You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-9 : உரைகளுக்கு நடுவிலிருந்து….

ச.தமிழ்ச்செல்வன்

கடந்த மாதக் கூட்டங்களில் இரண்டு கூட்டங்கள் பாராட்டுக்கூட்டங்களாக அமைந்தன. இரண்டு கூட்டங்களிலும் தலா மூன்று படைப்பாளிகள் பாராட்டப்பட்டனர். இரண்டுமே இரண்டு தமுஎகச கிளைகள் நடத்திய கூட்டங்கள். ஒன்று திருப்பூர் வடக்குக் கிளை நடத்திய கூட்டம்.அதில் மின்சார வேர்கள் உள்ளிட்ட பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய 80 வயது தாண்டிய தோழர் தி.குழந்தைவேலுவும், பாரதி புத்தகாலயத்தின் மொழிபெயர்ப்பாளர் தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமியும் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் தோழர் ஆர்.ரவிக்குமாரும் பாராட்டப்பட்டனர். தோழர் குழந்தைவேலு நீண்ட காலம் தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றியவர்.அந்த வாழ்க்கையிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதத் துவங்கியவர். நைனா கி.ராஜநாராயணனைப் போல வயதான பிறகு இளம் எழுத்தாளராகப் பயணம் துவக்கியவர். பெரிய அங்கீகாரமோ பாராட்டோ, பரவலான பேச்சோ இல்லாவிட்டாலும் (தமுஎகச விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கலை இலக்கியப்பெருமன்ற விருது போன்றவை கிடைத்தாலும்) என் கடன் எழுதிக்கிடப்பதே எனத் தொடர்ந்து எழுதி தானே பதிப்பித்தும் வருபவர்.ஒவ்வொரு மனிதனுக்கும் எழுதுவதற்கு குறைந்த பட்சம் ஒரு நாவல் உண்டு – அது அவனது/அவளது சொந்த வாழ்க்கை என்று ஒரு பழமொழி உண்டு.எங்களுடைய அப்பா திரு.மே.சு.சண்முகம் அவர்களின் எழுத்துக்கள் இங்கே நினைவுக்கு வருகின்றன. அவரும் பணி ஓய்வுக்குப் பிறகே தன்னுடைய சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதத்துவங்கினார். தன் சொந்த வாழ்வில் மை தொட்டு இரு நாவல்களைத் தீட்டியுள்ளார்.தன் நில அளவைத்துறை வாழ்க்கையை மையமிட்டு நிலம் மருகும் நாடோடி எனும் நாவலையும் எங்கள் குல வம்ச வரலாற்றையே ஒரு கதையாக பெரிய வயல் (பாரதி புத்தகாலயம் வெளியீடு) என்கிற நாவலாகவும் எழுதினார். அவருடைய ஐந்து மக்களும் வெவ்வேறு ஊர்களில் வேர்கொண்டு வாழ்வைத்தேடி அலைந்துகொண்டிருக்க, தன் தனிமையை வெல்லும் உபாயமாக அவர் எழுத்தையும் வாசிப்பையும் சிக்கெனப்பற்றிக்கொண்டுள்ளார்.தோழர் குழந்தைவேலுவுக்கும் அப்படியான ஒரு உளத்தேவையும் இருந்திருக்கக்கூடும். இன்னும் இணைய உலகத்துக்குள் இவர்கள் வரவில்லை. வந்திருந்தால் முதுமையின் ஊன்றுகோலாகப் பயன்படும் முகநூல் இவர்களுக்கும் கை கொடுத்திருக்கும்.
நதிகளாலும் சாலைகளாலும் பாலங்களாலும் இணைக்க முடியாத வெவ்வேறு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களை மொழிபெயர்ப்புகள் இணைத்துவிடும் என்பார் வி.எஸ்.காண்டேகர். தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமி மிக முக்கியமான அரசியல், தத்துவ நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய அவரது மொழிபெயர்ப்பான கலையின் அவசியம் (எர்னஸ்ட் பிஷர்) பரவலான கவனிப்பைப் பெற்று வருகிறது என்றாலும் இன்னும் அவர் இலக்கியங்களை மொழிபெயர்த்தால்தான் அவரது பணி முழுமை பெறும் என நானும் தோழர் நிசாரும் குறிப்பிட்டோம். எந்தப்பணியில் இருப்பவராக இருந்தாலும், குறிப்பாக அரசியல் துறையில் பணியாற்றுபவர்கள், இலக்கிய வாசிப்பைத் தம் அன்றாட வாழ்வின் பகுதியாக மாற்றிக் கொள்ளாவிட்டால் இறுக்கமான அறிக்கைகளாகத் தம் முகங்களே மாறிப்போவதைக் காண்பார்கள் என்பது என் வாக்கு. தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமி தப்பி வருவார்.. வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
எதிர்பார்த்ததைவிட நல்ல வெற்றியைத் தந்துள்ள ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இளம் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் அப்படியா சார்  என்பதுபோன்ற ஓர் அப்பாவி முகத்துடன் மிக எளிய மனதுடன் இயல்பாக இருக்கிறார். அதுவே அவருக்குப் படைப்பூக்கம் தரும் சக்தியாக மாறும் என நம்புகிறேன். பால்ய காலத்துப் பச்சை மனமே படைப்பின் ஆதார சுருதி என நம்புகிறவன் நான் – பல படைப்பாளிகளைப்போலவே.
தென் சென்னை மாவட்டத்தில் மூன்று பேருக்குப் பாராட்டு. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் நூலுக்காக கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ், மீசை என்பது வெறும் மயிர் நாவலுக்காக எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, காக்கா முட்டை படத்துக்காக அதன் இயக்குநர் மணிகண்டன் மூவரும் பாராட்டப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு முற்றிலும்  கலையும் இலக்கியமும் குறித்த உரையாடல்களுடன் அமைந்த கூட்டமாக அது அமைந்தது. விரிவாகப் பேசுவதற்கு இங்கு இடமில்லை என்கிற வரிகளில் தப்பி ஓடும் உரைகளால் வழியும் கூட்டங்களாகவே பார்த்துச் சலித்த மனதுக்கு இக்கூட்டம் நிறைவளித்தது. குறிப்பாக மூன்று படைப்பாளிகளின் உரைகளும் நுட்பமும் ஆழமும் மிக்கவையாக ஆற்றொழுக்காக கூட்டத்தினரிடம் சென்று சேர்ந்தது.ஆதி மருத்துவர் என்னும் நூல் வழியாக முனைவர் கோ.ரகுபதி சவரத்தொழிலாளிகளான நாவிதர்களின் வாழ்க்கை பற்றி விரிவாக ஆய்வு செய்து நம்மை அதிரச் செய்திருந்தார். எனில் அவ்வாழ்விலிருந்து நேரடியாக வரும் கத்தரிப்புகளாக – சின்னச் சின்னக் கவிதை மயிருகள் மூலம் நம் மனங்களை முடிவெட்டித் திருத்தமாக்கிவிட்டார் கலைவாணன். நாவித வாழ்க்கை குறித்த அவரது சின்னச் சின்னக் குறிப்புகள் அன்று எங்கள் மனங்களைக் கரைத்தன. செத்துப்போனவனின் தொடையிடுக்கு மயிரை வழித்துத் தம்  இடக்கையில் தடவும் நாவிதக் கணங்களை அவர் விவரித்தபோது என்னையறியாமல் என் கன்னங்களில் நீர் வழிந்தது.தொழிலாளிகள் என்கிற வார்த்தை எங்கள் கரிசல் கிராமங்களில் நாவிதர்களையும் வண்ணார் சமூகத்தினரையும்  குறிக்கப்பிறந்த சொற்களாகும்.கிராமத்து வாழ்வின் சுக துக்கங்கள் அனைத்துடனும் பிணைந்தவர்களாக வண்ணாரும் நாவிதரும் இருக்கின்றனர். ஆனாலும் மரியாதை இல்லாத ஒரு வாழ்க்கை.
கண்ணீருடனும் நியாயமான கோபத்துடனும்  பேசும் கவிதைகள் கலைவாணனுடையவை என்றால் ‘போதும் இந்தக் கண்ணீர்’ என அதுவரை கொட்டிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இந்த உலகத்தை நோக்கி ஆவேசத்தோடும் கோபம் கலந்த பகடியாகவும் பேசும் எழுத்து ஆதவன் தீட்சண்யாவுடையது. மீசை என்பது வெறும் மயிர் என்கிற நாவலின் சுருக்கமும் அதை எழுதிய எழுத்தாளர் நந்தஜோதி பீம்தாஸ் அவர்களின் இரு நேர்காணல்களும் அடங்கியதாக இந்நூல் வந்திருக்கிரது. சுந்தரராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளைப்போல நந்தஜோதி பீம்தாஸ் ஒரு கற்பனைப்படைப்பு என்பதை வாசகர்கள் அறியாவண்ணம் ஒரு புதிய உத்தியில் நாவல் எழுதப்பட்டுள்ளது.நந்தன் + பீமராவ் அம்பேத்கர்+ஜோதிபாய் பூலே+அயோத்திதாசர் = நந்தஜோதி பீம்தாஸ் என்கிற கட்டமைப்பை அக்கூட்டத்தில் போட்டுடைத்தார் ஆதவன் தீட்சண்யா. நாவலின் உருவம் உத்தி குறித்துப் பேசப்படும் அளவுக்கு நாவலின் உள்ளடக்கமான சாதியத்திமிர் குறித்து பெரிய பேச்சுக்கள் ஏதும் எழவில்லை என ஆதவன் வருத்தப்பட்டார். அப்படிக்கூட்டமும் கூட இதுவரை நான்கைந்தே நடந்துள்ளன என்றார்.
அக்கூட்டத்தில் தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் குறிப்பிட்ட ஒரு சம்பவம் மனதைத்தொடுவதாக இருந்தது, நீண்ட காலம் மராட்டிய மாநிலத்தில் வாழ்ந்து விட்டு பின்னர் மதுரை மாவட்டத்தில் உள்ள  தன் சொந்த ஊர் திரும்பிய நாவிதர் ஒருவரின் கதை அது. வந்தவர் தன்போக்கில் பெரிய மீசை வைத்திருக்கிறார். ஆனால் மதுரை மாவட்டத்தின் சாதியப்பண்பாடு ஊர்க்கட்டுப்பாடு என்கிற பேரில் இச்சாதிகள் மீசை வைக்க அனுமதிப்பதில்லை. ஆகவே ஊர்கூடி அவருடைய மீசையை வழித்துள்ளனர். இதை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் இக்கொடுமைக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர். நீண்டகாலம் நடந்த அவ்வழக்கில் கடைசியாக சாட்சி சொல்ல வந்த அந்த நாவிதர் என் மீசையை நானேதான் வழித்துக்கொண்டேன்.யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று சாட்சி சொல்லிவிட்டார். வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.வழக்கை முன்னின்று நடத்திய தோழர்கள் ஏ.லாசர் (இன்றைய பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) சு.வெங்கடேசன் போன்றோர் வெறுத்துப்போய்விட்டனர். அப்புறம் சில நாள் கழித்து விசாரித்தால், ஊர் நாட்டாண்மைகள் அந்த நாவிதரை அழைத்து வழக்கில் நீ ஊர் மானத்தைக் காப்பாற்றினால், நீ மீசை வைத்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்கிறோம் என்று ஒரு டீலிங் போட்டது தெரிய வந்துள்ளது. வழக்கு மீசைக்காகத்தானே. வழக்கு தோற்றதைப்பற்றிக் கவலையில்லை. உங்களுக்கு மீசை கிடைத்ததே போதும் என மார்க்சிஸ்ட் தோழர்கள் அவருக்குக் கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனராம்.இது எல்லாம் ஏதோ பழைய விசயம் அல்ல. இன்றும் நடக்கும் கொடுமைகள் என்பது நம் முகத்தில் அறைகிறது.
பாயும் புதிய ஒளிவெள்ளம் எப்படி இருக்கிறது என்கிற கேள்வியுடன் சிரித்தபடி காக்கா முட்டை மணிகண்டனை வரவேற்றேன். என்ன ஒரு அடக்கமான மனதுடன் இருக்கிறார் இந்த இளைஞர் என்கிற வியப்பு அன்று எல்லோருக்கும் ஏற்பட்டது. தயங்கித் தயங்கி வெளிவந்த அவரது வார்த்தைகள் எங்கள் மனங்களோடு நேரடியாகப்பேசின. எழுத்தாளர்களை உயரத்தில் வைத்துப் பார்க்கும் அவரது மனம் பாராட்டுக்குரியது. கலைவாணனின் கவிதைகளைப் போல இவ்வளவு வெளிப்படையாகவும் நேரடியாகவும் என்னால் சினிமாவில் பேச முடியாதே என்கிற கவலைதான் இக்கவிதைகளை வாசித்தபோது எனக்கு ஏற்பட்டது என்று குறிப்பிட்டார். யாரென்றே தெரியாத என்னையும் என் குறும்படத்தையும் ஊர் ஊராக அறிமுகப்படுத்திய தமுஎகசவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார். போலீஸ்காரரான தன்னுடைய அப்பாவின் சேட்டைகளால் அடிக்கடி ஊர் மாற்றலாகிச் செல்லும் இளம்பருவத்து வாழ்க்கை கற்றுத்தந்த பாடங்களைப்பற்றி அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. அதை பாரதி என்கிற இளைஞன், திருநெல்வேலியில்  முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் நடத்திய ஒரு கையெழுத்து ஏட்டில் எழுதியிருந்தான். மிகச்சரியான வரிகள் நினைவில் இல்லை. இப்படிப்போகும் அக்கவிதை,
வெவ்வேறு
வாடகை வீடுகளில்
பிறந்த
அக்கா, நான், தங்கை, தம்பி
ஒவ்வொருவரும் வளர்ந்து
பெரியவர்களாகி
வேறு வேறு ஊர்களில்
வேறு வேறு வாடகை வீடுகளில்   அவரவர் குழந்தைகளுடன்..
(தொடரும்)

Related posts

Leave a Comment