You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 9: ஞாபகவெளியில் கலையாதிருக்கும் கிணத்துமேட்டு நாடகங்கள்

ச. முருகபூபதி

குழந்தைகளின் மனநிலத்தில் கதைகளின் தாதுக்கள் பதுங்கியிருப்பதைப் போலவே நடிப்பு மொழியின் பலவித உணர்நரம்புகள் சதா பறவைகளின் றெக்கைகளைப் போல அவர்களுக்குள் சடசடத்துக் கொண்டிருக்கிறது. அவர்களை கதைகளோடு ஒவ்வொரு முறையும் சந்திக்கின்றபோது என் உடலெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் அப்பி எழுதி கிறுக்கிச் செல்வதைப் போல தளிர் விரல்கள் என்னைத் தொட்டுத் தொட்டு தம் அகங்கையின் ரேகைகளை பூசிச் செல்லும். ஒரு விதத்தில் ரேகைகளான ஒப்பனைமுறை என்று சில நொடி மௌனத்தில் அவற்றை வணங்கி கதையின் பூமியைத் திறப்பேன். ஒவ்வொரு கதைகளுக்குள்ளிருந்தும் சில கதாபாத்திரங்களை என் உடலுக்கு இடமாற்றி உடல்மொழி பிசைந்த கதைகளாய் அவை நிகழ்கலை வடிவமெடுத்த பின் அவரவர்களுக்குப் பிடித்த பாத்திரங்களுக்குள் தம்மைப் புகுத்தி உடன் நடிக்கத் துவங்குவதை இதுநாள்வரை நேரடி அனுபவமாய் உணர்ந்து என்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றேன்.
பெரும்பாலான குழந்தைகள் கதைகளுக்குள் இருக்கும் னீஷீஸ்மீனீமீஸீtஐ முதலில் படித்து அதன் பின்னரே தம் சுய உரையாடல்களை அதனோடு இணைத்துப் புதுமுறை புது நடிப்பு புதுச் சொல் என கிளை கிளையான கதையின் பாதைகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். செயல்பாடுகளும் இயக்கமும்  குறைந்த கதைகளை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு முறை எனது இளைய மகன் நந்தனிடம் கேள்விகள் இழுத்துப் போகும் கதை விளையாட்டினை சொல்லத்துவங்கியபோது அவனது கேள்விகளுக்கு நான் நடிக்கத் துவங்கினேன்.
கோபக்காரன், பசிக்காரன், சந்தோஷமனிதன், சோம்பேறி, வீரமானவன், எரிச்சல் மனிதன் இப்படிப் பல பாத்திரங்களும் நடிப்பில் நிகழ ‘நல்லவன்’ என்றதும் நான் மென்மையான சாதுக்குரலில் இப்படிப் பேசினேன். சாப்டீங்களா… நிக்றேங்க உக்காருங்களேன்… கால் வேணா அமுக்கிவிடட்டுமா… பால் குடிக்கிறீங்களா…. ஹார்லிக்ஸ் குடிக்றீங்களா… பேன் போடட்டுமா? செத்த காலை நீட்டிப் படுக்கிறீங்களா? இந்த வார்த்தைகளைக் குழந்தையைக்  கொஞ்சுவதுபோலவே இழுத்து நீட்டிப் பேசி நடித்தேன். நந்தனோ ‘‘கெட்டவன்” நடிப்பா என்றதும் ‘‘ராஸ்கோல் படுவா பிச்சுப்போடுவேன்… ஆட்டுக்கறி எங்கடா… கோழிக்கறி எங்கடா… பன்னிக்கறி எங்கேடா? சோம்பேறி நல்லவன் எங்கடா! பொம்மைகளை எடுடா… கல்லு மண்ணு எல்லாத்தையும் அள்ளிட்டு வாங்கடா… ஓடிப்புடிச்சி விளையாடுவோம்டா… ராஸ்கோல் நான் சொல்லிக் கிட்டே இருக்கேன்… உமி தின்ன பன்னி கணக்கா நட்டமா நிக்கிறேயடா… இப்படியான பேச்சை ஓடியாடி குதித்து கண்களை உருட்டிப் பலவித உணர்ச்சிகளில் குரலை ஏற்றி இறக்கிப் பேசி நடித்தேன்.
கடைசியில் நந்தனுக்கு கெட்டவனின் நடிப்பு மட்டுமே பிடித்திருந்தது. இயல்பில் நல்லவனுக்கு ஒரே உணர்ச்சிதானோ? பின் நாங்கள் கெட்டவன் குறித்த பல கதைகளைப் பேசி நடித்தபோது நம் கடவுளும் கெட்டவர்தான் என்று அழுத்தமாய்க் கூறினான். ஒரு முறை பள்ளியில் கதை சொல்லிகளாக நடிப்பதற்கு தேவையான பொருட்களை நீங்களே கண்டுபிடித்துக் கொண்டு வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக நடித்துக் காட்டுங்கள்  என்றதும் பத்து நிமிடங்களில் தயாரானார்கள். அவர்கள் கொண்டு வந்தவைகளில் பலவித செடி வகைகளும் கற்களும் உடைந்த ஓடுகளும், காலி உணவுப் பாத்திரங்களும் புத்தகப்பைகளும் விளக்கமாறுகளும் வாளிகள், உடைந்த நாற்காலிகள் இப்படிப் பலவித பொருட்கள் குவிக்கப்பட்டன. அசேதனப் பொருட்களுக்கு கலையின் பன்முகங்கள் இருப்பதைக் குழந்தைகளிடமிருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளில் மூன்றாம் வகுப்பு சோமு இரண்டு கைகளிலும் மண்ணை அள்ளிக் கொண்டு பேசி நடித்தான். ‘‘எங்கப்பா தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளித்தருவாரு, நெதோம் அதெ வாங்கி சேத்து வச்சி பெரிய  மூட்டையா ஆன பிறகு எங்க அப்பத்தா கொடுத்த குதிரவாலி, கம்பு விதைகளை மண்ணுக்குள்ள தினிச்சு நெதம் டம்ளர்ல தண்ணி மோந்தியாந்து தொளிப்பேன். ஒரு நா காலை வெள்ளென எந்திச்சுப் பாத்தா செடிக மொளச்சிருச்சி, நெதோம் அதுக்கு கதை போடுவேன். இதெ பார்த்த எங்க அப்பாவும் அம்மாவும் நானும் மூட்டைய வயக்காட்டுக்கு தூக்கிட்டுப் போயி வயலெல்லாம் நட்டு வச்சோம். கொஞ்ச நாள்ல இந்தச் செடிக நெறைய பிள்ளைகளெ பெத்துப் போட  ஆரம்பிச்சுடுச்சு. நான் எங்க தாத்தா மாரி பெரிய தோட்டமும் வயலும் செஞ்சு அவரெப்போலவே அதுகளுக்கு கதைகதையா போடுவேன்… நான் ஒரு கதை சொல்லி’’ என்று முடித்தான். ஐந்து வருடங்களுக்கு முன் நேர்ந்த இவ்வனுபவம் கதை சொல்லி குறித்த பல கதைகளை அவர்களுக்கு போடத் தூண்டிக் கொண்டே இருக்கிறது இப்ப வரை.
எனது பால்யத்தின் ஒவ்வொரு மரத்தடியிலும் மண்கோட்டையால் விரல் அளவு உயரத்தில் கோயிலும் அரண்மனைகளும் கட்டி நடித்து வாழ்வது எங்கள் தெருப்பிள்ளைகளின் விருப்ப விளையாட்டாய் இருந்தது. எனது சித்தி மகன் ஐய்யப்பனே மண்கோட்டை கொத்தனாராக சிறந்து விளங்கியவன். இதற்கென்றே ஒவ்வொரு ஞாயிறும் சுப்பையாபிள்ளை பொட்டலில் இருக்கும் கருவமரத்துக்கு ஓடிவிடுவோம். எல்லா நாளும் அரண்மனைக்கோயில் பூசாரியாக ஐய்யப்பன் அருள் வந்து ஆடும்போது நிஜமான பயத்தில் நாங்கள் கூட்டமாய் குப்புற வீழ்ந்து கும்பிடுவோம். கொட்டடிக்கும் மேளக்காரர்கள் ஊர்க்குப்பை மேட்டுத் திடலில் தேடி எடுத்த உடைந்த மண்பானைகளின் வாயில் காகிதங்கள் ஒட்டி அதைத் தட்டித் தட்டி ஆடச் செய்வோம். ஐய்யப்பனோ ‘‘கருப்பன் வந்தானா மாடன் வந்தானா போடுற  தாயளி மேளத்தை” இப்படி அடிக்கடி சொல்லி ஆடுவான். அதே வேகத்தில் கொட்டடித்து காகிதக் கொட்டுகளை பலமுறை கிழித்திருக்கிறோம். சிலர் உடைந்த பானைகளின் அடிப்பகுதியைக் கையிலேந்தி அதில் காகிதங்களைக் கொளுத்தி பெண்களைப் போல்  அக்னி சட்டி தூக்கி ஆடுவோம்.
சில சமயம் கிழிந்த காகித மேளத்திற்கு இணையாக கூட்டுக் குழு ஒலியில் ‘‘ரவுண்டூண்டா ரண்டக் ரவுண்டூண்டா ரண்டக் ரண்டக் ரண்டக் ரண்டக்” என்று அடித்துப் பாடி நடிப்போம். அன்று கருப்பன், மாடன், காளி சாமிகளாக துடியோடு ஆடும் சாமியாடிகளே எங்களது விருப்ப நடிகர்  நடிகைகளாக  இருந்தனர். குழந்தைகளுக்கு மட்டுமே திருவிழாச்சடங்கை பகுத்தறிவுத் தோல் உறித்து கலைச் செயல்பாடுகளாகப் பார்க்கக்கூடிய வல்லமை இருக்கிறது.
எங்கள் தெருவாசியான  கருத்தப் பாண்டித்தேவர்  மேல் சட்டை போடாத மனிதர். அட்டக்கருப்பு நிறம். அவர் வீட்டில் ஐந்து பெண் மக்கள் அடுத்தடுத்த வயதில் இருப்பார¢கள். அந்த அக்காமார்கள் வருடத்துக்கு இரண்டு பேர் சடங்காகி பூப்புனித நீராட்டு விழா அன்று குழாய் ரேடியா கட்டி இசைத் தட்டில் முள் வைத்து சுற்ற ஆரம்பித்தவுடன் பாடல் வெளியே  கேட்க ஆரம்பித்துவிடும். நாங்கள் எல்லோரும் அந்த மைக் செட் அண்ணாச்சி பின்னாடியே சுத்துவோம். அவர்கையில்தான் எங்களது ஆட்டம் பாட்டம் நடிப்பு அத்தனையும். அன்று எங்களுக்கு ‘அன்னக்கிளி’ படப்பாடல் மிகவும் பிடித்த ஒன்று. பாடலொலி பரவும் திசைகளிலெல்லாம் எங்களை மீறிய நடிப்பு மொழியில் நாங்களே இந்த பூமியில் முக்கிய உயிர்கள் என்பதைப் போல அலைந்து திரிவோம். கருத்தப்பாண்டித் தேவர் வீடு அடிக்கடி ரேடியோ கட்டி பாடும் வீடாகவே இப்ப வரை என் மனதில் பதிந்திருக்கிறது. ஒரு முறை ஐய்யப்பன் ரேடியோ செட் காரரின் அனுமதியுடன் ஒலி பெருக்கி குழாயைத் தூக்கி வந்து தெருவுக்குள் ‘‘அலோ தாய்மார்களே பெரியோர்களே கூட்டத்திலிருக்கும் குந்தானிமார்களே” என திரும்பத் திரும்பக் கூவி நடித்து எங்கள் வயதுக்காரர்கள் பலரையும் கூட்டி வேடிக்கைகளை செய்யத் துவங்கிவிட்டான்.
அவனுக்கு கருத்தப்பாண்டி அய்யா தன் இடுப்பிலிருந்து எட்டணாக்காசு கொடுத்து முதுகில் தட்டிப்போனார். எங்கள்  வயதுக்காரர்கள் பலரையும் தடையின்றிப் பாராட்டும் குணம் தெருவில் அவருக்கே இருந்தது. அவரின் மூன்றாவது மகள் சண்முக வடிவு என் அண்ணன் பாண்டியனுடன் படித்தது. ஒவ்வொரு வாரமும் அந்தக்கா வீட்டில் திருநீறுத்தட்டிலிருந்து 2ரூ எடுத்துப் போய் ஏதாவது பொம்மை  பலகாரம் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போய் அய்யா அம்மாவிடம் காண்பித்து இன்று பள்ளியில் எனக்கும் இரண்டாம் புலிகேசியின் மகள் ஆவுடத் தாயிக்கும் பயங்கரச் சண்டை நான் ஜெயிச்சிட்டேன் எனக்கு பரிசு கொடுத்து அனுப்பினார்கள்” என்றும் மற்றொரு நாளில் தின்பண்டங்களோடு அம்மாவிடம் போய் ‘‘இன்று எனக்கும் மதுரையை மீட்டிட சுந்தரபாண்டியனின் மகள் குருவம்மாளுக்கும் பயங்கரமான சண்டை. இன்னைக்கும் நான் ஜெயிச்சிட்டேன். ரெண்டு ரூவா பரிசா கொடுத்தாங்க அதை பலகாரமா  மாத்திட்டேன்” என்பார்கள். இப்படி வாராவாரம் அவர் செய்ததும் திருநீர்த்தட்டில் துட்டு காணாமல் போய்க் கொண்டிருப்பதும் தெரிந்து கண்டுபிடித்துவிட்டு அவர்கள் அம்மா காலில் சூடு போட்டு நிறுத்திவிட்டார்கள். கருத்தப்பாண்டி அய்யாதான் அவளை பலகாரங்கள் கொடுத்து சமாதானப்படுத்தினார். எல்லா மன்னர்களின் பிள்ளைகளையும் ஜெயிக்கும் திறமை இந்த ஊரில் உனக்கு மட்டும்தான் உண்டு என்று தைரியப்படுத்தி உற்சாகமூட்டுவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அவரது இளைய மகன் கிளிராஜ் எனது உற்ற தோழனாக அன்று இருந்தான். நான் ஐய்யப்பன் கிளிராஜ் மூவரும் தான் துண்டு பிலிம்களைக் கடையில் வாங்கி அதனை அட்டையில் வெட்டிச் சொருகி சினிமா காண்பிப்போம். அன்று பல திரைப்படங்களின் மீந்த துண்டு விழுந்த  பிலிம்களை பேப்பரில் மடித்து ஒட்டி ஐந்து பைசாவிற்கு விற்பார்கள். ஒவ்வொன்றிலும் 4, 5 பிலிம்கள் இருக்கும். சினிமா நடிகை நடிகர்கள் எங்களைத் தேடி வந்ததும் இப்படித்தான். நல்ல வேளை அன்று டி.வி. இல்லை. அன்று ஐய்யப்பனை ஆட்டிப் படைத்தது சிவாஜி கணேசன் தான். அவனது மொத்த நடவடிக்கைகளும் சிவாஜியை ஒத்திருக்கும். எங்கள் தெருவில் மங்களமுருகன் எனும் அண்ணன் சிவாஜி கணேசன் தலைமை ரசிகர் மன்றம் வைத்து வீடு முழுக்க சிவாஜி ஃபோட்டோக்களாக இருக்கும். சில நாள் ஐய்யப்பன் அவர் வீட்டிற்கு அவற்றை காண்பிக்க கூட்டிப் போயிருக்கான். பல சிவாஜி படங்களுக்கு இடையில் லெனின், காரல் மார்க்ஸ் படங்களும் இருந்தது. ஏனெனில் மங்களமுருகனின் அப்பா பிச்சை எங்கள்  தெரு கம்யூனிஸ்ட்கட்சி கவுன்சிலர். எங்கள் தெருவிலேயே சிகப்புத் துண்டு சகிதமாய் உலவுபவர் அவர் மட்டுமே. பிள்ளைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்த கம்யூனிஸ்ட் அவர்.
ஒரு முறை நானும் ஐய்யப்பனும் பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு சரஸ்வதி தியேட்டரில் சிவாஜி மூன்று வேடத்தில் நடித்த திரிசூலம் படம் பார்க்கப் போனோம்.  தரை டிக்கட் 40 பைசா. இடைவேளை வரை பார்த்துக் கொண்டிருக்கும்போதே கட் அடித்து வந்தது வீட்டிற்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தில் பாதியிலேயே வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன் அக்கா சோறு போட்டு சாப்பிட வைத்தாள். குழம்பின் காரம் விக்கல் எடுக்க திரிசூலம் படத்தில் சிவாஜி சாட்டையால் அடிவாங்கும் போது தலையை பல திசைகளுக்கும் அசைத்தசைத்து வெட்டி இழுப்பதைப் போல வலியினை வெளிப்படுத்தி நடிப்பார். அதை அப்படியே விக்கலில் செய்து பார்த்துக் கொண்டிருக்கும்போது அக்கா பார்த்துவிட்டாள். ‘‘நீ திரிசூலம் பார்த்து வந்திருக்கிறாய். பள்ளிக்கூடம் போகலை” என்றவுடன் நான் அழுதுவிட்டேன். விடாது சிரித்த அவள் அம்மாவிடம் சொல்லாமல் என்னைக் காப்பாற்றினாள். வீட்டில் வாங்கப்படும் சில்வர் பித்தளைப் பாத்திரங்களிலெல்லாம் அக்காவின் பெயரே பொறிக்கப்பட்டிருக்கும். என் பெயர் அதில் போட வேண்டுமென்பதைச் சொல்லி பிடிவாதமாக சண்டையிடுவேன்.
ஒரு முறை வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து எல்லா பாத்திரங்களையும் பரப்பி வைத்து அக்காவைப் போலவே பித்தளைக் கொடம் தூக்கி நடித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த அக்கா ஒளிந்திருந்து பார்த்துவிட்டாள். பின் ஒரு நாள் என்னை பாத்திரக்கடைக்கு அழைத்துப் போய் இரண்டு தட்டுகளை வாங்கி என் பெயரைப் பொறித்து என்னிடம் ஒப்படைத்தாள். எங்கள் தெருவில் பிளஸ்டூ படிக்க தினம் குதிரை வண்டியில் பள்ளிக்குச் சென்று திரும்புபவள் எங்கள் அக்காவும், அவள் தோழி லட்சுமியக்காவும்தான். நாங்கள் மாலை அவர்கள் வரும் குதிரை வண்டிக்காக எப்போதும் காத்திருப்போம்.
மன்மதராஜ் என்றொருவர் பாகவதர் முடியுடன் நெற்றி நிறைய விபூதி பூசிப் பாடலுடன் எங்கள் தெருவுக்கு குடியேறினார். தினம் காலை மாலை திருமந்திரம் திருவாசகம் தேவாரப்பாடல்கள் பலவற்றையும் தம் குழந்தைகளோடு சேர்த்து பாடிக் கொண்டிருப்பார். ஊர் கம்மா மேட்டில் நின்று பல முறை பாடிக் கொண்டிருப்பார்கள். கம்மாவெங்கும்  அப்பாடல் ஒலி நீண்டு கேட்கும். நாங்கள் ஒரு முறை கிணத்து மேட்டில் நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோது ஐய்யப்பனும் நானும் மன்மதராஜ் அய்யாவைப் போல திருநீறு பூசி பாடி நடித்துக் கொண்டிருந்தோம். யாரோ ஒருவர் அவரை அழைத்து வந்துவிட எங்களுக்கு வெட்கமாகி அவரிடம் மன்னிப்பு கேட்க அவரோ கிணத்து மேட்டில் ஏறி எங்களுக்கு சில பாடல்கள் சொல்லிக் கொடுத்தார்.  சில நாட்கள் விபூதி சகிதமாய் அவர் பின்னே நாங்களும் கண்மாய் மேட்டில் நின்று கூட்டொலியில் பாடித்திரிந்தோம். கோவிந்தராஜ் எனும் அண்ணன் மிக முரட்டு சுபாவம் உள்ளவர். எப்போதும் சாகசங்கள் மீது தீராத மோகம் கொண்டு எதையாவது செய்து கொண்டு திரிபவர். ஒருமுறை வீட்டில் உள்ள தலையணைகள் எல்லாம் பரப்பி நாங்களும் தலையணைகள் கொடுத்திருந்தோம். எல்லாவற்றையும் அடுக்கி மொட்டமாடியிலிருந்து குதித்துக் காண்பித்தார். எந்த உதவியுமின்றி கிணற்றுச் சுவர் பிடித்து உள் பக்கமாகத் தொங்குவதும் ஒத்தக் கையால் தொங்குவதும் அடிக்கடி எங்களைக் கூட்டி நிற்கவைத்து பார்வையாளர்களாக்கி ஓர் கழைக்கூத்து நடிகனைப் போலவே எங்களுக்குள் உலவிக் கொண்டிருந்தான். தீபாவளி நேரங்களில் அணுகுண்டு பெரிய லட்சுமி வேட்டு போன்ற வெடிகளைக் கையில் பிடித்து பயமின்றி வெடிக்கச் செய்வது கண்டு பீதியுடன் அதிசயப்பட்டுக் கொண்டிருப்போம். ஞாயிறு தோறும் ஊரில் உள்ள பல கிணற்றுக்கும் அழைத்துச் சென்று கிணத்துக்குள் தொங்கும் வித்தைகளைச் செய்து காண்பிப்பார். அவருக்குப் பிடித்த வீட்டில் இரவு தூங்குவதும் வீட்டாரை உறவு முறை சொல்லி நெருங்கிப் பழகுவதும் அவரது இயல்பு.
எங்கள் கிணத்து மேட்டு இரவு நாடகத்தில் அவனது தனி நடனம் வாரம் தவறாது நடக்கும். என்னுடன் வீட்டில் தங்குவது பிடித்துப் போய் என் அம்மாவிடம் கண்கலங்க ‘‘பெரியம்மா நான் உங்க வீட்டிலேயே இருக்கிறேனே எல்லா வேலையும் நானே செய்யுறேன்” என்று கேட்டு அம்மா சம்மதத்துடன் பல நாள்கள் எங்கள் வீட்டிலிருந்தே பள்ளிக்கூடம் போய்த் திரும்பினான். கோவிந்தராசின் வீட்டார் பின் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனார்கள். பின்னாளில் அவர் கிராமத்து ஆழ்கிணற்றில் மூழ்கி இறந்துபோனதாகத் தகவல் வந்தது. கருப்பு வெள்ளை டாக்ஸியில் கோவிந்தராசு பெயரைக் கூவிக் கூவி கண்ணீரோடு அவனது அம்மா அப்பா கிளம்பிப் போனார்கள். நாங்கள் பிள்ளையார் கோவில் அரசமரத்தில் முகம் புதைத்து விசும்பி கண்ணீரால் மரத்தைக் கழுவிக் கொண்டிருந்தோம். மர உடலில் கோவிந்தராசு தன் பெயரைக் கீறி வைத்திருந்தான்.
எங்கள் தெருவில் எங்கள் அப்பா மட்டுமே சர்வே ஆபிசர். தினம் பேண்ட் பேக்குடன் வேலைக்கு போய்க் கொண்டிருப்பவர். குடிகார கருப்பையா என்பவர் தினம் இரவு நிறை போதையில் ஆளற்ற தெருவில் தள்ளாடி விழுந்து எழுந்து வருவார். எங்கள் வீட்டை ஒவ்வொரு போதை இரவிலும் கடக்கும்போது ‘‘அய்யா ஆபீசரய்யா ஆபீசரய்யா” எனக் கூவியழைத்து அப்பா வெளியே போய் நின்றதும் ஆபீசரய்யா வணக்கமய்யா என்று கூறி கண்ணீருடனே கடந்து போய்விடுவார். அப்பா வீட்டில் இல்லாத ஓர் நாளில் ‘‘ஆபீசரய்யா” எனத் திரும்பத் திரும்ப கூவ, வெளியே ஓடிவந்த என்னைத் தூக்கி போதையும் குடிநெடியும் கூடிய தம் உதடுகளால் முத்தமிட்டு கையில் வைத்திருந்த கதளிப்பழங்களை என்னிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். எங்களது நடிப்பு விளையாட்டில் அவராக நாங்கள் பலரும் நடித்திருக்கிறோம். ஒரு நாள் இரவு  மழையில் வீட்டில் தீப்பெட்டி இல்லாது தீப்பெட்டி கேட்டு பக்கத்து வீட்டில் அவர் நனைந்து கெஞ்சிக் கொண்டிருக்க பக்கத்து வீட்டிலும் தீப்பெட்டி இல்லாது கரண்டியில் கங்குகளை தூக்கித்தந்தார்கள். அதனை வாங்கிய அவர் தள்ளாடிக் கீழே விழ பலரும் சேர்ந்து தூக்கிப் போய் வீட்டில் படுக்க வைத்ததை பால்யத்தின் வாஞ்சைமிக்க நாட்களாக மதிக்கின்றேன்.
பெரிய அண்ணன் மிலிட்டரியிலிருந்து ஒவ்வொரு வருடமும் வரும்போது ரயில் நிலையத்திலிருந்து குதிரைவண்டியில் வருவார். அன்றைய நாளில் வீட்டிற்குள் புரண்டு உருண்டு குதித்தாடி செல்வண்ண வராரு செல்வண்ணன் வராரு என மந்திரம் போல் முனகி நடித்துக் கொண்டிருப்பேன். எனக்குள் பதுங்கியிருக்கும் பல்வேறு பாத்திரங்களை உலவவிட்டு நடித்து சந்தோஷமாகி பெரிய அண்ணனை எதிர் கொள்வது எனது வழக்கமாக இருந்தது. குதிரை வண்டி வீட்டை நெருங்கியதும் நெல்லு மூடைகளின் மீதேறி வெட்கத்தில் குப்புற கவிழ்ந்து கொள்வேன். கரங்களால் மூடிய என் முகத்தை கஷ்டப்படடு அவிழ்த்துப் பேசுவார். நான் நடித்து குதியாலம் போட்டதை அம்மா சொல்ல அதை நடித்துக் காண்பிக்குமாறு கேட்பார். வெட்கத்தில் வீட்டைவிட்டு ஓடிவிட்டேன். தெரு முழுக்க ‘‘செல்வண்ணன் வந்திட்டாரு” என்று புலம்பி அலைவேன். என் நண்பர்களை கூட்டமாய் கூட்டிவருவேன். மிலிட்டரி கிட் பேக்கிலிருந்து மிட்டாய்கள் தூக்கித்தந்து வாங்கிவந்த சாமான்களை அதிசயமாக்கி எடுத்து வைப்பதை நாடகமென்று நம்பி வட்டமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். தினமும் காலை அவருடன் கண்மாய் போகும்போது நடந்து சென்ற அவரது   பாதங்களின்  மேல் என் குட்டிப் பாதங்களை வைத்து பாதம் வளர்வதாய் சொல்லிக் குதித்தோடுவேன். அவர் சொல்லும் ராணுவக் கதைகள் கேட்டு நாங்கள் கிணத்துமேட்டில் நடித்தோம்.
பால்யத்தில் எங்கள் தெருக்குழந்தைகள் பலரும் அனுபவங்களை உடல்மொழியால் வாங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். குழந்தைகளோடு வேலை செய்யத் துவங்கிய நாட்கள் துவங்கி இது நாள் வரை நடிப்பு மொழியின் நாடக இலக்கணங்களை அவர்களிடமிருந்தும் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டுக்குள்ளும்  நாடகீயக்குணங்கள் மறைந்திருப்பதை அவர்களோடு சமவயது சம உடல் குழந்தைகளாக எவரெல்லாம் மாறுகிறார்களோ அவர்களுக்கு இவை புலப்படும். குழந்தைகளின் கண்களுக்குள் உலவும் கலைஞனே பண்பாட்டு நிலத்தை சரியாக உணர்த்த தாதியாக இருப்பான். நாடக நிலத்தின் தேவை கருதியும் புது விதைகள் வேண்டியும் குழந்தைகளுடன் நாடகக்கலைஞர்கள் செயல்படுகிறபோதே கல்விவளாகம் உறைந்த நிலையிலிருந்து உருகி குழந்தைகளின் உள்ளங்கைக்குள் போய்ச் சேரும்.

Related posts