You are here
அஞ்சலி 

மரணமில்லா எழுத்து

-சா. கந்தசாமி

   தமிழ் நவீன புனைகதை இலக்கியத்தில் தன் படைப்புக்கள் வழியாகவும் அங்கீகாரம் பெற்றவர் ஜெயகாந்தன். கடலூர் மஞ்சக் குப்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தவர். வடசென்னை என்று அறியப்படும் துறைமுகத் தொழிலாளர்கள், கூலிகள் வாழும் பிராட்வே, தங்கசாலை, லோன்ஸ்கெயர் எல்லாம் அவருக்குப் பழக்கமான இடங்களாக இருந்தன. பால்ய காலத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் கம்யூனில் இருந்தார். அவருக்கு கம்யூன் வாழ்க்கை, சமூகம் பற்றிய பார்வையைக் கொடுத்திருந்தது. கதைகள் எழுத ஆரம்பித்தப் போது, தான் அறிந்த சென்னை நடைபாதை வாசிகள், லோன்ஸ்கெயர் பகுதி மக்களின் வாழ்க்கையை அவர்கள் பேச்சை முதன்மையாகக் கொண்டெழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்த கதைகள் இல்லை என்பது மட்டுமல்ல அவற்றுக்கு எதிரான கதைகள். ஆனால் உயிர்த் துடிப்புக் கொண்ட அசலான கதைகள் வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் இருக்கிறது என்று சொல்லும் கதைகள். அதனை கதாபாத்திரங்கள் அறியாமல் வாழ்கிறார்கள் என்பதால், அவர்களிடம் அது இல்லாமல் போனதில்லை என்று சொல்லும் கதைகள்.

ஜெயகாந்தன் கதைகளின் ஆதார சுருதி என்பது, யதார்த்தம் என்பதை உள்ளடக்கிய இலட்சிய வாதம். இலட்சிய வாதம் பேசப்படவில்லை என்பதால், அது இல்லையென்றாகிவிடாது. யதார்த்தம் என்பதில் இலட்சியம் என்பதை இணைத்திருந்தார். அதனை அறிவது வாசகர் பொறுப்பு. அறியாவிட்டால் இழப்பது ஒன்றும் இல்லை என்பதுபோலவே எழுதினார்.

இலட்சியவாதம் பற்றி பேச்சு வந்தபோது, Ôதமிழில் தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் டாக்டர் மு. வரதராசனார்’ என்றார். நாங்கள் டாக்டர். மு.வ. பற்றி இலக்கியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். தாங்கள் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நான் பொதுவாக இலக்கியம், பிடித்தமான எழுத்தாளர்கள் பற்றி எல்லாம் பேசுவதில்லை. ஆனால் பேசுவது சரிதான். ஏற்பாடு செய்யுங்கள் நான் வந்து பேசுகிறேன் என்றார். ஆனால் எங்களால் ஏற்பாடு செய்ய முடியாமல் போய்விட்டது. அவரும் மேற்கொண்டு விளக்கவில்லை.

   அரசியல், சமூகம், சினிமா என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அடிப்படையில் ஓர் இலக்கியவாதிதான். இலக்கியத்தில் அவர் கொள்கை என்பது வாழ்க்கை பல இழைகள் கொண்டது. எத்தனை தான் அறிந்து கொண்டாலும், அறிய முடியாத வ¤தத்தில் தான் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் விதமாகவே எழுதினார். அதன் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது மாதிரி எழுதினார். ஆனால் அது அவரைப் பற்றிய வரையில் நிகழ்காலம். இயல்பான யதார்த்தம் என்று கருதினார¢. அவர் விவரிப்பு என்பது விமர்சனம் சார்ந்தது. விமர்சனம் இல்லாமல் அவர் எதையும் எழுதவில்லை. தன் விமர்சனத்தை வாசகர்கள் தன் சொந்த விமர்சனமாகக் கொள்ளத் தகுந்த முறையில் மாற்றிக் கொள்ளும் முறையில் எழுதினார்.

   அவர் ஆர அமர்ந்து யோசித்து அமைதியும் சுழலியலும் இணைந்து போக எழுதினார் என்று சொல்ல முடியாது. அரசியல், பத்திரிகைகள் என்ற பொது வாழ்க்கையின் பரபரப்புக்களுக்கிடையில் எழுதினார். எத்தனை அமைதியாக எழுத வேண்டுமென்று கருதினாரோ, அத்தனை அமைதியாக எழுதினார். வெளிஆரவாரம், பரபரப்பு என்பதெல்லாம் அவர் படைப்புக்களில் ஓர் அம்சமாகவே இடம் பெற்றிருக்கிறது.

   எழுதுவது என்பதை அவர் மிகவும் நேசித்தார். எழுதாமல் இருக்க முடியாது என்று பட்டபோதெல்லாம் எழுதினார். தான் ஒரு பத்திரிகை எழுத்தாளன். அவர்கள் கேட்டதால் எழுதியவன். பத்திரிகைகள் கேட்டிருக்காவிட்டால் நான் எழுதியே இருக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே பத்திரிகை எழுத்து என்பதற்கு எதிராக எழுதி தன்னை நிலைநாட்டிக் கொண்டவர். அவர் கதைகளை வெளியிட்ட எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் கதைகளுக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்கள் கேட்டதால் எழுதினாரே தவிர, அவர்களுக்குப் பிடித்தமானதை எழுதவில்லை.

   ஜெயகாந்தன் தன் கதைகளை அதிகமாக விரும்பினார். ஆனால் சுய மோகம் கொண்டிருந்தார் என்று சொல்ல முடியாது. மக்களின் மனம் கவரும் கருத்துக்களும், சொல்லும் பாணியும் தனக்கிருக்கிறது என்பதை அறிந்து கொண்டு பெருமிதம் உற்றார் அது தான் அறிந்ததுதான் அதுவென்று கூச்சமுற்று ஒதுங்கியும் இருந்தார். அவர் பாராட்டப்பட்டதுபோலவே, விமர்சிக்கவும் பட்டார். கதைகள் கருத்துக்களைச் சொல்கின்றன. அடக்கமில்லை. ஆசிரியர் அதிகமாகப் பேசுகிறார். அழகியல் குறைபாடு கொண்டிருக்கிறது என்றெல்லாம் எழுதப்பட்டபோது அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்டார். அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக சிறுகதை, நாவல் முன்னுரைகளில் பதில் எழுதினார். விமர்சனங்களின் கருத்துக்களைவிட தன் வாசகர்கள், அவர்கள் ரசனை மீது நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர்களுக்காகவே நிறைய எழுதினார். எழுதியது போதுமென்றுபட்டபோது எழுதுவதை நிறுத்திவிட்டார். எழுதிய காலத்தில் படிக்கப்பட்ட எழுத்தாளராக இருந்ததுபோலவே எழுதுவதை நிறுத்திய காலத்திலும் படிக்கப்பட்டவராகவும், விமர்சிக்கப்பட்டவராகவும் இருந்தார்.

   இறப்பு என்பது ஓர் எழுத்தாளனை இல்லாமல் ஆக்குவதில்லை. அவன் வாசகர்கள் படித்து அவனை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கி£ர்கள் என்று சொல்லப்படுவதில் ஜெயகாந்தனும் சேர்ந்துபோகிறார்.

Related posts