You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடகநிலம் – 14: பார்வையாளர்களின் பண்பாடும் பண்பாட்டுப் பார்வையாளர்களும்…

ச. முருகபூபதி

உலக நாடக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட கூட்டம் கூட்டமான பார்வையாளர்களின் மனஒப்புதலும் அவர்களது தீராத பண்பாட்டு இருப்புமே நாடகங்களை உன்னதமான வெளிக்கு இட்டுச் சென்றுள்ளது தெரியவருகிறது. குறிப்பாக தமிழ்நாடக வரலாற்றினை திரும்பிப் பார்க்கும்போது அன்று சங்கரதாஸ் சுவாமிகள்  துவங்கி வைத்த பாய்ஸ் கம்பெனியிலிருந்து இன்று வரை நாடகப்பார்வையாளர்களின் பங்களிப்பைப் பற்றி நாம் பேசத்தவறிவிட்டோம். பார்வையாளர்களின் அனுபவங்களின் நினைவுநிலத்திலிருந்து பார்க்கும்போது எனக்கு பண்பாட்டுப்பூர்வமான பார்வையாளர்கள், பார்வையாளர்களின் பண்பாடு   (audience culture, cultural audience) என்ற இரு கருத்தாக்கங்கள் நமக்கு கிடைக்கிறது.இவையிரண்டும் குறித்து நாம் கதைக்கும்போதே பார்வையாளர்கள்   குறித்த கவனம் நிலைபெறக்கூடும். அன்று பாய்ஸ் கம்பெனிகள் நாடகம் நிகழ்த்துவதற்கு ஒரு ஊருக்குள் முகாமிட்டால் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் அங்கேயே நாடகம் போட்டு மறுஊருக்குப் பயணமாவார்கள். அந்த ஊரைவிட்டுக் கிளம்பும்போது நாடகத்தால் ஈர்க்கப்பட்ட பல பார்வையாளர்களும் அந்த ஊரிலிருந்து காணாமல்போய் நாடகக்கம்பெனியோடு சேர்ந்துகொள்வார்கள். இச்சூழல் தமிழகமெங்கும் தன்னியல்பாகவே நடந்தேறியது. இப்படி வீட்டைவிட்டு ஓடிய பார்வையாளர்களின் மன வேகத்திலிருந்தே தமிழ் நாடகக்கலை காப்பற்றப்பட்டிருக்கும். எளிய விளிம்பு நிலை எல்லை திறந்து வந்தவர்களே, அன்று அதிகம் பேர்கள்.  அதனாலேயே அன்று நூற்றுக்கு மேற்பட்ட நாடகக் கம்பெனிகள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. அன்று கும்பகோணம் பக்கம் மாயவரத்தில் பாலாமணி என்னும் நடிகையின் நாடகக்குழு பிரபலமாக செயல்பட்டு வந்தது. 70 நடிகைகளை முழுக்கக் கொண்ட முதல் பெண்கள் நாடகக் குழு அது. முதன்முதல் நாடகத்தில் பெட்ரோமாக்ஸ் லைட் பயன்படுத்திய பணக்கார நாடகக் கம்பெனி என்ற பெயர் அதற்கிருந்தது. அதற்குமுன்பு வரை நாடகங்களில் வெளிச்சத்துக்கு தீவட்டிகளே பயன்படுத்தப்பட்டன. இரவு நடக்கும் அவர்களின் நாடகத்தைக்காண தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வழியாக மாயவரத்திற்கு மாலை ஒரு ரயில் வரும். அந்த ரயில் முழுக்க பாலாமணி அவர்களின் நாடகத்தினைப் பார்க்க வரும் பார்வையாளர்களே இருப்பர். அன்று அந்த ரயிலுக்கு பாலாமணி எக்ஸ்பிரஸ் எனும் அடைப்பெயர் மக்களால் சூட்டப்பட்டிருந்தது. நூறு வருடத்திற்கு முன்பு வரை மக்களால் புகழப்பட்ட அந்த நாடகக்கம்பெனி குறித்த வரலாறு எதுவும் நமக்கு விரிவாகக் கிடைக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாது நாடக்கலையினைத் துணையாகக் கொண்ட பாலாமணி போல பலரும் அவர் குழுவில் இருந்தனர். பாலாமணியின் அபிநய நடிப்பால் ஈர்க்கப்பட்ட இந்தியாவின் சிறந்த ஓவியர் ராஜாரவிவர்மா கும்பகோணம் வந்து பாலாமணியை ஓவியம் (Portrait) வரைந்ததாகவும் அந்த ஓவியம் திருவனந்தபுரத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அன்று பாலாமணியை வண்டிகட்டிக்கொண்டு நாடகம் இல்லாத வேளைகளில் கூட பார்வையாளர்கள் பார்க்க வருவார்களாம். அன்றைய விவசாயிகள் தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் பிரியத்தோடு கொண்டு வந்து சேர்ப்பது வழக்கமாக இருந்தது. அப்பார்வையாளர்களுக்குள் பண்பாட்டின் ரேகைகள் அலைவுற்றதாலேயே இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கும்.
இன்றும் படுகர் இனத்தின் ஹெத்தேயம்மா கோயில் சடங்குகளில் அவ்வினத்தினர் அனைவரும் அவர்களது வட்டநடனத்தில் பார்வையாளர்களாக இருப்பதும் அவர்களே அதில் பங்கேற்பதும் கூடுவிட்டுக் கூடுபாயும் விந்தையினைப் பார்க்கும் போது நாம் உணரலாம். அவர்களது இறப்புச்சடங்கில் இறந்தவரின் மனசாட்சியாக நின்ற ஒருவர் தானியங்களை அள்ளி கொடிவழி உறவாய் சூழ்ந்திருக்கும் மொத்த இனத்தவருக்கும் அவை கைமாற்றப்பட்டு திரும்ப அவருக்கே அவை வந்து சேர்கிறது. இறந்தோரின் சாட்சியாய் நிற்பவர் பேசும்போது ”நான் மழைய ஒரு நாள் திட்டினேன். மழையே என்னை மன்னிச்சிடு வெயிலை பழித்தேன் வெயிலே என்னை மன்னித்திடு ஓடைத்தண்ணியில் மூத்திரம் பெய்த குற்றத்துக்காக ஓடைத் தண்ணியே என்னை மன்னித்திடு. ஒருநாள் நடைபாதைச் செடியினைக் கிள்ளி எறிந்தேன். செடியே என்னை மன்னித்திடு. பாதையில் இருந்த கல்லை பேத்துபோட்டேன். அக்கல்லே என்னை மன்னித்திடு மரக்கொப்புகளெ வெட்டினேன் மரமே என்னை மன்னித்திடு. ஒருநாள் நான் குளிர் காற்றைத் திட்டினேன். காற்றே என்னை மன்னித்திடு இப்படி சாவுவீட்டின் ஒவ்வொரு படுகரும் இயற்கை விரோதமாய் வாழ்வதை மறுத்து இயற்கையின் மனசாட்சியாகப் பேசும்போது பார்வையாளர்களாகவும் அவர்களே நிகழ்த்துவோராக இருப்பதும் எதிர்கால நாடகக்கலைக்கான புதிய தெம்புகளையும் சிந்தனை முறையினையும் நமக்குத் தருகிறது. படுகப் பழங்குடிகளின் குழந்தைகளோடு நாடக வேலை செய்யும் கோத்தகிரி ராம்ராஜின் செயல்பாடுகள் குறிப்பிட வேண்டியவை. அக்குழந்தைகளிடம் பெற்ற நாடகச்சிந்தனை முறைகளைப் பெரியவர்களுக்கு கடத்துவதோடு தானும் தனித்த நடிகனாக அடையாளம் காணப்படுகிறார். அவரின் வழியே எதிர்காலத்தில் மலையின் நிகழ்த்துக்கலை மந்திரம் புதிய வேக்ம் பாய்ச்சக்கூடும். சமீப நாட்களில் தோடர்களோடு அவர்களது இசைமுறை நாட்டியத்தை அறியும்பொருட்டு பலமுறை பயணம் செய்தபோது ஒரு நாள் “சில தோடர்களிடம் இரவு மணி பத்துக்கு மேல் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்டபோது இருவர் பாட பலர் பார்வையாளர்களாக இருந்து இரண்டாவது மூன்றாவது பாடல்களில் ஒவ்வொருவராய் சேர்ந்து கடைசியில் குழுப்பாடலாகி (Chorus) பெரும் எழுச்சி பெற்றது. அவர்களது பாடல்களில் ஒரு இசைக்கருவி கூட சேர்ப்பது கிடையாது. குரல்கள் கூட்டுக்குரல்கள் இவைதான் அவர்களுக்கான இசைக்கருவிகளாக இருக்கிறது. அவர்களே மூலிகைகளால் செய்த காடி மதுவை பூமிவணங்கிக் குடித்து தம் வாழ்வில் முன்னோர் கண்டுபிடித்த ஒவ்வொரு பாடல்களைப் பாடியபடி இருந்தனர். இன்னொருவர் மிஞ்சிய போதையில் வேறு ஓர் பாடலைத் திறக்க சுற்றியிருந்த பெண்கள் ஆண்கள் பலரும் பாடலாலேயே உரையாடிக் கொண்டனர். இதில் பெண்கள் எவரும் குடிப்பதில்லை. கட்டுக்கடங்காது பாடல்கள் போகவே பில்கிதீஸ் குட்டன் எனும் தோடர் நிலமையைக் கட்டுப்படுத்த மூதாதை பாடிய பாடலை எடுத்தவுடன் பாடல் மேலும் உக்கிரமாகி தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு வலிப்பு வந்து உடல் துடிக்க, வெளியே தொடர் மழை. தோடர்கள் இருவர் மழையால் நனைந்து வீட்டைச்சுற்றி ஓடியபடி தொடர்பாடல்களின் துடிப்பில் அப்பெண்ணிற்கு நிலைமை சீரானது. தோடர்களின் குடிக்கு பண்பாட்டு குணம் இருக்கிறது. பகுத்தறிவுக் கண்களால் நாம் அதனைப் பார்த்துவிட முடியாது. அவர்களின் மொழி புரியாவிட்டாலும் இசையில் அதனோடு கூடிய ஆட்டத்தின் வேகத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். தோடர்களை வைத்து தோடர் மொழியில் முதன் முறையாக திரைப்படமெடுக்கும் சூரக்குடி ராஜிவ் எங்களது நாடகக் குழுவைச் சேர்ந்தவர். அவனிடம் நேசம் பாராட்டாத தோடர்குழந்தைகள் மிகக் குறைவு. தோடர் குழந்தைகளை தன் திரைப்படத்தில் நடிக்க வைத்ததில் ஜெயம் பெற்றவன் ராஜிவ். தோடர்களின் சடங்குப்பாட்டிற்குள் ஆட்டத்திற்குள் பார்வையாளன் எனும் உயரிய குணம் பண்பாடாய் நடமாடிக்கொண்டிருக்கிறது.
சுமார் 50, 60 வருடத்திற்கு முன்னால் இராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து தஞ்சை சீமைக்குப் பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் ஏராளம். என் மாமன் சேதுவும் அங்கு போனால் நாள் பூராம் கதிர் அறுக்கலாம் இரவு தோறும் நாடகம் பார்க்கலாம் என தன்னோடு காடல்குடியிலிருந்து பலரையும் அழைத்துச்சென்றவர். என் வாழ்வில் பண்பாடாய் உணர்ந்த முதல் பார்வையாளனாக அவரையும் அத்தை சுப்புத்தாயையும் சொல்வேன். இடையில் காலரா நோய் பரவி தனியே ரயிலில் ஊருக்குத் திரும்பும்போது மானாமதுரை ரயில் நிலையத்தில் அவர் இறந்து விடவே சக பயணிகள் உதவியால் அவ்வூர்க் கம்மாக்கரையில் அநாதையாய் புதைக்கப்படுகிறார். ஊருக்கு போஸ்ட் கார்டில் தகவல் வந்து சேர்கிறது. அன்று வயக்காட்டில் கதிரறுப்பு சுப்புத்தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் கதிர்க்கட்டுகளில் மோதிமோதி உருண்டு ஒப்பாரி பாடும்பொழுது சூழ்ந்த விவசாயிகள் பார்வையாளராய் இல்லாமல் சேர்ந்து பாடி அத்தையைத் தூக்கிப்போகிறார்கள். நம் நிலத்து விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் பார்வையாளர் குறித்து புது நிலை இருக்கிறது. வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் நான் வாடினேன் என்பது வள்ளலாரின் வாக்கு. ஒன்றரை லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டது. இந்த வரிக்கு மனசாட்சியாய் இருக்கிறது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாவர வலியுணர்ந்து கதிராகிவிடுவார்கள்.
எங்களது சூர்ப்பணங்கு நாடகம் டெல்லியில் சர்வதேச நாடக விழாவில் தமிழ்மொழியின் சார்பாக நிகழ்த்தப்பட்ட போது மொழிதெரியாத 200 பார்வையாளர்களுக்கு மத்தியில் பெண்கள் அதிகமிருந்தனர். நாடகத்தின் இடையிடையே பலபெண்கள் கர்சீப் நனைந்து விசும்பலொலிகளுக்கிடையில் நாடகம் சிறப்பாக நிகழ்வுற்றது. அதே போல மதுரையில் 700 பெண்களுக்கு மத்தியில் நிகழ்ந்த போது குலவை சூழ நாடகம் நிகழ்ந்து எங்களுக்கான சுதந்திரவெளி சூர்ப்பணங்கில் பதுங்கியிருப்பதாகப் பலரும் சொல்லிப்போயினர். அதே போல் லேடிடோக் (மதுரை) பெண்கள் கல்லூரியில் முழுக்க பெண்களே பார்வையாளர்களாக இருந்த சூழலில் குகைமரவாசிகள் ‘நாடகம் நிகழ்ந்து முடித்த போது அமெரிக்க பெண் பேராசிரியர் ஒருவருடன் நவீன உடையணிந்த சில மாணவிகளும் எல்லோரும் கலைந்த பின்னும் காத்திருந்து பேசினர். அப்போது பேராசிரியை பண்பாட்டின் ஆழ்ந்த ரகசியங்களை இந்நாடகம் எனக்கு உணர்த்துகிறது. இருபது வருடமாக நாடகம் பார்க்கும் எனக்கு இந்நாடகமே பண்பாட்டு அதிர்வினை ஸ்தூலமாய் தீர்த்து விட்டது என்றார். பத்து நிமிடம் பேசிக்கொண்ருந்த பேராசியரை மாணவர்கள் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர். எங்கள் நடிகர்களுடன் நாடகநிலத்தில் நின்றுகொண்டிருந்தபோது இரு மாணவிகள் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து உங்கள் கலையால் எங்களை ஆசீர்வதியுங்கள். எங்களது (பெண்களின்) தனித்த உலகை உங்கள் படைப்பால் உணர்ந்து கொள்கிறேன். கலையால் மட்டுமே எங்களது வலியும் கட்டுப்படுத்த முடியா அடக்கிய சுதந்திரமும் வெளிப்படும் என்பதை உணர்கிறேன் என்று சொல்லி திரும்பத்திரும்ப நிலத்தைப்பார்த்து வணங்கியபடியே அவ்விடம் விட்டுச் சென்றனர்.
எங்கள் மணல் மகுடி நாடகக்குழு கூந்தல் நகரம், செம்மூதாய், உதிரமுகமூடி ஆகிய மூன்று நாடகங்களும் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாருக்கு அருகேயுள்ள தேரிக்காட்டில் நிகழ்த்தப்பட்டது. பனைமரங்கள் சூழ்ந்து அந்த இடம் மணற்பாங்கான பாலைவனத்தோற்றத்தைக் கொடுக்கும். அங்கு போட்ட மூன்று நாடகங்களுக்கு சுற்றியிருந்த நான்கு ஊர்ச்சனங்களும் நாடகம் பார்க்க வந்துவிடுவார்கள். 1500 பார்வையாளர்களுக்கு மத்தியில் போடப்பட்ட நாடகங்கள் இவை. முதுகுளத்தூர் பக்கம் கிடாத்திருக்கையிலிருந்து ஐந்து மாட்டுவண்டிகளில் 60 பார்வையாளர்கள் வந்திருந்தனர். பின்னாளில் இப்பயணத்தில் வந்த பார்வையாளர்களுக்குள்ளிருந்தே பல நடிகர்கள் எங்கள் குழுவில் சிறந்த நடிகர்களாகத் தொடர்கிறார்கள். பலமுறை ஒத்திகை பார்க்கவந்த பார்வையாளர்கள் எங்களைத் தொட்டு கைப்பிடித்துப் பேசுவர். தேரிக்காட்டில் காஞ்சரம் பேய்கள் எனும் ஒருவகைப் பேய்கள் கூட்டமாய் வாழ்வதாகவும் யாரும் பகலில் இந்தப் பக்கம் வரத் தயங்குவதாகவும் சொன்னார்கள். குடிசை போட்டு தங்கியிருந்த நாங்கள் பலமுறை பயத்தில் பேய்களைக் கும்பிட்டு நாடகத்துடி தருமாறு நிலத்தில் விழுந்து கேட்போம். நாடகம் பார்த்த பல பார்வையாளர்களிடம் எங்கள் நடிகர்கள் அழுவதற்கான காரணம் கேட்ட போது ”எதுக்கு அழுகை வருதுன்னு தெரியாது. நாடகம் ரொம்ப பிடிச்சிருக்கு. புரியலை” என்றனர். நாடக ஆய்வு செய்யும் ஆய்வாளர் அருணகிரி திருவண்ணாமலையில் குகைமரவாசிகள் நாடகம் பார்த்து மறுவாரம் நாடகம் பார்த்த பல பெண்களிடம் பேட்டி எடுக்கப் போகும்போது பெண் பார்வையாளர்கள் பலரிடம் அபூர்வ பதில்கள்.”நாடகத்திற்குள்ளே இறந்துபோன இரண்டு மகன்களையும் நான் பார்த்தேன்.” “பைபிளில் வாழும் அபூர்வ மனிதர்களை நேரில் கண்டுவிட்ட தைரியம் பெற்றேன்.” “இது வறுமையில் வாழ்றவங்களோட கலையின் வழிமுறை கொண்டது.” “நாடகத்துக்கு அர்த்தம் தேடக்கூடாது. வாழனும் இங்கு நடிகர்கள் வாழ்ந்தார்கள் நடிக்கவில்லை.” “எங்கம்மா நாடகம் பார்த்திருந்தா இறந்திருக்க மாட்டார்கள்” “புழுதிக்கான அர்த்தம் இந்நாடகத்தின் வழி பெற்றேன்.” இப்படிப் பல பார்வையாளர்களின் பதில்கள் இருந்தனவாம். அவரது ஆய்வு புத்தகமாக மாறும்போது பார்வையாளர்களின் பண்பாடு குறித்த நமது பார்வை சீராகும்.
எங்களது மிருகவிதூஷகம் நாடக ஒத்திகை கோயில்பட்டிக்கருகே குருமலையில் நடந்தபோது நாடகத்தில் போர்ச்சூழலால் ‘கால்நடைக்கு ஏற்பட்ட வலிவாதை குறித்த காட்சி. அதில் நடிகர்கள் அனைவரும் மாடுகளின் முகமூடிகளிட்டு வெண்துணி போர்த்தி கூட்டமான மாடுகளாகவே நடிப்பர். ஒருநாள் அக்காட்சிக்கு பழங்குடிக்குழல் வாசித்துக் கொண்டிருந்தபோது காடுகளில் அலைந்திருந்த எட்டு மாடுகள் அசையாது மூச்சடக்கி இக்காட்சியினை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அக்காட்சி முடிந்ததும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டன. எங்கள் பார்வையில் நாடக நடிகன் நடிகை என்று சொல்லப்படுவது உடல் எல்லை தாண்டிப் பார்க்கணும். ஆண்கள் பெண்வேடமேற்பதை மரபாக்கிக் கொண்ட பண்பாடு நமக்குண்டு. நாடக உடல் பூச்சி, பறவை, விலங்கு, தாவரம் என பல்லூயிரிக்கலையை சுமக்கும் வல்லமைமிக்கது. எனவே அன்று நாடகம் பார்க்க வந்த மாடுகளின் இமை நிலத்திலிருந்தும், பண்பாட்டுப் பார்வையாளர்கள் பார்வையாளர்களின் பண்பாடு குறித்து உரையாடலைத் துவங்க வேண்டும்.
பலமுறை பள்ளிக்குழந்தைகளோடு நாடகம் நிகழ்த்தும் போதும் மழைவருமோ என்ற பயம் வந்தவுடன் குழந்தைகள் பலரும் நாடகமேடை பள்ளி மைதானம் மரங்களைக் கட்டிப்பிடித்து ‘இந்த மாலை நாடகம் முடியும் வரை மழையே வராதே” என வேண்டுவார்கள். அதில் அங்காள ஈஸ்வரி எனும் ஆசிரியை பற்றி சொல்லியே ஆக வேண்டும் வானத்தைப் பார்த்து கண்கலங்கி வேண்டுவார்கள். குழந்தைகளை மேடைக்கு அழைத்து கூட்டமாய் பிரார்த்தனை செய்வார்கள். ஏனெனில் நாடகமேடை திறந்தவெளி மேடையாகும். நாடகம் இயக்கும் போது என்னோடு எப்போதும் கூடவே இருப்பவர் அவரும் மைதிலி எனும் ஆசிரியையும்தான். அங்காள ஈஸ்வரிக்கு நாடக வசனங்களின் மீது ஆழ்ந்த அக்கறை உண்டு. பெரும்பாலும் குழந்தைகளின் எதார்த்தத்திலிருந்தே அவர்கள் மொழியில் வசனங்களை உருவாக்குவேன். அதில் நான் தோற்றுவிடும் போது பலமுறை அதனை எளிமையாக சாதுர்யமாகக் கையாள்வதில் வல்லவர். அந்த ஆசிரியையால் இப்போது தனியே நாடகம் எழுதவும் இயக்கவும் முடியும் என்பது என் எண்ணம். நடிப்பில் அதிகூச்சமடையும் மாணவர்களை தைரியமேற்றி அற்புத நடிகர்களாக்கிவிடும் திறமை அவருக்குண்டு. அவரைப்போன்ற அற்புத ஆசிரியை எல்லா கிராமத்துப் பள்ளிகளுக்கும் வேண்டும்.
சமீப நாட்களில் எங்கள் குழு நடிகர்களுடன் ஜவ்வாது மலைக்குச்சென்று பழங்குடிகள் நிகழ்த்திய நல்லதங்காள் கூத்தை காணச் சென்றிருந்தோம். ஒன்பது மணி நேரம் நடந்த அந்த கூத்தில் முக்கிய காட்சியான நல்லதங்காள் தம் பிள்ளைகள் எழுவருடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்யும் போது கூத்துப்பார்த்து தூங்கிக்கொண்டிருந்த ஊர்க்குழந்தைகள் ஆறு பேரை கோமாளி எழுப்பிவிட்டு அவர்களைத் தங்கள் குழந்தையாக்கி தானும் மூத்தவளாக நடித்தார்கள். ஒவ்வொருவரையும் கிணற்றில் போடும்போது நடக்கும் துயரஉரையாடலை பார்த்துக்கொண்டிருந்த ஊர்ப்பெண்கள் பலரும் தம் சேலை முந்தானையை வாயில் புதைத்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டனர். பசியால் வாடிய தங்கள் குழந்தைகளாகவே உணர்ந்த ஊர்ப்பெண்கள் அவர்களுக்குப் பழங்களும் தின்பண்டங்களும் வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுப்பதும் பிள்ளைகளுக்கு தலைகோதி முத்தமிட்டுப் போனதும் கூத்தின் பாத்திரங்களாக இருந்தது. இரவு ஒன்பதரைக்கு ஆரம்பித்த கூத்து காலை ஏழரைக்கு முடியும்போது மொத்தப் பார்வையாளர்களும் நடிப்பவர்களும் சேர்ந்து கண்ணீர்மல்க கூத்து முடிந்தபோது பார்வையாளர்களும் கலைஞர்களாகவே மாறியிருந்தனர். அந்தக் கண்ணீரின் பிசுப்பிசுப்பை இன்றுவரை உணர்கிறேன். இப்பார்வையாளர்களைக் குறித்து நாம் தனியே விரிவாகப் பேசலாம். இதுபோலவே நாங்கள் கோவில்பட்டியில் சூர்ப்பணங்கு ஒத்திகையின் போது எங்கள் வீட்டைச் சுற்றியிருந்த பல குழந்தைகளும் எங்களோடு இருப்பது வழக்கம். அவர்களுக்கு நாடகத்தின் மொத்த வசனங்களும் ஒத்திகை பார்த்துப் பார்த்து மனப்பாடம். பலமுறை நாங்கள் வசனம்பேசி நடிக்கும்போது  அவர்கள் அதே வசனம்பேசி வீட்டின் வெளியே நடித்துக்கொண்டிருப்பார்கள். பார்த்துப் பார்த்து தங்களை உருவேற்றிய குழந்தைகள் இசைக்கருவிகளைக் கையாள்வதிலும் சிறந்தவர்களாக விளங்கினர்.
விழுப்புரத்துக்கு அருகே உள்ள தொந்திரெட்டிப்பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த கண்ணன் என்னும் கூத்துக் கலைஞர் பார்வையாளர்களுக்குள்ளிருந்து விடாது கூத்துப் பார்த்து அதனைக் கோயில் கோபுரங்களிலிருந்தும் விதானங்களிலும் மரபான ஓவியம் வரைவதில் வல்லுவமிக்க கலைஞன். ஒருகட்டத்தில் அவரது ஓவியத்தைக் கண்ட கூத்துப் பார்வையாளர்கள் பலரும் கூத்தின் மந்திரம் ஓவியத்தில் மறைந்திருப்பதைச் சொல்லி அவரைக் கூத்துக் கலைஞராக மாற்றினர். அன்றிலிருந்து அவரது மறைவு வரை கூத்தில் பெண் வேடமிட்டவர். ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களுக்குள்ளிருந்த மெய்மறந்த துறவு நிலையைத் தன் நடிப்பில் நிறுத்தியதோடு அவர்களுக்குள்ளிருந்தே கூத்து நிலம் நுழைந்தவர். வீட்டில் மனைவி அவரது பெண்வேட அபிநயத்தில் வெட்கி கூத்தாடப் போவதை எதிர்த்துள்ளார். அதன் பிறகு வீட்டிலுள்ளவர்களைக் கதை சொல்லித் தூங்க வைத்துவிட்டு சாமத்தில் கூத்தில் தன் பாத்திரம் வரும் நேரத்தில் நடுக்காட்டுக்குள் வேடமிட்டு சைக்கிளில் கூத்து நடக்கும் ஊர்போய் ஆடித் திரும்புவாராம். அவர் வராத போது பார்வையாளர்கள் பலரும் வீட்டுவாசலில் சைக்கிளுடன் அழைத்துப் போக காத்திருப்பார்களாம். பார்வையாளர்களால் உருவேறிய அபூர்வ கூத்தாடியாக அவரை சுற்றுக் கிராமங்களில் பேசிக்கொள்வதுண்டு. இப்படிப் பார்வையாளர்களின் பண்பாட்டுக்குள்ளிருந்து நடிகனாய் துடியேறியவர்களை நாம் அதிகம் காணலாம். இன்றும் நம் கிராமக் கொடைகளுக்கும் சடங்குகளுக்கும் ஊர்மக்கள், சாமியார்கள், பூசாரிகள், குழந்தைகள் அனைவரும் என ஊரைச் சுத்தம் செய்வதும் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதும் புதுஆடை எடுப்பதும் மக்களில் பலர் மருளேறி சாமியாடுவதும் ஆடியவர்களே பக்தர்களாக இருப்பதும் சிலர் மேளம் வாசிப்பதும் பெண்கள் குலவையிடுவதும் இப்படியான பண்பாட்டுச் சூழலிலிருந்தே எதிர்காலப் பார்வையாளர்களின் பண்பாட்டுச் சூழலை நாம் உருவாக்க முடியும். இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்குமான தனித்த சடங்குகளும் நிகழ்த்துக்கலை மரபை ஆதாரமாகக் கொண்ட சடங்குகளையும் அதன் பார்வையாளர்களின் கலாச்சார மனநிலைகளையும் நாம் பார்த்து உணர்ந்து படித்து பார்வையாளர்களின் பண்பாடு, பண்பாட்டு பார்வையாளர்களை நாம் கண்டுபிடித்து நம் உரையாடலைத் துவக்க வேண்டும்.
(முற்றும்)

Related posts

Leave a Comment