You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம்-11 அவன் காகிதத்தில் வர்ணம் பூசிய பனைத்தொப்பியுடன் வருகிறான்…

ச. முருகபூபதி

   யாசகர்களையும் பித்தமேறிய அனாதைகளையும் கூவி விற்றலையும் தெருவோர வியாபாரிகளை குப்பை சுமந்தலையும் தெருவோர மனிதர்களையும் குருடர்களையும் ஊமைகளையும் குடிகாரர்களையும் அரவாணிகளையும் பெற்றோர்களையும் உறவுக்காரர்களையும் தன் வயது ஒத்த ஜீவன்களாக தன் உலகு சார்ந்த கனவுலகவாசிகளாக என்றும் மதிப்பது இப்பூமியின் கடவுள்களான குழந்தைகளே. பழகும் விதத்திற்குள் இருக்கும் குழந்தமையைக் கண்டுவிட்ட அவர்கள் அதனால் வசீகரப்பட்டு அடக்கோழிபோல ஒரே இடத்தை சுற்றிச்சுற்றி பெரியவர்களையும் தளிர் மனிதர்களாக்கி விடுகிறார்கள். பெற்றோர்களும் வயோதிகர்களும் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் தனக்குப் பிடித்த குழந்தையைத் தேர்வு செய்து அவர்களை மட்டும் கிடையாய்க் கிடந்து கொஞ்சி மற்ற குழந்தைகள் தனிமைப்பட்டு கண்ணீர் சிந்த வைக்கவும் செய்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட பெரியவர¢களையும் பெற்றோர்களையும் தொலைக் காட்சிப் பெட்டி பெத்துப் போட்ட முட்டாள்கள் என்பேன். வடிவமைக்கப்பட்ட நேர்த்தியும் அழகும் அடக்கும் நேர்மையும் சொல்லிக் கொடுக்கும் டிவிபெட்டி இவற்றிற்குள் அடி நரம்பாக சந்தேகம், வன்முறை, வெறுப்பு இதனையே தன் மூச்சாக வைத்திருக்கிறது. குழந்தைகளிடம் பேசுவது குறைந்து சதா தொலைக்காட்சிப் பாத்திரங்களோடு உணர்வு பொங்கப் பேசுவது அதனையே குழந்தைகளிடம் பேசுவது பெரியவர்கள் போல் குழந்தைகள் மறு மொழி பேசும்போது கைதட்டி உற்சாகப்படுத்தி அவர்களையும் டி.வி.க்குடிகளாக மாற்றிய பிறகே தன் வெற்றியை உறுதி செய்கின்றார்கள். தன் அதிக பட்ச கனவு மனிதன் டி.வி.யில் வரும் நாயகன் நாயகி அவர்கள் வழி நடத்தும் போட்டிகளே. புதிய புதிய புத்தகங்கள், பொம்மைகள், செடி வகைகள், பறவைகள் பாடல்கள், கதைகள், விடுகதைகள் மீது சதா வசீகரிக்கப்பட்டு அவற்றைத் தேடி ஏங்கித் திரியும் குழந்தைகளின் மனதை யார் உணரக்கூடும்?

என் தோழி ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர்களது கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் பல வினோத சம்பவங்களை விவரித்துக் கொண்டிருந்தார். தோழியின் தகப்பனார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. சதா பண வரவுகளையும் நிலம் வாங்குவதையும் பைத்தியமாகச் செய்வதாகவும், அதிகாலை 5 மணிக்கே எழுந்து தான் வட்டிக்கு கொடுத்து வாங்கும் பணத்தை எண்ணி எண்ணிப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்வதும் அதுவே இரவில் எல்லோரும் தூங்கியபின் தனியே திரும்பச் செய்வதும் மனநோயின் நீட்சியா எனக் கேட்டாள் தோழி.

ஒரு முறை வீட்டில் மூத்த குழந்தை கிழிந்த காகிதங்களை வைத்துக் கொண்டு தாத்தாவைப் போல செய்து காண்பித்து நடிக்க கோபமான தாத்தா திமிர்பிடித்த குழந்தை என பட்டம் சுமத்தி இப்பவரை அக்குழந்தையை ஏதாவது காரணம் சொல்லிச் சொல்லி பெரியவர்களை வெறுக்கும் குழந்தையாகவே மாற்றிவிட்டவர் இந்தப் பணத்திமிர்பிடித்த பெரியவர் என அழுத தோழி சதா தொலைக் காட்சிப் பெட்டிக்குள் தம் தலைகளை நுழைத்து சவமாகிவிடுகிறார்கள். பலமுறை நானும் டி.வி.யாகவே மாறிவிடுகிறேன் எனப் புலம்பினாள். சாதித் திமிர்பிடித்த தன் பெற்றோர்கள் தம் உறவுக்காரர்கள் செய்யும் வட்டித் தொழிலின் நிழலைக் குழந்தைகளுக்கும் பூசிவிடுவார்களோ என மனம் நொந்து இதனைப் பூரண குணமாக்கும் யோசனைகள் சொல் என்றாள். music, dance, games விதவிதமான மனிதர்களைப் பார்ப்பது இப்படி எங்காவது அழைத்துப் போ, எல்லாவற்றையும் கதைகளாக்கி சிந்தனை முறைக்குள் புது ரத்தம் ஓடச் செய், தேவைப்பட்டால் மாதாமாதம் ஒருமுறை உன் குழந்தைகளுக்கு நானே கதை சொல்ல வருகிறேன் என்றும், குழந்தைகள் நம்மைக் காப்பாற்றுவார்கள், தைரியத்தையும் நம்பிக்கையையும் குழந்தைகளிடமிருந்தே எடுத்துக்கொள் என்றேன். அரசு அதிகாரிப் பெற்றோர்களின் பெரும்பாலான ஆசை ஐ பிஎஸ், கலெக்டர் இது தான். போதாக்குறைக்கு கலெக்டராக வந்த பலரும் வெற்று வார்த்தைகளால் பக்கங்களை நிரப்பி புத்தகமாக்கி எல்லோரையும் கலெக்டராகும்படி புலம்புகிறார்கள். இது நம் சமூகத்தில் அழிய வேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் எளியோரின் குரல் வளை நெரிக்கப்பட்டு முழி கண் குருடர்களாக அரசின் அனைத்து செயல்களையும் போற்றும் மக்கள் பெருகிவிடுவார்கள்.

   அன்று விடுதலைப் போராட்டக் காலவெளியில் நாடகக்கலைஞன் மதுரகவி பாஸ்கரதாஸின் பாடல்கள் எளிய சொற்களால், பதங்களால் சாஸ்திரியமும் பூர்வ இசையும் இணைந்து கொடுக்கப்பட்டதால் அவை பட்டிதொட்டியெங்கும் எளியோர்களின் நரம்புகளுக்குள் தாவி அலைய ஆரம்பித்தது. அதனாலேயே அவர் பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்று பலராலும் அழைக்கப்பட்டார். பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகளின் பக்கங்களைத் திறக்கத்திறக்க முன் சொல்லப்பட்ட யாசகர்கள் பைத்தியக்காரர்கள் என விளிம்பு நிலை மனிதர்கள் பலரும் கலைஞனின் கிராம நிலத்தில் கதாபாத்திரங்களாக உருப்பெற்று அலைகிறார்கள். வெகுநேரம் கண்ணாடியுடன் உரையாடுபவர்களும் தெருவோர விளக்குத்தூண்களுக்கு மழையில் குடைப்பிடிப்பவர்களும் சென்னை மவுண்ட் ரோட்டில் திரிகிற குதிரைகளுக்கு புல்லுக்கட்டுகளுடன் வருபவர்களும் மதுரை நகர வீதியில் அழுக்குப் பொதி மேல் ஏறி நின்று கரிபூசிய ஒப்பனையில் மன அழுத்த வாக்குகளைப் பாடுபவர்களும் குற்றால மலைச்சாரலில் அருவிக்கருகில் இரவு நேரங்களில் குளிரில் நடுங்கிய குரங்குகளுக்கு தன் சால்வையைப் போர்த்திய பெண்மணியும் யாசகர்கள் கூட்டத்திலிருந்து கிளம்பி வந்த நாடக நடிகர்கள் என அவரது நாட்குறிப்பில் புனைவின் அதிதீவிரத்தை விதைகளாக பக்கம் பக்கமாய்த் தூவி வைத்திருக்கிறார்.

   ஒருமுறை பள்ளிக்குழந்தைகளிடம் யாசகர்கள் பைத்தியக்காரர்கள் குறித்த உரையாடலைத் துவங்கியபோது கதையின் பல்வேறு வாசல்கள் திறந்ததோடு எந்தக் குழந்தைகளிடமும் பொதுப்புத்தகத்தைச் சார்ந்த பெரியவர்களின் பார்வையே இல்லாது தனித்துவமான படைப்புமனநிலைக்கு ஒப்பான மன ஓட்டங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் நாச்சியார் எனும் குழந்தை தன் மூத்த சகோதரிக்கு வயது 23 என்றும் இதுநாள்வரை பாவாடை சட்டை தவிர்த்து வேறு எந்த உடையும் விரும்பியதில்லை எனவும், முதல் வகுப்பு பிள்ளைகள் முதல் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் வரை உள்ள குழந்தைகளோடு மட்டுமே தன் உரையாடலையும் விளையாட்டையும் பகிர்ந்து கொள்வாளாம். சனிக்கிழமை, மாலை நேரங்களில் பல்வேறு குழந்தைகளுக்காகவும் கிழிந்த சேலைத் துணிகளைக் கொண்டு செய்த பொம்மைகளைப் பரிசாகத்தருவதும், வீட்டாரிடம் அடம்பிடித்து கொலுக்கட்டை செய்து கொடுத்துப் பிறர் கூடி விளையாட அந்த உற்சாக கூச்சலுக்குள்ளிருந்து தனியே பாடுவதும் அவளுக்கு விருப்பமான செயலாம். யாரும் தன்னுடன் இல்லாதபோது நந்தவனத்துக் கிணற்றில் தற்கொலை செய்த பல பெண்களுக்காக கிணற்றுச்சுவர் அணைத்து தாலாட்டுப் பாடி ரகசியமாக அழுவதை ஆடுமேய்க்கும் கீதாரிகள் கதையாய்ச் சொல்வார்களாம். ஒரு நாள் கிணற்றடியிலிருந்து பிரியும் வண்டிமாட்டுப் பாதையில் மயில் கூட்டத்தினை விரட்டித் தேடிப் போனவள் இதுநாள் வரைக்கும் திரும்பவே இல்லையாம். ஊர்க்கோடாங்கி சொன்ன குறி வாக்கில் அவள் கரிசல்நிலம் தாண்டிப் போகவில்லை எனவும், ஊர்ப் பெண் தெய்வங்களான ராக்காயி, பேச்சி, வனராக்கு மூவரின் நிழல் தொடர்ந்து பங்குனிப் பொங்கலுக்குள் திரும்ப வருவாள் என்று அருளாடி கதை போட்டாராம். நாச்சியாரின் அனுபவத்துக்குள் தீர்க்கமான நிழல்கள் சுழன்றாடிக் கொண்டிருந்தது கிராமப்புறம் சார்ந்த ஒவ்வொரு குழந்தைகளிடமும் நாம் பெரியவர் என்ற திமிர் ஒளிந்து உரையாட நிகழ்கிறபோது நாச்சியாரை ஒவ்வொருவரிடமும் உணர முடியும்.

   முத்துமாடன் என்ற நான்காம் வகுப்பு மாணவன் சொன்னபோது தன் கிராமத்து கண்மாயின் எதிரெதிர் திசையில் பாலாண்டி, ராமகிட்டு என்ற இரு இளைஞர்கள் தன்னுடனே பேசித் திரிவார்களாம். இருவரும் ஒருபோதும் நேரடியாக சந்தித்துக் கொண்டதில்லையாம். ராமகிட்டுவிடம் தினமும் நன்கு சலவை செய்யப்பட்ட ஆடைகளுடனும், நெற்றி நிறைய விபூதியுடனும், கைகளில் சில வெற்றுக் காகிதங்களும் உடைந்த சில பென்சில்களும் இருக்குமாம். ஆனால் ஒரு போதும் எழுதியதில்லையாம். அவருடைய பார்வை நோக்கியவர்கள் பலரும் கேட்காமலேயே ராமகிட்டுக்கு காசுகளை அள்ளித்தருவார்களாம். ஆளில்லாதபோது மடத்துக்குள் இடுப்பில் கட்டி வைத்திருந்த காசுகளை அள்ளி வட்டமாக அமுக்கி வைத்துவிட்டுப் போய்விடுவாராம். அதுபோல பாலாண்டி அழுக்குத் தோற்றத்துடன் இருந்தாலும் சிரித்தால் கன்னத்தில் குழி விழுமாம். களை எடுக்கப்போகும் பெண்கள் பலரும் அவன் சிரிப்பை ஒளிந்து நின்று பார்த்துப் போவார்களாம். ஊர் நடு கல்லில் பல நிறங்கொண்ட சாக்பீஸ் கொண்டு விரும்பிய தமிழ் எழுத்துக்களை பல வடிவங்களில் எழுதுவதும் அவ்வெழுத்துக்களின் மீது பூச்சிகளை வரைந்து சிரித்தபடியே எல்லா எழுத்துக்களையும் பூச்சிகள் தின்னட்டும் என்று கைதட்டிச்சிரிப்பானாம்.

குழந்தைகளைக் கண்டால் ஓடி வந்து உரிமையோடு தின்பண்டங்கள் வாங்கித் தின்பானாம். கிராமத்தில் எந்தக் குழந்தையும் அவனுக்கு கொடுக்க மறுப்பதில்லையாம். ஒருநாள் சமவயதுக் குழந்தைகளில் பலரும் கதைசொல்லி நடித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாய் அங்கு வந்த ராமகிட்டும் பாலாண்டியும் எதிரெதிரே அமைதியாக உட்கார்ந்து அவர்களது நடிப்பினூடாக கதை கேட்கத்துவங்கி இருவரும் ஒரே நேரத்தில் கண்கலங்கி புன்சிரிப்புடன் விசும்பினராம். முத்துமாடன் சொன்ன அந்தக் கதையின் சுருக்கம் இதுதான். ‘‘சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு சீனாவின் கிழக்குப் பகுதியிலிருந்து குறிப்பாக கொரியாவிலிருந்துதான் ஜப்பானுக்கு நெல் அறிமுகமானதாகத் தெரிகிறது. விரைவிலேயே அரிசி ஜப்பானிய மக்களின் வாழ்க்கையில் முழுமையாக ஒன்றிணைந்துவிட்டது. எப்படி வீட்டிலுள்ள முதியவர்களை மரியாதை செய்கிறோமோ அந்த அளவுக்கு மரியாதைக்குரியது நெல் என்று ஜப்பானியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். யாராவது அரிசியை வீணாக்கினால் அவர்கள் குருடாகி நரகத்துக்குப் போவார்கள் அல்லது மண்ணில் விழுந்து தூள் தூளாகிப் போவார்கள் என்றும் சொல்லி பயமுறுத்தி வைப்பார்களாம். வைக்கோலினால் திரித்த கயிறுதான் ஜப்பானிய புத்தாண்டுக்கு உரிய அடையாளமாக இன்றைக்கும் உள்ளது.

   ஜப்பானியர்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல்தேதி, பதினைந்தாம் தேதி, மாதத்தின் கடைசித்தேதி பண்டிகை நாட்களில் சிவப்பு ரக அரிசியை பீன்ஸ் பயிரோடு சேர்த்து சமைத்து அனைத்து மக்களுடன் சமமாகப் பகிர்ந்து உண்ணுவது வழக்கமாகும். ஆனால் நம்ம கம்மாக்குள்ள வேலிக்கருவ பரவிக்கெடக்கு தண்ணியில்லை. நாம என்ன செய்யட்டும் முளைப்பாரித் திருவிழாவுக்கு மட்டும் டிராக்டரில் தண்ணீர் கொண்டாந்து குட்டையில் நிரப்பி முளைச்செடிகளைப் போட்டு சடங்கு செய்யுறோம். ராக்காயி, பேச்சி, வனராக்கு இப்படி கதை முடிய கடைசியில் ஏழாம் வகுப்பு கர்ணன் மருளேரி திங்கு திங்குவென ஆடிக்குதித்தானாம். ராமகிட்டு, பாலாண்டியின் ஒடிந்து வீழ்ந்திறங்கும் கண்ணீரின் நிலத்தில் சுயமரணம் செய்து கொண்ட இந்திய விவசாயிகள் பாடிக் கொண்டிருக்கக்கூடும். எங்களது மணல் மகுடி நாடகக்குழுவின் குகைமரவாசிகள் நாடகத்தின் இறுதிக் காட்சியில் ஒரு விவசாயியின் குரலாக நடிக்கும் நடிகனின் வசனமிது ‘‘தன்னை விட்டுப் பிரிந்துபோன தன் கன்றுக் குட்டிகளைத் தேடிப் போதையும், பாதையும் பாடலுமாகக் கேவித்திரிந்த மாடுமேய்க்கும் வயோதிக விவசாயி பற்றி நான் சொல்லட்டுமா… மாட்டுத் தொழுவத்தில் முறுக்கேறிய அழுகையில் பாடும் அவரது குரலே நம் கால அரசியல்’’ என்ற குரலைத் தொடர்ந்து பேரெழுச்சிப்பாடல் எழுந்து காட்சி முடியும்.

குலசேகரப்பட்டினம் தசரா வேஷத்திருவிழாவில் பைத்திய வேடமிட்டு வந்தவர்கள் waste என ஒதுக்கப்பட்ட பொருட்களை ஆபரணமாகச் சூடிவந்தனர். பொதுப்புத்தியும் சினிமாவும் சொல்கிற கந்தல் உடைகள் அங்கு கிடையாது. சில இடங்களில் மட்டுமே துவாரங்கள் இருந்தன. பைத்திய வேட மேற்றவர்கள் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்தே பைத்திய குணாம்சம் அமையுமென்பதை அங்கு உணர்ந்தேன். பள்ளிச் சிறுவர்கள் பலர் பைத்திய வேடமிட்டுக் கைகளில் பல்வேறு விதமான விளக்கமாறுகளுடன் குழுவாக ஆடி நீண்ட மௌனத்தில் ஒவ்வொரு முகத்தையும் ஒவ்வொரு உணர்ச்சியில் படித்தபடி திரும்பவும் குழுவாக குதித்து சிரித்து ஆடி திரும்பவும் மௌனத்தில் கடந்து போகிறார்கள். இவர்களைப் பின் தொடர்ந்த நான், இரண்டு நாட்களும் அதே வேடம், அதே குணம் தொடர்ந்ததைக் கண்டேன். ஆயிரக்கணக்கானவர்கள் வேடமிட்டுவரும் இத்திருவிழா நடிகனாகத் தன்னை உணர்ந்தவர் ஒவ்வொருவரும் போய்ப்படிக்கும் திருவிழா என்பேன். குறிப்பாக நாடக நிலத்தில் அலைவுறுபவர்களுக்கு மிக அவசியம்.

ஒருமுறை குழந்தைகளிடம் பேனா பென்சில் தவிர்த்து பிற எழுதும் பொருட்களைக் கண்டுபிடித்து எழுதும் விளையாட்டை நாடகமாக்கினோம். இறுதியில் நூல்கள், எழுத்து போன்றவை பற்றிய கதைகளை விரிவாகப் பேசினேன். பின் அவை நாடகமாகவும் மாறியது. வாத்து இறகைச் சிறுகத்தியால் திருக்கி, அதன் நுனியைக் கூராக்கி, எழுதுவதற்குப் பயன்படுத்தினார்கள். எழுதும்போது மை ஒரு சீராக சன்னமாகவும் நுனிக்குப் போக வேண்டும். இதற்கு ஒரு கட்டுக்கால்வாய் அடைக்கவே பேனா நுனி நிப்பின் முன்பகுதியை ரெண்டாகப் பிளந்திருக்கின்றனர்.

   மை ஓட்டம் போதவில்லை என்றால் காகிதத்த¤ல் நுனியை அழுத்திக் கால்வாய் பிளவுப்பட்ட நுனியால் எழுத முடியும். பண்டைய நூல்களான பனை ஓலையெல்லாம் செய்வதே ஒரு கலை. ஓலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து வெயிலில் உலர்த்தி மென்மையாக்குவார்கள். பனியில் கிடத்தி மென்மையுறச் செய்வதைப் பனிப்பாடம் என்றனர். எழுத்தாணியால் எழுதப் பெற்ற சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எழுத்துக்களைத் தெளிவாக இனம் கண்டு பிடிக்கவும், மஞ்சள், ஊமத்தஞ்சாறு, வசம்புக்கரி முதலியவற்றைப் பூசுவதும் உண்டு. அன்று ஏட்டுப் புத்தகத்தில் முன்னும், பின்னும் சில வெற்று ஏடுகளையும் சேர்த்தே கட்டிய¤ருப்பர். நான் இப்படியே பாடம் நடத்துவதுபோல ஒப்பித்துக் கொண்டே போக, அருணா என்ற 5ஆம் வகுப்பு மாணவி. ‘‘அண்ணே போதும்… இதெ நாங்க நாடகமாகப் போடப் போறோம் கீணீவீt ” என்று குழுவாய் மரத்தடிக்கு ஓடிப் போய் நொடிகளில் திரும்ப வந்து நாடகம் நிகழ்த்தினர். அவற்றில் பாடம் நடத்துவதுபோல ஒருவர் எவருமின்றி அனாதையாகப் புலம்பித்திரிகிறார். அவரை அழைத்து சிலர் கதை சொல்லிக் கொடுத்து கோமாளியாக மாற்றுகிறார்கள். அவன் காகிதத்தில் வர்ணம் பூசிய பனைத் தொப்பியுடன் வருகிறான். வாத்து இறகுகளில் பதுங்கி இருந்த முதல் பேனாவைத் தேடி அலைகிறான். எழுத்துக்களை கைவிட்டுப் போன பூச்சிகளைக் கூவி அழைக்கிறான். கடைசியில் தன் உடலில் விதவிதமாக எழுதி நானே இந்த உலகின் முதல் புத்தகம் என்கிறான். மணி என்ற 5ம் வகுப்பு மாணவன் உடலில் எழுதிக் கொண்ட மாணவனின் எழுத்துக்களை மோப்பமிட்டு வாசனை குளித்த புதிய கதை துவங்கியவுடன் நாடகம் முடிந்துவிடுகிறது.

   ஆதியில் தன் கதையை மனிதன் தன் உடலில் சித்திரமாக்கினான். இதன் தொடர்ச்சியாக இளம் பருவத்திலேயே பச்சை குத்திக் கொள்ளத் தொடங்குவதும் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஓவியங்களை வரைந்து பச்சைகுத்திக் கொள்வதும் பல இனக்குழுக்களிடமும் இயல்பாயிருந்தன. இத்தகைய கலை உடல்மிக்கவர்கள் நரையும் குறையும் மூப்பும் எய்திய நிலையில் சித்திரமாகக் காட்சியளித்தனர். பாலனேசியாவில் வாழும் பழங்குடிகள் பச்சை குத்துவதை அதீதமாகக்கைக் கொண்டிருந்தனர். கடவுளரைக் குறிக்கும் முன்கை பச்சை குத்திக் கொள்ளும் உரிமை குலத்தலைவனுக்கு உரியதாகும். கோடுகளாலும் சதுரங்களாலுமான வடிவங்களை வீரர்கள் பச்சைக் குத்திக் கொள்வர். கரிய இலை வரிசைக் கூற்றுகளும் வெண்மையான வில் சேர்ந்து அமைந்த வடிவத்தையும் வீரர்கள் பச்சைக் குத்திக் கொள்வர். சதைப்பற்றி மனிதனின் துருத்திக் கொண்டிருக்கும் விலா எலும்புகளுடன் காட்சி தந்தால் அச்சித்திரம் பஞ்சத்தைக் குறித்தது. காற்றால் உப்பிய கப்பற்பாய் காற்றைக் குறிப்பதாயிற்று. பாம்புக்கும் தேளுக்கும் சாவு இல்லை என்று நம்பியவர் அதன் உருவங்களைத் தம் உடலில் வரைந்து கொண்டனர். பின் அவை வாழ்வின் குறியீடானது. சிங்கமோ கழுகோ வரைவது அவை வீரத்தின் குறியீடானது. கடலாமையால் நற்பேறு உண்டாகுமென்று நம்பிய அமெரிந்தியர்கள் இன்பத்தைக் காட்டுவதற்கு மனித உருவுக்கு அருகில் கடலாமையை வரைந்தனர். குழந்தைகளும் கலைஞர்களும் இப்பூமியில் இருக்கும் வரை விளிம்பு நிலை மனிதர்களும் மனித நிலை தாண்டிய அனைத்து உயிரினங்களும் தம் இருப்பை புனைவு நிலத்தில் பத்திரப்படுத்தி எல்லோருக்கும் கடத்திக் கொண்டிருப்பர்.

Related posts