You are here
நூல் அறிமுகம் 

நேயமும் தோழமையும் சமத்துவமும் விழையும் குரல்….

எஸ்.வி. வேணுகோபாலன்

நாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை.
நகரமயமாக்கலில் நாம் இழக்கும் நேயத்தை, பறிகொடுக்கும் பறவை உறவுகளைப் பேசுகிறது தலைப்புக் கதை. வெளுப்பான தலையை சாயமிட்டுக் கருப்பாக்கிக் கொள்வதை குழந்தைகள் செல்லக் கிண்டலுடன் நிராகரிப்பதைச் சொல்கிறது ‘நரைப்பூ’.   புறக்கணித்த பெற்றோரும் பிள்ளைகளின் கஷ்ட காலத்தில் துணைக்கு வரும் அன்பை எடுத்துரைக்கிறது ‘தொப்புள் கொடி’.
‘மீட்பு’ கதை, வழியில் கிடைக்கும் பணப் பையை நாமே வைத்துக் கொள்ளலாமா, உரியவரிடம் சேர்த்து விடலாமா என்ற மனித மனத்தின் சஞ்சலத்தை விவாதிக்கிறது. இறுதியில் நேர்மை மேலோங்குமிடத்தில், மனித நேயமும் பொங்குவதை ஜனநேசன் முன்னிலைப்படுத்துகிறார். ‘உறுத்தல்’ கதை,  காலம் கடந்தும் மனிதர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு என்பதன் எளிய தரிசனம். ‘வாக்குச் சாவடி எண் 108’ அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் படும் அவஸ்தைகளை நேரடி ஒளிப்பதிவாகக் காட்டுகிறது.
தொகுப்பில், ‘முரண் நகை’ மிகவும் வித்தியாசமான கதைக் களத்தில் பிறக்கிறது. தங்கத்திற்குக் கட்டுப்பாடு இருந்த கெடுபிடி காலத்தில் ஊரார் வீட்டு தங்கத்தை மடியில் கட்டிக் கொண்டிருக்கும் பொறுப்பான பொற்கொல்லர் ஒருவரது வாழ்க்கை குறித்த அற்புதமான கதை. ஆனால் அது அரசு ஊழியரான மகனின் வாழ்க்கைப் பாடுகளோடு ஒப்பிடப்பட்டு வேறு தளத்திற்கு நழுவிப் போய்விட்டது. ‘வேரும் விழுதுகளும்’ கதை, தாத்தா பாட்டியின் அருமையை அறியாத பேத்தியின் பக்குவமற்ற எதிர்வினைகளை முன்வைத்து வீட்டைவிட்டுப் போய்விடும் பெரியவர்களைக் குறித்த அதிர்ச்சி முடிவில் நெருடத்தான் செய்கிறது.
‘அகத்தீ’ கதை, தன் மனமாற்றத்தை ஏற்குமாறு கெஞ்சும் கணவனை மன்னிக்கும் மனைவியை அடையாளப்படுத்தினாலும், அவனது ஏச்சை எக்காலத்திலும் மன்னிக்க முடியாதென்று அவள் இருந்த முந்தைய நிலையையும் பேசுகிறது. ‘நவீன காந்தாரிகள்’ கதையில், தனது வாழ்க்கைப் போக்கு குறித்த சுதந்திரச் சிந்தனையில் உருவேறி வரும் நாயகி, தனது பாட்டி தரும் நம்பிக்கைச் சொல்லில் விடியல் தென்படுவதை உணர்வதாக முடிகிறது.
‘பூங்குன்றம் புதருக்குள்’ கதை, வெளிநாட்டு வேலை குறித்த கனவுகள் வைத்திருக்கும் இளம் மனைவியோடு முரண்பட இயலாது தவிக்கும் வாலிபனின் மனவோட்டத்திற்கு வரலாற்று ஆய்வும், இலக்கியத் தரவுகளுமான பின்புலத்தில் கிடைக்கும் விடையோடு முற்றுப் பெறுகிறது. ‘சூடாது கெடுத்த மாலை’,  மனத்தில் வரித்த மனிதரை மணக்க முடியாது போனாலும், அந்த நினைவுகளைக் கலைக்க மறுக்கும் பெண் மனம் குறித்த வித்தியாசமான கதை. கதையின் மையப்புள்ளியைச் சென்று தொடும் வழியில் நடக்கும் நீள நடையின் ஆயாசத்தைச் சொல்லாது இருக்க முடியவில்லை.
‘தெளிவு’ கதை, கொஞ்சம் தப்பினாலும் சாதியப் பார்வையில் தவறாகப் புரிந்துகொண்டுவிடத்தக்க சம காலத்துச் சறுக்கலைப் பேசுகிறது. ‘காலக் கணிதம்’ சாதியப் பிடிவாதம் தளர்ந்திருக்கும் மாற்றமான சூழலைச் சொல்லி முடிகிறது..
உள்ளார்ந்த நேயமும், தோழமையும், சமத்துவமும் கேட்கும் ஒரு குரல் ஜனநேசனின் கதைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவரது கதைக்கருவி, சாத்தியமற்றுத் தெரிகிற பொதுவெளியிலும் மனிதரது மனங்களில் புகுந்து அவர்கள் பார்வையை விசாலப் படுத்தவும், சொற்களை ஒழுங்கமைக்கவும், உள்ளங்களைத் துடைத்து மெழுகி வைக்கவும் முனைகிறது. நம்பிக்கை ஒளியற்ற சபிக்கப்பட்ட காலத்தையே பேசிக்கொண்டிருப்பதைவிடவும், மாறியிருக்கும் சமூகத்தின் முகவரிக்கான அவரது தாகம் இந்தத் தொகுப்பின் சில கதைகளில் துருத்தி நிற்கவே செய்கிறது.
ஆனால் அதிகம் பேசப்படாத வாழ்க்கைகள் சிலவற்றை, நிகழ்வுகளை, ஆவேசமான பெண்ணுள்ளத்தை, அதிகார தர்பாரையும் எதிர்க்கத் துணியும் நெஞ்சுரத்தை  ஜனநேசன் தனது கருப்பொருளாக எடுத்துக் கொள்வது பாராட்டுக்குரியது. ச.தமிழ்ச்செல்வன் அவர்களது மிக நேர்த்தியான அணிந்துரை அவரது பங்களிப்பை அருமையாகச் சிறப்பிக்கிறது.

Related posts