உள்ளது.. இது நிஜத்தில் நடந்தது..ஒரு வரலாறு என்பதை நம்ப முடியாத அளவு அற்புதமான ஆச்சரியமான மாற்றங்கள் விளைந்த வரலாறும்..இதுவே. விளாதிமிர்.. பனிப்பிரதேசத்தில் சைபீரியாவில் தனிமைச் சிறை..  அங்கு தனித்து வாழ்ந்த  மனிதர் எப்படி நாட்டை ஆளும் தன்மை, தன்னம்பிக்கை பெற்றார்.
ஒற்றை மனிதனாய், மக்களைக் கற்பித்து, மாற்றி, போராளியாக்கி.. அநியாயக்கார ஜாரை விரட்டி.. இது நெசமாவே வரலாறா? நடந்ததா என நம்மை மிரள வைக்கிறது… ”முதல் காம்ரேட் “
இரண்டு புரட்சியாளர்கள லெனின் & நதேஷ்தா வாசிப்பால் நேசிக்கிறார்கள்.. வாசிப்பால், மக்களை மாற்றுகிறார்கள்.. வாசிப்பால்.. உலகைப் புரட்டிப் போடுகிறார்கள். வாசிப்பால் கோழைகளை வீரர்களாக்குகிறார்கள்
ஒழித்துக்கட்டிவிட்டு.. மக்கள் அரசை உருவாக்கிய போதும் கூட.. மக்கள் உற்சாக மிகுதியில் இருந்த போதும் கூட, லெனின் கொண்டாட்ட சுவடே இல்லாமல் மேடை ஏறினார்.  மக்களை விழுங்குவதைப் போல பார்த்தார். இரண்டு ஆணைகளை வெளியிட்டார். மக்கள் கடலை நோக்கிப் பேசினார்.
“ஒன்று சமாதானம். இரண்டாவது.. நிலம். .நிலம் மீதான தனியுரிமை நீக்கப்பட்டது..  நன்றி“.. என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்குகிறார்.  இப்படிஎல்லாம் விவரிக்கிறார் லெனின் பற்றி.. ஆசிரியர்..
அற்புதம் ஆசிரியர் மருதன்.. வாழ்த்துகள் மீண்டும்.
லெனினை எண்ணிப் பெருமை கொள்வதோடு..அவரைக் கூடியவரை பின்பற்றுவோமே..அவர் ஒரு பொது உடைமைவாதி மற்றும் கம்யூனிசவாதி என்பதால் அல்ல.
விடாப்பிடியான போராளி என்பதால்..மக்களை நேசிப்பதால்..அவர்களுக்கு அறிவும்,கல்வியும் புகட்ட எண்ணுவதால்..
என்றைக்கும் படித்துக் கொண்டே உலகை மாற்றிய மனிதம் என்பதால்.
பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும், பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது.” – லெனின் [21.02.1920]
பெண்களின் உடல் உழைப்புகளை குடும்பத்திற்கு மட்டும் உபயோகித்துக் கொண்டு இழிவான அநீதியை பெண்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது முதலாளித்துவம். இதன் மூலம் பெண்களை அடக்கி ஆளவும் எதற்கும் உபயோகமற்றவர்களாகவும் சித்தரித்து தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கின்றனர்
“ஒவ்வொரு பெண்ணும் நிரந்தரமாகவே வீட்டுக்குள் புகுந்துக் கொண்டிருப்பதில் இருந்து வெளியேற வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்கள் தங்கள் உடல் உழைப்பை சமூகத்திற்காக பங்களிக்கும் போது ஆணுக்கு நிகராக பெண்கள் இருப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுவரை பெண் விடுதலை என்பது நீண்ட போராட்டமாகவே இருக்கும்.”
கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் கூட போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகிதக் குவியல்கள் அல்ல; உயிர்ப்போடு வாழும் மனித மனங்கள். நம்மோடு எப்போதும் இருக்கும், கேள்வி கேட்காத, விடை விரும்பாத ஆசிரியர்கள்.” எனது வாழ்க்கையைப் புரட்டியது புத்தகம் தான், என சொல்வோர் பலர். ஆயுதத்தின் வலிமையை விட, சக்தி வாய்ந்த இந்த புத்தகங்கள், சமூக மாற்றத்திற்கான திறவுகோல்கள். புத்தகத்தை, அன்றாடம் தங்கள் வாழ்வில் ருசிக்கும் ஜீவனாக நேசியுங்கள்.
நேரு பிரதமராக இருக்கும்போது லிப்டில் வந்திருக்கிறார். அப்போது திடீரென்று லிப்ட் பழுதாகிவிட்டது. 20 நிமிடங்கள் போராடி லிப்டைத் திறந்தனராம். . வெளியே வந்த ஜவஹர்லால் நேரு அதிகாரிகளை அழைத்தார். ஓர் ஆலோசனை சொன்னார். ”லிப்டில் சிறியதாய் ஒரு நூலகம் அமைக்கலாம்” என்றார்.
”சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
(தொடரும்)

Related posts

Leave a Comment