You are here
நூல் அறிமுகம் 

படித்ததில் பிடித்தது 50க்கு50

– ஆயிஷா இரா. நடராசன்

1.  ஆல்பெர் காம்யு- நூற்றாண்டு நாயகன்

சா. தேவதாஸ் | கருத்துப் பட்டறை

தமிழில் இத்தனை முழுமையாக ஆல்பெர் காம்யூ பற்றி இதுவரை வந்தது கிடையாது. ஆல்பெர் காம்யூவின் எழுத்துக்கள், அபத்த வகைப்பாட்டின் வழி யுத்த வதைப்புகளை பதியும், நவீன சந்தை வாழ்வின் ரத்த சாட்சியம் என்பதை அவரது நேர்காணல்கள், கதைகள், கட்டுரைகள் எனும் பன்முகத் தொகுப்பின் மூலம் நாம் அறிகிறோம். மரண தண்டனைக்கு எதிரான காம்யூவின் இல்லட்டின் கட்டுரை முதல்முறை தமிழுக்கு வந்துள்ளது. அபத்தத்தின் டெர் காட்டஸ் என சார்த்தரால் வர்ணிக்கப்பட்ட நோபல் இலக்கிய ஆளுமையின் அருமையான பதிவு இந்த நூல்.

2. கற்க கசடற விற்க அதற்கு தக

பாரதி தம்பி | விகடன் பிரசுரம்

   பாரதிதம்பி விகடனில் எழுதியது போன்ற நமது சமகால கல்வி குறித்த உண்மைகளை தோலுரிக்கும் எழுத்து இதுவரை வெளிவந்தது இல்லை. அரசு எந்திரத்தை அது உலுக்கிப் போட்டது. கல்வி என்பதை அரசு தனது நலத்திட்டமாகவே நடத்த வேண்டும் என்பதையும் தனியார் மயக் கொள்ளையை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையும், இவ்வளவு நேர்மையாக யாரும் கோரியதில்லை. கல்வி அடிப்படை உரிமை ஆகியபிறகு, நம் ஒவ்வொருவரின் கடமை என்ன என்பதை இந்த நூல் மிக ஆழமாக முன்வைக்கிறது.

3. ரோஜாப்பூ எனும் பாம்பின் கதை

(பள்ளி சிறார்க்கு பாரதியார் கதைகள்) சேதுபதி/ தமிழ் மரபு மையம்

பொன். சேதுபதி குழந்தைகளுக்குக் கதைசொல்ல தனது பேராசிரியர் வேலைபோக மீதி நேரத்தை ஒதுக்கி வைத்து தனிப்பாதை கண்டவர், பாரதி எழுதிய கதைகளை குழந்தைகளுக்குச் சொல்வதோடு, அதை நூலாகவும் கொடுத்திருக்கிறார். அந்தரடிச்சான் சாஹிபு கதை, ஆனைக் கால் உதை உட்பட 24 கதைகள். பின்னே பாரதியின் சொற்களுக்கு ஒரு அகராதி, பாரதியார் வாழ்க்கைக் குறிப்பு என சிறுவர்களுக்கு செய்திகளும் உண்டு.

4. நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சமும் அறிவியலும்

த.வி. வெங்கடேஸ்வரன்/ அறிவியல் வெளியீடு

   தேனி மாவட்டத்தில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் இதில் பதில் தந்திருக்கிறார் விக்யான் பிரச்சார் நிறுவன விஞ்ஞானி முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன். கடவுள் துகள் ஆய்வை பக்கம் பக்கமாகப் பாராட்டிய பகுத்தறிவுச் செம்மல்களே மலையைக் குடைந்து நடக்க இருக்கும் இந்தியாவின் பிரமாண்ட அறிவியல் எழுச்சியை எதிர்ப்பது, அதுகுறித்த அறியாமையானால்தான். அதற்காக, முல்லைப் பெரியாறு அணை உடையும் என்பதிலிருந்து பூமி அதிர்ச்சி, வெப்ப மூட்டுவதால் தேனி பாலையாகும் என்பதுவரை பரவும் திகில் புரளிகளுக்கு இந்தப் புத்தகம் முற்றுப் புள்ளி வைக்கிறது. ராக்கெட் விடுவதே அறிவியல் என்பதிலிருந்து விலகி மய்ய அரசு இப்படியான அறிவியல் திட்டங்களை அறிவிப்பதே அபூர்வமான விஷயம்.. என்பதையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

5. லெனின் வாழ்க்கை வரலாறு

வெ.மன்னார் | பாரதி புத்தகாலயம்

திருவண்ணாமலை தோழர் வெ. மன்னாரின் ஆத்மார்த்தமான எழுத்தில் நாம் மீண்டும் ஒரு முறை விளாதிமிர் இலியீச் லெனின் எனும் மாமனிதரின் வாழ்வை வாசிக்கிறோம். உலகின் கோடானுகோடி இடது சாரித் தொண்டர் படையின் ஒரே ஒப்பற்ற விடியலாக இன்றும் திகழும் காவியம் இது. இரவுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கும் தன் வருங்காலத் துணைவி குரூப்ஸ்கயாவை லெனின் சந்திக்கும் இடம் நெஞ்சை உருக வைத்துவிடும்.

6. சங்கவை     (நாவல்) இ.ஜோ.ஜெயசாந்தி/ விருட்சம்

பெரிய நாவல். பெண்கல்வி குறித்த நாவல் என்று பொதுவாக சொல்லலாம். தனியார் மய உயர்கல்வியில் ஒரு பெண் கல்விகற்க நடத்த வேண்டிய போராட்டங்கள் பற்றிய கதை. ஆனால் முனைவர்பட்ட ஆய்வு மேற்பார்வையாளரின் பாலியல் வக்கிரங்களால் தற்கொலை செய்து கொள்ளும் கலைவாணியும்… பத்து வயது சிறுமி சைலு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அதன் சாட்சியாகும். சிறுவனும் காப்பகமும் – இந்த நாவலை வாசிக்கும் நமக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. இந்த நாவலெங்கும் குழந்தை உழைப்பு உட்பட பல. நம் கண்ணிற்குத் தெரிந்தும் தெரியாத அவலங்கள் பல ஒரு 820 பக்கங்களில் குமைந்து குமைந்து சொல்லப்படுகிறது.

7. மொட்டு விரியும் சத்தம்

(கன்னடகவி லங்கேஷ் கவிதைகள்) தமிழில் கா. நல்லதம்பி/ விழிகள்/சென்னை.

   நீ நடும் மரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அங்கு வரும் பறவைகளை அல்ல… மிக எளிமையான ஆனால் ஊசிபோல நருக்… லங்கேஷின் கவிதைகள். விமோசனம் எனும் ஒரு விஷயத்தை வைத்து கவிஞர் பகடை ஆடி நம்மிடம் நாமே தோற்கடிப்பது கவிதையில் மட்டுமே சாத்தியம். மார்க் ஆந்தோவின் ராப் மாதிரி நம்மில் உருண்டு எழும் சில வரிகளில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் வகை கிண்டலும் உண்டு. விபச்சாரியின் பாவமன்னிப்பு. பாதிரி மிகவும் வருந்தினார். தான் செய்யமுடியாத தவறுகளுக்காக குஞ்ஞுண்ணி (மலையாளம்) சி. மணி (தமிழ்) கவிதைகளை மட்டுமே நாம் லங்கேஷ் வழியில் ஒப்பிட முடியும் என்று தோன்றுகிறது.

8. மோட்சம் (பிரேம் சந்த் கதைகள்)

தமிழில்:ச. வீரமணி/ பாரதிபுத்தகாலயம்

   250 சிறுகதைகளுக்கும் மேல் எழுதியவர் பிரேம்சந்த்.. ஹிந்தி இலக்கியத்தின் பிதாமகர் என போற்றப்படுபவர். குறிப்பாக, அவரது கதைகள் மக்கள் கிளர்ச்சியை பதிவுசெய்த கதைகள். தமிழில் அவற்றிலிருந்து ஐந்து முத்துக்களை எடுத்து நமக்குத் தந்திருக்கிறார் வீரமணி. மோட்சம் கதை, சாதி பார்ப்பனர்களின் ஈனப்புத்தியை கோடிட்டு காட்டும் சாட்டையடி. துகியின் பிணத்தைக் கொத்தும் பிணந்திண்ணிக்கழுகுகள் நரிகள் பற்றி பிரேம்சந்த்தின் பதிவு தரும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. நம்பிக்கைத் தகர்வு, குழந்தை இவையும் குறிப்பிடத்தகுந்த கதைகள்.

9. அஞ்சாங்கல் காலம்

உமா மகேஸ்வரி/ வம்சி புக்ஸ்

35 வயதில் பாட்டியான பெண்களை நான் பார்த்திருக்கிறேன் என முன்னுரையில் எழுதும் உமாமகேஸ்வரி, மதுரைத் தமிழில் ஒரு பிரமாண்டத்தை உருவாக்கி, ஓசை இன்றி ஓடும் ஓடைபோல, கிடைத்த பக்கமெல்லாம் திரும்பி பல்வேறு மைல்களைக் கடக்க வைக்கிறார். பாவை, கிருட்டிணசாமி தம்பதியின் குழந்தை இன்மையில் மூழ்கி 2 மணி நேரம் கழித்து ஜூஸ் குடுங்க என அனஸ்தீசியா பெற்ற மனைவிக்காக நாமும் காத்திருக்க, குடும்ப அமைப்பிற்குள் புகும் தடம் தவறிய பாலுணர்வும், அதனால் சிதையுறும் உறவுகளும், இச்சைக்காட்டில் முற்றிலும் தொலையும், மானுடமும் யதார்த்தம் – ஆண் ஆடுகிற பேயாட்டங்களை பெண் சார்ந்த குற்றங்களாகவே காட்டி நிற்கும் சினிமாவிடமிருந்து வாழ்க்கை எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதைப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. பெண் தன் ஆழமனதிலிருந்து இத்தனை லகுவாக. தப்பு சரியாச்சா, தப்பே இல்ல சரியாக… ஜகியின் மனம் போலவே நாம் அழாமல் அழுகிறோம்.

10.மிக அருகில் கடல்

இந்திரன்/ யாளி பதிவு வெளியீடு/

   என் கல்லூரி நாட்களிலிருந்து என் மாதிரியான தனது தீவிர, ‘இந்திரன்வாதிகளுக்கு’ எப்போதுமே பயணிக்க ஒரு பாதையை போட்டுக் கொண்டே இருப்பவர். இந்த தனது புதிய கவிதை நூலில் நகரத்தைவிட்டு விலகி சிட்டுக்குருவியாகத் தெரிகிறார். ஜாதுஜா தீவுகளில் எழுதிய கவிதைகள் எனும் அட்டகாச முகவரி நம்மை ஈர்க்கிறது. மழைக்காடு வெட்கப்பட்டது. ஓவியனின் முன்னால் நிர்வாணமாக நிற்க என்பதுபோல இந்திராலஜி இதிலும் தொடர்கிறது… அத்தோடு.. யார் பிம்பம் யார் பிரதி பிம்பம் என கேட்கும் காதல் ரசனையும் உண்டு.

11. கூலி உழைப்பும் மூலதனமும்: காரல் மார்க்ஸ்

(தமிழில் மு. சிவலிங்கம்) பாரதி புத்தகாலயம்

ஒரு பத்திரிகையில் தலையங்கக் கட்டுரைகளின் தொடராக மார்க்ஸ் எழுதியதே இந்தப் பிரசுரம். கூலி உழைப்பும் மூலதனமும் தனி வெளியீடாக பலமுறை வந்தாலும், இந்தப் புதியமொழி பெயர்ப்பு அதற்கு ஒளி ஏற்றுகிறது. இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம், இது வந்த பிறகு இதையே விரிவாக்கி மார்க்ஸ் தனது மூலதனம் நூலை எழுதினார் என்பது. முதலாளி எடுத்துக் கொண்ட மூன்று ஷெல்லிங் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி இந்த பங்குவர்த்தக காலத்திலும் அதிர்வதை நாம் பார்க்கலாம். ஏங்கெல்ஸின் முன்னுரை கூட ஆங்காங்கே சிவலிங்கம் தரும் தகவல் பெட்டிகளோடு இருப்பது சிறப்பு.

12. பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்.

தொ.பெ. முத்துலிங்கம்/ கயல்கவின் புக்ஸ்

இலங்கை மலையக முச்சந்தி, இலக்கியத் தொகுப்பு இது. 1820களில் தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக அயல் அரசால் இழுத்துச் செல்லப்பட்டவர்களின் வரலாறு, அந்தக் காலத்து சினிமா மெட்டுகளின் வழியே பாடல்களாக புனையப்பட்டுள்ளது. எம்.பி. வேல்சாமி, எம். எஸ். மாரிமுத்து, பழனியாண்டி, ராஜப்பா என முழக்கும் மெட்டுக்கவிகள் மத்தியில் எம்.எஸ். கிருஷ்ணம்மாள் போன்ற மாதரும் உண்டு. மணப்பாறை மாடுகட்டி… முதல் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் வரை மெட்டுகளை தொழிலாளர் கீதமாக இசைத்து இருக்கிறார்கள். அவர்கள் படும் துயர்களை வரலாறாக்கி கரைத்தும் இருக்கிறார்கள்.

13. அவமானம்

மண்ட்டோ படைப்பு தொகுப்பு

சாதத்ஹசன் மண்ட்டோ/ தமிழில் ராமானுஜம்/ பாரதி புத்தகாலயம்

இந்திய பிரிவினையின்போது, தான் வாழ லாகூரைத் தேர்வு செய்த மண்ட்டோ முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கண்டெடுத்த இந்தத் துணைக் கண்டத்தின் அற்புத எழுச்சி. ஒவ்வொரு கதையும் ஒரு அதிர்ச்சிப் புயலாக வீசுகிறது. தண்டா கோஷ் (சில்லிட்ட சதை பிண்டம்) கதையை எதிர்த்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கும், லாகூர் நீதிமன்றத் தீர்ப்பும் கூட இந்தப் புத்தகத்தில் உள்ளது. அழுகிப்போன சமூக அமைப்பை இதைவிட பகடையாட முடியாது. இதனை, தமிழுக்குத் தந்திருக்கும் தென்சென்னை த.மு.எ.க.ச. விளிம்புநிலை இலக்கியத்தின் ஆதார பிரதி ஒன்றைத் தந்துள்ள பெருமைக்கு உள்ளதாகிறது. நமது திகைப்பைத் தீண்டி, புத்தகத்தைத் தொட முடியாதபடி மின் தாக்குதல் நடத்தும் யதார்த்தவாதப் படைப்பு தமிழுக்கு ரொம்பப் புதுசு.

14. குருத்தோலை (நாவல்)

செல்லமுத்து குப்புசாமி./நடுகல் வெளியீடு

ஒரு மென் பொருள் நகரப் படைப்புக்கு (இரவல் காதலி) பிறகு தன் கிராமத்தின் கதையை சொல்லி இருக்கிறார் செல்லமுத்து. மாவட்டம் திருப்பூர், ஊரு தாராபுரம். நாவலின் தொடக்கத்தில், பனைஓலையில் காதலை எழுதி, சாப்பாட்டு போணியில் வைத்துப் புதைக்கும் இடம் முதல் முத்துசாமிக்கு எத்தனையோ ஜாதகம் பொருந்தி பொருந்தாமல் கலியாணம் முடிக்கும் வரையும் சாதி, சொத்துத் தகராறு, ஜீவனாம்சகேஸ், கரைபுரளும் காமம், மண் பார்க்கும் மானுடம் என நரிமேட்டான்காட்டின் தென் கிழக்கு மூலையில் பனை மரக்காட்டு ஊரில் வாழ்ந்த அனுபவத்தை நாவல் தந்துநிற்கிறது. அலங்காரமில்லாத கொங்குத் தமிழ் அமராவதி நதியாக ஓடுகிறது.

15. சோர்விலாச் சொல்

(பாராளுமன்ற உரைகள்)

பஷீர் சேகு தாவூத்/ விளிம்பு/ திருச்சி.

இலங்கைப் பாராளுமன்றத்தில் ஈழ இசுலாமியர்களின் எம்.பி. பசீர் சேகு தாவூத் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. ஈழ அரசியலுக்கு இப்படி ஒரு துரோக மறுபக்கம் இருக்கும் என்பது அதிர்ச்சி. சிறுபான்மை மக்களை அரசும், ஈழப் போராளிகளும் இருவருமே தூக்கி எறிய, தோழமையோடு மீண்டும் மீண்டும் தமிழர் பக்கமே அவர் பேசுகிறார். வடகிழக்குப் பிராந்தியக் கல்வி, பொருளாதாரம், சமத்துவம் யாவுமே இவரது பேச்சில் ஒரு இடது சாரி நிலைப்பாட்டைப் பறைசாற்றுகின்றன.

16. மதுவாகினி (கவிதைகள்)

ந. பெரியசாமி/ அகநாழிகை பதிப்பகம்

நாம் வழக்கம்போல வாசிக்கும் இரண்டு மூன்று சிறுபத்திரிகைகளில் மதுவாகினி பற்றி விரிவாக பேசப்பட்டதால் வாங்கி வாசித்தேன். வளர்ச்சி எனும் பெயரில் சிதைந்த வாழ்க்கை. வியாபார யுகத்தில் தொலைந்த உறவுகள் தொடங்கி நரபலி, நகரமயமாக்கலில் அறைபட்ட நம்பிக்கைகள், தீராக்காமத்தில் தகிக்கும் சினிமா, கை கூடாத காதல், என கவிஞரின் தூரிகை எதையும் மிச்சம் வைக்கவில்லை. பெரியசாமியின் ஆகச் சிறந்த கவிதை வதைகளின் ருசியறிந்தவர்கள் வதைத்தது.

17.சவார்க்கரும் இந்துத்துவமும், மகாத்மா படுகொலையும்

ஏ.ஜி. நூரணி/ பாரதி புத்தகாலயம்

இந்திய நாட்டின் அடையாளமாகத் திகழும் மகாத்மா காந்தியின் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் விநாயக் தாமோதர் சவார்க்கரை வைத்து விட மோடி பரிவாரம் துடிக்கும் நாளில், 1948ல் காந்தியடிகளைச் சுட்டுக் கொல்ல சவார்க்கர் தலைமையில் சதி, கூட்டம் நடந்ததிலிருந்து இந்துத்துவா எனும் சொல்லாக்கத்தை அவர் அடைந்தது உட்பட பல்வேறு தகவல்களுடன் வந்துள்ள நூல் இது. வகுப்பு வாதம் வளர்ந்த வரலாற்றை இவ்வளவு கச்சிதமாக யாரும் இது வரை தொகுக்கவில்லை. கபூர் கமிஷன் பற்றிய பின்னணியும் அறிக்கையும், பாரதீய ஜனதா பரிகாரம் இருக்க வேண்டிய இடம் எது என்பதை விவரிக்கும் வரலாற்று சாட்சியம்.

18. செம்மண் மடல்கள்

(ஒரு கவிஞரின் கடிதங்கள்)

இரா. மீனாட்சி/ கபிலன் பதிப்பகம்

செம்மண் மடல்கள் நூலை இந்த வருடம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசுப் பட்டியலில் பார்த்தேன். ஒரு கவிஞரின் வாழ்க்கை என்றால், அது மீனாட்சி அக்காவுக்கு பொருந்தும். தான் ஆரோவில்லுக்குள் நுழைந்தது முதல் எழுதிப் பார்த்த கடிதங்களைத் தொகுத்திருக்கிறார். இவரது அனைத்தையும் நோக்கிய பாசிட்டிவிசம் நமக்கு சமயத்தில் திகைப்பை தருகிறது. மாலதி மைத்ரியின் கவிதை முதல் லண்டன் மெழுகுச் சிலைக் காட்சி நிறுவனர் மேடம் துஸால்டு வரை எதையும் இவர் விட்டு வைப்பதில்லை. இந்தத் தொகுதியில் ‘குழந்தைகளைப் பாதுகாப்போம்’ கட்டுரை தனிக் கவனம் பெற வேண்டியதென முன்மொழிகிறேன்.

19. கந்தர்வன் கவிதைகள்

பாரதி புத்தகாலயம்

பதினைந்து வருடங்களுக்கு முன் என்னைச் செதுக்கிய சொற்கள் இன்று மீண்டும் அச்சாகி உள்ளன. சங்க காலம் என்ற கவிதை இந்தத் தொகுப்பிலும், இருக்கிறதா என்று தேடினேன். முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம், காலம் போய், இப்போது தொழிற்சங்கம் காலம் தொடங்கி இருக்கிறது. கந்தர்வகோலம் என்றால் இது தான். பாரதி கிருஷ்ணகுமாரின் அறிமுகம் பல இடங்களில் என் கண்களைக் குளமாக்கியது. தோழமை எனும் சொல்லின் புதிய பொருள் இவர்களது நட்பு. ஒட்டுமொத்த தொகுப்பு.

20. ஏழாம் சுவை

மருத்துவர் கு. சிவராமன்/ விகடன்

மருத்துவர் சிவராமன் தமிழின் உணவு பழக்கங்கள் குறித்து தொடர்ந்தும் எழுதினாலும், இந்த ஏழாம் சுவை புத்தகம் ஒரு தனி விதம். ஒரு மருத்துவராக ஆணைகள் பிறிப்பிக்க புதிர் மொழி இன்றி நம்மிடம் தோழமையோடு போகும் நடை சமையலைவிட சுவை. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயம் காக்கும் பூண்டு, ரத்தக் கொதிப்பை அடக்கும் முருங்கைக் கீரை என அடுக்கி ஔவைக்கு அதியமான் தந்த நெல்லிக்கனிதான் மூலிகைகளில் சூப்பர்ஸ்டார் என்பது வரை அட என அதிசயிக்க வைக்கிறார். குழந்தைகளை எப்படியாவது படிக்கவைத்து விட வேண்டும். ஆனால் தேங்காய் எண்ணெய் சமையல் மாரடைப்பைத் தடுக்கும் என்பது இதுவரை தெரியாமல் போய்விட்டது.

21. ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஜேனஸ் கோர்ச்சாக்/ புக்ஸ் பார் சில்ரன்/(தி. தனபால்)

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின், பார்க்கும் குழந்தையை எல்லாம் கட்டிக் கொள்கிறேன். 1942 ஆகஸ்ட் 5 ஆசிரியர் ஜேனஸ் கோர்ச்சாக் மற்றும் அவரது 200 யூத மாணவர்கள் (அவ்வளவும் குழந்தைகள்) ஹிட்லரின் படைகளால் மரண அணிவகுப்பு மூலம் எரித்தே கொல்லப்பட்டதோடு இந்த நூல் முடிகிறது. வரலாறு ஒரு போதும் மறக்கக்கூடாத சம்பவம். கோர்ச்சாக்கின் கல்வி அரசியல், குழந்தை உரிமை நிலைப்பாடுகள் படிக்க படிக்க மனதை வருடிக்கொண்டே இருப்பவை. நாம் இன்னும் எவ்வளவோ மாற வேண்டியிருக்கிறது. அவரது ஒற்றை வரி முழக்கம், ‘குழந்தையை தவறு இழைக்க அனுமதியுங்கள்.’ நம்மில் எத்தனைபேர் அதற்குத் தயாராக இருக்கிறோம்.

22. குட்டிச்சுவர் கலைஞன்

(கீரனூர் ஜாகீர் ராஜா/ எதிர் வெளியீடு.

எழுத்தாளர் கலைஞன் ஆளுமை அது இது என்பதெல்லாம், பெரிய ஆபாசம் என்கிற மாதிரி நகரும் இந்த அற்புத நாவலின் பல கதாபாத்திரங்கள் மிகுந்த ஆளுமைத் தன்மை கொண்டவையாக உள்ளன. செருப்புக் கடை வைத்திருக்கும் முத்துக் கனி தனது (கடையில் மார்க்க நூல் சிடி விற்பவர் என்றாலும்) மகன் சிறை சென்றதும், தலாக் பெற்று தன் மருமகளுக்கு மறுமணம் முடிப்பது, மிக அற்புதமான இடம். நாயக வழிபாடே இயல்பாகிப் போன தமிழ்க் கலாச்சார சீரழிவை குட்டிச் சுவர் கலைஞனின் அரளிப்பூ நேர்காணல் வாசித்து சட்டென கடந்து சென்றுவிட முடியாத பதிவு. இது ஜாகீர் ராஜாவின் முந்தைய அனைத்து பிரதிகளிலிருந்து வேறுபட்டு நிற்பது, தாட்சாயினி போன்ற கையாலாகாத பாத்திரங்களினாலும்தான்.

23. சுஜாதா (நாவல்)

ஓல்கா (கௌரி கிருபானந்தன்)/ பாரதி புத்தகாலயம்

முன்பு திண்ணையில் (இணைய இதழில்) ஓல்காவின் படைப்புகளை வழங்கிய கௌரி இப்போது தெலுங்கு இலக்கிய உலகின் முக்கிய பெண் எழுத்தாளரான ஓல்காவின் முழுமையான நாவலை தமிழுக்கு வழங்கி இருக்கிறார். பெண்களது உலகம் எல்லாத்திக்குகளிலும் போராட்டமாகவே இருக்கிறது. ஆண்கள் டின்னர் என்கிற பெயரில் ஒரு வீட்டில் கூடி சீட்டாடி கும்மாளமடிக்கிறார்கள். அதற்கான பணி விடைகள் செய்யும் ஜோக்கர் அந்தஸ்த்திலேயே பெண் எத்தனை காலம் கழிக்கப் போகிறாள். இப்புதினம் இப்படி பல கேள்விகளை நம் மனதில் விதைக்கிறது. ஆணாக பிறந்த குற்ற உணர்வில் நாம் தகிக்கிறோம். Ôகல்யாணம் ஆனதிலிருந்து அவன் பகலில் என்னிடம் பேசுவதே கிடையாது சுஜா’ இது போன்ற சூடு ரொம்ப வலிக்கிறது.

24. பாகிஸ்தான் : அடையாளம் தேடும் நாடு

முபாரக் அலி (நா. தர்மராஜன்)/ NCBH

முகமது அலி ஜின்னா கனவு கண்ட பூமி இன்றைய பாகிஸ்தான் அல்ல என்பதற்கான ஒரு நூறு சாட்சியங்களை வரலாற்றாளர் முபாரக் அலி இந்த நூலில் கொடுத்துச் செல்கிறார். பாகிஸ்தான் ஒரு விவசாய நாடு. இசுலாமிய நாடு என அது தனது அரசியல் வாதிகளின் அடையாளம் தேடும் வெறிக்குப் பலியாகிவிட்டது. கருத்து நிலைச் சிக்கல்கள், அதிகாரக் கட்டமைப்பின் கொடிய வீழ்ச்சி, பாகிஸ்தானிய தாலிபான்களின் வெறியாட்டம் எல்லாம் சேர்ந்து நாட்டைப் பகடைக் காடாக்கிவிட்டது. அயூப்கான், ஜியா, நவாஸ், புட்டோ என ஒவ்வொருவரும் தத்தம் வழியில் அடையாள இழப்பு நாடாக சுயநல அரசியல் புரிந்தார்கள் என்பதை முபாரக் அலி மூலம் நாம் அறிகிறோம். அருமையான மொழி பெயர்ப்பு.

25. நள்ளிரவின் குழந்தைகள்

சல்மான் ருஷ்டி/ (க. பூரணசந்திரன்,) /எதிர்வெளியீடு/

பல ஆண்டுகளுக்கு முன் வாசித்த நாவல். புக்கர் பரிசை உலகம் அறியவைத்த பிரதி. 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் பிறக்கும் இரு குழந்தைகள், இந்து முசுலீம் இடம் மாற்றபடுகின்றன. இந்திய சுதந்திர கணத்தில் பிறந்த இந்த இரண்டு குழந்தைகளின் வாழ்வின் ஊடாக நம் நாட்டின் முதல் ஐம்பதாண்டுகால (சுதந்திரத்திற்கு பிறகான) வாழ்வை நோக்கி சாட்டையடி கொடுக்கும் ருஷ்டியின் தன் வரலாறுதான் சலீமின் தன்வரலாறாக விரிகிறது… மாந்திரிக யதார்த்தவாதத்தின் கச்சிதமான புதிர் வெளியில் புரளும் சொற்களை தமிழ்ப்படுத்தி வாசிக்க பூரணசந்திரன் ஓரளவு சாத்தியமாக்கியும் இருக்கிறார்.

26. மகா கவி பாரதியார்

வ.ரா./ பாரதி புத்தகாலயம்

பாரதியாரை மகாகவி ஆக்கியவர் வ.ரா. 1934லேயே Ôகாந்தி’ இதழில் பாரதியார் வரலாற்றை எழுதியவர். பாரதியின் உற்ற தோழர் என போற்றப்பட்டவர். மணிக்கொடி இதழின் ஸ்தாபகர்களில் ஒருவர். பாரதியின் கதையை அவர் எழுத வேண்டும்.. நாம் வாசிக்க வேண்டும். ‘நாங்கள் அச்சுப் புத்தகங்களை விட ஆபத்தானவர்கள். உயிருள்ள புத்தகங்கள்.. இது சர்க்காரின் மதிப்பு..’ பாரதியோடு பேசிக் கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறார் வ.ரா. புதுவையில் அரவிந்தரோடு பாரதி கொண்டிருந்த விசால நட்பு இந்த நூலின் சிறப்புப் பதிவு.

27. லைபாக்லை ஆன்ட்டி. ( வடகிழக்கிந்திய சிறுகதைகள்)

ச. சுப்பாராவ்/ பாரதி புத்தகாலயம்

பதினான்கு வடகிழக்கு இந்திய சிறுகதைகளின் தொகுப்பு. அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்புரி இப்படி நாம் லாட்டரி டிக்கெட் வழியே கேட்ட ஊர்ப் பெயர்களின் பின்னே உள்ள வாழ்க்கையை, மனித நேயத்தை சுப்பாராவ் நமது வாசிப்பிற்கு அளந்து அளந்து வைக்கிறார். பாபேந்திரநாத் சைகியாவின் தெருமுனை குறிப்பிட வேண்டிய கதை. அடுத்து கெய்ஷம் பிரியோகுமாரின் ஓர் இரவு. பஷாவ் கிராமத்தின் நடுநிசிக் கொலைகளை வேறொரு நடுநிசி தின இதழ் வாசிப்பில் வேறு ஒரு ஊரில் இவர் தரும் அதிர்ச்சியை சுப்பாராவ் நமக்குக் காப்பாற்றி அப்படியே தந்திருக்கிறார். போராளிகள், சரணடைந்த போராளிகள் மக்கள் என மூவகை பிரஜைகள் இருப்பது அதிர்ச்சி தருகிறது.

28. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு

அருணன்/ வசந்தம் வெளியீட்டகம்

   ஐந்து பதிப்புகள் கண்ட நூலாக இருந்தாலும் தோழர் அருணனின் இந்தப் புத்தகம் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிதாக ஏதாவது ஒரு புதையலைக் கொண்டு நம்மை வீழ்த்துகிறது. முதலில் சமூக சீர்திருத்தம் என்றால் என்ன என்பதிலிருந்து.. பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் வைகுண்ட சாமிகள் தொடங்கி சிங்காரவேலர் வழியே 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைகுலைந்த திராவிட இயக்கம் வரை பேசும் அருணன், சமூக சீர்திருத்தங்களின் வரலாறே உண்மையான மனித குலவரலாறு என்பதை நிருவுகிறார்.

29. சோலை எனும் வாழிடம் (கட்டுரை)

சு. தியடோர் பாஸ்கரன்/ உயிர்மை.

தமிழ் சுற்றுச் சூழலிய பிரச்சனைகளை விவாதிக்கும் அரிய நூல். நமது குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் அமைப்பு முழுதுமே பாலையாகும் ஒரு சீர் கேடினை கானுயிர் பாதுகாப்பின் உயர்ந்த லட்சியத்தோடு கவனச்சிதைவின்றி தியடோர் எடுத்துச் சென்று வெற்றிபெறுகிறார். புவியின் ஆதாரங்களான இயற்கை வனங்களைச் சுரண்டும் கார்பரேட் சுயநலம், நம் ரத்தம் கொதிக்க வைக்கிறது. இந்த நூலை வாசித்து முடிப்பவர்கள் பிறகு தங்கள் வாழிட இயற்கையை வேறு கோணத்தில் அணுகுவார்கள்.

30. கன்னடச் சிறுகதைகள்

தமிழில் எல்.எஸ். சீத்தாதேவி/ சாகித்ய அகாடமி

1968ல் வெளிவந்து 2003ல் மறுபதிப்பான புத்தகம் இது. குவெம்பு எழுதிய மீனாட்சியின் டியூசன் வாத்தியார் படிக்க மறுபடி எடுத்தேன். கீழே வைக்க முடியவில்லை. கன்னடக் கதை உலகின் 50கள் 60கள் பற்றி பல ஆச்சரியங்கள் இந்த தொகுப்பு முழுதும் உள்ளது. மீனாட்சியின் வாத்தியார் இருபதுக்கு மேல் வயது. ஆனால் பதினாறு வயதுபோல தோன்றுவார். இளமைகாரணமல்ல. வறுமை என கதை தொடங்கும். சீதாராமையாவின் கருணை ஆனந்தின் நான் கொன்ற பெண் எல்லாமே இப்போது படித்தும் உலராத ஈர வாசனை.

31. குறத்தியாறு

கௌதம சன்னா/ உயிர்மை

சமண பவுத்த மரபுகளைப் பற்றிய எழுத்துக்கள் தமிழில் மிக அரிதாகவே உள்ளன. ஆனால் அத்தகைய நூல்கள் காப்பிய அந்தஸ்த்தோடு எட்டநிற்கும் இயல்பைப் பெற்று, வாசிப்பை ஏதோ சாப்பாட்டில் கல்போல நறுக்கென தைப்பவயை£க இருந்துள்ளன. இது வேறுமாதிரி முயற்சி. ஒரு நாட்டுப் புற மொழியாக்கத்தில் மரபியல் வரலாற்றுக் கூறுகளை வாழைப்பழத்தில் வைத்து வைட்டமின் மாத்திரை தருவதுமாதிரி தருவதில் கௌதம சன்னா வெற்றி காண்கிறார். நம்ம (கோனார் நோட்ஸ்) தமிழாசிரியர்களுக்கு இந்தப் புத்தகத்தைக் கட்டாயமாக்க வாக்குறுதி தரும் கட்சிக்கு (காசு வாங்காமல்) என் ஓட்டை உறுதி செய்வேன்.

32. சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தன்/ காலச்சுவடு

ஜெ.கே. வை திரும்பிப் பார்க்கும் பலரும் இந்த நாவலை வாசிக்காமல் இருக்க முடியாது. மிக இருக்கமாக புனைந்திட்ட சொற் சாட்டைகள் வழியே தனது வருகையை அவர் அறிவித்த எழுத்து இது. காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் பிரதிநிதித்துவமாக நாம் கங்காவைப் பார்க்கிறோம். மத்திய தரவர்க்கத்தின் அவலப் புதை குழிகளின் வழியே கேட்கும் அலறலைப் பதிவு செய்த முதல் நவீன எழுத்து, ஒரு எரிமலையின் வேகத்தோடு வந்து சமூகத்தின் சாக்கடைகளைக் கிளறுகிறது. எத்தனை முறை கிளறினாலும் அடங்காதது அது.

33. சுவாமி விவேகானந்தர்

நெமய் சதன் போஸ்/ சாகித்ய அகாடமி

வீரத்துறவி விவேகானந்தரை ஒரு இலக்கியவாதியாக அணுகுவது ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. விஸ்வபாரதி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நெமய் சதன் போஸ் தனது கொல்கத்தா அனுபவசரடுகளோடு சேர்த்து விவேகானந்தரைத் தொடுத்திருப்பது திருப்தியாக வந்துள்ளது. விவேகானந்தரின் வெற்றி அவரது வீர உரைகள் சாதாரண மக்களுக்கான அவரது செயல்பாடுகளில் உள்ளது. ஆனால் அவரது நிஜமான பங்களிப்பு, பாமரர் வாசிக்க தீட்டை தாண்டி உடைத்து வேத விமர்சனம் செய்யும் உரிமையை அவர்களுக்கு தந்தது. இந்த இடத்தில் அவர் இந்திய மார்டின்லூதர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. விவேகானந்தர், அறிவியல் மேதை ஜகதீஷ்சந்திரபோஸ் சந்திப்பு பற்றிய இடம் அற்புதம்.

34. ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா (மலையாள நாவல்)

ட்டி. ட்டி. ராமகிருஷ்ணன் /(தமிழில் குறிஞ்சி வேலன்) /உயிர்மை/

தோழர் குறிஞ்சி வேலனின் பிசிறுதட்டாத மொழி பெயர்ப்பில் வந்துள்ள மிக நவீன நாவல் இது. கற்பனைவாத தத்துவ வெறித் தேடலின் உச்சத்தை இந்த நாவலில் அனுபவிக்கிறோம். கொஞ்சம் ஜெ.ஜெ. கொஞ்சம் ஜெ.கே. அப்புறம் தமிழவன் கொஞ்சம், ஏன் அறிவியல்கூட வருவதால் சுஜாதா கொஞ்சம் என ஒரு சூப்பர் காக்டெயில் பரிமாறி இருக்கிறார் ட்டி. ட்டி. ஆர், மலையாளத்தில் பிரபலமான படைப்பு இது. நமது இலக்கிய வெளியோடு ஒப்பிட்டுப் பார்க்க உபயோகப்படும். தத்துவம் என்பது, ஓயா கவலை. தீராவியாதி மாதிரி.. இட்டிக் கோராவும் விதி விலக்கு அல்ல. நாமும்தான்.

35. ரதி மன்மதன் கதைப் பாடல்கள்

இரத்தின புகழேந்தி/ நிவேதிதா பதிப்பகம்.

பேருந்து (இன்னும்) நுழையாத கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கொடுமனூர் கிராமத்தின் பலநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட மன்மத கதைப் பாடல் சுவடிகளை மீட்டு தமிழுக்குத் தந்திருக்கிறார் இரத்தின புகழேந்தி. மன்மதனுக்கு கோயில் கட்டி விழா எடுத்து முதல் நாள் பிறப்பு, இரண்டாம் நாள் ரதியின் பிறப்பு, மூன்றாம் நாள் திருமணம், நாலாம் நாள் தக்கனின் தவத்தை கலைப்பது.. கடைசிநாள் மதன் எரிந்து சாம்பலாகிட, ஊரே அழுவது என திருவிழாவுக்கான சுவடிப் பாடல்களை தனக்கே உரிய நாட்டுப்புற இலக்கியத் தேடலின் பதிவாக தமிழுக்கு அளித்துப் பதித்திருக்கிறார் புகழேந்தி.

36. விந்தன் (இந்திய இலக்கிய சிற்பிகள்)

மு. பரமசிவம்/ சாகித்ய அகாடமி.

உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கதைகளை தமிழில் முதலில் பதித்த மாமனிதர் விந்தன். கல்கி, விகடன் இதழ்களை கடுமையாக விமர்சித்து விந்தன் நடத்திய மனிதன் இதழை வரலாறு மறக¢கக்கூடாது. ஜெயகாந்தனை அறிமுகம் செய்த இதழ். சிறுகதை, நாவல், கவிதை என விசாலமான இலக்கியப் பேரெழுச்சி விந்தன். தமிழுக்கு மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை அறிமுகம் செய்தவர். ஆனால் அவரது குழந்தைகள் இலக்கியத்தை தனியே தொகுக்க வேண்டி இருக்கிறது. சாகித்ய அகாடமியே செய்யலாமே.

37. இறந்த பின்னும் இருக்கிறோமா?

ராஜ்சிவா/ உயிர்மை

‘மரணத்திற்குப் பின் வாழ்வு’ எனும் தலைப்பில் மறைமலை அடிகள் எழுதிய புத்தகம் கல்லூரி நாட்களில் படித்து பகுத்தறிவு பதில் கொடுத்து கூட்டம் நடத்தியது ஞாபகம் வருகிறது. அறிவியல் எழுத்துக்களின் வழியே ஒரு அணு உலை, டைம் மெஷின் கோட்பாடு, இதிலிருந்து கிரையோஜெனிக் முறையில் உடலை பாதுகாப்பது என இப்போது லேட்டஸ்ட்டாக, இறந்த பின் வாழ்வதுபற்றிய ‘உட்டாலகடி’ அறிவியல் புனைவின் அண்டாகாகசம் வேலையை தமிழுக்கு தந்திருக்கிறார் ராஜ்சிவா.

38. கொல்லனின் ஆறு பெண்மக்கள்

கோணங்கி, பாரதி புத்தகாலயம்

கோணங்கி வரைந்து போகும் யதார்த்த சித்திரங்கள் மிக நுட்பமான, செல்லாப்புகளாக வாசகனை உடலெங்கும் தைக்கும் இயல்புகொண்டவை. கொல்லன் நோவில் படுக்க, அவனது ஆறு பெண்மக்களும் போலவே இக்கதைகள் வாழ்வின் போராட்டத்தைச் சுமந்து நம்மை தாக்குகின்றன. பட்டினியோடு மவுண்ட்ரோடில் புதுமைப்பித்தன், மதுரையில் ஒப்பனை கலைந்த ஜி.நா. நிரந்தர தற்கொலையாய் வாழும் ஆத்மா நாம் எல்லாமே கோணங்கிதான். கதைகளில் திரியும் சாமிநாயக்கர்கள் கோர்ட் சம்மன் மாதிரியே நம்மையும் கிழித்தெறிகிறார்கள்.

39. கு.ப.ரா. சிறுகதைகள் (முழு தொகுப்பு)

பெருமாள் முருகன்/ காலச்சுவடு.

தமிழில் கு.பா.ராஜகோபாலன் தனி பாணி. கல்கி முதல் பலரை கடுமையாக விமர்சித்த வழி கு.ப.ரா.வுடையது. கனகாம்பரம் தொகுதியை இன்றும் வாசிக்க வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பெருமாள் முருகன். அவரது, காணாமலே காதல் தொகுதியையும் இன்ன பிறகதைகளையும் மொத்தமாக வாசிக்கும் ஒருவர், தன் காலத்து சமூகச் சூழல் மீது கு.ப.ரா. கொண்டிருந்த நக்கல் கலந்து வீசிய சினத்தை உணர முடியும். துரோகமா, தியாக விக்கிரகம், வீழ்ச்சி ஆகியன வரலாற்றுக் கதை மாதிரி இருந்தாலும், அவை அவரது சமகால வாழ்வை பகடை செய்யவே படைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திரும்ப வாசிக்கும்போது அவை அரசியல் சார்ந்த படைப்புகளே என்பதை உணர முடியும்.

40. கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

பிரெடரிக் ஏங்கெல்ஸ்/ தமிழில்: மு.சிவலிங்கம்/ பாரதிபுத்தகாலயம்

1847ல் ஏங்கெல்ஸ் கம்யூனிசம் பற்றிய 25 கேள்விகளுக்குத் தந்த மிக சுவாரசியமான பதில்கள். முன்பு மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பகம் தந்த பொக்கிஷத்தை மீண்டும் தந்திருக்கிறது பாரதி புத்தகாலயம். பிற அடிமைகளிலிருந்து உழைக்கும் பாட்டாளிகள் எந்த வகையில் வேறுபடுகின்றனர் என்ற கேள்விக்கான பதிலில் வாழ்வுக்கான உத்திரவாதம் என்பது இரண்டிலுமே இல்லை. அங்கே அடிமையே வாங்கப்படுகிறார். இங்கே வாங்கப்படுவது உழைப்பு மட்டும். அதுவும் தேவைப்படும்போது மட்டும் என்று ஏங்கெல்ஸ் சொல்வதில் ஒரு எழுத்துகூட இன்றைய நம் வாழ்வில் மாறிவிடவில்லை.

41. சொல் எனும் தானியம் (கவிதை)

சக்திஜோதி/ சந்தியா பதிப்பகம்

குறிஞ்சியும், முல்லையும் மருதமும் என்னுள் பதிந்து கிடக்கும் என பால்ய கால நிலப்பரப்பு. இந்த உடல் மொழி எல்லாமே நிலம் தந்தவை என குறிப்பிடும் சக்தி ஜோதி சொல்லை தானியமாக¢கி விதைத்து கவிதைப் பூ அறுவடை செய்து… பெண்களுக்கு தனியே நிலமில்லை.. மொழியில்லை.. நாடில்லை என அதிரவைத்து… தொட்டித் தாவரங்களை மழைக் காலத்திற்குள் உரிய நிலத்தில் சேர்த்துவிட வேண்டும் என பதறவும் வைத்து, நம்பிக்கை ஊட்டுகிறார்.

42. தெய்வத்தின் கண்

என்.பி. முகம்மது/ சாகித்ய அகாடமி/ தமிழில்: தோப்பில் முகமது மீரான்.

   சிறந்த சிந்தனையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான என்.பி. முகம்மதுவின் ஆகச்சிறந்த படைப்பு. மலையாள கிராமப்புற இசுலாமிய வாழ்வின் அன்றாடப் போராட்டங்கள் கதையின் களன். அயல்நாட்டில் சம்பாதிக்கப்போன வாப்பா அனுப்பும் பொருட்கள்தான் வாப்பா. கதையின் நாயகன் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை ஒரு பாதி, பின் மறுபாதி வேறு பள்ளி. பள்ளி வாசல் பள்ளி மற்றும் ஸ்கூல்.. இரண்டுக்கும் இடையே அல்லாடும் வாழ்வு. நவீன கல்வி மற்றும் வாழ்வை இசுலாமியர் எதிர் கொண்ட பதிவு அழகாக ஆழமாக சித்தரிப்பு பெறுகிறது.

43. நான் கண்ட சீனா

நடிகர் ராஜேஷ்/ NCBH

திரைபடக் கலைஞர் ராஜேஷின் சீனப் பயண அனுபவங்கள் நம்மை, திகைக்க வைக்கின்றன. பல்வேறு சமூக பொருளாதார அம்சங்களை இந்திய நிலையோடு ஒப்பிட்டு அழகாக எழுதிச் செல்கிறார். பீஜிங் நகரில் (சென்னையைவிட நாலு மடங்கு) சிக்னல் என்ற ஒன்றே கிடையாது என்பதிலிருந்து, குழந்தை பிறப்புச் சட்டம், மேற்பார்வையாளர்களே இல்லாத தொழிற்சாலைகள், டெரகோட்டா சிலைகள், மாவோ நினைவகம்.. மெக்காவ் தீவு கப்பல் பிரதான தொழில் நகரங்கள் என செஞ்சீனத்தை வலம்வர ஒரு வாய்ப்பு.

44. முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

நா. முத்து நிலவன்/ அகரம்/ தஞ்சை

இருபத்தைந்தாண்டு ஆசிரியர் பணி மூலம் பெற்ற அனுபவங்கள் வழியே இந்த அற்புதமான புத்தகத்தை நா. முத்து நிலவன் கொடுத்திருக்கிறார். முதல் மதிப்பெண் பெறுவதே இன்றைய கல்வியின் இலட்சியமாக உள்ளது. எல்லாரையும் முதல் ரேங்க் வாங்க வைக்க நடந்த போராட்டம் பேயாட்டமாகி, இன்று ஆண்டுக்கு இருநூறு தற்கொலை என போய் முடிந்துள்ளது. அடுத்தவர்க்கு உதவுதல், சிறுமை கண்டு பொங்குதல், கலைகளிலே சிறத்தல் எல்லாம் கல்வி, மனப் பாட கல்விக்கு சாவு மணி அடிக்கும் புத்தகம்.

45. ஆளுமைகளின் தருணங்கள்

ரவி சுப்பிரமணியன்/ காலச்சுவடு/

   ரவி சுப்பிரமணியன் விசித்திரமான ஆளுமை என்பேன். இலக்கியத்தில் முத்திரை பதித்தவர்களின் வாழ்வை அங்குலம் அங்குலமாய் அருகே சென்று வாசித்து ஆவணமாக்குவதை தன் வாழ்க்கையின் தனிப் பாதையாக்கிக் கொண்டவரின் லேட்டஸ்ட் புத்தகம் இது. இலக்கிய வரலாறு குறித்த செரிவான பார்வையோடு இவர் அடுக்கும் புள்ளி விபரங்கள் நம் இலக்கிய கர்த்தாக்களை ஆளுமைகளாக நம் முன்நிறுத்துகின்றன. ஒரு இலக்கியமாக இதை நாம் வாசிக்கும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நமக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. தெரிந்தாலும், அவற்றை ரவி சுப்பிரமணியன் அளவிற்கு அணுக முடிவதில்லை.

46. கார்பரேட்டும் வேலை பறிப்பும்

எஸ்.கண்ணன்/ பாரதிபுத்தகாலயம்

அமர்த்து பின் துரத்து ( Hire and Fire) எனும் புதிய வேலை அமைப்போடு இந்த தாராள மய சந்தை இன்றைய இளைஞனை கொடிய சூழலுக்கு தள்ளிவிட்டது. நோக்கியா 12 ஆயிரம் வேலைவாய்ப்புகளை சவப்பெட்டிக்கு அனுப்பியது. 1974ல் தொடங்கிய ஃபாக்ஸ்கான் 1700 தொழிலாளர்களை ஒரே நாளில் துரத்துகிறது. விப்ரோ, ஐ.பி.எம்,டி.சி.எஸ் இவற்றின் மோசடிகள் என கண்ணன் எதையும் மிக துல்லிய விபரங்களுடன் அலசுகிறார். தொழிற்சங்கங்களே நுழைய முடியாத அந்த உலகிற்குள், தனது போராட்ட உக்கிரத்துடன் தாக்குதலுக்குத் தயாராக வேண்டிய தருணம் இதுதான் என களம் இறங்குகிறார் கண்ணன்.

47. நேனோ தொழில்நுட்பமும் … மயிலிறகின் வண்ணஜாலமும்

த.வி. வெங்கடேஸ்வரன்/ எஸ்.ஆர். வி.தமிழ் பதிப்பகம்./

ஒரு அருமையான அறிவியல் விருந்து. சூரிய புயலில் தொடங்கி வால்மீனின் வாலாட்டம் காரிஸ்டன் நிகழ்வு என விரியும் கட்டுரை பிறகு ஆழ்கடல் நோக்கி விரைந்து பாய்ந்து பல்வேறு தகவல் முத்துக்களை எடுத்து நேனோ தொழில்நுட்ப நுண் துகளாகி மயிலிறகுக்குள் பிரவேசிக்க வைத்து 2100ம் வருட அறிவியலை முன் அனுமானிக்க வைக்கும் அபார எழுத்து த.வி.வி.யுடையது. மனித செவிப்புலன் பற்றி இத்தனை விரிவாக தமிழில் வந்ததாக ஞாபகமில்லை.

48. மன வளமான சமுதாயம்

எரிக் ஃபிராம்/ (ராஜ் கவுதமன்)/ காலச்சுவடு.

எரிக் ஃபிராமின் The Slave Society 1955ல் வெளிவந்த தத்துவ நூல் வகை. கட்டுடைத்தல் எனும் புதிய அலை இரண்டாம் உலக யுத்தமுடிவில் வீசத் தொடங்கிய காலத்தில், அவல வாழ்வின் உள் அர்த்தங்களை சமூகம் ஏறக்குறைய கைவிட்டபோது, மனித உறவுகளின் அர்த்த மாறுபாடுகள், சந்தையே வாழ்வின் பல்சக்கரங்களில் அறைபட்ட காலத்தில், அதன் அடிநாதமாக அந்நியமாதலின் அடிப்படைகளைப் புரியவைத்த நூல்களில் ஒன்று. ராஜ்கவுதமனின் நேர்மையான மொழி பெயர்ப்பு.

49. சிற்பியின் படைப்புலகம்

இரா.மோகன்/ நிர்மலா மோகன்/ வானதி பதிப்பகம்.

தமிழில் சிற்பி அவர்கள் கைபடாத எழுத்துவகை இல்லை. ஆனால் ஒரு 200 பக்க புத்தகம் எழுதும் அளவுக்கு அவரது படைப்புலகம் விரிந்த ஆகாசமாக இருப்பதை வாசிக்கும்போதுதான் புரிகிறது. எட்டு கட்டுரைகள் வழியே ஒரு ஆளுமையை கச்சிதமாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், பிற்சேர்க்கை நூலைவிட சுவாரசியமாக இருப்பதும், கவிதை, மொழி பெயர்ப்பு, பாரதி ஆய்வுகள் வாழ்க்கை வரலாறுகள் என விரியும் புத்தகப் பட்டியலும், பிறர் நூல்களுக்கு சிற்பி தீட்டிய முன்னுரைகளுமாக எதையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. செதுக்கச் செதுக்க விரியும் சிற்பி.

50. மௌன வசந்தம்

ரெய்ச்சல்கார்சன்/ (தமிழில் ச.வின்சன்ட்)/ எதிர்வெளியீடு.

எனக்குத் தெரிந்து உலக அளவில் அமெரிக்க மைய வளர்ச்சியின் பெயரால் நடக்கும் சூழலிய பேரழிவு குறித்த முதல் அறிவியல் நூல்   Silent Spring. எத்தனையோ ஊர்கள் அழிந்துவிட்டன. காடுகள் மட்டும்தானா விவசாயம்? ஊர்க் குருவி? நூறுமில்லியன் ஆண்டுகள் இயற்கை சேமித்ததை வெகுஜன சந்தைக்குத் தீனிபோட உருவாக்கப்பட்ட தொழிற் புரட்சி, ஒரு பத்து ஆண்டில் முற்றிலும் அழித்தொழித்த கதை இது தான். ரெய்ச்சல் கார்சன் 1962ல் எழுதிய நூல் இது. இத்தனை காலம் கழிந்து எதிர் நண்பர்கள் முயற்சியால் தமிழுக்கு வந்துள்ளது. நூல் வெளிவந்த கொஞ்சநாளில் கார்சன் புற்றுநோய்க்கு பலியானார். 1951 புத்தகமான The sea around us (தி சீ அரவுண்ட் அஸ்) இப்படி முடியும். தானே உருவாக்கிக் கொண்ட சாத்தான்களை மனிதனால் அடையாளம் கூட காண முடிவதில்லை. ஒபாமா வருகை புரிந்தபோது, சுவாசிக்கும் காற்றையும் எடுத்து வர முடிவு செய்தார்கள் என்பதை நாம் மறக்க வேண்டாம்.

Related posts