You are here
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் -19 : கம்யூனிஸ்ட் கருதுகோள்

என்.குணசேகரன்

கம்யூனிச எதிர்ப்பும், வெறுப்பும், இன்றளவும் நீடித்து வருகிற மேற்கத்திய உலகில், மார்க்சியத்தின் மகத்துவத்தை உயர்த்தி, உரக்கப் பேசி வரும், மார்க்சிய அறிஞர்  அலென் பதேயு.
“கம்யூனிஸ்ட் கருதுகோள்” எனப்படும் அவரது முக்கிய கருத்தாக்கம் அதிக விவாதத்திற்கு உள்ளானது. 2008-ஆம் ஆண்டில், நியூ லெப்ட் ரிவியு இதழில் எழுதிய கட்டுரையில் இந்த கருத்தாக்கத்தினை அவர் முதலில்  வெளியிட்டார். பிறகு அதனை விரிவாக விளக்கி நூல்களும் கட்டுரைகளும் எழுதினார். அவர் சார்ந்த பிரெஞ்சு அறிவுலகத்தில் மட்டுமல்லாது, ஐரோப்பிய, அமெரிக்க அறிவுத்துறையினர் மத்தியிலும் இக்கருத்து மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது.
அவரது கருத்துக்கு மார்க்சிய எதிரிகளின் எதிர்ப்பு இயல்பானது. ஆனால், மார்க்சியர்கள் பலரும் கூட அவரது  கருத்தில் முரண்பட்டு, விவாதித்து வருகின்றனர். எனினும், இந்த விவாதத்தின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க, மார்க்சியத்தின் மீதான  ஆர்வம் பல தரப்பினரிடமும் பரவலாக எழுந்துள்ளது. இந்த வகையில் பதேயு, மார்க்சியத்திற்கு பெரும் சேவை செய்துள்ளார்.
மனித நாகரிக வரலாறு முழுவதும் கம்யூனிசக் கீற்று இழையோடி வந்துள்ளது என்ற ஒரு கருத்தை அதிரடியாக முன்வைக்கிறார் பதேயு. மனதளவிலான சிந்தனை என்ற வகையில் சமுக சமத்துவம் என்ற கருத்து, தொன்மைக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அரசு என்ற அமைப்பு உருவான காலத்திலிருந்தே இந்த சமத்துவத்திற்கான தேடல் இருந்துவருகிறது
அடிமைமுறையை எதிர்த்த ஸ்பார்டகஸ் எழுச்சியிலும், விவசாயிகளின் எதிர்ப்புக் கலகங்களிலும் புதிய சமத்துவ சமுதாயத்திற்கான வேட்கை உள்ளடங்கியுள்ளது. இதனை கம்யூனிச சமூகப் போக்கின் வெளிப்பாடாகக் காண்கிறார் பதேயு.நாகரிக வரலாறு முழுவதும்  இந்த வரலாற்றுப் போக்கு இடைவிடாது அடிநாதமாகத் தொடர்ந்து வருவதாக அவர் கருதுகிறார்.
கம்யூனிசம் மியூசியத்தில் வைக்க வேண்டிய ஒன்று என்று இன்றுவரை பல்லவி பாடிக் கொண்டிருப்போருக்கு இந்தக் கருத்தாக்கம் ஒரு சம்மட்டி அடியாக விழுகிறது.
இந்தியாவில், கம்யூனிசம் ஒரு மேற்கத்திய சரக்கு என்போருக்கும், இது பலமான பதில் தாக்குதலாக அமைந்துள்ளது. பதேயுவின் பார்வையில் இந்திய வரலாற்றை நோக்கினால், இங்கேயும் கம்யூனிச வேட்கை தொடர்ந்து இருந்து வருவதாகக் கருதிடலாம். வேதாந்த மரபுகள்,  தாங்கிப் பிடிக்கும் அடிமைத்தன, நிலப்பிரபுத்துவ ஒழுங்குமுறையை எதிர்த்து பொருள்முதல்வாத தத்துவம் பேசிய சார்வாகர் குரலிலும் புதிய சமத்துவ சமுதாயத்திற்கான ஏக்கம்  இருப்பதைக் காண முடிகிறது. பதேயு கோணத்தில் பார்த்தால் அவையும் கம்யூனிசக் கீற்றுக்களே!
இதில், தமிழர் மரபில்,  ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” போன்ற  சிந்தனைகளையும், சித்தர்கள் பலரின் கடவுள் மறுப்பையும் கூட சேர்த்துவிடலாம். இதனால், கம்யூனிச எதிரிகள் கடும் எரிச்சலுக்கு உள்ளாகக்கூடும். பதேயு தனது  “கம்யூனிஸ்ட் கருதுகோள்” நூலை செஞ்சிவப்பு அட்டையுடன் வெளியிட்ட போது கூட, அவர்கள் கடும் எரிச்சலுக்கு ஆளானார்கள்.
கம்யூனிஸ்ட் கருதுகோள் என்பது என்ன? பதேயு அதனை எவ்வாறு வரையறுக்கிறார்?
அவரது வரையறைக்கு மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையே அடிப்படை. உழைக்கும் வர்க்கம் ஆதிக்க வர்க்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதுதான் தற்போதைய வர்க்க  நிலைமை. விதித்துள்ள நியதி. இது காலங்காலமாக நீடித்து வருகிறது. ஆனால், இது நிரந்தரமாக நீடிக்கக் கூடிய, தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. இதனை மாற்றும் வேலையில் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இதற்கான ஒரு எதிர்கால சித்திரம்தான், பதேயுவின்  “கம்யூனிஸ்ட் கருதுகோள்” எனப்படுவது. அதன் முக்கியக் கூறுகள் வருமாறு:

  •  முற்றிலும் மாறுபட்ட கூட்டாக இயங்கும் சமூக அமைப்பு நடைமுறையில்  சாத்தியமானதே.
  • அத்தகைய அமைப்பு  சொத்துடைமையில் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துவிடும்.
  • உழைப்புப் பிரிவினை கூட ஒழிந்துவிடும்.
  • பெரும் செல்வம் தனி உடைமையாகி, பரம்பரை உடைமையாக இருக்கும் நிலை மறைந்துபோகும்.
  • அந்த சூழலில் உற்பத்தியில் ஈடுபடுவோர் அனைவரும் ஒன்றிணைந்து, நிர்வகிக்கும் சமூகமாக மாறும் நிலை ஏற்படும். அத்தகைய சமூக மறுசீரமைப்பு நீண்ட நிகழ்வுப்போக்காக நடைபெறும். இது, ஒரு கட்டத்தில், மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, ஒடுக்குமுறை அதிகாரம் படைத்த அரசு இருப்பதனை  அவசியமற்றதாகிவிடும். அரசு  உலர்ந்து உதிர்ந்திடும் நிலை உருவாகும்.

இந்த அம்சங்கள் உள்ளடங்கியதாக பதேயு கம்யூனிஸ்ட் கருதுகோளை விளக்குகிறார். மார்க்ஸ், லெனின் சிந்தனை வழியில் இந்தக் கருத்தாக்கங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன..
பழையனவற்றைத் தூக்கியெறிந்து சமதர்ம மாற்று ஒன்றை நிறுவும் முயற்சிகள் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன.நவீன அரசியல் சகாப்தத்தில் கம்யூனிஸ்ட் கருதுகோளின் நடைமுறை இயக்கத்தை அவர் விளக்குகிறார். இது 1792-ஆம் ஆண்டில் எழுந்த பிரெஞ்ச் புரட்சியிலிருந்து துவங்குவதாக அவர் குறிப்பிடுகிறார். பிறகு,40 வருட இடைவெளியில் 1871-ஆம் ஆண்டு தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பாரிஸ் கம்யூன் எழுச்சி நிகழ்ந்தது..
இந்த எழுச்சிகளில் நகர்ப்புறம் சார்ந்த மக்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், ஆயுதம் தாங்கிய போராளிகள் உள்ளிட்டோர் பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒன்றுதிரண்டனர். பாரிஸ் கம்யூனை உருவாக்கியதில் மக்களின் ஒன்றுபட்ட வலிமை மிகுந்த வல்லமை கொண்டதாக விளங்கியது.
பாரிஸ் கம்யூன் நீடிக்கவில்லை. கடுமையான வன்முறை அழித்தொழிப்போடு முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கருதுகோளின் நடைமுறை சாத்தியம் பற்றிய கேள்வி எழுந்தாலும், அது சாத்தியமே என்பதை அடுத்த ஐம்பது ஆண்டு இடைவெளியில் நிகழ்ந்த 1917-ரஷியப் புரட்சி நிரூபித்தது. பிறகு சீனப் புரட்சி என அந்த நிகழ்வு தொடர்ந்தது.
1792-1871 என்பது முதலாவது கட்டமாகவும், 1917-1976 இரண்டாவது தொடர்ச்சியாகவும் தற்போது மூன்றாவது கட்டம் நிகழ்வதாகவும் பதேயுவின் விளக்கம் செல்கிறது. சோவியத் வீழ்ச்சி, சீன கலாச்சாரப் புரட்சி, பிரெஞ்சு மாணவர் எழுச்சி போன்ற வரலாற்று நிகழ்வுகளை அவர் ஆராய்கிறார். கம்யூனிஸ்ட் கருதுகோளின் வளர்ச்சி பற்றிய இந்த விளக்கங்கள் குறித்து பல மாறுபாடுகள் இருப்பினும் அவரது, ஒரு நிர்ணயிப்பு முக்கியமானது. இனி, இந்த 21-ஆம் நூற்றாண்டில் மனித சமூகத்தின் முன் உள்ள கேள்வி; கம்யூனிசக் கருதுகோளினை எவ்வாறு கருத்தளவிலும், களத்திலும்  நிலைநிறுத்துவது என்பதுதான்.
“ஸ்தாபனத்தில் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமெனில், முதலில் சித்தாந்தத்தில் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்” என்றார் மாவோ. இதனை மேற்கோள் காட்டி மனங்களைப் புரட்சிகரமானதாக்க வேண்டும் என எழுதுகிறார் பதேயு.
கம்யூனிசம் என்பது கிரிமினல் நடவடிக்கையாக ஆளுகிற கூட்டம் சித்தரித்து வரும் நிலையில், “கம்யூனிஸ்ட் கருதுகோள்” என்ற கருத்தாக்கத்துடன் உலகம் முழுவதும்   கம்யூனிஸ்ட் இலட்சியத்திற்காக வலுவாக அவர் வாதிட்டு வருகின்றார். கம்யூனிஸ்ட் கருதுகோளினை  உழைக்கும் வர்க்கத்தின் ஒவ்வொரு தனிநபர்  உணர்விலும்  பதியவைக்க  வேண்டுமெனவும், அதற்கான “புதிய வகையிலான அரசியல் நடவடிக்கைகள்” மேற்கொண்டு அந்தக் கனவினை நனவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார் பதேயு.
அவரது பல கருத்துக்களும், வழிகாட்டுதல்களும்  விமர்சன ரீதியில் விவாதிக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், இன்றைய மார்க்சிய நடைமுறைத் தேவைகளுக்கு அவரது சிந்தனைகள் புறக்கணிக்க முடியாதவை..”

Related posts