You are here

குட்டிச்சுவர் கலைஞன் ஒருவனல்ல 13 பேர்…

க.வை.பழனிசாமி

ஒரு படைப்பாளியின் அனுபவம் சும்மா இருப்பதில்லை. மனதை சதா கீறி உழுது சுயமான விதைகளைத் தூவித்தூவி புதுப்புது விளைச்சல்களைக் கண்டுகொண்டே இருக்கிறது. பயிர்களைக் கண்டு பரவசம்கொள்ளும் மனம் மேலுமான விளைச்சல்களை நோக்கி நகர்கிறது. அனுபவம்… அனுபவம் கிளர்த்தும் எண்ணம்…. எண்ணம் கூட்டிச்சென்று காட்டும் கண்படாத இடங்கள். இந்த இடமிருந்து எழுதுகிறவர்கள் அரிதினும் அரிது. இப்படியான அரிதான எழுத்தில் தொடர்ந்து பயணிக்கும் படைப்பாளி கீரனூர் ஜாகிர்ராஜா.
ஜாகிர்ராஜா தனது எழுத்தை ‘ஜின்னாவின் டைரி’ நாவலில் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். பகடியும் விமர்சனமும் கலந்த கொண்டாட்டமாக வாசகனைக் கவர்ந்த நாவல் அது. இப்போது “குட்டிச்சுவர் கலைஞன்” அதேவேகத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு நாவல்களிலும் புனைவின் பேரழகை நாட்டிய அழகில் அதிரவிடுகிறார். எப்படி இப்படியொரு பாய்ச்சல்? கோள்களில் கால் பதிக்கும் பெரு நகர்தல் என்று வியக்கிறோம். தெருவில் குழந்தைகள் குதித்து கும்மாளமிட்டு ஓடும். பார்க்கும் நம்மையும் அந்த உற்சாகம் பற்றிக்கொள்ளும். அப்படி ஒரு நடை நாவல் முழுவதும். ஜாகிரிடமிருந்து அந்த மனதை கடன் வாங்கிக்கொண்டால் நாள் முழுவதும் உறசாகமாகத் திரியலாம். எழுத்தாளர் அரளிப்பூவோடு ஒரு நேர்காணல். ஒவ்வொரு கேள்வியிலும் நக்கல். வெளிப்படும் பதில் எள்ளலின் உச்சம்.
கே. அவருடைய மரணத்தின்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக…
ப. அவருடைய மரணம் என்பது இட்டுக்கட்டப்பட்டது. அவர் உயிருடன் இருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை அவர் உயிருடன் இருக்க வேண்டும்.
கே. ஆனால் இறந்துவிட்டார்… அப்படித்தானே?
ப. அவர் பலமுறை இறந்து பிறந்திருக்கிறார்.
கே. இம்முறை இறந்ததுடன் சரி. பிறக்கவில்லை. அப்படித்தானே?
ப. இப்படியே நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் நான் சில ஆதாரங்களைக் காட்ட வேண்டியிருக்கும்.
கே. என்ன, அவர் டி.வி. பார்த்துக்கொண்டு பேப்பர் படிக்கிற மாதிரியா?
ப. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்
கே. இதுமாதிரி பலவும் தெரியும்.
ப. குட்டிச்சுவர் என்பவர் ஒருவர் மட்டுமே அல்ல.
கே. ஆஹா.. இது என்ன புதுசா இருக்கு?
ப. ஆம்…. அவரைப் போலவே 13 பேர் இருக்கிறார்கள்
கே. ஒருத்தரையே தாங்க முடியவில்லை.
இந்த உரையாடலில் பகடிக்குப் பின்னிருக்கும் வலியையும் சேர்த்தே உணர்கிறோம். தமிழக அரசியலையும் கலந்தே வாசிக்கிறோம். வலியும் துயரமும் அரசியலுக்கு  மூலதனமாகிவிடும் அவலத்தைத் தீண்டி வெட்கப்படுகிறோம். இந்த நாவலில் வார்த்தைகள் கிளைத்து வரும் மரத்தின் வேரைக் கண்டறிவதே வாசிப்பாக இருக்க வேண்டும். வாழ்க்கை எல்லாவற்றையும் செய்தியாக்கித் தூர எறிகிறது நமக்கு அது நடக்காதவரை. ஜாகிரின் ஜின்னாவின் டைரியும் குட்டிச்சுவர் கலைஞனும் நேர்மையான சமூக மனத்தை ஏற்படுத்தும் முயற்சி. வாசிப்பு பொருள் கொள்வதையும் தாண்டி மன அடுக்குகளில் பயணிக்க வேண்டுமென விரும்புகிறேன். அப்படியான எழுத்தை எழுதுகிறவர்கள் குறைவு. எனவேதான் அபூர்வமாக வெளிவரும் இப்படியான எழுத்தை அக்கறையோடு வாசிக்க விரும்புகிறோம். கிடைக்கும் பிரதியோடு சற்றே காலாற நடந்து வந்தால் மனம் விசாலமாகிவிடுகிறது.
கு.ப.ரா. வின் ‘சிறிது வெளிச்சம்’ கதையில் வரும் பெண் அப்போது கிடைத்த சிறிது வெளிச்சமே போதும் என்று ஒதுங்கிக்கொள்கிறாள். இரண்டு மனங்களின் மென்மையான காயம்படாத பாதுகாப்பான நகர்வு. ஜாகிரின் நாவலில் அனுபூதி என்கிற அந்த வீட்டில் தாட்சாயணி என்னும் பெயருள்ள பெண். பெண்ணென்றால் சித்திரம். ரவிவர்மாவின் வரைகலைச் சாயலுள்ளவள். பன்னீர் வஸந்தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண். கு.ப.ரா. சொல்கிற எல்லாத் துயரங்களும் அதற்கு மேலும். கணவன் கொடுமை, அதன் அதீதத்தில். தாட்சாயணியின் கணநேரப் பார்வை வஸந்தனைத் தீண்டுகிறது. கணநேரப் பார்வைதான். கணவன் வர எல்லாமும் சர்வ நாசம். அதன் பிறகு வஸந்தனின் மனதில் ஓடும் எண்ணங்கள் கு.ப.ரா. எழுத மறந்த வேறு ஒன்றைப் பேசுகிறது. இந்த நாவலின் மையச் சரட்டைப் பின்னும் முக்கியமான இடங்களில் ஒன்று அது.
கதைகளை எழுதிப்பார்க்கும் கதையாக விரிகிறது நாவல். குடிஞனை மது கடத்துவதுபோல ஜாகிரை கதைசொல்லி மாயமாக வந்து கடத்திப்போகிறது. கடத்தப்பட்ட எழுத்தாளன் ஜாகிரைப் பார்த்து ‘‘கண நேரமும் விடாமல் கதை சொல்க… இல்லையேல் மரணம்” என்று சபிக்கிறது. சொல்லும் ஒவ்வொரு கதையும் வாசிப்பில் ஈர்க்கப்பட வேண்டும் என்று துணை விதியும் போடுகிறது. மீள முடியாதக் கதைப்பரப்பில் சிறையிருக்கும் ஜாகிரிடமிருந்து மெய்மறந்து அன்ன ஆகாரம் துறந்து கதைகளைக் கேட்கிறது கதைசொல்லி. இனி ஒருபோதும் ஜாகிரை சிறை மீட்க முடியாது.
தாட்சாயணி பதிப்பகத்திற்கு புத்தகம்போட ‘‘நல்ல உணத்தியான ஸ்கிரிப்ட்” தேடி அலைகிறார்கள் பன்னீர் வஸந்தனும் பங்காளி பனையோலையும். ‘‘எழுத்தாளன் இருக்கீங்களா எழுத்தாளன்” என்று கூவி தஞ்சாவூர் தெருவெங்கும் திரிந்து திரும்பும்போது ‘‘அங்க்கிள் எலுத்தாழன் பொம்மை விக்கிறேளா?” என்று ஒரு சிறுவன் கேட்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பகடியாக நகரும் முதல் அத்தியாயம்  வாசகனை நண்பராக்கிக்கொள்கிறது. பிறகு ஜாகிரின் எழுத்தை நட்போடுதானே வாசிக்க வேண்டும்.
காணும் எல்லாப் பொருள்களிலும் உறைந்திருக்கும் கதை ஜாகிரின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது. ‘முத்துக்கனி காதை’ சொல்லும் கதை நெல்லை காலணியிலிருந்து தெறித்த கதை. கடைக்குள் நுழைந்து திரும்பும்போது வாசக மனத்தில் கனக்கும் கதை… உதற முடியாமல் ஒட்டிக்கொள்கிறது. அவர் தனது மகனைப் பற்றிச் சொல்லும் இடம் துறக்க முடியாத வலி. சங்கரலிங்கத்தையும் முத்துக்கனி பாயையும் மனதிலிருந்து நீக்க முடியாது. கூடவே ‘‘புதுச்செருப்பு கடிக்கும்” என்ற கடையின் பெயரையும்.
குட்டிச்சுவர் கலைஞனை நெருங்குவதற்கு முன்பு நாம் சில வாயில்களைக் கடக்க வேண்டும். எல்லாமும் கோபுர வாயில்கள். முதல் வாயில் எதார்த்தன் என்கிற யதார்த்தன். பூனையைப் போலொரு நிசப்த நடைபோட்டு தாட்சாயணி பதிப்பக அலுவலகத்தினுள் நுழைவதாகத் தொடங்கும் அந்த வரியிலிருந்து உயிர்கொள்கிறான் குட்டிச்சுவர் கலைஞன். பனையோலையிடமும் பன்னீர் வஸந்தனிடமும் யதார்த்தன் பற்ற வைக்கிற பெயர் குட்டிச்சுவர் கலைஞன். அந்த நெருப்பு நம்மையும்  பற்றிக்கொள்கிறது. அணையாத நெருப்பின் கலா வலியோடு நாவலைப் பின்தொடர்கிறோம். எதார்த்தனின் தொடர்ந்த பேச்சு நெருப்புக்கு நெய் வார்க்கிறது.
குட்டிச்சுவர் கலைஞன்மீது பூடகமானத் திரையைப்போட்டு வாசகனை கர்ப்பக்கிரகத்துக்கு வெளியேக் காத்திருக்கவைக்கிறான். திரையை நீக்காது உள்ளேயிருக்கும் வடிவ உருமீது மையல்கொள்ள வைக்கிறான். குட்டிச்சுவர் கலைஞன் மீது மோகம்கொள்ளவைத்து மோகம்கொள்ளவைத்து நம்மை அலைக்கழிக்கிறான்.
ஜாகிர் விரிக்கும் படைப்புலகம் சுயம்புவானது. இவர் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும் என்பதானக் கதையாடல். வடக்கேமுறி அலிமா, மீன்குகை வாசிகள், துருக்கித் தொப்பி, ஜின்னாவின் டைரி என்று எல்லாவற்றிலும் அவரின் தனித்த எழுத்தைப் பார்க்கலாம். சமூகத்தோடும் மனிதர்களின் ஆன்மாக்களோடும் கரைந்து அனுபவித்த எழுத்து. எதன் சாயலும் படியாத எழுத்து. அலிமாவை, அல்லாப்பிச்சையை வேறு யார் எழுத முடியும்? குட்டிச்சுவர் கலைஞனை வாசித்த பின்பு அப்படியான கலைஞனை வெளியில் தேடும் அவாவை அடக்க முடியாது. வடகோவையைக்கூடத் தாண்டாத கலைஞன் அவன். முடிவில்லாத இலக்கியத்தின் நீள அகலங்களைத் தெரிந்து வைத்திருக்கும் கலைஞன், வெளியே தெரியாது வாழ்கிறான். நாவலின் கடைசிப் பக்கங்களில் குட்டிச்சுவர் கலைஞனின் எழுத்தை வாசிக்கும்போது கண்படாத கலைஞனின் வசீகர எழுத்தில் மயங்கிப் போகிறோம். கலைஞனுக்குப் பின்னாலிருக்கும் ஜாகிர்ராஜா துலக்கமாகத் தெரிகிறார்.
எள்ளலும் இருத்தல் வலியும் கலந்து மோதுறும் எழுத்து ‘குட்டிச்சுவர் கலைஞன்’. ஒரு நாவலுக்கு இப்படி ஒரு பெயரை வைக்கும் தைரியம் ஜாகிருக்கு மட்டுமே உண்டு நாவலுக்கு மட்டுமல்ல கதாபாத்திரங்களுக்கும்தான். வாசிப்பின்போது பெயரின் மகிமை யாரையும் ஈர்க்கும். எதுவும் கதையாகும் மாயவித்தை இவரிடம்தான் உண்டு. ‘குட்டிச்சுவர் கலைஞனின் நாட்குறிப்புகள்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் எல்லாமும் ஒரு கதைக் கொண்டாட்டம்தான்.
அந்தரங்கத்தை உடலாகக் காட்டி மகிழும் தைரியம் குட்டிச்சுவர் கலைஞனுக்கே சாத்தியம். கலைஞனின் அந்தரங்கமல்ல அது. மனிதன் காட்டமறுக்கும் உண்மை முகம்.
யதார்த்தனின் பேச்சை பனையோலை அவன் அறியாது பதிவு செய்துவிடுகிறான். அரைபோத்தல் பீரில் மனதைத் திறந்து பேசிவிடும் யதார்த்தன் பதிவுசெய்த தனது பேச்சைக் கேட்டு அதிர்ந்து கோபப்படுகிறான். ஆனால் நாவல் முழுவதும் மனிதனின் உள்முகம்தான் காட்சியாகி அலைகிறது. மனித வாழ்க்கையின் மறைவிடத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சும் எழுத்தே குட்டிச்சுவர் கலைஞன்.
பறையின் தொகுப்புக்கு குட்டிச்சுவர் கலைஞன் எழுதும் முன்னுரையில் ‘‘….. அவனுக்குள் ஒரு படைப்புலகம் இயங்கிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பறை தனக்கான மொழியுடனும் தனக்கான விசாலத்துடனும் எழுதுகிறார். எழுதத் தொடங்கும்போது ஒரு கட்டற்ற சுதந்திரம் கிடைக்கப் பெறும். அது அவனைப் பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளுக்கும் இழுத்துச் செல்லும். அந்த சந்தோசத்திலேயே அவன் வார்த்தைகளைக் கோர்க்கத் தொடங்குவான். பறையும் விதி விலக்கல்ல.”  என்று குறிப்பிடுகிறார். குட்டிச்சுவர் கலைஞனின் இந்தப் பார்வை அவரது நாட்குறிப்புகளை வாசிக்கும்போது நமக்கு மேலும் தெளிவாகப் புரிகிறது.
எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச் சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாது பேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டுக் களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா. இலக்கியப் பரப்பில் இப்படி இயங்கும் படைப்பு சமீப காலத்தில் இல்லை. தமிழில் புதிய எழுத்தைத் தருகிறவர் குறைவு. நாவல் எப்போதும் புதிய எழுத்தை வேண்டுகிறது. ழிமீஷ் ஙிஷீஷீளீ பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. புதிய எழுத்தே புதிய புத்தகத்தை வழங்கும். அப்படியான  முயற்சிகளை ஜாகிரின் சமீபத்திய எழுத்தில் பார்க்கிறேன்.

Related posts