You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று – 5 வாசிப்பில் முக்கியமானதும் முக்கியமற்றதும்

ச.தமிழ்ச்செல்வன்

   கடந்த இரு மாதங்களும் பரபரப்பான நாட்களால் நிரம்பியிருந்தன. புத்தகங்களால் வந்த பரபரப்புத்தான் அதிகம்.. ஒரு இரவு நேரத்தில்  கரூரிலும் ஒரு எழுத்தாளர் தூக்கிச் செல்லப்பட்டு அடிக்கப்பட்டார்.அவர் பெயர் புலியூர் முருகேசன் என்கிற செய்தி கிடைத்தது. கிடைத்த அரைகுறைச் செய்தியோடு கரூர் மாவட்டத்தோழர்களைத் தொடர்பு கொண்டு புலியூர் முருகேசனைக் கண்டுபிடியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தூக்கிக் கொண்டுபோய் பல இடங்களில் வைத்து அடித்தது உண்மை. காவல்துறையே வேறு எங்கோ வைத்திருப்பதுபோல் தெரிகிறது என்று தோழர்கள் தகவல் சொன்னார்கள். தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கொடுத்த தகவலின் அடிப்படையில் புலியூர் முருகேசனின் மைத்துனரைத் தொடர்பு கொண்டேன். நள்ளிரவுவாக்கில் முருகேசனிடமே பேச முடிந்தது. போலீசுடன் போராடி அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்ட கதையை அவர் சொன்னார். மனதில் ஏற்பட்ட பதட்டம் முடிவுக்கு வந்தது.
அவர் எழுதிய ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்கிற சிறுகதைத்தொகுப்பில் வந்துள்ள இரு சிறுகதைகள் கொங்குவேளாளர் சமூகத்தின் ஒரு பிரிவினரான புலியூர்ப் பெருங்குடியினரை இழிவு படுத்துவதாகச் சொல்லி கொங்கு மக்கள் முன்னேற்றக்கட்சியைச் சேர்ந்த சிலர் அவரை வீடு புகுந்து தாக்கியதோடு வேனில் தூக்கிச் சென்று பல இடங்களில் வைத்து அடித்துத் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டனர். அவர் தாக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமுஎகசவும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் உடனடியாகக் கண்டனம் செய்தன.
பிரச்சனைக்குரியதாகச் சொல்லப்படும் ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்’ கதையை வாசித்துப்பார்த்தேன்.கதையுடன் என்னால் உடன்பட முடியவில்லை. அதற்காக அவரை அடிப்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. அவர் கதைகளின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்துக்கொண்டே அவருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவுவோம் என்கிற நிலை எடுக்க நேர்ந்தது. தவிர தன் கதைத்தொகுப்பின் முன்னுரையில், கடந்த காலத்தில் தனக்கு நெருக்கடி கொடுத்த அப்பிரிவினர் குறித்த இக்கதைகளைப் புனைவற்ற எழுத்தாக எழுதியிருப்பதாக ஒரு வாக்குமூலத்தையும் அவரே பதிவு செய்திருக்கிறார். ஒரு பிரிவினரைக் குறிப்பதாக அல்லாமல், பொதுவாகவே  இக்கதைகளை எழுதியிருக்க முடியும்.
துரை. குணாவின் கதையும் கிட்டத்தட்ட இதுதான்.எங்களையெல்லாம் பேர் சொல்லி எழுதியிருக்கிறார் என்று அவருடைய சொந்தக்காலனியைச்சேர்ந்த மக்களே கோபமாக இருக்கின்றனர். ஆனால் புலியூர் முருகேசன் கதையிலுள்ள பாலியல் சார்ந்த சொல்லாடல்கள் ஏதுமின்றி துரை. குணாவின் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நாவல் நேரடியாக அவருடைய ஊரில் நடந்த ஒரு வன்கொடுமை நிகழ்வைச் சொல்லுகிறது. துரை. குணாவின் கதையில் எனக்கு பெரிய பிரச்சனை ஏதும் இல்லை. வன்கொடுமைக்கு எதிரான முற்போக்கான கதைதான்.
சரி. யாரையும் குறிப்பதாக எழுதுவது நூறு சதவீதம் தவறா?என்கிற கேள்விபற்றிப் பொதுவாக நாம் சில விஷயங்களைப்  பேச வேண்டும்.
எதற்கெடுத்தாலும்  “புண்பட”த்தயாரான ‘அரசியல்’ மனநிலையோடே வாழ்கிற சாதியவாதிகளும் மதவாதிகளும் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் அவர்களின் அரசியல் தேவைகளைப் பொறுத்துப் புண்படுபவர்கள்.எப்போ எதுக்காகப் புண்படுவார்கள் என்பதை நாம் யூகிக்க முடியாது. ஆனால் எழுத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் நாம் சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து நமக்குள்  பொதுவாகப் பேசியாக வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், மூத்த படைப்பாளி நீல. பத்மநாபன் Ôமின் உலகம்’ என்றொரு நாவலை எழுதினார். தான் வேலை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் சிலரை நேரடியாகக் குறிப்பிடுவதுபோல அமைந்த அந்த நாவல் காரணமாக அவர் அலுவலகத்தில் தாக்கப்பட்டார். பின்னர் ஒருமுறை, என்னைச் செதுக்கிய கைகளில் ஒன்றாக நான் மதிக்கும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி ஆனந்த விகடனில் ‘கஸ்ப்பா’ என்றொரு கதை எழுதினார். அவர் வாழ்ந்த தெருவில் வசித்த ஒரு அரசு அலுவலர் செய்த தவறை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதுபோல அக்கதை அமைந்ததால் தெருவிலும்  அரசு அலுவலர்கள் சார்பாகவும் எதிர்ப்பைச் சந்தித்தார்.சாத்தூர் அரசு மருத்துவமனையின் லஞ்ச ஊழியர்கள் பற்றி அப்படியே ஊர் குறிப்பிட்டு எழுதியதால் அப்போதும் எதிர்ப்பைச் சந்தித்தார்.
சார்லிசாப்ளின் தானே ஹிட்லராக இரட்டை வேடங்களில் நடித்து ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் பாசிஸ்ட் ஜடாமுனியான ஹிட்லரின் தோலை உரித்திருப்பார். ஹிட்லர் வாழ்ந்த காலத்திலேயே எடுக்கப்பட்ட அப்படம் உலகெங்கும் வரவேற்பைப்பெற்றது. அறிவுலகமும் அப்படத்தைக் கொண்டாடியது. வெகுமக்களும் கொண்டாடினார்கள். நேரடியாக ஒருவரைத் தாக்குகிறதே என யாரும் குறை சொல்லவில்லை-பாசிஸ்ட்டுகளைத் தவிர.ஜெர்மனிக்குள் அவரோ, அப்படமோ நுழைய முடியவில்லை என்பது நாம் அறிந்ததே.
ஆக, யாரை விமர்சித்துப் படைக்கிறோம், என்னவிதமான மொழியில் விமர்சிக்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் கருத்துக் கூறமுடியும். புலியூர் முருகேசன் கதையில், புலியூர்ப் பெருங்குடி என்கிற ஒரு பிரிவு மக்களை  -எல்லோரையும் ஒரே பட்டியில் அடைத்து ஒற்றைப் பார்வையுடன் பார்த்து சில தாக்கும் வார்த்தைகளில்(அவர்களுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள் என்பது போல) சித்தரித்திருப்பதும் நேரடியான விரிவான பாலுறவுச் சித்தரிப்புகளும் எனக்கு ஏற்புடையதாக இல்லை.எல்லாச் சாதிகளிலும் ஏழை எளிய உழைக்கும் மக்களும் இருப்பார்கள் என்பதை எப்படி மறக்கலாம்.ஒட்டுமொத்தமாக ஒரு பிரிவை – அவர்கள் கையில் மறுத்தெழுதப் பேனா இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால்-தாக்குவது எழுத்துக்கு அழகல்ல என்பேன். அதற்காக, எழுத்தாளனைத் தாக்குவதை நாம் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என்பதையும் அடுத்த வரியாகவே சொல்லிவிடுவோம்.
துரை. குணாவின் வீட்டுக்குப் போயிருந்தேன், தோழர்களோடு. அரசு கட்டிக்கொடுத்த காலனி வீட்டில்தான் வசிக்கிறார். அவர்மீது கோபம் கொண்டுள்ள அவருடைய கதாபாத்திரங்களும் அதே காலனியில் வாழும் எளிய மக்கள்தாம். பார்க்கையில் மிகுந்த வருத்தமாக இருந்தது. இருபக்கமும் பேசிச் சரி செய்யவேண்டிய விஷயங்கள் இருப்பதை அடையாளம் காண முடிந்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் சரி செய்ய முடியும்.
படைப்பாளியின் சுதந்திரத்தைப் போலவே எதிர்வீட்டுக்காரரின் சுதந்திரமும் முக்கியம் என்பதை எழுத்தாளர்கள் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும்.பாசிஸ்ட்டுகள்,ஆதிக்க சக்திகளைத் தோலுரிக்கும்போது ‘புண்படுமே’என்று யோசித்துக்கொண்டிருக்க முடியாது. புண்படணும் என்றுதானே நாம் எழுத வேண்டும்.
2
இந்தப் பரபரப்புகளுக்கு நடுவே மணற்கேணி ஆய்வு வட்டம் திருச்சியில் நடத்திய பெண் படைப்பாளிகள் பற்றிய கருத்தரங்கில் எழுத்தாளர் ஆர்.சூடாமணியை அறிமுகம் செய்து பேசவேண்டியிருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய எழுத்துக்களை ஊன்றிப்படித்த்தில்லை நான்.  இப்போது வாசிக்கையில் மிகுந்த முக்கியமான ஒருவரை ஆழ்ந்து வாசிக்காமல் விட்டுவிட்டோமே என்கிற குற்ற உணர்வு மனதில் நிழலாகப் படர்ந்தது.  குளத்தங்கரை அரச மரத்திலிருந்து இன்றைய யோ.கர்ணனின் கதைகள் வரை வாசித்துக்கொண்டே வந்த என் சொந்த வாசிப்பு வரலாற்றில் பல விதமான மனநிலைகளைக் கடந்து வந்திருப்பதை உணர முடிகிறது. புரட்சிக்கு ஒரு டிகிரி கம்மியாக இருந்தாலும் தூரப்போட்டுவிடுகிற மனநிலையோடு கொஞ்ச காலம் இருந்திருக்கிறேன். கண்ணீர் வராத கதையும் ஒரு கதையா என்று கொஞ்ச காலம் வாசித்திருக்கிறேன். மனதைப் புண்படுத்தித் தொந்தரவுக்குள்ளாக்கும் அறிவுச்சவுக்கு சொடுக்கப்படாத கதையெல்லாம் ஒரு கதையா என்கிற  மனநிலையோடே  சிலகாலம்  வாசித்திருக்கிறேன். வரலாற்றில் நின்று வாழ்வைப் பேசவில்லையானால் அது கதையா என்று சிலகாலம் ஓடியிருக்கிறது.  ஒவ்வொருவரும் தம் வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும் கலந்த ஓர் மனநிலையில்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாசிக்கிறோம்.
இதே ஆர்.சூடாமணியின் ஒருகதையை நான் சிறுவயதிலேயே வாசித்திருக்கிறேன். ÔÔவெறுமையின் இழைகள்” என்கிற கதை. ஒரு அய்யராத்துப் பொண்ணோட கதை.. ப்ச்சு.. பாவம் என்று.. அப்பெண்ணுக்காக லேசாக வருந்திவிட்டுக் கடந்துபோன கதை அது. இப்போது அக்கதையை என்னால் கன்னங்களில் வழிந்த நீரைத்துடைத்துக் கொண்டேதான் வாசித்து முடிக்க முடிந்தது. கணவன் வீட்டிலிருந்து கையில் தீப்புண்ணோடு வந்திருக்கும் மகளோடு தகப்பன் தனியாக நடத்தும் உரையாடல் காட்சி கதையின் மையமான புள்ளியாக எனக்குப்பட்டது.கோவில் அர்ச்சகரான அப்பா இரவு தாமதமாக வீடு திரும்பி மகள் வைக்கும் சோற்றைச் சாப்பிட்டு விட்டு, மனப்புழுக்கம் காரணமாக உறக்கம் வராமல் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். கண்களை மூடித் தூணில் சாய்ந்திருக்கும் அவர் லேசாகக் கண்ணைத்திறந்தபோது கால்மாட்டில் மகள் வந்து அமர்ந்திருப்பதைக் கண்டு துணுக்குறுகிறார்.
“என்னம்மா முக்தா?பாதி ராத்திரியாகப் போறதே? ஏன் படுக்கப்போகாம இங்கே வந்து உக்காந்துண்டிருக்கே?”
“உங்ககிட்டே உக்கார்ந்திருந்தால் பாதுகாப்பாய்த் தோண்றது அப்பா”
கதையின் இந்த வரியை என்னால் வாசித்துக் கடக்கவே முடியவில்லை. முன்னர் எளிதாகக் கடந்த வரிகளை இப்போது கடக்க முடியவில்லை. நம் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இந்த தேசத்தில் இந்தப் பூமியில் எங்கேனும் இருக்கிறதா? பெற்ற தகப்பனே மகளை இம்சிக்கும் எத்தனை கதைகளை நாம் கேட்டுவிட்டோம்? நாம் ஒரு சுடுசொல்லும் சொல்லாமல் செல்லமாக வளர்த்த நம் பெண்மக்களைக் கட்டிக்கொடுத்துப் போன இடத்தில் அவர்கள் முகத்திலும் நெஞ்சிலுமாக ஏந்திக் கொண்டுவரும் வெந்த சொற்களின் சூட்டை ஒரு கணம் நினைத்துப்பார்த்தால்கூட  இந்த வரியைக் கடக்க முடியாதுதானே? வயதும், வாழ்க்கை கொடுக்கும் அடிகளும் முன்னர் சாதாரணமாகப்பட்ட வரிகளைக் கூட உணர்வேற்றம் பெற்றவையாக மாற்றி விடுகின்றன.
தொடரும்….

Related posts