You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று -7: 3 மாதங்கள் 4 மாநாடுகள் முழுமையான அனுபவங்கள்…

ச. தமிழ்ச்செல்வன்

மூன்று மாதங்களில் நான்கு பெரிய மாநாடுகளில் பங்கேற்றது ஒருபக்கம் சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் (இப்படி மாநாடு மாநாடுன்னே போய்க்கிட்டிருந்தா நீ எப்போ போய் மக்களைச் சந்திக்கப்போறே என்று கொப்பளித்த மனச்சாட்சியின் நக்கல் பக்கத்தை  அமைதிப்படுத்திவிட்டு) யோசித்துப்பார்த்தால் நான்கு பெரிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி கற்ற வெளிச்சத்தை இம்மாநாடுகள் அளித்ததை உணர முடிகிறது.
1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு – சென்னை
2.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு – திருப்பூர்
3.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு – விசாகப்பட்டினம்
4.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு – விருதுநகர்
கட்சியின் தமிழ்மாநில மாநாட்டின் அறிக்கையும் விவாதங்களும் மனசில் ஓடிய எண்ண ஓட்டங்களும் தமிழகத்தின் வரலாற்றினூடாக மார்க்சிஸ்ட்டுகள் நடந்து வந்த பாதையை வரலாற்றில் வைத்துப் பார்க்க உதவின.எத்தனை போராட்டங்கள் எத்தனை அடக்குமுறைகள் எத்தனை எத்தனை படுகொலைகள் எத்தனை உட்கட்சிப் போராட்டங்கள் தத்துவ மோதல்கள்! தள்ளாத உடல்நிலையோடும் தளராத மன உறுதியோடு தோழர் என்.சங்கரய்யா மேடையில் கடைசி வரிசையில் அமர்ந்தபடி மேடையில் நடப்பவற்றையும் அவருக்கு முன்னால் கீழே அரங்கத்தில் விரிந்து கிடந்த எங்களையும் தன் கூரிய கண்களால் பார்த்துக்கொண்டே இருந்தார். என்னால் அவரைத்தவிர வேறு எதையும் கவனிக்க முடியவில்லை.அவர் உடல் உபாதைகள் காரணமாக இடையிடையே மேடையை விட்டு அகன்ற சமயங்களில்தான் என்னால் மாநாட்டு நிகழ்ச்சிகளை ஊன்றிக்கவனிக்க முடிந்தது.அவர் இருக்கும்போது  ரெண்டு நிமிடம் பிரதிநிதிகள் பேச்சைக் கேட்பேன்.அடுத்த நிமிடம் என்னை அறியாமல் என் பார்வை தோழர் சங்கரய்யாவை நாடும்.15 வயதில் செங்கொடியைக் கையில் பிடித்த அதே உறுதி இன்னும் கண்களில் மினுங்க அவர் எங்களைப்பார்த்த பார்வையில் வரலாறே எம்மைக் கூர்ந்து நோக்குவதான உணர்வில்  என் உடல் சிலிர்த்தது.அவருடைய பார்வையில் வைத்து என்னை நான் சுயபரிசோதனை செய்து கொண்டே இருந்தேன்.உடல் அரங்கத்தில் இருந்தாலும் மனதிற்குள் பிரளயமாக ஏதேதோ நடந்துகொண்டிருந்தது.கட்சிப்பணிகளில் அவரைப்போல முழுமையாக என்னைக் கரைத்துக்கொண்டேனா?நடுத்தரவர்க்கத்து ‘டிமிக்கிகளை எப்போதெல்லாம் கட்சிப்பணிக்குக் கொடுத்துவிட்டு இயக்கத்தின் தேவைக்காக உழைக்காமல் என் விருப்பம்சார்ந்த பணிகளுக்காக உழைத்த கணங்களையெல்லாம் மனதின் ஓர் அறையில் குறும்படங்கள் போல ஒவ்வொன்றாக ஓடிக்கொண்டிருந்தது. என் தனிப்பட்ட பலவீனங்கள் இன்னொரு திரையில் பட்டியலாக ஓடிக்  கொண்டிருந்தது.
அவரைத் திருப்பூரில் நடைபெறும் தமுஎகச மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பதற்காக நானும் வெங்கடேசனும் ராமச்சந்திரனும் அவருடைய இல்லத்துக்குச் சென்றிருந்தோம்.காப்பி கொடு எழுத்தாளர்களுக்கு என்று மகனுக்குச் சொன்ன அந்த முதல் நிமிடம் கடந்ததும் 1936இல் முன்ஷி பிரேம்சந்த் தலைமையில்  அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் துவக்கப்பட்டபோது காலனி ஆதிக்க எதிர்ப்பு நம்முடைய கலை இலக்கியப்படைப்புகளின் பிரதான உள்ளடக்கமாக இருந்தது என்று ஆரம்பித்து மடை திறந்த வெள்ளம்போல அரைமணி நேரத்தில் இப்டா,கலை இலக்கியப்பெருமன்றம்,தமுஎகச என்று நெடிய வரலாற்றின் பக்கங்களில் எங்களை அமிழ்த்தி எடுத்துவிட்டார்.அவருடைய உடல் நலம் கருதி நாங்கள்தான் விடைபெற வேண்டியதாயிற்று.வாழும் வரலாறு என்று கண்ட கண்ட நபர்களுக்கெல்லாம் போஸ்டர் போடும் தமிழ்ச்சமூகம் வரலாற்றிலும் வரலாற்றுக்காகவும் வரலாறாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் என்.எஸ். போன்ற தியாகத்தின் சொரூபங்களை எப்போது கொண்டாடப்போகிறது?எங்களைத் தெரியலையா இந்த இசையைப் புரியலையா திங்கள் ஒளியினில் துயில்வோரே தினம் சூரியத்தீயினில் உழைப்போரே என்கிற பரிணாமனின் பாடல் வரிகள் மனசில் ஓட நாங்கள் மின்சார ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம்.
விடைபெற்றபோது அவர் சொன்னார்: “திருப்பூர் மாநாட்டுக்குப் பிறகு தமுஎகச விஸ்வரூபம் கொண்டு எழும்.உற்சாகமாகப் பணியாற்றுங்கள்” இந்த வரிகளை சிக்கென இறுகப் பற்றிக்கொண்டு நாங்கள் திருப்பூர் சென்றோம்.தமுஎகசவைத் தடைசெய்ய வேண்டும் இந்த மாநாட்டைத் தடை செய்யவேண்டும் என்று இந்து முன்னணியும் இந்து மக்கள் கட்சியும் அரசு நிர்வாகத்துடன் மோதிக்கொண்டிருக்க வீடு வீடாக மாநாட்டுக்கு எதிராக இந்து முன்னணி துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துக்கொண்டிருக்க காவல்துறை பேரணிக்கு அனுமதியில்லை பொது நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என இறுக்கம் காட்டிக்கொண்டிருக்க சகல தடைகளையும் மீறி ஒருவித அரசியல் உறுதியுடன் வெற்றிகரமாகத் திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தி முடிக்க தோழர் சங்கரய்யாவின் விடைகொடுத்த அந்த வரிகளும் அவருடைய பார்வையின் ஸ்பரிசமும் எங்களுக்குக் கைவிளக்காக நின்றன.
விசாகப்பட்டினத்தில் அகில இந்திய மாநாட்டில் என்னை வியப்பிலாழ்த்தியது மாநாட்டின் ஜனநாயக நடைமுறைகள். அறிக்கைகளின் மீது பல்வேறு மாநிலத்தோழர்கள் முன்வைத்த மனந்திறந்த விவாதங்களும்  அவற்றுக்கு பொதுச்செயலாளர் அளித்த பதிலும் அறிவின் விளக்கமாக இருந்தன.திருத்தங்களை வற்புறுத்தி பிரதிநிதிகள் கையை உயர்த்திக்கொண்டிருக்க பொதுச்செயலாளர் டிரில் வாங்கப்படுவதுபோல ஒவ்வொன்றுக்கும் எழுந்து வந்து வந்து பதில் சொல்லிக்கொண்டிருந்த காட்சி மிகுந்த பெருமித உணர்வை ஏற்படுத்தியது.எப்படிப்பட்ட ஒரு கட்சியில் நாம் இருக்கிறோம்.மாநாட்டில் எனது பங்களிப்பு எனக்கே ஏமாற்றமாக இருந்தது.நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
விருதுநகரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இரண்டாவது மாநில மாநாடு நான் எதிர்பார்த்ததைவிட நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது.இக்கூட்டமைப்புக்கென தனியாக ஊழியர்கள் இல்லை.பல்வேறு அமைப்புகளின் ஊழியர்களே  இதற்கான பணிகளையும் சேர்த்துப் பார்க்கிறார்கள்.கிட்டத்தட்ட தமுஎகசவைப்போன்ற அமைப்புத்தான்.ஆனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் களத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆற்றியுள்ள கடுமையான பணிகளில் புடம்போட்ட தோழர்கள் கணிசமான எண்ணிக்கையில்  மாநாட்டுக்கு வந்திருந்ததும் அனுபவத்திலிருந்து ஆழமாக அவர்கள் பேசியதும் எனக்குப் பெரும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது.களத்திலிருந்து நேரடியாக மேடைக்கு வந்துவிட்டார்கள்.ஆம்.புதிய தலைமைப் பொறுப்புக்கும் நிர்வாகப் பொறுப்புகளுக்கும் களப்பணியில் நின்று சாதித்த புதிய தோழர்கள் வந்துவிட்டார்கள்.இது எனக்கு புதிய உற்சாகத்தைத் தருகிறது.விரியும் நம்பிக்கைகளுடன் மாநாட்டிலிருந்து திரும்பினேன்.
தீண்டாமை ஒழிப்பு என்பது சரியா சாதி ஒழிப்பல்லவா உங்கள் முழக்கமாக இருக்க வேண்டும் என்கிற கேள்வியை வாழ்த்த வந்த ஆளுமைகள் சிலர் எழுப்பினர்.ஆரம்பநாள் முதல் முன்னணி சந்திக்கும் கேள்விதான் இது.தீண்டாமை ஒழிப்பு என்கிற பருண்மையான யதார்த்தத்தைத்தொட்டுத்தான் சாதி என்கிற கருத்தியலான கற்பிதத்தை நோக்கி ஜனத்திரளை நகர்த்த முடியும் என்பதைப் புரிந்து கொண்டுள்ள முன்னணி இக்கேள்விக்குத் தன் கள அனுபவத்தால் பதில் சொல்லிக்கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்.
(தொடரும்)

Related posts