You are here
நூல் அறிமுகம் 

காலத்தை விஞ்சி நிற்கும் அரசியல் படைப்புகள்

பேரா. ஆர். சந்திரா

ரோசா பற்றிய இந்த நூல் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ரோசாவின் வாழ்க்கை பற்றியது. ரோசாவின் இளமைக் காலத்தின் அரசியல் நிகழ்வுகளும், சமூகக் கட்டமைப்பும் விரிவாகத்  தரப்பட்டுள்ளது. மிகச் சிறந்த மாணவியான ரோசா, அதிகார வர்க்கத்தை விமர்சிக்கும் கலக மனப்பான்மை உடையவராக இருந்ததால், தங்க மெடல் மறுக்கப்பட்டது. இளம் வயதிலேயே மார்க்ஸ், எங்கெல்சின் எழுத்துக்களை வாசித்து  சோஷலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அவளது தந்தையும் ஜார் ஆட்சிக்கெதிராக செயல்பட்டார். போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக சோஷலிச இயக்கம் வளர்ந்தது. ஜோகிச்சுடன் இணைந்த ரோசாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இதில் ஏதும் குறிப்பிடவில்லை. ரோசாவின் எழுத்துக்களை செழுமைப்படுத்துவதில் ஜோகிச்சுக்கு பங்கு இருந்தது. ரோசா மிகவும் திறமைவாய்ந்த பேச்சாளர். முற்றிலும் மாற்றுக் கருத்து கொண்டவரைக் கூட தன் பக்கம் வென்று விடுமளவுக்கு, கோர்வையாக வாதம் செய்பவர். அதேபோல், ரோசாவைப் போல் அரசியல் பொருளாதார வகுப்புகளை யாராலும் எளிமையாக எடுக்க முடியாது என்றும் கூறுவர். ரஷ்யப் புரட்சியைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டைச் செய்த கம்யூனிஸ்ட் தலைவர் என்றும் பரவலாகப் பேசப்பட்டது உண்டு. ரோசாவின் எழுத்துக்கள் இன்றைய சூழலுக்கும் நன்கு பொருந்துகிறது. ரோசாவின் மரணம், சோஷலிஸ்டுகளால் ஏற்க இயலாததாக இருந்தது. ரோசாவை ஒரு மனுஷியாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், அவர் ஜோகிச்சுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசிக்க வேண்டும்.
இரண்டாது பகுதி ரோசாவின் கட்டுரைகளை உள்ளடக்கியது. 1896-98 வரை ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெர்ன்ஸ்மீன் எழுதிய கட்டுரைகளை, ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாக விமர்சிக்கிறார் ரோசா. ‘பரிணாமவாத சோஷலிசம்’ என்ற தலைப்பில் பெர்ன்ஸ்மீன் எழுதியவை திருத்தல்வாதக் கருத்துக்களுக்கு தத்துவார்த்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன என ரோசா சாடுகிறார். கோட்பாடு சார்ந்த சர்ச்சை, அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கருதுவது, தொழிலாளர்களை அவமதிப்பதாகும் என்கிறார்.
முதலாளித்துவம் பற்றி பெர்ன்ஸ்மீனின்  புரிதல் எந்த அளவுக்குத் தவறானவை என்பதை மார்க்சீய அடிப்படையில் ரோசா விளக்குகிறார். பெர்ன்ஸ்மீன் முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கையே கேள்விக்குள்ளாக்கி, அதன் விளைவாக சோஷலிசத்துக்கு மாறும் சாத்தியத்தையே கேள்விக்குறியாக்குகிறார். அது மட்டுமின்றி, விஞ்ஞான சோஷலிசத்திற்கு புறம்பாக உள்ளது பெர்ன்ஸ்மீனின் எழுத்துக்கள் என வாதிடுகிறார். முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள என்னென்ன யுக்திகளைக் கையாளும் என்பதிலும் தனது வாதங்களை ரோசா முன்வைக்கிறார்.
சோஷலிசத்தை அடைவது எப்படி என்பதிலும் பெர்ன்ஸ்மீன் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல என்கிறார் ரோசா. தொழிற்சங்கங்கள், சில சமூக சீர்திருத்தங்கள் மூலம் சமூக மாற்றத்தை எப்படிக் கொண்டுவர முடியும் என்று வினவுகிறார். உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மூலம் உடனடியாக சோஷலிசத்தை அமைத்து விட முடியாது. முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகள் கூர்மை அடைவதும், அந்த முரண்பாடுகள் சமூக மாற்றத்தின் மூலம் பலகீனமடையும் என்பதை உழைக்கும் வர்க்கம் புரிந்து கொள்வது சோஷலிசத்தை நோக்கிச் செல்ல அவசியம்.
கட்டுரைகளின் இரண்டாம் பகுதியில், பொருளாதார வளர்ச்சி, சோஷலிசம் தொடர்பான விஷயங்களை மார்க்சீய கோட்பாடுகள் அடிப்படையில் பெர்ன்ஸ்மீன் தவறான புரிதலைக் கொண்டிருப்பதை விமர்சிக்கிறார். முதலாளித்துவ அமைப்பில்  மூலதன குவிப்புக்கு பதிலாக, மூலதனம் சிதறிப் போவதாக பெர்ன்ஸ்மீன் எழுதுகிறார். மார்க்சின் மதிப்புக் கோட்பாட்டையும், பெர்ன்ஸ்மீன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதேபோல் வர்க்க முரண்பாடு… எனப் பல அம்சங்களில் மார்க்சீயத்திற்கு புறம்பான கருத்துக்களை பெர்ன்ஸ்மீன் முன்வைத்துள்ளதை ரோசா கடுமையாகச் சாடுகிறார். ‘‘உழைக்கும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது ஒரு வெற்று வாக்கியம்ÕÕ என பெர்ன்ஸ்மீன் கூறுவது நுனிப்புல் மேய்வதாகும்.
முதலாளித்துவத்தின் வீழ்ச்சி கோட்பாட்டைக் கைவிடுவதன் மூலம் பெர்ன்ஸ்மீன் தனது சமூக ஜனநாயக திருத்தல்வாதத்தை தொடங்கினார்.  முதலாளித்துவ வீழ்ச்சி என்பது விஞ்ஞான சோஷலிசத்தின் அடிப்படை. அதை நிராகரிப்பதன் மூலம் பெர்ன்ஸ்மீன் சோஷலிசம் என்ற தத்துவத்தையே முற்றிலும் நிராகரிப்பதாக ரோசா அவரை விமர்சிக்கிறார். சந்தர்ப்பவாத கருத்துக்களுக்கு பெர்ன்ஸ்மீன் தத்துவார்த்த அடித்தளத்தை அமைக்கிறார். மார்க்சீயம் மூலம் இவற்றைத் தவறென நிரூபிக்க முடியும்.
ரஷ்யப் புரட்சி, பொதுவேலைநிறுத்தம் பற்றிய ரோசாவின் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. ரோசா, ரஷ்ய அனுபவம் ஜெர்மன¤க்கும் பொருந்தும் என்கிறார். நமது சூழலுக்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்க இயலும். பொது வேலைநிறுத்தம் எத்தகைய படிப்பினைகளைத் தருகின்றன. வேலை நிறுத்தம் நடைபெற்ற தொழிற்சாலைகள், கிடைத்த வெற்றிகளைப் புள்ளி விபரங்களுடன் விளக்கியுள்ளார். பொருளாதாரப் போராட்டம் ஒரு அரசியல் மையத்திலிருந்து மற்றொன்றுக்காக மாறிச் செல்லும் கருவியாக உள்ளது. அரசியல் போராட்டங்களின் ஒவ்வொரு தொடக்கமும் ஒவ்வொரு வெற்றியும் பொருளாதாரப் போராட்டத்தை ஊக்குவிப்பதாக அமைந்துவிடுகிறது என்கிறார் ரோசா. தொழிற்சங்கங்கள் கற்றுக் கொள்ள இக்கட்டுரைகளில் நிறைய உள்ளன.
இந்நூல் மிகவும் முக்கியமானது என்பதுடன் மார்க்சீயக் கோட்பாடுகள், திருத்தல்வாதம் பற்றி புரிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. கடினமான நூலை பொன்னுசாமி மொழியாக்கம் செய்துள்ளார். பாராட்டுக்கள். சில இடங்களில் மொழி பெயர்ப்பு நெருடலாகவும், அச்சுப்பிழைகளும் உள்ளன. இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, அடுத்த பதிப்பில், இத்தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெர்ன்ஸ்டீனின் கட்டுரைகளை மீண்டும் வாசிப்பது இந்நூலை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும்.

ரோசா லக்ஸம்பர்க் வரலாறும் கட்டுரைகளும்
தமிழில் : மிலிட்டரி பொன்னுசாமி | பக். : 248 | ரூ.160,
பாரதி புத்தகாலயம்.

Related posts