You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் -6: அவர்கள் சொல்ல மறுக்கும் கதைகள்

ச.சுப்பாராவ்

அமெரிக்காவில் இரு ஆண்கள் கைகோர்த்து நடந்து சென்றால், அவர்களை சமூகம் ஓரினச் சேர்க்கையாளர்களாகவே பார்க்கும். இந்திய சமூகம் சாதாரண நண்பர்களாகப் பார்க்கும். ஏன் இந்த மாறுபட்ட பார்வை? ஆண் – ஆண், ஆண் – பெண்,    ஆண் – ஆண், பெண் – பெண், ஆண் – மூன்றாம் பாலினம், பெண் – மூன்றாம் பாலினம், மூன்றாம் பாலினம் – மூன்றாம் பாலினம் ஆகிய விதவிதமான சேர்க்கைகளின் உறவு பற்றி மேற்கத்திய இலக்கியங்கள் பேசத் துவங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவை பற்றி எல்லாம் இந்திய இலக்கியங்கள், வாய்மொழிக் கதைகள் நிறையப் பேசியிருப்பது ஒரு முக்கிய காரணம். இந்தியாவின் ஆதிப் பொதுவுடமைச் சமூகம் சமகாலத்தைப் போல அத்தனை இறுக்கமானதல்ல. தனிச் சொத்துரிமை, என் சொத்து என் வாரிசுக்கு மட்டுமே என்ற தந்தைவழிச் சிந்தனைகள் வலுப்பெற்ற போது, வாரிசு உருவாக்க முடியாத உறவுமுறைகளுக்கான முக்கியத்துவம், மதிப்பு குறைய ஆரம்பித்தது. அவற்றோடு  சாஸ்திர சம்பிரதாயங்களின் பிடியும் இறுகிய போது, அத்தகைய உறவு கொண்டோர், அத்தகைய உடல், மனப்போக்கு கொண்டோர் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு, கேலிப் பொருளாகவும் ஆகிப்போயினர். பழம் புராணங்களில் இத்தகைய விளிம்புநிலை மனிதர்கள், அவர்களது கதைகளும் மெல்ல மெல்ல மறைக்கப்பட்டன.
நல்லதோ, கெட்டதோ மறைக்கப்பட்டதை வெளிக்கொணர்ந்து, சமூகத்தின் விமர்சனத்திற்கு வைப்பதுதானே படைப்பாளியின் வேலை! இந்திய தொன்மப் புராணங்கள், இதிகாசங்களில் காணப்படும் இத்தகைய கதைகளைத் தொகுத்து சிறு நூலாகக் கொணர்ந்திருக்கிறார் என் அபிமான மறுவாசிப்புப் படைப்பாளி டாக்டர் தேவதத் பட்டநாயக். Shikandi and other tales they dont tell you (சிகண்டியும், அவர்கள் சொல்ல மறுக்கும் வேறு கதைகளும்) என்ற அந்த நூல் வழக்கமான அவரது ஆழமான பின்குறிப்புகளுடன் எழுதப்பட்ட அருமையான நூலாகும். அதன் முதல்பக்கமே, ‘எது நல்ல பாலுறவு என்பதை சாமியார்கள் முடிவு செய்யும் தேசத்தில் எச்சரிக்கையாக இருங்கள்’ என்ற அட்டகாசமான வாசகத்தோடு துவங்குகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 100ஆண்டுகளுக்கு முன்னரே, கடும் துறவியான  புத்தரை வழக்கமான பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல் வடிக்காமல், கழுத்து, இடுப்பு, முழங்காலில் வளைத்து, பெண்மை பொங்கும் பத்மபாணியாக வடித்த அந்த அஜந்தா சிற்பிகளின் மனநிலை, வேத புராண காலங்களின் மதரீதியான இறுக்கங்களால் எப்படி மாறியது என்பதை முன்னுரையில் மிக அழகாகச் சொல்கிறார் அவர். ஆர்க்டிக் பகுதிகளின் கதைகள், வடஅமெரிக்கப் பழங்குடியினரின் கதைகள், அஸ்டெக் தொன்மக்  கதைகள், கியூபாவின் சன்டேரியோ தொன்மங்கள், வைகிங் தொன்மங்கள், கிரேக்கப் புராணங்கள், ஜப்பானிய ஷிண்டோ புராணங்கள், சீனாவின் தாவோ புராணங்கள், மெஸபடோமியக் கதைகள், முதல் இதிகாசமான கில்காமெஷ், இலியத் எல்லாம் பேசிய மூன்றாம் பாலினம், ஓரினச் சேர்க்கை அனைத்தும் பேசக்கூடாத பொருட்களாக ஏன் மாறின? இத்தனை புராதனக் கலாச்சாரங்களும் பேசிய இந்த விஷயங்களை இந்தியப் புராணங்கள் பேசவில்லையா? என்ற அவரது சிந்தனையின் விளைவு இப்புத்தகம். இக்கலாச்சாரங்களில் இடம்பெற்ற கதைகளை ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு இந்தியக் கதைகளை விரிவாகச் சொல்கிறார். லெஸ்போஸ் என்ற தீவில் ஒரு பெண் மீது மற்றொரு பெண் காதல் கொண்டு எழுதியதாக சாஃபோ எழுதிய காதல் கவிதைகளால்தான் லெஸ்பியன் என்ற வார்த்தை உருவானது என்பது போன்ற தகவல்களும் ஆங்காங்கே உள்ளன.
30 இந்தியப் புராணக் கதைகளின் தொகுப்பு. நாம் அறிந்த சிகண்டியின்   கதை அறியாத பல கூடுதல் தகவல்களுடன் முதல் கதையாக இடம் பெற, திருச்சி மலைக்கோட்டையில் சிவன் பெண்ணாக மாறிய தாயுமான சுவாமி  கதை, மோகினி அவதாரம், ஐயப்பன் பிறப்பு, நண்பனுக்காகப் பெண்ணாக மாறிய சமவானின் கதை, ஸ்நேகிதிக்காக அவளது துணைவியாக மாறிய ரத்னாவளியின் கதை, அர்ச்சுனன் பிருகன்னளையாக மாறியது, அல்லிராணி கதை, ஊர்வசி பிறந்த கதை என்று நமக்கு சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட கதைகள் இத்தொகுப்பில் வேதகாலங்களில் இன்று தடை செய்யப்படும், ஏளனம் செய்யப்படும் உறவுகள் ஏதோ கட்டாயத்தால், நிர்ப்பந்தத்தால் அனுமதிக்கப்பட்டதன், ஏற்கப்பட்டதன் சாட்சியங்களாய் நிற்கின்றன. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு ஓரினக் காதலாக இருக்கலாம் என்பது போன்ற பின்குறிப்புகளும் உண்டு!
மந்தாதா என்ற அரசனின் ஆட்சியைப் பொற்காலம் என்று மஹாபாரதம் புகழும். அவன் கதை பெரும் விசித்திரம். யுவனஷ்வா என்ற அரசனுக்கு குழந்தை இல்லை. யாகம் செய்து மந்திர நீர் வரவழைத்து அரசி குடிக்க வேண்டும் என்று முனிவர்கள் தர, மன்னன் தவறுதலாக தான் குடித்து கர்ப்பமாகிவிடுகிறான். இடுப்பைக் கிழித்து குழந்தையை எடுக்கிறார்கள். குழந்தைக்கு ஆண் எப்படிப் பால் தருவான்? தேவர்களின் உடலில் ரத்தத்திற்கு பதில் பால்தான் ஓடுமாம். இந்திரன் தன் கட்டை விரலில் ஓட்டை போட்டு, அதில் வழியும் பாலைக் குழந்தைக்கு ஊட்டி வளர்த்துத் தருகிறான். பசியில் அழும் குழந்தைகள் கட்டைவிரலைச் சப்புவது அன்றிலிருந்தே ஆரம்பமானது. இந்தக் குழந்தைதான் மந்தாதா என்று ஒரு கதை.
மற்றொரு சுவாரஸ்யமான கதை பங்கஷ்வணனின் கதை. அவன் நூறு பிள்ளைகள் வேண்டி யாகம் செய்ய அவ்வாறே நூறு குழந்தைகள் பிறக்கின்றன. யாகத்தின் போது அவன் இந்திரனை அவமதித்து விட, இந்திரன் அவனைப் பெண்ணாக மாற்றிவிடுகிறான். பெண்ணாக மாறிய பங்கஷ்வணன் சந்தோஷமாக ஆண்களுடன் கூடி இன்னும் நூறு பிள்ளைகளைப் பெறுகிறான். நூறு குழந்தைகள் அவனை அப்பா என்றழைக்க, மற்றொரு நூறு அம்மா என்கிறது! இவன் இப்போதும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து கோபப்படும் இந்திரன் இருநூறு குழந்தைகளையும் கொன்றுவிடுகிறான். பங்கஷ்வணன் இந்திரனிடம் மன்னிப்புக் கேட்கிறான். இந்திரன் ஏதேனும் ஒரு செட் குழந்தைகளைத்தான் உயிர்ப்பிக்க முடியும். அம்மா என்றழைப்பவர்களையா இல்லை அப்பா என்றழைப்பவர்களையா என்கிறான். பங்கஷ்வணன் அம்மா என்று கூப்பிடும் குழந்தைகள் என்கிறான்.  இந்திரன் ஏன் என்று கேட்க, குழந்தைகள் அம்மாவிடம்தான் பாசமாக இருப்பார்கள் என்கிறான். அடுத்து, இந்திரன் நீ ஆணாக இருக்கிறாயா இல்லை பெண்ணாகவா என்று கேட்க பெண்ணாக என்கிறான் அவன் தயங்காமல். ஏன் என்கிறான் இந்திரன் வியப்புடன். அதற்கு பங்கஷ்வணன் சொல்லும் காரணம் மிகமிக முக்கியமானது. உடலுறவின்போது, தான் பெண்ணாக இருக்கும் போதுதான் அதிகமான இன்பம் அடைந்ததாகக் கூறுகிறான் அவன். பட், உங்க நேர்ம எனக்கு பிடிச்சுருக்கு என்று இந்திரன் எல்லாக் குழந்தைகளையும் உயிர்ப்பிக்கிறான் என்று கதை முடிகிறது. பின்குறிப்பில் கிரேக்க புராணத்தில் இதே கதை அப்படியே இருப்பதையும் விபரமாகத் தந்துள்ளார்.
எல்லாம் எங்கள் வேதங்களில், புராணங்களில் இருக்கிறது என்று சொல்லும் கலாச்சாரக் காவலர்களுக்கு அவற்றில் இவையும் உள்ளன என்று நினைவுபடுத்துகிறது பட்டநாயக்கின் இத்தொகுப்பு. மூன்றாம் பாலினத்தோர், ஓரினச் சேர்க்கையாளர் போன்ற விளிம்பு நிலை மனிதர்களின் உரிமைக்காகப் போராடுவோர், அவர்களையும் பொது நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போர் அவசியம் படித்து அறிந்து கொள்ள இதில் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

Related posts