You are here
கடந்து சென்ற காற்று மற்றவை 

கடந்து சென்ற காற்று -4: வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும்-மாதொருபாகனை முன்வைத்து…

ச.தமிழ்ச்செல்வன்

 கடந்த மாதம் முழுவதும் தலையில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவல்தான் இருந்தது. ஊர் ஊராகப்போய்ப் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய காலச்சூழல். புத்தகத்தைப் படிக்காமலேயே அது சாதியையும் திருச்செங்கோட்டுப் பெண்களையும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலையும் இழிவுபடுத்துவதாக அப்பகுதியின் சாதிய, மதவாத சக்திகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைப்போலவே புத்தகத்தைப் படிக்காமலேயே அதை ஆதரித்துப் பேசிய நண்பர்களையும் எல்லா ஊர்களிலும் பார்க்க முடிந்தது. இதை காலத்தின் நகைச்சுவை என்றுதான் குறிப்பிட வேண்டும். படிக்காமல் எதிர்த்தவர்களுக்கு ஓர் எதிர்மறை அரசியல் இருந்தது. படிக்காமல் ஆதரித்தவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் காக்கப்படவேண்டும் என்கிற நேர்மறை அரசியல் இருந்தது.
அப்புத்தகத்தை முன்வைத்து நாம் யோசிக்கவும் பேசவும் வேண்டிய சில முக்கியமான புள்ளிகள் இருக்கின்றன. நாவலின் மையம் குழந்தைப்பேறு இல்லாத  தம்பதிகளின் (காளி-பொன்னாள்) உளவியல் நெருக்கடிதான். சமூகம் அவர்களின் அந்நியோன்யமான காதல் வாழ்வைப் போற்றாமல் ‘புழு பூச்சி இல்லாத புருஷன் பொண்டாட்டி’ என்ற முத்திரையை குத்திக்கொண்டே இருக்கிறது. காலனிய காலத்தில் வாழும் இத்தம்பதிகள் அவர்களின் வாழ்முறை மற்றும் நம்பிக்கைகளின் படி குழந்தை வரம் வேண்டி (அது நம் நம்பிக்கை சார் சமூகத்தில் வரம் என்று ஆக்கப்பட்டுவிட்டது) ஏறாத கோவில் இல்லை, இறங்காத குளம் இல்லை என்று போகிறார்கள். நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அலைபாயும் அவர்களின் மனநிலைதான் விரிவாக நாவலில் பேசப்படுகிறது.
பல சாமிகளைக் கும்பிடும் தொடர் நிகழ்வுப்போக்கின் பகுதியாக அன்று வழக்கிலிருந்ததாகச் சொல்லப்படும் ஒரு சடங்குக்கு பொன்னாள் தள்ளப்படுகிறாள். கோவிலின் 14ஆம் நாள் திருவிழா இரவில் ஓர் இரவு மட்டும் வரைமுறையற்ற பாலுறவுக்கு அனுமதி உண்டு. அதன் மூலம் குழந்தை பெற்றால் அது சாமி கொடுத்த பிள்ளை என அறியப்படும். இதைக் ‘கற்பிழந்த’ தன்மையாகப் பார்க்காமல் ஒரு சமயச்சடங்காகவே அன்றைய சமூகம் பார்த்துள்ளது. இதை திருச்செங்கோட்டில் மட்டும் நடந்த ஓர் நிகழ்வாகப் பார்ப்பது அறியாமை. பேராசிரியர்   ஆ.சிவசுப்பிரமணியன் தன்னுடைய கள ஆய்வுகளின் வழியாக தூத்துக்குடி மாவட்டம் பொம்மரெட்டியாபட்டியில் நடைபெறும் தட்டைக்காட்டுத்திருவிழாவில் ஒருநாள் மட்டும் கணவன் மனைவி அல்லாத ஜோடிகள் சோளத்தட்டைக்காட்டுக்குள் ‘சென்று வருவதை’ பதிவு செய்துள்ளார். முனைவர் அ.கா.பெருமாள், தியோடர் பாஸ்கரன் போன்றோரும் இதுபோன்ற சடங்குகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர். மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இதுபோன்ற குழந்தைப்பேற்றுக்காக முறை திரிந்த பாலுறவில் ஈடுபடுவது பற்றி ஏராளமான கதைகள் உள்ளன.
கணவனை  இழந்த அம்பிகா, அம்பாலிகா இருவரையும் குருகுல வம்சம் விருத்தியாக வேண்டும் என்பதற்காக குலமாதா சத்யவதி பீஷ்மரிடம் அழைத்துச்செல்கிறாள். அவரோ தாம்பத்யம் கூடாதென விரதம் பூண்டிருப்பதால் தன்னால் ஆகாது என்கிறார். மாறாக இவ்விரு பெண்களையும் வியாச முனிவரிடம் சேர்ந்திருக்க அனுப்புகிறார்கள். வியாசரோடு கூடிப்பிறந்த பிள்ளைகள்தான் பாண்டுவும் திருதிராட்டிரனும் என்கிறது மகாபாரதம். அன்றைய ஆண்-பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்திருக்க வேண்டும். ஆகவே ஐந்து பேருக்கு ஒரு மனைவியாக ‘கற்போடு’ வாழ்ந்தவளாக பாஞ்சாலி இலக்கியத்தில் படைக்கப்பட்டாள்.
ஆதியில் மனித சமூகம் தாய்வழிச்சமூகமாக இருந்தது என்பதன் அசலான பொருள் என்ன? பெண்ணுக்கு முழுமையான பாலுறவு சுதந்திரம் இருந்தது என்பதுதான். வரலாற்றின் போக்கில் தனிச்சொத்து உருவானபின்னரே கற்பு எனப்படுகிற பாலுறவுத்தடை பெண்மீது சுமத்தப்பட்டது. இன்றிருக்கும் மண உறவுமுறைகள், மணவிலக்கு விதிகளெல்லாம் காலப்போக்கில் மனிதகுலம் உருவாக்கிக்கொண்டவைதான். உற்பத்தி, மனித குல மறு உற்பத்தியின் வரலாற்றுத்தடத்தைத் தேடிய பயணமாக அமைந்த தோழர் ஏங்கெல்ஸின் ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்னும் நூல் இவ்வகையில் மிக முக்கியமான நூலாகும்.
ஆதிகாலத்தில் சகோதரிதான் மனைவியாக இருந்தாள். அதுதான் ஒழுக்கமாகவும் இருந்தது  என்று இரத்த உறவுக்குடும்பம் பற்றிக் குறிப்பிடும் ஏங்கல்ஸ் பூனலுவா குடும்பம் பற்றிக் குறிப்பிடும்போது “பெற்றோர்களும் குழந்தைகளும் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை  விலக்கியது குடும்ப அமைப்பில் முதல் முன்னேற்றமாக இருந்தால், சகோதரர், சகோதரிகள் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது இரண்டாவது முன்னேற்றமாக இருந்தது…. முதலில் தனித்தனிச் சந்தர்ப்பங்களில் விலக்கப்பட்டு பிறகு படிப்படியாகப் பொது விதியாகியிருக்க வேண்டும்…. கடைசியில் தூர சகோதரர், சகோதரிகளிடையே அதாவது நாம் வழக்கமாகச் சொல்கிற  ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட சகோதரர், சகோதரிகளிடையிலும் கூடத் திருமணம் தடை செய்யப்படுவதில் வந்து முடிந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிடுவார்.
இந்துத் திருமணங்களில் மணமகன் மணமகளுக்கு மூணு முடிச்சுப் போடும்போது முதல் முடிச்சை அவனும் மற்ற முடிச்சுகளைப் பின்னால் நிற்கும் அவனுடைய சகோதரியும் போடும் பழக்கம் இன்றும் நம் ஊர்களில் பார்க்கலாம். இது தனக்குரிய ஒருவனை அந்த சகோதரி இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்கிற மண நிகழ்வில்  தன் பழைய உரிமையை நிலைநாட்டுகிற சடங்காக, பழசின் மிச்ச சொச்சமாகப் பார்க்க வேண்டும் எனத் தமிழறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடுவார்.
ஆகவே பாலுறவு மீறல்களை நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தால் ஏற்றப்பட்ட மணவிலக்குகளுகு நடுவே சில விதி மீறல்களுக்கும் மனித சமூகம் விழாக்கள், சடங்குகளில் இடம் வைத்துச் சென்றதின் மிச்சமாகவே பெருமாள் முருகன் மாதொருபாகன் நாவலில் குறிப்பிடும் சடங்கை நாம் பார்க்க வேண்டும். இதை ஒரு குறிப்பிட்ட சாதியின் அல்லது ஊரின் விஷயமாக அல்லாமல் மனிதகுல வரலாற்றில் உலகெங்கும் நடந்த மீறல்களாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கல்வி நம் கல்விமுறையிலேயே இல்லாதபோது, இலக்கியத்தை எவ்விதம் வாசிக்க வேண்டும் என்கிற பயிற்சியும் இல்லாத பொது சமூகத்தில் நாவலின் சில பக்கங்களை மட்டும் பிரித்து எடுத்து திட்டமிட்ட முறையில் பிரச்சாரம் செய்து ஒரு சாதாரண இலக்கியப்பிரதியை சாதியவாத மதவாதப் பிரதியாக மாற்றியதுதான் திருச்செங்கோட்டில் நடந்தது.
பொதுவாக சங்பரிவாருக்கு ஆதரவான நிலைபாடுடைய தினமணி தன்னுடைய 15-1-2015 தலையங்கத்தில் மாதொருபாகன் குறித்து அட பெருமாளே…என்ற தலைப்பிட்டு சரியான சில விஷயங்களைக் குறிப்பிட்டது.
“பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் கண்மூடி” ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக்குழந்தையைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல. சமூகத்தில் இருந்த பழக்கம்தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த்தமாடுதல் இவை யாவும், ‘இத்தனை நாள் இல்லாமல் எப்படி இப்போது?’ என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகாரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிடலாகாது.
மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், ‘இரண்டாம் இடம்’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. ‘நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன்தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பலவீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன். மிகத் திடகாத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ…’ என்று குந்தி சொல்வதாகக் கதை செல்கிறது.
இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமுதாயம் அது. படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது.
இப்படி ஒரு தலையங்கம் எழுதிவிட்டு சில நாட்கள் கழித்து அட பெருமாளே நாம் எழுதியது இதற்காகப் போராடிக்கொண்டிருக்கும்  தமுஎகச போன்ற முற்போக்கான அமைப்புகளுக்கு ஆதரவாக அமைந்து விட்டதே என்று பதட்டமடைந்து மீண்டும் ஒரு தலையங்கத்தை “என்னவொரு போலித்தனம்” என்ற தலைப்பில் வெளியிட்டது. உங்க வழக்கு டிஸ்மிஸ் ஆயிடும் என்று ‘வாழ்த்தி’ அந்தத் தலையங்கம் அமைந்தது.
பல ஊர்களில் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டேதான் நாம் இயக்கம் நட்த்துகிறோம். நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் வந்த ஒரு கேள்வி.
“என்ன இருந்தாலும் ஒரு ஊரையும் சாதியையும் பற்றி மோசமாக  எழுதினால்   மனம் புண்படாதா?அப்படி எழுதுவது சரியா?” அவருக்கு நான் சொன்ன பதில் “இப்புத்தகம் 2010இல் வந்தது. அப்போதே நான் இதை வாசித்து விட்டேன். இதை வாசித்தபோது இது ஒரு ஊரைப்பற்றியது என்றோ ஒரு கோவில் பற்றியது என்றோ ஒரு சாதி பற்றியது என்றோ ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை. அந்த உணர்வை எனக்கு இந்த நாவல் தரவில்லை. மூன்று பதிப்புகளை வாசித்த 5000 பேரில் ஒருவருக்குக்கூட அந்த உணர்வு வரவில்லை. காளி-பொன்னாள் என்கிற அற்புதமான மனுஷர் மனுஷியின் காதல் காவியமாகவும் பிள்ளை இல்லா வாழ்வின் துக்கத்தையும் மன உளைச்சல்களையுமே நாவல் நமக்குள் கடத்தியது. இதை ஒரு சாதியப் பிரதியாக ஆக்கியது ஜெராக்ஸ் எடுத்துப் பிரச்சாரமாக்கிய சாதிய மதவாத சக்திகள்தாம். நாவலை எப்படி வாசிப்பது என்கிற பயிற்சியும் பழக்கமும் இல்லாத மக்களிடம் இதைக் கொண்டுசென்று அவர்கள் மனதைப் புண்படுத்தியது இச்சக்திகள்/சகதிகள்தானே ஒழிய எழுத்தாளர் பெருமாள் முருகனல்ல” என்றேன்.
மாதொரு பாகனை முன்வைத்து இன்னும் பேச நிறைய உண்டு. வழக்கு முடிந்தபின் வைத்துக்கொள்வோம்.
(தொடரும்)

Related posts