You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை, என் போராட்டம் என் அறிவியல்-4 : அப்படியே விழுங்கிய புத்தகங்கள்….

சோ. மோகனா

       ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதை விட, வெளியே  ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே  இருக்கிறது.”….      பிரடெரிக் எங்கெல்ஸ்
நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.”…  கரோலின் கோர்டன்.
வாசிப்பின்.. வாசல் ..இது..!
மேலே கூறப்பட்ட இரு தலைவர்களின் பொன்மொழிகளும் என் வாழ்க்கையில் அனுபவப் பூர்வமாக உணரப்பட்டவை;
இரு நாட்களுக்கு முன், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் வெளிவந்த அம்பேத்கர் சாதி ஒழிப்பு,(டாக்டர். அம்பேத்கர் ), அம்பேத்கர் என்ன சொல்கிறார்? (கே. சாமுவேல்ராஜ்),மற்றும் சாதி, வர்க்கம், மரபணு (ப.கு.ராஜன்), மூன்று புத்தகங்களையும்,கையில் எடுத்துப் புரட்டி, முன்னுரை,முகவுரை,உள்ளே சில பக்கங்களையும், படித்தேன்..உடனே மனம் ஒரு 55 ஆண்டுகளுக்கு முன் பாய்ந்து ஓடியது.
அத்துடன்  நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, 1958ல்  பள்ளி ஆசிரியர்களால் அவ்வப்போது, மறைவிடமாகப்  பேசப்பட்ட மனிதர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இந்த ஆளால்தான் சாதி கெட்ட பசங்களெல்லாம் சரிசமமா இருக்க பாக்கிறானுவ”.  என்று கோபத்தோடு விவாதம் செய்தனர். அப்போது எங்கள் பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள் பார்ப்பனர்கள், மேல் சாதி  வர்க்கத்தினர் மற்றும் கிறிஸ்துவர்களாக இருந்தனர்.. அந்தப் பள்ளியில் அதிகமான பார்ப்பன ஆசிரியர்கள் இருந்ததால்  அவர்கள் உணவருந்திவிட்டு வந்து,  பாடம் நடத்த  வசதியாக, காலை 10.20 க்குத்தான் பள்ளி துவங்கும்.
டாக்டர் பாபா சாகேப்  அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டமும்,  அன்றைய முதல்வர்  காமராஜரின் கட்டாய இலவசக் கல்வியும் இல்லாவிட்டால, என்னைப் போன்றோர், ஏழை எளியோர், பிற்படுத்தப்பட்டோர்,  படித்திருக்கவே வாய்ப்பில்லை. . அப்பா அடிக்கடி “இந்த காமராஜர்ங்குற நல்ல மனுஷன்  இல்லாட்டி , எம் பொண்ணெல்லாம், ஹைஸ்கூல் வாசலை எட்டிக் கூட  பார்த்திருக்க முடியாது, அது இல்லாட்டி நமக்கெல்லாம்,  இப்படி ஒரு பிராப்தம் கிடைக்குமா? பாப்பாரப் புள்ளைங்க, வெள்ளாள வீட்டு புள்ளைகள் மாதிரி பணத்தைக் கொட்டி வச்சுப் படிக்கவைக்க முடியுமா?” என்பார்கள் அடிக்கடி. .நான் படித்தது இலவசக் கல்விதான், தமிழ் வழிக்கல்விதான் .
1970 களில் என்னிடம்,ஒருமுறை பாபா சாகேப் அவர்களுக்காக ஓர் அமைப்பு நிதி கேட்டு வந்தபோது, அது சாதி சார்ந்த அமைப்பு என்பதால்  கறாராக  நிதி தர மறுத்துவிட்டேன். அப்போது தெரியாமல் நடந்து  கொண்ட குற்ற உணர்வு இன்னும்கூட  நெஞ்சை உறுத்திக் கொண்டே  வாட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் பேசிய, போராடிய மனிதம் அது. 1947 களில் பெண்களின் தேசிய கல்வியறிவு 8.9 % தான். துவக்கப் பள்ளியின் பெண்கள் 24.8%உயர்நிலைப்  பள்ளியில் 4.6% (11-14வயதினர்).  இதனை உடைத்ததில் பெரும்பங்கு பாபா சாகேப்புக்கும் உண்டு.
அவரைப்பற்றி முன்பைவிட  இப்போது அதிகமாக, அதுவும் இந்திய அரசால் பொதுக் கல்விக்கு ஆபத்து வந்ததும் அவரின் பங்களிப்பு பற்றி சொல்லவும், நன்றியோடு  , நினைக்கவும்  வேண்டியுள்ளது.அவரின் பதிவுகளைப் படிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. .சென்றவாரம் நான் படித்த பள்ளியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன்.. எங்களின் தலைமை ஆசிரியர் அறையையும் பார்த்தேன்.அங்கே அவரின் படம் இல்லை. அங்கே அவர் அறையில் டாக்டர் பாபா சாகேப்  அம்பேத்கர் படம் மாட்டப்பட்டுள்ளது. பள்ளியின் அமைப்பில், நான் படித்து முடித்து,  55 ஆண்டுகள் ஆன பின்னும் பெரிதாய் ஏதும் மாற்றமில்லை. எல்லா நகராட்சி மற்றும் அரசுப்  பள்ளிகளும் தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரி அமைப்புதான் .
உயர்நிலைப்பள்ளியில் படித்த அந்த காலகட்டத்தில்தான் (1957-63),மோகனா என்ற கிராமத்துச் சிறுமியின் மூளைக்குள் ஏராளமாய் புதிய,புதிய கருத்தோட்டங்களும், உலகம்,சமூகம் தொடர்பான புதிய  சிந்தனைக் கதவுகளும்  திறந்தன; கற்பனையின் சிறகுகள்   எக்கசக்கமாய்  முளைத்தன.
நான் ஆறாப்பு  படிக்கும்போது என் வகுப்பில் உள்ள நீலாம்பாள் என்ற பெண் அவளின் 70 வயது தாத்தாவை  கல்யாணம் கட்டிகிட்டா..அதன்பின் அவள் பள்ளிக்கு வருவதே இல்லை. என்னை மிகவும் அதிர்ச்சியுறச் செய்த சம்பவம் இது. அப்பவே அவர் உடல்நிலை நன்றாக இல்லை.ஆனாலும்கூட  பெற்றோரும் சேர்ந்துதான் அவரோட சொத்து போயிடும்னு நீலாவைத் திருமணம் முடித்தனர். மணம் முடித்த 6 மாத காலத்துக்குள் நீலாவின் கழுத்தில் கட்டப்பட்ட தாலி எடுக்கப்பட்டது. என்ன கொடுமை..? 11 வயதுப் பெண் விதவை..வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமலேயே ! எனக்கும் கூட,  11வயதாகும்போது, என்னை என் தாய்மாமன் ராஜாராமனுக்கு மணம் முடிக்க பேசினார்கள். நான் அழுது ரகளை பண்ணி,  திருமணத்தை  நிறுத்திவிட்டேன்.
எங்க  சோழம்பேட்டை   ஊரிலிருந்து நான் ஒத்தை பொம்பளப்புள்ள மட்டும்தான் கொரநாட்டு ஹைஸ்கூலுக்கு போனேன். எங்க ஊரிலிருந்து பள்ளிக்குப் போகும் மத்த பேரெல்லாம்,, வெள்ளாளத் தெரு ஆம்பளப் புள்ளங்க 8 பேர் . காலை 10.20 க்கு துவங்கும் பள்ளிக்கூடத்துக்கு இந்தப் பசங்க, 8.30க்கே  புறப்பட்டுடுவாங்க. இது எனக்கு கஷ்டமாகி, அவர்களுடன் பள்ளி செல்வதை வெட்டியாச்சு. இப்பதான் பள்ளிக்கூடம் போக பல வழி தெரிஞ்சாச்சே . அதனால, பள்ளிக்குப் புறப்படுவது காலையில் வீட்டுக் கொல்லையில் உள்ள பெரீய்ய வாழை மற்றும் காய்கறித்  தோட்டத்தில் ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சி, கொத்து வேலை  செய்த பின் ,  அம்மாவுக்கும்  அனைத்து உதவிகளையும்,   செய்து முடித்து விட்டு  காலையில் 9.30க்குத்தான் பள்ளிக்குப் புறப்படுவேன். இப்படியாகவே  நண்பர்கள் என்னுடன் சேர முடியா நிலையும், ஊரில் பெண் சினேகிதிகள் இல்லா நிலையும் தான்.
துணைக்கு நண்பரோ யாரும் இல்லாத நிலையால் சில சந்தோஷங்களும், சில சிரமங்களும் உண்டுதான். . . இதனாலேயே எனது வாசிப்பு பழக்கம் அதிகமாகியது. யாருடனும் பெரிதாகப் பேச வாய்ப்பு இல்லை. எல்லாம் ஆண்  நண்பர்கள்தான். என்னத்த பேச இவர்களுடன் என்ற எண்ணம். சீக்கிரம் பள்ளிக்குப் போனால் அங்கும் கதை புத்தகம் கொண்டு போய் வாசிப்பது உண்டு.   வீட்டுக்கு  வந்ததும், தினமும் நடத்தும் பாடத்தைப் படிக்க, மண்ணெண்ணெய் கண்ணாடி சிம்னி /பித்தளை குத்துவிளக்கு ஒளியில், வாசல் திண்ணையில்  முன்னிரவு  7 மணிக்கெல்லாம் உட்கார்ந்தாகிவிடும்.. 8 மணிக்கு அவ்வப்போது தூங்கி சாமியாடுவதும் உண்டு.. இதைப் பார்த்த . பாட்டி “தூக்கம் வந்தா புஸ்தகத்தை மூடி வச்சுட்டு போய் படுடி.சாப்பிட்டுட்டு படுத்துத் தூங்கு” என்பார்கள். ஹூஹூம் அதெல்லாம் காதில் விழாது. நான் படுக்கப் போகவே மாட்டேன்.
இரவு சாப்பாட்டுக்கு  அப்பா, 9 மணிக்கு மேல்தான் வருவார்கள் . பொதுவாக வீட்டில் அப்பா சாப்பிட்ட பின்னர்தான் பாட்டி, அம்மா,  தம்பி,நான் எல்லோரும் சாப்பிடுவோம்.அதுதான் கிராமத்து வழக்கம்.  9.30-10 மணிக்கு சாப்பிட்ட பின் தரையில்  படுக்கப் பாய்  விரிக்கப்படும். அந்தப் பாயை  வாசல்படியருகே போட்டு , கண்ணாடி சிம்னி விளக்கை  கதவுக்குப் பின்னால் வைத்துவிட்டு, குப்புறப் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பேன். . இடையிடையே பாட்டி, “அப்படியே தூங்கி, சிம்னி விளக்கைத் தட்டிவிட்டுட்டு தலையிலே தீ வச்சுக்காதேடி” என்று  தினமும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள. அதெல்லாம் காதில் போட்டுக்கொண்டால்தானே. இப்படிப் பாட்டியின் நெருடலுடன்/பயத்துடன்  படிப்பது என்ன புத்தகம் தெரியுமா? அதாம்பா  கதை புத்தகங்கள். பள்ளியில்  நூலகத்திலிருந்து கொண்டு வந்த புத்தகங்கள். பள்ளியில் ஒரு வாரம் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டுக் கொடுத்தால் தானே, வேறு புத்தகங்கள் வாங்கலாம். மேலும் குறிப்பிட்ட நாளில்  நூலகப் புத்தகத்தைக் கொடுக்காவிட்டால், ஃபைன் வேறு  கட்ட வேண்டும். அந்த தெண்டத்துக்கு நாம எங்க போக..?
இப்படியாகவே  கதைப் புத்தகங்கள், நாவல்கள், துப்பறியும் நாவல்கள் எனப்படிக்கும் பட்டியலும், வாசிக்கும் நேரமும்  அதிகமாகிக் கொண்டே போயின. கையில் எந்தப்பேப்பர் கிடைத்தாலும் படிக்கும் பழக்கம் வந்தது.பக்கோடா, மிக்சர் மடித்த பேப்பர் கிடந்தால் கூட எடுத்துப் படிப்பது வழக்கமாயிற்று. எந்த அழுக்கு எண்ணெய்  பேப்பராக இருந்தாலும் விடமாட்டேன்.  படித்துவிட்டுத்தான் தூக்கி எறிவேன். அதென்ன அப்படி ஒரு பழக்கமோ தெரியலே..அப்பவும் தினம் இரவு 1 மணி, 2 மணிக்குக்குத்தான் தூங்கப் போவேன்..அதுவரை படிப்புத்தான் ..பாட புத்தகம் அல்ல. கதைகள்  துப்பறியும் மற்றும் கிரைம் நாவல்கள்தான் . ஆனால்,விடியலில் 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். வீட்டில் எல்லோருமே.
அப்படிப் பள்ளிக் காலத்தில் படித்த புத்தகங்களின் பட்டியல் சொல்லி மாளாது.  1957-1963 வரையிலான கதைகள், கட்டுரைகள், நாவல்கள், துப்பறியும் நாவல்கள், தொடர்கதைகள், பேசும்படம் போன்ற  சினிமா புத்தகங்கள் என ஏராளமாய் படித்து குவித்தவை கொஞ்ச நஞ்சமல்ல. ராத்திரியில் கிரைம் நாவல்கள் படித்துவிட்டு, பயத்தில் உறைந்து போய் , யாரையும்  எழுப்பினாலும் திட்டு கிடைக்கும் என்று தூங்காமல் விழித்துக் கிடந்த இரவுகளும் உண்டு. புத்தகத்தின் மீதிருந்த காதலும் வெறியும் ஏராளமாய்ப் பரவி தறிகெட்டுத்   திரிந்த காலம் அது. அது மட்டுமல்ல, வீட்டில் மளிகை, மற்றும் சைக்கிள் கடைக்கு வரும் ஆனந்த விகடன், குமுதம், தினமணிக்கதிர், கல்கி எதையும் விட்டு வைப்பதில்லை. அதில் வரும் தொடர்கதைகளும் கூட படிப்பதுடன் எடுத்து வைத்து வெட்டி , அவற்றைத் தைத்து முழுக் கதையாக்கி மீண்டும் படிப்பதும் , பத்திரபடுத்தி வைப்பதும் உண்டு.
சில புத்தகங்களை சுவைப்போம்…
சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில
புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
அப்படிப் படித்ததில் முக்கியமாக தேவன், என்ற மாகாதேவன் எழுதிய துப்பறியும் சாம்பு (1942) மிகவும் பிரசித்தம், அவரின் மனைவி சாம்பு. இதில் வரும் மற்ற  முக்கிய  கதைக்கள நாயகர்கள்   போலிஸ் இன்ஸ்பெக்டர் கோபாலனும், சி.ஐ.டி சந்துருவும் . பெரும்பாலும் துப்பறியும் சாம்பு, இணையர் வேம்பு மூலம் எதிர்பாராத விதமாய் கண்டுபிடிக்கும் விதம் அற்புதம். இந்தக் காலகட்டத்தில், கல்கண்டு என்ற சின்னதான குட்டியூண்டு புத்தகம் வந்தது விலை ரெண்டணாதான். ஆனால் அதுக்கு மவுசு ஏராளம், ஹலோ சங்கர்லால், , சங்கர்லால் வந்து விட்டார் என ஏராளமான துப்பறியும்  கதைகள்.. இவற்றைப்  படிக்க படிக்க மனசு துருதுரு வென எப்போதும் பறக்கும். . அதுவும் மணிமொழி என்னை மறந்துவிடு என்ற கதையில், கவுனில் மறைவாக துப்பாக்கி படம் போட்டு ,அதனை ஒரு ஆள் மூலம் கொடுத்து சேர்ப்பிக்கும் த்ரில்லிங் ..செம தான். நமக்கே  என்ன நடக்கும், கொடுத்துடுவானா, கொன்னுடுவானான்னு மனசு படபடத்து காற்றாடியாய் அந்தரத்தில் ஆடும்.
இன்றும் கூட  வாசகரால் மறக்க முடியாத கதை மாந்தர்கள் பாக்கியம் ராமசாமயின் அப்புசாமியும், சீத்தாபாட்டியும் தான்.  1963-ஆம் வருடத்திலிருந்து, குமுதம் வார இதழில் , ஜெயராஜ் ஓவியத்துடன் உயிரோட்டமாய் வந்த ஜீவன்கள் அவை.  சீதா பாட்டியின் வயது 70, அப்புசாமிக்கு 75 வயது. இன்னமும் அவர்கள்  அப்படியே நடமாடுவது அதிசயம்தான். அதில் வரும் முதல் கதையே தூள் டக்கராய் இருக்கும். . அப்புசாமி பொடி போடுவதைத் தடுக்க சீதாபாட்டி நடவடிக்கை எடுக்க, அப்புசாமியின் எதிர்வினைகள் எல்லாமே அட்டகாசம்தான்.
அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக “பச்சோங்கீ கிதாப்” என்ற ஹிந்திப் பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரைக் குழப்பியது சூப்பர்தான் அதிலும்  அப்புசாமி: “ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை” (மொழியாக்கம் : இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது.)..இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: “அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்”சீதாபாட்டி (கருணையுடன்): “அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை” (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).என்பதைப் படித்துவிட்டு வயிறு குலுங்க சிரித்த  காலமும் உண்டு.
முடி திருத்தகம் எனப்படும் சலூன்களும்,  டீக்கடைக்களும்தான்  கிராமத்தின்  முக்கியமான  வாசிப்பு மையங்களாக இருந்தன.பொதுவாக கிராமத்தில் வீட்டில் காபி போடாததால், எல்லா கிராமத்திலேயும் டீக்கடை  வாசலில் போடப்பட்டிருக்கும் நீளமான மர பெஞ்சுகள் விடியற்காலையிலேயே களைகட்டிவிடும்.  அந்த பெஞ்சுதான் அனைத்து விஷயங்களையும் அலசும் மேடை. அதில் அமர்ந்து, காலையில் 6.40க்கு வானொலி செய்தி கேட்பதும், அதன் பின்,   யாராவது ஒருத்தர் சத்தம் போட்டு ‘தினத்தந்தி‘யை வாசிப்பதும் வழக்கம். .,கும்பலாக மற்றவர்கள் அமைதியுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நாளிதழ் வாசிப்பவர் அதிக பட்சம்  ரெண்டாப்பு படித்திருப்பார். அதுதான் அவருடைய கல்வித் தகுதி.
வகுப்பறையில் சத்தம் போட்டுப் படிப்பதனால், பெரும்பாலும் வாசிப்பு ஒலியில்  பிழை இருக்காது.அதுபோல நிறைய ‘டிக்டேஷன்கள்’ வகுப்பில் தரப்படுவதால் ழ, ள,ல, ற, ர, பிரச்சனை இல்லாமல் சரியாகவே வரும்.
தினத்தந்தியில் தினமும் ஆண்டிப்பண்டாரம் என  வெளியாகியிருக்கும் நகைச்சுவைப் படத்தைப் பார்த்து சிரித்து  புரிந்து கொள்ள முயலுவேன். பெண் குழந்தைகளைப் பொறுத்தவரையில் வயதுக்கு வந்தவுடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடுவார்கள். இல்லாவிடில் தொடக்கப்பள்ளியுடன் ‘கல்வி’முடிந்துவிடும். ‘கடிதாசி எழுத, வண்ணான் கணக்கு எழுதத் தெரிந்தால் பொட்டப் புள்ளைக்குப் போதாது… என்ன, படிச்சு ஜில்லா கலெக்டர் ஆகப் போகிறாளா?’ என்பது பொதுப் புத்தியாகக் கிராமத்தில் பலரின் மனதில் பதிந்திருந்தது.
பாடப் புத்தகத்தைவிட ‘தினத்தந்தியை ஒவ்வொரு நாளும் வாசிக்க எளிதில் வாசிப்பு எல்லோருக்கும் இலகுவானது. அத்துடன் எங்க தெருவில் உள்ள எல்லோருக்கும் கடிதம் வந்தால் வாசிப்பதும், அவர்களுக்கு கடிதம் எழுத்திதருவதும் நான்தான். சில சமயம் கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது ஒண்ணுமே  புரியாது.  அதிலும் அவர்கள் எழுதியுள்ள  ‘க்கு’ என்பதை சூ என்பதுபோல பல்வேறு சுருக்கு எழுத்தில் எழுதி இருப்பார்கள் அந்த எழுத்துகளை பள்ளியில் சொல்லித் தர மாட்டார்கள்  . ஊரிலிருந்து யாரோ எழுதி அனுப்பியிருக்கும் தபாலில் உள்ள செய்தியை அறிந்து கொள்ள எப்படியோ, ஒரு வழியாக கல்வெட்டு எழுத்தை வாசிப்பதுபோல படித்துக் காட்டிவிடுவேன்.
வீட்டில் அப்போது வந்த ராணிமுத்து என்ற புத்தகத்தின் பரம ரசிகை நான். இன்று நான் அப்படிப்பட்ட புத்தகங்களைப் படிப்பதே இல்லை. எல்லாம் அதிகமாய் அறிவியல்தான். ஆனால் இந்த துப்பறியும் நாவல்கள்தான் படிக்கும் ஆவலைத் தூண்டின என்றால் மிகையில்லை. 10-12 வயது குழந்தைகளிடையே மிகவும் பிரபலமாக இருந்த மர்மக் கதைகள், திகிலூட்டும் வண்ண ஓவியங்களுடன் வெளிவந்த நாவல்கள் மனதில் பீதியைக்  கிளப்பினாலும்,கொலை, கொள்ளை, பேய் , சதி, மர்மம் என கதைக்களம் விரியும்போது, குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வமும் தூண்டப்பட்டது.அப்படி வந்த பி.டி. சாமியின் நாவல்கள் ..ரத்தம் வடியும் கோரைப்பற்கள், ஜல், ஜல் கொலுசு ஒலி, மல்லிகைப் பூ மணம் .கும்மிருட்டு போன்றவை படிக்கும் மக்களை ஈர்த்தன. மனதில் பயத்தோட வாசித்தவைகள்தான் என்றாலும், அவை வாசிப்பின் வாசலை அகலத் திறந்து வைத்தன.
இன்னும் இன்னும் நிறைய..   ஜெயகாந்தன், தி.ஜா., புஷ்பா  தங்கதுரை,அகிலன், லட்சுமி, சாண்டில்யன், டி.ஆர். ராஜம்மா, ராசு.நல்லபெருமாள் ஆகியோரையும் சந்திக்க இருக்கிறோம் நண்பர்களே.
புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொண்ட  கடந்த 60  வருடங்களில், புத்தகங்களும் அதற்கு இணையாக நான் சந்தித்த மனிதர்களும் என, இந்த அனுபவங்கள்  என்  வாழ்க்கையில்  எனக்கு ஏராளமாய்  கற்றுக் கொடுத்துள்ளன . அதுமட்டுமல்ல, தினமும் மனிதர்களிடம் கற்றுக்கொள்ள எனக்கு ஏதாவது இருந்து கொண்டேயிருக்கிறது. இன்னமும்  நான் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம் இதுவும்கூட என்றே நினைக்கிறேன்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கினாலும் வாசிப்பதை நிறுத்தாதவர் கார்ல் மார்க்ஸ். லண்டன் நூலகத்தில் இவர் படிப்பார். பசி அதிகமாகி மயக்கமடைந்து விழுவார். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடுவர். எழுந்ததும் உணவைக்கூட பார்க்காமல் மீண்டும் படிப்பார். அப்படி உருவானதே ‘மூலதனம்’ (தி கேப்பிடல்) எனும் அழியாத நூல்.
இதையெல்லாம்  பார்த்த பின்னும் வாசிக்காமல் இருக்க  முடியுமா?
“வாசிப்பு எனபது  உடலின்  உயிர் ஆதாரமான சுவாசம் போன்றது”.             (தொடரும்)

Related posts