You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல்திறக்கும் நாடக நிலம் – 14: வாழ்வே சங்கீதமும் மாயபொம்மையும்…

ச. முருகபூபதி

என் குழந்தைப்பருவத்தின் நேசத்தால் நனைந்த வார்த்தைகளை நான் தேடிப்பார்த்தபோது காகிதத்தால் செய்யப்பட்ட நீலநிற இன்லாண்ட் கடிதங்களை திறந்தபடியே நினைவுக்குகைகளில் உலவும் பலரும் கரம் நீட்டி அன்பின் ஈரத்தை என்மீது பூசியபடி இருக்கின்றார்கள். ஆறாம் வகுப்பு முதல் வருடம் படித்து பெயிலாகி இரண்டாம் வருடம் திரும்பப்படித்து பாஸான போது தொடர் மழை நாளில் நான் பிரியமாக வளர்த்த சேவல்கள் இரண்டும் கருங்கோழிகள் ஐந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனது. பால்யத்தில் என் அதீத காதலர்களாக அவைகளே இருந்தன. அன்று எங்கள் வீட்டைச்சுற்றி தாவனிமாடுகள் பல வாரங்கள் கிடைபோடப்பட்டு மாட்டு வியாபாரிகள் துண்டு போர்த்தி கைகுலுக்கி விலைபேசித் திரிவதைக் கண்ட நாங்கள் அவர்களைப்போலவே நடந்தலைவோம். மாடுகளின் கொம்புகளுக்கு இடையில் பலமுறை சேவல்கள் உட்காரும். சுப்பையா என்ற மாட்டு வியாபாரியுடன் வீட்டோடு நல்ல உறவு ஏற்பட்டு அவர்களோடு இரவெல்லாம் வைக்கோலுக்குள் சுருண்டு கிடப்பேன். அவர்களோடு நாகர்கோவில் பக்கம் வெள்ளமடம் எனும் கிராமத்திற்கு விடுமுறையில் கிளம்பிவிட்டேன். போகும்போது நான் வளர்த்த சேவல் கோழிகளைப் பிரியும் மனமின்றி அம்மாவின் சேலைக்குள் அவைகள் உதிர்த்த ரெக்கைகளை பத்திரமாக கூடவே எடுத்துச் சென்றேன். அப்போது பெரியண்ணன் செல்வண்ணனுக்கு நான் எழுதிய கடிதத்தில் ‘என் உயிர் நண்பர்களை விட்டுப்போகிறேன். நான் வரும்வரை அவைகள் பேசுவதைக் கேட்டு வையுங்கள். நான் வந்த பிறகு அவைகளுக்கு பதில் சொல்லிக் கொள்வேன்’ என்ற அர்த்தத்தில் கடிதம் எழுதி அவரது பேன்ட் பாக்கெட்டில் திணித்துப் போயிருந்தேன். வெள்ளமடத்தின் இரவுகளில் ரெக்கைகளில் என் கண்ணீர் வடிய அம்மாவின் சேலைக்குள் புத்தகமாய் மடித்து வைக்கப்பட்ட என் வரிகளை உப்பு ஈரம் படிந்த என் தளிர் விரல்கள் கேவலோடு எழுதிய வரிகள் சேலையின் மங்கிய நிறமாகிப்போனது விடுமுறை முடித்து வீடு திரும்பியபோது என் கடிதம் படிக்காத பெரிய அண்ணனிடம் கோழிகெ உங்களிடம் பேசுச்சா…எனக்கு லீவெல்லாம் தேடுச்சு’ என்று நானே பேசியபடி மடித்து வைக்கப்பட்ட அவரது பேன்ட்டில் விலாசம் எழுதப்படாத காகிதத்தைத் தேடி எடுத்தபோது எழுத்துக்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன. எனைக்கண்ட செல்வண்ணன் ‘உன் வரிகளை உன் சேவ கோழிகள் கொத்தி விழுங்கி தினமும் காலை பாடிக்கொண்டிருந்தன’ என்று கதையாச் சொன்னதில் திருப்தியுற்ற நான் அன்று இரவு தூக்கம் வரும்வரை அவைகளுடனே சுருண்டு கிடந்தேன். என் பால்யம் சேவல் கோழிகளில் ரெக்கைப் படபடப்பு ஒலி நிரம்பி மிதந்துகொண்டிருந்தது. அன்று நாளெல்லாம் புடலை, பீர்க்கன் கொடிப்பந்தலுக்கு அடியில் அவைகளோடு நான் பேசி விளையாடுவதை ரஃப் நோட்டில் கோலமிட்டு என் கூடவே இருந்த அக்காவுக்கு மட்டுமே என் கோழிகளின் முட்டைகளைப் பரிசாகத் தந்திருக்கின்றேன். ஒவ்வொரு பண்டிகையின் போதும் கறிக்குப் பிடித்து வைத்திருக்கும் கோழிகளை விடுதலை செய்து விடுவதில் அக்காவே எனக்குப் பலமுறை உதவியிருக்கின்றாள். நான் பெரியவனாகி பாண்டிச்சேரிக்கு நாடகம் படிக்க வந்தபோது சிறு கருப்பு றெக்கைகள் வைத்து கடிதமெழுதி அனுப்பிய அக்காவிடமிருந்தே நேசத்தின் வலிமை றெக்கைகளுக்கு உண்டு என்பதை நான் புரிந்துகொண்டேன். அக்கா எழுதிய கடிதத்தில் ‘தம்பி உனக்காக கருப்புக்கோழிகள் வாங்கி வைத்திருப்பேன் சீக்கரம் ஊருக்கு வா’ என்ற வரியில் ஈரம்பட்டு வார்த்தைகள் நெழிநெழிவாய் இருந்தன. அவள் வாங்க நினைத்த கோழிகள் பூமியின் புதிர்ப்பாதைகளில் தனியே அலைந்து கொண்டிருக்கக்கூடும்.
ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையில் கடைசியாக எஞ்சிய கருங்கோழி ஒன்றும் செஞ்சேவல் ஒன்றும் தொடர் அடைமழையில் இறந்துவிடவே இரண்டையும் எங்கள் வீட்டு கேந்திப்பூத்தோட்டத்திற்குமுன் அடக்கம் செய்து எனக்குப்பிடித்த தின்பண்டங்களையெல்லாம் அவைகளுக்குப் புதைத்த மண்மேட்டில் படையலிட்டு என் நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். துக்கம் தாளாமல் அன்று சென்னையிலிருந்த இளங்கோ அண்ணனுக்கு கடிதமெழுதினேன் ‘‘என் செல்லங்களை நம் வயக்காட்டில் கருகப்பிலைக் கன்று நட்டு வைப்பதைப்போல புதைத்து விட்டேன். என் அழுகை நிப்பாட்ட வழியற்று கேந்திப்பூச் செடிகளுக்குள் சுருண்டு கிடக்கிறேன். என்னைத்தூக்கி உங்கள் மார்போடு புதைத்துக்கொள்ள சீக்கரம் வரமாட்டீர்களா?’ என்று தொடரும் கடிதமது. பல நாட்கள் கழித்து வீடு திரும்பிய அண்ணன் ‘பம்பாயிலிருந்து வருகிறேன் இந்தா உனக்கு உலகத்தின் அதிஉன்னத இசைக் கேஸட்டுகள்’ என்று பத்துக்கும் மேற்பட்டவைகளைக் கொடுத்தார். நீ இடை விடாது இசை கேட்கும்போது உன்னை விட்டுப்போன சேவல்களும் கோழிகளும் உன்னை வந்துசேரும் என்றுகூறி என் பால்யத்தின் துக்கத்தை இசையின் பாதைக்குத் திருப்பி விட்டவர் இளங்கோ அண்ணன். அப்போது Bizet- Carmen, Mosart- Magic Flute, Vivoldi- Fourseason, Beethovanin 9th Symphony Bach, Grieg இப்படிப் பல உலக இசைமேதைகளின் தேர்ந்தத் தொகுப்புகள் அதிலிருந்தன. இன்றுவரை எங்கள் மணல்மகுடி குழுவின் படைப்புகளுக்குள் இசையின் மூச்சுப் பரவி பார்வையாளர்களைத் தாயன்போடு சுவீகரிக்கும் எங்கள் கலைஞர்களுக்குள் இளங்கோ அண்ணனின் ரேகைகள் செயலாய் அலைவுறுகிறது.
இரண்டு வருடத்திற்கு முன் நான் செல்லும் பள்ளியில் நான்காம் வகுப்பு குழந்தைகளைக்கொண்டு வாழ்வே சங்கீதம் என்ற நாட்டுப்புறப்பாடல்களை அடிப்படையாகக்கொண்டு நடனம், சங்கீதம் நிரம்ப அடங்கிய நாடகமும் 8ஆம் வகுப்பு மாணவ மாணவிகளைக்கொண்டு மாயபொம்மை என்ற நாடகமும் அரங்கேறியது. அதில் நடித்த மாணவ மாணவிகளுள் சிலரின் அனுபவக் கடிதங்கள் இங்கே முன்பின் அடுக்கித்தரப்படுகின்றது. மாயபொம்பை எனும் நாடகம் ஆட்சி அதிகாரத்தை தன் விருப்பப்படி போதை வஸ்துவாகப் பயன்படுத்தும் அரசனை மாயபொம்மை ஒன்று நல்வழிப்படுத்துவதோடு பூமியெங்கும் குழந்தைகளுக்கு பொம்மைகள் பரிசளிக்கும் வழக்கத்தைத் துவங்கி வைக்கவும் செய்கிறது. எட்டாம் வகுப்பு மாணவி ஆவியூர் மதுமிதா எழுதிய ஐந்து பக்க கடிதத்தின் சுருக்கம். கடிதங்கள் அனைத்தும் எனக்கு எழுதப்பட்டவையே கடிதத்தில் அண்ணா என்பது என்னைக்குறிக்கும்
அன்புள்ள அண்ணாவிற்கு;
அண்ணா நான் இந்தப்பள்ளியில் 6ஆம் வகுப்பு சேர்ந்த நாளிலிருந்து இப்ப வரைக்கும் உங்களப்பத்தி நினைக்காத நாளே இல்ல. நீங்கனா எனக்கு அவளோ பிடிக்கும். இந்த உலகத்தில பெண்கள்தான் கூச்சமேறியவர்கள். நான் அதுல முதல் ஆள். என் கூச்சத்தைப் போக்கி தைரியம் கற்றுத்தந்த ஆள் நீங்கள் மட்டும்தான். இப்ப எல்லார்கிட்டயும் நல்லா பேசுறேன். எங்க ஊர்ல எல்லாரும் அவுங்க குடும்பத்துல ஒருத்தரா என்னை நினைக்கிறாங்கனா. என் கிறுக்குத்தனமான நடிப்பைக்கூட புகழ்ந்து பேசி என்னை சிறந்த நடிகையாக்கிய திறமை உங்களுக்கே உண்டு. அண்ணா ஒங்க டிராமா பீரியடுல மட்டும்தான் வகுப்பறை வட்டவடிவமாக மாறுது அப்புறம் முக்கோணம் அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்குனா. நடிக்கும்போது பயம், வேர்வை, நாக்கு வறண்டு போவது எல்லாம் என்னை புது ஆளா மாத்துதுணா. நீங்க வராதெ கிளாஸ்ல ரொம்ப எனக்கு கஸ்டமா இருக்குணா. உங்க போட்டோ எனக்கு கொடுங்கனா எம்போட்டோ ஏற்கனவே உங்களுக்கு கொடுத்திட்டேன். முழுப் பரீட்சை லீவுல நீங்க சொன்ன கதைகளைப்பத்தித்தான் நான் நெனச்சக்கிட்டு இருப்பேன். அக்கதைகளை எந்தம்பி தங்கச்சிகளுக்கும் எங்க ஊர்ப்பிள்ளைகளுக்கும் நான் சொல்லிக்கிட்டே ஊர்லேயே இருப்பேன். மாயபொம்ம நாடகம் எங்க ஊர்க்காரங்க எல்லார்க்கும் புடிச்சிருக்குணா. அண்ணா மொதல்ல எனக்கு Drama பிடிக்கவே செய்யாது. இப்ப யாரு  Drama பத்தி தப்பா ஏதாவது ஒரு வார்த்த பேசினாலும் அவுங்ககிட்ட நான் பேசவே மாட்டேன். இதுக்கெல்லாம் காரணம் நீங்கதாண்ணா… ராசாவா நடிச்ச கார்த்தி எங்களப்பாத்து தாய்மார்களேன்னு சொல்றதுக்கு பதிலா பேய்மார்களேன்னு சொன்னதும் நடிச்சிட்டு இருந்த நாங்க கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கினோம். அண்ணா என் தம்பியும் தங்கச்சியும் உங்களப் பார்க்க ஆசையா இருக்காங்கணா. 4ஆம் வகுப்பு நாடகத்துல அண்ணா மணி என்கிற குட்டி நடிகன நடிக்க வச்சது ரொம்ப அதிசயம்தான். அவன் திக்குவாய்ப் பேச்சே நாடகத்துக்கு பலம். அண்ணா உங்களுக்கு மொட்ட போட்டா நல்லா இருக்காது. ஒவ்வொரு வாரமும் விதவிதமான முடிவெட்டி வர்றது எனக்கு ரொம்ப பிடிக்கும். Drama-வால எனக்குள் பலவித முன்னேற்றங்கள். இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேன். நீங்க கசமுசன்னு சட்டபோட்டு வர்றது எனக்கு பிடிச்சிருக்கு. எங்க கிளாஸ் பாய்ஸ் Dramaக்கு பிறகு நல்ல மாற்றம்னா. அண்ணா நீங்க ஒருபோதும் நம்ம ஸ்கூல விட்டு போகக்கூடாது. நாங்க எல்லோரும் கஷ்டப்படுவோம்ணா. எங்கள மாதிரி புதுசா வர்றவுங்களுக்கு நீங்க வேணும்ணா. அண்ணா உங்களப்பத்தி எங்க குலச்சாமி பெரிய கருப்புசாமிகிட்ட நெறைய பேசியிருக்கேன். நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்கணா. நீங்க நீட்டா டிரஸ் பண்ணா எனக்கு பிடிக்காது. நெறைய முடிவச்சு, தாடிவச்சு இருந்தா ரொம்ப அழகா இருக்கும். நீங்க எப்பவும் School-ல விட்டு போகாதீங்கணா உங்கள ரொம்ப ரொம்ப புடிக்கும்ணா… உங்கள மாதிரி நானும் வருவேண்ணா….
இப்படிக்கு
அண்ணனை விரும்பும்
அன்பு மாணவி மதுமிதா….. 19/3/014
அடுத்து மாயபொம்மையாக நடித்த பாண்டி செல்வா எனும் தரகநேந்தல் கிராமத்தைச்சேர்ந்த மாணவனின் 4 பக்க கடிதத்தின் சுருக்கக் கடிதம் இது.
நீங்கா உறவு அண்ணன் முருகபூபதிக்கு அன்பு நடிகன் தம்பி பாண்டிசெல்வா எழுதுவது, அண்ணா. நான் ரொம்பச்சிறுவயதிலே படத்தில் நடிக்கணும்னு ஆசப்பட்டேன். ஆனால் என் அம்மா அதெல்லாம் நடக்கிற காரியமல்ல பேசாம இருண்டு சொன்னாங்க. யாரும் இல்லாத நேரத்துல வீட்ல நானா பிடிச்ச படத்தின் வசனங்களெ சொல்லி நடிச்சுப்பார்ப்பேன். ஒருநாள் அம்மா இதெ பார்த்துட்டாங்க. இதெல்லாம் செய்யாதே ஊரு உலகத்துல உன்ன கூத்தாடிப் பய அப்படீண்ட்டு சொல்லுவாக பேசாம கெடன்னு சொல்லிட்டாங்க. அன்று முதல் ஒரு வருடம் சும்மா இருந்தேன். நம்ம பள்ளிக்கூடத்துல UKG சேர்ந்தேன். உங்களப் பார்த்து எல்லாரும் அண்ணனு ஓடிவருவதைப் பார்த்து ‘இவரு என்ன பெரிய ஆளான்னு எனக்கு குழப்பம். மறுநாள் எங்களுக்கு கதை போட வந்தீங்க. அன்னையிலிருந்து கதை மேல எனக்கு ஒரு வெறி. வீட்டுக்குப்போயி அப்பத்தாட்ட கதைபோடுன்னு கேட்பேன். அதன்பிறகு உங்ககிட்ட நெருங்கிப்பழக ஆரம்பிச்சு இன்னக்கி ஒரு பெரிய நடிகனா மாரிட்டமாதிரி ஒரு தைரியம். சினிமா நடிகர்கள்கிட்ட நடிப்பு இல்லைன்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன். எங்கூட அவுங்களால போட்டிபோட முடியாது. ஏற்கனவே எது அழகு நாடகம் 7ஆம் வகுப்புல போடும்போது எனக்கு நல்ல பாராட்டுணே. இப்ப எட்டாப்புல மாயபொம்ம நாடகத்துல நான் விரும்பிய பொம்மை வேடமே கிடைச்சிருச்சிணே. நான் டைலாக்கு வேகமா பேசுறதையே என் ஸ்டைலா மாத்தீட்டீங்க. பொம்மையக்கா பாட்டு நல்லாருக்குண்டு எங்கம்மா சொன்னாங்கணே. கழுதைப்புலி ராசா கோவமா பேசினாலும் அவன் காமெடி சூப்பர்ணே. ராமப்பிரிய கடைசி வரைக்கும் நல்லா திமிர்பிடித்த ராணியாக பேசினது. இன்னைக்கு உள்ள ராணி மாதிரியே இருக்கு. எங்க ஊர்க்காரங்க நம்ம நாடகத்த பத்தியும் என் நடிப்பு பத்தியும் பெருமை பேசுறாங்கணே. நாடகம் முடிந்த பின் இனிமேல் நாடகம் மீண்டும் நடிக்க முடியிமான்னு எனக்கு அழுகை வந்துவிட்டது. வீட்டுக்கு வந்தபின் கண்ணாடியை என் மடியில வச்சிட்டு அந்த வேடத்தை அழிக்கும்போது மீண்டும் இந்த வேடத்தை போடமுடியாதே என அழுகை வந்தது. அழிக்காமலே தூங்கிட்டேன். மறுநாள் பகல் பூராவும் குளிக்காமெ வேடத்தோடு கம்மாக்கரையில நடிச்சிட்டு அலைஞ்சோம். வியர்வையில கலர் அழிஞ்ச பிறகு எங்கம்மா அந்த வேடத்தெ குளிப்பாட்டி விட்டாங்கணே. எல்லாரும் சொன்னாங்க அண்ணாகிட்ட காண்டாக்ட் வச்சுக்கோ. பின்னாடி நீ பெரிய நடிகனாக உருவாகலாம் என்று. அண்ணாவுக்கு வேட்டிதுண்டு எடுத்துக்குடுப்பேன். அண்ணே சினிமாப் படம்லா எனக்கு வேண்டாம்ணே. நான் உங்க நாடகக்குழுவில் சேர ஆசைப்படுகிறேன். நீங்கள் என்னை சேர்ப்பீர்களா?
இப்படிக்கு
அண்ணனின் அன்பு நடிகன் பாண்டிசெல்வா.
மேலே உள்ள கடிதம் எழுதிய பாண்டிசெல்வாவின் தங்கை நான்காம் வகுப்பு படிக்கும் பாண்டி ஷோபனாவின் ஐந்து பக்க கடிதத்தின் சுருக்கம். நான்காம் வகுப்பு குழந்தைகள் வாழ்வே சங்கீதம் எனும்  (Folk ballod) நாட்டுப்புற நடனச் சங்கீத வடிவில் நிகழ்த்தினர். இதில் பூ மரங்களின் தமிழ்த்தொன்மம் வளரி எனும் போர்க்கருவி பின்னாளில் சடங்கியல் இசைக்கருவியாகியது. இது ஆவியூர், அரசகுளம் போன்ற கிராமங்களில் முளைப்பாரித் திருவிழாவில் கும்மிகொட்ட பயன்படும் இசைக்கருவி. இதில் பிரதான நாடகப்பெயர்ப் பொருளாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
என் அண்ணா பூபதிக்கு;
எங்கள் வகுப்பில் யாருமே கண்டுக்காம இருந்த திக்குவாய் பேசும் கண்ணாமணியை சிறந்த நடிகனாக மாற்றிய உங்களுக்கு முதலில் நன்றி. பிறந்தது முதல் இறந்து போகும்வரை பாட்டு ஆட்டம் இருந்ததைச் சொல்லிய எங்கள் நாடகம் சுத்தியுள்ள எட்டு கிராமத்துக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. மாயபொம்மையாக நடித்த பாண்டிசெல்வாவின் தங்கைதான் நான். எனக்கு உண்மையான ராணியைவிட நாடகத்தில் வரும் பொம்மை ராணிதான் எனக்கு பிடிக்கும். எங்கள் நாடகாசிரியரான நீங்கள் வயசாகிப் போனாலும் மறக்காமல் தேடிவந்து உங்களுடன் நடிப்போம். ஏனென்றால் நாடக வகுப்பில் தான் எங்கள் உண்மையான சந்தோசம் எங்களுக்கு கிடைக்கிறது, எங்கள் நாடகாசிரியரான உங்கள் அண்ணனும் நிறைய கதை எழுதுவார் என என் அண்ணன் சொல்லிச்சு. அவர் எழுதிய ‘த’ கதைப்புத்தகத்தை எங்கண்ணன் துட்டு சேர்த்து வச்சு வாங்கிடுச்சு. எங்க வீட்டில் நுழைந்த முதல் கதைப்புத்தகம் அது. அது எங்க ஊரில் எங்க வீட்டில் மட்டும் உள்ளது. அந்தப்புத்தகத்தை பாட்டுப்போல எங்கண்ணன் படித்துக் காண்பிக்கும். நாக்பூர் ஆரஞ்சும் அந்த ஊர் ரயில் நிலையமும் கதையை அண்ணா சொன்ன பிறகு நான் நாடக நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை கூடியுள்ளது. உலகம் பூராம் நாடக நடிகைகள் பெருகவேண்டும். எங்கும் நாடக சந்தோசம் பிறக்கவேண்டும்.
‘நன்றி வணக்கம்’
இப்படிக்கு முருகபூபதியை
பிடிக்கும் பாண்டி ஷோபனா  4ஆம் வகுப்பு
அண்ணாவுக்கு;
நாங்கள் அனைவரும் ஒன்றாக நடிப்பில் ஒன்று சேர்வது ரொம்ப பிடிக்கும். என் அம்மா என் நடிப்பை பாராட்டி சூடம் சுற்றி போட்டது மகிழ்ச்சியாக இருந்தது. இன்று முதல் நாடகப்பாடமே எனக்குப் பிடித்த முதல் பாடமாகும். அண்ணனைப் பார்த்தது முதல் எனது குரண்டி கிராமத்து நண்பர்களுக்கு கதை சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என் ஊர்க்குழந்தைகளுக்கு அண்ணன் பெயரைச் சொன்னாலே மகிழ்ச்சிதான். என் உயிர் இருக்கும் வரை நாடக ஆசையுடன் இருப்பேன். நான் பணக்காரி ஆனாலும் அண்ணன் மீதும் அவர் கதைமீதும் பாசம் குறையாது. அண்ணன் தாத்தாவானாலும் என் கூட வைத்து காப்பாற்றுவேன். அடுத்த பிறவியில் நானும் அண்ணனும் நண்பர்களாகவும் அதற்கு அடுத்த பிறவியில் அண்ணன் அவரது நண்பர்களுடன் ஒரே வகுப்பில் படித்து நாடகம் நடிப்போம். நாடக அண்ணனுக்கு நாடகத்தங்கை அனந்தமூவிகா, 4ஆம் வகுப்பு, குரண்டி.
அதிசய கதைகள் கொண்டுவரும் அண்ணாவுக்கு;
நீங்க சொல்ற கதைக்கு மட்டுமே நடிப்பு வருமா? உங்க அனுபவம் எல்லாமே கதையா இருக்கு. கதை மூலமா கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்பவர் அண்ணா மட்டும்தான். அண்ணா எங்கள் வகுப்பு ஆசிரியராக வரவேண்டும் என்பது ஆசை. அண்ணா Flute வாசிக்கும்போது பலமுறை மயிலைப் பார்த்திருக்கிறேன். தனியே வயக்காட்டுக்கு போகும்போது நடித்துப்பாடுவது எனது வழக்கமாயிற்று. எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர்களைப் பிடிக்காது. காரணம் அவர்கள் படி படி படி என்பார்கள். அண்ணாவோ நடி நடி என்று சொல்லாமல் கதை மூலமாகவே எங்களுக்கு ஆர்வத்தை தந்திடுவார். எப்போதும் அண்ணா பின்னால் பத்து மாணவர்கள் மாணவிகள் போவது எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் பிடித்த அவரைப்போல நானும் வருவேன். பாடும் திறமையுள்ள பலரை கண்டுபிடித்து மேடையேற்றியவர் அவர். அடுத்தஜென்மத்துல நான் பிறந்தா அண்ணாவைத் தேடிப்போய் அவருடைய நாடகத்துல நடித்து கொள்ளப்பேரெ சேத்துடுவேன். அண்ணா பழகுவதைப்பார்த்து அவருமேல மாணவர்கள் பழகுவதை பார்த்து நான் கலெக்டராகி ஒவ்வொரு ஊருக்கும் அண்ணா மாதிரி ஆளை அனுப்பி கதையும் நாடகமும் போடச் சொல்லுவேன். எனது பெரிய கனவு திரும்பியும் நான் பூமியில பிறந்தா அண்ணனோட மகளாகப் பிறப்பேன்.
என் பெயர்
செல்வி 8ஆம் வகுப்பு
நடிப்பு என்ற இயற்கையை எங்களுக்குத் தந்த அண்ணா,
எங்கள் வகுப்பின் கண்ணாமணியை பள்ளி புகழச் செய்தவர் நீங்கள். அவன் இல்லாத ஒத்திகை சப்புன்னு இருக்கும். உங்கள் கதைகள் பிடிப்பதுபோலவே அவனையும் பிடிக்கும். தெத்துவாய் வசனம் அருமை. நான் பெரிய பிள்ளை ஆனேனா அண்ணாவை நினைத்துக்கிட்டே நாடகம் சொல்லித்தருவேன். அப்போதும் அண்ணாவிடம் கதைகேட்க அவர் வீட்டிற்குச் செல்வேன். அண்ணா தாத்தாவான பிறகும் நினைத்துக்கிட்டே பள்ளிக்கூடத்தில் வேலை செய்வேன். உயிருள்ள வரை அண்ணாவின் கதைகளை எல்லார் காதுகளுக்குள்ளும் ஒளித்து வெப்பேன். அடுத்த ஜென்மம் எனக்கு கிடைத்தால் நான் அண்ணாவாகப் பிறக்கவேண்டும். நாக்பூர் ஆரஞ்சுக் கதையில் வரும் ஆரஞ்சுகளைக் காண அங்கு போவேன். அங்கு வளரும் ஆரஞ்சு மரங்களின் மீது நின்று அண்ணா பெயரை கூவிக்கூவி கூவுவேன்.
இப்படிக்கு
அடுத்த பிறவியில் அண்ணாவாக பிறக்கப் போகும்
பிரதீபா 4ம் வகுப்பு
நாடகக்கலை ஊட்டிய அண்ணாவுக்கு;
நீங்கள் எனக்கு நல்ல வேடம், பிடித்த வேடம் கொடுக்காட்டியும் ஒங்களையும் ஒங்க கதைகளை அவ்ளோ பிடிக்கும்ணே. நான் தினமும் செல்லாயி அம்மங்கிட்ட நாடகத்தில் நல்ல வேடம் கிடைக்கனும்ட்டு வேண்டியும் கிடைக்கல. ஆனா ஒருநாள் வீட்டில யாரும் இல்லாதபோது கண்ணாடிமுன் எனக்கு பிடித்த ராணி வேடத்தை நடித்துப்பார்த்தேன். அய்யோ எவ்வளவு நல்லாந்திருச்சி தெரியுமா! பொம்மையாகவும் நடித்துப் பார்த்தேன். நாடகத்தில்தானே கிடைக்கல. வருத்தம்தேன். அண்ணா நீங்க எங்க வகுப்பு பிள்ளைங்க எல்லாத்துக்கும் வேடம் கொடுத்து நடிக்க வச்சது அதிசயமா இருக்கு. நாடகம்னா எனக்கு உசுர். நான் சத்தியமாக சொல்றேன் அண்ணானா எனக்கு உசுர். அடுத்த பிறவியில் அண்ணாவின் குழந்தையாக பிறக்கணும்னு செல்லாயி அம்மங்கிட்ட வேண்டிக்கிட்டே இருக்கேன். அண்ணா எங்களவிட்டு எங்க போனாலும் வேடம் போட்டு வந்து கண்டுபிடிச்சிடுவோம். நான் எழுதியது எல்லாம் எழுதியது கதை அல்ல எல்லாம் உண்மை.
இப்படிக்கு
அண்ணாவின் தங்கை மிமிதா 8ஆம் வகுப்பு
இப்படி குழந்தைகள் ஒவ்வொரு நாடகம் நடித்து முடித்த மறுவாரம் கடிதம் எழுதிக்கொடுப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். இன்று போஸ்ட்கார்டு இன்லான்ட் லெட்டர் பார்க்காத குழந்தைகள் அதிகமாகிவிட்டனர். இருந்தும் எழுதுவதற்கான விந்தையான வாக்குகளை பத்திரமாக வைத்துள்ளனர். பதினோரு வருடமாக குழந்தைகளிடம் நாடக கதை வேலைகள் செய்து சேகரித்த கடிதங்களும் கதைகளும் எங்கள் நாடக பனையோலைப்பெட்டியை நிரப்பிவிட்டன. காலப்போக்கில் அவை சமகால எதிர்கால கலைஞர்களுக்கான (Book of Magic) மந்திரப் புத்தகமாக மாறக்கூடும். இக்கடிதங்களின் எளிமையும் கனவுகளும் சாத்தியங்களும் குழந்தைகளிடம் வேலை செய்கிற ஒவ்வொரு கலைஞர்களுக்கும் புரியும். இன்று நாம் எழுதத் தவறிய கடிதங்களை குழந்தைகளே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே இப்பிரபஞ்சம் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.
(அடுத்த இதழில் நிறைவுறும்)

Related posts

Leave a Comment