You are here
நூல் அறிமுகம் 

சித்தார்த்தன்: வாழ்வும் தேடலும்

சா. கந்தசாமி

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தார்த்தன் என்ற பிராமண இளைஞன் வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் காண பெற்றோர்களைத் துறந்து கோவிந்தன் என்னும் தோழனோடு சேர்ந்து கொண்டு போகிறான். நெடும்பயணத்தில் தோழனைத் துறந்து சமணனாகி அவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகி அலைகிறான். அவன் நன்குக் கற்றவன். தன்னையும், உலகத்தையும் அறியும் ஞானம் பெற்று இருக்கிறான¢. அவன் ஞானமே அவனை அலைய விடுகிறது. அலைந்து திரியும் அவன் கௌதம சித்தார்த்தர் ஞானமுற்று, காவியுடையணிந்து தானமேற்று உபதேசம் புரிந்து கொண்டிருப்பதாகக் கேள்விப் படுகிறான். அவரைக் காணவும் அவரின் அருளுரையைக் கேட்கவும் அவாவுற்று தோழன் கோவிந்தனுடன் செல்கிறான்.
சாவதி நகரத்தில் சித்தார்த்தன் முதலில் புத்தரைப் பார்த்தான். கடவுளே வந்து வழிகாட்டியதுபோல இருந்தது. பொன்நிற உடை அணிந்து, துறவுக் கோலத்தில் அகந்தை என்பதை அழித்துவிட்டு நிதானமாகத் தான கலயத்தோடு நடந்து செல்லும் புத்தரைக் கண்டு திகைத்துப் போய் கோவிந்தனுக்கு அடையாளம் காட்டினான். புத்தரின் கனிவான தோற்றத்திலும், தர்ம உபதேசத்திலும் மனத்தைப் பறிகொடுத்த கோவிந்தன், புத்தரின் சங்கத்தில் சேர்ந்து பிட்சுவாகிவிட்டான். ஆனால் சித்தார்த்தன் புத்தரிடம் இருந்து ஒதுங்கி நின்றான். அவரோடு வாதம் புரிந்தான். அவர்கூட சிறுநேரம் அவனோடு பேசினார். ஆனால் அவர் கூற்றில் இருந்து புதிய தெளிவு பெறவில்லை. அவன் புத்தரைத் துறந்து தன் வழியாக நடந்தான். ஞானம் என்பது தானாகப் பெறக்கூடியது என்று அவனுக்குப் பட்டது. அதுபற்றி அவன் பேசவில்லை. உணர்ந்து கொண்டான். அதுவே அவனைத் தன் இலக்கு நோக்கி நடக்க வைத்தது. சித்தார்த்தன் நடந்தான். அவன் நடந்ததும், நடந்து பெற்றதுந்தான் நாவல்.
‘சித்தார்த்தன்’ நாவலில் பிரதான அம்சம் தேடல். ஒவ்வொரு மனிதனும் தனக்கான ஞானத்தைத் தானே பெறவேண்டும். பெற முடியும் என்பதுதான். அதுவே சித்தார்த்தன், அவன் தோழன் கோவிந்தன், நகரத்தில் புகழ் பெற்ற கணிகையான கமலா, வணிகன் காமஸ்வாமி. படகோட்டி வாசுதேவன் என்பதோடு நீரோடும் ஆறு வழியாகச் சொல்லப்படுகிறது. சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாத ஞானந்தான் நாவலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
சித்தார்த்தன் நாவல் ஐரோப்பிய நாவல். ஜெர்மனி மொழியில் 1922ஆம் ஆண்டில் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதினார். அதற்கு 1946ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்க்கு அறுபத்தொன்பது வயதாகி இருந்தது. ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்ததால் அங்கு வாழ முடியாமல் போய்விட்டது.  அவர் புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து குடிமகனாகி வாழ்ந்துவந்தார். அரசியல் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதி வந்தார். தன் காலத்திலேயே ஜெர்மானிய மொழியில் எழுதும் சிறப்பான எழுத்தாளர் என்று கவனிப்பு பெற்றிருந்தார்.
ஹெர்மன் ஹெஸ்ஸே 1877ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிராட்டஸ்டெண்ட் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். அவர் குடும்பத்தினர் பலரும் கேரளாவில் கிறிஸ்துவ ஊழியத்திலும், கல்வி அளிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர் தாத்தா டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் தமிழ், மலையாளம் ஆங்கிலம் கற்றவராக இருந்தார். தலச்சேரியில் பள்ளிக்கூடம் ஏற்படுத்தி மக்களுக்குக் கல்வி கொடுத்து வந்தார். பைபிளை மலையாளத்தில் மொழிபெயர்த்து இருக்கிறார். மலையாளம்- ஆங்கிலம் அகராதியை முதன் முதலாகத் தொகுத்து வெளியிட்டார். அவர் சேவையைப் பாராட்டும் விதமாக தலச்சேரியில் சிலை வைத்து இருக்கிறார்கள். ஹெர்மன் ஹெஸ்ஸே தந்தை நோஹன்ஸ் ஹெஸ்ஸேவும் தாயார் மேரி குண்டர்ட்டும் தலச்சேரியில் பிறந்தவர்கள். அங்கேயே படித்து வளர்ந்து ஜெர்மனி சென்றவர்கள். எனவே இரண்டு தலைமுறையாக இந்தியப் பண்பாடு, தத்துவம், வாழ்க்கை முறைகள் அவர்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது.
ஹெர்மன் ஹெஸ்ஸேவை ஒரு பாதிரியாராக்க அவர் குடும்பத்தினர் விரும்பினார்கள். அது கடவுளுக்கும் மக்களுக்கும் சேவை புரிவதாக இருக்குமென்று நம்பினார்கள். ஆனால் இளம் வயது ஹெஸ்ஸே அதற்கு உடன்படவில்லை. தேவாலய வாழ்க்கையைத் துறந்து அவர் வெளிவந்துவிட்டார். ஆனால் வாழ்க்கை நடத்த பணம் சம்பாதிக்க தொழில் பயிற்சி பெற்றார். பின்னர் ஒரு கடிகாரக் கம்பெனியில் மெக்கானிக்காக  சிறிது காலம் வேலை பார்த்தார். விரைவில் அதில் சலிப்பு வந்துவிட்டது.
அவர் தன் பத்தொன்பதாவது வயதில் ஒரு புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அது அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வேலைபார்த்துக் கொண்டே இலக்கியம், தத்துவம், சரித்திரம் உளவியல் படித்தார். படிப்பு அவரை எழுத வைத்தது. கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் எழுத்தாளராகவே வாழ்வது என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
1912-ஆம் ஆண்டில் கிழக்கத்திய நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று புறப்பட்டு இலங்கை, இந்தியா வந்தார். முதலில் தாத்தா பணியாற்றிய தலச்சேரிக்குச் சென்றார். தாயார் பிறந்த இடத்தையும் தந்தை வாழ்ந்த வீட்டையும் பார்த்தார். இந்தியா வருவதற்கு முன்பே, புத்தர் வாழ்க்கையைப் பற்றியும் அவர் தத்துவம் பற்றியும் படித்திருந்தார். அதனால் புத்தர் வாழ்ந்த உபதேசம் புரிந்த இடங்களுக்கு எல்லாம் சென்றார். அது அவர்க்கு சித்தார்த்தன் தேடலை முன்வைத்து நாவல் எழுத முடிவு எடுக்க வைத்தது. ஆனால் அதற்குத் திருப்திகரமான உருவமும், வடிவமும் தத்துவத்தின் அடிப்படையில் கொடுத்தெழுத பத்தாண்டுகள் பிடித்தன.
சித்தார்த்தன் நாவல் கௌதம சித்தார்த்தன் பற்றிய நாவல் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஞானம் பெற முடியும் என்பதுதான். அதனை ஒரு தத்துவமாகவும், வாழ்க்கையாகவும் எழுதியிருக்கிறார். வாழ்க்கை என்பது  பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்வது. வாழ்க்கை என்பது பரதேசிகள், தாசிகள் எல்லாம் கொண்டதுதான். எப்படி வாழ்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ்க்கை எதை நோக்கிப் போகிறது என்பதையே கமலாவின் வழியாகச் சொல்கிறார். கமலா அழகு, அறிவு, கனிந்த உள்ளம் என்பதின் குறியீடாகவே இருக்கிறாள்.
பெரும் வாழ்க்கையை வாழ்க்கையின் தத்துவ சரட்டைச் சொல்லும் நாவல். ஆனால் குறைந்தப் பக்கங்களில் அதாவது சுமார் 150 பக்கங்களில் எழுதப் பட்டு இருக்கிறது. மகத்தான நாவல் என்பது பக்கங்களின் எண்ணிக்கை சார்ந்ததில்லை என்று சொல்வதுதான். 1950ஆம் ஆண்டில் சித்தார்த்தன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. வாசகர், விமர்சகர்கள் வரவேற்பு பெற்றது. 1958ஆம் ஆண்டில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. தமிழ் மொழிபெயர்ப்பு கவிஞர் திருலோக சீதாராம். கவித்துவம் மிகுந்த சொற்களால் மொழிபெயர்த் திருக்கிறார். பல சொற்களின் பொருள் அறிந்துகொள்ள அகராதியைத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அது நாவலைப் படித்து அனுபவிக்கத் தடையாக இல்லை. அதனையும் மொழிபெயர்ப்பின் சிறப்பு என்று குறிப்பிட வேண்டும்.
‘சித்தார்த்தன்’ வாழும் நாவல். அது பழங்காலத்து வாழ்க்கையைச் சொல்கிறது என்றோ, அன்னிய மொழியில் எழுதப்பட்டதென்றோ, மொழிபெயர்ப்பு என்றோ தள்ளிவிடக்கூடிய நாவல் இல்லை. எப்பொழுதும் படிக்கத்தக்க நாவல். தன்னைக் கவர்ந்து தேடுதலை வாழ்க்கையாக்குவது. எனவே படிக்கப்படுகிறது.
1972-ஆம் ஆண்டில் கார்னாட் ரூக்ஸ் என்ற சினிமா இயக்குநர் ஆங்கிலத்தில் படமாக எடுத்தார். இந்தியாவில் புத்தர் நினைவிடங்களில் படம் எடுக்க அரசிடம் அனுமதி கோரினார். அரசாங்கம் மறுத்து விட்டது. எனவே ரிஷிகேஷ் மற்றும், இமயமலை சார்ந்த வனப்பகுதிகளிலும், மகாராஜாக்களின் பழைய அரண்மனைகளிலும் படம் எடுத்தார். சித்தார்த்தனாக சசிகபூர், கமலா என்ற தாசியாக சிம்மி கிர்வால் என்ற நடிகையும் நடித்தார்கள். படம் தணிக்கைக்குச் சென்றது. அதில் கமலாவான சிம்மி முத்தமிடும் காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் வெட்டப்பட்டன, சில காட்சிகள் மாற்றப்பட்டு ஸ்டில் அவுட்டாகக் காட்டப்பட்டன என்றார்கள். ஆனால் சித்தார்த்தன் சினிமா விளம்பரத்தில் அவையே முதன்மையாக இடம் பெற்றன. சினிமா பேசப்பட்டது. ஆனால் வெற்றிகரமான படமாக நாவல் அளவிற்கு வரவில்லை.

சித்தார்த்தன் | ஹெர்மன் ஹெஸ்ஸே |
பாரதி புத்தகாலயம்

Related posts