You are here

கருத்து சுதந்திர உரிமைப் போர் தொடரட்டும

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்தி வரும் எழுச்சிமிகு உரிமைப் போர் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 2010ல் எழுதப்பட்ட ஒரு படைப்பு மாதொரு பாகன். குழந்தைப் பேறில்லா தம்பதியர் கோவில் தேர் இழுத்தால் பிரார்த்தனை நிறைவேறும்  எனும் நம்பிக்கைக்குப் பின்னால் நடக்கும் உலகறிந்த உயர்சாதி வக்கிரத்தைத் தோலுரித்த படைப்பு. ஆனால் 2014ல் எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது மாவட்டமான நாமக்கல் (திருச்செங்கோடு) தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் பணமுதலைகள் அடிக்கும் பகல் கொள்ளையைக் கடுமையாக விமர்சித்து எழுதியதும், பிரச்சனையை எதிர்கொள்ளவும் பதில் தரவும் திராணியற்ற பணம் படைத்தோர் கூட்டம் அவரது படைப்புகளுக்கு சாதி வர்ணம் பூசி இந்துத்வா வெறியாட்டத்தைத் தொடங்கி  அதை அரசின் அதிகார அமைப்புகள் ஆதரவோடு தனது ‘சிவ தாண்டவத்தை’ காவி தர்பாரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த உண்மைகளை மக்கள் இயக்கமாகவும்  அதே சமயம் வழக்காடி அரசியல் சட்டத்தின்  அடிப்படையில் சட்ட ரீதியிலும் சந்திக்க முடிவெடுத்த தமுஎகச.வின் போராட்டம் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாராட்டிப் போற்றிப் பங்கெடுக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் ஆகும். ஒட்டுமொத்த மதவெறியாட்டத்திற்கு எதிராக கருத்துப் படம் வெளியிட்ட சார்லி ஹெப்டோவின் குரலை இல்லாமல் செய்த அடிப்படைவாதிகளின் அதே ரத்த வாடை தமிழ்ப் படைப்பு சுதந்திரத்திற்கு எதிராகக் களம் இறங்கியுள்ள இந்துத்வா – சாதி – அரசு அதிகாரக் கூட்டமைப்பின் மீதும் வீசுகிறது என்பதே உண்மை. தமிழின் மத அடிப்படைவாத சக்திகளால் தொடர்ந்து மிரட்டப்படும்  ஹெச்.ஜி.ரசூல், சல்மா, கீரனூர் ஜாகிர்ராஜா போன்றவர்களும், பாமா போன்ற தலித் எழுத்தாளர்களுக்கும் மேலும் சமூக அவலங்களுக்கும் சாதி மத அதிகார அமைப்பிற்கு எதிராகவும் நிற்கும் இன்னும்  அனைத்துக் குரல்களையும் ஆதரிக்கும் இந்த எழுச்சிப் போரில் எழுத்து யுத்தத்தில், கருத்துரிமைக் களத்தில் படைப்பாக்கப் படைதிரட்டுவோம்… தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தோடு தோள் கொடுத்து இணைந்திடுவோம்.

– ஆசிரியர் குழு

Related posts