You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று – 6 : உருவம் உள்ளடக்கம் என்னும் பழைய விவாதம்

ச.தமிழ்ச்செல்வன்

எர்னஸ்ட்ஃபிஷர்

“காலங்கடந்துபோன சமூக உள்ளடக்கத்தைக் காப்பதற்காக ஆளும் வர்க்கம் பழைய வடிவங்களின் பால் -அவற்றைக் கைவிட அது எப்போதும் தயாராக இருந்தபோதும்-ஒரு ஆதரவான தோற்றத்தை மேற்கொள்கிறது.அதே நேரத்தில் புதிய வடிவங்கள் மீது, அவை இன்னும் முதிர்ச்சி அடையாமல் இருப்பினும், சந்தேகத்தை விதைக்க அது முயற்சிக்கிறது.அதன்மூலம் புதிய சமூக உள்ளடக்கத்துக்கு அணை போடுகிறது…..

   உள்ளடக்கம்; வடிவம் எனும் பிரச்னை கலைக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல.தன் இடம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஆளும் வர்க்கம் அல்லது ஆதிக்கக் கலையானது, வடிவம்தான் முதன்மையானது; உள்ளடக்கம் இரண்டாவதுதான் என வாதிடும். எதிர்வினையாற்றும்.கலை,இலக்கியத்தில் தனித்துவமான தன்மையுடன் வடிவம்,உள்ளடக்கம் பற்றிப் பேச வேண்டும்.கலை இலக்கியத்தில் உள்ளடக்கம் என்பது, படைப்பின் பேசுபொருளை அல்லது கருப்பொருளை அல்லது படைப்பு மையமாகச் சொல்லும் சேதியை மட்டுமா குறிக்கிறது?

   பொருளும் வடிவமும் இயக்கவியல் ஊடாடலில் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.படைப்பின் கருப்பொருள், படைப்பாளியின் மனப்பாங்கினால்தான் உள்ளடக்கத்தின் தரத்துக்கு உயர்த்தப்படுகிறது.ஏனெனில், உள்ளடக்கம் என்பது “எது” முன்வைக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல; எவ்வாறு முன் வைக்கப்படுகிறது, எந்தப்பொருளில், எந்த அளவுக்கு சமூக,தனி மனித உணர்வின் பரிணாமத்துடன் முன் வைக்கப்படுகிறது என்பதும் சேர்ந்ததாகும்.”

   மார்க்சிய இலக்கிய விமர்சகர் எர்னஸ்ட் ஃபிஷரின் ‘கலையின் அவசியம்’ என்கிற புத்தகம், தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமியின் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்திருக்கிறது.சமீபத்தில் அந்நூலை வாசிக்கையில், மிகுந்த மனக்கிளர்ச்சி அடைந்தேன். இதுகாறும் எழுத்தின் தன்மை; அதன் நோக்கம் குறித்து பலகோடி வார்த்தைகள் நாம் பேசியுள்ளோம். அதில் பல நம்பிக்கைகளை இந்நூல் கலைத்துப் போட்டுவிட்டது என்பேன். உள்ளடக்கம் குறித்து நாங்களும் பல காலமாகப் பேசியும் எழுதியும் வந்துள்ளோம்.உருவம் உள்ளடக்கம் குறித்த விவாதம் தமிழ் இலக்கியச் சூழலில் நெடுங்காலமாக நடந்துகொண்டே இருப்பதாகும்.என்ன சொல்கிறாய் என்பதைவிட எப்படிச் சொல்கிறாய் என்பதில்தான் கலையின் அழகியல் நிற்கிறது என வாதிட்டோர் உண்டு.என்ன சொல்லப்போகிறோம் என்கிற உள்ளடக்கம்தான் அதை எப்படிச் சொல்வது என்கிற வடிவத்தைத் தீர்மானிக்கிறது என வாதிட்டுள்ளோம்.

மாயூரம் ச.வேதநாயகம்பிள்ளை முதன் முதலாக நாவல் எழுதியபோதிருந்தே இந்த விவாதம் துவங்கி விட்டது. 1879-ல் அவர் எழுதிய தமிழின் முதல் நாவல் எனப்படுகிற “பிரதாப முதலியார் சரித்திரம்” வந்தது.அதன் முன்னுரையில் வேதநாயகம் பிள்ளை எழுதுகிறார்: “தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட்தில்லை.ஆகவே, இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின், பொறுத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெருக்கூத்தில் குற்றங்குறை இருப்பின் பொறுத்தருளக் கேட்கும் கூத்துக்கலைஞனைப்போல ஒரு வேண்டுகோளை வைக்கிறார் வேதநாயகம் பிள்ளை. நாவல் என்கிற புதிய வடிவம் எப்படி எதிர்கொள்ளப்படுமோ என்கிற அச்சத்திலிருந்து பிறந்த வார்த்தைகளாக இவற்றைக் கொள்ளலாம். ஒரு படைப்பு என்றால், அது “ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும்” இருக்க வேண்டும் என்கிற புரிதல் அக்காலத்தில் இருந்ததையும் நாம் அவதானிக்க முடிகிறது. என்ன சொல்வது; எப்படிச்சொல்வது என்பது காலங்காலமாக படைப்பாளிகளுக்கு இருந்து வரும் முக்கிய சவால்தான்.

   எர்னஸ்ட் பிஷர் இந்த விவாதத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறார். உள்ளடக்கம் வேறு; ‘என்ன சொல்கிறோம்’ என்கிற செய்தி வேறு என்று அவர் புதுசாக ஒன்றை முன்வைக்கிறார். படைப்பாளியின் மனப்பாங்கும் சேதியோடு சேரும்போது உள்ளடக்கம் என்னும் நிலைக்கு உயர்கிறது என்கிறார். கலைஞனின் மனப்பாங்கு என்பதை, அவர் பிறந்த காலமும் இடமும் வர்க்கமும் படைப்புச் சூழலும் சேர்ந்துதான் தீர்மானிக்கும்.ஆகவே உள்ளடக்கம் என்பதன் அரசியல் தன்மை இன்னும் கூர்மையாக வெளிப்படுகிறது.இந்த விவாதத்தை இன்னும் பரவலாகவும் ஆழமாகவும் முன்னெடுத்துச்செல்ல வேண்டிய அவசியமும் சாத்தியமும் உள்ளதாக நினைக்கிறேன்.

ஜெயகாந்தன்

   சென்ற மாதம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மரணம் இலக்கிய உலகில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியது.அவரது மரண்ம் திடீரென ஏற்பட்டதோ, எதிர்பாராததோ இல்லை .   எழுதியும் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. எழுத்தாளனாக அவர் இறந்தே 25 ஆண்டுகளாகிவிட்டன என்று பொ.வேல்சாமி போன்ற நண்பர்கள் எழுதினார்கள். ஆனாலும், அவரது மரணம் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது முக்கியமானது. அவர்மீதும், அவரது எழுத்துக்கள் மீதும் காத்திரமாகவும் அவதூறாகவும் விமர்சனங்களை முன் வைப்பதும் இக்காலத்தில் நடந்துகொண்டிருக்கிறது.அவர்மீது வைக்கப்பட்ட ஒரு விமர்சனம் Ôஅவர் ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்யத்தான் கதை எழுதினார்’ என்பது. இந்த விமர்சனத்தைப் படித்ததும் எனக்குப் பலத்த சிரிப்பு வந்துவிட்டது. பேனா பிடித்து அல்லது மௌஸ்-கீபோர்டு பிடித்து ஒருவர் எதையாவது எழுதணும் என்று வந்துவிட்டாலே, அது பிரச்சாரம்தானே?பிறருக்குச் சொல்லப்படுவதுதானே பிரச்சாரம். மனச்சாட்சியோடு நாம் நடத்தும் உரையாடலைத் தவிர, மற்ற எல்லாவகைப் பேச்சும் எழுத்தும் கலையும் ஒரு கருத்தை அல்லது உணர்வைப் பரப்பத்தானே? பிரச்சாரம் என்று முத்திரை குத்தும் வசனங்களெல்லாமே அப்படைப்பின் அழகியல் குறித்தது போன்ற தோற்றத்தைத் தந்தாலும் அவையாவும் அப் படைப்பின் உள்ளடக்கம்     பற்றியதுதான். ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எல்லாமே     60களில் துவங்கி 80கள் வரை தமிழ்ச்சமூகத்தில் பேசாப்பொருளாக இருந்த சமூகப் பிரச்னகள் பற்றிய அவரது பார்வைகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் படைப்புகளாக இருந்ததால் இவ்விதமான விமர்சனங்கள் எழுந்தன என்பேன்.

ஆ. இரா.வெங்கடாசலபதி

கடந்த வாரத்தில் ஒருநாள் சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான பயிலரங்கில் முனைவர்.ஆ.இரா.வேங்கடாசலபதி ‘வரலாறு ஏன் அவசியம்?’ என்கிற தலைப்பில் பேசினார். மாணவர்களுக்குப் புரியும்விதமாக எப்படி இதைச் சொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புடன் நான் இருந்தேன். முதலில், வரலாறு என்றால் நடந்து முடிந்த பழைய கதை என்கிற கருத்து எவ்வளவு தவறானது என்பதை விளக்கினார்.வரலாறு என்பது நிகழ்காலத்தைப்பற்றியது என்றார். ” உதாரணமாக, உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது டாக்டரிடம் போகிறீர்கள். அவர் என்ன கேட்கிறார்? நேற்று என்ன சாப்பிட்டீர்கள்? இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள்?என்று கேட்கிறார். இன்னொரு உதாரணம்: 60 வயதானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்று சர்க்கரை வியாதி இருக்கிறது. டாக்டரிடம் போகிறார்கள். அவர் என்ன கேட்கிறார்? உங்க அப்பாவுக்கு சுகர் இருந்ததா? உங்க தாத்தாவுக்கு சுகர் இருந்ததா? என்று கேட்பார்.இன்று உங்கள் சர்க்கரை நோயை சரியாக்க, உங்கள் வயிற்றுப்போக்கை சரியாக்க கடந்த காலத்தைப் பற்றிய அறிவு தேவையாக இருக்கிறது. அதுதானே வரலாறு? நாம் வாழும் இன்றைய சமூகத்தின் நோய்களைத்தீர்க்க நேற்றைய வரலாறு தேவைப்படுகிறது. இப்போது சொல்லுங்கள். வரலாறு என்பது கடந்தகாலத்தைப் பற்றியதா; நிகழ்காலத்தைப் பற்றியதா?” மாணவ மாணவிகளுக்குப் புரியும் விதமாகவும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவுமாக அவருடைய உரை தொடர்ந்தது.

Related posts