You are here
வாசித்ததில் யோசித்தது 

படித்ததில் பிடித்தது

ஆயிஷா இரா.நடராசன்

1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
பி.ச.குப்புசாமி / விஜயா பதிப்பகம்
ஒரு ஆசிரியர்  தன் வரலாறு எழுதும்போது அது ஆயிரக்கணக்கானவர்கள் பற்றியதாக மாறிவிடும் அதிசயத்தை என்னசொல்ல. மிகக் கடினமான வேலை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலை. குப்புசாமி சார் தன் கிராமத்துப் பள்ளி அனுபவம் ஒவ்வொன்றாகச் சொல்ல நம் குழந்தைகளின் உலகம் விரிகிறது… அவர்களின் சாகசங்கள் கோபதாபங்கள்… குட்டிக்கனவுகள் ரசனைகள் என இது 206 பக்க சொர்க்கபுரி… அற்புத ஆசிரியர் ஒரு மந்திரக்காரர்… குழந்தைகளின் நம்பிக்கை பெறுவது ஊழியத்தைவிட முக்கியம் என வாழ்ந்தவர் குப்புசாமி சார்… அவசியம் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய பொக்கிஷம் இது.

2. புத்தக தேவதையின் கதை
பேரா.எஸ்.சிவதாஸ் (யூமா வாசுகி)                 புக்ஸ் ஃபார் சில்ரன்
2003ல் இராக்கின் பாஸ்ரா நகரத்தை அமெரிக்கப் படைகள் வானிலிருந்து குண்டு வீசி முற்றிலும் தகர்த்தபோது, ஒரு சிறுமி  -ஆலியா முகம்மது பேக்  தான் வாசிக்கச் செல்லும் நூலகக் கட்டிடம் அழிந்தும் நூல் அழியாது காப்பாற்றினாள். அதற்கு பதிலுரைக்கும் விதமாய் அவளை புத்தகதேவதை ஆக்கினார் சிவதாஸ். ஆலியாவின் பாத்திரப்படைப்பு மலையாள இலக்கிய உலகையே உலுக்கியது. மிக அற்புதமான இந்த சிறுவர் இலக்கியப் படைப்பை அப்படியே தமிழுக்கு வழங்கிப் பெருமை சேர்த்திருக்கிறார் யூமா வாசுகி. புத்தகங்களை நேசிக்க குழந்தைகளை ஈர்க்கும் முயற்சி இது.

3. கண்ணாடி நகரம்        ஜெயதேவன் / அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
அடுத்த தலைமுறைக் குழந்தை / முலை தடவிக்கொண்டிருந்தது / அங்கேயும் குமட்டியது பொட்டாசியம் வாசனை; என ரசாயனக் கழிவுகளின் கார்பரேட் காலத்தைப் பதிவுசெய்ய ஒரு ஜெயதேவன் கண்டிப்பாகத் தேவை. இது வளர்ச்சியா பேரழிவா. முன்னேற்றமா வேறு நாகரீகமா. பட்டறை வாழ்க்கை இது. கவிஞர் நகரவாழ்வின் அதிவேகப் பொழுதுகளின் பாசாங்கு சுகங்களை அடுக்கும்போது வியர்க்கிறது… பாக்கெட் பாலுக்கு மட்டுமே உதடுவிரிக்கும் மகன்… இறகு முளைத்தும் சிறகுமுளைக்காத பெண்… நகர ஏசுகூட ‘கால்வாசி ஏசு’ தான். எம்.எஸ்.வேர்டு… ஜாவா… குறுஞ்செய்தி முத்தம்தான் இல்லை. இது நகரவாழ்வு குறித்த ‘முதல் தகவல் அறிக்கை’

4. ஆரோக்கிய நிகேதனம்       தாராசங்கர் பந்தோபாத்யாய (த.நா.குமாரசாமி) / கானல் வெளியீடு
ரவீந்திர புரஸ்கார் பரிசு பெற்ற நூல். சாகித்ய அகாடமி செய்யவேண்டிய வேலையை கானல் வெளியீட்டகம் செய்துள்ளது. வாழ்வு-மரணம் இரண்டுக்குமான முரண் நாவல், வடிவம் பெறும்போது ஒரு செஸ் விளையாட்டின் வழியே எவ்வளவு சொல்ல முடியும் என்பதை தாரா சங்கரிடம்தான் கற்கவேண்டும். 22ம் அத்தியாயம் ஒன்றுபோதும், மீன்தின்ற வேலைக்காரி கணக்கு போலத்தான் வாழ்க்கை. குமாரசாமியின் மொழிபெயர்ப்பு இயல்பாக இருப்பினும் பழையகால ராஜம் கிருஷ்ணன் மணமும் சேர்ந்தே வீசுகிறது.

5. ஆப்ரஹாம் லிங்கன்           எமில் லட்விக் / வ.உ.சி. பதிப்பகம்
லிங்கன் பற்றிய மிகப் பிரபலமான லட்விக் புத்தகம் இப்போது முழுமையாகத் தமிழுக்கு வந்துள்ளது. இந்தப் பதிப்பு மிக அழகான ஓவியங்களுடன் கண்ணைப் பறிக்கும் விதமாய் வடிவமைக்கப் பெற்றுள்ளது. லிங்கன் எதிர்கொண்ட வாழ்வு எவ்வளவு துயரமானது என்பதை திமேன் நாவலில் வாசிப்பது போலவே மனதைத் தொடுவது தனிச் சிறப்பு.

6. காலநிலை :  பருவகால மாற்றமும் புவியின் பாதிப்பும்    சோ. மோகனா / அறிவியல் வெளியீடு
இந்த நூலில் தோழர் மோகனா எழுப்பியுள்ள கேள்விகள் இந்த 21ம் நூற்றாண்டு முழுதும் விவாதிக்கப்படப் போகிற விஷயம். பசுமை இல்ல வாயுக்கள் புவியை சூடேற வைத்தது எப்படி என எளிதில் விளக்கி, அதற்கு வளர்ந்த நாடுகளின் பங்கைத் தோலுரித்தது. தீர்வை மட்டும் மூன்றாம் உலகின் மேல் திணிக்கும் போக்கை நம் முன் நிறுத்துகிறார். 30.3%  கார்பன் கக்கும் அமெரிக்கா 3.4 சதம் கார்பன் கக்கும் இந்தியாவை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது எனப் படித்தால் உடல் மேலும் சூடேறும்! காலநிலைக் காவலர்கள் நடைராஜாக்கள் சைக்கிள் சாரதிகள்… என பட்டியலிட்டு முடிக்கும்போது ஹெல்மட் பிரச்சனை நினைத்து சிரிப்புத்தான் வந்தது.

7. பாரதிதாசன் முருகுசுந்தரம் / சாகித்ய அகாடமி
புரட்சிக்கவிஞரின் 125வது பிறந்த ஆண்டு தமிழக அரசால் பெரிதும் கண்டுகொள்ளப்படாதது பெரிய வேதனை. முருகுசுந்தரம் பாரதிதாசனோடு பழகியவர். இந்த வருடம் தமிழ் கூறு நல்லுகம் இந்த நூலை கண்டிப்பாக வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். பாரதி கையில் நயா பைசா இல்லாமல் கோபித்துக்கொண்டு ரயிலடி போய்விட அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்துச்செல்லும் சுப்புரத்தினம் பாவேந்தராகி, புரட்சிக்கவியால் பூத்து எழுந்த வரலாறு. 1964ல் தமிழின் ஞானபீட விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விருது வழங்கும் முன் இறந்துபோனார் என்பது போன்ற தகவல்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றன.

8. தங்க ராணி (நாடகம்) வேலுசரவணன் / வம்சி
வேலுசரவணனின் ஐந்து நாடகங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. எளிதில் பள்ளிக்குழந்தைகளால் மேடையேற்ற முடிந்த ஆனால் அற்புதமான அனுபவத்தைத் தரும் நாடகங்கள் இவை. குறிப்பாக நரியாரின் கதையும் தங்கராணியும் மனதைத் தொடுகின்றன. அல்லிமல்லி கதையில் அல்லிக்கு தலையில் ஒரே முடி… மல்லிக்கு இரண்டே முடி… இப்படியான அதிர்ச்சிகளுடன் குழந்தைகளை எளிதில் சரவணன் கவலையோ கண்ணீரோ இல்லாத காட்டுக்கு எளிதில் அழைத்துச் சென்று விடுகிறார்.

9. ஒத்தையடிப் பாதை        அமலநாயகம் / உயிர்எழுத்து
அமலநாயகம் என்னோடு ஒரே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அற்புத படைப்பாளி. இது மூன்றாவது சிறுகதைத் தொகுதி. 23 கதைகளும் மிக நேர்த்தியோடு நம் தென்ஆற்காட்டு கிராமத்து விளிம்புநிலை வாழ்வை யதார்த்தம் தோய்த்து தந்துள்ள அசல். இன்னும் இன்னும் என மனது கோரும் சொற்பிரவாகம் அவருக்கு கைவந்துள்ளது அளவற்ற மகிழ்ச்சி தருகிறது. மரபு சாரா கூலித்தொழிலாளி தனித்து நிற்கும் கதை.

10. கடலும் கிழவனும் எர்னஸ்ட் ஹெம்மிங்வே              (சு.து.ச.யோகியார்) / எஸ்.எஸ். பப்ளிகேஷன்
தி ஓல்டு மேன் அண்டு தி சீ (The Oldman and the Sea) என்றால் கிழவனும் கடலும் என்றல்லவா வரவேண்டும் எனக் கவலையோடு புரட்டினால் யோகியார் மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பு. குறிப்பாக ஜீவமரணப் போராட்டமான இறுதி அத்தியாயம் ஜீவனோடு உள்ளது. நம் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ முதல் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சதாம் வரை பலரைக் கவர்ந்த புதினம். சாண்டியாகோ கிழவன் இன்னும் சாகவில்லை என்பது 1952 நாவலைத் திரும்ப எடுத்து வாசிக்கும்போது நமக்கே அதிசயமாய் உள்ளது. இந்தப் படைப்பு மீன் எதுவுமே சிக்காத 82 நாள் பற்றியதா சிக்கிய மீனோடு மனிதன் போராடும் ஒரு இரவு பற்றியதா எனும் கேள்வியும் தொடர்கிறது.

11. ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்       தமிழில் : கி.ரமேஷ் / பாரதி புத்தகாலயம்
மனம் வெதும்பி நொந்து தனிமையில் பரிதவிக்கும் தருணங்களில் எல்லாம் நான் ஃபிடலின் பேருரைகளுக்குள் என்னைத் தொலைப்பது வழக்கம். நானூறு முறை அமெரிக்காவில் கொலைத்தாக்குதல் நடத்தப்பட்ட மாவீரன் ஃபிடல் தன் தோழமை ஆண்டுகளில் 600 பேருரைகள் நடத்தி இருக்கிறார். அதில் ஆசிரியர்க்கான உரைகள் விவசாயத் தோழர்கள் பாட்டாளிகளுக்கான உரைகள் போர்ப்படை உரைகள் வளர்ச்சி மன்றம் விஞ்ஞானிகள் மருத்துவ மக்கள் சேவகர்களுக்கான உரைகள் என ஏறக்குறைய அனைத்தையும் தொகுத்து மொழிபெயர்த்துள்ளார் தோழர் ரமேஷ். பிரம்மாண்ட முயற்சி.

12. வாத்து ராஜா       விஷ்ணுபுரம் சரவணன் / புக்ஸ் ஃபார் சில்ரன்
குழந்தைகளுக்கான கதை சொல்லியாக நமக்கு நம்பிக்கை தரும் புது வரவு விஷ்ணுபுரம் சரவணன். எளிமையான சொற்கள்… சுருக்கமான வாக்கிய அமைப்பு… சுவாரசியமான திருப்புமுனைகள் யதார்த்தமான குழந்தைத்தனம் எல்லாமே கைகூடி வருவதை வாத்து ராஜா வாசிக்கும் ஒருவர் உணரமுடியும். தமிழ்ச் சிறுவர் இலக்கியம் இவரிடம் நிறைய எதிர்பார்க்கிறது.

13. பாலூட்டிகளின் கதைகள்      ச.முகமதுஅலி / இயற்கை வரலாறு அறக்கட்டளை
கானுயிர்’ மாத இதழில் வெளிவந்த அழிந்துவரும் நில நீர்வாழ் பாலூட்டிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. அலுப்புத் தட்டாத எழுத்து. திகைக்க திகைக்க மூச்சுமுட்டும் புள்ளிவிபரக் குவியல் கிடையாது. நீர்யானை, காட்டெருமை, தேவாங்கு கவரிமான் என எதையும் பாக்கி வைக்கவில்லை. இனவிருத்திக் காலங்களில் காட்டெருமையின் குரலொலி வேறு மாதிரி இருக்கும் என்பது உட்பட பல அதிசய நுணுக்கங்கள் நூல் முழுக்க உண்டு. இயற்கை பேரிடரிலிருந்து மனித இன அழிவு வரை அனைத்திற்கும் நாமேதான் காரணமாக இருக்கிறோம் எனும் குற்ற உணர்வை நெஞ்சில் அடிக்கும் முயற்சி.

14. வேர் முளைத்த உலக்கை கவி.பச்சோந்தி   ஐயோ என வலி ஏற்படுத்தும் சுரீர் ஒவ்வொரு கவிதையிலும் உண்டு. கிராமங்களின் கதையைப் பதறப் பதற வாசித்து விம்மல்களை விழுங்க முடியாமல் ஏற்படும் பரிதவிப்பு அடங்க நாட்களாகும். பச்சோந்தி எனும் பெயரில் இருந்த கவர்ச்சியாலும் வேர்முளைத்ததா உலக்கைக்கு எனும் வியப்பினாலும் கையிலெடுத்த ஒரு புத்தகம் இது. எதேச்சையாக வரும் மழைத்துளி / வேர்களை கட்டிக்கொண்டு அழும் / வேர் இருந்த இடத்தையேனும்… என்றெல்லாம் வாசிக்க வாசிக்க நாம் கொன்றுவிட்ட நம் உயிர் கிராம ஜனங்களை இழந்த பரிதவிப்பு வெடிக்கிறது. உண்மைதான்… நாகரீக குண்டு விழுந்து / யாழ்ப்பாண நூலகமாய் சாம்பலாகியது / மானிட உறவுகள்.

15. மார்க்சிய மூலநூல் : வாசிப்புக்கான கையேடு
மாரிஸ் கார்ன் ஃபோர்த்  தமிழில்: மிலிட்டரி         பொன்னுசாமி  பாரதி புத்தகாலயம்
மாரிஸ் கார்ன் ஃபோர்த்துடன் கைகோர்த்தால் போதும் மூலதனமும் அரசியல் பொருளாதாரமும், ஏன் வர்க்கங்களின் தோற்றம் முதலாளித்துவ உற்பத்திமுறை பொருள் முதல் வாதம் என அனைத்தும் வாசித்த மேன்மை ஏற்படுகிறது. மேடைகளில் இடதுசாரி முழக்கங்களை, தோழமை வகுப்பு வார்ப்புகளை அடைய ஒரு குயிக் ரெபரன்ஸ் இந்த நூல். மிலிட்டரி சாரின் சமரசமற்ற மொழிபெயர்ப்பையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

16. அன்றாட வாழ்வில் அறிவியல்
ச.தமிழ்ச்செல்வன் / அறிவியல் வெளியீடு
இந்த அறிவியல் நூலில் உள்ள சமைப்பது யாருடைய வேலை எனும் கட்டுரைக்காகவே இதை முன்மொழிவேன். உங்களுக்கு மூளை இருக்கா என்பது முதல் இருட்டு எனக்குப் பிடிக்கும் என்பது வரையிலான அசத்தல் தொகுப்பு. அதிலும் நீங்க எந்த சாதி கட்டுரை மிகஅற்புதமானது. அறிவியல் பார்வையில் நமது வாழ்வை நமது வரலாறை… நமது எதிர்காலத்தை எப்படி அணுகவேண்டும் என நாம் தமிழ்ச்செல்வனிடம் தான் கற்கவேண்டும். பிள்ளையார் பால் குடித்த மர்ம முடிச்சு விடுபடும் இடம் புத்தகத்தின் வெற்றித் தருணம்.

17. இந்தியப் பொருளாதாரம்
வே.கலியமூர்த்தி / சுடரொளி பதிப்பகம்
பேராசிரியரின் இந்த நூல் பல்.கழகப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 1987ல் வெளிவந்து பதினான்காவது பதிப்புக் கண்டுள்ளது. விவசாய உற்பத்தி திறன் நம்நாட்டில் மட்டும் வேறுமாதிரி கணக்கிடப்படுவதை நூல் சுட்டும் பாங்கு அதிசயிக்க வைக்கிறது. பொதுவாக பொருளாதாரப் பேராசிரியர்கள் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாதவர், கூட்டத்தில் நானும் ஒருவன். எனினும் சிறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் பற்றிய அத்தியாயம் ஒன்றிற்காக இவரைப் பற்றிய அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்தது.

18. கௌதம புத்தர்                 மயிலை சீனி.வேங்கடசாமி / கானல் வெளியீடு
புத்தரையும், தர்மத்தையும் சங்கத்தையும் முன்வைக்கும் தமிழின் தேர்ந்த பிரதியாக இது எனக்குப்படுகிறது. அழுக்குகளிலேயே அறியாமைதான் கொடிது. அது குற்றம். உடம்பினால் உண்டாகும் குற்றம், மனதினால் உண்டாகும் குற்றம், நாவினால் உண்டாகும் குற்றம்… புத்தரின் குற்றம் குறித்த எளிமை பாகுபாடு மிகக்கச்சிதம். புத்தமதத்தின் நான்கு வாய்மை, எட்டு மார்க்கம், பன்னிருநிதானம்  எனக்காட்டி அந்த மார்க்கத்தைப் பற்றிய ஒரு புஜபிரிண்ட் போல விரியும் நல்ல முயற்சி இது.

19. மார்க்சிய அரசியல் பொருளாதாரம்
வெங்கடேஷ் ஆத்ரேயா (தமிழில் : இலக்குவன்)         பாரதி புத்தகாலயம்
எனது பேராசிரியர் பொருளாதாரம் பற்றி நடத்தவேண்டும் நாம் கேட்க வேண்டும். தமிழ் மொழிபெயர்ப்புதான் என்றாலும் அவர் நம்முன் உட்கார்ந்து அவருக்கே உரிய வேகமான தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது போலவே இருப்பது இந்த மொழிபெயர்ப்பின் வெற்றி. அரசியல் பொருளாதாரத்தை முழுமையாய் கற்க இந்த நூல் ஆதாரம். ஆத்ரேயாவின் அணுகுமுறை நமது அன்றாட வாழ்வியலில் இருந்து பிரச்சனையைத் தொடங்குவதால் –  பயணம் மிகவும் இலகுவானதாகி விடுகிறது.

20. அமேசான் காடுகளும் சகாரா                  பாலைவனமும் எப்படித் தோன்றின
பெ.கருணாகரன் / குன்றம் வெளியீடு
பத்திரிகையாளராக அறியப்பட்டிருக்கும் பெ.கருணாகரன் குழந்தைகளுக்காக எழுதி இருக்கும் சிறப்பான முயற்சி இது. தவளையின் பிறந்தநாள் கொண்டாட்டம் முதல், காட்டில் ஆணழகன் போட்டி வரை பதிமூன்று கதைகள்… 13 சுட்டிகள் அவைகளுக்கு ஓவியம் வரைந்திருக்கிறார்கள். இருநூறு ரூபாய்க்காக மரத்தை வெட்டக் கிளம்பி தேனீக்கள் தந்த தேனை விற்று அதைப்பெற்று மரம் வெட்டாமல் மனம் மாறும் குப்பன் கதை மனதைத் தொடுகிறது.

21. துடைக்கப்படாத ரத்தக்கறைகள்  யோகி / வல்லினம், மலேசியா
மலேசிய நண்பர்கள் அனுப்பிவைத்த அரிய தன் வரலாற்று நூல்… அதுவும் ஒரு பெண்ணின் போராட்டம். தந்தை இறந்ததால் வெளிநாட்டு வேலை தேடிப் போகும் மருத்துவ தாதி (நர்ஸ்) யாக அவள் ஒரு பதினாறு வருடங்கள் படும்பாடுகள் நம்மைக் கலங்க வைக்கின்றன. ரத்தக்கறைகள் ஒன்றிரண்டல்ல. ஆனால் இந்தப் புத்தகத்தின் பெரிய பலம் யோகி தன் இரக்கம் தேடவில்லை என்பதுதான். அவர் ஒவ்வொரு வேலைக்கும் தாவும்போது மலேசியாவின் அவலங்களைச் சேர்ந்தே அனுபவித்து நாம் பலபல பாடங்களைக் கற்கிறோம். இடையே சாதி, கூலிவாழ்க்கை, தோட்டத் தொழிலாளர், நகர விலைமாதர் என விரியும் பல விவாதங்கள்… தமிழுக்கு நேர்ந்திருக்கும் புதுவகை, நம்மால், துடைக்க முடியாத வகை –  ரத்தக்கறை!

22. எடிசனைப் பற்றிய சின்னஞ்சிறு கதைகள்          பி.பி.கே.பொதுவால் (யூமா வாசுகி) /   அறிவியல் வெளியீடு
குழந்தைகளுக்கு எடிசனை இதைவிட அழகாக அறிமுகம் செய்ய முடியாது. 1000 கண்டுபிடிப்புகளுக்கு மேல் நிகழ்த்திய நமது அன்றாட வாழ்வின் அறிவியல் சக்ரவர்த்தியைக் கதை கதையாக வளையவிட்டு நம் முன்நிறுத்தும் பொதுவால், அவரது வறுமை வாழ்வு, எதையும் கேள்விக்கு உட்படுத்தும் பண்பு, புரியாததைப் புரியும்வரை விடாமல் முயலும் பிடிவாதம், பணக்காரர் ஆன பிறகும் மிஞ்சிய மனிதாபிமானம் என வரிசையாகக் காட்சிப்படுத்தி ஈர்க்கிறார்.

23. இதுவொன்னும் பழய விசயம் இல்லீங்… சாமீ…  ஆதவன் தீட்சண்யா / மலைகள்
சாதிக் கொடுமைகள் நிகழும்போது களத்தில் தலையிடாமல், சாதியத்தின் தோற்றம் வளர்ச்சி… எனப் பேசி எழுதி வியாக்கியானம் செய்து பிழைத்து திருப்தி கொள்பவர்களைப் பார்த்து இந்த நூலில் ஆதவன் முன்நிறுத்தும் மணிகண்டன் எனும் 14 வயது சிறுவனை நீங்கள் சந்திக்கவேண்டும்… சாதிய வெறியர்களிடம் சிக்கி சாம்பலும் கிடைக்காதவர் குரலைப் பதிவுசெய்து பத்துக் கட்டுரைகளைத் தந்திருக்கிறார். ஊர் கொளுத்திகள், தோலிருக்கச் சுளை முழுங்கிகள், ஆண்டபரம்பரை அப்பா டக்கரையும்கூட அவர் விடவில்லை. தனது கடமையைச் செய்யாத சட்டத்தை நம்முன் குற்றவாளி ஆக்கி பல தமிழின  –  தலைவர்களின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

24. தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வும் கலையும்   ஜி.என்.பணிக்கர் / வஉசி நூலகம்
விசாலத்தையும் ஆழத்தையும் ஒருங்கே கொண்ட கடலைப் போன்றவை தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள். அவரைப் பற்றி எழுதாத ஒரு நவீன பித்தனில்லை. இந்தபுத்தகம் மலையாளத்தில் எழுதப்பெற்று தமிழுக்கு வந்துள்ளது என்றாலும் உத்திரகுமாரன் மொழிபெயர்ப்பு தமிழின் மூலநூல் மாதிரி நம்மை உணரவைப்பது. தனக்கே எதிராக வாழ்ந்தவர் தஸ்தயேவ்ஸ்கி. உலகின் சிக்கல்களை பின்னிப் பிணைய வைத்து அதை விடுவிக்கும் பொறுப்பை வாசகனிடம் விடும் முதல் வேதாளத்தை அதன் ரத்தமும் சதையுமாய் முன்வைப்பது அவ்வளவு எளிதல்ல. பணிக்கரின் பிரபலமான பிரதியை மறுவாசிப்பு செய்யும்போது இன்று புதிதாய்ப் பிறந்தோம் என மனம் துள்ளுகிறது.

25. ஒரு புரட்சிக்காரனின் கையேடு  சேகுவாரா (லதா ராமகிருஷ்ணன்) / வஉசி நூலகம்
நான் அந்நியனாக உணர்ந்ததே இல்லை. கியூபாவில் கியூபனாக, கவுதமாலாவில் கவுதமாலனாக, மெக்ஸிகோவில் மெக்ஸிகனாக, பெரூவில், பெரூவியனாகவே உணர்ந்திருக்கிறேன். இங்கேயும் சரி எங்கேயும் சரி. அதுதான் என் இயல்பான ஆளுமை  – சேவின் இதுபோன்ற விளாசல்களுடன் ஒரு கையேடு தோழர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் நத்தனின் அற்புத வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. மரணத்தை வென்றவரின் புரட்சிப் பயணத்தை ஏராளமான புகைப்படங்களுடன் தந்திருக்கிறார்கள். எழுச்சி ஆவணம் இது.

26. வடிகால்கள் (கவிதை)  பொன்.கண்ணகி / என்.சி.பி.எச்.
காதலனாக இருந்தபோது / காமதேனுவைக் கொண்டுவந்து வாசலில் / கட்டுவேன் என்றாயே / கால்வயிற்று கஞ்சிக்குக்கூட என் பிறந்த வீட்டை எதிர்பார்க்கிறாயே / கணவனானபிறகு… இதுபோன்ற நியாயமான நறுக்குகள் பல உண்டு இந்த கையடக்க கவிதை நூலில். எதார்த்த வாழ்வின் சாடல்களில் தனது சாட்டையைச் சொடுக்கும் உன்னதம் கவிதையில் மட்டுமே சாத்தியம். பொன்.கண்ணகி ஒரு பள்ளி ஆசிரியை, கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளி ஆசிரியர்கள் படைப்பாளிகளாய் உருவாவது எத்தனை பெரிய மாற்றம்?!

27. வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்  ஆல் நார்மன் (ச.சுப்பாராவ்) / பாரதி புத்தகாலயம்
நம்மை முழுதும் விழுங்கி ஏப்பம்விடும் பகாசுர கார்பரேட் வால்மார்ட் கொல்லைப்புறமாக நுழைந்து ஆண்டுகள் ஆகின்றன. உணவுப் பாதுகாப்பு தரச் சட்டம் மேக்கி மீது பாய்ந்த போதுதான் மேக்கி ஒரு அயல்நாட்டுக் கம்பெனி என்பதே நம்ம ஆட்களுக்குத் தெரியவந்தது. ஆல் நார்மன் விஷச்செடியின் வேர்களையே நமக்கு காட்டிவிடுகிறார். குறிப்பாக வால்மார்ட் குறித்த 10 மயக்கங்களை அவர் உடைக்கும் இடம் முக்கியம். சுப்பாராவின் அடுத்த அவசியமான பங்களிப்பு இது.

28. யுகத்தின் முடிவில்  இராவதிகார்வே  (விவேகானந்த கோபால்) / சாகித்ய அகாடமி
மகாபாரதம் இடைச் செறுகல்கள் அதிகம் கண்ட ஒரு கதை என்பது இராவதிகார்வேவின் நிலைப்பாடு. ஒரு பெண் எழுத்தாளர் மகாபாரதத்தை அணுகி தனது கடும் தாக்குதலைத் தொடுத்த முதல் அனுபவம் இந்தப் புத்தகம். 50 வருடங்கள் மகாபாரதத்தின் ஆய்வு நடந்து உண்மை சுவடிகளை எடுத்தால் பல பாத்திரங்கள் காணாமல் போகின்றன. 7 1/2 லட்சம் சுலோகங்களில் 89,136 மட்டுமே ஆய்வில் ஏற்கப்பட்டன… காந்தாரி, குந்தி, திரௌபதி என விரியும் நூல் யுகத்தின் முடிவில் கட்டுரையோடு காலத்தைக் கடந்த பாரதம் சாதாரணப் பெண் மக்களின் போராட்டப் பதிவு என நிரூபணமாகி முடிகிறது. மராத்தியிலிருந்து நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பு.

29. சொல்லுக்குள் ஈரம்  (ஆர்.சூடாமணி படைப்புலகம்) கே.பாரதி / வானதி பதிப்பகம்
ஆர்.சூடாமணியின் கதைகளில் எனக்குப் பிடித்தது இரண்டாம் அப்பா. கணவன் இறந்தபின் மறுமணம் செய்யும் ஒரு பெண்ணின் மகன் தன் புதிய தந்தையோடு கொள்ளும் உறவுச் சிக்கலை சித்தரிக்கும் அற்புதம். 1980ல் அப்படி ஒரு கருவை முன்மொழிய அசாத்திய துணிச்சல் தேவை. இந்தப் புத்தகத்தில் அதுபற்றி அவரது தோழி பாரதி என்ன எழுதியிருப்பார் எனத் தேடினேன். சூடாமணியின் எழுத்து மழையை அங்குலம் அங்குலமாய் நம்முன் கொண்டாடி பெரிய நீச்சல் குளமே கட்டிவிட்டார். நூலின் முடிவில் எழுத்துலக ஜாம்பவான்கள் சூடாமணி பற்றி பேசிய கருத்துக்களை தொகுத்திருப்பது கூடுதல் சிறப்பு.

30. வட்டியும் முதலும்  ராஜுமுருகன் / விகடன்
ராஜுமுருகன் விகடனில் எழுதிய நெகிழ்ச்சித் தொடர் இது. வெகுஜன இதழ் ஒன்றின் தரம் தேடும்  – புத்தெழுச்சியில் களம் கண்டு வென்ற எழுத்து. பல கட்டுரைகள் நம்மை உருக வைத்து யதார்த்தம் சுட தவிக்க வைக்கின்றன. நிஜத்தில் பலரைப் பலவாறு பாதித்தும் சிலரை தீர்வுக்கு இழுத்தும் வேறு சிலரை பதப்படுத்தியும்… இளைய தலைமுறையை வாசிக்க வைத்தும் வெளிவந்த வட்டியும் முதலும் நூலின் ஆசிரியர் இப்போது சினிமா பக்கம் போய்விட்டது எழுத்துலகுக்கு நேர்ந்துள்ள ஏதோ வகை வெற்றிடம் என இதை வாசிக்கும்போது தோன்றுகிறது.

31. வெயிலில் நனைந்த மழை  ச.மணி   இடையின் இடச்சி நூலகம்  /  திருப்பூர்
‘பெய்யெனப் பெயும் மழை’ காலத்திலிருந்தே மழை பற்றித் தமிழுலகம் பாடிக் களித்து வருகிறது. எல்லார்க்கும் பெய்யும் மழை ச.மணி போன்றவர்க்கு கவிதையாய்க் கொட்டுகிறது. காட்சிகளின் கம்பீரம் சொற்களில் மட்டுமல்ல இத்தொகுதியின் அழகான அட்டை, நண்பர் அறிவுமதியின் அணிந்துரை என யாவற்றிலும் தொடர்வது நல்ல பருவமழையை அனுபவித்த திருப்தியைத் தருகிறது.

32. துரோகம் வெட்கமறியாது தெ.சுந்தரமகாலிங்கம் / வெண்ணிலா பதிப்பகம்
ஜனசக்தி இதழில் தெ.சு.அவர்கள் எழுதிய தொடர் அரசியல் விமர்சனங்களை வாசித்து வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்த நான்… அதன் மொத்த தொகுதி கைக்குக் கிடைத்ததும் வாசித்து முடித்தேன். சமீபத்திய கட்டுரைகள்! தமிழ்ச் சூழலின் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தன் பங்கிற்கு துரோகத்தைக் கையிலிலெடுத்து வெட்கமின்றி தமிழனத் தலைவர், காவிரித்தாய் பட்டங்கள் பெற்று பேனர்களில் பேயாட்டம் ஆடுவதை இடதுசாரிப் பார்வையில் கிழித்திருக்கிறார். கச்சத்தீவு முதல், அலைக்கற்றை ஊழல் வரை நாம் அறியாத பல உண்மைகளை விபரங்களை அடுக்கி தோழர் தெ.சு. திகைக்க வைக்கிறார். தி.க.சி. குறிப்பிடுவதுபோல சமநீதியை நம்புபவர்கள் அவரை கண்டிப்பாக ஏற்பர்.

33. சாதி ஒழிப்பு  டாக்டர் அம்பேத்கர்  /   பாரதி புத்தகாலயம்
சாதி பற்றிய அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை ஆழமாகத் தாங்கிய அவரது முதல் எழுத்து 1937ல் வெளிவந்த கட்டுரை. இந்துமதம் அழிந்தால்தான் சாதி அழியும் என அவர் கூறியபோது நாடே அதிர்ந்தது. அதில் பொதிந்திருந்த உண்மை பலரை சுட்டது. அடுத்தபடியாக இந்த விஷயத்தில் காந்தியடிகளுக்கு அவர் தந்த தக்க பதிலடி. இவை இரண்டையும் தொகுத்து வழங்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு.

34. முத்தங்களின் கடவுள் மனுஷி / உயிர்மை
சமீபகாலமாக இலக்கிய உலகில் உலாவரும் எழுத்துச் சாரலில் அடிக்கடி நம்மை நனைக்கும் பெயராக மனுஷி இருக்கிறது. அச்சமற்ற சொற்கள், அமைதியற்ற வாக்கியங்கள், வெட்கமறியாத முயற்சிகள்… தயக்கமற்ற ஆக்கிரமிப்புகள் இரக்கமற்ற தாக்குதல்கள் எனக் கிளம்பி இருக்கும் இந்த நவீன எழுத்துப் பெண், இந்தத் தொகுதியின் ‘கடவுள்கள் தியானத்தில் இருந்தபோது…’ கவிதை நம் மனிதநேயக் கனவுகளைத் தூக்கிலிடும் சூழல்களைக் கிழித்துக் காட்டும் தைரியம் நம்மைச் சுடுகிறது. இந்தத் தொகுதி முழுதும் நிறைந்துள்ளது மகிழ்ச்சியை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள முடியாத நம் ஆன்மாவின் பெண் வடிவம்… ஆணாதிக்க சமூகத்தின் கல்லறை மீது வைக்கப்படும் மலர்க்கொத்து இது.

35. கோரா இரவீந்திரநாத் தாகூர் (கா.செல்லப்பன்)            சாகித்ய அகாடமி
உண்மையான இந்தியன் யார்? என்ற வினாவை 1909ல் கடுமையாகப் பரிசீலித்து தாகூர் எழுதிய பிரம்மாண்டம் இது. நோபல் பரிசுக்கு முன் எழுதப்பட்டுவிட்ட புதுமை. அனாதைக் குழந்தைகள் தாங்கள் யார் என்பதை அடையாளம் காணும் கருத்தோட்டம் 700 பக்கங்களுக்குப் பயணம் செய்கிறது. அமரகவியின் சுயதேடல் இது… நாடு பிரம்மசமாஜத்தை ஆட்கொண்டு விவாதித்த காலத்தில் அதுகுறித்த தனது பதிவை ஆழமாகப் பதிக்கும் தாகூர் பெண் விடுதலையை சாதி மத சம்பிரதாயங்களை விரட்டும் சாட்டையைக் கையிலெடுக்கிறார். பிரம்மோ சம்பிரதாயப்படி நடக்கும் சுசாரிதாவின் திருமணத்தில் கோரா நடத்தும் உரையாடல் அற்புதம்.

36. கடல் முத்து (அயல் சிறுகதைகள்)     க.நா.சுப்பிரமணியம் / வஉசி நூலகம்
தமிழில் அயல்மொழிச் சிறுகதைகளைத் தொடர்ந்து வழங்கியதில் முன்னோடியாக இருந்தவர் க.நா.சு. அவரது ஆரம்ப முயற்சி இது. இப்போது மறுபதிப்பாகி உள்ளது. ஆண்டோனியோ பாகஸாரோவின் இத்தாலியக் கதையில் தொடங்கி கடல் வாத்து குறுநாவலின் முடிவில் சுவர்க்கத்தில் காரி ஆஸென் எனும் யோஹன் போயரின் கதை வரை 112 பக்கம் தொடரும் இந்தப் புத்தகம், பிரெஞ்சு ஸ்வீடிஷ் நார்வே என அவரது பாணியில் உலகம் சுற்ற வைக்கிறது.

37. அ.ச.ஞானசம்பந்தன்     நிர்மலா மோகன் / சாகித்ய அகாடமி
கம்பன் கலை, பெரியபுராண ஆய்வுகள், திருவாசக சிந்தனைகள் உட்பட 35 சிறந்த திறனாய்வுகளின் ஆசிரியர் ஞானசம்பந்தன் தலை சிறந்த பேச்சாளரும்கூட… ஆனால் அவர் ஜான் டூவியின் Re Construction in Philosophy நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் என வாசிக்கும்போது இன்ப அதிர்ச்சி… மதுரை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக இருந்தது தெரியும்… சென்னை அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வேலையே அவர் முதலில் பார்த்தது என்பது தெரியாது. இப்படிப் பல அரிய தகவல்களுடன் நூல் மிளிர்கிறது.

38. அலெக்சாண்டர் என்ற கிளி          எஸ்.செந்தில்குமார் / உயிர்மை
எஸ்.செந்தில்குமாரின் 17 கதைகள் அடங்கிய தொகுதி இது. சோறு தண்ணீர் கதை மிக மிக அற்புதம். ஞாபகங்களை உண்ணும் மீன்கள் கதையில் வரும் வயோதிகர்களின் ஞாபகங்கள் தொகுக்கப்பட்டால் நமது சந்ததிகளின் கொடுங்குற்றக் குன்று ஒன்றை வளர்க்கலாம்… எந்த நினைவையும் உதிர்க்க யாருமே தயாராக இல்லை. ராமநாதன் வயது 44, போஜனகலா எல்லாம் நம் தமிழின் நவீன கதையாடலில் வாசக வெளியோடு நடக்கும் பகடி… விபத்துகள் சாலைகளில் மட்டுமா ஏற்படுகின்றன… கதைக் கரு விபத்துக்குள்ளாகும் போது நமக்கு செந்தில்குமார் மாதிரி வித்தக ஓட்டுனர்கள் கிடைக்கவே செய்கிறார்கள்.

39. சாதி, வர்க்கம், மரபணு                        ப.கு.ராஜன் / பாரதி புத்தகாலயம்
நம் இடதுசாரிகளின் மிகப் பெரிய சவாலாக விளங்குவது சாதி. இந்த நூலின் இந்திய சமூகக் கட்டமைப்பும் மரபணுவும் கட்டுரை குருபரம்பரையை உடைத்து குற்றப் பரம்பரையைத் துவைத்து நிலப்பிரபுத்துவ ரத்தத்தை வெளுத்து சுட்டெரிக்கும் ஒரு வான்வெளியில் காயப்போடுகிறது. அறிவியலை எப்படி அணுகவேண்டும் என ப.கு.ராஜனிடம்தான் கற்க வேண்டும்… இந்திய, திராவிட, ஆரிய டி.என்.ஏ.என எதுவும் இல்லை. சாதியை வர்க்கப்படுத்திப் பார்த்தால் மில்லியன் கோடி பணக்காரன் பார்ப்பன பனியா, தாகூர், எனும் உயர்சாதிக்காரன் தான் என்பதை ஒரு 63 பக்க பாடப்புத்தகமாக அறைகிறார் ராஜன்.

40. தமிழ்சினிமா  காண்பதும்- காட்டப்படுவதும்           அ.ராமசாமி / உயிர்மை
தமிழ் நிகழ்கலை விமர்சகர் தோழர் அ.ராமசாமி சமீபத்திய திரைப்படங்கள் குறித்த ஆழமான நவீன விமர்சனங்களுக்கு சொந்தமானவர். வெறும் ரசனை எனும் வெளியைக் கடக்க தமிழ்த் திரைப் படங்களுக்கு கைகொடுத்தவர். படம் ஓடுமா எனும் கேள்வியைப் படம் பார்க்கிறவர் கேட்கும் அவலம் தொடரும் சினிமா ஆட்சிக்காலத்தில் தனது தத்துவார்த்த, கோட்பாட்டு நெறி சார்ந்த கேள்விகளைப் பிரபலமான பிரதிகள்மீது பதிக்கும் ஆற்றல் அவர் மாதிரி சிலருக்கே கைவந்திருக்கிறது… பார்வையாளர்கள் சினிமாக்காரர்களை எப்படியெல்லாம் தண்டிக்கிறார்கள் என்பதை நுண்மையாக விவரிக்கும் நூல் இது.

41. பெருவெடி  – பிரபஞ்ச வரலாறு  எம்.எஸ்.                                                                                                             முகமது பாதுஷா  எஸ்.டி.பாலகிருஷ்ணன் /அறிவியல் வெளியீடு
புவி எப்படித் தோன்றியது. ஆறே நாளில் ஆண்டவர் படைத்ததா. ஆதாம் ஏவாள் கதைப்படி வந்ததா… இந்து தர்ம சாஸ்த்திரப் படையலா… இப்பிரபஞ்சத்தின் தோற்றத்தை மிக எளிய வாசகங்களில் மிக அற்புத படங்களுடன் வண்ண அட்டைகளில் குழந்தைகளுக்காகத் தந்திருக்கிறார்கள். பெருவெடிக் கோட்பாடு முதல் பரிணாமம் வரை இத்தனை சிறிய புத்தகத்தில் அடக்க முடியுமா… என ஆச்சரியம் தரும் முயற்சி.

42. இலங்கை –  பிளந்து கிடக்கும் தீவு சமந்த் சுப்பிரமணியம் / கிழக்கு
ஆங்கிலத்தில் வெளிவந்த The Divided Island நூலின் தமிழ் வடிவம் இது. எழுதி எழுதித் தீராத ஈழத்து துயரக் கதைகளை அந்த நிலத்தில் நேரில் கள ஆய்வு செய்து பதிவு செய்திருக்கிறார் சமந்த். புத்த பிக்கு ஒருவர் இடதுசாரியாகித் தேர்தலில் வென்று தமிழர்களின் நியாயத்திற்காகப் பேசும் சிங்களர் ஆகிறார். 2000 ஆண்டுகளாக வாழும் தமிழர்களுக்காக கிருத்துவர், இசுலாமியர் எனப் பலரும் பேசுகின்றனர்…யாருடைய வசதி வாய்ப்பிற்காகவோ காவு கேட்கும் அந்த இறுதிப்போரின் சித்தரிப்பு மனதைச் சுட்டெரிக்கிறது.

43. அம்பேத்கர் என்ன சொல்கிறார்                   கே. சாமுவேல் ராஜ் / பாரதி புத்தகாலயம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலர் சாமுவேல் ராஜ் களத்தில் நிற்பவர். இந்த நூலில் அம்பேத்கரின் மொத்த சங்கதியை கற்றுச் சுருக்கி நமக்கு வாசிக்கத் தருகிறார். இதில் இந்தியாவில் சிறுநில உடைமைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் மிக நல்ல கட்டுரை அதிலிருந்து நீண்டு கருத்தாக்கம் இறுதியாக உழுகிறவர்களுக்கு நிலம்கொடு என வாட்டாந்தார் மசோதா வரை எதையும் விட்டுவைக்கவில்லை.

44. அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன்      மா.பாலசுப்பிரமணியன் / கானல் வெளியீடு
ஐன்ஸ்டீன் பற்றி மா.பாலசுப்பிரமணியன் முப்பெரும் அறிஞர் என யூக்ளிட், நியூட்டன் ஐன்ஸ்டீன் என வரிசைப்படுத்தும் போதே சுவாரசியம் தட்டிவிட்டது. பள்ளிப்பருவத்தில் கல்வியை வெறுத்து கல்லூரியில் பெரும்பாலும் வேறு ஏதாவது படித்து ஆனால் பேரறிஞர் ஆனவர் ஐன்ஸ்டீன் என்பதை ஆசிரியர்கள் படிக்கவேண்டும். பெற்றோர்கள் உணரவேண்டும். குழந்தைகள் நம்பவேண்டும்.

45. புற்றுநோய் வெற்றி கொள்ளும் வழிகள்              ஜட்ஜ் வி.பலராமய்யா / வஉசி நூலகம்
இன்று இந்தியாவில் ஐவரில் ஒருவருக்குத் தோன்றும் அபாயத்தோடு தொடரும் புற்றுநோய், சிகிச்சை அற்ற நோயாகவே இன்றும் இருப்பது அவலம். ஆனால் வைத்தியர் பலராமய்யா உணவுக்கட்டுப்பாடு மக்கள் நாட்டுமருத்துவ சிகிச்சை மாற்று மருந்து உட்கொள்தல் மூலம் அதை முற்றிலும் அழிக்க முடியும் எனக் காட்டுகிறார். இந்த நூலின் கேள்வி பதில்கள் அருமை.

46. எளிய அறிவியல் பரிசோதனைகள்             கே.காத்தவராயன் / அறிவியல் வெளியீடு
இந்த நூலில் இருபத்திநான்கு அற்புத அறிவியல் சோதனைகள் உள்ளன. பலவற்றை வகுப்பில் சர்வசாதாரணமாகச் செய்தும் பார்க்கலாம். மிக எளிய விலையிலாப் பொருட்களைக் கொண்டு செய்ய முடிந்த அறிவியல் விந்தைகள் இவை.

47. ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் வரலாறு)            பி.என்.எஸ்.பாண்டியன் / வெர்சோபேஜஸ்
புதுச்சேரி வரலாறுகளில் இது தனி ரகம். அதைத் தமிழகத்தோடு இணைத்து விட மொரார்ஜி அரசு    எம்.ஜி.ஆரோடு சேர்ந்து 1979ல் திடீர் உத்தரவு பிறப்பித்தபோது புதுவையில் எழுந்த அரசியல் எழுச்சியை முழுமையாய்ப் பதிவு செய்யும் நூல். அந்த ஆண்டு குடியரசுதின விழாவை முழு புதுவையும் புறக்கணித்தது முதல் மக்கள் போராட்டங்களை  பி.என்.எஸ். பாண்டியன் ஆவணப்படுத்தி உள்ளார். பிறகு தொடரும் அத்தியாயங்கள் புதுவை அரசின் வரலாற்றுத் தருணங்களைப் பதிவு செய்கிறது. திருமாவேலன், பிரபஞ்சன் என பரப்பரப்பான முன்னுரைகளும் உண்டு.

48. அபத்தச் சுவர்கள்  ஆல்பர்ட் காம்யு                ஏ.வி.ஜவஹர் / வஉசி நூலகம்
ஆல்பர்ட் காம்யுவின் வாழ்வைப்போலவே இந்தத் தொகுப்பும் முழுமையற்றதாகவே தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு மகிழ்வூட்டும் மரணம் அழகான கவிதைபோல் விரியும் கதை. அபத்த அறிவாராய்ச்சி முதல் அபத்த விடுதலை வரை தொடரும் காம்யுவின் அபத்த இலக்கியம் இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய வாழ்வின் மீதான இரக்கமற்ற காயத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி வழியும் ரத்தமாகவே படுகிறது. நோய் விரைந்து பற்றுகிறது… ஆனால் மெதுவாகவே குணமடைகிறது… இது 1000 டிகிரி காய்ச்சல்!

49. தீண்டத்தகாதவன்  (ஈழத்து தலித் சிறுகதைகள்)         தொ: சுகன் / பாரதி புத்தகாலயம்
தமிழக தலித் இலக்கியத்திற்கே வழிகாட்டியவர்கள் டேனியல் போன்ற ஈழத்து தலித் எழுத்தாளர்கள்தான். பெரும்பாலான தலித் எழுத்துக்கள் தன் வரலாறாகத்தான் படைக்கப்படுகின்றன. 1980களில் மராட்டியம் இதற்கு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1951ல் தமிழில் எழுதப்பெற்ற தலித் பதிவை வாசிக்கும்போது தமிழ் தான் அதற்கு முன்னோடி என உரத்துக்கூறி மனம் எழுச்சி பெறுகிறது. அ.மார்க்ஸை டேனியலோடு சேர்த்து வைத்து சந்தித்த காலங்களும் டேனியல் தலித் இலக்கிய விருது வழங்கிய காலங்களும் நிழலாடுகின்றன. தமிழ் உலகம் போற்றி வரவேற்க வேண்டிய காலப் பெட்டகம் இது.

50. உலகை மாற்றிய உயிரியல் அறிஞர்கள்             ப.ரவிச்சந்திரன் / அறிவியல் வெளியீடு
உயிரியல் நமக்கு வழங்கி உள்ள கொடை நமது ஆரோக்கிய வாழ்வும்தான். அலெக்சாந்தர் பிளெமிங், ஆண்டிரியஸ் வெசாலியஸ், லியோவென்ஹாக், காரல்லீனஸ் இவர்கள் இல்லாமல் இவ்வுலகம் வேறுமாதிரிதான் இருந்திருக்கும். சார்லஸ் டார்வினும் கிரிகர் மெண்டலும் தான் இன்றைய அனைத்துப் புரிதலுக்கும் பிதாமகர்கள். இந்தப்புத்தகம் இப்படியான ஜாம்பவான்களின் சரித்திரப் பங்களிப்பை சுருக்கமாக விவரிக்கிறது.

Related posts

Leave a Comment