You are here
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்- 20 : மீண்டும் மீண்டும் லெனினியம்

என். குணசேகரன்

நாட்டின் அதிபராக,ஒரு புதிய அமைப்பினை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையில் ஈடுபட்டுள்ளார், அவர். ஓவ்வொரு நிமிடமும் அவருக்குப் பொன்னானது.
திடீரென்று அவர் அலுவலகத்திலிருந்து வெளியே தெருவிற்கு வந்து,கொட்டும் மழையில் நடனம் ஆடத் துவங்கினார்.
என்னவாயிற்று அவருக்கு?
மகிழ்ச்சிக் களிப்பில் நடனம் ஆடியவர்,லெனின்!
அவர் ஆட்டம் போட்ட நாள்,பாரிஸ் கம்யூன் எழுச்சி தினத்திற்கு அடுத்த நாள்.1871 ஆம் ஆண்டு நிகழ்ந்து, 72 நாட்கள் மட்டும் நீடித்த பாரிஸ் கம்யூன் ஆட்சியை விட ஒரு நாள் கூடுதலாக தனது சோவியத் ஆட்சி நீடித்த மகிழ்ச்சியில் தான் அவர் நடனமாடினார்!
​   சோவியத் ஆட்சி அமைந்தது,வெறும் நபர் அல்லது ஒரு கட்சியின் மாற்றம் அல்ல.அந்த ஆட்சி,பல ஆயிரம் ஆண்டு நீடித்து வந்த சமூக சமத்துவமின்மையை அதிரடியாக மாற்றும் முயற்சி. உழைக்கும் மக்களின் குடியரசை, அமைக்கும் வரலாற்றுப் பணி. சுற்றியுள்ள பல நாடுகளும்,உலக முதலாளித்துவமும், அந்தக் குடியரசை அழித்திடத் தீவிரமாக முயன்று கொண்டிருக்கும் சூழலில் அந்த ஆட்சி நடைபெற்று வந்தது.
பாரிஸ் கம்யூன் நாயகர்கள் 72 நாட்கள் சாதித்த சாதனையை ஒருபடி மேலே கொண்டு சென்றதில் லெனினுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
பிரெஞ்ச் மார்க்சியரான ஜார்ஜ் சோரேல், ‘‘வன்முறை குறித்த சிந்தனைகள்”என்ற நூலில் மார்க்சின் ‘வர்க்கப் போராட்டம்’ கருத்தாக்கத்தைப் பற்றி எழுதுகிறார்.
“தொழிலாளியின் ஆன்மாவில் உள்ளுறைந்துள்ள,புரட்சி உற்சாக உணர்வின் மீது, நாம் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.இதில் தவறினால்,முதலாளித்துவ ஆதிக்கத்தினை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.”
இதில், லெனின் மகத்தான திறமை கொண்டவராக விளங்கினார். 1917-ல் முதலாளித்துவம், அதிகாரத்திற்கு வந்த பிறகு ரஷியக் கம்யூனிஸ்ட்கள் சோசலிசப் புரட்சி வர நீண்ட காலம் பிடிக்கும் என நம்பினார்.  உழைக்கும் வர்க்கத்தின் புரட்சி ஆற்றலை உணர்ந்த லெனின், ‘‘ஏப்ரல் கருத்துரைகள்”என்ற பிரசித்திபெற்ற புரட்சிக்கான வேலைத் திட்டத்தை உருவாக்கி,அடுத்த கட்டத்திற்கு புரட்சியை வழிநடத்தி, வெற்றியை சாதித்தார்.
டிராட்ஸ்கி இதைப்பற்றி விளக்கும்போது, “லெனின் ‘தற்காலிகத் தலைவர்களின்’ எண்ணவோட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், வர்க்கங்களுக்கு இடையேயான உறவுகளையும், வெகுமக்கள் எழுச்சியின் தர்க்கத்தையும் கணக்கில் கொண்டார்” என எழுதுவார்.
உழைக்கும் வர்க்கத்தின் ஆற்றலை வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கும், இதர சாதாரண நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினால், உள்ளுறைந்துள்ள புரட்சி ஆற்றல் வெளிவராமல் முனை மழுங்கிப்போகும். இது முதலாளித்துவத்தின் இருப்பை நீடிக்கச் செய்திடும்.
எனவே புரட்சி உணர்வைப் பிரகாசிக்கச் செய்வதும், குறிப்பிட்ட நிலைமைகளில் புரட்சி வேலைத்திட்டத்தையும், நடைமுறை அரசியல் உத்திகளையும் உருவாக்கிட வேண்டும்.இதற்கு, லெனினியமே வழிகாட்டும் தத்துவம். ஒருவர் மார்க்சிஸ்டாக இருந்தால் மட்டும் போதாது, லெனினிஸ்டாகவும் இருக்க வேண்டும்.
இன்று நடத்தப்படும், அன்றாட பொருளாதார கோரிக்கை இயக்கங்கள், சமூக சீர்திருத்தப் பிரச்சாரங்கள் பெரும்பாலும் புரட்சி இலட்சியத்தை இறுதி இலக்காகக் கொண்டு நடத்தப்படுவதில்லை.இறுதி இலட்சியத்தை வெட்டிவிட்டு அல்லது ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு முற்போக்காளர் பலர் இயங்கி வருகின்றனர். அப்பட்டமாகச் சொல்வதென்றால்,இது முதலாளித்துவ அமைப்பை முட்டுக்கொடுத்து நிலைநிறுத்தும் வேலை.
சோரேல் “பாட்டாளி வர்க்க அரசு”  என்ற தனது கட்டுரையில் எழுதுகிறார். “பலமுறை பல எழுச்சிகள் நடைபெறுகின்றன. வன்முறை வெடிப்புக்களாகவும் கூட அவை எழுகின்றன;ஆனால்,அவற்றில் உண்மையான சோஷலிசத் தன்மை ஏதும் இல்லை.அவற்றில் வெளிப்படும் உணர்வுகள்,தேவைகள் அனைத்தும் முதலாளித்துவ ஒழுங்கமைப்பை மாற்றாமலே சாதிக்கக் கூடிவை.”
அவர் மேலும் எழுதுகிறார்:  ‘‘இதனால்தான்,தங்களது சொந்த செழிப்புக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் போது பல புரட்சியாளர்கள், காலப்போக்கில், தங்களது புரட்சி உறுதிப்பாட்டை கைவிட்டுவிடுவதைப் பார்க்க முடிகிறது.”
இந்த வரிகள் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதப்பட்டாலும் இன்றளவும் நீடிக்கும் அன்றாட நடப்புக்களாக உள்ளன.புரட்சி உறுதிப்பாட்டைக் கைவிடுபவர்கள் செல்வச்செழிப்புக்காக மட்டும் அப்படி மாறுவதில்லை;புரட்சிக்கான தகுதி,திறமை வற்றிப் போவதாலும் அவர்கள் உருமாறுவதாக சோரேல் குறிப்பிடுகிறார்.
லெனினியத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறபோது லெனின் மேற்கொண்ட  அனைத்து நடவடிக்கைகளையும் அப்படியே காப்பியடித்து செயல்பட வேண்டும் என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே போன்று, பெயரளவிற்கு அவரது பெயரை உச்சரிப்பதும்,நடைமுறையில் அவரது சிந்தனைகளைப் புறக்கணிப்பதும் தவறானது. இந்தத் தவறு,  இன்றும் உலக சோஷலிச இயக்கத்தில்  தொடருகிறது.
புரட்சிகர கட்சியினைக் கீழ்மட்ட அளவில் அரசியல் உயிரோட்டத்துடன் கட்டுதல்,அரசியல் நடைமுறைக் கொள்கை, வர்க்கத்திரட்டல் போன்ற பல அம்சங்களை அவரிடமிருந்து உள்வாங்க வேண்டும். ஆனால், செயல்படுகிறபோது ஆங்காங்கு உள்ள வர்க்க நிலைமைகளை ஆராய்ந்து வேலைத்திட்டத்தை உருவாக்கி செயல்பட வேண்டும்.இதற்காக லெனினை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.
இன்றைய உலக அமைப்பு ஏகாதிபத்திய ஆதிக்கம் கொண்டது. அதன் காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகள்  இந்தப் பூவுலகை அழிவின் விளிம்பில் தள்ளியுள்ளன.  “சோசலிசம்;அது இல்லாவிட்டால் காட்டுமிராண்டித்தனம்தான்” என்ற ரோசா லக்சம்பர்க்கின்  வைர வரிகள் இன்று அதிக அளவில் பொருந்துகிறது.இன்றுள்ள சூழலில், மனித இனத்தைப் பாதுகாக்க சோசலிசம் அவசியம் மட்டுமல்ல;அவசரத் தேவையும் கூட.
“சோசலிசம் உறுதியாக வந்தே தீரும்” என்ற கருத்து வரலாற்று நோக்கில் சரியானது.ஆனால்,நடைமுறைக் கருத்தாக இதனை உச்சரிப்பது வெறும் வேத மந்திரமாகப் போய் முடியும்.இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று, இது செயலின்மையை ஏற்படுத்துகிறது.மற்றொன்று, இறுதியான  புரட்சிக் குறிக்கோளினை  மையப்படுத்தாத  செயல்பாட்டுக்கு இது இட்டுச் செல்கிறது. ‘‘சோசலிசம் உறுதியாக வந்தே தீரும்” என்று அமைதி காக்க லெனினியம் அனுமதிப்பதில்லை.புரட்சிக் கடலில் இடையறாமல் வியூகங்கள் அமைத்து நீந்திக் கொண்டே இருக்க அது தூண்டுகிறது.தோல்விகள் வரும்போது, அடுத்த தாக்குதலை முதலாளித்துவத்தின் மீது அசுரத்தனமாக தொடுத்திட லெனினியம் நம்மைப் பணிக்கிறது.
லெனின் கட்சி அமைப்பில் செயல்படுவோர் அனைவரையும் அறிவுஜீவிகளாகப் பார்க்கிறார்.முதலாளித்துவ அரசுக்கும்,அமைப்புக்கும் எதிராக தன்னெழுச்சியாகவும், திட்டமிட்டும் எழும் போராட்டங்களை அரசியல் போராட்டமாகத் தரம் உயர்த்துவதற்கு,போராட்டத்தில் உள்ளோரை பயிற்றுவித்து,கல்வி புகட்ட வேண்டுமென லெனினியம் பணிக்கிறது.இது கட்சி அமைப்பில் செயல்படுவோரின்  கடமை என்பது லெனினியப் பார்வை.இதைச் செய்யாமல் அன்றைய தேவைகளையொட்டி மட்டும் செயல்படுவது, மக்கள் போராட்டங்களை  நீர்க்குமிழிகளாக மறைந்துபோகச் செய்திடும். அவ்வாறு செயல்படுவது,  முதலாளித்துவ ஆதிக்கத்தின்  சிறு அணுவைக் கூட கரைத்திடாது.
எனவே லெனினியத்தை எந்தச் சூழலிலும் கைவிடாமல், வலுவாகப் பற்றிக்கொண்டு செயல்படுவது மார்க்சிய இயக்கத்தின் உயிர்மூச்சாக இருக்க வேண்டும்.
(முற்றும்)

Related posts