You are here
நேர்காணல் 

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி…

கோணங்கி

சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா

 தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவம் மிக்க படைப்பாளி கோணங்கி. கரிசல் வட்டாரத்தில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. இவருடைய தாய்வழிப் பாட்டனார் மதுரகவி பாஸ்கரதாஸ். அப்பா சண்முகம், அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞன்.
1980களில் ஒரு இடதுசாரி எழுத்துக் கலைஞனாக  அறிமுகமான கோணங்கி,  மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளின் மூலமாக இலக்கியப் பரப்பில் வலுவாகக் காலூன்றியவர். 1988ல் வேலையை உதறிவிட்டு கல்வராயன் மலையிலிருந்து Ôகல்குதிரை’ என்னும் சிறுபத்திரிகையைத் தொடங்கியதன் மூலம் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க அசைவுகளை உருவாக்கினார். Ôகல்குதிரை’ இதழ் மூலமாக தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ், மார்க்வெஸ் சிறப்பிதழ், உலக சிறுகதைச் சிறப்பிதழ் போன்றவை வெளிவந்து தமிழ் வாசகப்பரப்பின் எல்லைகளை விரிவடைய வைத்தன. கோணங்கி புழங்கும் மொழி முற்றிலும் வித்தியாசமானது. தமிழில் பிற எழுத்தாளர்களிடமிருந்து தனித்துத் தெரியும்படியான ஒரு நடையை அவர் உருவாக்கி அதையே ஸ்திரப்படுத்திக் கொண்டார். பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம், உப்பக் கத்தியில் மறையும் சிறுத்தை, இருள்வமௌத்திகம்  போன்ற கதைத் தொகுப்புகளும், பாழி, பிதிரா, த போன்ற நாவல்களும் இதற்கு உதாரணங்கள். கைத்தடி கேட்ட நூறு கேள்விகள், அப்பாவின் குகையில் இருக்கிறேன், தழும்புகள் சிவந்த அணங்கு நிலம் போன்றவை இவரின் குறுநாவல்கள்.
55 வயதுகளைக் கடந்த கோணங்கி திருமணம் செய்து கொள்ளாமல் எழுத்து, வாசிப்பு, பிரயாணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், உரையாடல்கள், என தன் வாழ்க்கையை இலக்கிய வயமாக்கிக் கொண்டவர். தனக்கான விருதுகளைப் புறக்கணித்தே வந்த கோணங்கி  இந்த ஆண்டு தனக்கு அளிக்கப்பட்ட  ‘விளக்கு’ விருதை ஏற்றுக் கொண்டார். அவரை கீழ்க்குயில்குடி சமணமலையில் சந்தித்து உரையாடியதன் ஒரு பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பிராயத்தில் நீங்கள் முதன் முதலாகக் கதை கேட்ட  ஆதிக் கதைசொல்லி அத்தை சுப்புத்தாயிடமிருந்து இந்த நேர்காணலைத் தொடங்கலாம்…
நான் முதல் கதையைக் கேட்கத் தொடங்கியதே சுப்புத்தாய் அத்தையிடமிருந்துதான். அவளுக்குச் சொந்த ஊர் நென்மேனி மேட்டுப்பட்டி என்றாலும், வாக்கப்பட்டுச் சென்ற ஊர் மிகப் பெரிய இசைச்சாகர மாகிய விளாத்திகுளத்துச் சாமிகளின் ஊரான காடல்குடி. என் தாத்தாவின் தாயார் பிறந்த ஊர். நம்முடைய பல மூதாதைகளிருந்த ஊர். பஞ்சவர்ணத்தம்மாள் என்கிற கிழவியின் ஊர். அங்கே தாத்தாவுக்கு நிலபுலங்களிலிருந்தன. பூர்வீக கரிசக் காடுகளை அத்தையிடமே தாத்தா கொடுத்து விட்டார். அத்தைதான் நீண்டகாலமாக விவசாயம் பார்த்தாள். சிறுவயதிலேயே பஞ்சம் பிழைக்க அத்தையும் சேதுமாமனும் நென்மேனி மேட்டுப் பட்டிக்கு துரைச்சாமிபுரம் வழியாக நாகலாபுரம் கடந்து மாட்டு வண்டியிலேறி  வந்தார்கள். அவள் வந்து பல வருஷங்களுக்குப் பிறகுதான் நான் திண்டுக்கல்லிலிருந்து நென்மேனி வந்து சேர்ந்தேன். எனக்கு இரண்டு வருஷங்களுக்கு முன்பே தமிழ்ச்செல்வன் அங்கே வந்துவிட்டார்.
அப்பா திண்டுக்கல்லில் சர்வேயராக வேலை பார்த்தார். திண்டுக்கல்லிலிருந்து நான் சிரங்குவத்தியாக அழுகி நாறிப் போனவனாக நென்மேனி வந்து சேர்ந்தேன். திண்டுக்கல்லில் தோல் பாக்டரிகள் அதிகமிருந்தன. டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலில் இடம்பெறும் சிரங்கு அன்றே என்னைப் பிடித்துவிட்டது. தமிழ்ச்செல்வன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதலாம் வகுப்பு படிப்பதற்காக நான் நென்மேனி வந்து சேர்ந்தேன். அங்கிருந்த தர்மாஸ்பத்திரியில் பச்சைநிறக் களிம்பு வாங்கி ஒவ்வொரு இரவிலும் என் சிரங்குப் புண்களுக்குப் பூசியவாறு கதை சொல்லத் தொடங்கினாள் சுப்புத்தாய். என் சிரங்கும் ஆறியது. அவள் கூறிய பஞ்சத்தின் கதைகள் வழியாக நானும் உருவானேன்.
சிரங்குவத்திதான் அந்தக் கதைகளைக் கேட்டான். எஸ்ஆர். நாயுடு பள்ளி ஹாஸ்டலில் சிரங்குவர்த்திகள் அதிகமிருந்தனர். என்னுடன் பயின்ற தலித் மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் சோளக்கஞ்சியும், மதிய உணவையும் சாப்பிட்டு சிரங்கு வயப்பட்டார்கள். ஊர்காளன் என்ற சமையல் காரன் இருந்தான். அவனும் ஒரு கதைசொல்லிதான், மிக அன்பானவன். எல்லா மாணவர்களுக்கும் ஒளித்து ஒளித்து உணவு வழங்கியவன். வள்ளலார் அங்கு இருந்ததில்லை. ஆனால் ஊர்காளன் எனக்கு வள்ளலார்தான்.  அந்த ஊர்காளன் இன்று எங்கிருக் கிறான் என்று எனக்குத் தெரியாது. சுப்புத்தாய் தன்னுடைய 96 வயதில் உயிருடன் இருக்கிறாள். ஆனால் நினைவு மட்டும் பிசகி விட்டது. யார் சென்று பார்த்தாலும் நீங்கள் யார் என்று கேட்கிறாள். நகுலன் கேட்ட மாதிரித்தான் சுப்புத்தாயும் கேட்கிறாள். எனவே பெரிய எழுத்தாளனுடைய இடத்தில்தான் சாதாரண சுப்புத்தாயும் இருக்கிறாள் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் கதைகளில் படர்ந்திருக்கும் கரிசக் காட்டு வெயில், அதைத் தணித்துக் குளிர்விக்கின்ற வெள்ளரிக்காய்..  இரண்டின் சுவையையும் குறித்துச் சொல்லுங்கள்…
கண்மாய் பெருகுகிற காலத்தில் வெள்ளரித் தோட்டங்கள் இருக்காது. கோடையில் தான் காய்க்கும். மாரியம்மனை வெள்ளரிப் பெண்ணாக உருவகித்து ‘‘வெள்ளரிப் பெண்’’ என்கிற கதை எழுதினேன். மிக முக்கியமான கதை அது. கரிசக் காட்டின் மொத்த வெயிலையும் வெள்ளரிக்காயாக சிருஷ்டித்திருக்கிறேன். வெள்ளரி விதைகளை அடுக்கினால் மாரியம்மனின் கண்களாக மாறும்.  என்னுடன் ஆறாம் வகுப்பு படித்த தெய்வானை, சுப்புலட்சுமி, பெரிய சகுந்தலா போன்ற பிள்ளைகள் எல்லோருமே நீர்கோர்த்த விதைகளாக காலம் முழுவதும் வெள்ளரிக்காய்களுக்குள் இருப்பார்கள்.

எழுத்தாளர்களில் குறிப்பாக இடதுசாரி மனோபாவமுள்ள பல எழுத்தாளர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் பெரு தெய்வங்களுக்கெதிராக சிறு தெய்வங்களை நிறுத்துகின்ற ஒரு எதிர் அரசியலை நாம் நமது பண்பாட்டுச் சூழலில் கடைப்பிடித்து வருகிறோம். அந்த வகையில் எப்போது சென்றாலும் உறுமி மேளமும் குலவைச் சத்தமுமாக இருக்கிற குலதெய்வம் வழிவிட்ட அய்யனார் குறித்து கொஞ்சம்…
வழிவிட்ட அய்யனாரை நான் நவீனப்படுத்தி விட்டேன். கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழில் நானும் நாகர்ஜூனனும் சேர்ந்து சில திருத்தங்கள் செய்தோம். ஏ.கே.ராமானுஜத்தின்  Interior Landscape சங்கஇலக்கியத்தை எப்படி அணுகுவது என்பது போன்ற விஷயத்தை, ஒரு அகப்பரப்பாக மொழியை சரியாகக் கையாள்வதற்கு, மார்க்வெஸ் இதழில் இடம்பெற்ற கதைகளின் மொழியை செப்பனிடவேண்டி வரும்பொழுது, சில நல்ல விஷயங்கள் உருவாகின. அந்த இதழில் சில தவறுகளும் இருந்தது. ‘இன்னொஸன்ட் எரிந்திரா’ வரும்பொழுது மணிமேகலையுடன் வைத்து அதை சரி செய்ய முடிந்தது. ‘செயின்ட்’ கதையில் அதைச் செய்ய முடியவில்லை. ஆனாலும் அது ஒரு புதிய முயற்சி.
பலருக்கும் அது நல்ல பாதிப்பை உருவாக்கியது. அதை விமர்சிப்பவர்களும் உண்டு. அவற்றையெல்லாம் கடந்து மார்க்வெஸ் இதழ் நல்ல விளைவுகளை தமிழ்ச்சூழலில் உருவாக்கியது. சில படைப்புக்களை மறுத்தேன். சில படைப்புகளைக் கொண்டாடினேன். மொழிபெயர்ப்பை அசல் படைப்பாகவே மாற்றுவதற் குண்டான கடினமான பணிகளை மேற்கொண்டோம். இன்றைக்குச் செய்யப்படுகின்ற மொழிபெயர்ப்புகளில் நிறையக் கோளாறுகள் இருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் அவ¢வளவு மெனக்கெட்டோம். புதிதாக சில விஷயங்களைச் செய்யும்போது தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதனால்தான் நம்முடைய அய்யனார்களுக்கும், அஸ்டக் மாயன் கடவுள்களுக்கும், கொம்பு மாடன்களுக்கும் இடையில் ஒரு உரையாடலை நடத்திவிடலாம் எனத் தீர்மானித்து மார்க்வெஸ் இதழை கிடாவெட்டி வெளியிட்டோம். அதில் மொழிபெயர்ப்பாளர்கள் சா.தேவதாஸ் உள்ளிட்ட பலரும் பெருந்தேவி, ராமகிருஷ்ணன்  போன்றோரும் வந்து கலந்துகொண்டனர். நாகர்ஜுனன் மட்டும் வரவில்லை. அவர்தான் இந்த உரையாடல் வேண்டும், பலி கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்.
வேல ராமமூர்த்தியிடம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துக் கருங்கிடாயாக வாங்கி குளத்தூர் சின்னக்குட்டி வேளாளரிடம் ஒரு குதிரையும் வாங்கி நான் பஸ்ஸில் அதைக் கொண்டு வருகிறேன். குதிரையின் காது பஸ்ஸில் வரும்போதே உடைந்து விட்டது. எல்லோரையும் திரட்டி வழிவிட்ட அய்யனாருக்கும் அஸ்டக் மாயக் கடவுளுக்குமான உரையாடலை நாங்கள் நடத்திவிட்டோம். அய்யனாரை நவீனப்படுத்திவிட்டோம். அய்யனார் மார்க்வெஸ்க்கும் வழிவிட்டார் என்பதுதான் இதில் கிடைத்த முக்கியமான கொண்டாட்டம்.

இளங்கோ கோணங்கியான கதையைக் கூறுங்கள்…
ந.முத்துச்சாமியின் ‘வண்டி’ என்கிற கதையைப் (‘அஃ’ இதழில் வெளிவந்தது) படித்தேன். அதுதான் என்னைக் கதைக்காரனாக மாற்றியது. ஒருநாள் அழகிரிசாமி எம்.எல்.ஏ.வின் பி.ஏ.வாக இருந்த
எஸ்.எஸ்.தியாகராஜன் எஞ்சினியரின் அறைக்குப் போயிருந்தேன். கம்யூனிஸ்ட் தோழர்களின் கூட்டுறவு சொஸைட்டி ப்ளானில் கையெழுத்து வாங்கச் சென்றிருந்தபோது, அவர் குளித்துக் கொண்டிருந்ததை சாக்காக வைத்து அங்கிருந்த  அஃ, கண்ணதாசன் சிற்றிதழ்களைத் திருடிக்கொண்டு வந்தேன். வீட்டில் நெல்மூடைகளுக்கு மேல் உட்கார்ந்து அந்த ‘வண்டி’ என்கிற கதையைப் படித்தேன். அது மிகக் குழப்பமான உலகத்திற்கு என்னை இழுத்துக் கொண்டுசென்றது. என் முதல்வாசிப்பில் வேறுவேறு பரிமாணங்கள் கிடைத்தன. மேற்கத்திக் கொம்பு மாடுகளும், புஞ்சையும், அன்று பூட்டிய வண்டியும் அதுதான். விவசாயம்  மூர்க்கமாக இருந்த, வளமாக இருந்த பெருங்காலம் முத்துச்சாமியின் எல்லாக் கதைகளிலும் இடம் பெறுகிறது. ‘நீர்மை’ உட்பட. இது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என்னைப் பாதித்தது. அப்போதுதான் ‘வண்டிப்பாதை’ எழுதினேன். ‘வண்டி’ அவர் எழுதிவிட்டார். வண்டிப்பாதையை நாம் எழுதுவோமே என்று எழுதினேன்.
ந.முத்துச்சாமியின் ‘வண்டி’ கதைதான் இளங்கோவாகிய என்னை கோணங்கி ஆக்கியது. வண்டிப்பாதையைக் காண்பித்து வண்டிப் பாதையை எழுதித் தொலைந்துபோன பிரதிக்குள்ளிருந்து நான் என் மதினிமார்கள் கதையை எழுதினேன். வண்டி நிறைய மதினிமார்கள் வருவது, வெவ்வேறு கதைகளுக்குள் வண்டிகள் வருவது, ஊர் விவசாயிகளின் வண்டிகள், அசோகன் காலத்து சக்கரங்களெல்லாம் இன்றுவரை இந்த வண்டிப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. கடகடகடகடவென பிராமி எழுத்துக்கள் சிதறி விழுந்து கொண்டிருக்கிறது. ‘தர்ம சக்கரம்’ என்று ஒரு சிறுகதையே எழுதினேன். அது பிரசுரமாகவில்லை.
நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் பூமணியின் ‘பிறகு’ என்னைக் கடுமையாகப் பாதித்தது. ராஜநாராயணனை விட, அழகிரிசாமியை விட, பூமணியின் ‘பிறகு’ தான் அகத்தையும் உருக்குகிற அழகிரிப்பகடையுடைய வாழ்வையும், கந்தசாமி நாயக்கருடைய அபூர்வமான கதாபாத்திரத்தையும் ஆவுடையின் அறுத்துக்கட்டிய வாழ்வும் அலைச்சலுமாக இரண்டு மூன்று கணவன்களைத்தாண்டி வெளியேறி தற்கொலையை நோக்கி வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக அவள் போன உடங்காட்டுப் பாதை, அதை நோக்கி நான் இன்றுவரை தொடர்ந்து போய்க் கொண்டேதானிருக்கிறேன். அந்த மாதிரியான நாவலை பூமணி அடுத்து எழுதவில்லை. ‘பிறகு’வில் இருந்ததுதான் ‘அஞ்ஞாடி’யில் கொஞ்சம் இருந்தது. அதையும் கொஞ்சம் வைத்திருக்கிறார். அளவோடு சரியாக நறுக்கி வந்தது ‘பிறகு’. எப்போதுமே அந்த நாவலுக்கு முதல் வாசகனாக நானிருப்பேன்.

‘வெக்கை’ உங்களைப் பாதிக்கவில்லையா?
இல்லை. ‘பிறகு’வில் இயற்கைத் தன்மை அதிகம்.

வெக்கையில் கொஞ்சம் உக்கிரம் அதிகம்…
வெக்கையில் உக்கிரம் இருந்தாலும், அதில் ஒரு திட்டம் இருக்கிறது. கதையை நகர்த்திக் கொண்டு போகிற திட்டம். பாவைக்கூத்தினுடைய கயிறுகளை அவர் வைத்திருந்து சரியாகப் போடுவது இருக்கிறது. சமூக விடுதலையை நோக்கிப் போகிற பாதை அது. ஆனால் ‘பிறகு’வில் சொல்லாமல் சொன்ன கதைகள் ஏராளம். அதனால்தான் அது தெம்மாங்கு. தெம்மாங்கை வண்டியில் போகிறவன் பாடுவதற்கும், மைக் பிடிக்கிறவன் பாடுவதற்கும் வித்தியாசமிருக்கிறது. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மைக்கில் பாடுகிற  தெம்மாங்கு ஒன்று. வண்டிப்பாதையிலேயே போன கரிசல் கிருஷ்ணசாமி தெம்மாங்கு வேறு. அந்த இயற்கைத¢ தன்மை அதற்குப் பிறகு அவருக்கும், இன்னுமுள்ள மற்றவர்களுக்கும் கூடி வரவில்லை. அதேபோல ஆர்.ராஜேந்திர சோழனுடைய இச்சை, பரிமாணச் சுவடுகள், இதெல்லாம் கோணங்கி என்பவனை உருவாக்கியுள்ளது. இடதுசாரியாக இருந்து மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியவர் அவர்.  ‘தனபாக்கியத்தோட ரவநேரம்’ என்றொரு கதை… அவ்வளவு வீர்யமானது.

புற்றில்  உறையும் பாம்புகள்…?
ஆம், அதுவும்தான். தற்செயல், வானம் வெளிவாங்கி, நவீனகதையாகப் பல கதைகள் ஒரு ஆறேழு கதைகள் இன்னும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இதே தன்மை வண்ணநிலவனின் மிருகம், காரைவீடு, பலாப்பழம் கதைகளில் கிடைத்தது.

எஸ்தர்…?
எஸ்தரை விமர்சனத்தோடுதான் ஏற்றுக் கொள்கிறேன். பிரமாதமான கதையாக அது இருந்தாலும், எஸ்தரின் பாட்டி இறந்துவிட்டாள் என்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பிக்கிறார். செயற்கை யாக ஒரு சாவு நிகழ்கிறது. மூதாதைகளின் சாவு அப்படி நிகழக்கூடாது. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள, விடுபட நிறைய இருக்கிறது. கண் தெரியாத அந்தப் பாட்டியின் குரல்வளை எனக்குத்தேவை. இருண்மைக்குள்ளிருந்து, ஆழங்களிலிருந்து ஆயிரக் கணக்கான பஞ்சத்தின் கதைகள் அவளுக்குத்தான் தெரியும். தப்பித்து கொத்து வேலைக்குப் போகிற வர்களிடமெல்லாம் வெறும் வாழ்வுதானிருக்கிறது. அங்கேயே அவளுடைய குரல் வளையை நெறிக்கிற விஷயம் வண்ணநிலவன் கதையில் நிகழ்ந்துவிட்டது. மாஸ்டர்களிடம் நேருகின்ற தவறுகளை புதிய தலைமுறையினர் உள்வாங்கித் தெளியவேண்டும். வண்ணநிலவனை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் கண் தெரியாத பாட்டியின் சாவுதான் எனக்குப் பிரச்சனை. வறுமையின் உச்சத்தில் பாட்டியின் குரல் வளை கதை சொல்லியின் குரலால் நெறிக்கப்படுகிறது. Mother is a story teller என்றால் Grand mother is better than mother.
எனவேதான் பாட்டியின் குரல்வளையை நான் காப்பாற்றி வைத்திருக்கிறேன். ஆதக்காள் கதையும், மாரியம்மாள் கதையும், சுப்புத்தாய் கதையும் என, என்னைவிட என் மூதாதைகள்தான் பெரிய இடத்திலிருக்கிறார்கள்.

கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் பா.செயப்பிரகாசத்தை தவிர்க்க முடியாதல்லவா?
பா.செயப்பிரகாசத்தின் ‘தாலியில் பூச்சூடியவள்’ பிரமாதமான கதை. அவருடைய  சில கதைகள் என் வாசிப்பனுபவத்தில் கரிசல் நிலத்து வீடுகளின் கீறல்க ளோடு அசலாகவும், ஆழமாகவும் பதிவாகியிருப்பவை. அவருடைய தொகுப்புகள், பூமணியின் ‘வயிறுகள்’ ‘ரீதி’ மாதிரி. அவரையெல்லாம் படித்துத்தான் வந்தோம். பா.செ. கதைகளில் என்னை மிக பாதித்த கதை ‘தாலியில் பூச்சூடியவள்.’ கரிசல் வெயிலின்  கசிவோடும், மரிக்கொழுந்து வாசனையோடும் உள்ள கதை சுயம்புலிங்கத்தின் ‘மூளி மாடுகள்’,  ‘மானாவாரி மனிதர்கள்’ ‘அது ஒரு பக்கம் இருக்கட்டும்’  இந்த மூன்றும் முக்கியமான கதைகள். தமிழ்ச்செல்வனின் ‘கருப்பசாமியின் அய்யா’ ‘வார்த்தை’ இரண்டு கதைகளும் அந்த நேரத்தில் என்னை மிகவும் பாதித்தன. உதயசங்கரின் ‘நிலை’ என்கிற அருமையான சிறுகதை, வீரவேலுச்சாமியின் ‘பங்கீடு’ கு.அழகிரிசாமியின் சுயரூபம், அழகம்மா, மீனா எல்லாம் பாதித்தன. அழகிரிசாமியின் எல்லாக் கதைகளும் எனக்கு மனப்பாடமாக இருந்தது என்றே சொல்லலாம். சோ.தர்மனின் சருகுகள், குஞ்சு நாயக்கர் கதை, பறவைகள் பற்றிய கதைகள், அவருடைய ‘கூகை’ எல்லாம் என்னை ஈர்த்தன. அந்தக் காலக் கட்டத்தில் கரிசல்காட்டு ஊர்களை விட கரிசல் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

சமகால தமிழ்ப் புனைவெழுத்தின் வீச்சும் வேகமும் எவ்வாறு உள்ளது?
அசதாவின் ‘இசைக்காத மீன்களின் அக்கார்டியன்’ முடிவற்ற புனை நிழல்களைப் படரவிடும் இசையாகி கல்குதிரையில் வந்தது. லஷ்மி மணிவண்ணனின் ‘ஆன்டன் செகாவை சென்று சேர்வது எப்படி?’ கதைக்கும் ரேமண்ட்கார்வரின் ‘எர்ரண்ட்’ கதைக்கும் வேரோட்டம் இருப்பதை வாசகன் அடைந்துவிடுகிறான். சென்ற கல்குதிரையில் வந்த தூரன்குணாவின்’ ‘எட்டாவது கன்னி’யும், பாலசுப்பிரமணியன் பொன்ராஜூவின் ‘வலை’ கதையும் இன்றைய சிறுகதையின் வீச்சை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முனைப்பு. ‘ரொம்பிராண்டின் தொப்பி’ உலகச் சிறுகதையின் இழைகூடவும் கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘துருக்கித் தொப்பி’ நாவலாகிப் பறந்து வருகிறது புனைவோட்டத்தில்.
குமார் அம்பாயிரத்தின் ‘ஈட்டி’ தொகுப்பு வனமனிதனுக்கும் நூதனனுக்கும் ஊடிழைந்து கொண்டிருக்கிறது. ‘கருந்திரை’ எழுதிய பாலைநிலவனின் ‘எம்.ஜி.ராமச்சந்திரனும் காரல் மார்க்ஸும்’ தொகுப்பு புனைகதையின் புதிய சாளரத்தை திறந்து நுழைகிறது. ஜீ.முருகனின் ‘காண்டாமிருகம்’ தேர்ந்தெடுத்த தொகுப்பைப் பற்றி கல்குதிரை தலையங்கத்தில் விரிவாக விவாதித்தேன். பா.வெங்கடேசனின் ‘நீலவிதி’யும் ஸில்வியாவின் ‘பெண் வேடமிட்ட பெண்’ ‘மைத்ரேயி’ கலையின் சுயம் விழிப்புற்று புனைவின் சாத்தியங்களைக் கொடுத்திருப்பவை. கருத்தடையானின் ஆகாசமாடனில்  வரும் ஒரு கதையில் தொடைக்குத்தின் உதிரம் புனைகதைக்கு இடமாறியுள்ளது. முதல் தொகுப்பில் தான் கணேச குமாரனைப் பார்க்க முடிகிறது. லஷ்மியின் கல்மண்டபம் திரும்ப வாசிக்கத் தூண்டுவது தான்.

ஒரு மொழி ஏன் நேராக இருக்க வேண்டும். வளைந்து நெளிந்து ஹேர்பின் பெண்டுகளைப் போல் அர்த்தங்கள் குலைந்திருக்கக் கூடாதா… என்று கவிஞர் அப்பாஸ் தன்னுடைய ஒரு கவிதையில் கேட்பார், நீங்களும் ஒருவித நேர்கோடற்ற நான்லீனியர் தன்மையில் தான் மொழியைக் கையாளுகிறீர்கள்….
நேர்கோட்டுக் கதைகள் ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்குமான தூரத்தை, இடைவெளியைத்தான் சொல்கின்றன. வளைந்து, நெளிகின்ற பாதைகள்தான் தெம்மாங்கைச் சொல்கின்றன. எல்லாத் தெம்மாங்கை யும்  இழந்ததால்தான் நேர்கோடுகள் இருக்கின்றன. நேர்கோடு என்பது கிலோமீட்டராக மாறுவது. இத்தனை கல் தொலைவு என்கிறபோது அதில் தெம்மாங்கு இருக்கிறது. பழைய பாதைகளுக்கு எல்லாமே பொருந்தி இருக்கிறது. ஆனால் அந்தப் பாதைகள் எல்லாம் அழிந்துவிட்டன. இப்போதைய பாதைகள் எல்லாமே வேறுதான்.

மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், இரண்டு தொகுப்புகளையும்தான் உங்களின் முக்கிய ஆக்கங்களாகப் பலரும் கருதுகின்றனர். கோணங்கி அதே ரீதியில் இயங்கியிருந்தால் பெரிய எல்லையைத் தொட்டிருப்பார் என்றும் ஒரு கருத்து உண்டு. ஆனால் நீங்கள் விடாப்பிடியாக ஒரு மாற்றுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பொதுக்கருத்துகளைக் குறித்து என்ன அபிப்பிராயப்படுகிறீர்கள்?
பொதுப்புத்தியின் அபிப்ராயமாக ‘புரியாத எழுத்து’ என்கிற சொல்லாடலை உருவாக்கினார்கள். வாசிக்காமலேயே பேசுகிற தன்மை அது. நிறையப் பேர் இந்த வட்டத்துக்குள் இருக்கிறார்கள். ஆனால் என் ஒவ்வொரு படைப்பு நிகழ்வின்போதும் நுட்பமான வாசகர்கள் பலரும் உள்ளுக்குள் ஆழ்ந்துபோகும் நிலையை நான் நேரிடக் கண்டு வருகிறேன். குறுகிய வட்டத்தில் இருந்தவர்கள் விரிவாகிக் கொண்டிருக் கிறார்கள். எதைப் புரியவில்லை என்று விட்டார்களோ அந்தப் பிரதிகளையே மீண்டும் படித்துப் பார்த்து வேகமாக வேட்டையாடி அதன் உன்னதத்தை உணர்ந்தவர்களாக மாறிவருவதை உலகம் முழுவது மிருந்து கிடைக்கிற தகவல்கள் உறுதிப்படுத்து கின்றன. உலகம் முழுவதற்குமான வாசகர்கள் ஆங்காங்கே இணையத்தில் எழுதுகிற கட்டுரைகள், கடிதங்கள் வாயிலாக இதை நான் புரிந்து கொள்கிறேன். அலுத்துச் சலித்துப் போன ஒரு மொழி நடையிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு காலம் நெருங்கி வருகிறது. ரூபங்களையும், காண்பரப்பையும், சொல்கதை களையுமே எழுதிக்கொண்டு இருந்திருந்தால் கோணங்கி பழையவனாகவே இருந்திருப்பான்.

கல்குதிரையின் தலையங்கத்தை எழுதும்போதும் கூட உங்களுக்கு அந்த மொழி நடைதான் வருகிறது. ஒரு கடிதம் எழுதினாலும் கூட அப்படித்தான் நேரும் எனத் தோன்றுகிறது. இனி சொல்கதைகளை எழுதுவதற்கான வாய்ப்பு குறைவுதானில்லையா?
மதினிமார்கள் கதை தொகுப்பிலேயே பாழ், மூன்றாவது தனிமை, ஆதிவிருட்சம் போன்ற கதைகளில் நீங்கள் குறிப்பிடுகின்ற ‘மொழி’கதைகளுக்கான வித்துக்கள் விழுந்து விட்டன.

கருப்பு ரயில், மாயாண்டிக் கொத்தனின் ரசமட்டம் கதைகளிலேயே அது நிகழ்ந்துவிட்டது. நாகர்ஜூனன் அதைக் குறிப்பிட்டிருப்பார்.
அவர் குறிப்பிட்டது கதையின் ஓரிடத்திலிருந்து இன்னொரு படிநிலைக்கு நகர்வது. உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தையிலேயே நீங்கள் மதினிமார்கள் கதையின் கூறுகளைப் பார்க்கலாம். இருள்வ மௌத்திகத்திலும் அது உண்டு. ‘த’நாவலிலும் அந்தப் பழையமொழி குறுக்கே கடந்து செல்லும். இப்போது அந்தப் பழைய ஒவ்வாமையெல்லாம்  இல்லாமல் எல்லோரும் வாசிக்கிறார்கள். ‘த’ நாவல் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் என் எழுத்தின் தன்மை மாறிமாறி நிகழ்ந்திருப்பதை என் படைப்புக்குள்ளிருந்துதான் பார்க்க வேண்டும். இப்போது உருவாகியுள்ள புதிய தீவிரவாசகர்கள் அந்த இடங்களைக் கண்டடைகின்றனர்.

கல்குதிரை இதழைத் தொடங்கி, நிறைய உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்துகிற விதத்தில் சிறப்பிதழ்கள் பலவும் கொண்டு வந்தீர்கள். இன்றைய சிறுபத்திரிக்கைச்சூழல் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?
தமிழ் சிறுபத்திரிகைச் சூழல் கூர்மையடைந் திருக்கிறது. நடுஇதழ்கள் (Middle Magazines) சூழலை சலிப்படைய வைத்தாலும், தீவிரமாக உழைத்து வெளிவரும் ஒரு இதழுக்கு நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது. கடந்த கல்குதிரை இதழ்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. 100 எழுத்தாளர் கள் அவற்றில் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். 20க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இயங்கி யுள்ளனர். சிறுபத்திரிகைச் சூழல் தேங்காத காரணத்தால்தான் இத்தனை பேர்களும் ஒருங்கிணைவது சாத்தியமாகி உள்ளது. அது நேரடியாகத் தெரியாது. படைப்பு  களின் வழியாகத்தான் மொத்த இயக்கத்தையும் கணிக்க முடியும். எல்லாமே தொலைந்து போன சூழலில் படைப் பாளிகள் மட்டும் தான் தொலையாத உலகத்தைக் கொண்டு வந்து கொண்டிருக் கிறார்கள். 5000 வருடங்கள் வேகமாக ஓடினால் 5000 வருடங் களுக்குப் பின்னால் சென்று தேடித் தடம் பார்த்து எடுத்து நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.
கவிஞர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர் கள், ஓவியர்கள் இவர்களுடைய பங்களிப்பு சம காலத்தில் மிக முக்கியத்துவமானது. இன்னும் அவர்கள் இயங்குவதற்கான மிகப் பெரிய வெளி அவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது. எழுத்தின் வழியாகத் தான், நம்முடைய  மொத்தக் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க முடியும். தூங்குகிற மாதிரி, இருப்பில் மூச்சு விடுகிற மாதிரி கலை, கலைஞனின் உடன் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டுதான¤ருக்கும். ஆகையால் எல்லோரையும் விட கலைஞனை நம்புவது, கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழியாக இருக்க முடியும்.

புதுமைப்பித்தனைக் குறித்துப் பேசும்போது, திண்ணைச் சவடால்களும், எக்கண்டம், எகடாசிகளெல்லாம் பொருந்தி வரும் சிறுகதைகள் ஏராளம்… என்கிறீர்கள். இது புதுமைப்பித்தன் மீதான உங்களின் விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
இல்லை. திருநெல்வேலி பாஷையில் எக்கண்டம், எகடாசிகள்  இருக்கிறதில்லையா. உருட்டல், புரட்டல் எல்லாவற்றையும் பேச்சுவழியாகச் சொல்கிற விநோதப் பரப்பு அது. அவர் அந்தப் பரப்பை அநாயச மாகக் கைக்கொண்டார். அது கலையாக மாறியது. கதைகளுக்குள் அவருடைய சிந்தனை ஓட்டத்தையும் சேர்த்து வைத்ததால் எக்கண்டம் எகடாசிக்கெல்லாம் ஒரு புதுப்பார்வை கிடைத்தது. ரயில் போய்க் கொண்டேயிருக்கும்போது ஒரு கம்பார்ட்மெண்ட்டில் பேச்சு சலசலப்பு கேட்கிற மாதிரி சட்டயர் ஒன்று விழுந்து கொண்டேயிருக்கிறது.
ஊர் பாஷையில் எழுதி வெற்றி பெறுவது பெரிய விஷயம். பூமணி தன்னுடைய எழுத்தில் ஊர் பாஷையைக் கொண்டுவர முயற்சி செய்து ஓரளவு  வெற்றி கண்டார். ராஜநாராயணனும் இப்படிச் சில கதைகளில் சாதித்தார். அழகிரிசாமி பத்திரிகை மொழியிலேயே எழுதி எழுதி மன உணர்வுகளின் ஆழங்களைக் கொண்டு தப்பித்துக் கொள்கிறார். புதுமைப்பித்தன் கடைசிவரை திருநெல்வேலி பாஷையை வெற்றிலை போட்டுக்கொண்டே காப்பாற்றினார்.

புதுமைப்பித்தன் கதைகளில் உங்களுக்குப் பிடித்தது கயிற்றரவு என்று சொல்லியிருக்கிறீர்கள்…
கயிற்றரவு, கபாடபுரம், பிரம்மராட்சஸ், ஞானக்குகை, காஞ்சனை, செல்லம்மாள்…
அழியாச்சுடரில் மௌனி அந்த யாளியை அசைத்து உறுமவைப்பது எதிர்கால சிறுகதைகளுக்கான குறியீடுதான் என்பதில் சந்தேகமில்லை என்கிறீர்கள். மௌனி காலத்தில் அவர் உருவாக்கிய பாதிப்பை சமகாலப் படைப்பாளிகள் உருவாக்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா?
ஒவ்வொருவரிடமும் ஒரு சில கதைகள் இருக்கின்றன.  master storys ன்னு அவரிடமிருந்தது. இன்றைக்குப் புதிதாக எழுத வந்திருப்பவர்களிடம் அது இருக்கிறதுதான். மௌனி ஸ்தூல சரீரத்துக்கும், சூக்கும சரீரத்துக்கும் இடையே பெரும்பகுதி சூக்கும சரீரமாகவே எழுதிக்கொண்டு போய் நிறையக் கதைகள் சூக்குமமாகவே அமைந்தது. நகுலன் சூக்குமமே எழுதிக்கொண்டுவந்து பிறகு மூன்று, அய்ந்து ஆகிய கவிதைத் தொகுதிகளில், விபீடணணின் தனிமொழி, உறங்குகிறான் கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகிய  நெடுங்கவிதைகளில் அசுரர் பக்கம் போய்விடுகிறார். அன்றிலிருந்து ஸ்தூலமும், சூக்குமமும் படைப்பில் இணைந்து விடுகிறது. லா.ச.ரா. ஸ்தூலத்தையும் சூக்குமத்தையும் ஒன்றிணைக்கிறார். தி.ஜானகிராமனின் செம்பருத்தி, அம்மா வந்தாள், மரப்பசு போன்ற படைப்புகளில் சூக்குமமும், ஸ்தூலமும் ஒன்று கலக்கிறது.

சமகால நாவல்கள் வேறொரு தளத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்டீர்கள். உங்களுடைய நாவல்களான பாழி, பிதிரா, ‘த’ எல்லாமும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தானே வாசிக்கப்படுகின்றன. அல்லது புரிந்து கொள்ளப்படுகின்றன..? இந்தப் ‘‘புரியவில்லை’’ என்கிற புலம்பலுக்கு நீங்கள் வைத்திருக்கும் பதில்தான் என்ன?
ஒரு படைப்பாளி¢க்குத் தன்னுடைய நாவலைப் படியுங்கள் என்று சொல்ல வேண்டிய இடம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய நாவலைத் தலகாணியாக வைத்துத் தூங்க வேண்டாம். ‘‘பெரிசா எழுதிட்டாரு’’ன்னு எடைபோட வேண்டாம். வாசிப்புக்குள் பல்வேறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருப்பது  எனக்குத் தெரியும். பல்வேறு வகையில் இந்த மொழி எல்லைக்குள் வருவதற்கான தூண்டுதல்களை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். வாசிக்கும்போது அவர்களுக்குப் புதிய திசைகள் தட்டுப்படும். ஒரு கலாச்சாரத்துக்குள் வேறு வேறு காலங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கும். எதிர் நிலையாகவே உள்ளே போய் சரியாக நடந்துவிடும் வாசிப்பு. தொடர்ந்து வாசிக்கிறவர்களும் உண்டு. எனக்கே தெரியாமல் என் எழுத்தை வாசிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
சிறுகதை வாசகர்கள் அதிகம். ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ 1800 பிரதிகள் விற்பனையாகி உள்ளது. ‘பாழி’ இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ‘பிதிரா’ ‘த’ இரண்டு நாவல்களும் விற்றுத் தீர்ந்து விட்டன. எங்கோ  ஏதோ ஒரு வகையில் வாசிக்கிறார் கள். நவீன ஓவியம் மாதிரி வாசிக்கிறவர்கள் உண்டு. பலர் ‘கதையே நல்லா இருக்கு’ என்றும் வாசிக்கிறார்கள். பலமுறை வாசித்தும், ஷிளீவீஜீ பண்ணி வாசிக்கிறவர்களும் உண்டு. அந்த ஈடுபாடு இருக்கிறது. எனவே அவர்களைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. எப்படியும் அந்த நாவல் வேறுவிதமான சலனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்.
புரியாது என்பதே இனி விவாதத்திற்குள் வராது. அது நவீன ஓவியமாக இருக்கலாம். இசையாக இருக்கலாம். ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு தாவுதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓவியம் நாவலுக்குள் சலனங்களை ஏற்படுத்தி பரப்பை மாற்றுகிறது. நிகழ்வாழ்வின் காட்சிப் பரப்பு ஓவியப் பரப்பாக மாறும்போது இன்னும் ஆழமாக இறங்கு கிறது. அலெக்ஸாண்டர் சுக்ரோவினுடைய ‘மதர் அண்ட் சன்’இல் மிக நிதானமாக ஒருவன் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போவது… இலையுதிர்காலத்தில் ஒரு பனிக்காட்டில் அம்மாவின் கடைசி நாட்களில் அவளோடு இருப்பது… அவ்வளவு slow painting மாதிரி செய்ய அவருக்குத் துணை புரிந்திருப்பது ரஷிய ஓவியங்கள். ரஷ்ய  ஆன்மா அதில் இருக்கிறது.  தாஸ்தாவெஸ்கியினுடைய தாதியானா பெண் துணைபுரிகிற தாயாக இருக்கிறாள். அதேபோல நம்முடைய பழம் பெண்கள் நூறு வருடம், இருநூறு வருடங்களுக்கு முந்தைய பெண்களின் கண்ணீரும் கேவலும், குலவைகளும், அவர்களின் ஒப்பாரிகளும், பாடல்களுமாக எல்லாமே படைப்பில் மறைந்து வருகிறது.அவர்களுடைய வழியாகத்தான் நாம் எழுதுகிறோம். எனவே என்னுடைய படைப்புகளுக்குள் அந்த மாதிரியான புராதனப் பெண்கள் இருக்கிறார்கள்.

அரபுப் புனைவிலக்கியங்களில் சமீபமாக என்னவெல்லாம் வாசித்தீர்கள்?  
அகமத் ஹம்தி தண்டானாரின் ‘நிச்சலனம்’ படித்தேன். துருக்கி நாவல்களில் இது ஒரு உச்சம். துருக்கி வாழ்நிலையில் பழைய ஒட்டமான் கலாச்சார நகரங்களின் எல்லா வாழ்க்கையும் அதில் இருக்கிறது. அது துருக்கியினுடைய இசையாக, தனி வாசனையுடன் பதிவாகியுள்ளது. அதை மெதுவாகத்தான் வாசிக்கிறேன். சில நாவல்களை அவசரமாக வாசிக்கத் தேவையில்லை. ஹாருகி முரகாமியின் ‘நார்வேஜியன்வுட்’ நாவல் வாசித்தேன். மொழிபெயர்ப்பில் சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் ஒரேமூச்சில் இரண்டு நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். ஆனால் ‘நிச்சலனம்’ நாவலை அவ்வளவு எளிதாகக் கடக்கமுடியவில்லை. முரகாமியிடம் மொழி இல்லை. மெதுவாக ஏதோ கண்ணாடி பார்க்கிற மாதிரி கடந்து போய்விடுகிறது. நிச்சலனத்தில் உள்ள ஓட்டமான் காலத்துப் பழைய அரபு வீட்டு ஜன்னல்களும், காரை உடைந்த சுவர்களும் அங்கு ஒளிந்திருக்கிற பாசி பிடித்த ஓடுகளும், அதிலிருக்கிற ஒரு பழைய யாழும், இப்ராஹிமுடைய பாடலை டாக்ஸியில் கேட்டுக் கொண்டே போவதுமாக ஒரு பாடலில் ஒரு நகரமே ஒளிந்திருக்கிறது. அதை நான் நாவலில் கண்டுபிடித்தேன்.

80களிலும், 90களிலும் நவீன எழுத்தாளர்களிடம் போர்ஹே என்கிற ஒரு பெரிய மயக்கம் இருந்தது. நீங்களும் கூட போர்ஹேவிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே எழுதுவதாகவும் வேஸ்ட் பேப்பர் தயாரிப்பில் ஈடுபடுகிறேன் என்றும்கூட குறிப்பிட்டிருக்கிறீர்கள். போர்ஹே எந்தக் கதையிலும் நுழைந்துவிடக்கூடும் என்ற ஜாக்கிரதை உங்களுக்கு இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.
போர்ஹேவுடைய கணிதவியலும் தத்துவங்களின் மேதைமையும் அவர் அரேபிய இரவுகளைப் புரிந்த விதமும், இந்தியாவைப் புரிந்து கொண்ட விதமும் சிறுகதையினுடைய ஆதார ஊற்றுக்களாக இருக்கிறது. நான் எங்கு இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள போர்ஹே கதைகளின் இருண்ட ஊற்றைத் தொட முயல்கிறேன். ஆனால் போர்ஹே ஆக விரும்பவில்லை. மார்க்வெஸும், ஜூலியோ கொர்த்தஸாரும்,அலன் ராப் கிரியேவும், மிலோரட் பாவிச்சும், நகுலனும், க.நா.சு.வும், பிரமிளும், பிரம்மராஜனும், போர் ஹெயிடம் ரகசிய அற்புதத்தைத் தெரிந்துகொண்டதைப் போல என்னுடைய blindnessலிருந்து மட்டும் தான் போர்ஹெயை நான் நெருங்குகிறேன். மௌனியை வீணை தனம்மாளிடமிருந்தும், சந்ருவை மயனுடைய கலை மரபிலிருந்தும் எப்படிப் பிரிக்கமுடியாதோ அப்படி போர்ஹேயிடமிருந்து என் போன்றவர்களைப் பிரிக்க முடியாது.

உங்களுடைய ஒவ்வொரு படைப்பிலும் அரசியல் நுட்பமாக வெளிப்பட்டு இருக்கிறது. அதை விட்டு நீங்கள் பிசகியதை நான் பார்க்கவில்லை.  நீங்கள் மாற்று அரசியலில் எப்போதுமே ஒரு புதுமையை இயல்பாகவே அடைந்திருக்கிறீர்கள். அதைப் புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் இருக்கலாம். நீங்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
சநாதனத்துக்கு எதிரான மாற்று அழகியலை உருவாக்குவதில் மாற்று அரசியலை வெளிப்படையாக வைக்க வேண்டியதில்லை. அதைப் பூடகப்படுத்த வேண்டும் என்று சொல்ல வரவில்லை. எல்லாம் ஒன்றுசேர்ந்து கலவையாக மாறுகிற புனைவை எழுதி எழுதித்தான் நாம் அடைய முடியும். அதனால் கருத்துருவத்தின் தூணில் சாய்ந்து கொண்டிருக்கும் கழுதையின் சாத்தெலும்பு எனக்குத் தேவையாக இருக்கவில்லை. கழுதையின் எலும்பு அதன் சுமையில் அடங்காது. எந்தப்படைப்பையும் சமயப்படுத்தாமல் இந்துத்துவத்துக்குள் மாட்டிவிடாமல் இருப்பதற்கு பிணந்தின்னும் என்னுடைய சிறுதெய்வங்களே சிலவேளை என் கதைகளை எழுதிவிடுவதாகவே நினைக்கிறேன். தல புராணங்களை வைத்துக் கதையை எழுதி விடமுடியாது. ஏற்கனவே இட்டுக்கட்டியதில் இருந்து நாம் புதிதாக ஒன்றும் கட்டுக்கதையை எரிய வைக்க முடியாது.
அண்ணன் தமிழ்ச்செல்வன் சிறந்த சிறுகதைக்காரராக இருந்திருக்கிறார்.  வெயிலோடு போய், வாளின் தனிமை இரண்டு தொகுப்புகளுமே முக்கியமானவை. நீங்கள் ‘கருப்பசாமியின் அய்யா’, ‘வார்த்தை’  ‘வாளின் தனிமை’ கதையை சிலாகித்துப்பேசியிருக்கிறீர்கள்.. அவரொரு கட்டத்தில் கதை எழுதுவதிலிருந்து விலகி பண்பாட்டுப் போராளியாக மாறியிருக்கிறார்.  மீண்டும் அவர் கதைகள் எழுத என்ன மந்திரம் போடலாம்?
தமிழின் (தமிழ்ச்செல்வனின்) நீரோட்டமான மனம், விட்டுப்பிரியாத அனுபூதியாய் சிறுவயதிலிருந்தே கூடவருகிறது. அவர் தொடர்ந்து எழுதுவார் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. அவரோடு தொடர்ந்து நான் கூட இல்லாமல் இருக்கிறேன். தமிழ்ச்செல்வன் ராணுவத்தில் போஸ்ட்டல் வாரண்ட் ஆபீஸராக இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தபோது கலீம்போங்கிலிருந்து சீனப்பட்டுச்சால்வையை அம்மாவுக்காக வாங்கிவந்தார். இருபத்திஐந்து வருடங்களாக அது அம்மாவிடமிருந்தது. அதற்குள் அம்மா மறைந்து விட்டாள். அதை அம்மாவினுடைய கட்டிலிலிருந்து நான்  எடுத்து பத்து வருடங்களாக வைத்திருக்கிறேன். அதை என் தலகாணியைச்சுற்றி வைத்துத் தூங்குவேன். அதை யார் எடுத்தாலும் பிடுங்கி வைத்துக்கொள்வேன். அதில் அண்ணன் என்னோடு கூட இருப்பதாகவே ஒரு உணர்வு.
மேட்டுப்பட்டியில்  பூர்வீகவீட்டுத் திருணையில் என் பச்சைத்தலகாணியை யாருக்கும் தர மாட்டேன். அதன் நிறம்தான் அந்த சீன சால்வைக்கும். ஆனால் சீனாவினுடைய மஞ்சள் ஆறு அதில் ஒளிந்திருக்கிறது. அதிலுள்ள டஸ்ஸா பட்டுப்பூச்சிகள் என்னுடைய மூன்றாம் ஜாமக்கதையில்  உறங்குகின்றன. அண்ணன் கொண்டுவந்த பச்சை மஞ்சள்நிற தாவரக்கொடிச் சால்வையால் தான் அம்மா பக்கத்தில் அண்ணன் இருப்பதாகத் தெரிகிறது. அந்த உணர்வை அம்மாவைத் தவிர்த்து தமிழ்தான் தரமுடியும். அந்த கலீபோங்க் சால்வை வாழ்க்கை ஓட்டத்தில் இன்னும் தொலைஞ்சு போகாமல் இருப்பதே பெரிய விஷயம் தான். எனக்குக் காய்ச்சல் வந்தால் அதை எடுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குவேன். சீக்கீரமாகவே காய்ச்சல் விட்டுவிடும். ஹீலிங்க் சால்வை அது.
ஒரு எழுத்தாளனைப்பார்த்து எழுதுங்கள் என்று சொல்வது சரியா தெரியவில்லை. இயல்பாகவே அவருடைய எழுத்து தன்னியல்பான நீரோட்டத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவருடைய நாவல் வாசிப்பு பற்றி பேசும்போது அதெல்லாம் வெளிப்படும். லிவ்வுல்மேனுடைய சுயசரிதையை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் அண்ணன். அந்த வகையில் நான் அதில் சில பக்கங்கள் வாசித்து மிருக்கிறேன். லிவ்வுல்மனைக் கண்டுபிடிக்கிற மனம் ஒருபோதும் படைக்காமல் இருந்து விடாது.

முருகபூபதி நவீன நாடகத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.  அல்லாமல்  குழந்தைகளுக்கான கதைசொல்லியாக அவருடைய அர்ப்பணிப்புத் தன்மை… இதைக் குறித்து…
முருகபூபதியின் எல்லா நாடகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாடகத்தின் ஒத்திகை களையும் சேர்த்தால் நானூறு தடவைக்கு மேல் பார்வையாளனாக இருந்திருக்கிறேன். சரித்திரத்தின் அதீத மியூசியத்திலிருந்து, தாஸ்தவஸ்கியின் மரண வீட்டின் குறிப்புகள், அவன் திருவண்ணாமலை திப்பாக்காட்டில் நடத்திய செம்மூதாய் நாடகத்திற்கும் வெவ்வேறு திசைகளில் நாடக ஆர்வலர்கள் வந்து சேர்ந்த நாளது. நகரங்களில் மட்டுமே இயங்கிய நவீன நாடகத்தை திப்பக்காட்டுக்கும் சூரங்குடி தங்கம்மாள் புரம் தேரிக்காட்டுக்கும் மணல்மகுடி நாடகக்குழுவை கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தான். அன்றிலிருந்து செந்தேறி நிலத்தில் கூந்தல்நகரம், செம்மூதாய், தனித்திருக்கப்பட்டவர்கள்(சென்னைச்சிற்றரங்கத்தில் நடந்தது), உதிர முகமூடி, கோயில்பட்டி வீட்டின் வேம்படி நாடகநிலத்தில் மிருகவிதூஷகம், சூர்ப்பணங்கு, குகைமரவாசிகள் வரை பெரும்பாலும் நான் ஆவலோடு பார்வையாளனாகப் பயணம் செய்திருக்கிறேன்.

ஒரு சம்பிரதாயமான கேள்வி. உங்களுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விருதுகள் கொடுத்தால் பெற்றுக் கொள்வீர்களா?
விளக்கு விருதை நான் பெறத் தூண்டியது முதல்முறை மறுத்து அது இரண்டாம் முறையாக என் கதவைத் தட்டியதால் தான். இருட்டாயிருக்கே இருட்டாயிருக்கே என்று விளக்கு என் அறையில் நுழைந்துவிட்டது. கலைஞன் ஒரு கூகை அடையும் இருட்டு. விளக்கைப்பொத்தி அணைத்துவிடுவான். இந்த விளக்கு சிறிது வெளிச்சம். புதுமைப்பித்தன் மகள் தினகரி அவர்களிடமிருந்து போன் வந்தது. அப்பா பெயரில் வழங்கப்படும் விருதுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஒரு கணம் அக்குரலில் அப்பா மீதான ஏக்கம், புதுமைப்பித்தனின் வரலாறாக  எல்லாக்கதைகளும் கபாடபுரத்திலிருந்து ஒருமுறை புரண்டன. புதுமைப்பித்தனின் இருளின் படிம ஏடு விளக்கில் புரள்கிறது.

Related posts