You are here
வாசித்ததில் யோசித்தது 

படித்ததில் பிடித்தது 50:50

ஆயிஷா இரா. நடராசன்

1. சிறகை விரிக்கும் மங்கள்யான்   (கையருகே செவ்வாய்)
மயில்சாமி அண்ணாதுரை | தினத்தந்தி பிரசுரம்
ராக்கெட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தமிழ் எழுத்து நடை ஆச்சரியம் அளிக்கும் ஒன்று. 2013 ல் மங்கள்யான் விண்கலம் நம் மண்ணிலிருந்து புறப்பட்டதிலிருந்து நடக்கும் தொடர் அறிவியல் பயண நுணுக்கங்களை எல்லாருக்கும் புரியும்படி எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. ஒரு பாப்புலர் அறிவியல் நூலை நம் ராக்கெட் விஞ்ஞானிகளால் எழுதமுடியுமா? தமிழ்வழி கல்விகற்றதால் அது நம் அண்ணாச்சிக்கு கைவந்திருக்கிறது. எரிபொருளை சேதம் செய்யாமல் சிக்கனச் செயல்பாடுகளால் விண்கலம் வெற்றியடைந்ததை விளக்கும் இடமும் செவ்வாய் கிரஹம் குறித்த பல தகவல்கலும் அவற்றை நம் மண்ணோடு ஒப்பிட்டுப் பேசுவதும் நூலின் வெற்றிப்பக்கங்கள்.

2. கம்பவனத்தில் ஓர் உலா   சாலமன் பாப்பையா | கவிதா பப்ளிகேஷன்
சாலமன் பாப்பையா தன்னோடு பட்டிமன்றம் பேசும் பேராசிரியர்களுக்கு உருப்படியான ஒரு வேலையைக் கொடுத்து அதை செவ்வனே செயல்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது. ஒன்பதுபேர் எழுதியுள்ள சிறப்பான கட்டுரைகள் இந்தநூலில் அவரது திண்ணைத் தமிழ் முன்னுரையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. கம்பனில் நிறுவனமேலாண்மை, தலைமைப்பண்பு, தாய்மை எனப் புதிய கோணங்கள்… இப்படித்தான் வகுப்பில் அவற்றை அணுகவேண்டும் என்கிற புதியபாதை இடுகின்றன. அதற்காக கம்பனில் தேவாரம் தேடுவது சாரி… கொஞ்சம் ஓவர் டோஸ். சமண இலக்கியங்களுக்கும் இதுபோல ஒரு முயற்சி எடுக்கலாமே என்பது என்போன்ற நேயர் விருப்பம்.

3. காந்தியை சுட்ட பின்…    பா. முருகானந்தம் / குமுதம் பு(து)த்தகம்
மகாத்மா காந்தியின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுத்ததைவிட அவரது மரணம் கற்றுக் கொடுத்தது அதிகம் என நினைப்பவர்களில் நானும் ஒருவன். நீங்களும் ஒருவர் என்றால் இந்த புத்தகத்தை கண்டிப்பாக நீங்கள் வாசிக்க வேண்டும். தேசத்தந்தையை விடுதலை கிடைத்து ஒரு 200 நாட்கள் கூட நம்மால் உயிரோடு வைத்திருக்க, பாதுகாக்க முடியவில்லை என்பது எவ்வளவு அவமானகரமானதோ அதேபோல அவரை சுட்டவன் யார்… அவனைப் புனிதப்படுத்தும் அரசியல் பின்னணி என்ன… இன்று நம்மை மத்தியில் ஆளும் இந்துத்வா தீட்டிய சதித்திட்டம்தான் காந்தியைக் கொலைசெய்தது என்பதை முருகானந்தம் காந்தி படுகொலை விசாரணையை ஒரு திரில் புதினமாய் நம்முன் விரிக்கும்போது சாவர்க்கர், கோட்சே நாராயணதத்ரேயா, திரகம்பர் பட்கே போன்ற கொலை வெறியர்களின் காவிச் சதி நம்மை திகைக்கவைக்கிறது. கருகத் திருஉளமோ என மனம் விம்முகிறது.
4. உனக்குப் படிக்கத் தெரியாது    கமலாலயன்  |  வாசல்
கறுப்பினத்தவருக்கு கல்வி மறுக்கப்பட்ட அமெரிக்க சமூகத்தில் உனக்கெல்லாம் படிக்கவேவராது எனத் தூற்றப்படுகிறார் மேரி மெக்லியோட் பெத்யூன். தனது தீரா ஆசையை கனவுகளின் வழியே வெறியாக மாற்றிக் கொண்ட அவர் கருப்பினச் சிறுவர்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தை நிறுவி ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதையே தன் வாழ்வின் ஒற்றை நோக்கமாய்க் கொண்டார்… மிகப்பெரிய அந்தப் போராட்டத்தை கமலாலயன் தனது பதைக்க வைக்கும் எழுத்தில் எழுச்சி குறையாமல் பதிவு செய்திருக்கிறார். தனக்கும் தன் பள்ளிக்கும் வாழ்வளித்த கொடையாளர் மேரி கிறிஸ்மானை சந்திக்கும் இடம் நெகிழ்ச்சி ஊட்டுகிறது. கல்விக்கான  களப்போராளிகள் அவசியம் வாசிக்க வேண்டும்.

5. செள்ளு (சிறு கதைகள்) செல்வராஜ்
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வசிக்கும் முக்குவர் இன மக்களின் வாழ்வில் முக்கி எடுத்த ஆறுமுத்துக்கள் இக்கதைகள். வறுமை, புற்றுநோய், கடல்விபத்து, இதனிடையே தொடரும் பெரும்போராட்டமாய் வாழ்க்கை. அதிலும் நண்டு, ஒரட்டி, செள்ளு ஆகியன அற்புதமான கதைகள். சமூகத்தின் கனவுகளை சூறையாடும் கனிமமண் திருட்டு, குடும்பத்தின் கனவுகளை சூறையாடும் குடி. ‘மகேசுவரியும் தெக்கு ஆறும்’ போல ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, லஞ்சம் பெண் விடுதலை என அனைத்தையும் சேர்த்து சாறாய் பிழிந்து மனதை உருக்கும் ஒரு கதையை சமீபத்தில் நான் படித்ததில்லை அதைவிட சிறப்பு கதையோடு கூடவே வரும் கடலோரக் கலைச் சொல் அகரமுதலி!

6. மறக்க முடியாத வரலாறுகள்  தொகுப்பு: யுரேகாபுக்ஸ்
பெரிய மனிதர்கள் சிந்தனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் என்பதால் வாங்கி வாசிக்க ஆர்வம் கொண்டேன். ஐசக் நியூட்டன், லூயிஸ் பிரெயில் என வாசித்தபோது கூடவே வேலுநாச்சியார் கதையும் வரவே இன்ப அதிர்ச்சி. மிக அற்புதமான வரலாற்றுப் பதிவு. டாக்டர் லட்சுமி விசுவநாதன், அனுராதா ரமணன், கலைச்செல்வன் ஆகியோர் எழுதியுள்ள வரலாற்று நூல். ரோஸா பார்க்ஸ் குறித்த பதிவைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நியூட்டனின் அறிவியல் பங்களிப்புகளைச் சற்று விரிவாகப் பேசி இருக்கலாம்.

7. புத்துயிர்ப்பு (நாவல்) டால்ஸ்டாய்   தமிழில்:ரா. கிருஷ்ணையா   என்.சி.பி.எச்
எத்தனை முறை எடுத்து வாசித்தாலும் நம்மை வீழ்த்தும் படைப்புகளில் ஒன்றான புத்துயிர்ப்பு இப்போது வாசித்தாலும் புது அர்த்தங்களுடன் நம்மை சுவீகரிக்கிறது. அன்னா கரீனினாவுக்குப் பின் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு இந்த சமூக மானுடப் புதினத்தை 1899ல் முடித்த டால்ஸ்டாய் வெளியிட்ட முதல்பதிப்பில் இடம் பெற்ற லூயிஸ் பாஸ்தர்னாக்கின் அற்புத ஓவியங்களுடன் தற்போது பதிப்பித்திருப்பது திருப்திதரும் விஷயம். ஒரு நீதிபதியின் ஆன்ம சோதனையான இந்த நாவல் ரஷ்யாவின் மனசாட்சி மட்டுமல்ல இன்றைய பிற மண்ணின் நீதிதிரிந்த நியாயம் தகர்ந்த நீசத்தனத்தின் வெளிப்பாடும் தான்.

8. நமது சுற்றுப்புறச்சூழல்  லுயிக் ஃபதேஅலி / தமிழில்: எஸ் விநாயகம்     நேஷனல் புக்டிரஸ்ட்
நமது சுற்றுப்புறத்திற்கு நம்மையும் அறியாமலேயே நாம் செய்யும் தீங்குகளை ஃபதே அலி அடுக்கும்போது பகீர் என்கிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் முகஷவரகீரீம், ஷவர வாசனை திரவம் எல்லாம் ஓஸோன் ஓட்டைக்கு காரணமாகின்றன. மலைகள் காடுகள் ஆறுகள் கடல்கள் கிராமங்களை நேரடியாக நீங்கள் அழிக்கவேண்டியதே இல்லை, சும்மா ஒரு சென்ட்பாட்டில், ஒரு ஏசி அறை… ஒரு பாலித்தீன்பை போதும் நீங்களும் கிரிமினல்தான். நினைத்தால் மனம் பதைக்கிறது. விநாயகம் நேரத்தியாய் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலில் இயற்கை விபத்துகள் பற்றிய கட்டுரை தனிச்சிறப்பு.

9. மனிதனைத் தேடும் மனிதன்   ஆண்டன் பாலசிங்கம் / கானல் வெளியீடு
தான் அறிந்த தன்னை அறிந்த பல மனிதர்களைத் தனக்கே உரிய ஈழத்தமிழில் நேர்த்தியாக நெய்கிறார் பாலசிங்கம், தனது ஆயுதம் தாங்கிய அமைப்பின் ஆலோசகர் என்ற பதிவே இன்றி தமிழ் இனத்தின் பார்வையில் அவர் அறிமுகம் செய்யும் மனிதர்கள் காலத்தால் அழியாத தமிழ் நேசர்களாக இருக்கிறார்கள்.

10. பிரமிடுகள் (தேசத்தின் ஞானத்தேடல்)  என் கணேசன் / பிளாக்ஹோல்
என். கணேசன் ஆழ்மனசக்தி, ஆன்மீகம், மெஸ்மரிசம் என எழுதுபவர்தான் என்றாலும் இந்த புத்தகம் விதிவிலக்கு. பிரமிடுகள் அறிவியல் முறைப்படி நேரடியாக ஆய்ந்தறிந்து கூடவே அவற்றில் இருப்பதாக சொல்லப்படும் மாந்திரீக சக்திகளை நேரில் சென்று பரிசோதித்து எழுதி இருக்கிறார். 28 நாட்கள் மண்ணில் புதைந்திருந்தும் சுவாசித்தபடி வெளியே வந்த வித்தைக்காரன் டெஹ்ரா பே பற்றிய அத்தியாயம் ஏக விறுவிறுப்பு. வசியமந்திரங்கள் பற்றிய அனைத்தையும் நான் ஆட்சேபிக்கிறேன்.

11. மரணவீட்டின் குறிப்புகள்   தாஸ்தாயெவ்ஸ்கி / தமிழில்: வி.எஸ். வெங்கடேசன்/ வ.உ.சி நூலகம்
தாஸ்தாயேவ்ஸ்கியின் மிகப் பிரபலமான இப்படைப்பு தமிழில் மிக அற்புதமாக மொழிபெயர்ப்பாகி உள்ளது. நாவலா அல்லது அவரது சைபீரிய சிறைவாசக் குறிப்பா இது நிஜத்தில் நமக்கே நடப்பதா என வியக்கிறோம். தாஸ்தாயேவ்ஸ்கி தன் வாழ்க்கை முழுவதையுமே தொண்டை அடைக்க நெஞ்சுக்குமுறலோடு வாழ்ந்து நம்மை அந்த மீளா மரணக்குழிக்குள் வீழ்த்தும் மாயப் பிசாசு என்பதில் சந்தேகமில்லை.

12. அதிகாரம் அல்ல அன்பு…   சோம. வள்ளியப்பன்/விஜயா பதிப்பகம், கோவை
‘அள்ள அள்ளப் பணம்’ ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ போன்று எழுதிக் கொண்டிருப்பவராயிற்றே என்றுதான் நினைத்தேன். சோம. வள்ளியப்பனின் கட்டுரைகளைத் தினமணியில் வாசித்து இருந்தேன். அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக்கி இருக்கிறது விஜயா பதிப்பகம்… வழக்கம் போல குழந்தைகள் குறித்து ஏதாவது.. எனத் தேடியபோது நல்லபெற்றோர் கட்டுரை மனதைத் தொட்டது. குழந்தைகள் தம்மைச் சுற்றி நடப்பதை எவ்வளவு உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை விவரிக்கும் இக்கட்டுரைக்காக நூலை முன்மொழிவேன்.. மற்றபடி சுயமுன்னேற்றப் புத்தகம் எனத் தள்ளிவிட வேண்டாம். இது நம் மண்ணின் மனிதர்கள் பற்றி பேசும் அபூர்வமான ஆளுமை நூல். பணம் சம்பாதிப்பதைத் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேசும் வள்ளியப்பனை வாசிக்க முடிகிறது.

13. இராணுவமயமாகும் இலங்கை     அ. மார்க்ஸ் / உயிர்மை
நேரடியாக ஈழத்திற்கு இரண்டாம் முறை விஜயம் செய்தபோது தோழர் அ. மார்க்ஸ் பொது உரையாடல், கூட்டம் என எதிலும் பேசக்கூடாது என இலங்கை அரசு தடை விதித்தது மட்டுமல்ல, முள்ளி வாய்க்கால் உட்பட சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கும் போகவிடாமல் செய்தது. எனினும் நிலத்தை நேரில் கண்டு எழுதி உண்மை நிலையை அவர் பதிவு செய்யத் தவறவில்லை.

14. சே குவாரா வின் புரட்சிகர வரலாறு     லூசியா ஆல் வாரிஸ் டீ டொலிடா,   வ.உ.சி பதிப்பகம்
சிவகாசி பிரகாசம் தமிழ்ப்படுத்தி இருக்கும் இந்த 1970களின் மிக அதிகம் விற்பனையான டொலிடாவின் புத்தகம் சேவின் மிகவும் ஈர்ப்பான பல புகைப்படங்களுடன் அழகாக வந்துள்ளது. சே ஒரு அறிவுஜீவி. அவர் ஒரு மருத்துவர் அவர் நினைத்திருந்தால் விஞ்ஞானியாய், எழுத்தாளராய், ஆசிரியராய். புகைப்பட நிபுணராய். மெக்கானிக்காய் இன்னும் தேர்ந்த கலைஞராய்க் கூட ஆகி இருக்கலாம்… மக்கள் விடுதலை மீதிருந்த ஒற்றைக் காதலால் அவர் அதிரடி விடுதலையுத்த படைத் தலைவரானார். மார்க்சியத்தையே வாழும்படி அவரை ஆக்கியது எது?  ஹெர்பர்ட் மத்யூஸ் சொல்வது போல அவர் தன்னை மரணத்தைவிடப் பெரியவராகக் கருதியது எப்படி? புத்தகம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன கேள்விகள்.

15. கீதாஞ்சலி (நோபல்-காவியம்) தாகூர்  தமிழில்: வி.ஆர்.எம்.செட்டியார் / கானல் வெளியீடு
1945ல் வெளிவந்த இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு நமக்குச் சுட்டுவது என்ன? நோபல் இலக்கியங்களை நம் மொழிக்கு கொண்டு வருவதில் எல்லோரும் சொல்வதைப் போல நாம் பின்தங்கிவிடவில்லை. ஆனால் பிற்கால இலக்கியப் போக்கில் கட்சி அரசியல் ஊடாடி நம் தேடலை மழுங்கடித்து விட்டது 1929ல் தாகூரை நேரில் சந்தித்தது பற்றிய செட்டியாரின் பதிவுடன் தொடங்கும் இந்தப் புத்தகம் கீதாஞ்சலியின் 103 கவிதைகளை எடுத்து அழகாகத் தொடுத்து நம் முன் நிறுத்துகிறது. ‘அன்னையே! சோகமான என் கண்ணீர்த் துளிகளால் /உன் கழுத்துக்கு ஒரு முத்தாரம்/ தொடுக்கிறேன்.. செல்வமும் புகழும் உன் உரிமை/ அதைத் தருவதும் தராததும் உன் விருப்பம் / ஆனால் இந்த சோகம் என் சொந்த உடைமை… எனப் பல இடங்களில் நெஞ்சடைக்க வைக்கிறார் அமரகவி.
16. விவேகானந்தரின் பொருளாதார சிந்தனைகள் (வறுமையிலிருந்து வளமைக்கு)  சுவாமி பஜனானந்தா  ராமகிருஷ்ணமடம்
ராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள நூல்களில் காரல்மார்க்ஸ் படமும் அமர்த்தியாசென் படமும் அட்டையில் வெளியான ஒரே புத்தகம் இது. விவேகானந்தரின் விலகல் சிந்தனையோடு இணைத்து மனிதன் – வேலை என கூலி உழைப்பும் மூலதனமும் சிந்தனையை அமர்தியாசென்னின் மனித நலப் பொருளாதாரம் என விவரித்து பஜனானந்தசுவாமி சிவப்பாய் ஒரு புத்தகத்தை மிளிர வைத்திருப்பது சற்றே ஆச்சரியம் தரும் முயற்சி. சீனா தோற்கும் இந்தியா வெல்லும் எனப் புத்தகம் தொடங்குகிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் கல்வியைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என முடிகிறது. காவிக்குள் புன்னகைக்கும் சிவப்பு அரசியல் இது.

17. அண்ட சராசரம் (சிறார் நாவல்) எஸ். ராமகிருஷ்ணன் / உயிர்மை
குழந்தைகளுக்கு எஸ்.ரா. சொல்லும் துப்பறியும் கதை இது. இந்திய தேசிய ராணுவம் எனும் நேதாஜியின் பிரமாண்ட முயற்சிக்காகத் திரட்டப்பட்ட பணம் ஆசாத் வங்கியிலிருந்து‘லபக்’ செய்யப்பட அதைத் தேடித் துப்பறியும் 14 வயது சிறுவன் திப்பு கிழவர் சத்யாகியோடு இணைகிறார். அப்புறமென்ன இந்திய வரலாற்றில் அறியப்படாத ஒரு பக்கத்தை குழந்தைகளுக்கு பயாஸ்கோப் ஆக்கி அசத்தி இருக்கிறார்.

18. கலகக்காரர் ஐன்ஸ்டீன்       த.வி. வெங்கடேஸ்வரன் /அறிவியல் வெளியீடு
உலகின் தலைசிறந்த அறிஞர் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையை இந்த 23 அத்தியாயங்களின் வழியே சுவாரசியமாக நகர்த்திச் செல்லும்  த.வி. வெங்கடேஸ்வரன், அவர் ஏன் ஒரு கலகக்காரர், ஒரு போராளி என்பதை முன்வைக்கத் தவறவில்லை. நவீன உலகில் அறிவு ஜீவிதத்தின் அடையாளமாகிப்போன ஐன்ஸ்டீன் உண்மையில் ஆசிரியர்களால் சோம்பேறிநாய் என விரட்டப்பட்டதைப் பதிவு செய்து கல்விச்சாலை என்பது உலகம் பூராவும் ஒரே மாதிரிதான் என சொல்லாமல் சொல்லுமிடம்                   த.வி. வெங்கடேஸ்வரனும் ஒரு கலககாரர்தான் என்பதற்கு சான்று!

19. வெற்றி வீரன் ஜூலியஸ் சீஸர்  எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா / யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஜூலியஸ் சீசர் தான் உலக வரலாற்றின் திருப்புமுனை என்று இருந்தது. கிறிஸ்து பிறப்பிற்கு முன் (கி.மு) கிறிஸ்து பிறப்பிற்கு பின் (கி.பி) என்று வரலாற்றைப் பிரிப்பதைவிட சீசர் ஆட்சிக்கு முன், பின் என்று சொல்வதே நியாயமானது  என்பதை இந்த நூலை வாசித்தால் நீங்களே முடிவுக்கு வருவீர்கள். முதன்முதல் தேர்தல் பற்றி சிந்தித்ததாலேயே அவர் வெற்றி வீரர் தான்.

20. குமரிக் கண்டமா? சுமேரியமா?   பா. பிரபாகரன் / கிழக்கு பதிப்பகம்
தமிழன் உண்மையில் யார் என்பதற்கு அடிப்படையான அகழ்வாராய்ச்சி வரலாற்று முறை ஆய்வு என அசத்தி இருக்கும் பிரபாகரன் ஒரு இஞ்சினியர். பி.இ. மெக்கானிக்கல் படித்தவராம். இது அற்புதமானவிஷயம். நமது குமரிக்கண்ட கனவுகளை டுமீல் செய்துவிட்டார். அத்திரம்பாக்கம், பொருத்தல் அரிக்கமேடு என தீவிர அகழ்வராய்ச்சி செய்துள்ள நூலாசிரியர், கி.மு.490ல் உருவான நெல்மணிகளை நவீன ஆக்சிலரேடட் மாஸ்ஸ்பெக்ட்ரோ மெட்ரி மூலம் கரியமில தேதியாக்கத்திற்கு உட்படுத்தி ஆதித்தமிழர் காலத்தை கி.மு. 780ல்  கொண்டு நிறுத்தி அக்கால சுமேரியாவுடன் இணைத்து அசத்துகிறார். சிந்து சமவெளி முத்திரைகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவர் சுமேரிய முத்திரை மற்றும் நமது புராதன பூசைஅறை அயிட்டங்களுடன் ஒப்பிடும்போது மனதில் ஏற்படும் திக்திக்… புத்தகத்தின் வெற்றி. நம் வரலாறு பாடபுத்தகங்கள் இப்படி சுவாரசியமாக ஏன் இருப்பது இல்லை என யாராவது (நிஜ) பிஎச்டி செய்யலாம்.

21. நானோ யுகம்   ஆத்மா கே. ரவி /புக்ஸ் ஃபார் சில்ரன்
ஆத்மா கே.ரவியின் அறிவியல் நூல்கள் எளிமையாக புரியக்கூடிய நடையில் உள்ளன. கடும் உழைப்பாளி. நானோ யுகம் புத்தறிவியலைத் தமிழில் அறிமுகம் செய்யும் ஆழமான முயற்சி. ரப்பரை கந்தகத்தோடு கலந்தபோது சார்லஸ் இட்கியர்க்கு பிளாஸ்டிக் கிடைத்தது என்பது முதல் 1997ல் எம்.பி.3 (MP3) ஸ்டூவார்ட் பக்கின் கண்டுபிடிப்பாக வந்தது வரை நானோ தொழில்நுட்பத்தின் கதையை அதன் மருத்துவப்பயன் உட்பட ஆய்வு செய்து விவரிக்கிறார். நேனோ உயிரி (செயற்கை) விவசாயத்தின் விபரீதங்களை சற்றுவிரிவாக அவர் இன்னொரு நூலாக எழுத முன்மொழிவேன்.

22. தமிழகம்: ஊரும் பேரும்    ரா.பி. சேதுப்பிள்ளை / பூம்புகார் பதிப்பகம்
பிரபலமான இந்த நூலை நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது பூம்புகார் பதிப்பகம். கண்டிப்பாக அடுத்த தலைமுறையினிடத்து எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று. தமிழகமும் நிலமும் கட்டுரை 1940களில் முதல் முறையாக குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை எனப் புவியியலை தமிழை மையப்படுத்தி வரலாறு கண்ட பொக்கிஷமான இந்த நூலில் உங்க ஊர்ப் பெயரைத் தேடிப் பெயர்க் காரணம் அறிய வாய்ப்பு உள்ளது. கபாலீஸ்வரம், திருமயிலை, அல்லிக்கேணி எல்லாம் கும்பினியர் ஆட்சியில் இணைவுபெற்று சென்னை பட்டினமான கதையை சேதுப்பிள்ளையார் சொல்ல வேண்டும், நாம் கேட்கவேண்டும். மனிதர் சிந்தாதிரிப்பேட்டை, தண்டையார் பேட்டை… நரிமேடு என எதையும் விடவில்லை. இது ஒரு அஃக்மார்க் அறிவியல் நூல் என சான்றளிக்க முடியும்… ஏரியைவிற்று காசாக்கி ரியல் எஸ்டேட்காரர்கள் கட்டும் புதிய நகர்களுக்குப் பெயர்வைக்கவும் உதவலாம்.

23. சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை    பா.வீரமணி | பாரதி புத்தகாலயம்
கான்பூரில் 1925ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவுடமை மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் சிங்காரவேலர்.  அவரே நம் தொழிற்சங்க இயக்கத்திற்கு முன்னோடி. உலகத் தொழிலாளர் தினமாகிய மே தினத்தை இந்தியாவில் முதன்முதலாகத் கொண்டாடியவரும் இவரே. நாள் 1.5.1923. மட்டுமல்ல, லேபர் & மிஸ்ஸான் கெஜட் என்னும் தமிழ் இதழையும் அவர் தொடங்கி நடத்தினார். சுயமரியாதை இயக்கத்தை சமதர்ம இயக்கமாக மாற்றி அதன் கொள்கைத் திட்டத்தை வகுக்கும் பொறுப்பை தந்தை பெரியார் மனமுவந்து அளித்தது சிங்கார வேலரிடம் தான். அவர் சுதந்திரப் போராட்ட வீரர், பன்மொழி அறிஞர், சமூகப் போராளி, அத்தகைய ஆளுமையை இன்றைய இளையதலைமுறையினர் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்ளும் பொருட்டு பா.வீரமணி அவர்கள் அரிய தகவல் விவரணைகளுடன் எழுதியுள்ள இந்நூல் மிக முக்கியமானது. வரலாற்றுக் குறிப்புகளையும், பாரதிதாசன், சுரதா போன்றோர் சிங்காரவேலரைக் குறித்து எழுதிய கவிதைகளையும் இந்நூலின் பிற்பகுதியில் இணைத்திருப்பது பொருத்தமானது. தமிழர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய பிரதி இது!.

24. புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்:  கேப்டன் லட்சுமி                             தமிழில்: மு.ந.புகழேந்தி    பாரதி புத்தகாலயம்                                                                                                            நேதாஜி, ‘ஆசாத் ஹிந்த் சர்க்கார்’ அமைத்தபோது அதில் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சர் நம்முடைய கேப்டன் லட்சுமி. அவருக்கு நேதாஜி வழங்கிய இலாகா, மகளிர் மற்றும் சுகாதாரத்துறை. அவர் நம் தமிழகத்தில் பிறந்து, இங்கேயே மருத்துவப் படிப்பை முடித்தவர். சிங்கப்பூரில் அவர் ஆற்றிய மருத்துவப் பணி, ஐ.என்.ஏ.வில்  ஜான்சிராணி படைப்பிரிவு துவங்கப்பட்டபோது அதற்கு அவர் தலைமை தாங்கி நடத்தியது, பிரிட்டிஷ் அரசாங்கத்தினரால் கைது செய்யப்பட்டது, பர்மாவிலும் கான்பூரிலும் மட்டுமல்லாமல், 1971ல் இந்திய பாகிஸ்தான் போர் நடந்த சமயத்தில் எல்லையில் அவருடைய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவப் பணி என மு.ந.புகழேந்தி தமிழாக்கம் செய்துள்ள இந்நூலில் லட்சுமி சாஹெலின் அர்ப்பணிப்பான வாழ்க்கை இயல்பாகப் பதிவாகியுள்ளது. நேதாஜியின் வருகை என்னும் நான்காவது அத்தியாயம் பெரிய மன எழுச்சியை அளிப்பதாக உள்ளது.

25. நம்மோடுதான் பேசுகிறார்கள்        சீனிவாசன் / பாலசுப்ரமணியன் / வம்சி
கடினப்பிரதேசங்களாக அறியப்பட்ட கலை, நுண்கலை, ஓவியம், சிற்பம், கோவில்மரபு இவை சமூக சிக்கல்கள் கலாசாரங்களில் குழைந்து எப்படி உருவம் பெருகின்றன எனும் இடத்தை 25 கட்டுரைகளாக எழுதி  இருக்கிறார்கள். ஆனால் நண்பர்களுக்கிடையிலான அனுபவபகிர்வுக்கு நடுவே புத்தகம் நகர்வதால் நமக்கு யாருடைய வாழ்வையோ (அடுத்த பிளாட்) ஒட்டுப் பார்த்த சுவாரசியம். இடையிடையே அபுல்கலாம் ஆசாத் என்பவரது புகைப்படங்களில் இந்து சாமி சிலைகள் போஸ் கொடுப்பது திகைக்க வைக்கும் அதிசயம்.

26. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்     பேரா. ஆர். சந்திரா / பாரதி புத்தகாலயம்
கடந்த நூற்றாண்டில் மட்டும் உலகில் எட்டுலட்சம் சிறிய அணைகளும், 40,000 பெரிய அணைகளும் கட்டப்பட்டுள்ளன. புவி சூடேற இவை முக்கியக் காரணம். ஆனால் தண்ணீர் வேகமாக வீணடிக்கப்படுகிறது. ஐ.நா. கணக்குப்படி 2030ல் உலகின் 50 சதவிகித மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி நீர் நெருக்கடிக்குத் தள்ளப்படுவார்கள். இப்படி வயிற்றில் தீ வார்க்கும் பல்வேறு தகவல்களுடன் நீர் அரசியல் அதன் அடிப்படை, தீர்வு என அடுக்கிச் செல்லும் இந்த நூல் முன்வைக்கும் பத்துக் கட்டளைகள் சட்டமாக்கப்பட்டு ஹெல்மெட்டை விட கட்டாயமாக்கப்பட்டால் என்ன என்று தோன்றுகிறது.

27. காயிதே ஆஸம் முகம்மது அலி ஜின்னா           மு. சுப்ரமணி / சீதை பதிப்பகம் சென்னை.
ஜின்னாவைப் பற்றிய புத்தகங்கள் குறைவு. அநேகமாக இது விரிவான தமிழின் முதல் முயற்சி. ஆனால் கேம்பிரிட்ஜ் இசுலாமிய அமைப்பான மில்லத்தின் மாணவர் ரஹமத்அலி பாகிஸ்தான் எனப் பெயரிட்டத்தில் தொடங்கி இந்தியத் துணைக் கண்டத்திற்கு அல்தீனியா எனவும் பெயரிட்டு இங்கே பத்து இசுலாமிய நாடுகள் என்ற அளவில் பாகிஸ்தானம் பிறந்த கதையையும் ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதையும் தெலுங்கானா எழுச்யோடு இணைத்து வாசிக்கும் அனுபவம் தோழர் சுப்ரமணியத்தின்  வெற்றி. ஜின்னாவின் ஆளுமையும் சோஷலிஸப் பற்றும் நம்மை சிலிர்க்க வைத்து இன்றைய தாலிபான் பாகிஸ்தானம் எப்படி போலியாகக் கட்டமைக்கப்பட்டது என்பதையும் உரைக்க வைக்கிறது.

28. அறிவியல் முன்னோடி மேரி கியூரி                                          ஆர். பெரியசாமி / பாரதி புத்தகாலயம்
தோழர் ஆர்.பெரியசாமியின் உழைப்பு பிரமாண்டம். பல்வேறு நூல்கள் ஆழமான பங்களிப்புகள். வித்தகப் பதிவுகள்… இந்நூலும் சளைத்ததல்ல. ஒரு ஒடுக்கப்பட்ட பிரதேசத்தில் பிறந்து அகதியாய் பிரான்சுநாட்டிற்குள் நுழைந்து கல்வி தவிர வேறு ஆயுதமற்று வீட்டு வேலை செய்து பிழைத்து மாபெரும் விஞ்ஞானியாய் வளர்ந்த மேரி கியூரியின் இந்தக் கதை… குறிப்பாக இதுவரை யாரும் பதிவு செய்யாத இடதுசாரியான அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்க நடந்த சதியை அம்பலப்படுத்துகிறது.

29. தமிழ் ஒளி  செ.து.சஞ்சீவி / சாகித்யஅகாதமி
புதுச்சேரி என பாண்டியை முதலில் அழைத்தவர் தமிழ் ஒளி. மாபெரும் கவிஞர். தாழ்த்தப்பட்ட சாதி என கல்லூரியில் இகழப்பட்டபோது நேரில் சென்ற பாரதிதாசன் முதல்வரை எச்சரித்த வரலாற்றுக்கு சொந்தமானவர். தமிழில் புத்தர்காவியம் படைத்த பகுத்தறிவுச் செம்மல் தமிழ் ஓளி. அவரது வாழ்வின் போராட்டங்களை அடுத்த தலைமுறை கண்டிப்பாக அறிய வேண்டும். சிலப்பதிகாரம் ஒரு காவியமல்ல நாடகக் காப்பியம் என முதலில் மேடையேற்றிய பெருமை உட்பட பலவற்றைப் பேசும் நூலிது.

30. பெடரல் சமஸ்தான இந்தியா     வெ. சாமிநாதசர்மா / பாரதி புத்தகாலயம்
1930களில் இரண்டு இந்தியாக்கள் இருந்தன. ஒன்று சமஸ்தான இந்தியா. பெடரல் இந்தியா இன்னொன்று இதில் பெடரல் இந்தியா இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது. சமஸ்தான இந்தியா பல மன்னர்களுக்கு கீழ்பிரிந்து உடைந்து இருந்தது. அவற்றின் வரலாற்றை தனித்தனியே எழுதிச் செல்கிறார் சாமிநாதசர்மா. பிறகு ஒன்றாகச் சேர்த்து ஒரே நூலாக்கினார்கள். மைசூர், பரோடா, திருவாங்கூர், காஷ்மீர் புதுக்கோட்டை. பங்கனப்பள்ளி இவைகளின் சமஸ்தான வரலாறு மிக்க சுவராசியமான ஒன்று. முதல்முறை வரலாறாக அதைத் தொகுக்கிறார் சர்மா. குறுநிலமன்னர்கள் நம் மண்ணைக் கூறுபோட்ட கதையை வாசிக்கும்போது இன்றைய வட்டம் மாவட்டம் என கட்சிகளின் வசூல் வேட்டை அதன் தொடர்ச்சி போல யோசிக்க வைக்கிறது.

31 மார்க்ஸியம் என்றால் என்ன?      ஏமிலிபேர்ன்ஸ் / வ.உ.சி நூலகம்
ஏமிலிபேர்ன்ஸ் எழுதி ராமநாதன் மொழிபெயர்த்த பழைய புத்தகம் திரும்பக் கிடைக்கிறது. உலகைப் பற்றிய விஞ்ஞானத் தத்துவமான மார்க்ஸியத்தை வர்க்கப்போராட்டம் சோஷலிஸ்ட் சமூகம், இயற்கை அறிவியல், பொருள்முதல்வாதம் என வரிசையாக விவரிக்கும் எளிய புத்தகம். வாசிக்கவாசிக்க நம்முன் தத்துவம் தானாக அடங்கிப் போகிறது.

32. அக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி       இயற்கைகுமார் / பாரதி புத்தகாலயம்
நிலம், காற்று, நீர், மரம், நெருப்பு எனும் பஞ்சமூலங்களைக் கொண்டு அவை மிகுந்தாலும் குறைந்தாலும் அழிவே என்பதில் தொடங்கி நமது உடலின் அத்தனைவகை நோய் சிகிச்சைக்கும் அக்குபங்சரைப்  பயன்படுத்தக் கற்றுத்தரும் புத்தகம். பத்து அக்குபங்சர் கோட்பாடு 12 பஞ்சபூத உள்ளுறுப்பு பேணுதல் என இயற்கைகுமார் ஒரு புதியமருத்துவராக நம்முன் பலவிந்தை சிகிச்சைமுறைகளை முன் வைக்கிறார்.

33. கொட்டு முழக்கு (நாவல்)  செல்லமுத்து குப்புசாமி / உயிர்மை
செல்லமுத்து குப்புசாமியின் இரவல் காதலிக்குப் பிறகு இப்போது கொட்டு முழக்கு வெளிவந்துள்து. ஏற்கனவே குருத்தோலை வாசித்து இருந்தேன். இந்த நாவலும் அதற்கு சளைத்ததல்ல. மரணவீட்டின் சடங்குகளின் ஊடாக… அடேங்கப்பா என வியக்க வைக்கும்…. எழுத்துப் பிரவாகத்தோடு சாவு எவ்வளவு அர்த்தம் கெட்டதாகி விட்டது என்பதைக் கொட்டி முழக்கியிருக்கிறார்.

34. வல்லிக்கண்ணன்  கழனியூரன் / சாகித்யஅகாதமி
வல்லிக்கண்ணன் நேரிலும் பாராட்டுக் கடிதத்திலும் (எனக்கு 3 எழுதி இருக்கிறார்) ஒரே மாதிரிதான் இருந்தார். அவரை ‘நையாண்டி பாரதி’யாக எனக்கு அதிகம் பிடித்திருந்தது. நாம் அதிகம் அறியாத அவர் வாழ்வின் பகுதிகளை கழனியூரன் – தமிழ் இலக்கியத்திற்காகவே ஒருவர் வாழ முடியும் என வாழ்ந்து காட்டிய – அந்த மாமனிதரை அறிமுகம் செய்கிறார். ரா.பி.சேதுப்பிள்ளையும் வல்லிக்கண்ணனும். ஒரே ஊர்க்காரர்களாம் பத்து வயதில் தந்தையை இழந்த வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் எல்லா இலக்கியங்களை விடவும் காட்டமாக நம்மை பாதிக்கக்கூடியவை.

35. கண்டதைச் சொல்லுகிறேன் (இந்தியா டுடே கட்டுரைகள்)         ஞாநி / விழிகள்  | சென்னை
2003ல் இந்தியா டுடேவில் ஞாநி எழுதிய ஒரு பக்க கட்டுரைகளின் தொகுப்பு. இது வெளிவந்தபோது அதை விழுந்து விழுந்து படித்தவர்களில் ஒருவனான நான், மூத்திர சந்து கட்டுரையும், சாமியார் தொழில் கொழிக்கிறது கட்டுரையும் இருக்கிறதா என்று தேடினேன். உள்ளது. தனது காலத்தின் கடந்து செல்லும் செய்திகளை அச்சமின்றி சாட்டையடியாக விமர்சிக்கும் ஞாநியின் 44 கட்டுரைகளும் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கும் புதையல்கள். அந்த சந்தன வீரப்பனும் காஞ்சி சங்கராச்சாரியாரும் சம அந்தஸ்த்து பெறுவது உட்பட பல விஷயங்கள் ஞாநி பாணி.

36. எப்போதும் இன்புற்றிருக்க     வெ. இறையன்பு / விகடன் பிரசுரம்
என் வாழ்வில் பணியில் சாரமில்லாத போது, சாரமான படைப்புகளில் என் கவனத்தை செலுத்தி என் உள்ளத்தை இனிப்பாக்கினேன்… புதிய ஜன்னல்கள் திறந்தன… கற்றுக்கொள்ள வயது தடையல்ல எனும் இறையன்புவின் 26 பொதுக்கட்டுரைகள் உள்ளன. லெனின் தனது சகோதரர் தூக்கிலிடப்பட்ட அன்று மாலை எழுதிய கணிதத் தேர்விலும் முழுமதிப்பெண் பெற்றதைக் குறிப்பிடும் அந்த வைராக்கியம் பற்றிய கட்டுரையை எத்தனைதடவை வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

37. இரண்டாவது ஞானம் (கதைகள்) ச. சுப்பாராவ் / பாரதி புத்தகாலயம்
எழுத்தாளர் தோழர் சுப்பாராவின் பத்தொன்பது கதைகள் கொண்ட தொகுதி. சின்னச் சின்ன அழகான கதைகள். நம் அன்றாட அரசியல் குடும்ப சலசலப்புகள் முதல் உலக அளவிலான சிக்கல்கள் வரை யாவும் உண்டு. இந்தத் தொகுதியில் உள்ள கடவுளும் பூக்களும், இரண்டாவது ஞானம் போலவே நல்ல கதை. புத்தர் தனது சங்கத்தில் பெண்களுக்கு இடமில்லை என ஸ்தாபித்ததை எதிர்க்கும் கவுதமி மனநிலையில் நின்று நகரும் அழகு அரசியலின் உச்சம். அதே போல பள்ளிக் கல்விக்கு சரஸ்வதி, உயர்கல்வி ஹயக் ரிவர் கையில் என இருதுறையாக கல்வியைப் பகடியாடுவதும் நன்றாகவே இருக்கிறது. மத்தியதர வர்க்கத்தின் சுவாசக் காற்றை முழுமையாய் உள்வாங்கி எஸ். வி.வி. தொடுத்திருக்கும் முன்னுரையை புத்தகத்தைப்  படித்தபின் பின்னுரையாக வாசிக்குமாறு முன்மொழிகிறேன்.

38. தமிழக அரசியல் வரலாறு      ஆர். முத்துக்குமார் / கிழக்கு பதிப்பகம்
தமிழக அரசியல், எனும்பத்திரிகையில் வெளிவந்த அரசியல் வரலாற்றுத் தொடரின் தொகுப்பு… இருபாகங்களாக வந்துள்ளது. முதல் பாகம் ராஜாஜி, முதல் அவசர காலம் வரையிலும் அதன் பின் வரும் பாகம் மன்மோகன் காலம் வரைநீள்கிறது. காவேரி பிரச்சனை, கச்சத்தீவு, கீழ் வெண்மணி என விரிவாகப் பேசும் நூலாசிரியர் இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சாதி மதக் கலவரங்கள் என ஒரு கிரிக்கெட் வர்ணனைபோல சொல்லிச் செல்கிறார். நான் நடுநிலையாளன் தெரியுமில்ல…? என்பதற்கே பலஇடங்களில் முக்கியத்துவம்… இடதுசாரிகள் வெறும் பார்வையாளர்கள் போல சித்தரிக்கப்படுவது துரதிஷ்டமானது என்றாலும் சட்டமன்றத்திலிருந்து மக்கள் மன்றம் வரை செய்திகளை வரிசைப்படுத்தி எழுபதாண்டுக் கதையை சுவராசியமாகவே நகர்த்துகிறார் முத்துக்குமார்.

39. சிகரங்களில் உறைகிறது காலம்    (கவிதை)   கனிமொழி / வ.உ.சி நூலகம்
ஞானக் கூத்தன் முன்னுரையில் சொல்வதுபோல இசைநிகழ்ச்சி முடிந்ததும் கூட எழுந்துபோகாத ஒரு ரசிகன் மாதிரி நாம் அடங்கிப்போவது கனிமொழியின் ஆளுமை. மீடியா ஈர்ப்பு யாவும் கலந்து தாக்குவதால்தான். மீள்பெண்ணியக் கவிதைகளின் சொந்தக்காரர் கனிமொழி. அகிம்சை வேள்வியில்/ வெட்டி/பாயும் குருதியில்/ தோய்த்து உலர்த்தி/ உலகம் சமாதானத்தின் நிறம் சிவப்பு/ என சாட்சி சொன்னது என்று அவர் எழுதும் போது அந்தக்கனிமொழியே நிலைக்கக் கூடாதா என்று நாம் நினைக்கிறோம். சந்ருவின் ஓவியங்கள் அற்புதம்.

40. ஜின்னாவின் டைரி   கீரனூர் ஜாகிர்ராஜா / எதிர் வெளியீடு
தமிழின் விளிம்பு நிலை இசுலாமிய சமூகத்தின் குமுறலை தன் எழுத்தாய் வடிக்கும் ஜாகீரின் இந்நாவல் நம் தூக்கத்தைக் கெடுத்து மனதை சிதைத்து விடுகின்றன. ஏதோ சவுதியில் வேலை… பாரின் பணம் கொட்டுகிறது. என நாம் பார்க்கும் அந்தப் பார்வையின் பின் இந்த இசுலாமிய பெண்கள் படும் வதைகளும் வெளித் தெரியாமல் படுதா மூடும் வலி மிகுந்த ரணங்களும் இந்த எழுத்துக்களில் தெறித்து வாழ்வின் அவலத்தை நமக்குள் உணர்த்துகின்றன. தமிழ் இசுலாமியனின் சகோதரத்துவம் இக்கதை பிரதேசம் முழுதும் மிளிர்கிறது. அதுதான் ஜாகிரின் வெற்றி.

41. கணித புதிர் ஸ்டீபன்நாதன்   இராமலிங்கம் /   பாலகிருஷ்ணன் /  அறிவியல் வெளியீடு
123 விதவிதமான கணிதப் புதிர்களைத் தொகுத்திருக்கிறார்கள். பெரும்பாலானவற்றை மனக்கணக்காகவே போட்டு விடைசொல்லி விடலாம். ஆனால் விடை கிட்டவே இருப்பதால் அதையும் சேர்த்தே படித்துவிடுகிறது திருட்டு மனசு, இப்படி சுவாரசியமாக கணக்குப் பாடப் புத்தகங்கள் இல்லாதது ஏன?

42. மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும்                  டேவிட் ரியாஜெனோவ்                                                       தமிழில்: அபராஜிதன் /  பாரதி புத்தகாலயம்
ரியாஜெனோவ் குறித்து இன்று அதிகம் பேசப்படாதது துரதிஷ்டமானது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் இன்று கிடைக்கும் அனைத்து எழுத்துக்களையும் மீட்டுப் பாதுகாத்து அவற்றைப் பதிப்பித்த மாமனிதர் அவர். உக்ரேனியாவில் பதினைந்து வயதில் இயக்கத்தில் இணைந்து பெரும்போராட்டத்தின் மத்தியில் அவர் நூல்களை மிகப் பொறுமையாக அச்சிடப்பட்ட கதைதான் இது. மார்க்சின் வாழ்க்கை, எழுத்து, அரசியல் என விரியும் பக்கங்கள் லெனின் உருவாக்கிய மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நிறுவனத்தின் பொறுப்பை ரியோ ஜெனோவ் ஏற்றது வரை நீள்கிறது. 1862ல் லண்டனின் தொழில் துறைகள் காட்சியைப் பதிவு செய்யும் இடம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.

43. மௌனியின் கதைகள்       தொகுப்பு: கி.அ. சச்சிதானந்தம் / சாகித்ய அகாதமி
ஒரு காலத்தில் மௌனியின் கதைகளை வாசித்து மூச்சு முட்ட ராத்தூக்கத்தைப் பறிகொடுத்தது உண்டு. இலக்கிய நண்பர்கள் சிலர் அவரை இந்தஅளவு தூக்கிப் பிடிக்கத்தான் வேண்டுமா என விவாதித்ததும் உண்டு. ஒரு அரைவேக்காடு தோசை என வர்ணித்துப் பெரியதிட்டு வாங்கியுமிருக்கிறேன். ஆனால் அவரது வாழ்க்கைபற்றிய சச்சிதானந்தத்தின் பதிவை இப்போதுதான் வாசிக்கிறேன். பெரிய தவறு செய்து விட்டேன். நிறைவேறாத காதல், கொன்றுபோடும் கனவுகள்… எப்போதுமே மரணம்…. பித்து மனிதர்கள் என்பது அவரது வாழ்வின் யதார்த்தம். முதல் மகனும், மூன்றாம் மகனும் திருமணமாகி ஒரே வருடத்தில் தனித்தனி விபத்துகளில் இறந்துபோகிறார்கள். இரண்டாம் மகன் பி.எச்.டி. முடித்தும் மனப்பிறழ்வுநோய் பெற்று நடுஇரவில் ஊரில் திரிகிறார். கணிதப் பட்டம், சங்கீத ஞானம், இலக்கிய ஈடுபாடு இல்லாமல் போயிருந்தால் தாங்கமுடியாத துயரம் அவரைக் கொன்றிருக்கும். தவறு, மனக்கோட்டை போன்ற கதைகளை இப்போது வாசிக்கும்போது வலியை உணரமுடிகிறது. வாசியுங்கள். வலிக்கும் அல்லது வலிக்கும் போது வாசியுங்கள்… வலிகுறையும்.

44. சும்மாவா கிடைத்தது சுதந்திரம்        கள்ளிப்பட்டி சு. குப்புசாமி / சென்னைபுக்ஸ்
நல்லாசிரியர் விருது பெற்ற நூலாசிரியர்
சு. குப்புசாமி 55 இந்திய சுதந்திரப் போராட்ட தியாகச் சுடர்களை இந்த நூலில் அறிமுகம் செய்திருக்கிறார். ராபர்ட் கிளைவும் வாட்சனும் சென்னையிலிருந்து கொல்கத்தா கோட்டையைக் கைப்பற்ற 2000 இந்தியர்களைத் தங்கள் படையில் இணைத்து உத்தௌலா நவாப்பைத் தீர்த்துக்கட்டி கிழக்கிந்திய கும்பேனி ஆட்சியை நிலைநாட்டிய சம்பவத்தோடு தொடங்கும் நூல் மருது சகோதரர்கள் உள்ளடக்கி நம்மை சிலிர்க்க வைக்கிறது.

45. நிழலின் வேர்கள் (கவிதை)      தம்பி / நன்செய் பிரசுரம் / திருத்துறைப்பூண்டி
உன் வயிற்றை / ஒரு வேளை நிரப்பி / உன் கல்லீரலை / களவாடுகிறார்கள் / வாக்குக்குத் தரும்அரிசி/ உனக்கான சாக்கரசி… என இடைத்தேர்தல் பற்றி தம்பியின் கவிதையில் சூடு பறக்கிறது. நிழல்களுக்கே / குடைபிடித்தது போதும்/ இனியாவது தோழா நிஜங்களுக்கு குடைபிடி…. என முழங்கி / சிவகாசி சிறுவர்களுக்காக… இவர்கள் உருவாக்கிய தீக்குச்சிகள் / யார்கொளுத்தினால் போக்கும் / இவர்கள் வாழ்வின் இருளை எனக்கேட்டு கவிதையால் ஒரு வழக்கு மன்றமே நடத்தி புதிய நம்பிக்கை தருகிறார்.

46. மார்க்சிய லெனினிய தத்துவம்                          விக்டர் ஆஃபேன்ஸீவ் /                                                        தமிழில்: ஆர். பெரியசாமி /  பாரதி புத்தகாலயம்
பொருள் முதல்வாதம் கருத்து முதல்வாதம் இவற்றின் வேறுபாட்டில் எரிமலைக் குழம்பாய்ப் பிளிறியதே மார்க்சியம். அதன் அடிப்படைகளை ஒரு ஸ்லைடு ஷோ போல நமக்கு மன-வரைபட மாக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர். அட்டவணைகள், பட்டியல்கள், வரைபடங்கள் என விரியும் இந்த நூல் மார்க்சிய-லெனினிய அரசியல் கூறுகளை எளிதில் புரிந்து கொள்ள உதவும் பாடநூலாகும்.

47. நான்காவது சினிமா      எஸ். ராமகிருஷ்ணன் / உயிர்மை
உலகசினிமா குறித்து உயிர்மை இதழில் நண்பர் எஸ்.ரா. எழுதிய பத்தி இன்று நூல் வடிவம் கண்டிருக்கிறது. 25 வருடங்களாகப் பல்வேறு திரைப்பட விழாக்கள் நிகழ்வுகளில் தான் காணுற்ற உலக சினிமாவைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். மிச்சேல் ஸ்கோர்டர் இயக்கிய மேன் இன் த சேர் படத்தில் தொடங்கிப் பயணிக்கும் நாம் An American in Madras உட்பட உள்ளூர் ஆவணப் படங்கள், சதிலீலாவதி, மீரா எனப் பயணித்து, மலையாளம், பிரெஞ்சு (நரியும் குழந்தையும்) என விரிகிறது. ஒருத்தர் மட்டுமே நடித்த ஆல் இஸ் லாஸ்ட்… பிரமாண்ட கடல் ஒற்றைக் கிழவனின் படகு துளையாகி விடும் போராட்டத்தை மனசித்திரமாக்கும் இடம் இந்தப் புத்தகத்தின் வெற்றித் தருணம்.

48. கோவிந்த் பன்சாரே  பேரா. மாயாபண்டிட் தமிழில்: எஸ்.பி. ராஜேந்திரன்  / பாரதி புத்தகாலயம்
தனியார் மயத்தை எதிர்த்தவர் மதவெறி அரசியலை எதிர்த்து நேரடியாக சவால் விட்டுக் களத்தில் இறங்கிய இடதுசாரிப் போராளி கோவிந்த் பன்சாரே. மகாராஷ் டிராவில் எண்ணற்ற மக்கள் இயக்கங்களில் பங்கேற்று வீட்டு வேலைத் தொழிலாளர்கள், ரிக் ஷா இழுப்போர், விவசாயக் கூலிகள் எனக் கடைநிலை மக்களின் தலைவராக இருந்தவர். பால்தாக்கரே, பஜ்ரங்தள் உள்ளிட்ட கும்பலுக்கு நேரடி சவால் விட்டு இந்த 2015ல் பிப்ரவரி மாதம் இந்துத்துவ வெறியர்களால் சுட்டுக்கொல்லப் பட்டவர். அவரது நினைவுகளைப் போற்றி பேராசிரியை மாயா பண்டிட் எழுதியுள்ள இந்த சிறப்பான பிரசுரம் ஒரு களப் போராளியின் வாழ்வை முன்வைக்கிறது.

49. ஆற்றல் ஏ.கே. பக் ஷி /      தமிழில்: ப. நடராஜன் /  நேஷனல்புக் டிரஸ்ட்
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இரசாயனத்துறைப் பேராசிரியரான ஏ.கே. பக் ஷியின் அழகான அறிவியல் நூல் இது. மரபுசாரா ஆற்றல் ஆதாரங்கள் குறித்து (அதாவது சூரிய ஓளி, நீர்மின், அனல்மின் போன்றவை) அடிப்படை அறிவியலோடு, அனுசக்தி என்பது என்ன அது ஏன் இயற்கை-தூயசக்தி என அழைக்கப்படுகிறது. அதன் ஆபத்து என்பது எது… இணைப்பு உலைகள், தகர்ப்பு உலைகள் என விரிவாக அலசுகிறார். ஆற்றலும் சுற்றுச்சூழலும் மிக அற்புதமான கட்டுரை. எளிய தமிழில் தந்திருக்கும் ப. நடராசன் பிற்சேர்க்கையாக ஒரு தமிழ்-ஆங்கில அகர முதலி இணைத்திருப்பது சிறப்பு.

50. தமிழகத்தில் மாற்றுக்கல்வி (நேர்காணல்கள்)
தொகுப்பு: பி.ஆர். மகாதேவன் / கிழக்கு பதிப்பகம்
மகாதேவனின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.ஒரு பெரிய தொழிற்சாலையாகி மாணவர்களை (அவர்களது மதிப்பெண்களையும்) உற்பத்திசெய்து தள்ளும் நம் கல்விமுறைக்கு மாற்று என்ன… ஒன்பது பேர் கருத்துக்கள் பதிவாகி உள்ளன. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதபடி முரண்பட்டு நிற்கையில் அரசு என்கிற ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் கருவி தோன்றுகிறது. என்பார்லெனின்… எனத்தொடங்கி தோழர் தமிழ்ச்செல்வன் நம் கல்வியின் சுருக்கமான வரலாறை விவரிக்கும் இடம் ஒன்று போதும். அதை அவர் விரிவுபடுத்தி நூலாக்கினால் நமக்குப் புரிதலைத் தரும். இருவகைக் கல்வி உள்ளது. ஆளும் கூட்டம் தருவது ஒன்று… உழைக்கும் மக்கள் தாங்களாகவே கற்பது ஒன்று… எனவிரியும் சிந்தனைகள் பரிசீலனைக்கு உரியவை. வசந்திதேவி, தியாகு, தடாபெரியசாமி எனத் தெறிக்கும் சிந்தனை நடுவே நிவேதிதாவும் அஜித்சர்க்காரும் மருதம் அருணும் தனிமனிதக் கோட்பாட்டாளர்களாய் தனித்துத் (ஒரு திணிப்பு போல) தெரிகிறார்கள் என்பது நூலின் பலவீனம்.

Related posts

Leave a Comment