You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 12: பூ மரத்துடன் பேசவரும் தேன்சிட்டுகள்…

முருகபூபதி

 உலகில் ஜீவராசிகளைத் தழுவிச் சென்றபடி அவற்றோடு சுவாசமாகிவிட்ட காற்றின் உருவற்ற உணர்நிலைகளைப் போல ஆதியில் மரங்கள் சுமந்த மனிதனின் இருப்பு இயற்கையின் அதியற்புத விதிகளில் ஒன்றாகியிருந்தது. மனித நிலை முழுதாய் புகுந்துவிட்ட அதன் பழுத்த இலைகள் உதிர்வதைப்போல உதிர்ந்து வீழ்ந்து மரத்தின் சுவாசத்திடமிருந்து தனித்து விடப்பட்டு இன்று வரை வெகுதூரம் தன்னைத்தானே துரத்திக் கொண்டிருக்கிறான். ஆனால் உலகமெங்கும் எழுந்து வரும் மரங்கள் தன்னைவிட்டுப்போன மனிதனுக்காக நாட்டிய மாடியபடி இவைகளின் படபடப்பிசையில் எதிர்கால சந்ததியர்களுக்கான ஆதிவயல்களுக்குள்ளிருந்து குலவை மொழுகிய தானியங்களின் ரேகைகளோடு பாடிக் கொண்டிருக்கிறது. பறவைகளின் மொழியிசை அறிந்த மரங்களும் கொடிகளும் செடிகளும் உலகில் இருப்பதாலேயே இவ்வுலகம் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. நிலத்தை அன்னையின் மடியாக உறவு கொள்கிற பண்பாடு நம்முடையது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என நிலமே தமிழ் வாழ்வின் அடையாளம் எனலாம். களர் நிலத்தின் குணத்திற்கு ஏற்ற களர் சம்பா விதையும், உவர் நிலத்துக்கேற்ற உவர் சம்பா விதையும், வெள்ளம் ஏற்படும் காலங்களை உணர்ந்து மடுவு முழுங்கி என்கிற விதைதான் ஆதிகுடி. இப்படி நிலத்தின் குணங்களைப் புரிந்து வைத்திருந்தவர்கள் நாம்.

   மூன்றாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளிக்கு காந்தாரி எனும் அம்மா ரவுக்கை போடாது கருநீல சேலையுடுத்தி தினமும் எங்கள் பள்ளிக்கும் பள்ளி வளாகத்தில் அசைந்து நிற்கும் மூன்று மரங்களுக்கும் தகரக்குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றுவதுதான் வேலை. பள்ளியின் பின் பக்கம் துளசிச் செடிகளும், ஆளுயர வேப்பமரங்களும், புங்கை மரமொன்றும், வேம்பும், அரசமரமும் பிணைந்த நிலையில் உயர்ந்து வளர்ந்து இருக்கும் சூழலுக்குள் ஒற்றைக்குடிசையில் தனித்து வாழ்ந்தவள் அந்த அம்மா என்று நான் பின் நாட்களிலேயே புரிந்து கொண்டேன். பள்ளி விட்ட மாலை வேளையில் ஒரு நாள் என் வகுப்புத் தோழி செண்பகவல்லியுடன் காந்தாரியின் தோட்டத்திற்கு விளையாடப் போனபோது, குடிசையின் பின் பக்கம் நின்றிருந்த முருங்கை மரங்களில் காய் பறித்தபடி யாரோடோ பேசிக் கொண்டிருந்தாள் காந்தாரியம்மா. மரத்துடன் பேச வந்த தேன் சிட்டுக்களுக்கு கேழ்வரகு தூவி பூனைப்பாதங்களோடு சப்தமின்றி பதுங்கி நடந்துபோனது குழந்தையாகவே தோன்றியது. ஒவ்வொரு முருங்கைக்கும் சிக்கெடுத்த தன் கூந்தல் கற்றைகளை ஆபரணம் போலவே கட்டியிருந்ததும சில மரங்களுக்கு குங்குமப்பொட்டிட்டிருப்பதும் நினைவின் வாசனையாய் இப்பவும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒளிந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களை குனிந்தபடி திரும்பாமலேயே அழைத்து கீழே உதிர்ந்து கிடந்த வேப்பம் பழங்களை தின்னக் கொடுத்தார்கள். அன்று முதல் பலமுறை நானும் செண்பகவல்லியும் காந்தாரியம்மா தோட்டத்திற்கு போவது எங்கள் வாடிக்கை.

ஒரு நாள், பள்ளிக்கு வராத காந்தாரியம்மாளைத் தேடிப் போனோம். கதவின்றி திறந்துகிடந்த குடிசைக்குள் நுழைந்தபோது சாணி மொழுகிய தரையினைச் சுற்றி குட்டிச் செடிகள் முளைத்திருக்க சில சுருக்குப்பைகள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தன. இந்த பனை நார்ப்பெட்டிக்குள் மங்கிய புகைப்படமொன்றிருந்தது. அதில் மரத்தில் முகம் புதைத்து அனைத்திருந்த எங்கள் வயதுச்சிறுமியின் புகைப்படம். இப்பவும் அந்த முகத்தின் வடிவம் தேடி மனது காத்திருப்பதை நன்கு உணர்வேன். கல்லூரி படிக்கும் காலங்களில் காந்தாரியம்மாளைப் பார்த்தபோது தெரு மரங்களுக்கெல்லாம் நீர் ஊற்றியபடி மரசிலைகளுடன் மௌனமாக உரையாடி மரத்தின் புத்திரிபோல என் நினைவு நிலமெங்கும் பேசிக் கொண்டிருக்கும் முதுவிருட்சம் காந்தாரியம்மாள். காந்தாரியம்மாள் இன்று தோட்டமின்றி எங்கோ மரத்தின் இலைச் சங்கீதத்திற்குள் பாடப்பட்டுக் கொண்டிருப்பாள்.

     பத்து வருடங்களுக்கு முன் 7ஆம் வகுப்பு மாணவ,   மாணவிகளைக் கொண்டுஏ.கே. ராமானுஜம் தொகுத்த Indian Folktakle எனும் புத்தகத்திலுள்ள Flowering tree எனும் கதையினை பூமரப் பெண் (தமிழிலும் ச. மாடசாமியால் பெயர்க்கப்பட்டுள்ளது) என்று நாடக மாக்கிய அனுபவம் அபூர்வமானது. கதையின் முக்கிய அம்சமாக, வேம்பா என்பவள் தன் அம்மாவின் உதவிக்காக விரும்பிய போது பூமரமாக மாறி அப்பூக்களைக் கூவி விற்றுக் கிடைத்த பணத்தை அம்மாவுக்கு கொடுப்பதும். இளவரசனின் பார்வையில் பட்ட அவள் அவனுக்கு மணம் முடித்து வைத்தும் அவனோ தான் விரும்பிய நேரமெல்லாம் பூமரமாக மாறச் சொல்வதும், கடைசியில் அவள் மரமாகவே மாறி மறைவதும் என மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து நாடகம் நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. நாடகத்தில் மரமாக உருமாறும் வேம்பா எனும் கதாபாத்திரத்தில் அஸ்மத் ஹசீனா எனும் முஸ்லிம் மாணவி நடித்திருந்தாள். ஒரு மாதத்திற்கு மேல் நடந்த ஒத்திகையின்போது எவருக்கும் தெரியாமல் பள்ளி வளாகத்தில் இருந்த எண்ணற்ற மரங்களின் வேர்களில் தன் பாட்டி கொடுத்துவிட்ட மந்திரிக்கப்பட்ட நீரை எடுத்து வந்து தெளித்து முணகி அலைவதை சில வேளை கவனித்திருக்கிறேன். மரவேர்களில் அலை…. பச்சைய நீரோட்டங்களில் உதடுகள் குவித்து சில வார்த்தைகளை உள்ளே அனுப்புவதும் காது பதித்து பதில் வார்த்தைகளை கேட்பதும் மரதேவதையைப் போலவே மாலை வேலைகளில் அலைந்து கொண்டிருப்பாள்.

   ஒரு நாள் ஒத்திகையின்போது அழுது நடித்த அவள் தன் ஒத்திகையை தொடர்ந்தாள். வகுப்பில் ராமசாமி எனும் ஆவியூர் மாணவன் அஸ்மத¢ ஹசீனாவின் நடிப்பில் வசீகரிக்கப்பட்டு தன் வயக்காட்டிலிருந்து தினம் ஒரு புதுவகை செடிக் கன்றை பரிசாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். எதனால் இப்படிச் செய்கின்றாய்?” என அவனிடமே நான் கேட்டபோது எங்க புஞ்சையில் கண்டு நிறைய இருக்குல… அதுவும் இல்லாமெ அந்தப் புள்ள மரமா நல்லா நடிக்கிறா அதான் நெதோம் கொண்டாறேன்” என்று கூறிப் போனான். அம் மாணவனின் தாய்மாமன் பஃபூன் பாண்டியாக அப்பகுதிகளில் சிறந்து விளங¢கிய நாடக நடிகனென்றும், பலமுறை நாடகம் முடித்து நிறை போதையில் வரும் மாமன் ஊர்க்கண்மாய் மேட்டிலுள் மரங்களிடம் கோபித்து சண்டையிடுவதும் பின் உணர்ச்சிவயப்பட்டு மரங்களை கட்டிப்பிடித்து தழுவி முத்தமிட்டுக் கொஞ்சுவதும் தன் மித்த நிலையின் அதீத செயல்களில் ஒன்றாய் செய்து கொண்டிருப்பாராம். அன்று ஹசீனாவால் ஈர்க்கப்பட்ட மாணவிகள் பலரும் வகுப்பறைகளில் அவளைப் போல நடிப்பதும் பாடுவதும் விருப்பச் செயல்களில் ஒன்றாய் மாறியிருந்தன. ஹசினாவின் திறமைய¤னை பாதுகாக்கும் சூழல் கல்வி முறைகளுக்குள் இருந்திருக்குமேயானால். பள்ளிமாணவிகள் பலரும் தம் நடிப்பால் செயலாம் மரங்கள் உயர்ந்த வனத்தினை கரிசல் நிலத்தின் ஒரு பகுதியாய் படைத்திருப்பார்கள்.

சுசரிதா எனும் நான்காம் வகுப்பு மாணவி ஒரு முறை சிலவரிக்கதை ஒன்றை எனக்கு பரிசளித்தாள். கதை முந்திக் காலத்துல மனிதர்களை மரங்கள் வளர்த்தது. பிந்திக் காலத்தில் மனிதர்கள் மரங்களின் இலைகளைப் பிடுங்கிப் போனார்கள். பறவைகள் இலையில்லாத கிளைகளில் உட்கார்ந்து அழுதுபாடின. சிந்தின கண்ணீர்ப் பொட்டுகளெல்லாம் பச்சை இலைகளாக மாறின. இப்பவும் பறவைகள் கிளைகளில் அமர்வது பச்சை இலைகளுக்காகத்தான். பள்ளிக்கூடம் வராத பிள்ளைகளெல்லாம் தண்ணீர்க் குடத்தோடு மரங்களில் இலைகளை படிக்கின்றார்கள். முத்திக் காலத்துல மரங்கள் மனிதர்களை வளர்த்தன” என்று கதையினை முடித்திருந்தார். வாரம் இரு முறை. பள்ளிக்கு என்னை அவள் வரவேற்பது, மரங்களின் பின் ஒளிந்து ஒளிந்து வரவேற்பதும் தின்பண்டமோ கொடுப்பது அவளது விருப்பமாகவே இருந்தது.

ஒருமுறை நாடக நிகழ்விற்காக வெயிலில் உட்கார்ந்து பொம்மைகளை நிலத்தில் நட்டுக் கொண்டிருந்தபோது என் வியர்வை கண்டு அவள் உடுத்தியிருந்த நீண்ட கவுனை இலையென விரித்து என் மீது வெயில் படாதவாறு மறைத்து நின்று “நான் மரம் கதை சொல்லிக்கு இலைக்குடை பிடிப்பவள்” என்று சொல்லி என் வேலை முடியும் வரை அங்கிருந்து போகவில்லை. “நீ போ”ம்மா உனக்கும் வெயிலடிக்கும் என்றபோது” இல்லைனா நான் மரம். எனக்கு ஒன்னும் செய்யாது” எனச் சிரித்தாள். ஹசினா சுசதிதா போன்ற பல மாணவிகளும் என நாடக நிலத்தில் அலைவுறும் என்னை, என் நடிகர்களை அரூபமாய் வழி நடத்திச் செல்வதாகவே இப்பவும் உணர்கிறேன். 2010 வாக்கில் தஞ்சையில் ஆர்ப்பணுங்கு நாடகம் நிகழ்த்தும் போது பார்வையாளர்களுக்குள்ளிருந்து பல்கலைக்கழக தமிழ் மாணவி ஒருத்தி நாடகத்தால் ஈர்க்கப்பட்டு தன் அருகே இருந்த வேம்பு மரத்தினை தழுவித் தழுவி முனகிப்பாடி மருளேறிய நிலையில் நாடகம் பார்த்ததையும், மற்றொரு மரக்கிளை பிடித்து பீறிடும் அழுகையை அடக்கி பெண் போலீஸ் ஒருத்தர் நாடகம் பார்த்த நொடியை பெண்களின் அணங்கு நிலையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நாங்கள் என்பேன்.

   ஆர்பணங்கு நாடகத்தில் நல்லதங்காள் பாத்திரம் தன் துயரத்தை இப்படிப் பேசும் ÔÔஒலி மொழி தேடியலைகிறேன். அடித்துப் புரண்டழுத ஆலமர இலைகளிலெல்லாம் எம்புள்ளெக ரேகையுண்டு. முட்டியழுத மூங்கில் மரமெல்லாம் பாடிப் புலம்புதுபார்.. கட்டியழுதேனே கருவேலம்பூ உதிர.. தாவியழுதேனே தாய் மரங்கள் புலம்பிச் சொல்ல… இப்படி மரங்களின் துணை கொண்டு பேசுவாள். அது போல பஞ்சகாலத்தின் கதை சுமந்து நல்லதங்காளைச் சந்திக்க வரும் நடிகர்களில் பெண் வேடக்கலைஞன் தங்களின் தற்கொலைக்கு முந்தைய நொடியில் கிணற்றடியில் வைத்துப் பேசுவான். தங்காள் வனம் வனமாய் அலைந்து வருகிறோம். கனிகளைத் தேடிப் போன எந்தப் பறவைகளும் கூட்டிற்குத் திரும்பவில்லை. நிலமெங்கும் பூச்சிகளும் ஜந்துக்களும் தீராப்பசியால் வாடித்துடிக்கின்றன. மரங்களைக் கட்டிப் புலம்பிய வனமிருகங்களின் பைத்திய நிலைகளை ஒப்பனையிட்டு வந்துள்ளோம். நாங்கள் பூச்சியினங்களின் மொழியுடலை நடிப்பாக்கியுள்ளோம். பூமியெங்கும் நாடகம் நிகழ்த்தக் கிளம்பியுள்ளோம்” என்று பேசுவான். தங்காள் பஞ்சகால நாடக நடிகர்களுக்கு தன் வைக்கோல் கூந்தல் அறுத்து ஆசீர்வதித்து அனுப்பி விடைபெறுவாள். ‘மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழ்ந்து விட முடியும். பறவைகள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது” என்ற சலீம் அலி எனும் பறவையாளனின் வாக்கும் “பகுத்துண்டு பல்லுயில் ஓம்புதல் உலகம் தழைப்பதற்கான தமிழன் சொன்ன தத்துவம்” பல்லுயிரியம்” இலைகளுக்குள் ஓடும் நீரோட்டத்தையே ஆர்ப்பணங்கில் வரும் பஞ்ச கால நடிகர்கள் துடிவாக்குகளாய் சுமந்து அலைவார்கள். மனிதனைப் போல பூமிக்கு சுமையான உயிர், மரமல்ல. அது தன் ஒவ்வொரு உறுப்பாலும் இந்த பூமியை உயிர்ப்போடு அலைவுறச் செய்யும் உயிர்க்கரு.

   ஒரு முறை நான்காம் வகுப்பில் “நீங்கள் பெரிய பிள்ளைகளாக மாறிய பின் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டதும், சோனைப் பிரியான் எனும் மாணவன்’ “எங்க ஊரு சின்னக் கருப்பு சாமியாடியாக நான் வரணும், நான் பெரிய ஐஸ் யாவாரியாகனும், பிச்சராகனும், வாத்தியாராகனும், நாடக நடிகனாகனும், நெறை கதை சொல்லாதவனாகனும், எங்க அம்மாச்சி போல குறிசொல்லி ஆடிப்பாடும் பெண்ணாகனும்” இப்படிப் பல அபூர்வக்குரல்கள். அன்று டாக்டர், என்ஜினியர் கலெக்டர்களின் குரல்களுக்கு அதிக செல்வாக்கு இல்லை. தன் அம்மாச்சிபோல குறிசொல்லி ஆடணும் என்று சொன்ன தனலஷ்மி என்ற மாணவியிடம் பேசியபோது, அவள் குலதெய்வக்கதையினை இருபது கதையாகச் சொன்னதை இங்கு சுருக்கிச் சொல்கிறேன். மதுரை மேலூர் பக்கம் ஆலம்பாடி ஒரு காலத்தில் வனமாக இருந்தது. அங்கு குடியேற விரும்பிய கூனப்பழனியாண்டி என்பவர், அங்கிருந்த மரம் செடி கொடிகளை வெட்டத் தயாரானார். அங்கு சிறிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதனையும் வெட்டினான். மறுநாள் வந்து வெட்டப்பட்ட இடத்தை கண்டபோது வெட்டிய ஆலமரம் பெரிதாக வளர்ந்திருந்தது. மறுபடியும் வெட்ட மறுபடியும் ஆலமரம் முன்பைவிடப் பெரிதானது. பயந்த அவரது கனவில் “இது நான் இருக்குமிடம் என் இடத்தை விட்டு நீ தள்ளிப்போ. மரம் பேசாவிட்டால் உன் இஷ்டப்படி செய்வாயா? ஒழுங்காக சடங்கு செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் ஊருக்கும் நல்லதே செய்வேன்” எனப் பெண் குரல், கேட்க அதன்படி அவ்விடத்தைவிட்டு தள்ளிப்போய் குடியேறி, மரத்தை வழிபட்டு வந்தானாம்.

ஒரு முறை என் கால் பெருவிரலில் நகச்சுத்தி ஏற்பட்டு மஞ்சள் அரைத்துக்கட்டி கால் நொண்டியபடி பள்ளி நுழைந்தபோது ஓடி வந்த தனலஷ்மி குனிந்து பெருவிரலை தன் இறகுக்கைகளால் தொட்டுத்தொட்டு ஏதேதோ முனகி, கலங்கிய கண்களுடன் வகுப்பறைக்குள் ஓடினாள். மறுநாள் இலையில் மடித்து எடுத்து வந்த மஞ்சளுடன் கலந்த திருநீற்றை என் பாதம் முழுதும் பூசியபடி “உடனே குணமாயிடும்னே.. பேசுனே பயப்படாதேனே…” என்று சொல்லி என் உள்ளங்கையிலும் மஞ்சள் பூசி சிரித்தபடி போனே சரியாப் போயிடும்னே” என்று சொல்லி வகுப்பறைக்குள் ஓடினாள். பிறிதொரு நாளில் தன் பாட்டி நீலகிரி…. பழங்குடிகளிடமிருந்து வாங்கி வந்த ஐந்து நரம்பு இலை இருக்கு. காயம்பட்டு ஆறாத புண்ணெல்லாம் ஆத்திவிடுமாம். இந்த இலைக்கு காதல் இலை என்று இன்னொரு பெயரும் உண்டு என பாட்டி சொன்னதாகச் சொன்னாள். இயல்பில் கிராமத்துக் குழந்தைகள் பலரும் இயற்கை ஞானமிக்கவர்கள்.

2005ஆம் ஆண்டு தேரிக்காட்டில் எங்கள் மணல்மகுடி நாடகக்குழு இரண்டு மாதம் தங்கி உருவாக்கிய நாடகம் செம்மூதாய். அது பேய் பீடித்த கிராமப் பெண்களின் கதையினைப் பேசும். அந்நாடகத்தின் ஆறாம் காட்சியில், மரங்கள் அரிதாகிப்போன நிலத்திலிருந்து வந்த பேய் பேசுவதாக வரும் வாக்கு ÔÔதரிசு நிலக் காத்தே பேய் மரக்காத்தே! கைவிடப்பட்ட மரத்திலெல்லாம் வேதனையாய் அலையுதே எம் பேய்க்கூட்டம். பேய்களின் சோகம் அடங்கலையே.. மரத்துல முட்டிமுட்டி அழுகுதடா எம் பேய்க்கூட்டம்… வனமெங்கே… நிலமெங்கே… மரமெங்கே… பட்சிக் கூட்டத்தை கூட்டி வா… பேய் கிட்ட கூட்டி வாயேன்… மரத்தெ முத்தமிட்டுப் பிரிஞ்ச எம் பேய்களெ கூட்டி வா…” என நிலத்தில் புலம்பி உதிர்ந்த சருகு இலைகளை ஏந்தி நடிக்கும் பாத்திரம் இன்றும் நம் கிராமங்களில் மரங்களில் கதைகளாய்க் குடியிருக்கும் பேய்களை, மரங்களை பல்லுயிர்களை நினைவூட்டுவதாகவே இருக்கும். நம்மூர் பேய்களின் மரத்திலிருந்து குழந்தைகளுக்கான இயற்கை கதைகளைத் துவங்க வேண்டும். இன்றும் கிழக்கு இராமநாதபுரத்து பஞ்சக்கதைகளை சொல்லும்,

எம்.எஸ்.சண்முகத்தின் பெரியவயல் நாவலில், பஞ்சம் பிழைக்கப்போன தன் மச்சான் ஊர் திரும்புகையில் காலரா நோய் கண்டு ரயிலிலேயே இறந்துவிட மானாமதுரை கம்மாக்கரையில் பயணிகளால் அடக்கம் செய்யப்பட்டு, அதே பயணியால் போஸ் கார்டு எழுதி ஊர்வந்து சேர்கிறது. அன்று பெரிய வயல் அறுவடை அக்காள் சுப்புத்தாய் அறுவடைக்கு வயலில் நிற்கிறார். ஊரார் மூலம்தன் கணவன் இறந்த செய்தி கேட்டு வயலெல்லாம் விழுந்து புரண்டு அழுகிறாள். தலைவிரி கோலமாய் சுப்புத்தாய் அக்காள் என்னைக் கட்டிப் பிடித்து அழுதாள். என் கண்கள் குளமாயின. கூட்டம் கூடி அவளது வாயைப் பொத்தி வீட்டினுள் அழைத்துச் சென்றனர் தெருவினர். அவளை நினைக்க நினைக்க சீவிய பாளையாய் சிந்தியது கண்ணீர். அவளது ஒப்பாரி உலர்ந்த காட்டில், தீப்பொறியை வீசியதுபோல் பற்றி எரியத் தொடங்கியது. சுப்புத்தாய் வயலில் புரண்டழுது பாடிய துயரப்பாடலில்

காப்பு கழண்டு போச்சு

மையி ரெண்டும் மெலிஞ்சு போச்சு

கோட்டில் குலைஞ்சு போச்சு

கோல மழிஞ்சு போனேன்

குட்டப்புளிய மரம்

குயிலடையும் நந்தவனம்

குட்டமரம் பட்டுப்போச்சு

குயிலு நான் எங்கடைவேன்

மட்டப்புளியமரம்

மயிலடையும் நந்தவனம்

மட்டமரம் பட்டுப் போச்சு

மயிலு நான் எங்கடைவேன்

இன்றும் நிலமெங்கும் காற்றொலியாய் பரவும் இவ்வலிவாக்கு கிராம ஓடைகளுக்குள்ளும், வயல்களுக்குள்ளும் கூந்தல் விரித்த அமரச் சடங்குகளுக்குள்ளும் பற்றி எழுகிறது.

Related posts