You are here

கடந்து சென்ற காற்று – 8: வகுப்புவாதக் காற்று

ச.தமிழ்ச்செல்வன்

சென்னை ஐஐடி பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததைக் கண்டித்து சரிநிகர் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒருவர் எல்லோருக்கும் ஒரு நூலை இலவசமாக-விலையில்லாமல்-விநியோகித்துக்கொண்டிருந்தார்.எனக்கும் ஒன்று கொடுத்தார்.கொடுத்தவர் ரயில்வே தொழிற்சங்கத்தலைவர் தோழர் இளங்கோ.கொடுத்த  புத்தகம் பிபன் சந்திராவின் வகுப்புவாதம்- ஓர் அறிமுக நூல். தமிழாக்கம் மு.அப்பணசாமி.முந்நூறு பிரதிகள் வாங்கி வைத்துக்கொண்டு இப்படிப் பலருக்கும் அளித்து வருகிறார் இளங்கோ. நல்ல கரசேவை.
கடந்த பத்தாண்டுகளில் நான் அதிகத்தடவைகள் மீண்டும் மீண்டும்  வாசித்த புத்தகம் பிபன் ச்ந்திராவின் COMMUNALISM IN MODERN INDIA . புத்தகம் கிழிகிற நிலைக்கு வந்து விட்டது.நம் மனதோடு எளிய மொழியில் பேசுபவர் பிபன் சந்திரா.பெரிய ஆங்கில வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரடியான மொழியில் இருக்கும். COMMUNALISM-A PRIMER  என்கிற நூலே இப்போது அப்பணசாமி மொழிபெயர்த்திருப்பது. இது அதைவிட சுருக்கமான நூல்.
பிபன்சந்திராவின் கூற்றுப்படி நாம் வகுப்புவாத வன்முறைக்கு அஞ்ச வேண்டியதில்லை. வகுப்புவாதக்கருத்தியலும் அதன் பரவலுமே மிகுந்த அச்சத்துக்குரியவை.நாம் உடல் பொருள் ஆவி அனைத்தும் தந்து எதிர்க்க வேண்டியது வகுப்புவாதக் கருத்தியல். வன்முறை இல்லாமலும் வகுப்புவாதம் இருக்க முடியும்.ஆனால் வகுப்புவாதக் கருத்தியல் பரப்பப்படாமல் வகுப்புவாத வன்முறை எழாது.வகுப்புவாத வன்முறை எழும் பகுதியில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி இருந்தாலே அதை அடக்கிவிட முடியும்.ஆனால் மக்கள் மனங்களில் விழுந்துவிட்ட வகுப்புவாதக்கருத்தியல் விதையை அகற்றுவதுதான் சவால் மிகுந்த பணி என்பார் பிபன் சந்திரா.வகுப்புவாதத்துக்கு எதிரான நீண்டகாலக் கருத்துப்போராட்டம் தேவை.சுதந்திர இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகள் அந்தப்போராட்டத்தை நடத்தவே இல்லை என்பது அவரது சரியான கணிப்பு.இந்து வகுப்புவாதம் இந்துக்களுக்கும் இந்துயிசத்துக்கும் எதிரானது. சிறுபான்மை வகுப்புவாதம் சிறுபான்மை மக்களுக்கே எதிரானது என்கிற புரிதலை மக்களிடம் ஏற்படுத்த மதச்சார்பற்ற சக்திகள் தவறிவிட்டன.இடையறாத கருத்தியல்போர் நடத்துவது என்றால் என்ன என்பது குறித்த சரியான புரிதலே நமக்குள் ஏற்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.இடதுசாரிகளை விடவும் வலுவாகவும் உறுதியாகவும் சமரசமின்றியும் வகுப்புவாத்த்துக்கு எதிரான போராட்ட நடத்தியவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஆனால்,வகுப்புவாதக்கருத்தியலை எதிர்த்து குறிப்பாகப் பண்பாட்டுத் தளத்தில்-என்ன செய்தோம் என்று நுட்பமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறதுதான்.
வகுப்புவாதத்தின் மூன்று அடிப்படையான அம்சங்கள் – ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை யாகவும் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக பின்னிப் பிணைந்து வருபவையாகவும் – என பிபன் சந்திரா குறிப்பிடுபவை:
1.ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் மக்கள் எல்லோருக்கும் ஒரேவிதமான அரசியல், பொருளாதார, பண்பாட்டு மற்றும் சமூகத் தேவைகளும் கோரிக்கைகளும் இருப்பதாக நம்புவது
2.இந்தியா போன்ற ஒரு பல கலாச்சார தேசியங்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களின் தேவைகளும் கோரிக்கைகளும் பிற மதங்கள் சார்ந்த மக்களின் தேவைகளிலிருந்து வேறுபட்டவை என நம்புவது
3.ஒவ்வொரு மதம் சார்ந்த மக்களின் தேவைகளும் கோரிக்கைகளும் பிற மதத்தினருடையவற்றுக்கு எதிரானவையாகவும் பகைமையானவையாகவும் இருப்பதாக நம்புவது.
இந்த மூன்று நம்பிக்கைகளும்தான் வகுப்புவாதக் கருத்தியலின் அடிப்படைகள் என்பார்.இங்கு மதம் என்று அவர் எழுதியிருக்குமிடத்தில் சாதி என்றும் எழுதிப்புரிந்து கொள்ள வேண்டியதும் இருக்கிறது.
இன்று தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் மதம்சார் நடவடிக்கைகளின்  அளவு  ஊதிப்பெருத்துக் கொண்டே போகிறது. கடவுள் நம்பிக்கை என்கிற எளிதாகக் கிட்டும் வாகனத்தில் ஏறி வகுப்புவாதிகள் ஆழமாக ஊடுருவிச்செல்கிறார்கள்.மதச்சார்பற்ற சக்திகளும் பகுத்தறிவுவாதிகளும் கையறுநிலையில் நிற்பதாகத் தோன்றுகிறது.கிராம அளவில் அல்லது வார்டுகள் அளவில் மதச்சார்பற்ற சாதி சார்பற்ற நடவடிக்கைகளில் எல்லாப்பகுதி மக்களையும் ஒன்றிணைத்து ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பெரிய கோடாகப் போட்டு அவர்கள் கோட்டைச் சின்னதாக்க வேண்டும்.அதற்கான வாய்ப்புகளையும் வடிவங்களையும் உள்ளூர் அளவில் உருவாக்க வேண்டும் என்பார் பேராசிரியர் கே.என்.பணிக்கர்.
பிபன் சந்திராவின் இவ்விரு நூல்களும் பாரதி புத்தகாலயம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ‘(தமிழில்:ச.சுப்பாராவ்) மற்றும் காலனியம் (தமிழில்:அசோகன் முத்துச்சாமி) நம் வரலாற்றுப்பார்வையை இன்னும் தெளிவாக்கிட உதவும் நூல்களாகும்.
கடந்த மாதத்தில் வெவ்வேறு அரங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் வகுப்புவாதம் குறித்துப் பேச நேர்ந்தது. இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் கேள்வி-பதிலுக்கு என நேரம் ஒதுக்கும் பழக்கம் வந்துவிட்டது. அது ஆரோக்கியமான மாற்றம்.  இரண்டு இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.மதச்சார்பற்ற,ஜனநாயக,சோசலிஸக் குடியரசின் ஊழியர்கள் நாங்கள் எனக் கம்பீரமாக நிற்கிறீர்களா? என்கிற கேள்வியை முன் வைத்தேன்.சாதி,மதச் சாய்மானம் இல்லாமல் உங்கள் அன்றாடப்பணியை ஆற்றுகிறீர்களா?குஜராத்தில் அரசு ஊழியர்,காவல்துறை,நீதித்துறை என அனைத்தும் வகுப்புவாதக் கருத்தியலுக்குள் சிக்கியதைப்போல நாங்கள் ஆக மாட்டோம் என்கிற புள்ளியிலாவது உறுதியுடன் நிற்க மனப்பயிற்சி தேவை என வலியுறுத்தினேன். சாதி மதக்கருத்தியலிலிருந்து விடுபட அரசு ஊழியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மத்திய தர வர்க்க ஊழியர்களுக்கும் தத்துவார்த்தப் பக்கத்துணையாக நிற்க வேண்டிய ஒரு தேவை இன்று உள்ளது. தமிழக நடுத்தர வர்க்க மனோபாவத்துக்குள் இந்துத்வ கருத்தியல் மெல்ல மெல்ல ஊடுருவும் காலமாக இது இருக்கிறது.
வகுப்புவாதத்துக்கு இரையான மனநிலை, வகுப்புவாதம் தப்பு ஆனால் மோடி ஓகே, சிறுபான்மை வகுப்புவாதம் பற்றி நாட்டில் யாருமே பேச மாட்டேன்றிங்க  என ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் நிற்கிறார்கள். மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் மாண்புகள் எதுவும் ஊழியர் மன உலகத்துக்குள் போகவில்லை. இந்த மனநிலைகள் கிட்ட நின்று தொட்டுப்பார்த்தால் அச்சமூட்டுகிறது.
அரசு ஊழியர்,வங்கி ஊழியர்,இன்சூரன்ஸ் ஊழியர்,போக்குவரத்து ஊழியர் எனத் தம்மை இந்த அரங்கங்களுக்குள் நிற்கும் ஜீவராசிகள் என்றே தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மனப்போக்கு எல்லோரிடமும் இருக்கிறது. பொதுவெளிக்குள் இழுத்துப்போட தொழிற்சங்கத்தலைமைகள் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதையும் சில தலைமைகள் அதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.’அவர்கள்’ முந்திக்கொள்வார்களோ என்கிற பதட்டம் நமக்கு வருகிறது. ‘நாடு அழைத்தது ஆகவே நான் ராணுவ முகாமை விட்டு வெளியேறி மக்களிடம் பணியாற்றப்போனேன்’ என்று ராணுவக் கோர்ட்டில் கம்பீரமாக முழங்கிய தோழர் மேஜர் ஜெய்பால்சிங்கின் குரல் தேசமெங்கும் எதிரொலிக்க வேண்டிய காலமல்லவா இது? நன்னடத்தை விதிகளும் வர்க்க அரசின் சட்ட்திட்டங்களும் புரட்சிகர மனநிலைகளை ஒடுக்கிவிட முடியுமா? புயற்பறவைகள் அடுப்படியில் குளிர்காய்ந்து கொண்டிருக்க முடியுமா? சட்டபூர்வமான மேடைகளில் நின்று சட்டவிரோதமான’காரியங்களை எப்படி ஆற்றுவது என லெனின் காட்டிய பாதையை  உயர்த்திப்பிடிக்க வேண்டும்.
முத்தாய்ப்பாக, ஜூன் இறுதி வாரத்தில் ஒரு மாலைப்பொழுதில் சென்னையில் தமுஎகச  சார்பாக நடந்த ஒரு திரையிடல் நிகழ்வு பற்றிக் குறிப்பிட வேண்டும். ஆனந்த் பட்வர்தன் இயக்கிய IN THE NAME OF GOD ராம் கி நாம் என்கிற ஆவணப்படத்தைத் திரையிட்டோம். ஆனந்த் பட்வர்த்தனும்  கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றார். 24 ஆண்டுகளுக்கு முன்னால் அத்வானியின் அயோத்தியை நோக்கிய ரத யாத்திரையை மையப்படுத்தி வரலாற்றின் முன்பின்னாக நகரும் இப்படம் இன்றைக்கும் தேவையான ஒன்றாக பொருத்தமான ஒன்றாக இருப்பதைப் பார்வையாளர்கள் அனைவரும் உணர்ந்தோம்.
தனிப்பட்ட ஒரு மனிதராக-பொறுப்புள்ள கலைஞனாக-ஆனந்த் பட்வர்தன் தொடர்ச்சியாக வகுப்புவாத்த்துக்கு எதிராகப் படங்கள் எடுத்து வருகிறார்.அவரது In the name of god, Father son holy war, War and peace,We are not your monkeys, Jai Bhim Comrade  போன்ற படங்கள் வகுப்புவாதத்தை வலுவான ஆதாரங்களுடன் தோலுரிக்கும் படங்கள். ஒவ்வொரு படத்தையும் நீதிமன்றம் சென்றுதான் வெளியில் கொண்டுவந்தார். இவ்வளவு பெரிய கலைப்பொக்கிஷங்களை மக்களிடம் கொண்டு செல்ல மதச்சார்பற்ற சக்திகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எத்தனையோ மாநிலங்களில் இப்படங்களை அவரவர் மொழியில் மாற்றம் செய்து மக்களிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும். யாருமே செய்யவில்லை என்கிற ஆழ்ந்த வருத்தத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.மதவாத சக்திகள் இதுபோன்ற ஆயிரக்கணக்கான கலாச்சாரப் படைப்புகள் மூலம் மக்கள்  மனங்களைத் தகவமைத்து வெற்றி கண்டுள்ளார்கள். ஆனால் மதச்சார்பற்ற சக்திகள் இத்திசையில் துரும்பைக் கூடக்கிள்ளிப்போடவில்லை அல்லது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்றார்.
ஆனந்த் பட்வர்தனின் பேச்சில் பிபன் சந்திரா மீண்டும் உயிர்பெற்று வந்து நிற்பதுபோலிருந்தது எனக்கு. மானசீகமாக பெஞ்ச் மீது ஏறி தலைகுனிந்து நின்றேன்.                                   (தொடரும்)

Related posts

Leave a Comment