You are here
நூல் அறிமுகம் 

பாரதி ஆய்வில் அடுத்தகட்ட நகர்வு

பாரதிபுத்திரன்

ஆய்வுக்களத்தில் விடுபட்டிருக்கும் பகுதியைக் கண்டடைவதிலேயே பாதி வெற்றியை ஆய்வு பெற்றுவிடுகிறது. 90 விழுக்காடு விளக்கமுறையில் அமைந்துவிடும் தமிழியல் ஆய்வுலகில் முன்னிகழ்ந்த ஆய்வுகளைக் கணக்கில் கொண்டு, தேடுதலோடு செய்யப்பெறும் ஆய்வுகள் மிகக்  குறைவு. அவற்றுள்ளும் பாரதியியல் ஆய்வு என்பது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலமாக எல்லா முனைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட, பரந்துபட்ட ஒன்றாகும். அவற்றுள் சலிப்பின்றி இன்னும் கொணரப்படும் அவன் ஆக்கங்களும் அவற்றுடன் தொடரப்படும் ஆய்வுகளும் வியக்கச் செய்கின்றன.
முனைவர் ய.மணிகண்டன் அவர்களது இந்நூலும் அத்தகைய ஒன்றாகும். இதிலுள்ள பதினொரு கட்டுரைகளும் பாரதியின் அறியப்படாத, அறிய வேண்டிய உண்மைகளை ஆய்வுநோக்கில் புலப்படுத்துகின்றன. ‘பாரதியின் முழுமை ஆராய்ச்சி  உலகால் இன்னும் கண்டு காட்டப்பெறவில்லை’ என்கின்ற எண்ணத் தூண்டுதலுடன் கவிதைகள், கட்டுரைகள், புனைகதைகள், வாழ்வியல் நிகழ்வுகள் எனப் பாரதியின் படைப்புகளுக்குள் பெரும் ஊடாட்டத்தை நிகழ்த்தியுள்ளார்  ஆசிரியர். அவர் எடுத்துக் காட்டுவனவற்றுள் பலவும் பாரதியியலில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டுள்ளோரும் அறியா உண்மைகள் என்றே கூற வேண்டும்.
பாரதியின் வாழ்வைப் படிக்கின்ற யார்க்கும் வரும் வியப்புக் கலந்த ஐயம், அவன் இத்தனை தமிழ், வடமொழி, ஆங்கிலம் மற்றும் உலக இலக்கியங்கள் பலவற்றையும் எங்கு, எப்போது கற்றான்? என்பது. அவற்றை அறிந்தவனாக மட்டுமன்றித் தன் பார்வையில் அவை குறித்த விமர்சனத்தை முன் வைப்பவனாகவும் அவன் இருந்தான். பண்டைய இலக்கியங்கள் மட்டுமன்றித் தன் சமகாலப் படைப்பாளிகளின் படைப்புகளையும் அவற்றின் இடங்களையும் மதிப்பிட்டிருந்தான். தமிழின் முதல் மூன்று புதின ஆசிரியர்களான மாயூரம் வேதநாயகர், பி.ஆர்.ராஜமய்யர், அ.மாதவையா ஆகியோர்தம் படைப்புகளைப் பாரதி  ஊன்றிப் படித்திருந்தான்; தன் எழுத்துகளில் அவற்றை எடுத்தாண்டுமிருக்கிறான் என்பதையும் ‘வசனகாவியம்’ என்று அவன் பயன்படுத்திய அரிய சொல்லாட்சி, பிரதாப முதலியார் சரித்திரத்தில் இடம் பெற்ற ஒன்று என்பதையும் ஆயினும் அச்சொல்லாக்கத்தை பாரதி வேறு பொருளில், வரலாற்றை உரைநடையில் காவியத் தன்மையுடன் படைத்தல் என்னும் பொருளில் பயன்படுத்தியுள்ளான் என்பதையும் ஆசிரியர் மிக நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார். அதுபோல் மாதவையா குறித்து அறிந்திருந்ததுடன் அவர் வீட்டிற்கும் சென்றுவந்தான் பாரதி என்பதை விவரித்து, இவை புனைகதைகள் மீதான பாரதியின் ஈடுபாட்டைக் காட்டுகின்றன என்பதையும் உணர்த்தியுள்ளார். அடிமைத்தளை பூண்டு சுகப்படும் வீட்டுநாயை விட, விடுதலை கொண்ட நாட்டு நாய் வாழ்வு உயர்ந்தது என்பதை உணர்த்தும் கிரேக்கப் பழங்கதையை பாரதி எடுத்து எழுதியிருப்பதும் அதன் தாக்கத்தில் பாவேந்தர் கவிதை படைத்திருப்பதையும் இரண்டாவது கட்டுரை சுவையுற விளக்குகிறது. அத்துடன் பாவேந்தர் அதனை வடவர், தமிழர் என்ற நோக்கில் கையாண்டாரா அல்லது இந்திய விடுதலைநோக்கில் கையாண்டாரா என்பதையும் தெளிவுறுத்துகிறது.
பாரதியின் கவிதைகளை உரைநடையாக்கங்கள் சிலவற்றுடன் பொருத்திப் பார்த்து ஒப்பீட்டு வடிவங்களை உணர்த்தும் அடுத்த கட்டுரை, புதிய முயற்சியாகும். ‘தமிழ் மொழி போல் இனிதாவது’, ‘நமக்குத் தொழில் கவிதை,’ ‘கம்பனைப் போல் வள்ளுவன்போல் இளங்கோவைப் போல்’ ‘கற்பு நிலையென்று சொல்லவந்தார்’,  ‘முகத்தில் உமிழ்ந்துவிடு’ ஆகிய கவிதை அடிகளின் பொருண்மைக் கூறுகள் உரைநடையாக்கங்களில் இருப்பதையும், முகத்தில் உமிழ்தல் அவனது வாழ்க்கை நிகழ்வாக இருந்திருப்பதையும் அக்கட்டுரை நுட்பமாக எடுத்துரைக்கிறது.
‘தெலுங்கு மொழிக் கவிஞர் போத்தன்னாவைப் போற்ற வேண்டும்’ என்று ஒருவர் எழுதியதே முப்பெரும் தமிழ்க் கவிஞர்களைப் போற்றவேண்டும் எனப் பாரதியை எழுத வைத்தது என்பதை எடுத்துக் காட்டி, இளங்கோவை பாரதி எவ்வாறெல்லாம் போற்றியுள்ளான் என்பதை விரிவாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். ஊடாக, ‘ஆரிய’ என்ற சொல் எவ்வாறு ‘உயர்ந்த’ என்னும் பொருள் பெறுகிறது என்பதைப் பொருத்தமான இடத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். இது பாரதி அன்பர்களுக்குப் புதிய தெளிவைத் தரும் என்பதில் ஐயமில்லை. நாட்டுப் பற்றில் சிறந்திருந்த இராமலிங்க ரெட்டி என்னும்  தெலுங்கு இளைஞரை பாரதி போற்றியதையும் பின்னாளில் ஆந்திரப் பல்கலைக் கழகத் துணை வேந்தரான அவர் பாரதியின் நூலுக்கு அணிந்துரை வழங்கியதையும் அவர் குறித்த தகவல்களையும் அரிதின் முயன்று தொகுத்து வழங்கியுள்ளார்.
பாரதியின் நெஞ்சையள்ளும் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள பிள்ளைக் காதல் குறித்தமையும் மற்றொரு கட்டுரை, அக்காதலின் மெய்மையறியாமலும் அல்லது மறைத்தும் முன்வைக்கப்பெற்ற பல கருத்துக்களைச் சான்றுகளுடன் மறுக்கிறது. அத்துடன் ‘தெய்வ நாட்கள்’ என்று தலைப்பிட்டு இதனைக் குறு நாடகமாக கு.ப.ரா. எழுதியுள்ள அரிய செய்தியை, அறியப் பெறாத அப்படைப்பாக்கத்துடன் பதிவு செய்துள்ளது.
‘கவிதாதேவி அருள் வேட்டல்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் பாரதி எடுத்தாண்ட ‘அருந்தவப் பன்றி’ கதை, பல்வேறு தேடல்களுக்குக் காரணமாகியுள்ளது. பாரதி ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் நூலிற்குப் பிறகு இக்கதை மிகுந்த கவன ஈர்ப்புப் பெற்றுள்ளது. இக்கதையின் மூலம் எது என்ற கேள்விக்கு விடைகாண முயலும் ஆசிரியர், விவேகானந்தரிடம் இக்கதை பல மாற்றங்களுடன் நிகழ்வதைச் சுட்டிக்காட்டி, நாட்டுப்புறக் கதை வடிவமொன்றே பாரதி குறிப்பிட்ட கதையுடன் ஒத்துச்செல்கிறது என ஆசிரியர் ஆய்ந்துரைத்துள்ளார்.
குழந்தைப்பருவ மணம் குறித்து பாவேந்தருக்கு முன்பே பாரதி பாடியுள்ளதை அவனது  சுயசரிதைப் பாடல் கொண்டு வெளிப்படுத்தும் ஆசிரியர் ‘பெரியார், பாரதி இருவரும் பெண் விடுதலைக்காகச் சிந்தித்தவர்கள்… பெண்ணுரிமைக் கருத்துகளில் பாரதி பல இடங்களில் பெரியாருடன் ஒத்த கருத்துக் கொண்டிருந்தார்’ என்னும் கி.வீரமணி அவர்களின் கூற்றினை விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இது பாரதி – பெரியாரியல் அன்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது’ என்றும் உணர்த்தியுள்ளார்.
அருணகிரிநாதரால் பாடப் பெற்றதாக பாரதி குறிப்பிடும் ‘மலடி வயிற்று மகன்போல’ எனத் தொடங்கும் பஞ்சரத்தினத் திருப்புகழ் பாடல் அருணகிரிநாதரால் பாடப்பட்டதன்று’ என்று  எழுப்பப்படும் அய்யத்திற்கு விடை தேடும் ஆசிரியர் திருப்புகழ் மற்றும் பஞ்சரத்தினத் திருப்புகழ் ஆகிய நூல்களின் பதிப்பு வரலாறு முழுதையும் ஆய்ந்துள்ளார். பாரதி தன் காலத்தில் வழங்கிய, அருணகிரிநாதரை ஆசிரியராகக் குறிப்பிட்டுப் பதிப்பிக்கப் பெற்ற நூலினையே பயன்படுத்தியுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் அருணகிரி நாதரின் முற்காலப் பாடல்களைவிடப் பிற்காலப் பாடல்களே பாரதியைக் கவர்ந்துள்ளதையும் அதற்கான அவனது கவிதைக் கோட்பாட்டையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாரதி குறித்த திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாவேந்தர் எழுதிய திரைக்கதை உரையாடற் படைப்பு நூலாக்கம் பெற்றிருந்த போதும் உரிய கவன ஈர்ப்புப் பெறாமலும் பாரதியியலாளர்களால் கூட அறியப்படாமலும் இருக்கும் நிலை குறித்துத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள ஆசிரியர், பாவேந்தரின் திரைக்கதை பாரதி குறித்த பல்வேறு ஐயங்களுக்கு விளக்கமளிப்பதாக இலங்குவதை எடுத்துக் காட்டியுள்ளார். குறிப்பாக, பாரதியின் இறுதிக் காலத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் பாவேந்தர் உடனிருந்து அழைத்துச் சென்று எடுத்தது என்பதற்குச் சான்றாக திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ள காட்சியை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார் ஆசிரியர். அத்துடன் அத்திரைக்கதை பதிப்பிக்கப் பெற்ற நூல் உரிய வகையில் கவன ஈர்ப்புப் பெறாமைக்கு அதனை அச்சிட்ட தன்மையின் குறைபாடுகளை நேர்மையாகவும் துணிவாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள், கதைகள், சொற்பொழிவின் எழுத்து வடிவங்கள் தவிர்த்து, அதில் இடம் பெற்ற உள்ளூர், வெளியூர், உலகச் செய்திகள், பிற தகவல்கள் ஆகியவற்றிலும் பெரும்பாலானவை பாரதியால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன்முதலாக வெளிப்படுத்தியுள்ள ஆசிரியர், அவற்றில் திருமணம் செல்வக் கேசவர், கா. நமச்சிவாயர், ந.மு. வேங்கடசாமி, முத்துராமலிங்கம் ஆகியோர் குறித்த பாரதியின் ஈடுபாடுகளை தமிழ்ப் புலமையுலகினை பாரதி உற்று நோக்கிய திறத்தை எடுத்துக் காட்டியுள்ளார்.
வாழ்ந்த காலத்தில் உரிய அங்கீகாரம் பாரதிக்கு கொடுக்கப்படவில்லை; போற்றப்படவில்லை என்ற கருத்தை வலிமையாக மறுத்துரைக்கும் ஆசிரியர், தான் வாழ்ந்த நாளிலேயே பல்வேறு தரப்பிலிருந்தும் பாரதி அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்றிருந்ததைச் சான்றுகளுடன் எடுத்துமொழிந்துள்ளார். இங்கிலாந்தின் இதழியலாளர் நெவின்சன் என்பவர் 1908ஆம் ஆண்டு எழுதிய நூலில் பாரதியைக் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை எடுத்துக் காட்டியுள்ளார். வறுமையிலிருந்த போதிலும் பலரது பொருளுதவி பாரதிக்குக் கிடைத்தது ஆயினும் அவன் பணத்தை ஒரு பொருட்டாக மதிக்காதவனாக இருந்தான் என்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுபோல் பாரதியின் மேதமையும் பலரால் அறியப்பட்டிருந்ததையும் பாரதி சிறைப்பட்டபோது பலர் விரைந்து வந்து விடுதலைக்கு உதவியதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மறைவுக்குமுன்  பாரதி கலந்து கொண்ட  கூட்டங்களும் அங்கெல்லாம் கூடிய மக்கட்பெருக்கமும் அவன் பெற்றிருந்த உயர்நிலையைக் காட்டுவதை விளக்கியுள்ளார். அத்துடன் பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவன்தம் படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் போற்றப்பட்டதையும் விவரித்துள்ளார். மறைவுக்குப் பின்னர் பாரதியின் குடும்பம் பல்வேறு தரப்புகளிடமிருந்து உதவிகள் பெற்றதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாரதி குறித்த தமிழ்ச்சமூகத்தின் இத்தகைய எதிர்வினைகள் போற்றத்தக்கவை  என்பதில் ஐயமில்லை. ஆயினும் கவிஞன், அறிஞன், அரசியல்வாதி எனக்கிடைத்த அங்கீகாரங்கள் கடையத்தில் நிகழ்ந்த இறுதி நாட்களின் சீரழிவுத் தடுப்பிற்கோ,  நூல்கள் வெளியீட்டு முயற்சிக்கோ, ‘அமிர்தம்’ பத்திரிகை வெளியீட்டு முயற்சிக்கோ துணை நிற்கவில்லை. எட்டயபுரம் அரண்மனையின் புறக்கணிப்புப் போலவே மக்களின், நண்பர்களின், அணுகுமுறையும் முன்வாராமையும் இருந்துள்ளன. தன்னையொரு படைப்பாளியாகவும் பத்திரிகை யாளனாகவும் கண்ட அவனது செயலூக்கங்கள் வற்றிப்போகவும் அவை காரணங்களாயின என்பதையும் சேர்ந்தெண்ணுதல் வேண்டுமெனத் தோன்றுகிறது.
பொதுவாக, இலக்கணத்தில் ஊன்றி நிற்போர் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதும் மரபிலக்கியப் பற்றுமிக்கவர்கள் நவீன இலக்கியங்களில் ஈடுபாடு கொள்வதும் அரிய நிகழ்வாகவே உள்ளது. ‘யாப்பதிகாரி’யான முனைவர் ய.மணிகண்டன் அவர்கள் நவீனப் புனைவிலக்கியப் பரப்பில் ஆழ்ந்தகன்ற புலமையுற்று நிற்பதையும் ஆய்வு மனப்பான்மையுடன் தெளிவும் அழகும் மிளிரும் மொழிநடையுடன் தீவிரமாக இயங்குவதைக் காணும்போது பெருமகிழ்வு ஏற்படுகிறது. வியத்தகு உழைப்பை நல்கி பாரதியியலை விரிவு செய்யும் அவர்தம் ஆய்வுப் பணிகளுக்காக பாரதி அன்பர்களும் ஆய்வாளர்களும் அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டோரேயாவர்.

பாரதியியல் கவனம் பெறாத உண்மைகள்
ய. மணிகண்டன் | பாரதி புத்தகாலயம்
விலை:ரூ.140/ பக். 192

Related posts