You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 8: கிருஷ்ணனின் வம்சத்தில் கஜினிமுகமது!

ச.சுப்பாராவ்

நான் மிகப் பொறுமையான வாசகன். எத்தனை கடினமான புத்தகமாக இருந்தாலும், சலிப்பூட்டுவதாக இருந்தாலும், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து முடித்துவிடும் நிதானமும், பொறுமையும் உள்ளவன். என்னையே பொறுமை இழந்து, தூக்கிப் போட்டுவிடுவோமா என்று நினைக்க வைத்த ஒரு நாவலும் கைக்குக்கிடைத்த கொடுமையை என்னவென்பது? கதைகள்     எல்லையற்ற கற்பனையால் உருவாகின்றன என்று நமக்குத் தெரியும். எனினும், ஓரளவு நம்பகத்தன்மை எனும் ஒரு எல்லைக்குள்தான் அந்த    எல்லையற்ற கற்பனை இருக்க வேண்டும். அந்த எல்லையை மீறிய எல்லையற்ற கற்பனை எரிச்சல்பட வைத்தாலும், இக்கட்டுரைக்காகப் பொறுமைகாத்துப் படித்தேன். யான்பெற்ற இன்பத்தை(!) நீங்களும் பெறுவீராக!
முதலில் அந்த எல்லையற்ற கற்பனைகளின் ஒரு பட்டியல். பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் மாமனான(?) பீஷ்மர் (நாவலில் சத்தியமாக இப்படித்தானய்யா இருக்கிறது!) இறந்தது கிமு 3067 மே மாதத்தில். ஹரி என்ற கடவுளைத்தான் கிரேக்கர்கள் ஹெர்குலிஸ் என்றார்கள். கலியுகம் கிமு 3102 பிப்ரவரி மாதம் 18ம் தேதி நள்ளிரவிலிருந்து ஆரம்பமானது. சரஸ்வதி ஒரு கற்பனை நதியல்ல. அதன் கரைகளில் 2200 நகரங்கள் இருந்தன. பாபா அணு ஆராய்ச்சி நிலையம் சிவலிங்கத்தின் வடிவில் கட்டப்பட்டது. அதனால் அங்கு அணுக்கதிர் வீச்சு அபாயம் இருக்காது. அணுகுண்டின் தந்தை என்று கூறப்படும் ஓப்பன்ஹீமர்      பகவத்கீதையைப் படிப்பதற்காக சமஸ்கிருதம் கற்றார். ஜியாமெட்ரி வேதகாலக் கணிதமாகும். வடமொழியில் ஜ்யா என்றால் வளைவு, மிதி என்றால் சரியாக அளத்தல் என்று பொருள். பிதகோரஸ் கங்கைக் கரைக்கு வந்து இந்த ஜியாமெட்ரியைக் கற்றார். ஓம் என்ற சொல்தான் ஓம்னிபொடண்ட் (சர்வ வல்லமை) என்ற ஆங்கிலச் சொல்லின் வேர். எகிப்தியர்களுக்கு பசு புனிதமானது. அவர்கள் பசுவைத் தவிர மற்ற எல்லா விலங்குகளையும் பலியிட்டார்கள். கோவா முன்னாளில் கோக்ஷேத்ரா – பசுக்களின் தேசம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. முஸ்லீம்களின் புனிதஸ்தலமான காபாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் பெரிய கோவில் இருந்தது. அங்கு ஆண்டின் நாட்களைக் குறிப்பதாக 360 விக்கிரகங்கள் இருந்தன. தலைமைக் கடவுள் தலையில் பிறைசூடி சிவனைப் போல் இருந்தார். மனுதான் ஆதிமனிதன். மேன் என்ற ஆங்கிலச் சொல்லே மனுவிலிருந்து உருவானதுதான். கஜினி முகமது சோமநாத் ஆலயத்தின் சிவலிங்கத்தை தூள்தூளாக்கி, அந்தத் துகள்களை ஜாமியா மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தான். தொழுகைக்கு வருவோர் அதை மிதித்துச் செல்லவேண்டும் என்பதற்கான ஏற்பாடு இது. யோகிகள் உடலில் மின்சக்தியை உருவாக்கி, அதன் மூலம் உட்கார்ந்தவாக்கில் மேலெழும் சக்தி படைத்தவர்கள். குதுப் மினாரில் உள்ள குவாத்-உல்-இஸ்லாம் மசூதி 27 ஹிந்து, சமணக் கோவில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். கஜினி முகமது கிருஷ்ணனின் யாதவ வம்சத்தினன்தான். ஜராசந்தனுக்குப் பயந்து கிருஷ்ணன் கோஷ்டி துவாரகைக்கு ஓடியபோது, கஜினி முகமதுவின் முன்னோர்கள் மேற்காசிய நாடுகளுக்கு ஓடினார்கள். பின்னாளில் முஸ்லீமாக மாறினார்கள். ஆக்ரா அக்னேஷ்வர் என்ற சிவஸ்தலம். அங்கு ராஜா மான்சிங்கின் குலதெய்வக் கோயில் இருந்த இடத்தில்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டது. இன்னும் சொல்லிக் கொண்டே போனால் வாசகர்களுக்குத் தலை சுற்றிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!
அஸ்வின் சாங்கியின் தி கிருஷ்ணா கீ (the krishna key) என்ற நாவலில்தான் மேற்படி அத்தனை கூத்துக்களும் வருகின்றன. கிருஷ்ணனுடைய கதையில் ஸ்யமந்தகமணி என்றொரு விலையுயர்ந்த கல் பற்றிய கதை ஒன்று உண்டு. அக்கல் அணுசக்தி உடையது, அது தன் அருகில் உள்ள எதையும் தங்கமாக மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது என்ற ஒரு கற்பனையை வைத்து, கிருஷ்ணன் அதை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைத் தேடி அதைக் கண்டுபிடிக்கும் நோக்கோடு ஒரு தீயவர் கூட்டம் அலைகிறது. அதைத் தடுக்கும் கூட்டத்தினர் கதாநாயகன், நாயகி கோஷ்டியினர். நல்லவர்களெல்லாம் கிருஷ்ணனின் பல்வேறு யாதவ இனப் பிரிவுகளான விருஷ்னே, குர்குடே, சேதி, சைனி ஆகிய வடநாட்டின் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர்கள். அந்தக் கல் சோமநாத் ஆலயத்தின் சிவலிங்கத்திற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு நம்பிக்கை. கஜினி முகமதுவும் தான் கிருஷ்ணனின் பரம்பரை என்பதால் தனது பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றவே சோம்நாத் மீது பலமுறை படையெடுத்தானாம். கடைசியில் அந்தக்கல் தாஜ்மஹாலின் பிரதான மண்டபத்தின் உச்சியில் ஒளித்து வைத்திருக்கப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது. நடுவில் நடக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் கெட்டவர்கள் இறக்க, தாஜ்மஹாலுக்குள்ளேயே ஸ்மந்தகமணி பத்திரமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டு நாயகனும், நாயகியும் கல்யாணம் செய்து கொள்ளக் கிளம்பிவிட, சுபம். இதில் வில்லன்களாகச் சித்தரிக்கப்படுபவர்கள் ராஷ்டிர சேவிகா சமிதி (RSS) என்ற அமைப்பில் பயிற்சி பெற்றவர்களாகக் காட்டப்படுவதுதான் நமக்கு ஒரே ஆறுதல். மற்றபடி முழுக்க முழுக்க இந்துத்வா போலிப் பெருமைதான் நாவல் பூராவும்.
கஜினி முகமது, ஒளரங்கசீப் போன்றோர் இந்துக் கோவில்களை இடித்தது, சர்தார் படேல் உள்துறை அமைச்சரானதும் சோம்நாத் கோவிலைக் கட்டி, ராஜேந்திரப் பிரசாத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தியது பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும்போது, கே.எம், முன்ஷியின் Somnth the Shrine Eternal  நூலைத் திரும்பப் படிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. வெளிப்படையான முஸ்லீம் வெறுப்பை, இந்துமதப் புராதனப் பெருமையை மிகத்திறமையாக ஒரு திரில்லர் கதையாக மாற்றியிருக்கிறார் சாங்கி. ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் இடாலிக்ஸில் கிருஷ்ணனின் கதை தனியாக ஒரு டிராக்கில் வந்து கொண்டே இருக்கிறது. நடுநடுவே கதாபாத்திரங்கள், ‘நம் பழமையான பாரம்பரியத்தைத் தொலைத்து விட்டோம், அதை மீட்டெடுக்க வேண்டும். வரலாறு என்ற பெயரில் ஆங்கிலேயன் தவறான விஷயங்களை நம் மனதில் திணித்துவிட்டான்’, என்றெல்லாம்  பொங்கிக் கொண்டே இருக்கின்றன.   நாவலை ஆங்கிலத்திலாவது படித்துவிடலாம். கிருஷ்ணனின் ரகசியம் என்ற தமிழ் மொழிபெயர்ப்பை படிக்கவே முடியாது.
டாக்டர் அகிலா சிவராமன் என்பவரின் மொழிபெயர்ப்பு எத்தனை மோசம் என்று தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். நேஷனல் ஹைவேக்கு நாஷனல் பெரும்பாதை என்று சொல்கிறார். நல்லவேளை நாஷனல்   உயர்பாதை என்று சொல்லவில்லை! ஒரு பாத்திரத்தை ஒரு சமயம்    மரியாதை விகுதி போட்டு எழுதுகிறார். அடுத்த வரியிலேயே அவன் இவன் என்று ஏகவசனம்! ஹார்ட் அட்டாக் என்பதை இதயத் துடிப்பு என்று மொழிபெயர்த்தால், பிறகு நான் என்னத்தைச் சொல்ல? தனியார் பள்ளியைத் தனிநபர் பள்ளி என்று எழுதுகிறார். குளித்தல் என்பதற்கு நாவல் முழுவதும் ஸ்நானம் என்ற சொல்தான். இப்படி பக்கத்திற்கு பக்கம் ஆயிரம் குறைகள். அத்தனையும் மீறி இந்தூல் மிக அதிகமாக விற்கப்பட்டிருப்பதுதான் நமக்குக் கவலை தருகிறது. அஸ்வின் சாங்கியின் மூன்று நாவல்கள் மொத்தம் 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கின்றன. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 100 தலைசிறந்த இந்தியர்களின் பட்டியலில் சாங்கி இடம் பெற்றிருக்கிறார்.
IIMமில் படித்து, மிகப்பெரிய பன்னாட்டுக் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, நம் நாட்டின் பண்டைய பாரம்பரியப் பெருமைகளை எல்லாம் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று இன்றைக்கு ஒரு பெரிய கூட்டம் இந்துத்வா செயல் திட்டத்தோடு நடுத்தர வர்க்க இளைஞர்களைக் குறிவைத்து, இலக்கியச் சேவையில் இறங்கி, கோடிக்கணக்கான பணத்தையும் சம்பாதித்துக்கொண்டு, விஷத்தையும் கக்கிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானவர் இந்த அஸ்வின் சாங்கி. ‘முடிவாக நான் எழுத உட்காரும் பொழுது, அறிவிலிருந்து வரும் விஷயங்கள் என்னுடையது அல்ல. என் மூலமாக வரும்        வார்த்தைகளே அவை. இதனுடைய, மூல, உண்மையான எழுத்தாளர், உருவமற்ற, முடிவில்லாத அந்த பரப்பிரும்மத்தின் அருளுக்கு என் நன்றியை எப்படிக் கூறுவது?’ என்று சாங்கி, ஏதோ கீதோபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா ரேஞ்சுக்கு தன் முன்னுரையை எழுதி முடிக்கும்போது, ‘இந்த  நாவலே அவன் செயல் என்பதால், அதில் கூறப்பட்டவை அனைத்தும் அவனது சத்ய வாக்குதான்’ என்று அவர் சொல்லும் போது, நமக்கு வேலை மிகவும் அதிகமாக இருப்பது தெரிகிறது.    (தொடரும்)

Related posts

Leave a Comment