You are here
நூல் அறிமுகம் 

பாட்டிகளின் குரல்வளைகளில் கசிகின்ற கதைகள்…

கமலாலயன்

நென்மேனி மேட்டுப் பட்டிக்கும், திண்டுக்கல்லுக்கு மிடையே ஓடும் வண்டிப்பாதை, வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு ஊர்களின் வழியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. பயண வழியினூடே மதுரையையடுத்த கீழக்குயில்குடி சமணமலையின் பாறைகள் சமைத்த செட்டிப்புடவினருகே, மாடுகள் இளைப்பாற வேணுமென வண்டியை நிறுத்திவிட்டு அந்த மலைக்குகையொன்றில் ஓய்வாக உடலைக் கிடத்தியிருக்கிறார் கோணங்கி என்கிற இளங்கோ. இந்த நவீன கலைஞன், எதற்கு இப்படிப் பழைய மாட்டு வண்டியிலேறி நொம்பலப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் என்ற கரிசனத்துடன் ஜாகிர்ராஜா வேறு வேறு பேருந்துகளேறிப் பயணப்பட்டுப் போய் கோணங்கியைச் சந்தித்திருக்கிறார். இரண்டு பேரும் சமதையான பலசாலிகள். எதைக் கேட்டால் தான் எதிர்பார்க்கிற பதில் கிடைக்குமென்கிற சூட்சுமம் அறிந்த ஜாகிர்ராஜா கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.

   தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களுக்கென்று நீண்ட காலமாய் ஒரு மரபான நேர்கோட்டு மொழியும், தேய்ந்து பழையவையாகிப் போய்விட்ட சொல்லாடல்களுமே புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. இவற்றிலிருந்து வேறுபட்டு, தனித்தன்மையும் நவீனத்துவமும் வாய்ந்த மொழியைத் தமிழுக்கு அறிமுகம் செய்து தொடர்ந்து அதை வளர்த்தெடுத்து வருபவர்களுள் முக்கியமான ஓர் ஆளுமையாக கோணங்கியைக் கூறலாம்.

   கோவில்பட்டி வட்டாரத்துக் கரிசல் மண்ணில் எழுபதுகளில் நிகழ்ந்த ஒரு கலாச்சார விளைச்சலின் பிரவாகத்தில் மிதந்து மூழ்கி, முக்குளித்துப் பின் தொடர்ந்து அதன் வெள்ளப்பெருக்கின் போதும் சரி, வறட்சிகளின் போதும் சரி, என்னை ஒரு சக பயணியாகக் கருதிக்கொண்டு ஆனால் ஒதுங்கி வாழ்கிறவன் நான். கோணங்கியின் முதற்தொகுதியான ‘மதினிமார்கள் கதை’யைப் படித்தபோது, அத்தொகுப்புக் கதைகளின் வழியே அறிமுகமான உலகம் முற்றிலும் புதியதாயிருந்தது. அதே எழுபதுகளில் அத்தொகுப்பும், ச.தமிழ்ச் செல்வனின் ‘வெயிலோடு போய்’ மற்றும் உதயசங்கரின் ‘யாவர் வீட்டிலும்..’ ஆகிய இரு தொகுப்புகளும் வாசிக்க வாசிக்க, அவை என் அன்றைய மன உலகிற்குள் விளைவித்த மாயங்கள் இன்றளவும் சொல்லித் தீராதவை; சொற்களில் தீராதவையுங் கூடத்தான்.

ந. முத்துசாமியின் ‘அன்று பூட்டிய வண்டி’ தான் இளங்கோவைக் கோணங்கி ஆக்கியது என்று இந்நேர்காணலில் ஒரு வரி வருகிறது. ‘வெயிலோடு போய்’ தொகுப்பின் அட்டைப்படத்தில் இசக்கி எடுத்த ஒரு புகைப்படம் அணி செய்கிறது. அதில் புழுதி படிந்த கிராமத்துத் தெரு வழியே நம்மை நோக்கி வருகிற ஒரு மாட்டுவண்டி, கோணங்கியின் நேர்காணல் நெடுக வந்து போகிற அந்த வண்டிப்பாதையின் வழியேதான் மதினிமார்கள் வாக்கப்பட்ட ஊர்களையெல்லாம் நமக்குக் காட்டிக் கொண்டே செல்கிறது. இந்த நேர்காணலே கூட ஒரு வகையில் அந்த வண்டிப்பாதையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கோணங்கி என்கிற இளங்கோவின் பால்யகால சகி தனலட்சுமி, உடல் நலமில்லாமற் போய், தூரத்துக் குடியிலிருந்து கடம்பூர் வழியாக கோவில்பட்டி, நல்லி, சாத்தூரில் இறங்கியது வரையான பயணம் நிகழ்ந்தது அதே பாதையில்தான். நிலவு, அரைகுறையான ஒரு பின்னிரவு நேர வெளிச்சத்தைச் சன்னமாகப் பொழிந்து கொண்டிருந்த ஓர் இரவில் அவளுடைய உயிரற்ற உடலைச் சுமந்து சென்ற இரயிலை, அந்த மாட்டுவண்டிப் பாதையிலிருந்தவாறு இளங்கோ பார்த்திருக்கிறார். தன்னுடைய 19வது வயதில் நிலவை நோக்கிச் சென்று விட்ட அந்தப் பெண்ணைத்தான் கடந்த 36 ஆண்டுகளாகத் தன் மாட்டு வண்டியில் பின் தொடர்ந்துபோய்க் கொண்டிருக்கிறார் அவர். பால்யகாலத்து நினைவுகளை மீட்டெடுத்துத் தந்திருக்கிற கோணங்கியின் நேர்காணலை எழுதி முடிக்கிற வரையிலும் ஜாகிர்ராஜாவின் பேனாவில் ஊறித் ததும்பிப் பின் சொற்றொடர்களாய்ப் பெருகி ஓடியிருப்பவை கோணங்கி அன்று உதிர்த்த கண்ணீர்த் துளிகளாய்த் தான் இருந்திருக்க வேண்டும்.

பெரிய வயலின் நெல்மணிகள், கோணங்கியின் கதை முத்துகளைத் தம் முன் ஒளித்து வைத்திருக்கும் சிப்பிகளாய் விளைந்து கிடக்கின்றன. அந்த வயலில், ஆதக்காள் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு கைகளை அசைக்கையில், ஊர் மாடுகள் பிணையலில் சுற்றி வருகின்றன. நெல் குவிந்து கொண்டேயிருக்கிறது. பெரிய வயல் அறுவடைகளின் போதெல்லாம் ஒரு பெண்மகவின் பிறப்பு நிகழ்ந்திருப்பதாக ஒரு குறிப்பு வருகிறது. வாசித்துக் கொண்டே வருகையில், பல இடங்களில் உயிர்க்குலையே நடுங்கும்படியான உணர்வுகள் கொட்டிக்கிடக்கின்றன. இயற்கைக்கும், பெண்களுக்குமான உறவு குறித்து நாம் அறிந்தது மிகவும் சொற்பமே என்ற எண்ணம் வலுப்படுகிறது. கோணங்கியின் கதைகளில் கரிசக் காட்டு வெய்யிலும், குளுமை பொழிந்து வெப்பம் தணிவிக்கும் வெள்ளரிக்காய்களும் ஊடாடிப் பின்னிக் கிடக்கின்றன. நென்மேனி, வன்னிமடைக் கண்மாய்களுக்குள் கோணங்கியோடும், ஜாகிர்ராஜாவோடும் போய் வெள்ளரிப் பிஞ்சுகளையும், காய்கள் பழங்களையும் தூக்கிச் சுமந்தவாறு உடன் வருகிற சேக்காளிகளாக நாம் ஆகிவிடுவதை உணர்கிறோம்.

   மதுரகவி பாஸ்தரதாஸ், சங்கரதாஸ் சுவாமிகள், விளாத்திகுளம் நல்லப்பசாமிகள் ஆகிய மும்மூர்த்திகள் கரிசல்காட்டு இசைமேதைகள் என்கிறார் கோணங்கி. நாடகம், திரைத்துறை சார்ந்து பெரும் புகழுடன் வாய்ந்த முதல் இருவரையும் குறித்து நாம் ஓரளவிற்கேனும் அறிந்து வைத்திருக்கிறோம். நல்லப்ப சுவாமிகளின் இசைஞானம் குறித்த பதிவைப் படிக்கும்போது, தமிழ்ச்சமூகத்தின் மறதியை, அலட்சியத்தை அறியாமையை எண்ணி குற்ற உணர்வும் இயலாமை ஆதங்கமும் மேலிட்டு மனம் குமைந்தது.

   காருகுறிச்சி அருணாசலத்தின் இசை மேதைமை உலகறிந்தது. ஆனால், அவரின் நாயன வாசிப்பைத் தன் கையசைவுகளால் ஆற்றுப் படுத்திய ஆளுமையாக சங்கரதாஸ் சுவாமிகள் இருந்த தகவல் உலுக்குகிறது. விளாத்திகுளம் ராஜபார்ட் சேது, சங்கரன்கோயில் நையாண்டி மேள நாயனக் கலைஞன் சம்பாரி, கரிவலம் வந்த நல்லூர் சிதம்பரச் சாமிகள், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற பல இசையாளுமைகளின் ஊர்களின் வழியே கோணங்கியின் வண்டிப்பாதை ஓடிக் கொண்டேயிருக்கிறது.

   சின்ன வயசிலேயே வீட்டை விட்டுக் கள்ள ரயிலேறி மெட்ராஸ் வந்த சாகசம், கோணங்கிக்கு ஆதிக்கதை சொல்லிகளான சுப்புத்தாய் அத்தை, பாட்டிகள் ஆதக்காள், மாரியம்மாள், பம்பை போன்ற முன்னோர்கள் ஊட்டிய கதைஞானப் பால், முக வீணைக் கலைஞர் காரணாம்பட்டு கணேசனார், செல்லையா நாயக்கர் வீட்டு நாய், போடிநாயக்கனூர்ப் பாஸஞ்சர் ரயிலின் கரி எஞ்சின், சுடுகாட்டுப் புளியமர உச்சியில் கோணங்கியும் நண்பர்களும் உட்காரத் தோதாயிருந்த ‘பா சா இ ரா’ கொப்பு, எப்போது சென்றாலும் உறுமி மேளமும், குலவைச் சத்தமுமாய் இருக்கிற வழிவிட்ட அய்யனார்கோயில், ‘கல்குதிரை’யில் ஏறிச் சவாரி செய்த மார்க்வெஸ், அம்மா சரஸ்வத¤ எழுதிய ஆனால் திறக்கப்படாமலே மறைந்து போன அந்தப் பழைய ஒரு குயர் நோட்டு, பூமணியின் ‘வெக்கை’, பிறகு ‘அஞ்ஞாடி’ போன்ற நாவல்கள் பிற சமகாலத்துக் கரிசல்காட்டு எழுத்துக் கலைஞர்கள் எழுதிய கோணங்கியைப் பாதித்த பல கதைகள்… இப்படியே முடிவற்று நீள்கிறது கோணங்கியின் ஞாபகச் சரடு.

   கோணங்கியின் மொழிநடை குறித்துப் பல்வேறு விதமான கருத்துகள் நமக்கு இருக்கின்றன. நேர்கோட்டில் செல்கிற வழமையான மொழிநடையைத் தான் காலங்காலமாக நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஓர் ஊரிலிருந்து நேராக இன்னோர் ஊருக்குப் போய்ச் சேர்ந்து விடுகிற எக்ஸ்ப்ரஸ் ஹைவேயாக, புறவழிச¢ சாலையாக அதைக் காண்கிறார் கோணங்கி. வளைந்தும் நெளிந்தும் – ஒடுங்கியும் அகன்றும் சின்னச் சின்ன குக்கிராமங்களின் தெருக்களினூடேயெல்லாம் பயணிக்கிற தனது சொல்லாடல் வண்டிப்பாதையைத் தெம்மாங்குப் பாடலை ஒப்பிடுகிறார் அவர். நேர்கோடு என்பது கிலோ மீட்டராக மாறி கிளைகளேதுமற்ற மொட்டை மரமாகி விடுகிறது. பழைய வண்டிப் பாதைகளில் ‘இத்தனை கல் தொலைவு’ என வழிகாட்டிப் பலகைகளும், சுமைதாங்கிக் கற்களும், வழித்தங்கல் சத்திரங்களும், பசித்த வயிறுகளுக்குக் கம்மங்கூழ் வார்க்கும் கனிந்த உள்ளங்களுமென ஒவ்வொரு கல் தொலைவுக்கும் எல்லாமும் எதிர்ப்படுகின்றன. இவையனைத்தையும் தொலைத்துத் தலைமுழுகி விட்டோமே எனும் குற்றவுணர்வை உண்டாக்கிவிடுகிறார் கோணங்கி.

ஓவியங்களின் உலகம் குறித்து சிற்றிதழ்ச் சூழல், மௌனி, தி.ஜா., புதுமைப்பித்தன் உள்ளிட்ட முன்னோடிகளின் படைப்புகள் மாற்று அரசியலை உள்ளடக்கியிருக்கும் அழகியல், அண்ணன் தமிழ்ச்செல்வனின் கதையுலகம், முருகபூபதியின் நவீன நாடக முயற்சிகள், தனது எதிர்கால இழையோடிப் பெருகிவரும் இசை என்பதாகப் பல தளங்களில் விரிகிறது இந்நேர்காணல்.

கையடக்கப் பதிப்பான ஒரு சிறு நூலின் 80 பக்கங்களுக்குள் நாம் சந்திக்க முடிகிற ஆளுமைகளும், அவர்கள் சாதித்தவற்றைப் பற்றிய சிந்தனைகளும் எண்ணற்றவையாய் இடம் பெற்றிருக்கின்றன. ஜாகிர்ராஜாவின் சொந்தப் படைப்புகளில் போலவே கவித்துவ அழகும் கருத்தாழமுமிக்க சொற்றொடர் வீச்சுகள் இந்நூலின் முன் அட்டையிலிருந்து பின்னட்டை வரை அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து கிடக்கின்றன.

கோணங்கியுடன் உரையாடுகையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கைகளைச் சுழற்றியபடி கண்களின் தீட்சண்யமிக்க ஒளிவீச்சில் நம்மை மனோவசியம் செய்து வெவ்வேறு புனைவுகளின் உலகங்களுக்குள் தூக்கிப் போய்ப் போட்டுவிட்டுப் போகிற மாய வித்தைக்காரராக அவரை உணர்ந்திருக்கிறேன் நான். இந்த நேர்காணல் நெடுக ஜாகிர்ராஜா கோணங்கியுடன் சேர்ந்து மிகவும் கவனமாக ஒரு மாயக் கம்பளத்தில் நம்மையும் அழைத்துப் போய்த் திரும்பக் கொணர்ந்து சேர்த்து விடுகிறார். சித்தர்களின் மொழி பூடகம் நிறைந்தது. அவரவர் மனப்பக்குவத்திற்கேற்பவும், அனுபவ ஞானத்திற்கேற்பவும் பொருள் தரக்கூடிய மொழி அது. ஒரு வகையில் கோணங்கி கதைச்சித்தன். தான் பார்த்த ஒரு சினிமாவின் கதையைத் தன் சொந்தப் புனைவுகளால் உருமாற்றி பத்துப் புதுக்கதைகளாக விரித்துரைக்கும் சிறு வயது ஞாபகங்கள் தொடங்கி, முதிர்ந்த ஒரு மாயயதார்த்தவாதக் கதைசொல்லியின் ஆழமான படைப்பனுபவங்கள் வரை, விரிந்து செல்கிற ஓர் உரையாடலில் பல இடங்களில் கண்கள் குளமாகி மனம் கனத்துவிடச் செய்கிறார் கோணங்கி.

   இந்த நேர்காணலின் உணர்ச்சிமயமான பல பகுதிகளின் நடுவே, ஒரு மின்னல் கீற்றுப் போல பின்வரும் சிந்தனைச் சுடர் ஒளிர்ந்து அசைந்து வெளிச்சக் கீற்றாய்ப் புலப்படுவதைக் காண முடிகிறது.

‘‘எல்லாமே தொலைந்து போன ஒரு சூழலில் படைப்பாளிகள் மட்டும்தான் தொலையாத உலகத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். கவிஞர்கள், சிறுகதையாளர்கள் மிக முக்கியமானவர்கள். இன்னும் அவர்கள் இயங்குவதற்கான மிகப் பெரிய வெளி அவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது. எழுத்தின் வழியாகத்தான் நம்முடைய மொத்தக் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க முடியும். தூங்குகிற மாதிரி, இருப்பில் மூச்சு விடுகிற மாதிரி கலை, கலைஞனின் உடல் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். ஆகையால் எல்லாரையும் விட கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழியாக இருக்க முடியும்.’’

கலைஞர்களின் சமூகப் பங்களிப்பு குறித்த இக்கூற்றுடன் நாம் மிகப் பெருமளவிற்கு உடன்பட முடியும். நமது காலத்தின் படைப்புக் கலைஞர்களுள் தனித்துவமிக்க ஒரு கலைஞன் கோணங்கி. ஜாகிர்ராஜாவோ தமிழ்ச் சமூகத்தின் நடுவே இதுகாறும் அறியப்படாமலேயிருந்த ஓர் உலகின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை இரத்தமும், சதையுமாகக் கீறிப் பிளந்து கவுச்சி வாடையுடன் படைப்புகளில் முன் வைக்கிற ஒரு கலைஞர். இவ்விருவரும் நிகழ்த்திய உரையாடலின் வழியே நாம் பயணப்பட முடிகிற உலகம் வண்ணங்கள் நிறைந்தது. கச்சிதமான வடிவம். குறுகத் தறித்த உரையாடல் கீற்றுகள்…

காது உள்ளவர் கேட்கக் கடவது!

பாட்டியின் குரல்வளையை காப்பாற்றி வைத்திருக்கிறேன் | கோணங்கி நேர்காணல்

சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா | பக். 80 | ரூ. 50 | பாரதி புத்தகாலயம்.

Related posts