You are here
தூரத்து புனையுலகம் 

கலையாத காற்றின் சித்திரங்கள்

ம.மணிமாறன்

சொற்கள் யாவும் அர்த்தம் தருபவையே. தான் எழுதிச் செல்கிற வரிகளில் படர்கிற வார்த்தைகள் வலிமையானது, கூடற்ற ஒற்றைச் சொல்லைக் கூட நான்  எழுதுவதில்லை என்றே நினைத்துக் கொள்கின்றனர் எழுத்தாளர்கள். மனதிற்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல நான் எடுத்து எழுதிக்கோர்த்த சித்திரம் என்னுடைய படைப்பு என்ற பெருமிதம், எழுதுகிற எல்லோருக்குள்ளும் மிதந் தலைகிறது. மனதின் சொற்கள் காகிதங்களில் படிவதற்கான கால இடைவெளி  சில பல ஒளி ஆண்டுகள் தொலைவிலானது என்பதை பல சமயங் களில் எழுத்தாளனே புரிந்து கொள்கிறான். தனக்குள் சமாதானமாகி அடுத்தடுத்த பக்கங்களுக்குள் கரைகிற போது அவனுடைய போதாமை ஏற்படுத்திய சுமை எழுத்தாளனில் இருந்து மெதுவாக வெளியேறி விடுகிறது. உலகைப் புரட்டப் போகும் புத்தகம் இது என்கிற  அதீத துணிச்சலின்றி ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது தான். இருந்தபோதும் எப்போதோ, எழுதிப்பார்த்து சுகித்து ரசித்த விஷயங்கள் கூட பிறகான நாட்களில் நிஜத்தை வெளிப்படுத்திடும் போது தடுமாறிப் போகிறான் படைப்பாளி.
எந்தப் படைப்பையும் காலத்தில் வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்பது உண்மைதான். காலத்தின் கண்ணாடி என்று சொல்லிச் சொல்லி நிறமிழந்துபோன சொற்களிலும்கூட நிஜத்தின் ரேகை படிந்தே கிடக்கிறது. காலத்தின் பெரும் விளைச்சல் இது என யாவரையும் முழுநம்பிக்கை கொள்ளச் செய்த பெரும் படைப்புகள்கூட சமகாலத்தவையாக நீடிக்காமல் போய்விடுகிற துரதிருஷ்டமும் நிகழத்தான் செய்கிறது. குறிஞ்சி மலரின் அரவிந்தனும், பூரணியும் எழுபதுகளின் மனிதர்களுக்குள் ஏற்படுத்திய லட்சியவேகத்தை சமகாலத்து இளைஞர்களிடம் ஏற்படுத்த முடியாது தடுமாறி விழுகின்றனர். எங்கே யமுனா என தி.ஜா.வின் புனைவு வெளிகளைத் தரிசிக்கக் கிளம்பிய அதே இளைஞர்களை மோக முள்ளினால் வசீகரிக்க முடியவில்லை. யமுனாவைத் தேடிச்சென்று கண்டடைய முடியாது பித்துப்பிடித்தபடி திரும்பிய வாசகனின் அப்போதைய மனநிலைகளினைக் குறித்த சொல்கதைகளும்கூட தமிழ்நிலத்தில் நிறைய உண்டு. அவ்வளவு துடிப்பையும், பரவசத்தையும் இப்போது மோகமுள்ளினால் ஏற்படுத்திட இயலுமா என்பதைக் குறித்து நிச்சயமாக இருவேறு கருத்துக்கள் இருக்கக்கூடும். இந்த மன நிலையையும், சமகாலத்தவையாக ஆக்கிட இயலாமல் போய்விடுகிறதே படைப்புகள் என்பதனையும் கடந்து தமிழ் இலக்கியத்தில் எப்போது வாசித்தாலும்  நம்மை ஈர்த்துப் பெரும் பரவசம் அடையச் செய்யும் பெரும் படைப்புகள் நிச்சயம் நிறைந்திருக்கிறது. அதிலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் உலக இலக்கியங்கள் பலவற்றிற்கு இத்தகைய தன்மைகள் உண்டு என்பதை வாசக மனம் உணர்ந்திருக்கும்.
எத்தனை முறை வாசித்தாலும் புது மெருகுடன் நமக்குள் பிரகாசமாகும் படைப்புக்களை வாசித்திடும் போதிலான மனநிலையின் மகிழ்வினை  எழுத்தில் கடத்திட இயலாது. சொல்லித் தீர்க்கவே முடியாத மகாகாவியம் சிங்கிஸ் ஜத் மாத்தவ்வின் ‘முதல் ஆசிரியர்.’ காற்றில் ஆடும் பாப்ளர் மரங்களும், ஸ்டெப்பி புல்வெளிகளும், பனிப்புயல்களும், குதிரை களை விரட்டி வரும் ஓநாய்களுமாக நம்முடைய இரவின் கனவுகளை நிறைத்திடும் நாளாகிவிடும் ”முதல் ஆசிரியரை” வாசித்த பொழுது. பலரும் பலமுறை வாசித்ததுதான். வாசிக்கத் தவறியிருந்தால் தாமதிக்காது உடனே படித்துவிடுங்கள். பாரதி புத்தகாலயம் பூ.சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்பில் மறுமுறையும் பதிப்பித்திருக்கிறது.
தூரத்துப் புனைவுலகத்திற்காக பலமுறை படித்திருந்த முதல்ஆசிரியரைக் கையில் எடுத்தேன். சமகாலத்தைய ஊடகங்களில் வெளிப்படும் ஆசிரியர்களின் குரூரமுகங்கள் சிலவற்றால்தான் முதல் ஆசிரியர் என் கைக்கு  வந்து சேர்ந்தார். என்னுடைய வாசிப்பு மேஜையில் விரிந்த புத்தகத்தில்  அடிக் கோடிட்ட புத்தகமும், பென்சிலுமாகத்  துவங்கியது படிப்பு. முதல் பக்கத்தில் காற்றில் தளிராட்டம் நி¤கழ்த்திடும் பாப்ளர் மரங்களின் மீது அடிக் கோடிட்டேன். அடுத்தவரி, அடுத்தவரி என வரி வரியாக எழுதப்பட்ட வரிகள் தோறும் நகர்த்த வேண்டியிருந்தது பென்சிலை. சிங்கிஸ் நாவலுக்குள் இருந்து அல்டினாவுடனும், துய்ஷேனுடனும் சேர்ந்து சிரித்தார். கீழே வை நண்பா பென்சிலை. நீ படித்து முடிக்கிற வரையிலும் ஒவ்வொரு வார்த்தையையும் கோடிட வேண்டியிருக்கும். பரவாயில்லையா  என்றார். பனிவிழுந்து கொண்டிருந்த இரவுக் குளிர்ச்சியிலும் எனக்கு குப்பென வேர்த்தது. புத்தகத்தை  மூடினேன். இப்படித்தான் வாசகனையும், விமர்சகனையும் சவாலுக்கு அழைக்கும் படைப்பாளர்கள் நம்மைக் கலங்கடித்து விடுவார்கள்.
நீண்டு மனம் சமநிலை அடைந்தபிறகு திரும்பி வந்து புத்தகத்தை திறப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றானபோது மறுபடியும் பாப்ளர் மரங்களின் மெல்லிய வருடலுக்கு என் மனதினை ஒப்புக் கொடுத்தேன். நாவல் எனக்குள் பெரும் பாய்ச்சலாகப் பயணித்தது. எவரையும் புரட்டிப் போடும் மகா காவியம் முதல் ஆசிரியர். நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் நிமிடங்களில் ஒவ்வொருவரின் மனத்திரையில் அவரவரின் ஆரம்பப்பள்ளி நாட்களின் காட்சிகள் புலப்படத் துவங்கிவிடும். அகரம் கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகளின் முகங்கள் தூசி படிந்த பழைய புகைப்படத்திற்குள் இருந்து கிளம்பி வருவதும், உங்களோடு பேசுவதுமாக அதன் பிறகான நிமிடங்கள் அமைந்துவிடும். மகத்தான படைப்புகளையெல்லாம் ஒரே மூச்சில் நிச்சயம் படித்துவிட முடியாது. உங்களோடு பேசி, மனதின் மூடி இறுக்கப்பட்டிருக்கும் துருப்பிடித்திருக்கும் பக்கங்களையும் கூட இலகுவாகத் திறந்திடும் ஆற்றல் மிக்கவை பெரும் படைப்புகள். முதல் ஆசிரியரைப் படித்திடும் போதினில் கண்களை மூடியபடி விதவிதமான பள்ளி நாட்களுக்குள் நான் மூழ்கிப் போனேன். வாசிக்கிற எவருக்கும் இத்தகைய அனுபவம் சித்திக்கப் போவது நிச்சயத்திலும் நிச்சயம்.
புதினத்தின் கட்டமைப்பே முதல் ஆசிரியரை கலைப்படைப்பாக்கிடப் போதுமானதாக இருக்கிறது. எண்ணற்ற சித்திரங்களை உருவாக்கிடும் ஆற்றல் மிக்க கலைஞன் வரையமுடியாமல் அவனை அச்சுறுத்துகிற காட்சியையும், சூழலையும் நம்மோடு பகிர்வதாக அமைகிறது. ஆனால் நாவலை சொல்லிச் செல்வது அவனல்ல. சித்திரக் கலைஞனுக்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக் கழகப் பேராசிரியை கண்ணீர் மல்க கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே நாவலாக விரிகிறது. நாவலின் மையம் எப்போதும் வற்றாது பொங்கிப் பெருகும் மனிதகுலத்திற்கே உரித்தான அன்பைக் குறித்தது தான். நாவலின் காட்சிகளைத் தனக்கும், நமக்குமாக விரித்துச் செல்லும் சித்திரக் கலைஞன் கடைசிப் புள்ளியில் இப்படி முடிக்கிறான். துய்ஷேனின் அந்தக் கத்தல் இன்றுவரை அல்தினாயின் காதில் ஒலிப்பதைப் போல், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எதிரொலிக்கும்படியாக ஒரு படம் வரை. இப்படியெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் ஏனோ எல்லாம் எப்போதும் சரிப்பட்டு வருவதில்லை. இன்னும் என்ன சித்திரத்தைத் தீட்டப்போகின்றேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் தேடப்போகிறேன் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். இவ்விரண்டு புள்ளிகளுக்கு இடையில் தான் மொத்த நாவலும் சுழல்கிறது.
புரட்சிக்குப் பிறகான நாட்களில் உருவான மக்களின் அதிகாரம் நீடித்து நிலைத்திருப்பதற்கு கல்வி பிரதானமான கருவி என்கிற புரிதல் எளியமக்கள் வரை நீடித்திருந்தது. அப்படியான தன்மையினை மலைக் கிராமத்து குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்க முயற்சிக்கிற துய்ஷேன் தான் இந்த நாவலின் நாயகன். கல்வி மறுக்கப்பட்டு வந்த கிராமத்து  எளிய குழந்தைகளின் கதாநாயகனாகவும், குழந்தை உழைப்பில் வாழப்பழகிவிட்ட பெற்றோர்களுக்கு வில்லனாகவும் ஒரேநேரத்தில் தென்படுகிறான். துய்ஷேன் ஒன்றும் கற்றறிந்த ஆசிரியர் இல்லை. ஆனாலும் அவர் தனக்கான பள்ளிக்கூடத்தைத் தானே உருவாக்குகிறார். கல்வி கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவு மாக அவர் தெரிவு செய்த இடம் இடிபாடுகளுக்கு ஆட்பட்ட குதிரைலாயம். குதிரை லாயம் புரட்சிக்கு  முந்தைய நாட்களில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாக இருந்தது. விடுதலை எந்த மண்ணிற்கும் விதவிதமான மாற்றங்களைக் கொண்டு வரத்தான் செய்யும். வரலாற்றின் குரூர சாட்சியாகத் திரண்டு நிற்கும் அந்தக் களிமண் கொட்டடியின் மீது கல்விச்சாலை என்கிற புதிய படிமத்தையும் கூட காலமே எழுதிச் செல்கிறது. புதிய முயற்சிகளை எந்தச் சமூகமும் ஏற்பதில்லை என்பது உலக நியதிதான். எத்தனை பரிகாசத்தையும் கேலியையும் ஊர்மக்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது துய்ஷேனால் என்பதை   அறிகிறபோது துய்ஷேனுக்காக நாமும் கூட ஊர் மக்களிடம் பேசப் போகிறோம். துய்ஷேனின் செயல் எவ்வளவு  முக்கியமானது என்பதை ஊரின் பெரியவர்கள் அறிந்திட மறுத்திடும் போது குழந்தைகள் பெரும் விருப்பத்துடன்  துய்ஷேன் நடத்துகிற பள்ளிக்கூடத்திற்கு வரத்துவங்குகிறார்கள். ஒரு பள்ளிக் கூடம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான தனித்த மாதிரியே  துய்ஷேன் பள்ளி. புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பவர்களுக்கும் வேறு என்ன வேண்டும்? அன்பே எல்லாவற்றையும் சரிசெய்திடும் ஆற்றல்மிகு கருவி, காடுகளில் சாணம் பொறுக்கித் திரியும் குழந்தைகளைப் பார்த்து சிரிப்பும், சந்தோஷமுமாக பள்ளியை உருவாக்கிக் கொண்டிருந்த கூற்றுகளே அவர்களைப் பள்ளி¤க்கூடத்திற்கு அழைத்துவரப் போதுமானதாக  இருக்கிறது.
இந்த  நாவலுக்குள் தன்னுடைய ‘‘முதல் ஆசிரியர்’’ துய்ஷேனுக்காக அல்தினாய் செய்த முதல் காரியம் குளிர்காலத்தில் கனப்பு அடுப்புகளை எரிப்பதற்கான சாணத்தை தேடிப் பொறுக்கிச் சேர்த்துத் தந்ததுதான். அவள் நினைத்துக் கொள்கிறாள் இப்படி ‘‘சிறு வயதிலிருந்தே எனது விருப்பு வெறுப்புகள் முரட்டு மனிதர்களின் திட்டுகள், அடிகளால் குழி தோண்டிப் புதைக்கப் பட்டிருந்ததாலோ, இந்த முன்பின் தெரியாத நபருக்கு என் மனதிற்கு இதமளித்த புன்னகைக்காக என் மீது தெரிவித்த நம்பிக்கைக்காக அந்த ஒரு சில அன்பான வார்த்தைகளுக்காக எப்படியாவது நன்றி தெரிவிக்க வேண்டுமென்று திடீரென எனக்குப் பட்டது. இன்ப துன்பங்கள் நிறைந்த என்னுடைய வாழ்க்கை முழுவதும் அன்றைய தினம்தான் அந்த சாணமூட்டையிலிருந்துதான் ஆரம்பமாகியது என எனக்கு நன்கு தெரியும் இதில் எனக்கு சந்தேகமே இல்லை. நான் இப்படிச் சொல்லக் காரணம் அன்று தான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக யோசித்துப் பார்க்காமல், தண்டனைக்காக அஞ்சி நடுங்காமல், அவசியம் என்று எனக்குப் பட்டதைச் செய்வதென்று முடிவெடுத்துச் செய்தும் காட்டினேன்.’’
துய்ஷேன் பள்ளிக்கூடம் புன்னகையாலும் கனிவான சொற்களாலும் கட்டப்பட்ட உயரிய இடம். அதனால் தான் குழந்தைகள் அல்தினாயுடன் அங்கு கல்வி கற்கச் சென்றார்கள். இந்த மலைக் கிராமத்தைத் தாண்டிய உலகின் ஆச்சர்யங்களை ஆசிரியர் சொல்லக் கேட்டு பரவசத்தில் மிதந்தனர். எல்லாத் தடைகளையும் மீறி குழந்தைகளே நடத்திய பள்ளி அது. அவர்கள் ஒரு நாளும் பள்ளிவரத் தாமதித்திடவுமில்லை. தயங்கவுமில்லை. என்றாவது ஆசிரியர் அருகேயுள்ள நகரத்திற்கு போய்த் திரும்பிட காலதாமதமானால் குழந்தைகள் பரிதவித்துப் போகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. நம்முடைய பள்ளிக்கூடங்களில் நாளைக்கு லீவு எனும் சொற்கள் மட்டுமே குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்தமான சொற்பதமாக இன்றைக்கு வரை இருந்து வருகிறது. பள்ளிக் கூடங்களுக்குள் நுழைந்த குழந்தைகள் முகம் சுருங்கிப் போவதும், மணி அடித்துப் பள்ளி முடிந்ததை அறிவித்த மறுநொடியில் அவர்களின் முகம் பிரகாசமாகி விரிந்து பறந்து அந்தக் கூண்டை விட்டு வெளியேறிச் செல்வதையும் தினந்தோறும் நான் பார்க்கிறேன். மகிழ்ச்சியின் ஒற்றைத் துளியைக் கூட தரமுடியாத கல்விக் கூடங்கள் குழந்தைகளின் வாழ்வில் என்ன மாற்றத்தை நிகழ்த்தப் போகின்றன என்று யோசித்திடும்போது நமக்கு வெறுமையே மிஞ்சுகிறது.  கல்வி கற்றுத் தருவதை மாபெரும் அரசியல் கடமையாக புரட்சியில் விளைந்த அரசு நினைத்ததாலே தான் துய்ஷேன் விடாப்பிடியாக தன்னுடைய பணியைச் செய்கிறார். அப்படியான உறுதியை நம்முடைய ஆசிரிய மனங்கள் உருவாக்கிடுமா,  அப்படியில்லையே என்கிற பெரும் குற்றஉணர்ச்சியை  ‘‘முதல் ஆசிரியர்’’ எனக்குள் ஏற்படுத்தியது.
ஒரு தேர்ந்த நாவல் வாசகனுக்குள் பெரும் கிளர்ச்சியையும், ஆழ் மனதினுள் அசாத்தியமான மாற்றங்களையும் உருவாக்கிடும் தன்மையிலானது. முதல் ஆசிரியர் படித்து முடித்த பிறகான நாளில் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அணுகுவதில் ஏற்பட்ட மனமாற்றத்தை நிஜத்தில் நான் உணர்ந் திருக்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் கற்க வேண்டிய நூல் இது. சமகாலத்தில் தேர்வை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கல்வி கற்றுத்தருகிற தன்மை உருவாகி அது மட்டும்தான் கல்வியின் பணி என்று நிலைத்துவிட்டது.  அதோடு பொருந்திப் போக மறுக்கிற குழந்தைகள் அவர்களாகப் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள், அல்லது வெளியேற்றப்படு கிறார்கள். வறுமையின் காரணமாக பள்ளியை விட்டு விலகிச் சென்றவர்களைக் காட்டிலும் பள்ளிக்கூடச்சூழல் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களே  அதிகம். ஆனால் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் அல்ல மாணவர்கள். வாய்ப்பு ஏற்படுத்தி தந்தால் மகத்தான சாதனையை நிகழ்த்தக்கூடியவர்கள் என்பதையே அல்தினாய் என்கிற மாணவியின் மூலம் நிகழ்த்திக் காட்டுகிறார் துய்ஷேன்.
கல்வியின் அவசியம் புரிய மறுத்த அல்தினாயின் குடும்பம் அவளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றும் போது ‘‘முதல் ஆசிரியர்’’ எடுக்கிற அசாத்தியமான முயற்சிகள் ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய மாணவ_ மாணவியர்களின் வாழ்க்கையில் எத்தகைய அக்கறை மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்து கிறது. தடைகள் யாவற்றையும் தனியொரு ஆளாக நின்று தகர்த்திடும் சூழல் மட்டும் அன்று துய்ஷேனால் உருவாக்க முடியாது போயிருந்தால் நிச்சயம் அல்தினாய் ஒரு பேராசிரியராக வளர்ந்திருக்கச் சாத்தியமில்லை. தான் கல்வி கற்ற குதிரைக் கொட்டடி பள்ளிக்கூடத்தை திறந்து வைத்திட அவளையே அழைத்த பொழுதிலான  மனநிலையில் தான்  ‘‘முதல் ஆசிரியர்’’ நாவலே உருவாகிறது. தானும், தன்னுடைய முதல் ஆசிரியரான துய்ஷேனும் சேர்ந்து ஒட்டி வைத்த பாப்ளர் மரங்கள் காற்றில் விரைந்து ஆடியபடி  வசந்தத்தை அந்த மலைக்கிராமத்திற்கு மட்டுமல்ல, தனக்கும் கொண்டு வந்து சேர்த்ததை தன்னுடைய கவித்துவமான கடிதத்தில் வெளிப்படுத்துகிறாள் அல்தினாய்.
எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிற துய்ஷேன் தயங்கித் தடுமாறி நிலைகுழைந்த நாள் ஒன்றினை சிங்கிஸ் நாவலுக்குள் காட்சிப் படுத்தியுள்ளார். இந்த நாவலை காவியத் தன்மையை எட்டச் செய்திட்ட அசாத்தியமான காட்சிகள் அவை. அன்புத் தோழர் லெனினுக்கு பிரியாவிடை தந்து அனுப்புகிற குழந்தைமையின் சொற்களால் கட்டப்பட்டிருக்கிற அந்தக் காட்சி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. ‘‘முதல் ஆசிரியரை’’  உலகின் மிகச் சிறந்த நாவல் வரிசைகளில் ஒன்றாக்கிட. உலகம் முழுவதும் துக்கத்தில் மூழ்கிய அந்தச் சமயத்தில் மக்கள் என்னும்   மாகடலின் துளிகளாகிய நாங்களும் எங்களுடைய ஆசிரியருடன் சேர்ந்து, பள்ளி என்று அழைக்கப்பட்ட யாருக்குமே தெரியாத உறைந்துபோன கொட்டகையில் மௌன அஞ்சலி செலுத்தினோம். நாங்கள் தான் அவருக்கு மிக நெருக்க மானவர்கள். அவருடைய இழப்பு எங்களுக்குத்தான் மிகவும் சோகமானது…
அந்த நிஜப்புரட்சித்தலைவனின் மரணத்தின் துயரத்தை உலகம் எப்படி எதிர் கொண்டிருந்திருக்கும் என்பதற்கான வரலாற்றுக் காட்சியது. புனைவுப் பெருவெளியில் உணர்ச்சியின் உச்சமாகக் கட்டமைக்கப் பட்டுள்ள காட்சி உங்களை ரெட் சல்யூட் காம்ரேட் என்று எழுந்து நின்று உரக்கச் சொல்லச் செய்யும். அத்தோடு லால்சலாம் காம்ரேட் சிங்கிஸ் மாத்தவ் என்றும் வணங்குகிறோம் யாவரும்.

Related posts