You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சுருக்கெழுத்து வருவதற்கு முன்பே சுருக்குத்தமிழ் பேசியவர்கள் எமது வடமாவட்ட மக்கள்

கவிப்பித்தன்

வட்டார வழக்குகளில் வெளிவரும் படைப்புகள் தமிழ் இலக்கிய வெளியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சூழலில், இன்னும் உரிய அடையாளம் பெறாத வடமாவட்ட வழக்காற்றில் களம் அமைத்து தொடர்ந்து படைப்புகளை அளித்துவரும் வெகு சிலரில் கவிப்பித்தனும் ஒருவர். தன் ”இடுக்கி“ சிறுகதைத் தொகுப்பின் மூலம் பயணத்தை துவங்கிய கவிப்பித்தன், பின் ”ஊர்ப்பிடாரி”, ”பிணங்களின் கதை” (2014) என்று தொடர்ந்து பயணித்து, சமீபத்தில் “நீவாநதி” நாவலின் மூலம் புதிய தடத்தை அடைந்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் வாலாஜாவைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பித்தன் முதலில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி, தற்போது அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்துவருகிறார். பள்ளிப்பருவ பொது இலக்கிய ஆர்வம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பு, களப்பணி, அதனூடாக சிறுபத்திரிகை மற்றும் எதார்த்த இலக்கிய வாசிப்பு எனத் தன் இலக்கிய அனுபவங்களை வளர்த்துக்கொண்டவர். தொண்ட வரண்ட தொண்டை மண்டலத்தின் மண்ணும் மனிதர்களுமே இவரது கதைக்களம். இம்மக்களின் வாழ்வை, பண்பாட்டை, ஆழ்மனக் குமுறல்களை, நெருக்கடிகளை உள்ளார்ந்த உணர்வுகளோடு ஒப்பனையற்றுப் பதிவுசெய்துவருகிறார். அடுத்தகட்டமாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கவிப்பித்தனின் “பிணங்களின் கதை“ சிறுகதைத் தொகுப்பு குறித்து சில கேள்விகளும், அவரது பதில்களும்

உங்கள் முன்..

 1. வட மாவட்ட மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் படைப்புகள் மிகக் குறைவு என்பதோடு, அவை ஒருவகை புறக்கணிப்பிற்கு உள்ளாகிறது என்ற தங்களின் ஆதங்கம் நியாமானது. தமிழகத்தின் சமூக-பண்பாட்டு தளத்தில், திராவிட அரசியலின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய இப்பகுதி தற்கால கலை இலக்கியத்தில் அடையாளம் தெரியாமல் போனதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒரு காரணத்தை எனது முந்தைய சிறுகதைத் தொகுப்பான ‘ஊர்ப்பிடாரி’யின் முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தமிழ் பேசப்படுகிறது. அவற்றில் தஞ்சைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் போன்ற தென்மாவட்டத் தமிழ் நமக்கு நெருக்கமான தமிழாக மாறியதற்குக் காரணம் தமிழ்த் திரைப்படங்களும், நமது பத்திரிகைகளும் தான். வட்டார மொழி திரைப்படங்களிலும் பிற படைப்புகளிலும் அச்சேற அல்லது அரங்கேறத் தொடங்கியதுமே அது தென்மாவட்டத் தமிழாகத்தான் அறியப்பட்டது. தொடர்ந்து அது நமது காதுகளிலும், கண்களிலும் விழ விழ அதன் நயம் நம்மை ஈர்க்கத் தொடங்கி, அதன் அழகில் நம்மை இழந்தோம்.

தென்மாவட்டத் தமிழ் இப்படி ஊடகங்களிலும், இதழ்களிலும் இடம் பெற அப்பகுதிப் படைப்பாளிகள் ஊடகங்களில் நிறைந்து இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. திரைப்பட வாய்ப்புகளைத் தேடி சென்னை வந்த தென் மாவட்டப்படைப்பாளிகள் திரைப்படங்களிலும், ஊடகங்களிலும், காலூன்றிய பின்னர் தமது வட்டார மொழிப் படைப்புகளைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்தனர். தமது பகுதியைச் சேர்ந்த படைப்பாளிகளையும் அறிமுகம் செய்து வைத்தனர். ஆனால், வட மாவட்டங்களில் பேசப்படும் தமிழ் கொச்சையானது, அருவருப்பானது, நாகரீகம் அற்றது என்கிற மனோபாவம் இன்றைக்கும் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இடையில் நிலவி வருகிறது.

ஆனால் சுருக்கெழுத்து வருவதற்கு முன்பே சுருக்குத்தமிழ் பேசியவர்கள் எமது வடமாவட்ட மக்கள். ‘‘வந்துகொண்டு இருக்கிறாயா” என்பதை ‘‘வந்துகினு கீறியா?’’ என்றும் “தின்றுவிட்டாயா?” என்பதை “துன்ட்டியா?” என்றும் “எங்கே இருக்கிறாய்?” என்பதை “எங்க கீற?” என்றும் சுருக்கிப் பேசியவர்கள் என் முன்னோர். இது எம்மக்களுக்கு அவசியமானது. இது எங்களின் வாழ்வோடும், எங்களின் மண்ணோடும் தொடர்புடையது.

இன்றைக்கு திரைப்படத்தின் தலைநகரமாகவும், ஊகங்களின் தலை நகரமாகவும் விளங்கும் சென்னை வட மாவட்டத்தில் இருந்தாலும், அதில் வடமாவட்டப் படைப்பாளிகள் அதிகம் இல்லை. இருக்கிற ஒரு சிலருக்கும் இந்த உணர்வு இல்லை என்பதை நான் குற்றச்சாட்டாகவே முன்வைக்கிறேன். இதனாலேயே எங்களின் வட்டார மொழிப்படைப்புகள் புறக்கணிக்கப் படுகின்றன.

2. தென் மாவட்ட வழக்காறுகளை முழுமையாக படைப்பில் கையாள்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. வட மாவட்ட வழக்காற்றில் தங்களின் எழுத்து இருந்தாலும் வர்ணனைகள் பெரும்பாலும் பொதுத் தமிழிலேயே உள்ளது. உரையாடல்களில் மட்டுமல்லாது, விவரணைகளிலும் வட்டார மொழி நடையினைப் பின்பற்றுவதில் உள்ள சிக்கல் என்ன? மேலும் வட ஆற்காடு வழக்கிற்கும், சென்னை வழக்கிற்கும் உள்ள வேறுபாடாக எதைக் கருதுகிறீர்கள்?

எனது படைப்புகளில் உரையாடல்களில் மட்டுமே வட்டார மொழியைப் பயன்படுத்துகிறேன் என்பது உண்மைதான். முழுப் படைப்பையும் வட்டார மொழியிலேயே எழுத எனக்கும் ஆசைதான். ஆனால் முதல் கேள்விக்கான பதிலாக நான் சொன்ன காரணங்கள்தான் இந்த ஆசையையும் தடுக்கிறது. என்றாலும், பிடிவாதமாக எமது மக்களின் வாழ்க்கையை எங்களின் மொழியிலேயே எழுதி வருகிறேன். தற்போது என்.சி.பி.எச். வெளியீடாக வந்துள்ள எனது ‘நீவாநதி’ நாவலிலும் எமது தொண்டைமண்டல மக்களின் வாழ்வை எங்களின் மொழியிலேயே விரிவாகப் பதிவு செய்துள்ளேன்.

எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மு.வரதராசன் ஏராளமாக எழுதிப் புகழ்பெற்றவர். எங்கள் பகுதி மக்களின் வாழ்க்கையையும் நிறையப் படைப்புகளில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் எங்களின் வட்டார வழக்கைப் பயன்படுத்த வில்லை. இப்போது காத்திரமாக எழுதிவரும் அழகியபெரியவன் எங்கள் பகுதி தலித் மக்களின் வாழ்வை மிக அசலாகப் பதிவு செய்துவருகிறார். நான் இப்பகுதியின் பெரும்பான்மை மக்களாக இருக்கிற வன்னியர் உள்ளிட்ட பிற சமூக மக்களின் வாழ்வியலை இன்னும் சற்று நெருக்கமாக எழுதிவருகிறேன்.

வடாற்காடு தமிழும், சென்னைத் தமிழும் ஏறக்குறைய ஒன்றுபோலவே தெரிந்தாலும், இரண்டும் ஒன்றல்ல. இரண்டிலும் சில வார்த்தைகள் ஒன்றுபோலவே உச்சரிக்கப்பட்டாலும் பெரும்பாலான வார்த்தைகள் வேறுபடும்.

சென்னையில் தமிழ் வார்த்தைகளோடு ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி வார்த்தைகள் இயல்பாகவே கலந்து பேசப்படுகிறது. வடாற்காடு மாவட்டத்தில் ஆங்கிலக் கலப்பு அதிகம் இருக்காது. ஆனால் சில தெலுங்கு வார்த்தைகள் இங்கே இயல்பாக கலந்து பேசப்படுகிறது. தொண்டை மண்டலம் என்பது திருப்பதி, சித்தூர் மாவட்டங்களையும் உள்ளடக்கியது என்பதாலும், வடாற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதி சித்தூர் மாவட்டத்தில் இருந்ததாலும் இந்தக் கலப்பு ஏற்பட்டது.

3. பெரும் தொழில்மயம் வளர்ச்சி என வேலூர் மாவட்டத்தை சித்தரிக்க முயன்றாலும் அதற்கு காத்திரமான எதிர்வினைகளையே உங்கள் பதிவுகளில் உணர முடிகின்றது. பென்னையும், பாலாறும் ஒருகாலத்தில் வளமாக ஓடியதையும், பின் வறண்டு விவசாயம் பொய்த்துப் போனதையும் மிக அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள். நடுநிசிக் காட்டேரிகள் கதையின் மையக்கருவே மணல்கொள்ளையாகக் கொண்டுள்ளீர்கள். தங்கள் அடுத்தக்கட்டமும் இதுபற்றிதான் என்பதால் இயற்கை வள இழப்பு குறித்த மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதில் தங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்?

இயல்பிலேயே நான் ஒரு பத்திரிகையாளன். சுமார் 20 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணியாற்றிவிட்டு, தற்போது தான் அரசுப் பணிக்குச் சென்றிருக்கிறேன். பத்திரிகையாளனாக இருந்தபோது பாலாற்றிலும், பென்னை ஆற்றிலும் நடைபெறும் மணல் கொள்ளைகள், கல்குவாரிகளாக மாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்படும் மலைகள், குன்றுகள் குறித்து நிறைய செய்திகளை வெளியிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நிறைய எதிர்ப்புகளை, மிரட்டல்களை எதிர்கொண்டிருக்கிறேன். ‘மலை முழுங்கி மகாதேவன்’ என்று சும்மா கிண்டலுக்காக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சொல்லாடல்கள் இப்போது உண்மையாகி விட்டன. பல மலைகளை அரசியல்வாதிகள் மக்களின் கண் எதிரிலேயே விழுங்கி விட்டனர். ஆனால் மக்கள் இதையெல்லாம் கூட வெகு சாதாரண நிகழ்வுகளாக எடுத்துக்கொண்டது தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒரு கிராமத்தின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் போது நிலையான ஆறுகள், மலைகள், குன்றுகள், குளங்கள், குட்டைகள் ஆகியவைகளை வைத்துத்தான் பதிவு செய்வார்கள். ‘பீமன் மலைக்கு வடக்கிலும், பாலாற்றுக்கு தெற்கிலும், நல்ல தண்ணீர் குளத்திற்கு மேற்கிலும்’ என்றுதான் எல்லைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த நிரந்தரமான ஆறுகளும், மலைகளும், குளங்களுமே இப்போது காணாமல் போகின்றன. இதனால் பிற்காலத்தில் மிகப்பெறும் குழப்பங்கள் ஏற்படும்.

4. தலைமுறைகள் கதையில், அடுத்த தலைமுறையும் சிறுவயதிலேயே குடிப் பழக்கத்திற்கு அடிமையாவது குறித்த கவலையை உணரவைத்துள்ளீர்கள். குடிப்பழக்கம் அதிகரிக்க அரசே மதுக்கடைகளை நடத்திவருவது ஒரு காரணமாக இருந்தாலும், பல தலைமுறைகளாக போதைப் பழக்கம் அழியாமல் தொடர்ந்து வருவதால் ஒரு வேளை அதன் தேவை மனிதனுக்கு அவசியம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

போதைப்பழக்கம் என்பது புராண காலம் தொட்டு, இன்னும் சொல்லப்போனால் மனிதன் காட்டில் ஆதிவாசியாய் அலைந்த காலம் தொட்டு இருந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் தற்போது தமிழ்ச் சமுதாயம் போதைக்கு அடிமையாகி இருப்பதைப் போல வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்திருக்க முடியாது என நினைக்கிறேன். ஒரு பொருளின் உபயோகம் என்பதில் அதன் ‘கிடைப்பு’ என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையிலும் அல்லது மாநில நெடுஞ்சாலையிலும் ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் நீங்கள் பயணித்தால் சாலையோரங்களிலும், கரம்புகளிலும் மதுபாட்டில்களோடு கும்பல் கும்பலாக அமர்ந்திருக்கிற இளைஞர்களை சாதாரணமாகப் பார்க்க முடியும். ஒரு பொருள் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதற்கும், கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கே மதுக்கடைகள் வாய்க்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. அது அநாவசியத் தேவையையும் அவசியத் தேவையாக்குகிறது.

5. இஸ்லாமியர் அடையாளம் என்பது- அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூழலில், தமிழகத்தில் அவர்கள் அதிகமாக வசிக்கும் வட்டாரத்தை முன்னிலைப்படுத்தும் தங்களிடம் அவர்களின் வாழ்வு குறித்த பதிவை எதிர்பார்ப்பது தவிர்க்கமுடியாதது. ஆற்காடு இஸ்லாமியர்கள் பண்பாட்டு, வாழ்வியல் நெருக்கடி மற்றும் பிற இனத்தவரோடு கொண்டுள்ள தொடர்ப்பு குறித்து தங்கள் பார்வை என்ன?

இஸ்லாமியர் குறித்த பதிவுகள் எனது படைப்புகளில் இல்லை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இங்கே ஆற்காட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ‘மேல் விஷாரம்’ என்கிற பகுதி தான் இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதி. அவர்களைப் பற்றிய படைப்புகளை எழுதுவதற்கு இன்னும் கூடுதலாக அவர்களை உள்வாங்க வேண்டியிருக்கிறது.

6. பொதுவாக இலக்கிய வெளியில் முற்போக்குப் பார்வையில் தலித் வாழ்வியலைப் பிரதிபலிப்பதென்பது அவர்கள் மீதான கரிசனப்பார்வையாகவே பதிவுசெய்யப்பட்டுவந்த சூழலை தலித் இலக்கியங்கள் உடைத்து நொறுக்கிவிட்டது. தலித் பிரச்சனையை அவர்களின் பார்வையில் இருந்து ஆதிக்கத்திற்கு எதிராக, அவர்களின் வலிகளை உளவியல் ரீதியாக தற்கால இலக்கியங்கள் வெளிப்படுத்திவருகின்றன. இதில் ஒரு பகுதி இலக்கியங்கள் தலித்தல்லாதவர்கள் எழுதியவை. இத்தொகுப்பில் உங்கள் எழுத்தை வாசிக்கும் போது அது தலித் கரிசனப்பார்வையாகவே வெளிப்படுகிறது, குறிப்பாக ‘வாயில்லாதவை’ கதையைச் சொல்லலாம். வாசகரை உணர்வு ரீதியாக ரெட்டியார் சமூகத்திற்குள் பயணிக்க வைத்த அதே வேளையில் தலித் வாழ்வியலை ஒரு வெளிப் பார்வையாளராகவே வாசகரைப் பார்க்கவைப்பதாகத் தோன்றுகிறது.

இந்தக் கேள்விக்கான பதில் உணர்வு சார்ந்தது மட்டுமல்ல. உறவு சார்ந்ததாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன். தலித் படைப்புகளை தலித்துகள் மட்டும் தான் எழுத வேண்டும் என்றும் தலித் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றும் இரண்டு வித கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், எனது படைப்பில் நீங்கள் சொன்ன ‘கரிசனப் பார்வை’ என்பது தலித் படைப்புகளை தலித்துகள் தான் எழுதமுடியும் என்கிற கருத்துக்கு வலு சேர்ப்பதாகக் கூட சிலர் சொல்கிறார்கள்.

எனக்கு ஏராளமான தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் கல்லூரியில் படிக்கிற போது என்னுடைய நண்பர்கள் எல்லோருமே தலித்துகள்தான். ‘நானும் ஒரு தலித்’ என உணர்வு ரீதியாக நான் நம்பிய காலம் அது. என் நண்பர்களும் என்னைத் தங்களுக்குள் ஒருவனாகவே ஏற்றுக்கொண்டனர். இப்போதும் என்னைப் பெரிதும் நேசிக்கிற நண்பர்களில் தலித் நண்பர்களே அதிகம். ஆனால் தலித்துகள் குறித்து எழுதும் போது முதலில் குறிப்பிட்ட இரண்டு வித கருத்துக்களில் எனக்கும் குழப்பமே மிஞ்சுகிறது. தலித் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தலித் படைப்புகளை எழுதலாம் என்று பெரும்பான்மை யானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதற்குள்ளும் பல வினாக்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

7. சாதிப் பெயரை நேரடியாக குறிப்பிட்டு எழுதும் வழக்கம் இயல்பாகிவிட்டது, தங்களின் கதாபாத்திரங்களும் மிக இயல்பாக ரெட்டியார், வன்னியர், கவுண்டர் போன்ற பின்னொற்றோடு மிக இயல்பாகப் பயணிக்கிறார்கள். ஆனால் தலித் சாதிகள் மட்டும் ”சேரி சனங்க” என்ற எல்லையைத் தாண்டி அடையாளப் படுத்தவில்லை. பொதுவாக கிராமங்களில் சேரி என்று சொன்னாலும் சுட்டிகாட்டி பேசும்போதும், வசைப்பாடும்போதும் சாதிப்பெயரே நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது. சில தலித் இயக்கங்களும், தலைவர்களும் தனது சாதிப்பெயரைப் பின்னொற்றாக பயன்படுத்துவதை ஒரு எதிர்ப்பு இயக்கமாகவே முன்னெடுக்கின்றனர். இப்படி எதார்த்தமாகப் பயன்படுத்தும் பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன? பறையர், சக்கிலியர் என்று நேரடியாக அடையாளப்படுத்துவதில் உங்களுக்கு உள்ள சிக்கல் என்ன? அப்படிப் பயன்படுத்துவது தேவையானதுதானா?

பொதுவாகவே சாதிப்பெயரை பயன்படுத்துவதை எதிர்ப்பவன் நான். எந்தச் சாதி மனிதனும் தன் பெயருக்குப் பின்னால் தன் சாதியை ஒரு பட்டத்தைப் போல பயன்படுத்துவதை ஒருபோதும் விரும்புவதில்லை நான். ஆனால் படைப்பில் ஒரு பகுதி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்கிறபோது, அவர்கள் இயல்பாகப் பயன்படுத்துகிற வார்த்தைகளை, சொல்லாடல்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயத்தில் தான் எனது கதைகளில் ரெட்டியார், கவுண்டர், முதலியார் போன்ற சாதிப் பெயர்கள் வருகின்றன. ஆனால் பறையன், சக்கிலி என்கிற வார்த்தைகளை அதே இயல்போடு பயன்படுத்துவதில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியுள்ளது.

இப்போதெல்லாம் ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால், படைப்பாளியின் சாதியைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல அந்தப் படைப்பு எந்தக் கோணத்தில் பேசப்பட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதனால் ஒரு படைப்பாளியின் எந்த வார்த்தைக்கும் அவர்கள் விரும்புகிற அர்த்தத்தை ஏற்படுத்திவிட முடியும். இந்து மதத்தில் பிறந்த பெரியாரால் இந்து மதத்தை விமர்சனம் செய்த அளவுக்கு கிருத்துவ மதத்தையோ, இஸ்லாம் மதத்தையோ விமர்சனம் செய்ய முடியவில்லை. அதற்கான காரணம் ஆழமானது. அதே நேரம் வெளிப்படையானது. இதன் பின்னணியில் இருக்கிற யதார்த்தம் தான் என் படைப்புகளின் பின்னணியிலும் இருக்கிறது.

8. இத்தொகுப்பில் வரும் கதைகளில் பெரும்பாலும் பழமை குறித்த ஒருவித மயக்கமும் ஏக்கமும் காணப்படுகிறது. கரகரெட்டி, வண்ணான்தொர போன்ற கதைகளில் இப்பழமை, பாரம்பரியம் குறித்த ஏக்கம் பழமைவாதமாகவே துருத்திக்கொண்டு நிற்பதை உணரமுடிகிறது! பழமைகள் அனைத்தும் ஒதுக்கிவிடவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், எது இழப்பு என்பது குறித்து சிறிது கவனம் தேவை என்று நினைக்கிறேன்.

நிச்சயமாக, நான் பழமையை கண்மூடித்தனமாகக் கொண்டாட வேண்டும் என்றோ, இன்றைய           அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்புகளை வேண்டாம் என ஒதுக்கவோ சொல்லவில்லை. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பழமையை ஒரு ஒவ்வாத பொருளைப் போல ஒதுக்குவதைத்தான் வேண்டாம் எனச் சொல்கிறேன். நமது பாட்டி வைத்தியத்தின் முக்கியமான மருத்துவப் பொருள் மஞ்சளும், வேம்பும். ஆனால் நாம் அவற்றை மதிக்கவே இல்லை. அறிவு ஜீவிகள், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று நாம் கொண்டாடுகிற மேலை நாட்டினர் நாம் ஒதுக்கிய மஞ்சளையும், வேம்பையும் இப்போது நம்மிடமிருந்து பறித்துக் கொண்டனர். அதைப் பார்த்த பிறகுதான் ‘லபோ திபோ’ என அடித்துக்கொள்கிறோம். நாம் சந்திராயனுக்கு ராக்கெட் விட்டது, விஞ்ஞானத்தில் சாதிப்பது எல்லாமே வரவேற்பிற்குரியதுதான். ஆனால் அந்த சாதனைகள் பழமையின் வேரிலிருந்து கிளை பரப்பியதாய் இருந்தால் இன்னும் கூடுதல் பலம் கிடைக்கும் என்பதுதான் எனது கருத்து.

9. தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் சாதிய அடையாளங்கள் இயல்பாய் வெளிப்பட சாதிய அடையாளம் வெளிப்படாத ஒரே கதை கொண்டுப்புளி மட்டும் தான். தொகுப்பில் கடைசி இடத்தைப் பிடித்தாலும் வாசகரின் மனதில் பிரதான இடத்தைப் பிடிப்பது கொண்டுப்புளி கதைதான், மாதொருபாகனில் 190 பக்கங்களில் பெருமாள் முருகன் சொன்னதை, நீங்கள் வெறும் 10 பக்கங்களில் சொல்லிவிட்டீர்கள். பெருமாள் முருகன் மீதான வன்மத்தைப் பார்க்கும்போது இது போன்ற உணர்ச்சிமிக்க (பிரச்சனைக்குரிய) விசயங்களைத் தொடும்போது யாரையும் குறிக்காமல் பொதுவில் எழுத வேண்டியது கட்டாயமோ என்று எண்ணத்தோன்றுகிறது. பல கதைகளில் குறிப்பிட்ட சாதிகள் வரும்போது கொண்டுப்புளியில் மட்டும் சாதியப் பெயர்கள் இடம்பெறாமல் போனது தற்செயலானதா? அல்லது கவனமாக மேற்கொள்ளப்பட்டதா?

உண்மையிலேயே ‘கொண்ட்டுப் புளி’ கதையை எழுதுகிற போது நான் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவலை வாசிக்கவில்லை. ஏறக்குறைய இரண்டும் ஒரே கருவைக் கொண்ட கதைகள் என்பது இப்போதுதான் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ‘கொண்ட்டுப் புளியில்’ சாதிப் பெயர்கள் இடம்பெறாமல் போனதும் தற்செயல்தான். ஆனால் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை ஒருபோதும் ஏற்கமுடியாது.

10. இலக்கியம் என்பது சுவாரஸ்யத்திற்கு மட்டுமே என்ற நிலை பின்னுக்குத்தள்ளப்பட்டு, வார்த்தை ஜாலங்களைத் தாண்டி எழுத்து, வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும், சமூக மாற்றத்திற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்ற நிலையில் களம்சார்ந்த வரலாற்றியல், சமூகவியல் புரிதல், களப்பணி செய்வதென்பது இயல்பான தேவையாகிவிட்டது. இதற்கு எவ்வாறு தயார் படுத்திக்கொள்கிறீர்கள்?

கலையும், இலக்கியமும் மனிதனுக்கானவை. அவை அவனது முன்னேற்றத்துக்கானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டு பல தலைமுறைகளைக் கடந்துவிட்டோம். ஒரு படைப்புக்காக பல ஆண்டுகள் உழைப்பதும், நீண்ட நெடிய களப்பணிகள் மேற்கொள்வதும் இன்றைய அவசியத் தேவையாகிவிட்டது.

       எனது பால்ய காலத்தில் தூக்கம் வராத எனது பாட்டிமார்கள் சூரியன் உறங்கும் அதிகாலைகளில் வெற்றிலையை மென்றபடி அசைபோட்ட ஊர்க் கதைகள் தான் எனக்கான கதைக் கருவூலங்களாக இருக்கின்றன. எனக்குக் கிடைத்த பாட்டிமார்கள் என் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே என்கிற கவலைதான் என்னைக் கதைசொல்லியாக மாற்றியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

Related posts