You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-5: என்னுள் வேர்விட்ட வாசிப்புப் பழக்கம்

பேரா. மோகனா

“சலங்கை கட்டிய கால்களைப் போல,
அரிதாரம் பூசிய கலைஞரைப்போல,
வாசிப்பின் நெடியேறிவர்களால்..
புத்தங்களை ஒரு போதும் கைவிட முடியாது ..
புத்தகம்தான் உலகின் மிகப்
பெரிய ரசவாதி..”   அ.முத்துக்கிருஷ்ணன்
“Social progress  can be measured by the social position of the female sex”..     Karl Marx
“ஒரு நாட்டின் சமூக முன்னேற்றம் என்பது, அந்நாட்டின் பெண்களின் நிலையைப் பொறுத்தே அமைந்துள்ளது.”                  – கார்ல் மார்க்ஸ்
“கல்விதான் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான ஒரே  ஆயுதம்”                – பாவ்லோ பிரையர்.
போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங்களை வாசிக்கத்தேவைப்படுகிறது.                        எல்பர்ட்கிரிக்ஸ்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப்பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்.    மார்டின் லூதர்கிங்
வாசிப்பு, கல்வி என்று நினைத்தாலே..மேலே குறிப்பிட்ட வாசகங்கள் கூடவே நினைவுக்கு ஓடி வந்துவிடுகின்றன. புத்தகம் இல்லாத கல்வியை இன்று நினைத்துப் பார்க்கவும் முடியாது.
இது  இ.யுகம் என்றாலும் கூட . புத்தக வாசிப்புதான் மாற்றத்தின் திறவுகோல் என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
புத்தகமும் வாசிப்பும் தான் ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும், சிந்தனையை சீர்தூக்கி, சமூக மாற்றங்களைக், கொண்டு வரும், நெஞ்சுரத்தை ஏற்படுத்தி, நியாயத்துக்காகப் போராடும் வல்லமை தரும் அச்சாணியான , அசைக்கமுடியாத , அற்புதமான ஆயுதங்கள். ஒருவரது வளர்ப்பில், போதனையில், பேச்சில் செய்ய முடியா சாதனையை ஒரு புத்தகம் நடத்திக் காட்டிவிடும்.
இவற்றை நினைக்கும்போது, என் மனதுள் எட்டிப்பார்க்கும் நிகழ்வுகள் மூன்றும், சில புத்தகங்களும்தான். நிகழ்வுகள்; 1 மோகனாவான என்னுள் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு போன்ற சாதியம் தொடர்பான , சமூகம் பற்றிய வரலாற்று மாற்றங்கள்,2, சமீபத்தில்  ஒரு வாரத்துக்கு முன் நிகழ்ந்த நேரிடை நிகழ்வு.3, கடந்த காலத்தில் புத்தகங்கள் குழந்தைகளிடையே  செய்த அதிரடி மாற்றங்கள் தான்.போனவாரம்,2015, ஜூன் 13ல், த.மு.எ.க.ச. வின் மாநிலத் தலைவர் தோழர் ச. தமிழ்ச் செல்வன் பழநிக்கு ஒரு புத்தக வெளியீட்டுக்காக வந்தார். அப்போது அவர் என்  இல்லம் வந்தபோது,ஒரு பத்து மாணவக் குழந்தைகளுடன் உரையாடல் நிகழ்த்தப்பட்டது. பல முனைகளில், பல கோணங்களில், சாதியம், கடவுள் தோற்றம், வழிபாடுகள் என பல துறைகளில்.பேசினார்.. அதில் முக்கியமாக மனித இன  தோற்றம் பற்றியும், சாதிகள் பற்றிப் பேசும்போது, மனிதக் குரங்கிலிருந்து உருவான மனிதனில் எந்தக் குரங்கு முகமதியக்  குரங்கு, எந்தக் குரங்கு நாயக்கர் குரங்கு, எந்தக் குரங்கு தலித் குரங்கு என்றார். அப்போது அங்கு வந்த மாணவிகளில் சிலர் வினாவும் தொடுத்தனர்.அடுத்து என்னிடமிருந்து, தமிழ்ச்செல்வனின் “சாமிகளின் பிறப்பும் இறப்பும் ” புத்தகம் வாங்கிச் சென்று படித்துவிட்டு, அடுத்தநாளே.. சாமிகள் இருப்பது தொடர்பாய் சந்தேகம் வந்து தேடலில் இருப்பதாகவும், இல்லை என்றே தோன்றுவதாகவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் மாற்றம் நண்பர்களே. சிந்தனை ரீதியான, நிதர்சனமாய் மூளையை உரசிச் செய்யும் சமூக மாற்றம்.வீட்டில் காலம் காலமாய் போற்றிப் பாதுகாத்து வந்த பாரம்பரிய உணர்வுகள், கட்டிக் காத்த சடங்குகள், அறிவின் கருத்து  மோதலில், அதன் விடியலில்  காணமல் போவதின் சாகசம்  அவர் வாசித்த புத்தகத்தின் கருத்தாழமே..
என்னுள் மீண்டும் உத்வேகப்படுத்தும் உசுப்பேற்றும்  புத்தகங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்தவையான தீண்டாதான், (முல்க்ராஜ் ஆனந் மொழியாக்கம்:கே.கணேஷ்), பாகிஸ்தானுக்குப் போகும் ரயில்(குஷ்வந்த் சிங்), மௌனத்தின் அலறல், அவமானம்(சாதத் ஹசன் மண்ட்டோ) மற்றும் மாதொரு பாகன் (பெருமாள் முருகன்). இவற்றில் தீண்டாதான், பாகிஸ்தானுக்குப் போகும் ரயில், அவமானம் மற்றும் மாதொரு பாகன் , இவற்றை  இரு முறை படித்துவிட்டேன். சமூகத்தின் பல்வேறு கோணங்களை, சீரழிவுகளை, மனப் போராட்டங்களை  சித்தரிக்கும் அற்புதமான புத்தகங்கள் இவை. புதினம் என்று குறிப்பிட்டு கற்பனை என்று சொல்லி ஒதுக்க மனம் வரவில்லை. ஏனெனில் இந்தப் புத்தகங்களை நான் மட்டும் படிக்கவில்லை,அவற்றில் தீண்டாதான் மற்றும் அவமானம் புத்தகங்களை நான் வாங்கியவுடன், எனக்கு முன்பே படித்து முடித்தார். என்னை விட 53 ஆண்டுகள் சின்னவரான ஒரு குழந்தை.பெயர்: முனீர் அகமது .. 15 வயதை எப்படிக் குறிப்பிட ..குழந்தை என்று தானே..அதனைப் படித்ததாலோ என்னவோ எனக்குத் தெரியாது..ஆனால் அவரின் அப்பா சொன்னார்.” நான் மட்டுமல்ல, என் மகனும் தொழப் போவதில்லை, பள்ளி வாசல் போவதில்லை.இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம். என் வீட்டுக்காரி உங்களோடு  சண்டை போடப் போகிறாள்” என்று சொன்னார். இதில் நான் ஒரு நாளும் அவரிடம் சாமி பற்றி பேசியதே இல்லை. அவரின் சமூக மாற்றங்களின் காரணிகள் என்னிடம் அவர் வாங்கிப் படித்த புத்தகங்களே.
ஒருவரின் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சமூகம் மற்றும் புத்தகத்தின் தாக்கத்தால் ஏற்படும் வாழ்நிலை மற்றும் சிந்தனை மாற்றங்கள் தான் அதிகம். அவையே ஒருவர் எப்படி இருக்கப்போகிறார் என்பதை நிர்ணயம் செய்கின்றன. தீண்டாதான் உண்மைக் கதையில் வரும் தோட்டியாக சித்தரிக்கிக்கப்படும் “பாக்கா”வின்  உள்ளத்து உணர்வுகள், மன விகாரங்கள், ஆசாபாசங்கள், அவரின் குடும்பம், தங்கையின் அழகு, பிரச்சினைகள் போன்றவை படிப்பவரின் மனதை உலுக்கி எடுத்துவிடும் தன்மையவை.அவரும் மனிதன் தான்.என்ற உணர்வை உண்டுபண்ணும்.வாசிப்பவர் மனதை ஆளுமை செய்யும் ஆளுமை அதன் நாயகன்  “பாக்கா” தான் மேலும் நம் நாட்டில் சுமாராக பத்து கோடி மக்கள் தீண்டாதார் என ஒதுக்கத்தில் கிடக்கிறார்கள்.இன்றைக்கு சுதந்திர இந்தியா என பீற்றிக் கொண்டாலும், சட்ட ரீதியாக தீண்டாமை ஒரு பாவச்செயல் ,குற்றம் என பாட புத்தகங்களில் போடப்பட்டிருந்தாலும் நிஜத்தில் நடப்பது வேறுதானே..அன்றிலிருந்து இன்று வரை.. இவைகளை எல்லாம் எனது சிறார் பருவமும், பள்ளிப் பருவமும், புத்தக வாசிப்பும் நிதர்சனப்படுத்தின.
எனது  துவக்கப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளியின் ஆறாண்டுக் காலம் என்பது,,என்னின், ஒரு பெண்ணின் வாழ்வியல்  துவக்கத்தின் முக்கியமான அத்தியாயங்கள். ஏராளமான நல்லது கெட்டதுகளை சந்தித்த காலம். என்னை நானே உருவாக்கிய கால கட்டமும் கூட. எனக்கு வழிகாட்டியுமாய் இருந்து ,திறமைகளை வளர்த்து, என்னைசெதுக்காமல்   செதுக்கிய சிற்பியும்   என்  பள்ளி ஆசிரியர்கள்தான். நகரத்துப் பள்ளி என்பதால் பொதுவாக தீண்டாமை அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனாலும் கூட, நான்  ஆறாம்ப்பு படிக்கும்போது, எனது வகுப்பு  ஆசிரியர் திருமிகு அம்புரோஸ் அவர்களுக்கு  பெண் குழந்தை பிறந்திருந்தது.அவர் விடுப்பில் இருந்தார். என் வகுப்பிலிருந்து யாரும் அவரைப் பார்க்கச் செல்லவில்லை. நான் மட்டும் அந்த குழந்தைக்கு, எனக்கு பள்ளிக்குப் போக கொடுக்கும் காசை சேமித்து, அதில்  ஒரு புது சட்டை வாங்கிக்கொண்டேன் .மாலை 4.45 மணிக்கு,   பள்ளிக்கூடம் விட்டதும், நேரே மாயூரம் ரயிலடி அருகில் உள்ள கிறித்துவ காலனிக்கு   நானே வழி கண்டறிந்து அவரின் இல்லம்  சென்றேன் .அது தனிப்பட்ட தலித்துகள் வசிக்கும் பகுதி என அங்கு சென்றபோது அறிந்தேன். பின்னர் , சட்டையை டீச்சரிடம் தந்தேன். வீட்டில் அம்புரோஸ் டீச்சரும்  அவரது இணையரும் இருந்தனர். . . டீச்சர், என்னைப் பார்த்துவிட்டு, சட்டையையும் பார்த்து  ரொம்பவே  சந்தோஷப்பட்டார். எதற்கு நீ புதுச்சட்டை வாங்கினாய்..ஏது காசு என்றெல்லாம் கேட்டார். நான் சட்டை கொடுத்துவிட்டு புறப்பட்டபோது டீயும் தந்தார். ஆனால் ஒரு வாரக் குழந்தை,ஒல்லியாக  கருப்பாக இருந்தது. வேறு எந்த மாணவியும் அவரின் இல்லம் செல்லவில்லை. நான் யாரிடமும் கேட்கவும் இல்லை.
உயர்நிலைப் பள்ளியில், முதலாண்டுதான் கொஞ்சம் சிரமம். அடுத்த 4 ஆண்டுகள் ரெக்கை கட்டி பறந்தன.பள்ளி,பள்ளியின் சுற்றுப்புறம் எனப் பறந்தேன். பள்ளியில் மதிய இடை வேளையில் , யாரும் இன்றி தனியாகவே மதிய பள்ளி துவங்கும் வரை பள்ளியைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சுற்றி வருவேன். அப்பவே சரியான ஊர் சுற்றிதான். மாலையில் பள்ளிவிட்டதும் ரயிலடி கடைத்தெருவில் உள்ள ஷாப் கடைகளை சும்மா வேடிக்கைப் பார்ப்பதிலேயே கொள்ளை குஷி.  நண்பர்களுடன் சென்று நோட்டுகள், பென்சில், வாங்குவது பேரம் பேசுவது சும்மா செம ஜாலிதான். பள்ளியில் ஆசிரியர்களிடம் எனது பட்டப் பெயர் “கருப்பி”தான். எங்க டிராயிங் மாஸ்டர் சுந்தரராசும், தமிழாசிரியர் திருமிகு குஞ்சிதபாதமும்,  உயர்கல்வியில்,என் வாழ்வில் மறக்கமுடியா துவக்க ஆசிரியர்கள். ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்க சொல்லித்தந்த வகுப்பாசிரியர். சுந்தரம்..தமிழைத் தவறின்றி இலக்கணப் பிழையின்றி எழுதவும்,உச்சரிக்கவும் அடித்தளம் போட்டவர் ஐயா குஞ்சிதபாதம் சார் அவர்களே. இன்று அவரை நினைத்தாலும் அவரின் பளீரென்ற வெள்ளைக் கதராடை, வேட்டி ஜிப்பாவில்  கண்களை ஜொலிக்க வைக்கிறது.கண் முன்னே பளீரிடுகிறது.. அவர் சொன்னபடி 7 ம் வகுப்பில், துவங்கிய குறிப்பு எடுத்தல்.பழக்கம். இன்று வரை எங்கு சென்றாலும் தொடருகிறது. அவரே எனக்கு  பள்ளியில் படிப்பு முடியும் வரை எனது தமிழ் ஆசானாக இருந்தது எனக்குப் பெரும்பேறுதான்.
தமிழ் சார் தான் வாரம் ஒருமுறை நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்துப் படிப்பதின் கிரியா ஊக்கி. மாணவர்கள் படிப்பதற்கான ஆழமான சத்துமிக்க உரம் போட்ட ஜீவன் அது. புத்தகம் படிக்கும் ஆர்வத்துக்கு அதிகமாய் தகவல்களும் ஆதரவும்  தந்ததுடன்,என்ன புத்தகம் எடுப்பது, எப்படி புத்தகங்கள் தேர்ந்தெடுப்பது  என்றும் வகை வகையாய் சொல்லிக் கொடுப்பார். அது மட்டுமா? ஏய்  கருப்பி, இந்த வாரம் வெள்ளிக் கிழமை தமிழ் மன்றத்திலே நீ பேசணும் என்பார். மோகனாவை மேடை நோக்கி, நகர்த்தி, தூக்கிவிட்ட அற்புத ஆசானும் அவரேதான். அதற்கான தயாரிப்புகளை நான் கொண்டுபோய்த் தரும்போது திருத்தித் தந்து உதவுவார்.இன்னும் இன்னும் ஏராளமாய் தமிழ் சார் பற்றி உண்டே.. நான் கல்லூரி முடியும் வரையிலும்  தமிழ், ஆங்கிலம் எதற்கும் நோட்ஸ் வாங்காமல் படித்தேன், தேர்வு எழுதினேன்  என்றால், அதன் அனைத்துப் பெருமைகளும் எங்களின் தமிழ் சார் குஞ்சிதபாதம் ஐயா அவர்களையே சாரும். அதற்கான அடியுரம் போட்ட ஆசான் அவர். அவரின் வகுப்பில், அவர் பாடம்  நடத்தும்போது,  நுட்பமாய் கவனிப்பேன்..அவரின் வகுப்பில் அப்படியே லயித்துப் போவேன்..அவர் நடத்தும் செய்யுள்களை, அவற்றின் பதவுரை , அவற்றைத் தொகுத்து பொழிப்புரையும் எழுதி விடுவேன். அதனை சார் மதியம்  சாப்பிட நண்பர்களுடன் அமர்ந்திருக்கும்போது  கொண்டு போய், அவர்களின் அறைக்கு வெளியே தனியாளாய் நின்று கொண்டிருப்பேன். சாரின் நண்பர்கள், போப்பா, கருப்பி  வந்துட்டா, போய்  அவ எழுதினதை திருத்திக் கொடுத்துட்டு வா..இல்லைன்னா விடமாட்டா. இங்கேயே நிப்பா..என்று சொல்லி சாரை அனுப்பி வைப்பார்கள். தமிழ் சார் வந்து எழுதியதை திருத்தி கொடுப்பார். அதனையே பரீட்சையிலும் எழுதுவேன். இதுவே எப்போதும் எனக்குப் பழக்கமாயிற்று.. கல்லூரி வந்த பின்னரும் கூட. வகுப்பில் பிறழாமல் கவனிப்பது என்பது பின்னர் S .S.L .C   படிக்கும்போது உதவியது என்பது பின்னர் வரும்.
நன்றாகப் படிப்பதாலும், சின்னப் பிள்ளையாக இருப்பதாலும் எல்லோருக்கும் மோகனாவை அன்றைக்குப்  பிடிக்கும். ஆனால் ரொம்பப் பேசவே மாட்டேன் அப்போது. ஆனாலும்  கூட 7 ம் வகுப்பிலிரூந்து நண்பர்களுடன் ஞாயிறு அன்று (பெண்ணாக இருந்தும் கூட)  படம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்பாவின் அனுமதியுடன்தான். மாலை 6 மணிக்குள் சினிமா கொட்டகையிலிருந்து விட்டுக்கு ஓடி வந்துவிட வேண்டும்.  ஏராளமாய் ஏராளமாய்  படங்கள்.. சின்ன வயசிலிருந்தே  ஊரில் இருக்கும் சொந்தக்காரர்கள் நண்பர்களுடன்  சேர்ந்து படத்துக்கு அப்பா அனுப்புவார்கள்.பார்த்த படங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மனோகரா, வஞ்சிக்கொட்டை வாலிபன், மணாளனே மங்கையின் பாக்கியம்,  தூக்கு தூக்கி, அந்த நாள், ரத்தக் கண்ணீர், கணவனே கண் கண்ட தெய்வம்.. வீரபாண்டிய கட்டபொம்மன், பதிபக்தி,மாயா பஜார். இன்னும் இன்னும்.
துரைசாமி அவர்கள் எழுதிய கருங்குயில்  குன்றத்து கொலை என்ற புத்தகத்தின் கதை, அன்று ” மரகதம்” என்ற பெயரில் சினிமாவாக வெளிவந்தது. அன்று அதில் சிவாஜிகணேசன் மற்றும் பத்மினி நடித்திருந்தனர்.    அதன் போஸ்டரை.. அழகான நடிகை பத்மினியைப் பார்த்து ரசித்து கொண்டே நடந்ததும் நினைவில் என்றும் நிற்கிறது.. படு த்ரில்லிங் படம். ஆனால், அந்தப் புத்தகத்தை  இப்போதுதான் 8 மாதத்துக்கு முன்னர்தான் படித்தேன். புத்தகம் இருபதாம் நூற்றாண்டின்  துவக்கம், இது 1926ல் எழுதப்பட்டது. ஆனாலும் , இன்றைக்கும் கூட வாசகன் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவு விறுவிறுப்புக் குறையாமல் கொண்டு செல்லும் பாணி..என்றைக்கும் உரித்தான  அற்புதமான புதினம்.ஓர் மர்ம நாவல் அது. இதில் இலங்கையின் வர்ணனைகளும்,இயல்பும், ராஜ கம்பீரமும் அழகாக  விவரிக்கப்பட்டுள்ளதன்மையும், வாசகனை சலிப்பின்றி ஈர்த்து உள்ளே  இழுத்துச் சென்று கதைக்குள் ஆழ்த்துகிறது.புனைகதைகளில் தமிழ் மணம், மாணவனாய்  ஏறி வந்த பாதையைக் காட்டும் அற்புதமான ஆவணம் கருங்குயில் குன்றத்துக் கொலை.
படங்களும், புத்தகங்களும் இன்னும் இன்னும் ஆழத்தில் கிடக்கின்றன. எடுத்துப் பார்ப்போம்..விரிந்து, விரித்து,.ஆழ்ந்து..இறங்கி..ஈடுபட்டு…
இவைகளும் வாசிப்பும் அனுபவமும்தான். எனவே
“பாடப்புத்தகங்கள் மூலமே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பற்றுப் போய்விடும்.பாடபுத்தகங்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் , அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது ” என்றும் , மேலும் ஒரு நல்ல கல்வியென்பது ஒரு குழந்தை அல்லது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மா உட்பட அனைத்து சமூக  தளங்களிலும் அவனிடத்தில் உறைந்துள்ள ஆகச் சிறந்த பண்புகளை வெளிக்கொணர வேண்டும் என்றும், மகாத்மா கருதினார்.
(தொடரும்)

Related posts

Leave a Comment