You are here
நேர்காணல் 

“மானுடம் நீதியுடன் வாழமுடியுமென்று நம்புகிற, அதற்காக போராடுகிற எவரும் எங்கே இருந்தாலும் அவர்கள் இடதுசாரிகளே”

– மனுஷ்ய புத்திரன்

சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா

“இந்தக் காரிருளைக் கடப்பது இயலாத காரியமல்ல”

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியோடும் தனித்துவத்தோடும் வரும் தமிழ்க் கவிஞர்கள் வரிசையில் நமது சமகாலத் தமிழ¤ன் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர் மனுஷ்யபுத்திரன். திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி எனும் சிறு நகரில் பிறந்த (1968) அப்துல் ஹமீது என்ற இயற்பெயர் கொண்ட மனுஷ்யபுத்திரன் கவிதைகள் இதுவரை 11 தொகுதிகள்- _ மனுஷ்யபுத்திரன் கவிதைகள் (1983), என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்(1993), இடமும் இருப்பும் (1998), நீராலானது (2001)

மணலின் கதை (2005), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2007) அதீதத்தின்ருசி (2009), இதற்குமுன்பும் இதற்குப்

பின்பும் (2010), பசித்தபொழுது(2011), அருந்தப்படாத கோப்பை(2013), சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013), அந்நிய நாட்டுப் பெண்(2015) ஆகியவை வந்துள்ளன. அதிலும் கடைசி தொகுப்பில் 270 கவிதைகள்! தினசரி காலை உணவிற்கு முன்னால் இரு கவிதைகள்! என்ற வகையிலான கவிதைப் பெருக்கு. நல்ல கவிதைக்கு எதுகை, மோனை, தாளம், தம்பட்டம், அலங்கார வார்த்தைகள், அடுக்குமொழிகள் இத்யாதி இத்தியாதிகள் எதுவும் தேவையில்லை; மிகச் சாதாரணமான, தினசரிப் புழக்கத்தில் தேய்ந்து போன சொற்களாலேயே சொல்லையும், மொழியையும் தாண்டிய சித்திரங்களை உணர்வுகளை எழுப்ப முடியும் என்பதற்கு மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் வாழும் சாட்சி.

‘ஒரு கவிஞனின் சுயசரிதம் அவனது கவிதைகளே. ஏனையவை எல்லாம் அடிக்குறிப்புகளே’ மஹாகவி_யுவ்ஜெனி யுவ்துஷென்கோ. மனுஷ்ய புத்திரனுக்கான அடிக்குறிப்புகள் மிக நீண்டவை. கட்டுரையாளர், பத்திரிகையாளர், செயல்பாட்டாளர், பதிப்பாளர், கட்சிக்காரர், காட்சி ஊடகக்காரர்… தமிழகத்தில் பலருக்கும் அவரை அந்த அடிக்குறிப்புகளில் ஒன்றின் மூலம்தான் தெரியும் என¢பது இலக்கியத்திற்கும் கவிதைக்கும் உள்ள வரம்பைக் காட்டுகின்றதெனலாம்.

மனுஷ்யபுத்திரன் என்னும் உங்கள் பெயரின் தாத்பர்யம் என்ன?

புனைப்பெயர்கள் இளமைக் காலத்தில் நம்மைப் பற்றி நாம் காணும் கனவு. பிறப்பின் அடையளங்களைக் கடந்து, புதிய அடையாளங்கள் தரிக்க விரும்பும் போது நாம் மேற்கொள்ளும் சிறு சாகசம்தான் இந்தப் புனைப் பெயர்கள். புனைப் பெயர்கள் என்றாலே அது நம்மைப்பற்றிய புனைவுதானே. மனித குலத்தின் மகனாக சாதி, மத, இன, தேச வரையறைகள் கடந்து என்றாவது ஒரு நாள் வாழ்வேன் என்ற சவாலுக்காக 15 வயதில் வரித்துக்கொண்ட அந்தப் பெயர் தரும் சவாலை எப்போதாவது நிறைவேற்றுவேன்.

சொந்த ஊரான துவரங்குறிச்சியிலிருந்து கொண்டு கவிதைகள் எழுதியதற்கும், சென்னைக்கு வந்து பத்திரிகையாசிரியராக, பதிப்பாளராக, பரிணாமம் பெற்றதற்குமான வித்தியாசமான அனுபவங்கள் பற்றி…

நான் ஊரில் இருந்த நாட்கள் தனிமையின் கசப்பு நிறைந்தவை. நான் மூச்சுவிட முடியாமல் தடுமாறினேன். அங்கே என் முன்னால், காலத்தின் ஒரு பிரமாண்டமான மதில்சுவர் இருந்தது. அந்தச் சுவரைத் தாண்டவே முடியாதோ என்று அஞ்சினேன். ஆனால், இந்த சென்னை நகரம் என் கையில் இடையறாது ஓடும் நதியாக காலத்தை மாற்றிவிட்டது. நான் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த மனிதர்களையும், மிக மோசமான மனிதர்களையும் இந்த நகரத்தில்தான் சந்தித்தேன். அவர்கள் என்னை மாற்றியமைத்தார்கள். அவர்கள் என் மனதை நீண்ட தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பினார்கள். இந்த நகரம் என்னை எனது தாழ்வுணர்ச்சியிலிருந்து முழுமையாக விடுவித்தது. என்னை ஓர் பந்தயக் குதிரையாக மாற்றியமைத்தது. அதை நான் விரும்பினேன். இந்த நகரத்தில் எனக்கான பாதைகளைத் திறந்துவிட்டதில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு முக்கியமானது. ஒரு கதவு மூடப்பட்டால் இரண்டு கதவுகளைத் திறந்துவிடும் நகரம் இது. நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நிறைய எழுதினேன். இங்கே வாழ்ந்த 15 ஆண்டுகள்தான் என் வாழ்வின் சாரமாக இருக்கிறது. இந்த நகரத்தில் நீங்கள் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையோடு இங்கேதான் பிடிவாதமாக அமர்ந்திருப்பீர்கள்

 ‘மன ஓசை’ போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த துவக்க காலக் கட்டங்களில் ஒரு இடது சாரி சிந்தனையாளராக வெளிப்பட்டீர்கள். இன்றைக்கு உங்கள் நகர்வு இயக்கத்தை குறிப்பாக தி.மு.க.வை நோக்கியதாக இருக்கிறதே?

இடது சாரி சித்தாந்தம் என்பது ஒரு கட்சி கொள்கை அல்ல. மானுடம் நீதியுடன் வாழமுடியுமென்று நம்புகிற யாரும் அதற்காக போராடுகிற யாரும் எங்கே இருந்தாலும் அவர்கள் இடது சாரிகளே. ஒரு வெகுசன இயக்கம் மட்டுமே சில அடிப்படை மாறுதல்களைகொண்டுவர முடியுமென்று நம்புகிறேன். தி.மு.கவின் சமூக நீதி சார்ந்த வரலாறு அதற்கு ஒரு முற்போக்கான உள்ளடகத்தை எப்போதும் வழங்கிக்கொண்டிருகிறது. தமிழகத்தில் பாசிச மதவாத சக்திகள் வளராமல் தடுக்கபட வேண்டும் என்றால், தி.மு.க. அதிகாரத்தில் இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன்

சிறு பத்திரிகைகள் தமது தனித்தன்மையை இழந்து வெகுஜன கலாச்சாரத்துடன் கலந்துவிட்டதை ஆரோக்கியமான போக்கு என்று கருதுகிறீர்களா? அல்லது சிலரின் கூற்றுப் போல, சிறுபத்திரிகைகளின் தேவை முடிந்துவிட்டதா?

நமது வெகுசன பண்பாடு கலை- இலக்கியம் சார்ந்த நுண்ணுணர்வுகளை முற்றாக புறக்கணித்ததால் உருவான ஒரு எதிர் இயக்கமே சிறு பத்திரிகை பண்பாடு. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிற்றிதழ் சார்ந்து இயங்கியவர்கள் வெகுசன பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தங்களுக்கான ஒரு இடத்தை சிறுகச் சிறுக உருவாக்கியிருக்கிறார்கள். வெகுச ஊடகங்களில் கடந்த பத்தாண்டுகளில் பெயர் சொல்லக் கூடிய ஒரு வெகுசன எழுத்தாளன்கூட உருவாகவில்லை. ஆனால் சிற்றிதழ்கள் சார்ந்து உருவான ஏராளமான படைப்பாளிகள் வெகுசனப் பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். விகடன் போன்ற இதழ்கள் வெளியிடும் கதை- கவிதைப்பக்கங்களைப் பார்த்தாலே நீங்கள் இந்த உண்மையை அறியலாம். இந்தத் தளம் இன்னும் விரிவடையும். இந்த மாற்றம் தமிழ் சினிமா-தொலைக்காட்சி ஆகியவற்றிலும் நடந்துகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் சிற்றிதழ்களின் தேவை மறையும். அந்த இடத்தை இணயம் எடுத்துக்கொள்ளும். இப்போதே அது நடந்துகொண்டிருக்கிறது.

அண்மைக்காலத்தில் எழுத்தாளர்கள்மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருத்து சுதந்திரத்த¤ன் மீதான இவ்வகை அச்சுறுத்தல்கள் குறித்து…

பழமைவாத சக்திகளுக்கு, தங்களை நிலை நிறுத்திகொள்ள எதிர்நிலைகள் தேவை. பண்பாட்டுத் தளத்தில் குறுக்கீடுகளைச் செய்யும் கலைஞர்களைத் தாக்குவதன்மூலம் வெகுசன உளவியலில் மண்டிக்கிடக்கும் பழமைவாத இருளை தங்கள் அதிகாரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்கள் செய்வது, காலத்தைப் பின்னோக்கி இழுக்கும் முயற்சி. ஆனால், உலகளாவிய பொருளாதார மாற்றங்களும்; பண்பாட்டு பரிவர்த்தனைகளும் ஒரு மிகப்பெரிய டைனோசரைப்போல எல்லா பழைய பண்பாட்டு மதிப்பீடுகளையும் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. மனிதகுலம் முற்றாக வேறொரு வாழ்க்கைமுறையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்திய சமூகமும் தமிழ்ச்சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்நியமாதலும், நுகர்வுக் கலாசாரமும் வினோதமான உறவுநிலைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாத மூடர்கள், தங்கள் நம்பிக்கைகளின் அழிவை எளிய இலக்குகளான எழுத்தாளர்களைத் தாக்குவதன் மூலம் தடுத்து நிறுத்தலாம் என்று நம்புகிறார்கள்.

பசுவதைத் தடைச்சட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு வரத் துடிக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறுமா? இதை எவ்வாறு எதிர்கொள்வது?

நிறைவேறாது. உண்மையில் அவர்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. இது போன்ற சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலமாக, மதம் சார்ந்த முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி, ஒரு இந்து பெரும்பான்மைவாத உளவியலைக் கட்டமைக்க வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் இந்தப் பேச்சுக்களை உருவாக்குகிறார்கள். இந்தியா என்பது எண்ணற்ற பண்பாடுகள், வாழ்க்கைமுறைகளின் மிகப்பெரிய வனம். அவற்றை இவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஒழுங்குபடுத்த முயற்சித்தால் மிகப்பெரிய தோல்வியையே தழுவுவார்கள். மாட்டு மாமிசம்- மாட்டுதோலால் நடக்கும் வர்த்தம் மிகப்பெரியது. அதை இவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது. மேலும், உபயோகமில்லாத கால்நடைகளை பராமரிக்க மோடியின் அரசு மானியம் கொடுத்தால், எந்த விவசாயியும் தனது மாட்டை கொல்லமாட்டான். அதுபோல, செத்த மாடுகளைப் புதைக்க பொதுமயானங்களையும் இந்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பழக்கம் மனிதனின் அடிப்படை உரிமை. இதன்மீது யாரும் கைவைக்க முடியாது. நாடு முழுக்க விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். இதைக் கேட்க யாருமில்லை ஆனால் மாடுகள் கொல்லப்படுவதைப் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். உலகமே இநத அபத்தத்தைக் கண்டு சிரிக்கிறது.

ஊடகங்கள் இன்றைக்கு நிறைய பிரச்சனைகளின் மேல் விவாதங்கள் நடத்துகின்றன. பெரும்பாலானவற்றில் நீங்களும் பங்கு பெற்று கருத்துக் கூறுகிறீர்கள். ஊடக வளர்ச்சிக்கு முன் பத்திரிகைகளின் செல்வாக்கு மட்டுப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்களா?

ஊடக விவாதங்கள் பல சமயங்களில் எந்த அர்த்தமும் இல்லாத கூச்சல்களாகவே இருக்கின்றன. பத்திரிகைகளின் வேலையை காட்சி ஊடகங்களால் ஒருபோதும் செய்ய இயலாது. எந்த ஒரு பிரச்சினையிலும் பத்திரிகைகள்தான் இன்றும் ஆழமான தரவுகளைத் தரக்கூடிய ஊடகமாக இருக்கிறது. ஒரு பத்திரிகைக் கட்டுரையில் எழுதக்கூடியதில் சிறு பகுதியைக்கூட வெளிப்படுத்த காட்சி ஊடகங்கள் அனுமதிப்பதில்லை. பத்திரிகைகள் அழியாது. ஆனால் அதன் வாசகர்கள் குறைந்துபோவார்கள். இது காலத்தின் தவிர்க்கமுடியாத விதி.

உயிரோசை இணைய வார இதழ் ஆசிரியர் நீங்கள். உயிர்மை, உயிரோசை இரண்டில் எது வாசகனிடத்தில் அதிகமான தாக்கத்தை உருவாக்குகிறது?

உயிர்மை இந்த 12 ஆண்டுகளில் தமிழின் மிகமுக்கியமான ஒரு இடைநிலை இதழாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருகிறது. அதில் வெளிவரும் பல ஆக்கங்கள் உடனடியான கவனத்தையும் விவாதங்களையும் உருவாக்கி வந்திருக்கின்றன. அது எப்போதும் ஒரு இலக்கிய பண்பாட்டுச் சூழலோடு தீவிரமான உரையாடலை நிகழ்த்தும் ஏடாக இருப்பதில் எனக்கு ஒரு திருப்தி இருக்கிறது.

உயிரோசை பல இளம் படைப்பாளிகளை உருவாக்கியது. இன்று பரவலாக அறியப்படும் பல இளைய தலைமுறை படைப்பாளிகள் அதன் வழியே எழுதி மேலெழுந்து வந்தவர்கள். உயிரோசையை நடத்திய அந்த நாட்கள் மிகவும் உற்சாகமானவை. ஃபேஸ்புக் வந்த பிறகு இணைய இதழ்கள் தங்கள் இடத்தை, தேவையை இழந்துவிட்டன. எனினும், ஒரு புதிய வடிவில் உயிரோசையை விரைவில் புதுப்பிப்பேன்

‘எழுத்தாளர்களில் சிலர் தமக்கான விசுவாசிகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அப்படி ஒரு விசுவாசியைக் கூட என்னால் உருவாக்க முடியவில்லை’ என்று கூறுகிறீர்கள். வாசகர்கள் வேறு, விசுவாசிகள் வேறு என்கிற பொருளில் நீங்கள் அதைக் குறிப்பிட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா?

ஒரு எழுத்தாளன் தன்னைப்பின்பற்றும் வாசிப்புப் பழக்கத்தையும் அவனது சுதந்திரமான சிந்தனைகளையும் ஊக்குவிக்க வேண்டும், ஆனால் சில எழுத்தாளர்கள் அவர்களைத் தங்களது தொண்டர்களாகவோ அடியாட்களாகவோ மாற்றுகிறார்கள். ஜெயமோகனும் சாருவும் தமிழில் அதற்கு ஒரு சிறந்த உதாரணங்கள். இந்த செயல்பாடு ஒட்டுமொத்த இலக்கியச் சூழலையே பாழ்படுத்துகிறது. இது தமிழகத்தில் இருக்கும் பிம்ப வழிபாட்டுக் கலாச்சாரத்தின் ஒரு தொடர்ச்சி. இதை எழுத்தாளர்கள் செய்வது அவமானகரமானது.

இருண்ட மனங்களின் கவிஞன் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?

‘ இருண்ட காலத்தில்

பாடல் ஒலிக்குமா?

ஒலிக்கும்

இருண்ட காலத்தைப் பற்றி’

என்று எழுதினான் பெட்ரோல்ட் ஃப்ரெக்ட், அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். இன்றைய மனிதன் சிதறுண்டுபோன மனதினால் ஆனவன். சமூக உறவுகள், பொருளாதார உறவுகள், அந்தரங்க உறவுகள் அனைத்தும் இன்று பெரும் சிதிலமாகிவிட்டது. துரோகமும், பொய்யும் நமது வாழ்வின் சாரமாக மாறிவிட்டன. இதை எழுதுவது இந்தக் காலகட்டத்தின் கவிஞனுக்கு மிகப்பெரிய சவால். இந்த பிரமாண்டமான இருட்டறையில் சொல்லின் ஒவ்வொரு தீக்குச்சியாக உரசி, ஒவ்வொரு முகத்தையும் நடுக்கத்துடன் பார்க்கிறேன். அந்த முகங்கள் என்னை மனம் உடையச் செய்கின்றன.

ஏழுமாதங்களில் 270 கவிதைகள் எழுதியது ஒரு சாதனைதான். ஆனால் கவிதைகள் இத்தனை வேகமாக எழுதப்பட வேண்டியது, அவசியமா?

நான் ஒரு பிரமாண்டமான ஜனத்திரள் நடுவே பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமிராபோல இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பிம்பங்கள் அந்தக் கேமிராவில் விழுந்தவண்ணம் இருக்கின்றன. அவற்றை எழுதுவது என்பது, உண்மையில் என் காலத்தின் பெருவெள்ளத்தை எழுதுவதே. உண்மையில் எனக்கு எழுதுவதற்கு இப்போது எழுதியிருப்பதைவிட அதிகமான காட்சிகள் மனதில் எஞ்சியிருக்கின்றன. மேலும், எழுதுவது என்பது வாழ்வின் ஒரு காலகட்டத்தில் நம் மனம் நமக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசு. அந்தப் பரிசு எனக்கு எப்போதும் கிடைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். நிறைய எழுத எழுதத்தான் எழுத்து கூர்மையும் ஆழமும் அடைகிறது.

கவிதைக்கான உங்கள் மொழி, இத்தனை இலகுவாக இருக்கிறதே?

நான் எனது கவிதைக்கான சொற்களை மக்கள் புழங்குகிற, உரையாடுகிற சொற்களிலிருந்தும் தொனிகளிலிருந்தும் பெறுகிறேன். அது எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியும் என்ற தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது

தமிழ்க்கவிதை என்பது, அதன் மரபில் கதைகளால் ஆனது.. என நீங்கள் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கவிதைக்கு விசேஷமான கருப்பொருளோ, தரிசனங்களோ தேவையில்லை என்று நீங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

கவிதை அதன் வெளிபாட்டு முறைமைக்காக மட்டுமே விசேஷமானதே ஒழிய, அதற்கெனெ விஷேசமான உள்ளடக்கம் ஏதுமில்லை. நமது மரபுக்கவிதையிலும் சரி புதுக்கவிதையிலும் சரி அவை மனித வாழ்க்கை குறித்து என்ன பெரிய தரிசனங்களைக் கொடுத்துவிட்டன? அவற்றின் பெரும் பகுதி வெறும் வார்த்தைக் குப்பைகள். ஒரு வீம்புக்காக நீங்கள் இரண்டாயிரம் வருட கவிதை மரபு குறித்து பெருமை பாராட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் அதில் நமக்கு பெரும் அனுபவங்களைக் கொடுக்கக் கூடிய கவிதைகள் மிகக் குறைவு. தத்துவமும் வரலாறும் கொடுக்கக் கூடிய தரிசனத்தில் சிறு பங்கைக் கூட எனக்கு தமிழ்க் கவிதைகள் தரவில்லை என்பதுதான் உண்மை.

புதுக்கவிதையை எழுதி எழுதி நீர்த்துப் போகச் செய்த போது நவீன கவிதையின் தேவை எழுந்தது. நீங்களும் கூட நவீனத்தின் ஒரு கிளையிலிருந்து தோன்றி வளர்ந்த கவிஞர்தான். ஆனால் ஒரு அறிக்கையை கவிதையாக ஒப்புக் கொள்ள உங்களால் இயலுமா?

நவீனத்துவம் என்பதே, ஒரு சுவரெழுத்திலும் துண்டுப் பிரசுரத்திலும் உள்ள சொற்களைக் கூட ஒரு கவித்துவ அனுபவத்திற்கு மாற்றுவதுதான். ஆனால் அந்த நவீனத்துவ பார்வை இல்லாதவர்கள் ஒரு மகத்தான அனுபவத்தைக் கூட ஒரு துண்டுப் பிரசுரமாக மாற்றி விடுவார்கள்.

இச்சையையும், உடலையும் எழுதுவதுதான் எப்போதும் மிகப் பெரிய சவால்’ என்று நீங்கள் சொல்வதில் உடன்படலாம். ஆனால், தமிழ் வாசக மனம் இன்னும் ஒருவித, ஒழுக்க வரையறைகளுக்குள்ளேயே உழல்வதாகத் தோன்றுகிறதே?

தமிழர்கள் இதுபோன்ற விஷயங்களில் கூச்சமே இல்லாமல் பொய் சொல்லக்கூடியவர்கள். மொபைலில் பிட்டுப் படம் பார்த்துக்கொண்டே கவிதையில் ‘முலைÕ என்ற வார்த்தை வரக்கூடாது என்பார்கள். தங்கள் படுக்கையறையில் தாங்கள் பயன்படுத்துகிற கெட்டவார்த்தைகளை இலக்கியத்தில் படித்தால் அதிர்ச்சி அடைவது போல நடிப்பார்கள். நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருகிறோம் என்பதை கண்டுகொள்வதற்கான முக்கியமான அளவுகோல் நமது பாலியல் இச்சைகளும் உறவுகளும் எப்படி மாறியிருக்கின்றன என்பதைத் துணிச்சலாக வெளிப்படுத்துவதுதான். நமது நிர்வாணத்தை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது கொஞ்சம் சங்கடமானதுதான். ஆனால் எவ்வளவு நேரம் கண்ணாடி முன் நடிப்பது? காமம் எனது காலத்தின் மிகபெரிய அரசியல் பாடுபொருள். அதை நான் தொடர்ந்து எழுதுவேன்

கவிஞர்களில் சிலர் சிறுகதைகளும், நாவலும் எழுதுகிறார்கள். நீங்களானால் கவிதையுடன் நின்று கொண்டீர்கள். உங்களுக்கென்று சொல்வதற்கு நிறைய கதைகளிருப்பது உண்மைதானே?

‘மாங்காய் பாலுண்டு மலைமேலிருப்பார்க்கு தேங்காய்பால் எதுக்கடி?குதும்பாய் தேங்காய்பால் எதுக்கடி?’ என்ற குதம்பைச் சித்தரின் வரிகளைத்தான் பதிலாகத் தர விரும்புகிறேன். நான் எழுத வேண்டிய கதைகளும், நாவல்களும் என் கவிதை வரிகளாக இருக்கின்றன. அந்த வரிகளின் ஊடே வேறு யாரேனும் அந்தக் கதைகளை எழுதக் கூடும்.

அரசியல் கவிதைகள் எழுதுவதில் உங்களுக்கென்று ஒரு பாணி இருக்கிறது. முன்பு ‘ஹிட்லர்’, பிறகு ‘அரசி’ இப்போது அரசரைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும். ‘பார்க் தெரு பாலியல் பலாத்கார பலியாள்’ இப்படிச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. அரசியல் கவிதைகளை கவிதைகளென ஒப்புக் கொள்ள, தூய கவித்துவவாதிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்.?

நான் அரசியல் கவிதைகள் என்ற ஒன்றை திட்டமிட்டு எழுதுவதில்லை. ஒரு காதலைப் பற்றி , ஒரு மரணத்தைப் பற்றி என்ன ஒரு அந்தரங்க உணர்வோடு எழுதுகிறேனோ அதே உணர்வோடுதான் அரசியல் கவிதைகளும் எழுதுகிறேன். நான் என் காலத்தோடு ஆழமாக பிணைக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு அரசியல் நெருக்கடியும், சமூகப் பிர்ச்சினையும், மிகப்பெரிய மானுட அவலத்தோடு சம்பந்தப்பட்டது. அவை ஒரு கவிஞனையே பாதிக்கவில்லை என்றால் பதட்டமடையச் செய்யவில்லை என்றால் வேறு யாரைத்தான் பாதிக்கும்? மேலும், சமூக அரசியல் நெருக்கடிகள் ஒரு கவிஞன் எழுதுவற்கான சாத்தியங்களை எல்லையற்ற வகையில் திறந்துவிடுகின்றன. ஒரு கவிஞன் அவற்றை இழக்கக் கூடாது. மேலும் தனிமனித அந்தரங்க நெருக்கடிகளைப் பேசும் கவிதைகளில் எப்படி மோசமான கவிதைகள் உண்டோ, அதே போல அரசியல் கவிதைகளிலும் உண்டு. மோசமான உதாரணங்களைக் கொண்டு ஒரு வெளிபாட்டுத்தளத்தை நிராகரிக்கக் கூடாது

பெண் கவிஞர்கள் எழுதும் ‘உடலரசியல்’ குறித்து…?

கடந்த ஒரு நூற்றாண்டில் உடலரசியல் சார்ந்த எழுத்துக்கள் என்பது, கலைக்கும் தத்துவத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறன. பண்பாடு வாழ்கை குறித்த புதிய வெளிச்சங்களை பாய்ச்சியிருக்கின்றன. அதன் நீட்சியாக, தமிழில் நிகழும் உடலரசியல் சார்ந்த கவிதைகள் மிக முக்கியமான இலக்கிய செயல்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவை இன்னும் அரசியல் மற்றும் தத்துவார்த்த செறிவுகொண்டதாக மாறவேண்டுமென்பதே என் ஆவல்.

‘இரண்டாயிரம் வருட தமிழ்க்கவிதை நூறுவருடத்தமிழ் உரைநடை, எழுபத்தைந்து வருடத் தமிழ் சினிமா, இருபது வருட தமிழ் பின் நவீனத்துவம் கால வித்தியாசமின்றி எல்லாம் ஒரே அளவில் புளிப்பேறிப் போயிருக்கிறது என்று ஒரு இடத்தில் சொல்கிறீர்கள். எனக்கானால், கடந்த இருபதாண்டு காலத்தில் தமிழ்நவீன இலக்கியம் சில அங்குலங்களேனும் முன்னகர்ந்திருப்பதாய்த் தோன்றுகிறது..

உங்கள் கேள்வி தமிழ்ப் பண்பாடுகுறித்த எனது அங்கதக் கவிதை ஒன்றிலிருந்து எழுப்பப்படுகிறது. தமிழ் மனம் தன் பழமையிலிருந்து முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு சிக்கலில் எப்போதும் உழன்றுகொண்டிருக்கிறது. நாம் செக்குமாடுகளைப் போல நம் பழைய மதிப்பீடுகளை திரும்பத் திரும்ப சுற்றி வருகிறோம். நவீனத்துவம் சார்ந்த பெரிய பாய்ச்சல்கள் எதுவும் இங்கு நடக்கவில்லை. அதற்கான இயக்கங்கள் குறுகிய காலத்தில் நீர்த்துப்போகிறன இது மிகுந்த மனச்சோர்வு ஊட்டக் கூடியதாக இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் அது நிகழ்ந்திருக்கவேண்டிய அளவில் அல்ல.

‘சிங்கம் முயல் கதை’ நல்ல உருவகக் கதையாகப் படுகிறது. ஆனால் ஏன் அத்தனை நீண்டதாக எழுதப்படுகிறது. ஆனால் ஏன் அத்தனை நீண்டதாக எழுதப்பட்டிருக்கிறது? சுருக்கமாகச் சொல்வதில் உடன்பாடில்லையா?

சுருக்கம் என்பது ஒரு இலக்கிய ஒழுக்கமோ கோட்பாடோ அல்ல. அந்தக் கவிதையில் நான் ஒரு சிறுகதையை எழுதிப் பார்க்கிறேன். இது ஒரு நவீன காப்பிய முறை. நவீன கவிதையில் நவீன காப்பியங்களை மிகச் சிறப்பாக எழுத முடியும். மேலும் நான் ஒரு பண்பாட்டின் நாட்டுபுறக் கலைஞனைப் போன்றவன். நான் எனது வடிவத்தை எனது தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே இருப்பேன். எனது கவிதை போல ஒரு கூழாங்கல் அல்ல. அது எலாஸ்டிக் தன்மை கொண்டது.

‘‘என்னவாயிற்று என் கோடானுகோடி மூதாதையர்கள் செய்த வேலைகள்? அதற்கு இன்னும் சம்பளப்பாக்கி இருக்கிறது’’ என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நம்முடைய சம்பளப் பாக்கிகளை இதேபோல நம் சந்ததிகளும் கேட்கத்தானே வேண்டும். அதற்காகவேனும் நாம் உழைக்க வேண்டுமல்லவா?

ஆம். என்ன பிரச்சனை என்றால் இங்கே உழைப்பு என்பது ஒரு தண்டணையாகவும், புனிதக் கடமையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. உழைப்பு குறித்த இந்தக் கற்பிதங்களை நான் உடைக்க விரும்புகிறேன். சார்லி சாப்ளின் தன் படங்களில் செய்தது போல.

03.07.2014 இரவு 8.57க்கு எழுதுகிறீர்கள். ‘ஒரு பெண் கண்ணாடி முன் உள்ளாடையுடன் நின்று கொண்டிருக்கிறாள். அவளது தன்னம்பிக்கையின் வெளிச்சம் அந்தக் கண்ணாடியிலிருந்து அவள் மேல் விழுகிறது’ அதே இரவு 9.55 மணிக்கு எழுதுகிறீர்கள். ‘எதனிடமிருந்தும் வெளியேற நமக்கு எந்த வழியும் தெரியவில்லை. இந்த முரணை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு ‘‘கவிதையை எழுதி முடித்ததும் அதை எழுதுவதற்கான மனம் உடனடியாக இறந்துவிடுகிறது. வேறொரு கவிதையைத் துவங்கும்போது அதற்கு சம்பந்தமில்லாத வேறொரு மனமும், வேறொரு எத்தனிப்பும் பிறக்கிறது’’ என்ற உங்கள் முன்னுரையிலிருந்தே இதற்கான பதிலை எடுத்துக் கொள்ளலாமா?

ஆம். நான் ஒருநாள் முழுக்க இந்த நகரத்தில் வேவ்வேறு இடங்களில் வெவ்வேறு அழிவுகளுக்கும் பதட்டங்களுக்கும் ஆளாகிறேன். வீடு திரும்பும்போது நான் ஒரு மனிதனாக அல்ல; பல்வேறு சம்பந்தமில்லாத நினைவுகளைக் கொண்ட சிதறிய மனிதனாகத் திரும்பி வருகிறேன். இந்த கலைந்த மனிதனின் பிம்பங்கள்தான் என் கவிதைகள். காதலும் மரணமும் எனக்கு மிக அருகாமையில் ஒரே நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

‘சன்னலில் வடியும் மழைச் சொட்டுகளைப் பருகும் பறவைபோல தனது எஞ்சிய புகழின் ஒரு சிறிய சொட்டைப் பருகினான்’ என்கிற ‘நடிகனுடன் சில நிமிடங்கள்Õ கவிதைக்கான உவமை நன்றாக இருந்தது….

வாழ்க்கையின் தத்தளிப்புகள் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒன்றுதான்.

காமுகன், காமுகி போன்ற   தொடர் வரிசைக் கவிதைகளுக்கு வாசகர்களிடத்திலிருந்து எப்படியான வரவேற்பிருந்தது?

ரகசியமாக படிப்பார்கள். என்னிடம் சொல்ல மாட்டார்கள்

‘‘வரலாறு ஆண்குறிகளால் நடத்தப்படுகிறது… நான் என் ஆண்குறியை அறுத்து இந்த நதியில் வீச விரும்புகிறேன்….’’ என்கிற வரிகளைப் படித்தபோது, இது ஒவ்வொரு ஆணின் மனசாட்சியுமாக இருந்துவிடக் கூடாதா என்கிற ஏக்கம் எழுந்தது….

ஆண்மை குறித்த கருத்தாக்கங்களை அழிக்காமல் நாம் வன்முறையை அழிக்கவே முடியாது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததைக் குறிப்பிடும்போது ‘அது ஒரு சமூகத்தின் மீதான பெரும் நம்பிக்கை இழப்பு’ என்கிறீர்கள். எஞ்சியுள்ள பெரும் கால அளவை இனி நம்மால் எப்படிக் கடக்க முடியும்?

நாம் நம்பிக்கையுடன் போராட வேண்டிய காலம் இது. பாசிஸ்டுகள் அவர்களது ஆயுதங்களை கூர்மைப்படுத்துவதைப்போலவே நம்முடைய ஆயுதங்களையும் கூர்மையடையச் செய்கிறார்கள். நாம் பயப்படாமல் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து வேலை செய்தால், இந்தக் காரிருளைக் கடப்பது இயலாத காரியமல்ல.

Related posts