You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று- 3: வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள்

ச.தமிழ்ச்செல்வன்

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று பயிலரங்குகளில் அவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த அக்கல்வி மாவட்டம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக முதலிடத்தை இழந்து கீழே இறங்கிவிட்டது. ‘விட்ட இடத்தை’ப் பிடிக்கும் போராட்டத்தின் பகுதியாக முதன்மைக்கல்வி அலுவலரின் (சில சமயம் கல்வியோடு மனரீதியான தொடர்புள்ள அதிகாரிகளும் கல்வித்துறையில் வந்து விடுகிறார்கள்தான்)முன் முயற்சியில் இந்த முகாம்கள் நடந்தன. இயற்பியல், வேதியல் மற்றும் வரலாற்று ஆசிரியர்களோடு உரையாடினேன்.
பள்ளிகளில் குழந்தைகளோடு பேசும் வாய்ப்பும் எனக்குத் தொடர்ந்து வாய்க்கிறது. குழந்தைகளோடு பேசுவதற்கும் ஆசிரியர்களோடு பேசுவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக பல சமயங்களில் தோன்றும். அதிகாரிகளின் உயிரற்ற பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக்கேட்டு ஒருவித மந்த மனநிலைக்குப் போய்விட்ட அவர்களை (கண்கள் நம்மை நோக்கி விழித்தபடி  இருக்க மனதையும் செவிகளையும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கும் மனநிலையைத்தான் மந்த மனநிலை என்கிறேன்)  மீட்டுக் கொண்டு வர முதலில் போராடி அப்புறம்தான் நாம் எதையாவது சொல்ல நேரும்.ஆனால் குழந்தைகள் அப்படி அல்லர். நான் சொல்வது சின்ன வகுப்புக் குழந்தைகளை. பெரிய வகுப்புக்குழந்தைகள் பத்தாண்டுகள் வகுப்பறைகளில் உட்கார்ந்து உட்கார்ந்து அந்த ஸ்விட்ச் ஆஃப் மனநிலைக்கான பயிற்சி பெற்று வந்து சேர்ந்திருப்பார்கள்.  5, 6, 7 வகுப்புக் குழந்தைகள் வரை உயிர்ப்பாக இருப்பார்கள். அதைத்தான் துறு துறு என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்னும் வகுப்பறைகள் முழுதாக அவர்களைக் குடித்துத் தீர்த்திருக்காது. ஒளிமிகுந்த கண்களோடு நம்மை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டிருக்கும் சின்ன வகுப்புக் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருப்பது தனி அனுபவம்.
இன்னும் சில புள்ளிகளில் ஆசிரியரும் மாணவர் களும் எல்லாம் ஒண்ணுதான் என்று தோன்றுவதும் உண்டு. அப்பிடியா சார் என்கிற வியப்புக்குறி முகங்களில் ஒளிர, புதிய செய்திகளைக் கேட்கும் ஒருவித வெள்ளந்தி முகம் (மிழிழிளிசிணிழிஜி திகிசிணி) இருவருக்குமே உண்டு. எவ்வளவு கொடூரமான மனிதராக இருந்தாலும் இப்படி ஒரு வெள்ளந்தியான பிரதேசம் ஒவ்வொரு மனித மனதுக்குள்ளும் கட்டாயம் இருக்கும் என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. மனதின் அப்பகுதியை அவர்கள் எல்லோருக்கும் காட்டிவிட மாட்டார்கள்.எல்லோராலும் அதைப் பார்த்துவிடவும் முடியாது. எப்போதாவது ஒரு கணத்தில் வெளிப்படும் அம்முகம் நாம் அதுவரை அவர்களைப்பற்றி வைத்திருந்த சித்திரங்கள் அனைத்தையும் நொடியில் அழித்து விடும்.என் வாழ்நாள் முழுக்க நான் பழகும் ஒவ்வொரு மனிதர்-மனுஷிக்குள்ளும் ஒளிந்திருக்கும் வெள்ளந்தியைக் கண்டுபிடிப்பதையே முக்கியமான உறவுசார் நடவடிக்கையாகக் கருதுவேன். மிநிழிளிஸிகிழிசிணி அல்ல நாம் குறிப்பிடுவது. மிழிழிளிசிணிழிசிணி.தான். மிநிழிளிஸிகிழிசிணி என்பது இருட்டு. மிழிழிளிசிணிழிசிணி என்பது குணத்தின் வெளிச்சம்.
நகைச்சுவையாகப் பேசுகிற தருணங்களில் அவர்கள் சிரிக்கும்போது மின்னலென அது வெளிப்பட்டு விடும். கூட்டங்களில் நான் நகைச் சுவையாகப் பேச முயற்சிப்பதுகூட இதனால்தானோ என்று சிலநேரம் நினைத்துக்கொள்வேன்.
இது ஒருபுறம் இருக்க.நாம் விஷயத்துக்கு வருவோம்.

1

ரிசல்ட்  நல்லா வரணும் என்பதற்காக நடக்கும் பயிலரங்கில் நான் போய் ரிசல்ட் எப்படி ஆனால் என்ன பிள்ளைகள் படிப்பின் மூலம் இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொண்டால் போதும்.அதுதான் கல்வியின் நோக்கம் என்று பேசியது சரிதானா என்பது தெரியாது. ஆனால் படி படி என்று சொன்னால் எப்படி பிள்ளைகள் படிப்புக்கு எதிரான மனநிலைக்கு வருவார்களோ அதேபோல ரிசல்ட் ரிசல்ட் என்றே அடித்துக்கொண்டிருந்தால் நல்ல ரிசல்ட் வராது என்பதுதானே தர்க்கரீதியாக சரி. இந்தப் பரீட்சைகளும் மார்க்குகளும் ரேங்க் கார்டுகளும் முதல் இடம்களும் என எல்லாவற்றையும் பகடி செய்து பேசிக்கொண்டே போனேன். அவர்களும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.   துன்பத்தைச் சிரிச்சுத்தானே கழிக்கணும்.ரிசல்ட் பற்றிய  மன அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிப்பதுகூட நல்ல ரிசல்ட்டுக்காக அவர்களை உழைக்க வைக்கும் என்கிற கோணத்தில் என் வைத்தியம் சென்றது.
பொதுவாக பயிலரங்குகளில் நடத்தப்படும் வகுப்புகளின் மூலம் மட்டும் ஒருவரும் இவ்வுலகைக்  (அல்லது அப்பயிலரங்கின் பேசுபொருளையே கூடக்) கற்றுக்கொள்ள முடியாது. தஞ்சாவூரில் நடந்த இன்னொரு பயிலரங்கு என் நினைவுக்கு வருகிறது. பட்டுக்கோட்டையில் நாங்கள் நடத்தும் இந்தியன் வங்கி ஊழியர் சங்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு தஞ்சையில் நடந்தது. தோழர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் அமல்ராஜும் பொறுப்பேற்று நடத்தினார்கள். என்னுடைய துவக்க உரையில்  பயிலரங்கு என்பது புதிய கருத்துக்களைத் தெரிந்துகொள்ள மட்டுமல்ல.  நமக்கு என்ன தெரியாது என்பதையும் நமக்குள் உறைந்திருக்கும் திறன்களையும் பலவீனங்களையும் அடையாளம்  கண்டுகொள்ள உதவுவதும்தான் பயிலரங்கின் மையமாக இருக்க வேண்டும்  என்று குறிப்பிட்டேன்.ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் பாடத்தில் விற்பன்னராக இருப்பது மிக முக்கியம். நான் ஒரு இயற்பியல் ஆசிரியர் என்பதில்-நான் வரலாற்று ஆசிரியர் என்பதில் ஒரு பெருமிதம் இருக்க வேண்டும். கம்பீரம் மனதில் இருக்க வேண்டும். அது பாடங்கள் குறித்த ஆழ்ந்தகன்ற ஞானத்தினாலேதான் வரும்.அறிவுச்செருக்கு மிக்க ஆசிரியர்களைக் காண்பது அரிதாகி வருகிறது.
சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளியில் ஆசிரியர்கள் மத்தியில் பேசும் போது தோழர் வ.கீதா “ஆசிரியர்கள் தாயைப்போல கருணையோடு வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை” எனக் குறிப்பிட்டார். துறைசார்ந்த அறிவைத் தரும் ஞான ஆசான்களாக அல்லவா அவர்கள் இருக்க வேண்டும். சமூகப்பார்வையோடு ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று மட்டுமே நீண்டகாலமாகக் கொட்டி முழக்கிக்கொண்டிருந்த நான் பல ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் பழகிய பிறகு இன்று துறைசார் அறிவு முதற்படியாக இருக்க வேண்டும். அந்தப்படியை மிதித்துத்தான் சமூக மற்றும் உலக ஞானம் தரும் கடமைக்குள் செல்ல முடியும், செல்ல வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.
இந்த நான்கு பயிலரங்குகளிலும் பேச எனக்கு ப.கு.ராஜனின் புரட்சியில் பகுத்தறிவு புத்தகம் பேருதவியாக இருந்தது.  அப்புத்தகத்தை வாசிக்காதவர் ஓர் அறிவியல் ஆசிரியராகவும் வரலாற்று ஆசிரியராகவும் மின்ன முடியாது என்று அடித்து அடித்துச்  சொன்னேன். வாராது வந்த மாமணிபோல  அப்புத்தகம் வந்திருப்பதாக ஊர் ஊராகப்போய்ச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நல்ல ரிசல்ட் வர வேண்டுமானால் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் முக்கியமாக நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, நான் இங்கு குறிப்பிட விரும்பும் இன்னொரு முக்கிய செய்தி இன்று அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கும் குடிக்கலாச்சாரம் பற்றி. நான் அதிகமாகப் புழங்கும் தென் மாவட்ட அரசுப்பள்ளிகளில் எட்டு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களே கூட குடிப்பழக்கம் உடையவர்களாக மாறி வருகிறார்கள் என்பதை முதன்முதலாக அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். என் துணைவியார் பணியாற்றிய பள்ளியில் பல மாணவர்கள் குடிக்கு அடிமையே ஆகிவிட்டதைக் கவலையோடு குறிப்பிடுவார். சில மாணவர்களோடு நானும் உரையாடல் நடத்தினேன்.ஒரு பையனின் அப்பா அவனுடைய அம்மாவைக் கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணோடு வாழந்து கொண்டிருக்கிறார்.  வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழும் நிலை. அது மட்டும் இரு வயிறுகளுக்குப் போதவில்லை. பையனும் சனி ஞாயிறுகளில் கட்டிட வேலைக்குப் போகிறான்.கொத்தனார், மேஸ்திரி, சித்தாள்களின் பண்பாட்டின் பகுதியாக மாறிவிட்ட குடிக்கலாச்சாரம் இவனையும் தொற்றிக்கொண்டுள்ளது. தகப்பன் குடிகாரனாக உள்ள பிள்ளைகளில் ஒரு பகுதியும் குடிக்கத் துவங்கியுள்ளது. இளம் பள்ளி மாணவர்  மத்தியில் பரவிக்கொண்டிருக்கும் இது பெருவழக்காக மாறுவதற்கு முன்னால் இதைத் தடுத்திட நாமெல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
குடிபோதை மட்டுமின்றி சாதிபோதையும் எம் பகுதியில் மாணவர்கள் மத்தியில் ஆழமாகப் புரையோடிப்போயிருக்கிறது. திருத்தங்கல் நகரில் ஒன்பதாம் வகுப்பில் பாடப்புத்தகத்தில் உள்ள அம்பேத்கர் பாடத்தை நடத்த விடாமல் ஆசிரியரை கத்தியைக்காட்டி மிரட்டிய அப்பாடத்தைப் புத்தகத்திலிருந்து கத்தியால் கிழித்து வீசிய மாணவர் களைப்பற்றி பத்திரிகைகளில் வாசித்த போது விரக்தியே வந்துவிட்டது. கத்தி மாணவர்களைத் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்தால் சாதி அமைப்பினரும் அமைச்சர் உள்ளிட்ட அரசியல் வாதிகளும் தலையிட்டு மீண்டும் அம்மாணவர்களை சேர்த்துள்ளனர்.  அந்த ஆசிரியரும் அந்தக் கத்தி மாணவர்களும் வகுப்பறையில் மீண்டும் எப்படி முகத்துக்கு முகம் பார்த்துப் பேசமுடியும். அவர்களை அறிவுறுத்தி வேறு பள்ளியிலாவது சேர்த்திருக்கணும்.
வகுப்பறையிலிருந்து வெளிச்சம் பரவி சமூகத்தில் மண்டிக்கிடக்கும் சாதி இருள் விலக்க வேண்டும் என்று மைக்குகளில் நாம் முழங்கிக்கொண்டிருக்க இன்று யதார்த்தம்  தலைகீழாக  இருக்கிறது.  உள்ள கொடுமை போதாதென்று இப்போது பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து  நம் வகுப்பறைக்குள்  தம் திங்கு திங்கு ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள். ஆசிரியர், மாணவர் அமைப்புகளும் பொது அமைப்புகளும் இணைந்து கல்விகாக்கும் போரில் குதிக்க வேண்டும்.யாருக்கு வந்த விருந்தோ என்று  நாம் எல்லோருமே இருந்துவிட்டதால் வந்த வினைதான் இதெல்லாம்.

2

சமயபுரம்   எஸ்.ஆர்.வி.பள்ளியில்  மாணவர் களுக்காக ஆண்டுதோறும்  புத்தகத்திருவிழா   நடைபெறுகிறது. இந்த ஆண்டு சென்ற மாதம் நடந்த விழாவில் 9 லட்ச ரூபாய்க்கு மாணவர்கள் புத்தகங்களை அள்ளிச்சென்றுள்ளனர்.
அப்பள்ளியின் 6, 7, 8, 9 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர் 50 பேர்  ‘‘வாசிப்பின் சிறகுகள்” என்கிற குழு நடவடிக்கையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு என்னோடு பயணிக்கிறார்கள். புத்தகங்களைப்பற்றிப் பேசியபடியும்  வாசித்தபடியும் வாசித்ததை  விவாதித்தபடியுமாக நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். எழுத்தாளர் சுப்பாராவ்  ஒருநாள்  (சிறகசைப்பு-3இல்) வந்து அவருடைய வாசிப்பை நேசிப்போம் சிறுநூல் வாசிப்பு அனுபவப் பகிர்வில் பங்கேற்றுப் பேசினார்.
ஒருநாள்  சிறகசைப்பு-4 இல்  நாங்கள் எல்லோரும் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்துக்குச் சென்றோம்.தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் குழந்தைகளுக்கு மகாலையும் மியூசியத்தையும் அறிமுகம் செய்து வைத்தார், பொறுமையுடனும் மகிழ்வுடனும்.
அப்பயண அனுபவங்களை குழந்தைகள் எழுதியிருக்கிறார்கள். அதில் எட்டாம் வகுப்பு சுபஸ்ரீ எழுதியது என் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டது.எதற்கு அழைத்துச் சென்றோமோ அதை மட்டும் எழுதினால் அதில் சிறப்பில்லை.  காட்சிப்பூர்வமாகவும் மன உணர்வு ரீதியாகவும் சுபஸ்ரீ சித்தரித்ததுதான் அழகு.
“ஜோரான மழையில்..கையில் குடையில் ச.தமிழ்ச்செல்வன் சாரோட ஓடிப்போனதிலே புரிஞ்சிக்கிட்டேன் வாழ்க்கையோட சந்தோஷத்தை..உள்ளே நுழைந்து ஐஸ்வராய் அக்கா படிச்ச புக் வாங்கிட்டு பஸ் ஏறி கிளம்பிற வரைக்கும் என்னமோ தெரியலே.. மனசிலே ஏதோ ஒரு சந்தோஷம்.. ஒரு அமைதி.. ஒரு உற்சாகம்.. எல்லாம் கலந்து  குஷியோ குஷி..” அவர்களோடான என்னுடைய உரையாடல் களில் இலக்கணம், எழுத்துப்பிழை பற்றியெல்லாம் துளிகூடக் கவலைப்படாதீர்கள். மனதில் தோன்றுவ தெல்லாம் எழுதுங்கள் என்று எழுத்துப்பயிற்சியின்போது சொல்லுவேன். சுபஸ்ரீ மட்டுமல்ல இன்னும் சில குழந்தைகளும் இப்படி உணர்ந்ததைத் தெரிந்த (தேர்ந்த வார்த்தைகள் அல்ல)வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த எல்லாக்குழந்தைகளின்  கன்னங்களையும் என் இரு கைகளில் ஏந்தி என் செல்லங்களே என்று வாழ்த்துகிறேன். இந்த சந்தோஷம் போதும் இன்னும் சில மாதங்களுக்கு வண்டி ஓடும்.
தொடர்வோம்…

Related posts

One thought on “கடந்து சென்ற காற்று- 3: வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள்

  1. […] வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள் […]

Comments are closed.