You are here

வாய்மொழி வரலாறுகளை நம்பித்தான் நமது வரலாற்றுப் பதிவு!

மு. ராஜேந்திரன், கேள்விகள்: கொங்கு நாடன்

 மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும், சட்டமும் படித்தவர். IAS., தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்வு செய்து படித்த பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின் மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர். இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப் பகுதிகளிலும் 10 லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர். மாவட்டத்தில் இருக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோயில்களில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை, தொல்லியல் துறையின் உதவியுடன் படியெடுத்தவர்.
திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கூறுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர்.
இவரின் பிற நூல்கள் : சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் கால செப்பேடுகள், சோழர் கால செப்போடுகள், பல்சலவர் கால சேப்போடுகள்,  சட்ட வல்லுநர் திருவள்ளுவர், வந்தவாசிப் போர்-250 (கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)
பெற்ற விருதுகள்: கவிதை உறவு விருது, தின மலர் டி.வி. இராமசுப்பையர் வரலாற்று விருது, கம்பம் பாரதி  தமிழ் இலக்கிய பேரவை விருது.

1.வம்ச வரலாற்றை எழுதும்போது டெல்லியின் வரலாற்றுச் சுருக்கத்தை நுழைவாயிலாகத் தரவேண்டும் என்கிற எண்ணம் உருவானது எவ்வாறு?
ஆங்கில  இலக்கியவாதிகள் சிலர் கடைசி அத்தியாயத்தை முதலில் எழுதிவிட்டு, பின்பு முதல் அத்தியாயம் எழுதத் துவங்குவார்கள்.  அதுபோல இந்த புத்தகத்தை எதில் முடிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாகயிருந்தேன்.  ஆனால் அதை எழுதுவது எனக்கு மிகவும் துயரம் தரக்கூடியது என அறிவேன்.  மைசூர், கோவை, லக்னோ என பல இடங்களில் நான் எழுத முயற்சித்து தோல்வியடைந்திருந்திருக்கிறேன்.  ஆகவே, சமாதிகள் சூழ்ந்த சோக நகரம் டெல்லி, என்னைப் போல, பல துயரச் சூழல்களை சந்தித்த நகரம் என்பதால் எனக்கு டெல்லியில் எழுத தோன்றியது.  ஒரு சிறிய கோட்டை பெரிய கோடு உள்வாங்கிக் கொள்வது போல டெல்லி நகரின் பொதுத் துயரம், தனி ஒருவனின் துயரத்தை மறைக்க வல்லது.

2 சான்றாதாரங்களின்றி வாய்மொழி வழக்காறுகளை மட்டுமே கொண்டு உருவாக்கப் படும் வரலாறு  நம்பகத் தன்மைக்குரியதாக ஏற்றுக் ்கொள்ளப்படுகின்றனவா?
வாய்மொழி வழக்காறுகளை நம்பித்தான் நமது வரலாற்றுப் பதிவுகளே இருக்கின்றன. நாடோடிப் பாடல்கள், கும்மி, அம்மானை ஆகிய நம் உணர்வில் கலந்த எழுத்து வகைமைகளில் உண்மையான வரலாறு புதைந்து கிடைக்கிறது.  ஒவ்வொன்றிற்கும் எழுத்து மூலமான சான்றுகள் வேண்டுமென்றால் நாம் வரலாறு எழுதுவது மட்டுமல்ல, நம் வீடுகளில் சொந்தக்காரர்கள், நண்பர்கள் மத்தியில் ஒருவருக்கொருவருடன் உரையாடும் உரையாடலில் கூட நம்பகத்தன்மை இல்லாமல் போகும். வேண்டுமென்றால் சான்றாதாரங்களுக்கு அடுத்த நிலையில் இலக்கியங்களையும், அடுத்து வாய்மொழி வழக்காறுகளையும் வைத்து வரலாறு உருவாக்கலாம்.

3.     ‘மாலிக்காபூரின் உபதளபதியுடன் வந்தவங்க நம்ம ஆளுகதான். அவனுங்க அராஜகத்துக்கு பயந்து முஸ்லிமா மாறினவங்க, முதல்ல அவங்க நமக்கு சொந்தக்காரங்கதான்’ என்று சொல்லுகிறார்  அய்யா. ‘அதேபோன்று ராஜகிரியில இருந்த அத்தனை பிராமண ஜனத்தையும் முஸ்லீமாக்கிட்டாங்க’ என்றும் இடையில் ஒருவரி      வருகிறது. இந்தக் கட்டாய மதமாற்றங்களுக்கு இப்போது எதுவும் ஆவணங்கள் உள்ளனவா?
ராஜகிரி என்ற ஊரைத் தெரிந்த யாருக்கும் அங்கு வாழும் முஸ்லீம்கள், பிராமணர்கள் போல தோற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ளமுடியும். கட்டாய மதமாற்றம் என்பது ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் செய்வதல்ல.  கட்டாயம் என்னும்போதே அது ஒரு அசாத்திய சூழல் என தெரிந்து கொள்கிறோம்.  பல விக்கிரகங்கள் பூமிக்கு அடியில் ஆற்று மணல் போட்டு மூடி மறைக்கப்பட்டதும், சிலைகள் ஊரை விட்டு ஊர் இரவு நேரங்களில் பயணப்பட்டதும், செவி வழியாக அறியப்பட்டிருக்கின்றன.  உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் மானாமதுரைக்கு மாற்றப்பட்டது, எசாலம், திருஇந்தளூரில் சிலைகள் புதைக்கப்பட்டது இந்த வகையில்தான்.
எந்த ஒரு புதிய மதமும், தூண்டுதலோ, அச்சுறுத்தலோ இல்லாமல் வளர முடியாது.  ஆனால், அதற்கான மறைமுக ஆதாரங்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன.

4.கருப்பாயி கம்புதானியக் குவியலுக்குள் வலிய மூழ்கடிக்கப்பட்டு பிறகு தெய்வமாகிறாள். அவளுடைய மூன்று சகோதரர்களுக்கும் அவளை இரட்சிக்க வேறுவழியே தெரியவில்லையா? பெண் குழந்தைகளை காவுகொடுத்து கடவுளாக்கியப் பின்பு உயர்ந்தோங்கி வாழும் இன்றைய தலைமுறைகளின் வாழ்க்கை துயரத்தை உருவாக்குகிறது என்று நீங்களே ஓரிடத்தில் கூறுகிறீர்கள்…
அன்றைய சூழலில் கருப்பாயியை மூழ்கடிக்கப்படுவது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த முடிவாயிருக்கிறது.  அவளை அழைத்துச் சென்றால், பிரச்சனையையும் உடன் அழைத்துச் செல்வது போல்தான். அவளைத் துறந்துவிட்டால், மூன்று அண்ணன்கள் மீதும் துலுக்க தளபதிக்கு என்ன ஈர்ப்பு இருக்கப்போகிறது?  இந்த ரீதியில் மூன்று அண்ணன்களும் சிந்தித்து இருக்கலாம்.  இன்றைய சுதந்தரச் சூழலில் நமக்கு வரக்கூடிய பல யோசனைகள் அன்றைய நிலையில் அவர்களுக்கு வந்திருக்காது.  வந்தாலும் செயல்படுத்த முடியாது.
வாழ்வில் தோற்றுப் போன அனைவரும், தங்களால் காப்பாற்ற முடியாத ஜீவனையே கடவுளாகக் கும்பிடும் கோழைத்தனம் எல்லோரிடமும் இருக்கிறது.  நம்மால் குறை சொல்ல முடியாத, காப்பாற்ற முடியாத ஜீவன் தெய்வநிலைக்கு உயர்ந்து விடுகிறது.

5.’ஒவ்வொரு தலைமுறையிலேயும் நம்ம குடும்பத்து வாரிசுகள்ல யாராவது ஒருவருக்கு பிள்ளைமார் ஜாதியிலே கல்யாணம் நடந்திடும்’ என்கிறார் அய்யா. அவர் குறிப்பிடும்  பிள்ளைமார், பாண்டிய வேளாளர் சமூகம் என்று கருதுகிறேன்…
பிள்ளைமார்கள் விவசாயம் செய்யும் ஜாதியினர்.  குறிப்பாக வெற்றிலை விவசாயம் செய்பவர்கள்.  இவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள்.  இவர்களில் ஒரு பிரிவினர் சைவமாக உள்ளனர்.  பிராமணர்களுக்கு இணையாக தங்களை கருதிக் கொள்வர்.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பெரும் பொறுப்புகளில் இருந்தவர்கள். 1981ஆம் ஆண்டு கிராம முன்சீப்புகள், கணக்குப்பிள்ளைகள் பதவி ஒழிக்கப்படும்வரை கிராமங்களில் மிராஸ் கணக்குப் பிள்ளைகளாக பிள்ளைமார்கள் இருந்தனர்.  இவர்களை வேளாளர் என்றும் வெள்ளாளர் என்றும் அழைப்பார்கள்.

6.தேவாரம் நொண்டிமீனாட்சி உங்கள் பெண்கதாமாந்தர்களில் வலுவானவளாக நிற்கிறாள். மட்டுமல்ல ஜெயலட்சுமி, சின்னம்மாள், அழகு மீனாள்  என நிறையப்பெண்கள் வாசகக் கவனம் பெறுகிறார்கள்…
பெண், உடல் ரீதியாக ஆணைவிட வலிமையில் குறைந்தவள் என்பது பொது நம்பிக்கையாக இருக்கிறது. அக்கருத்து காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,மன ரீதியாக என்றென்றும் வலுவானவள்.  ஒரு குடும்பத்தில் தகப்பன் இறந்துவிட்டால், தாய் குடும்பத்தைக் கரையேற்றிவிடுவாள்.  தாய் இறந்து போய், தகப்பன் மட்டும் மிஞ்சினால், குடும்பம் பெரும்பாலும் உருப்படாது.  இதற்கு என் குடும்பமே சான்று.  எங்களது இளம் வயதில் தந்தையை இழந்தோம்.  எனது தாய், விவரம் தெரிந்தவர் என்று சொல்லமுடியாதுயென்றாலும், அவரால் எங்கள் குடும்பத்தை முன்னேற்ற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அவருக்கு இருந்த மன வலிமையே.

7.இந்த நாவலை… என்று ஆரம்பித்து, நாவல்போன்ற சுயசரிதையில் … நாவலாகவே பார்க்கிறேன்… என்றெல்லாம் கலாப்ரியாவும், நாவலா, தன்வரலாறா, ஆவணமா என்று மணிமாறனும் குறிப்பிட்டாலும் கூட, இப்பிரதியை நீங்கள் நாவலாக்க முயற்சிக்கவில்லை என்றே கருதுகிறேன்… இது பூரணமான தன் வரலாற்றுப் பிரதியாக விளங்குகிறது…
நாவல் என்பது முழு கற்பனை அல்லது உண்மை நிகழ்வுகளை கற்பனை போலச் சொல்லுதல் என புரிந்து கொள்கிறேன். முழு நாவல் என்றால் எனக்கான சுதந்திரம் அதிகம்.  இதில் எனக்கு சுதந்திரம் இல்லை.  நான் கேட்டதை, பார்த்ததை சொல்லியிருக்கிறேன். அந்த வகை எழுத்துக்கு ஒரு பெயர்  கொடுக்க வேண்டுமென்று நான் சிரமப்பட்டேன்.  புனைவுகளும், கற்பனைகளும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.  ஆகவே, இதை நான் நாவலாகக் கருதவும் வாய்ப்புண்டு.  கேள்விப்பட்ட செய்திகளோடு ஆங்காங்கே ஆவணங்களையும் சேர்த்துள்ளதால் இதை ஆவணம் என்றும் சிலநேரம் கருதுகிறேன். வடிவம் சார்ந்த குழப்பமான மனநிலையில் இருந்த என்னை ஆற்றுப்படுத்தியவர் நாஞ்சில் நாடன்.
நாஞ்சில் நாடன் இது சுயசரிதையும் இல்லை, நாவலும் இல்லை என்கிறார்.  இப்புத்தகம் தமிழில் வந்துள்ள முதல் இனவரைவியல் நூல் என்று கூறி என்னையும் பிறரையும் தெளிவாக்கியிருக்கிறார்.

8.ஆச்சரியம் அளிக்கக்கூடிய மற்றொரு விஷயம், இப்பிரதியின் ஒளிவுமறைவற்றத்தன்மை. இந்த வெளிச்சப்படுத்தலை உங்கள் குடும்பத்தினர் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
எனக்கே பயமாகத்தானிருந்தது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக இதை எழுதியும், திருத்திக் கொண்டும் இருந்தேன்.  மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்று பயந்து  திருத்தியிருக்கிறேன்.  பின்பு உண்மைத் தன்மையில்லாமல் போய்விடுமே என்று பழைய வாசகங்களையே போட்டிருக்கிறேன்.  புத்தகம் வெளிவரும் நேரத்திலும் புத்தகம் அச்சடிக்கும் பணியை நிறுத்தத் தயாராக இருந்தேன்.  கவிஞர். அ.வெண்ணிலா, இதன் முதல் பிரதியைப் படித்தவுடனேயே, இதை பிரசுரிக்க வேண்டும், சமூக வரலாறும் இதில் உள்ளது என்று பலமுறை என்னிடம் விவாதித்துள்ளார்.  என்மீது உள்ள அன்பின் காரணமாக என்னை எழுத வைக்க உற்சாகப்படுத்துகிறார் என நினைத்து அவர் வார்த்தையை நான் முழுமையாக நம்பவில்லை. ஆனாலும் பிரசுரிப்பதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அவருடன் நிறைய விவாதித்து எழுத வேண்டியவைகளை எழுதியபடியே இருந்தேன்.  புத்தகம் எழுதி முடித்து, மறுபடியும் முழுமையாக படித்துப் பார்த்த பிறகே எனக்கு நம்பிக்கை வந்தது.  பின் மாரீஸும், கலாப்பிரியாவும் மணிமாறனும் தங்களின் கருத்துக்களைச் சொன்ன பிறகு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.   எனது தம்பிகள், உறவினர்கள் என்னைப் புரிந்துகொண்டவர்கள். வருத்தம் இருந்தாலும் வெளியில் காண்பிக்கமாட்டார்கள்.

9.சமகால தமிழ்இலக்கியத்தைப் பொறுத்தமட்டிலும் வரலாற்றுப் புனைவுகளின் வரத்து தொடங்கியிருக்கிறது. ஆனால், வரலாற்றுப் பதிவுகளுக்கு முக்கியத்துவம் தராதபோக்கே நம்மிடம் நீடிக்கிறது. இந்நிலைமாற என்ன செய்யவேண்டும்?
வரலாற்றுப் பதிவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தால், அது வெறும் பாடப்புத்தகமாகிவிடும்.  கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும், சதாசிவ பண்டாரத்தாரும், டாக்டர்.பிளீட், பர்கெஸ், பேராசிரியர் ஹுல்ட்ஸ், டாக்டர் நாகசாமி, பேரா.சி.கோவிந்தராசனார் இவர்களெல்லாம் சோழர் காலத்தைப் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள்.  இவர்கள் சொல்லிய சோழர் சரித்திரத்தைத் தெரிந்தவர்களைவிட கல்கியையும் சாண்டில்யனையும் விக்ரமனும் பாலகுமாரனும் சொன்ன சோழ வரலாறுதான் தான் பலருக்கும் தெரியும்.  இவர்கள் மூலமாகவே மக்கள் சோழர்களைப் பற்றி அதிகம் தெரிந்துள்ளனர்.
வரலாற்றுப் பதிவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.  ஆனால் அது கசப்பு மாத்திரையாக ஏற்றுக் கொள்ளாமல் போகக்கூடும்.  ஆகவே, வரலாற்றுப்புனைவுகள் தேவைதான்.

10.    கடைசி அத்தியாயம் கலங்கடித்து விடுகிறது. எந்தமாதிரியான மனநிலையில் இதை எழுதியிருப்பீர்கள் என்று யூகிக்கவே நடுக்கமாக இருக்கிறது. உடனடியாக மறுவாசிப்பைக்கோரும் பிரதியாகவும் இதைநான் பார்க்கிறேன்…
(a) திருவள்ளுவரை சட்டவல்லுநராகப் பார்க்கும் உங்கள் அனுபவம்குறித்து…
(b) கல்வெட்டுகள், செப்பேடுகள் குறித்த உங்கள் ஆய்வுகள் உங்கள் வரலாற்றுத் தேடலுக்கு எந்த அளவு உதவியாக இருக்கிறது?
இந்தப் பகுதியை நான் ஒரே மூச்சில் எழுதி முடித்தேன்.  ஒருமுறைதான் எழுதினேன். நான் திரும்பிப் படித்துப் பார்க்காத பகுதி இது தான்.
(a)திருவள்ளுவர் அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, சட்டவியலுக்கு முன்னோடி.  உலக மக்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தவர்.  மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு அற்ற பார்வை கொண்ட முதல் சட்ட நூலாசிரியர்.  மனு, கௌடில்யர், விதுரனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் இவருக்குக் கிடைக்கவில்லை.  1330 குறள்களில் ஏறக்குறைய 120 குறள்களில் சட்டக்கருத்துக்களைப் பார்க்க முடியும்.  இது குறித்து நான் 1994-99ஆம் ஆண்டுகளில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன்.
(b) கல்வெட்டு, செப்பேடுகள் படித்தப் பின்புதான் நான் வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூல் வெளிவர வேண்டும் என நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தேன். வரலாற்றைப் படிப்பதைவிட முக்கியம் அவற்றை சமகாலத்துடன் தொடர்புபடுத்துவதும், வரலாற்றின் வேர்களை ஆராய்வதும் முக்கியம். கி.பி.567இல் வாழ்ந்த உலகின் முதல் புரட்சியாளன் கம்பலையைப் பற்றி நான் பாண்டியர் செப்பேட்டில் படித்தேன். மிகவும் வியந்து போன நான், கயத்தாறுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குறிச்சி என்ற அந்த ஊருக்குச் சென்றேன். அவ்வூர் மக்களிடம் அவர்களின் வரலாற்றுப் பெருமையைக் கூறினேன். வியந்தும் மகிழ்ந்தும் போன அவர்கள் இப்பொழுது வீடுவீடாக உட்கார்ந்து கம்பலையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதைப்போல், சோழர் காலத்தில் புகழின் உச்சியிலிருந்தவன் முதலாம் ராஜராஜனின் மகன் முதலாம் ராஜேந்திரன்.  சோழர் காலத்தின் கடைசி அரசன் மூன்றாம் ராஜராஜன் மகன் மூன்றாம் ராஜேந்திரன். உச்சமும், வீழ்ச்சியும் ஒரே பெயரிலேயே அமைந்துவிட்டது. கடைசி சோழ அரசன் மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்திய காடவ அரசன் கோப்பெருஞ்சிங்கனை தமிழ்ச்சமூகம் தன் வரலாற்றில் எந்த இடத்திலும் அங்கீகரிக்காமல் விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், சோழர்களின் மீதான மக்களின் மயக்கம் தான். சிறைப்படுத்தப்பட்ட சோழ அரசனை விடுவித்த ஹொய்சால அரசன் வல்லாளகண்டனை இன்னும் கிராமப்புறங்களில்”இவன் வல்லாள கண்டன்டா”என புகழ்வதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை இன்று பல்வேறு இடங்களில் சொல்லிக் கொண்டு வருகிறேன். வரலாற்றை வாழ்க்கையோடு தொடர்புபடுத்த வரலாற்று ஆய்வுகள் உதவுகின்றன.

Related posts

Leave a Comment