You are here
தூரத்து புனையுலகம் 

தூரத்துப் புனைவுலகம் – 16 சாம்பல் படிந்த துயரப் பொழுதுகள்

ம. மணிமாறன்

ரத்தம் கசிகிற வரலாற்றுப் பக்கங்களை எழுதிச் சென்றபடியே இருக்கிறது மத அடிப்படைவாதம். அன்பு, கருணை, நல்வழி என பசப்பிக் கொண்டு கச்சிதமாக நாம், பிறர் என்கிற பேதத்தை நீடித்திருக்கச் செய்வதில் வெற்றியும் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. தன்னையும், தான் சார்ந்த மதப் பற்றாளர்களையும் தவிர மற்றவரெல்லாம் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் உறுதியாகவும் இருந்து வருகிறது. இந்த மனநிலையை வைரஸ் கிருமியாகப் பரப்பி வெற்றிகொள்ளவும் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டாக மதத்தைப் பயன்படுத்துவதிலும் தொடர்ந்து விதவிதமான திட்டமிடல்களை நிகழ்த்திக் கொண்டே வருகிறது. நம்முடைய காலத்தின் கண்ணீர்த் துளிகளாக வரலாறு முழுக்க நிறைந்திருப்பது மத அடிப்படைவாதம் நிகழ்த்திய யுத்தங்களே.
மனித குல அழிவினை நிகழ்த்திடத் துடித்தலையும் மத அடிப்படை வாதம் நிகழ்த்திய ஆறாத வடுவாக இந்தியத் துணைக் கண்டத்தின் பக்கத்தில் “டிசம்பர் 6” எனும் கருப்புநாள் எழுதப்பட்டு விட்டது பெரும் துயர்தான். 1992லிருந்து இன்று வரையிலும், ஏன் இனி வரும் காலங்களிலும் கூட ‘டிசம்பர் 6′ நெருங்குகிற போது பெரும் பதட்டமும், அச்சமும் யாவர் மனதிலும் உருவாகிடத்தான் செய்யும். இழந்தவர்களையே எரிச்சலுறச் செய்திடும் செயல்களை எதிர்கொள்வது எப்படி என தடுமாறிக் கிடக்கிறது எளிய மதநம்பிக்கையாளர்களின் மனம். தனக்கு என நேர்ந்துவிட்ட மத நம்பிக்கையைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எந்தத் தவறையும் செய்திடாதவர்களின் மீது தீவிரவாதிகள் எனும் முத்திரையை வலிந்து குத்திப் பார்த்திடும் குரூரமனநிலையை நிலமெங்கும் பரப்பிட உதவுகிறது டிசம்பர் 6. அந்தக் கருப்பு நாள் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிற துயரத்தை எழுத்தில் வடித்திட முடியவில்லை எழுத்தாளர்களால் என்பதுதான் நிஜம்.
இந்தக் கருப்பு நாள் நிகழ்த்திய பெருந்துயரினையும், மகா அழிவுகளையும் எழுதிச் செல்வதைத் தவிர தனக்கு வேறுவழியே இல்லை என்றான போது தஸ்லிமா நஸரின் எழுதிய நாவலே லஜ்ஜா (அவமானம்). எளிய படைப்புகள் உணர்த்திடும் உண்மைகளை எதிர்கொள்ள முடியாத, மதவெறியைக் குடித்துப் பெருத்த அரசதிகாரம் என்ன செய்யுமோ அதையே செய்தது. பத்வா தரப்பட்டது. மதவிலக்கம் செய்யப்பட்டார்.
ஒற்றை நாவலுக்காக ஏதிலியாகி கண்டம் விட்டு கண்டம் துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிற தஸ்லிமாவின் ‘லஜ்ஜா’ நாவல் தமிழில் முதல் முறையாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. கிழக்கு பதிப்பகம் லஜ்ஜாவை தமிழ்ப்படுத்தியமைக்கான அரசியலைத் தெளிவாக புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்புகளாக்கியிருக்கிறது. நாவலை வாசித்திட வாசக மனதைத் தயார் செய்திடும் கருவியாக பின் அட்டைக் குறிப்புகள் எழுதப்படுகின்றன. லஜ்ஜாவை வாசித்த பிறகான நிமிடங்களில் நாமே வேறு பின் அட்டைக் குறிப்புகளை எழுதிவிடுகிறோம். பெரிய சிரமம் எதுவுமில்லை. ‘‘இந்து” என்று வருகிற இடத்தில் ‘‘இஸ்லாம்”  எனவும் பங்களாதேஷ் எனும் இடங்களில் எல்லாம் ‘‘இந்தியா” என்றும் எழுதிவிட்டால் அப்படியே அது நம் நிலத்தின் வரலாறாக நாவலையே மாற்றிவிடுகிறது.
நூற்றாண்டுகளாக உயர்ந்துநின்ற வழிபாட்டுத் தளத்தை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள் எழுதிய ரத்தம் தோய்ந்த வரலாற்று நாட்களின் முதல் 13 நாட்களையே லஜ்ஜா காட்சிப்படுத்துகிறது. நாவலை எழுதிட நஸ்ரின் செய்தித்தாள் குறிப்புகளையே வரிசையாக அடுக்குகிறார். நடந்த சம்பவங்களை தினசரி பத்திரிகைகளின் வழியாக ஒவ்வொன்றாக முன் வைக்கிறார். நாவல் முழுக்கவும் செய்திகள் நகர்ந்து கொண்டேயிருப்பதான தன்மையில் அமைந்துள்ளது ஒரு புதிய எழுதுதல் முறையாகும். ‘‘விசுவ இந்து பரிஷத், பாரதிய ஜனதா, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக், பஜ்ரங்தளம் என்ற இந்த அமைப்புகளின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் இந்த மதப்பயங்கரவாதம் அரங்கேறியது. மத்திய ரிசர்வ் போலீஸ், உத்திரப் பிரதேசச் சிறப்புக் காவல்படையினர் என எல்லோரும் ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் கட்டடம் இடிபடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தங்கள் மதத்தின் பால் அதீதப் பற்றுக் கொண்ட அந்த இந்துக்கள், பங்களாதேசத்தில் இரண்டரைக் கோடி இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதை அறிவார்களா?  இந்தியாவை உலகத்திலிருந்து பிரித்து ஒரு தனித்த அமைப்பாகப் பார்க்கவே முடியாது என்பதை ஓர் அரசியல் கட்சியாக ஏன் பாரதிய ஜனதா கட்சி பார்க்க மறுக்கிறது? இந்தியாவில் நேரும் தவறுகளின் வலியை உலகம் முழுவதும் உணர வேண்டியிருக்கும். குறைந்தது அண்டை நாடுகள் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும் என்பது ஏன் அந்த மதவெறியர்களுக்குப் புரியவேயில்லை? என கேள்விகளை கணக்கின்றி முன் வைத்தபடி நகர்கிறது நாவல். வரலாற்றின் பக்கங்களில் முன்னும், பின்னுமாக ஓடிக் கொண்டேயிருக்கிறது நாவல். அதற்கான சகல சாத்தியங்களையும் புதினம் என்கிற அசாத்தியமான இந்த இலக்கிய வடிவம் நஸ்ரினுக்கு ஏற்படுத்தித் தருகிறது.
பாபர் மசூதி இடிப்பின் வலியை ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் எதிர்கொள்வார்கள¢? எதிர் கொண்டார்கள் என்பதுவே நாவலின் மையப்புள்ளி. இந்திய இஸ்லாமியர்களின் மனம் அதனை எப்படி எதிர்கொண்டிருக்கும் என்பதற்கான வலிமையான படைப்புகள் எதுவும் இதுநாள் வரையிலும் எழுதப்படவில்லை. அந்தத் துயர நாட்களின் ரேகை படிந்த பங்களா தேசத்தின் காட்சிகளே நாவலின் களம். சிறுபான்மை என்பது எப்படிப் பாதுகாப்பற்ற சூழலையும், அச்சம் கொதித்துக் கிடக்கும் மனநிலையையும் ஏற்படுத்தும் என்பதனையே நாவல் காட்சிப்படுத்துகிறது. பங்களாதேசில் பெரும்பான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் எப்படி சிறுபான்மை இந்து மதத்தினர் மீது வன்முறையை ஏவினார்கள் என்பதை 13 நாட்களின் சம்பவங்கள் வழியாக முன்வைக்கிறது புதினம். மதவெறியும், பெரும்பான்மை மக்கள் திரளும் நிகழ்த்திய மனித  வேட்டையின் காட்சிகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. மக்களைப் பலியெடுப்பதில் மதங்களுக்குள் வேதமில்லை என்பதையே நஸ்ரின்  ‘மாயா’ எனும் இளம் பெண்ணின் வாழ்க்கை நாட்களின் மூலமாக காட்சிப்படுத்துகிறார்.
முதல் நாளில் செய்தி எட்டிய போது பங்களாதேஷின் இந்துக்குடும்பங்களைச் சூழ்ந்த பதட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல யாவரும் உயிரைக் கையில் பிடித்தபடி இந்தியாவிற்கு வந்து குடியேறிடவே நினைக்கிறார்கள். ஒவ்வொருமுறை  மைமென்சிங்கிலிருந்து ஃபுல்பாரியா போகும் நீராவி எஞ்சின் ரயில்கள் புறப்பட்டபோது கார்டின் விசில் சத்தத்துடன் சில உடைந்த உள்ளங்களின் மெல்லிய அழுகைகளும் சேர்ந்து கொண்டன. தங்களுக்குத் தெரிந்த ஒரே நாட்டை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்றால் மன நிலை பிறகு எப்படி இருக்கும். இப்படியான துயர் மிகு நெடும் பயணத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப் பகுதிகள் எதிர்கொள்வது இப்போது மட்டுமல்ல என்பதையும் நாவல் எழுதிச் செல்கிறது.
ராட்கிளிப் எனும் வெள்ளை அதிகாரியின் மேசையின் மீது விரிந்து கிடந்த தேச வரைபடம் நினைத்திருக்காது, அவன் வரையப்போகும் பென்சில் கோட்டிற்கு இத்தனை உயிர்களைப் பலியெடுக்கும் வக்கிரம் நிறைந்திருக்கும் என்று. 1947ல் தேசப் பிரிவினையின் போதும், இரண்டு திசைகளிலுமாக மத அடையாளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பயணித்த குழுக்களின் துயரத்தையும் கூட நாவல் நமக்குள் கடத்துகிறது. அது அன்றோடு நின்று விடவில்லை. கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பட்ட 1952ல் நடந்த கிழக்கு வங்காள மக்கள் பாகிஸ்தானிய அராஜக ஆட்சிக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போதும் கூட இப்படியான இடப் பெயர்தல்கள் நிகழத்தான் செய்தது. 1990களில் துவங்கி, 1992 டிசம்பர் 6 இந்திய கருப்பு நாளாக மாறிய பிறகான நாட்கள் வரையிலும் இந்தக் கொடூரப் பெரும் பயணம் துயரத்தைச் சுமந்து நிகழ்ந்தபடியே தான் இருக்கிறது.
மிக மென்மையான வார்த்தைகளில் இப்போது (1992ல்) நடந்து கொண்டிருக்கும் கொடூரங்களையும், அத்துமீறல்களையும் கலவரம் என்று அடையாளப்படுத்த முடியாது. நஸ்ரீனின் வார்த்தைகளில் வேண்டுமானால் இப்படிச் சொல்லிப் பார்க்கலாம் ‘‘கலவரம் என்பது இதுதானா? இதைக் கலவரம் என்று சொல்ல முடியுமா? கலவரம் என்றால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை மூர்க்கத்தனமாகத் தாக்கி அழிப்பதா? இல்லை இது மாதிரியான விஷயங்களைக் கலவரம்  என்ற சொல்லில் அடக்கிவிட முடியாது. ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் புனிதத்தையும், அந்தரங்கத்தையும் மூர்க்கத்தனமாக, அடாவடியாக, இரக்கமின்றித் தாக்குதல் நடத்தி நிர்மூலம் ஆக்குகிற இந்தச் சம்பவங்கள் கலவரம் என்கிற எளிய சொல்லில் அடங்கா. இது சர்வாதிகாரம், மிருகத்தனம்” இப்படியான மிருகத்தனங்களுக்கு மத வேறுபாடுகள் இல்லை. சிறுபான்மையினராக இருக்கிற மக்கள் தொகையை விரட்டி அடிப்பது, சொத்துக்களை சூறையாடுவது, புலம் பெயர மறுப்பவர்களைப் படுகொலை செய்வது என்கிற வன்முறைகளை மத நம்பிக்கைகளின் பெயரால் பங்களாதேஷில் முஸ்லிம்கள் செய்தால், அயோத்தியில், குஜராத்தில், வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல தெற்கே கோயம்புத்தூர் வரை இந்து மதவெறியர்கள் செய்கிறார்கள். பங்களாதேஷின் ஜமாத்திகளுக்கும், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரத்திற்கும் மதங்கள் வேறு வேறுதான். ஆனால் அவர்களின் நோக்கங்கள் ஒன்றுதான்.  ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒரே சட்டம், ஒரே நீதி என யாவற்றையும் ஒற்றைத் தன்மைக்குள் கட்டுக்குள் வைப்பது, மக்களுடைய பன்மைத்துவ கலாச்சாரத்தையும், பன்மை அடையாளங்களையும் இல்லாமல் ஆக்குவது. அப்படியான வேலைத்திட்டங்களோடுதான்  உலகெங்கும் கலாச்சார தேசியம் பேசுகிறவர்கள் இந்த நிமிடம் வரையிலும் கூட இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மதமோதல்களை பத்திரிகை செய்திகளாக மட்டும் பார்த்துப் பழகியவர்களுக்கு துயரத்தினுள் வீழ்ந்து குழம்பிக் கிடக்கும் மனநிலையினைப் புரிந்து கொள்ள முடியாது. ‘டிசம்பர் 6′ நிகழ்வினைத் தொலைக் காட்சியில் பார்த்திட்ட குடும்பத்தின் பதட்டமும், அந்தத் துயரிலிருந்து வெளியேறிட ஒவ்வொருவரும் கைக் கொள்ளும் வழிமுறைகளுமே நாவலாக 230 பக்கங்களில் நிறைகிறது. ‘‘மாயா” எனும் அந்தக் குடும்பத்தின் கடைசி மகள் உடனடியாகத்  தன்னுடைய இஸ்லாமிய நண்பனுடன் சேர்ந்து தங்கி விடுவது என்று நினைக்கிறாள். அவளுடைய தாய் 17 வயதில் தனக்குத் திருமணமான நாளில் இருந்து இப்படியான கலவரங்கள் முகிழ்க்கிற போதெல்லாம் பேசாமல் குடும்பத்தோடு கல்கத்தாவிற்கு போய்விடுவோம் என முயற்சித்துக் கொண்டேயிருக்கிறாள்.  ஒரு போதும் இந்த நிலத்தைவிட்டு என்னால் எங்கும் போக முடியாது,  ஏன் தெரியுமா? இந்த நாடு எங்களுடைய நாடு. நான் முதலில் ஒரு வங்காளி, அதன் பிறகே நான் ஒரு இந்து. இந்து என்கிற ஒரே காரணத்திற்காக பிறந்த மண்ணான பங்களாதேஷை விட்டுப் போக முடியுமா? என்று கேட்கிறார் சுதாமய். இந்தக் குடும்பத்தின் தலைவர் அவர். மதபேதமற்று யாவருக்கும் சிகிச்சையளித்து வருகிற டாக்டர் அவர்.
சுதாமய் எனும் மருத்துவர் பிறந்த மண்ணை விட்டு வெளியேற மறுக்கத்தான் செய்வார். 1956ல் நடந்த மொழிப்போராட்டத்தின் நாட்களிலும், 70களின் புரட்சி தினங்களிலும் பங்களாதேஷ் முழுவதும் மிகவும் தீவிர அரசியல் நடவடிக்கையில் இயங்கியவர். முஸ்லிம்கள் அனைவரோடும் இணைந்து நாம் அனைவரும் வங்காளிகள் என்று பாகிஸ்தானிய சர்வாதிகாரத்திற்கு எதிராக இயங்கியவர். போராட்டக் களங்களில் அவரின் கண்ணுக்கு எதிரே இந்து, இஸ்லாமியர், பௌத்தர் எனும் பேதங்களற்று களப்பலியான தன்னுடைய சக தோழர்களின் தியாகத்திற்கு மதிப்பில்லையா எனக் கேட்டுக் கொண்டேயிருப்பதால்தான் அவர் பங்களாதேஷினை விட்டு எந்நாளும் வெளியேற மாட்டேன் என்பதில் மிகுந்த உறுதியோடு இருந்து வருகிறார். எழுபதுகளில் சொந்த ஊரை விட்டு ரகசியமாக இஸ்லாமியப் பெயர்களில் மொத்தக் குடும்பமே வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நாட்களில் கூட இந்த நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என்பதில் மிகுந்த உறுதியோடு இருக்கிறார். அந்த உறுதியும், தேசப்பற்றும் எப்படி மத அடிப்படைவாத அணுகுமுறைகளால் கலைகிறது என்பதை 13 நாட்கள் சம்பவங்களின் மூலமாக அடுக்குகிறார் தஸ்லிமா.
சுதாமய்யின் மகனான சுரஞ்சன் பங்களாதேஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் நம்பிக்கை கொண்டவன். அவன் கலவரங்களின் சுவடுகளால் மனக்காயப்படுகிறான். தன்னுடைய நண்பர்களாக அமைந்திட்ட இஸ்லாமிய, இந்துக்களோடு எப்போதும் விவாதிப்பவனாகவே இருந்து வருகிறான். கற்ற தத்துவம்,  ஜனநாயக, சோசலிச கோட்பாடுகள், மார்க்ஸ், லெனின் தத்துவங்கள், டால்ஸ்டாய், கார்க்கியின் தத்துவங்கள் இவையாவும் அவனுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு மாறாகப் பெரும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.
பங்களாதேஷின் தெருவெங்கும் பாபர் மசூதி இடிப்பிற்கு பலியெடுப்பது என்று சொல்லி இந்துக்கோயில்களை இடித்துத் தள்ளுகிறார்கள். மார்க்ஸியம் கற்றதனால் நான் இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன். எதற்காக இத்தனை மதநல்லிணக்க ஊர்வலங்கள்? இடித்த கோயில்களை மறுபடியும் கட்டித் தருவதாக சொல்வதனால் மட்டும் அப்போதைய காயத்தை ஆற்றிட முடியுமா? தொன்னூறுகளின் தெற்காசிய இளைஞனின் சாயலில் வெளிப்படுகிற சுரஞ்சன் இருப்பினால் ஏற்படும் துயரத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருக்கிறான். ஒரு நாளும் வீடடைந்திட விரும்பிடாத மனதினைக் கலவரங்களும், மத அடிப்படைவாதிகள் மாற்று மதத்தினர் மீது நிகழ்த்துகிற வன்முறைகளும் சுரஞ்சனிடத்தில் ஏற்படுத்துகின்றன. கலவரங்களுக்குள் அடையாளம் மறைத்து அலைகிற நாள் ஒன்றில் கட்சி அலுவலக வாசலில் உடைந்த செங்கற்களுக்கும், இடிபாடுகளில் இறைந்து கிடக்கும் சுண்ணாம்புக் கட்டிகளுக்கும் இடையே கார்க்கியின் ‘‘தாய்” நாவல் எரியூட்டப்பட்டு எரிகிறது. கருகி உருகிடும் அந்தப் புத்தகத்தின் ஜ்வாலையில் இருந்து வெளிப்படும் உக்கிரம் சுரஞ்சனை அதுவரையிலும் அவனிடம் இருந்துவந்த நம்பிக்கையைக் கலைக்கிறது.
இந்துவாகப் பிறக்க நேர்ந்திட்ட ஒரே காரணத்தினால் கடத்தப்பட்ட தன்னுடைய தங்கையான ‘‘மாயாவை”த் தேடியலைகிற துயரப் பொழுதுகளில் சுரஞ்சன் தன்னுடைய தந்தையிடமும், தாயிடமும் தொடர்ந்து தர்க்கிக்கிறான். இது ஒன்றும் நாம் வாழ வேண்டிய நாடு அல்ல. எல்லாவற்றையும் இழந்தபிறகு பங்களா தேசத்தில் வாழ்வதற்கு என்ன தேவையிருக்கிறது என சுதாமயிடம் விவாதித்துக் கொண்டேயிருக்கிறான். ஒரு நாள் இரவினில் கடும்குளிரில் அதுவரையிலும் தான் சேகரித்திருந்த புத்தகங்களின் பக்கங்களைக் கிழித்து மலைபோல் அடுக்கித் தீ மூட்டுகிறான். தான் நேசித்துக் கற்ற மார்க்சும், லெனினும், ஜ்வாலைகளாகி வெளியினில் கரைகின்றனர். டால்ஸ்டாயும், தாகூரும் தீக்குவியலுக்குள் இருந்து விம்மி அழுகின்றனர். தொலைவினில் இருந்து இக்காட்சியைக் கண்ணுற்ற சுதாமயிக்கு அதன் பிறகு என்ன செய்வது என்பதே புரியவில்லை. இது நம்முடைய நாடு அல்ல என்கிற முடிவிற்கு வந்து சேர்கிறார். மத பயங்கரவாதத்தின் செயல்பாடுகளால் ஐம்பது வருடங்களாக அவருள் இருந்த எல்லா உறுதிகளும் கலைந்து போய் விடுகிறது. இனி அந்தக் குடும்பத்திற்கு அவர்களுடைய உறவினர்களின் பாதையில் இந்தியாவிற்குச் செல்வதைத் தவிர  வேறு மார்க்கமேயில்லை.
பங்களாதேசம் மதச்சார்பின்மையை ஆதாரமாகக் கொண்டிருந்த நாடு. அதன் அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்பட்டு இஸ்லாம் அரச மதமாக அறிவிக்கப்பட்ட பிறகு இப்படியான மனநிலைகளை நோக்கி  சிறுபான்மை மதத்தினர் நெட்டித் தள்ளப்பட்டனர். மதச் சார்பின்மையைக் கைவிட்ட தேசத்திற்கு சொந்தமக்களை வீடற்றவர்களாக்கி நாடுகடத்துவதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. சொந்த மக்களை அகதிகளாக்குவதையே மார்க்கமாகக் கொண்டிருக்கும் மத அடிப்படைவாதத்திற்கு எந்தப் புவியியல் எல்லையிலிருந்தாலும் நிறம் ஒன்றுதான் என்பதே லஜ்ஜாவை வாசித்த பிறகான நிமிடங்களில் நமக்கு ஏற்படுகிறது. மதவெறியர்களால் கடத்திச் செல்லப்பட்ட போது காப்பாத்துங்க, காப்பாத்துங்க என மாயா கதறி அழுது கை உதறிய போது, அவள் கையிலிருந்து தெறித்து விழுந்த சோற்றுப் பருக்கையின் துக்கம் நம் நெஞ்சை அடைக்கிறது.

Related posts