You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம்-10 ஆதிமொழியினைத் தேடித் தேடித் தொடரும் பயணம்

ச.முருகபூபதி

குழந்தைகளின் நினைவுக் குகைகளில் எப்போதும் கிளம்பி பயணத்திற்கு காத்திருக்கும் ரயில் பெட்டிகளுக்கு உற்சாகமிக்க வசீகரம் எவரையும் ஈர்த்து விடக்கூடிய வல்லமை கொண்டது. அவை ஒருவர் சட்டையை ஒருவர் பின்னே பிடிப்பது போன்றும் இரு கரங்கள் கொண்டு நீள் செவ்வகத்தில் இணைத்து அதனுள் எல்லோரும் இருக்க சதா குழந்தைகளின் சிருஷ்டி நிலத்தில் ரயில்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும். எங்கள் தெரு கிணத்து மேட்டு நாடகங்களுக்கு நடிக்கும் அன்றைய குழந்தை நடிகர்கள் பலரும் பல இடங்களிலிருந்து அன்றைய நாடகங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களுடன் இப்படிப்பட்ட விந்தையான ரயிலில் பயணித்து வந்து சேர்வது வழக்கம். சுப்பையா பிள்ளை பொட்டல் பால்யத்தின் விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக குழந்தைகளும் இளைஞர்களும் பெண்களும் ஆங்காங்கே விளையாட்டும் பாட்டும் ஆட்டமும் நாடகமுமாக கனவுலகவாசிகளைப் போல உலவிக் கொண்டிருப்போம். பீட்டர்புருகலின், நிலப்பரப்பு காட்சி ஓவியத்தைப் போலவே அவை அசைந்து கொண்டிருக்கிறது. அந்த ஓவியத்தில் உறைந்து ஓடிக் கொண்டிருக்கும் நாய்களும் பறக்கும் காக்கைகளும் பறவைகளும் எங்களைப் போலவே சதா மிதந்து உலவி குழந்தைகளின் மனதைப் பெற்றவைகளாகவே அவை இருக்கும். எங்கள் தெருச்சுவர்களில் பலரும் கரித்துண்டு பச்சிலை பென்சில் கொண்டு கீறி வரைந்து எண்ணிக்கை மீறிய ரயில்கள் ஒன்றன் மேல் ஒன்றாக சித்திரமாடிக் கொண்டிருக்கும். சில பல ரயில் பெட்டிகளில் எங்களின் பெயர்களும் கூடவே படித்த நண்பர்களின் பெயர்களும் கிறுக்கப்பட்டிருக்கும்.

   பால்யத்தில் பள்ளி செல்லாத ஐந்து வயதுக்கு முந்தைய குழந்தைகள் பலரும் அம்மணக்குண்டிப் பிள்ளைகளாகவே நாங்கள் அலைந்து கொண்டிருப்போம். பலமுறை என்னுடன் சேர்ந்த பல அம்மணக்குழந்தைகள் ஓடும் ரயிலையே விரட்டிப் பிடிப்பதை ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்போம். ஒருமுறை நான் தனி அம்மணக்குண்டியாக நீண்ட குச்சியுடன் கூட்ஸ் ரயில் பெட்டிகளை துரத்தியபடி ஓடிக் கொண்டிருந்தேன். தண்டவாளத்துப் பக்கம் எதிரே வந்த ஹிட்லர் மீசை வைத்த நடுத்தர வயது ஒல்லி உருவத்து மனிதர் என்னைத் தூக்கி ரயில் மீது வீசுவதுபோலவே பயமுறுத்தி சிரித்துக் கொண்டிருக்க நானோ பயத்தில் அலறிக் கத்தினேன். ரயில் போனபின் அவர் என்னைப் பார்த்து ‘நீ ஒரு ஆய்ப்பையன்’ என்றதும் அடக்கிய அழுகையோடு எங்கள் தெரு பார்த்து ஓடினேன்.

ஆனாலும் அம்மணமாக அலைவது எங்கள் வயதுக் குழந்தைகளின் விருப்பச் செயலாகவே இருந்தது. தாய்மார்கள் கஷ்டப்பட்டு உடை போட்டுவிட்டாலும் வலுக்கட்டாயமாகக் கழற்றி வீசுவதும் தெருப்புழுதியினை உடம்பில் பூசி உடையாக நினைத்து திரிவோம். அன்று எங்களுக்கு பெற்றோர்கள் வாங்கித் திங்கத்தரும் 10 பைசா ஈயக்காசுகளை ரயில் தண்டவாளத்தில் வைத்து ரயில் போனபின் அவற்றை எடுத்துப் பார்த்தால் அச்சு அழிந்து பெரிய வட்டக்காசுகளை சேர்த்து அலைவோம். அன்று எங்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த காசு உருவங்கள் பிடிக்கவில்லை போலும். ரயில் மிதித்துச் சென்ற பல காசுகளை சேர்த்து வைத்திருந்த எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த பீக்குண்டி கணேசன் என்பவன் நீண்ட கயிற்றை இடுப்பில் கட்டி அது காற்றில் பறக்க ஸ்பீடு ரயில் நான் என்று அறிவித்து ரயிலின் சப்தம் எழுப்பியபடி அவ்வப்போது கூட்டமாய் விளையாடுவோர் இடத்திற்கு ஓடோடி வந்து ரயில் நெளித்து பெருசாக்கிய ஈயக்காசுகளைத் தூக்கி காண்பித்து இவை சிவாஜி மாமா கொடுத்தது இது எம்.ஜி.ஆர். சித்தப்பா கொடுத்தது என்று அன்றைய சில நடிகர்களை உறவு முறை சொல்லி அழைப்பது வழக்கம். குழந்தைகளின் புனைவுப் பேச்சுகளே சமூகத்தைக் காப்பாற்றும் துடிகொண்டது. அவை திட்டமிட்ட முத்திரை மொழுகிய பேச்சுக்கள் கிடையாது. கலையின் பல்வழிப்பாதைகளைத் திறக்கும் புனைவெழுச்சிமிக்க உரையாடல்கள் அவை. என் மூத்த மகன் வசியா பள்ளி வளாகம் நுழைந்த நாட்களில் தூத்துக்குடி தெரு சர்ச் வாசல்களுக்கு அவனைத் தோளில் கதை சொல்லிப் பாடியபடி தூக்கிச் செல்வேன். கண்ணாடி பதித்த மதில்களுக்குள் விரிந்து கிடக்கும் பைபிள் புத்தகத்தைப் பார்த்து ரயிலில் வந்த புத்தகங்கள் என்பான். சர்ச்சின் கூட்டுப் பிரார்த்தனைப் பாடலைக் கேட்டு ரயில் பாடுகிறது ரயில் பாடல நிக்கிறதுப்பா என்பான். அவனுக்கு நீண்ட மர ரயில் பொம்மையை வாங்கித் தந்தபோது தினமும் அவற்றை குளிப்பாட்டிய பிறகே அவன் குளிப்பான். தெருப்பிள்ளைகள் பலருக்கும் தன் ரயிலைக் கொடுத்து ரயிலின் நண்பனாக மாற்றிவிடும் தன்மை குழந்தமையின் குணாம்சம். அவர்களில் அவன் கீறிய நெளிவு நெளிவான கோடுகள் பலவற்றிற்கும் பல ஊர்களின் ரயில் பெயரையே வைத்திருந்தான். முதல் முறை மதுரை பாசஞ்சர் ரயிலில் அவனைக் கூட்டிப் போனபோது நெடுநேரம் ஃபேன் ஓடுவதைப் பார்த்து அப்பா ஃபேன்களுக்கு மனிதர்களைப் பிடிக்காது. ஏனென்றால் அவர்கள் அவற்றை சதா ஓடச் சொல்கிறார்கள் என்றான். இது எனக்கு ஃபேன் குறித்து ஃபேன்களே உலவும் கதையொன்றை உருவாக்கித் தந்தது. அக்கதையின் சுருக்கம் இது.

சுப்புராசு எனும் ஆள் இரண்டு ஃபேன்கள் ஓடக்கூடிய ஓர் அறையில் வசித்து வருகிறார். ஒரு ஃபேன் மட்டுமே பயன்பாட்டில் இருக்க மற்ற ஃபேன் ஓடாமல் ஓய்வில் சிலந்தி படிந்து இருக்கிறது. ஒரு நாள் சதா ஓடும் ஃபேன் அறையில் தனியே யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த ஆள் ஏன் நம்மை மட்டும் ஓடச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். அவனெ ஓடச் சொல்ல வேண்டியதுதானே எப்பப்பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கான். இந்த மனிதன் நம்மள இளிச்சவாயன்னு நினைச்சுட்டானா? நாளை முதல் நானும் ஓடமாட்டேன் பாத்திடுவோம் என்று புலம்பியபடி இருக்க அந்த மனிதன் கதவைத் திறந்து வியர்வை வழிய ஸ்விட்சை போடுகிறான். ஃபேன் ஓடவில்லை. முழித்தபடி லைட்டெல்லாம் போட்டு ஸ்விட்சை திரும்பத் திரும்ப அமர்த்தி திரும்பப் போடுகிறான். ஃபேன் ஓடவில்லை. குழப்பத்தில் புலம்பியபடி ஸ்டூலில் ஏறி ஃபேனை துடைத்து இறங்க ஃபேனோ தான் துடைக்கப்பட்ட உற்சாகத்தில் பளீரென காட்சியளிக்க ஓடாது ஸ்ட்ரைக் செய்த ஃபேன் இங்க பார்றா இந்த மனுசன் இது நாள் வரை ஓடிய என்னை ஒரு நாள் கூட தொடச்சி ஈரத்துணியால் குளிப்பாட்டல. ஓடாது உறங்குனவன இப்படி கவனிக்கிறான். ஸ்விட்சை போட்டதும் உற்சாகத்தில் ஓடத் துவங்குகிறது. தன் கட்டிலை இந்தப் பக்கம் நகர்த்திப் போட்டு துணிகளைக் களைந்து ஸ்ஸ்ஸ் அப்பாடா என படுக்கையில் வீழ்கிறான். சில நாட்கள் கழித்து இந்த ஃபேனும் யோசிக்க இப்பல்லாம் அவன் ஓடாது ஒறங்குறான். நம்ம என்ன கேனப்பயலா நாமலும் நாளை முதல் ஓடக்கூடாது என முடிவு செய்ய அன்று இரவிலிருந்து இரண்டு ஃபேன்களும் ஓடவில்லை. காலை இரண்டையும் கழற்றி ஃபேன் ரிப்பேர் கடைக்கு கொண்டு செல்கிறான். அங்கு இதுபோல மனிதர்களிடம் கலகம் செய்த பல வித ஃபேன்களும் குவிந்து கிடக்கிறது.

மெக்கானிக் அவைகளை சரி செய்வதில் தன்னை மறந்த நிலையில் இயந்திரமாக கடைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைகிறான். கடையில் உள்ள பழைய காலத்து பெரிய ஃபேன் புதிதாய் வந்த இவற்றைப் பார்த்து, ‘‘தம்பிகளா எந்தந்தத்தெருவுல இருந்து வரீக உங்க பிரச்சனை என்ன சொல்லுங்கப்பா” என்றதும் ÔÔஅய்யா நாங்க முடங்கியா சாலை முக்ரோட்டுல இருந்து வர்றோம். எங்க முதலாளி நெதோம் தண்ணியப்போட்டு வந்துறாப்ள மாறி மாறி ஓடச் சொல்லுறாரு சில நாலு பகல்லயே பீரைப் போட்டுட்டு எங்கள அமர்த்தாமலேயே கதவ மட்டும் பூட்டிட்டு கிளம்பிறாப்ள. என்ன செய்ய பாத்தோம் கிளம்பிட்டோம்.” என்றதும் இரண்டு டேபிள் ஃபேன்கள் தனது ஆதங்கத்தை சொல்கிறது. ÔÔஅண்ணே எங்க முதலாளி கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்யுறாரு. துணிமணி தொவச்சாக்கூட நாங்கதான் ஓடி ஓடி காய வைக்கணும். சிலசமயம் அவரு அண்டர்வேரை தொவச்சி எங்க மேல போட்டுட்டு குப்புறப்படுத்து குறட்டை போட ஆரம்பிச்சிடுவாரு. மற்றொரு சீலிங் ஃபேனோ எங்க வீட்டுக்காரங்க டி.வி.க்கே ஃபேன் போடுறவங்க. டி.வி.யில வர்ற நடிகர் நடிகைகளுக்கு நாமெ ஓடுறோம் போலன்னு நெனச்சிக்கிடுவோம் என்றது. பழைய பெரிய ஃபேனோ கனத்த குரலில் தம்பிகளா எங்க காலத்துல அப்படி ஆளுகள பார்க்க முடியாது தூங்கும்போது மட்டும்தான் போடுவாங்க என்றது.

வாரம் ஒரு தடவ எங்கள நீட்டா தொடச்சி சுத்தமா வச்சிருப்பாங்க. ஆயுத பூஜைக்கு சந்தனம் பொட்டு வச்சிருவாங்க. இந்தக் காலத்துல ச்சே பாவம் நீங்க… என்றதும் மற்ற ஃபேன்கள் ஒரே குரலில் “அய்யா நீங்க எதுக்கு இங்க வந்தீக’’ என்றதும் அழுகையில் என்னை ‘‘ஆன்டிக்ண்ணு’’ சொல்லி ம்யூசியத்துக்கு தூக்கி கொடுத்துட்டான். இந்த மெக்கானிக்கோட முதலாளிக்கு ம்யூசியத்து வேல. என் ஒடம்புக்குள்ள இருக்குற கொடலப்பூராம் உறுவிட்டு ம்யூசியம் கண்ணாடிப் பெட்டிக்குள்ள காட்சிக்கு வைக்க திட்டம் போட்டு வேலை செய்யுறானுக. தம்பிகளா நாம எல்லாரும் மனுசங்கட்ட இருந்து தப்பி காட்டுக்கு ஓடிறலாம். சாமத்துல மெக்கானிக் அசந்து அஞ்சு நிமிசமாவது தூங்காமலா இருப்பான் அந்த நேரம் பார்த்து கூட்டமா ஓடிடுவோம்டா என்று உணர்ச்சிகரமாகப் பேசியதும் எல்லோருக்கும் சந்தோஷம். திட்டமிட்டபடி மெக்கானிக் உறங்கியதும் கூட்டமாகத் தப்பித்து காட்டுக்குள் உருண்டு ஓடுகிறார்கள்.

அங்கு மனிதர்களால் இயற்கை மொட்டையடிக்கப்பட்டு மிருகங்கள் வெக்கையில் வியர்வை ஒழுக சருகுகளை வைத்து ஒருவருக்கொருவர் விசிறிக் கொண்டிருக்கிறது. ஃபேன்கள் கூட்டமாக வருவதைப் பார்த்து பயத்தில் ‘‘நீங்கள் யார் இங்கு எதற்கு வந்தீர்கள்” என்றதும் ‘‘நாங்கள் மனிதர்களுக்கு உதவி செய்து ஓய்ந்தவர்கள்” என்றதும் ‘‘மனிதர்களின் நண்பர்களா கிளம்புங்கள் காட்டை விட்டு” என்று ஒரே குரலில் உரத்துச் சொன்னது. பின் நிலமைகளை எடுத்துச் சொல்லி சமாதானமாகியது. உலகுக்கே காற்று வழங்கிய கானக மரங்கள் நீங்கள். உங்களுக்காக கொஞ்சம் காற்றுத்தர நாங்கள் ஒடுறோம் என்று ஓட ஆரம்பிக்கின்றது.

சிறிது நேரத்தில் மிருகங்கள் பலவும் சேர்ந்து தம்பிகளா நீங்க ஓடுனது போதும் உங்க ரெக்கையெல்லாம் வலிக்கும் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க பிறகு ஓடலாம் என்றதும் பலஃபேன்களும் அழுகையில் விசும்பி மனிதர்கள் ஒரு நாக்கூட இப்படி சொன்னதே கிடையாது என்று சொன்னதோடு காட்டிலேயே ஃபேன்கள் அன்று முதல் வசிக்கத் துவங்குகிறது. இக்கதை குழந்தைகளிடம் சொன்னபோது பெரும் வரவேற்பு. மறுவாரம் வகுப்பறையில் சில ஃபேன்கள் பழுதாகிவிட்டது.

   ஒரு முறை திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது வாஞ்சி மணியாச்சி ஸ்டேஷனில் ஏறிய ஒரு 60 வயது மதிக்கத்தக்க அம்மா ஒருத்தி கையில் துணி மூட்டை வெற்று பிளாஸ்டிக் பாட்டில்களுடன் நரைகலந்த விரி கூந்தலுடன் ரயிலில் ஏறியது. நான் பயணம் செய்த பெட்டியில் பலரும் ரயில்வே அலுவலக ஊழியர்கள். எங்கள் அருகே உட்கார்ந்த அம்மா மௌனத்தில் ஊழியர்களின் கௌரவ பெருமைப்பேச்சுகளுக்கிடையே ‘‘பணம், காசு, ஏதாச்சும் தாங்களேன்’’ என்றதும் ஒருவர் தன் பர்சில் உள்ள பணங்களை எண்ணிப் பார்த்து அதில் ஐந்து ரூபாய்த் தாளைத் தேட அம்மாவோ பெரிய தாள் எனக்குக் கொடுத்ததாக இருக்கட்டுமே என்றதும் பர்ஸைத் திரும்பவும் பேண்டிற்குள் திணித்து விட்டு ‘‘நாங்களெல்லாம் அரசாங்க உத்தியோஸ்தர்கள் வேற பக்கம் நீ போய் உக்காரு’’ என்று கோபமாகப் பேசியவுடன் மூட்டையை கீழே இறக்கிய அம்மா வெற்று பாட்டிலுடன் கழிவறை நுழைந்து தண்ணீர் நிரப்பி வந்து எங்கள் முன் நிதானமாக குடிக்க ஆரம்பித்தாள். ஊழியர்கள் அனைவரும் முகம் சுழிக்க ‘‘எனக்கு ரெண்டு மகங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஒருத்தன் வெளியூர்ல இருக்கான் இன்னொருத்தன் எப்பப் பார்த்தாலும் வீட்ல படுத்துக்குட்டு எந்நேரமும் டி.வி. பார்த்துக்கிட்டே இருப்பான். எனக்கு சாப்பிட கஞ்சியில்ல அதான் ரயிலேறி இறங்கி தேடுறேன்’’ என்று அமைதியாகப் பேசினாள். இதே உரையாடலை பலமுறை சொல்லிக் கொண்டே சிறுக்கோலியால் கூந்தலை சிக்கெடுக்க ஆரம்பித்தாள். ஊழியர்கள் முகங்கள் வெறுப்பை பேசிக் கொண்டிருந்தன. அவர்களின் முகமொழி அம்மாவை பைத்தியக்காரி என்றது.

சில நொடி அமைதியில் திரும்பவும் அதே உரையாடலைத் திரும்பத் திரும்பப் பேசியபடி துணிமூட்டைக்குள்ளிருந்து தினசரி காலண்டரின் ஒவ்வொரு நாள் தாளையும் ஆவலோடு கிழித்து தின்று கொண்டிருந்தாள். சிலர் எழுந்து கதவுப் பக்கம் நின்று உலவி அம்மாவை அனுப்ப முயற்சித்தார்கள். திரும்பவும் எனக்கு ரெண்டு மகங்க. அதே உரையாடல் கோபத்துடன் தொடர்ந்தது. தினசரி காலண்டர் தாள்கள் கிழித்து தின்பது இன்னும் வேகமாகி   கூந்தலை அள்ளி முடிச்சிட்டு மேலும் சில தினசரி காலண்டர் கேக்குகளை எடுத்து அவற்றுள் ஏதோ சில நாட்களின் தாள்களைத் தேடிக் கிழித்து மென்றபடி எங்கள் ரயில் பெட்டிக்குள் குறுக்கு நெடுக்காக நடந்து நம் காலத்து அம்மாவாக அதீத நாடகத்தின் தேவதையாக உலவிக் கொண்டிருக்க சாத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி கூட்டத்தோடு வெள்ளரிப்பிஞ்சு கூடைகளுக்கிடையே மறைந்து விட்டாள். ஒரு வேளை கு.அழகிரிசாமியின் கதை நிலத்திற்குள் அந்த அம்மா மறைந்திருக்கலாம்.

சில மாதங்களுக்கு முன் நாடக வேலையாக பெங்களூருக்குப் பயணமானபோது நான் பயணித்த ரயில் பெட்டியில் கதவோரத்து மேல்படுக்கையில் கருப்பு வலை போர்த்தியபடி. கதைகளில் உலவும் தேவதையையொத்த முஸ்லீம் பெண்ணொருத்தி உறக்கத்தின் அழகில் கனவுடன் கண்மூடியிருக்க அவள் கனவில் வருவதைப் போலவே ஏதோ ஓர் ஸ்டேஷனில் குழுவாக ஏறிய கண் தெரியா இளைஞர்கள் சிலர் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி ஊதுபத்தி, சந்தனப்பவுடர், சந்தன சோப் போன்றவற்றை ஆங்கிலத்தில் கூவிச் செல்ல மற்றொருவர் அவற்றை தமிழில் மொழிபெயர்த்தபடி வருகிறார்கள். எதிரே இருந்த இருவர் ரயில் கழிப்பறைகளின் நாற்றத்தையும் அசுத்தத்தைப் பற்றியும் விரிவாகப் புலம்பிக் கொண்டிருந்தனர். நான் தேவதையை அவ்வப்போது பார்த்து எப்போது எழுவாள் என தேடிக் கொண்டிருந்தேன். கண் தெரியாத இளைஞர்கள் கூவி விற்பதை ஒரு பாடல் போலவே நாடகத்தின்       சிலீஷீக்ஷீus மீஸீtக்ஷீஹ் போலவே நகர்ந்து கொண்டிருந்தார்கள். திடீரென விழித்த தேவதை அவர்களையே நெடுநேரம் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள். குருடர்கள் தன்னை நெருங்கி வந்தபோது தன் இமைகளை நெற்றியை தன் அகங்கையால் தழுவி கீழே இறங்கி தன் மணிபர்சிலிருந்து கேட்ட பணம் கொடுத்து சில சந்தனப் பவுடர் பாக்கட்டுகளை வாங்கிக் கொண்டாள்.

சிறு வயதில் அம்மாவின் மரப்பீரோவுக்குள் துணிமணிகளுக்குள் இந்த சந்தனப்பவுடர் பாக்கட்டை நான் பார்த்திருக்கிறேன். என் பால்யத்தை அசைபோட்டபடி திரும்பவும் தேவதையைத் தேடினேன். ரயில் எங்கோ நின்றிருந்தது அவளைக்காணோம். இறங்கி பிளாட்பாரமெங்கும் ஓடித் தேடினேன். ரயில் புறப்படத் தயாராகும் ஒலி கேட்டுத் தாவி ஏறினேன். பிளாட்பாரம் விட்டு வெளியேறும் வரை அவளைத் தேடி கழிவறைக்குள் முகம்கழுவ நுழைந்தபோது உள்ளே அவள் வாங்கிய சந்தனப் பவுடர் பாக்கெட் பிரிக்கப்பட்டு வாசனை பரப்பிக் கொண்டிருந்தது. சட்டென எதிரிலுள்ள கழிவறைக்கதவைத் திறக்கும்போது அங்கேயும் சந்தனப் பவுடர் பாக்கட் இருந்தது. வேகமாகப் பெட்டியின் மறு முனைக்கு ஓடி கழிவறைக்கதவு திறந்தபோது அங்கேயும் சந்தனப் பவுடர் பாக்கட். அன்றைய நாள் முழுதும் அவள் நினைவின் வாசம் ரயிலெங்கும் பரவிக் கொண்டிருந்தது. தேவதையின் கரங்களால் வைக்கப்பட்ட சந்தனப் பவுடர் பாக்கெட்டை பெங்களூரில் இறங்கும்போது கதவு திறந்து தொட்டுப் பார்த்து விடை பெற்றுக் கொண்டேன்.

என் பால்ய நிலத்தில் எங்களுக்கு ரயிலில் கழுதைகள் வந்திறங்கியபோது எங்கள் தெருவாசிகளோடு நாங்களும் ரயில் நிலையம் சென்று கழுதைக்குட்டிகளுக்கு வீட்டிலிருந்து அப்பளங்கள் கொண்டுபோய் கொடுத்து வந்தோம். ரயில் கிளம்பியபோது இறங்கிய கழுதைகளில் பலவும் ரயில்வே பாதையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. ரயில் நிலையமெங்கும் நாங்கள் கழுதை விட்டைகளை ஆவலோடு பிறக்கித் திரிஞ்சோம். காரணம் அதன் விநோத வடிவம் எங்களுக்குப் பிடித்திருந்தது. அவற்றைக் காயவைத்து சிரங்குகளில் தேய்த்தால் புண் குணமாகிவிடும் என்று நம்பப்பட்டது. அனேகமாக எங்கள் பலரது உடல்களிலும் அன்று கழுதைச் சாணம் பூசப்பட்டிருந்தது.

அன்று கரி எஞ்சின் ரயில்களே புகை கக்கிய விந்தை உருக்களாக எங்களை வசீகரித்துக் கொண்டிருந்தன. பலமுறை ஓடும் ரயிலின்மேல் தப்பிக்க ஓடிக் கொண்டிருக்கும் ரயில் திருடர்கள் பலரை நாங்கள் பார்த்திருக்கிறோம். கரி எஞ்சினில் கரி அள்ளிப் போடும் நீல நிற உடையணிந்த ஊழியர்களின் அதீதமான சுறுசுறுப்பு செயல்கள் வேலைகள் எங்களுக்குப் பிடித்தவையாக அன்று இருந்தன. அடிக்கடி எங்கள் கிணத்து மேட்டு நாடகங்களில் கரி அள்ளி வீசும் ஊழியர்கள் வந்து போவார்கள். குட்ஸ் வண்டி டீ டீக்கு கையசைவு காட்ட நாங்கள் கூட்டமாகவே ஓடித்திரும்புவோம். அப்பொதேல்லாம் தெரு நாய்க்குட்டிகள் பலவும் எங்களோடு சேர்ந்து ஓடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

இரவில் செல்லும் ரயில்களிலிருந்து பேய்கள் பலவும் குதித்து தண்டவாளங்களில் தலை வைத்து கனவு கண்டுவிட்டு மறு ரயிலில் பயணமாகுமென்று எங்களுக்குள் வற்றாத உரையாடல் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும். பத்து வருடத்திற்கு முன் பாலக்காட்டு ரயிலில் பயணமானபோது ஏதோ ஒரு ஸ்டேஷனில் ஏறிய வயோதிகர் ஒருவர் கை விரல்களில் இரண்டிற்கு இரும்பு நட்டுகளை ஆபரணமாக அணிந்திருந்தார். கால் விரல்களிலும் அவை இருந்தன. தலைப்பாகையில் இரும்பு ராடுகள் சிலவும் கட்டியிருந்தார். அவர் தனக்கு உதவியாக வைத்திருந்த ஊனு கம்பில் இரும்பு நட்டுகளும் வளையல்களும் ஆபரணமாகி நவீன புராண கதாபாத்திரத்தைப் போல காட்சியளித்தார். அவ்வப்போது வாயில் திணிக்கப்பட்டிருந்த காகித கட்டைப் பிரித்து பென்சிலால் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டார். கரண்டைக்காலில் மாட்டப்பட்டிருந்த இரும்பு வளையங்களை அவ்வப்போது திருகிவிட்டுக் கொண்டார். காதுகளிலும் சில காகிதங்கள் வைத்து அடைத்திருந்தார். இரும்புக் கருவிகளை நவீன ஆபரணமாக்கிய அவ்வயோதிகரிடமிருந்து நவீன வாழ்வின் மனப்பிறழ்வு மொழியினை உணர முயல்கிறேன்.

இது போலவே அதே பாலக்காடு ரூட்டில் ஒரு முறை சிறிய ஸ்டேஷன் பிளாட்பாரமொன்றில் பல மண்மூட்டைகள் சிறிது பெரிதாக ஒரே கயிறில் கட்டப்பட்டு அதிலிருந்து நீண்ட கயிறு ஒன்று அவரது இடுப்பில் கட்டப்பட்டிருந்தது. ரயில் நின்ற ஐந்து நிமிடங்களுக்குள் எல்லாப் பெட்டிகளின் கதவருகே ஓடி வந்து யார் யாரையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் பீதியும் அன்பும் கசிய எச்சில் ஒழுகிய முகத்துடன் ஓடிக் கொண்டிருந்தார். அந்த ரயில் நிலையத்தின் ஆன்மாவை சுமந்தலையும் அவரை என் வனத்தாதி நாடகத்தில் நடிகனின் உடலில் ஏற்றினேன். மண் மூட்டைக்கு பதில் தானிய மூட்டைகள் இருந்தன.

என்னுடன் பத்தாம் வகுப்பு படித்த நண்பர்களோடு சேர்ந்து 10வது Public Examination  குரூப் ஸ்டடிக்கு தினம் இரவு கூடுவது வழக்கம். சாமத்தில் ஊர் உறங்கியதும் வீட்டிலுள்ள மூங்கில் சேர்களை தூக்கிக் கொண்டு போய் வீட்டின் அருகிலுள்ள தண்டவாளத்திற்கு நடுவில் போட்டு படிப்போம் ஒப்பிப்போம். ரயில் வரும்போது சேரை எடுத்து விலகிக் கொள்வோம். கரி எஞ்சின் ஊழியர்கள் எங்களை திட்டிக்கத்திப் போவார்கள். சில நேரம் எங்கள் உடைகளைக் களைந்து விட்டு நூறு மீட்டர் தூரத்திற்குள் நாங்கள் எழுவர் இடைவெளியிட்டு அமர்ந்து கண்மூடி சப்தமாக ஒப்பித்துப் படிப்பதை ஓர் அதிசெயலாகச் செய்வோம். எங்கள் தூக்கத்தை களைக்க வறுத்த புளியங்கொட்டைகளும் பட்டாணிகளும் துணையிருந்தன. நடு இரவு வேளைகளில் கைலி, சட்டை சுழற்றி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு பஸ்டாண்ட் நோக்கி பிறந்த மேனியாக அலைவோம். பஸ் ஸ்டாண்டில் ஒரு டீக்கடை. இரவு முழுக்க விழித்திருக்கும். கடையை நெருங்கியதும் உடையணிந்து டீ சாப்பிட்டுக் கிளம்பும் போது திரும்பவும் களைத்து விடுவோம்.

கொல்லம் பாஸஞ்சர் பயணிகள் பலரும் அன்று எங்களது வினோத செயல்களைப் பார்த்திருக்கக்கூடும். இவையனைத்தும் கிணத்துமேட்டு நாடகம் கொடுத்த அதி விதைகளாகவே உணர்கிறேன். அபூர்வமாக மனதில் தோன்றியதைச் செய்யும் துணிவு அன்று எங்களுக்கு இருந்தது. இப்பவும் ரயில் பயணங்களில் வருகிற வியாபாரிகள் யாசகர்கள், பித்தர்கள், அரவாணிகள் பலருக்குள்ளும் சமகால நடிப்பு உடல்களின் ஆதிமொழியினை எப்போதும் போல தேடித் தேடி தொடரும் பயணம்.

Related posts