You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 8 : மரப்பாச்சியும் தோற்பாவையும் அரக்குநிறக் கழுதையும்

ச. முருகபூபதி

பொம்மைகள் குறித்த பல்வேறு வரலாற்றுச் செய்திகளை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லும் நாட்களில் என் கரங்களில் விதவிதமான மரப்பாச்சி பொம்மைகள் துணையிருந்தன. அவற்றைத் தொட்டு ருசிக்காத குழந்தைகளை அன்று எண்ணிவிடலாம். தமிழ்ப் பண்பாட்டு வெளியில் மரப்பாச்சி பொம்மைகளுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. இன்று கொலு எனும் பொம்மைகளின் நாளில் காட்சிப் பொருளாகிவிட்ட மரப்பாச்சி எனும் ஆண், பெண் பொம்மைகள் 50 வருடத்திற்கு முன் வரை குழந்தைகளின்  உடலோடு ஒட்டிக் கொண்ட உறுப்பு எனலாம்.  காய்ச்சல், தலைவலி உடல்வலி போன்ற சில உடல் உபாதைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் இம்மரப்பாச்சி பொம்மையினைத் தரையில் உரசி குழந்தைகளின் உடலில் தேய்ப்பது வழக்கம். இப்படிச் செய்வதால் சிறு நோய்கள் குணமாகி விடுகிறது. அப்படியொரு மருத்துவக்குணம் அதற்கு. தோற்றத்தில் சமண சிலைகளின் நிற்கும் நிலையினை ஒத்திருப்பதால் சரித்திர மருத்துவக்குணம் அதற்குச் சரித்திர நிலத்தில் நின்று பார்க்கும் பண்பினையும் அது கொண்டுள்ளது. பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சியில் பொருட்களை எடுக்கும் பருவம் வரும்போது நம் பெற்றோர்கள் முதலில் கொடுப்பது மரப்பாச்சியினையே. குழந்தைகள் அவற்றை நக்கி  உறவாடும். பண்பாட்டு நிலத்தில் முதல் பிமீணீறீவீஸீரீ பீஷீறீறீ என மரப்பாச்சியைச் சொல்லலாம். மரப்பாச்சிகளில் கிளிப்பாச்சி, மயில்பாச்சி எனச் சில பறவை பொம்மைகளும் உண்டு.
எளியோரின் குழந்தைகளுக்காக கிராமம் மற்றும் சிறு நகரங்களில் ஆள் உயரப் பந்தக்கால் மூங்கிலின் கம்பின் நுனியில் பொம்மையிருக்க அதன் பாதி உடலிலிருந்து ‘‘ஜவ்வு மிட்டாய்’’ கம்பின் பாதி வரை தடிமனாக சுற்றப்பட்டிருக்கும். மிட்டாய் சுற்றப்பட்ட பகுதி தோற்றத்தில் பொம்மையின் உடலாகவே இருக்கும். மூங்கிலின் கணுக்கள் அனைத்தும் துவாரமிடப்பட்டு அதன்வழி கயிறு நுழைக்கப்பட்டு பொம்மையின் உடலையும் மிட்டாய் விற்போரின் கரத்தினையும் இணைத்திருக்கும். அவர் கயிற்றை இழுக்க இழுக்க பொம்மை கைகொட்டியபடி ஆடும். பொம்மையினை இயக்குபவரின் குரலே அப்பொம்மையின் குரலாக இருக்கும். இம்மிட்டாயால் கத்தரிக்காய், பூசணி, சுரை, வெண்டை மிளகாய், சுண்டக்காய் போன்ற கரிசல் நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகளும் குட்டி பொம்மை, வாட்ச், மீசை, தாடி, நெக்லஸ் வளையல் போன்ற ஆபரணங்களும் பாடலுடன் பிசைந்து செய்து தருவார். இவை தவிர்த்து சில பொம்மை உருவங்களும் செய்வதுண்டு. இன்றைய நவீன வாழ்வில் மறைந்து கொண்டிருக்கும் இப்பொம்மைகள் தன்னை அழித்து குழந்தைகளிடம் பொம்மைகளின் பண்பாட்டினைப் பரப்பிய பொம்மைகள் எனலாம். இப்பொம்மைகளின் உரையாடல் எளியோரின் கனவுகளை எதார்த்தங்களை இனிப்பால் செய்யப்பட்ட உருவங்கள் வழி நம்மிடம் வந்தடைகிறது. இங்கு உண்பது கூட ஓர் பண்பாட்டு நிலையே. ஒற்றைக்காலில் நிற்கும் இப்பொம்மை உருவம், தன் உடலை பிய்த்துக் கொண்டு நிற்கும் கருணைமிக்க நிலை நம் பண்பாட்டின்  வேர்மிக்கது எனலாம். தன்னைத்தேடி வருபவர்களுக்கு ஒப்புக் கொடுக்கும் துறவு நிலை நாடகவெளிக்கு இடம் பெயர வேண்டும். ஒற்றை ஊதுகுழலுடன் கிராமம் கிராமமாக அலைந்த அப்பொம்மையாட்டி குழந்தைகளின் கனவுகளில் உலவிக் கொண்டிருக்கக்கூடும்.  எளிய மக்களின் குழந்தைகளின் தன் இருப்பில் நிறுத்தி உணவுப் பண்பாட்டை நிகழ்கால மரபை முன்னிறுத்தும் இப்பொம்மைகள் நாடகக் கலைஞர்களின் கைவசமாக வேண்டும்.
வேளாண் சமூகத்தின் பண்பாட்டு  அடையாளமாக கிராமத்து வயல்களில் விவசாயக் கரங்களால் குத்தி நிற்க வைக்கப்படும் பொம்மை சோளக்காட்டு பொம்மை. இதன் உடல் அறுவடை செய்த வைக்கோல் பிரிகளாலானது. பயிர் பச்சைகளுக்கு காத்துக் கருப்பு அண்டாமல் இருக்கவும், பறவைகளிடமிருந்து தானியங்களைக் காப்பாற்றவும் இப்பொம்மைகள் துணை நிற்கின்றன. மனித உருவிலிருக்கும் இப்பொம்மை ஆண், பெண் என இரு வேறுபட்டும் இருக்கும். பொம்மையின் வைக்கோல் மார்பகங்கள் ஆண், பெண் இனச் சேர்க்கையின் குறியீடாகிறது. இப்பொம்மைகளை வயல்களில் வைப்பதன் மூலம் அதிக விளைச்சலைத் தரக்கூடும் என்பது நம்பிக்கை. விவசாயிகள் அணிந்த உடைகளே இப்பொம்மைகளின் உடைகளாகின்றன.
நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை கிழக்கு இராமநாதபுர கிராமங்களில் இயற்கை எய்தோரின் ஈமச்சடங்குகளில் உடல் அடக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட நாளொன்றில் மரித்தவரின் சந்ததியர்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் அவரவருக்கான அளவுகளில் கலப்பை செய்து அடக்கம் செய்யப்பட்ட இடம் செல்வார்கள். அங்கு மரித்தவரின் எலும்புத் துண்டுகள் தோண்டி எடுக்கப்பட்டு உயிர் உருவங்களாக குத்தி வைக்கப்படும். மண்ணில் புதைந்திருந்த முன்னோர்களின் பல எலும்புகளும் உருவி எடுத்து நிற்க வைக்கப்படும். பின் அவற்றை சடங்கு செய்து வணங்கி அவ்விடத்தை  உழுது விதைத்து வயலாக்குவர். இது நாடகீயப் பண்பிலேயே நிகழும். பின் உரிய பருவத்தில் அறுவடை செய்துகொள்வர். அத்தான்யங்களை உண்பதால் மூதாதைகளும் பண்பாடும் தமக்குள் பரவி விடும் என்பது நம்பிக்கை. ஆதியில் எலும்பு ஒரு இசைக்கருவி. ஆதிக்கதை சொல்லிகளின் கதை ஆயுதமாக எலும்புகளே இருந்தது. பின் மிருக எலும்புகள் ஆபரணமாகியது. இச்சடங்கில் எலும்பு கடவுளுருவமாக பொம்மையின் வடிவமாக அடையாளம் காணப்படுகிறது. இவை நாடகநிலத்தில் நவீன வடிவம் பெறும்போது யுத்தங்களின் சரித்திரத்தில் காணாமல் போனோரின் எலும்புகள் எழுந்து வந்து கதைபோட்டு நடிக்கத் துவங்குமிடம் இதன் வழி ஜனனமாகும்.
கார்த்திகை மாதம் முழு இரவு நாளன்று நிகழும் இச்சடங்கு கோயில் பின்னணியில் அமைந்த ஊர்ப்பொது இடத்தில் கம்மந்தட்டை, சோளத்தட்டை, பனையோலை, வைக்கோல் மற்றும் தென்னை ஓலைகளால் ஆறடிக்கு குறையாமல் கூம்பு மற்றும் முக்கோணம் இவை இரண்டும் கலந்த வடிவில் உருவம் செய்து கார்த்திகை தீபம் கோயில்களில் ஏற்றியவுடன் அச்சுடரின் தீயெடுத்து வந்து சொக்கப்பனை உருவத்தில் இருக்கும் உருவத்தை பற்ற வைக்கிறார் பூசாரி. பெண்களின் குலவையொலி அதிர தீ பற்றி எரிகிறது. நெருப்பைச் சுற்றி ஆடுவதும் குதிப்பதும் தாண்டுவதும் ஓர் பழங்குடிச் சடங்கை நினைவூட்டும் விதத்தில் இது நிகழும். கண்ணேறு பட்டவர்கள் இந்நெருப்பில் உப்பினைப் போடுவார்கள். தீ எரிந்து முடிந்ததும் கரிக்குச்சிகள் சாம்பலைத் தூக்கி வந்து தத்தமது வயல்களில் குலவையிட்டு வீசி குச்சிகளை  நட்டு வைப்பர். பெண்களின் சடங்கின் புனிதக் குறியீடாய் சாம்பலை நாவினில் பூசி முனகுவர்.
தமிழகமெங்கும் நாடோடிகளாக அலைந்து திரியும் பழங்குடிகளான நரிக்குறவர்களே எளிய மக்களுக்கு நாகரீகங்களைப்  பரப்பியவர்கள் எனலாம். பாசி, ஊசி, கம்மல், கயிறு, வளையல், கொலுசு, சீப்பு, சோப்பு, கண்ணாடி, பவுடர் என நாகரீக அடையாளங்களை பொருட்களாய் வீதிவீதியாகக் கொண்டு சேர்த்தவர்கள். என் சிறு வயதில் என்னோடு சேர்ந்த பலரும் அவர்கள் மேல் வசீகரிக்கப்பட்டுக் கிடந்தோம். அவர்களது வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக தம் முன்னோர்கள் பயன்படுத்திய அழுக்குத் துணிகளையே வட்டமாகச் சுற்றிச் சுற்றி கூம்பலான வட்டவடிவில் சிறு மலைக்குன்றை நினைவூட்டும் விதத்தில்  சுற்றுவார்கள். மலைக்குன்று துணிகளில் நெற்றி உரசி மந்திரிப்பார்கள். இங்கு வயதாகி மரித்தோரின் உடைகள் அனைத்தும் அவர்களின் கடவுளுருவமாக மாறிவிடுகிறது. ஆண், பெண் எனப் பலரின் அழுக்குத் துணிகளும் இங்கு பொம்மை உருவமாகிவிடுகின்றன. இச்சடங்கில் அழுக்கு புனிதத்தின் குறியீடாவதால் யாசகர்களின் பரதேசி களின், பித்தநிலை கொண்டவர்களின் உடைகளைப் பண்பாட்டு உணர்வில் நின்று  புரிந்து கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். நரிப்பற்களுடன் எங்கள் பால்ய வீதிகளில் அலைந்த நரிக்குறவ தேவதைகளே எங்களுக்கு காதலின் துறவை கற்றுக் கொடுத்தவர்கள். தேவாங்குகளிடமிருந்து மந்திரிக்கப்பட்ட வார்த்தை களுடன் இன்றும் நாய்களின் குரைப்பொலி சூழ பழங்குடி ரேகைகளை நம்மிடம் கொடுத்துச் செல்ல மறைவாகவே  அவர்கள் தோன்றுகிறார்கள்.
தமிழக நாட்டுப் புற நிகழ்கலை கூத்து வகைகளில் பொம்மலாட்டம் தோற்பாவை நிழற்கூத்து முக்கிய இடத்தை வகிக்கின்றது. நகரங்களில் வசிப்பவர்களுக்கு  இக்கலை வடிவம் செய்தியாகவே போய்ச் சேர்ந்துள்ளது. தலைமுறை தலைமுறையாக கிராமங்களில் கைமாறி வருகிற, பண்பாட்டு களஞ்சியத்தின் ஒரு பகுதியாகவே இவற்றைக் கொள்ளலாம். புராண இதிகாச நாட்டுப்புறக் கதைகளை தம் உடல் வழி சுமந்து சென்ற இப்பாவைகள் அல்லது பொம்மைகள் பண்பாட்டின்  கூறுகளை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கொண்டு சென்ற கலை உயிரிகள்.  இக்கூத்தில் பல பொம்மைகள் இருப்பினும் பொம்மையாட்டி ஒருவரே அதனை இயக்கி அனைத்துப் பொம்மைகளுக்கும் அவரே பல் குரல்களைத் தருகிறார். இசையும் அவரே இசைப்பார். மிகப்பெரிய ஒளிரக்கூடிய   தோற்பொம்மை களுடன் கூடிய நிழற்கூத்துமரபு லாவோஸிலும் தாய்லாந்திலும் இருக்கின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஓரிசா ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தப்படுகின்றன. கேரளாவில் தோற்பாவை நிழற்கூத்து பகவதி கோயில் கூத்து மாடங்களில் கோயில் திருவிழாக்காலங்களில் மட்டும் நிகழ்த்தப்படுகிறது. இருபத்தி நான்கு அடி நீளக்கூத்து மாடத்தில் பின்னால் இருபத்தி நான்கு அடி நீண்ட மூங்கிலில் மின் விளக்குகளை வரிசையாகப் பொருத்தி அதன் வெளிச்சத்தில் பாவைகளின் நிழல்களைக் காட்டுகிறார்கள். கேரள ஸாகித்ய சரித்திரம் அங்கு ‘ஓலைப்பாவைக் கூத்து’ இருந்ததையும் விஸ்வ விஞ்ஞான கோஸம் முன் காலத்தில் கரும்பனை ஓலையில் பாவையுண்டாக்கி அதன் மூலம் கூத்து நடந்ததாகவும் பின்னால் மான் தோலிலும் மாறியதாக கூறப்படுகிறது.
சீனாவில் கிறிஸ்துவுக்கு முன்னராக ஷ்utவீ எனும் அரசன் தன் இறந்த காதலியின் நினைவுநாளில் அவளை நிழலுருவில் காட்டி, அது அவளுடைய ஆவி என்று கூறிய பொழுதிலேயே நிழற்கூத்தின் வரலாறு துவங்கிற்று என்கின்றனர். இதுபோல தம் முன்னோரின் ஆவி வடிவங்களாக காணுகின்ற மரபு சீனாவைப் போல சயாம், ஜாவா, இந்தோனேஷியா போன்ற நாடு களிலும் காணப்படுகின்றன. ஜாவாவில் நிழலுருவங்கள் பயபக்தியுடன் கையாளப்படுகின்றன. நிழற்கூத்து பொழுதுபோக்கு என்ற நிலையைத் தாண்டி தம் முன்னோர்களின் மதிப்புமிக்க சடங்காக கருதப்படு கின்றன. இந்திய கர்நாடகாவில் பொம்மை யாட்டிகளுக்கு நோய் வர நேர்ந்தால் பாவைகள் வைத்துள்ள பெட்டியை தூங்குகையில் தன் அருகாமையில் வைத்திருந்தால் நோய் குணமாகும் என்று நம்பப்படுகின்றது. மேலும் நோய் மக்களுக்கு வராமல் இருக்க பொம்மையாட்டிகளுக்கு தோல்களை அடிக்கடி மக்கள் இனாமாகத் தரும் வழக்கமும் இருந்திருக்கிறது. அப்பாவைகளில் கொடுத்தவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.
சங்க இலக்கியங்களில் ‘நெய்தற்பரப்பிற் பாவை கிடப்பி’ என்பதற்கு உரை  எழுதுகையில் பாவையை மகவாகக் கொண்டு விளையாடுதல் மகளிர் வழக்கம் என்றும்  ‘‘வெறிகமழ் துனுமுடி தயங்க நல்வினைப் பொறியழி பாவையின் கலங்கி” என்று நற்றிணையிலும் சொல்லப்படுகிறது. ‘‘நாட்டமென்றே யிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மாலாட்டமென்றேயிரு” என்று பட்டினத்தார் சித்தர்பாடல்களில் குறிப்பிடுகிறார். கூளப்ப நாயக்கன் காதல் விரலி விடு தூதில் …. தன் மகள் கற்பூரவல்லிக்குத் தொழில் முறைகளைச் சொல்லித் தருகையில் ‘‘பொம்மல் ஆட்டுவிக்கும் தோலுறுப் போல் ஆகினாள்” என்று கூறுவதாக உள்ளது.
தோல்பாவை கலைஞர்களிடம் சில பாவைகளை இரவலாகப் பெற்று நான்காம் வகுப்புக் குழந்தைகளை சந்தித்துக் கதை போட்டபோது சிகரெட் அட்டைகளில் மறுநாள் சிலர் அதேபோன்ற  பொம்மைகள் செய்து கொண்டு வந்திருந்தனர். சில குழந்தைகள் காகிதங் களிலும் துணிகளிலும் செய்திருந்தனர். பலர் பிளாஸ்டிக் பொம்மைகளையும் சிலர் மரப்பொம்மைகளும் கொண்டு வந்து பொம்மைகளின் கோட்டை எனும் நாடகத்தை நிகழ்த்தினர். பலநாட்கள் தொடர்ந்து  பின்னரே முழு நாடக வடிவம் பெற்றன.
நண்பனொருவனின் காதலின் இறுதிநாள் சந்திப்பில் சிற்பக்கூடம் நுழைந்து இருவரும் பேசும் தைரியமற்று உடல் கூசும் படபடப்பில் சிற்பத்தின் முகம் பார்த்து அழுது கண்ணீரை கல்முகத்தில் பூசினார்களாம். பொம்மைகளின் மௌனக் காத்திருப்பிலேயே காதலின் வலியன்பை உணர்ந்து கொண்டதாகக் கூறினான். சிற்பக் கூடாரத்திலிருந்து காதலின் ரேகைகளை பொம்மைகளின் உடலில் பூசி எடுத்து வந்ததால் மட்டுமே அசைவற்று காதலைப் பரவவிடுகிற சிற்பக்காரனாக தான் மாறியிருப்பதாகக் கூறினான்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது செண்பகவள்ளி எனும்  வண்ணார் வீட்டுத் தோழி விதவிதமான பழைய துணிகளில் கழுதைப்பொம்மைகள் செய்து கொண்டு வருவாள். கழுதைகளின் கண்களை வாகைப்பூவால்  ஒட்ட வைத்திருப்பாள். தினம் கொண்டு வரும் கழுதைப் பொம்மையின் கண்கள் மட்டும் விதவிதமான வர்ணங்களால் மாறிக் கொண்டிருக்கும். சில நாட்கள் பள்ளிக்கே வராத அவளைத் தேடி சக தோழிகளோடு நானும் அவள் வீட்டிற்குப் போயிருந்தேன். அழுக்கு மூட்டைமேல் முற்றத்தில் பெரிய பொம்மையை அணைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் பள்ளி வராத காரணத்தை பாட்டியிடம் கேட்டபோது சில வாரங்களுக்கு முன் மரித்துப் போன கழுதைக்குட்டியின் துயரம்தான் எனச் சொன்னார். அவள் பாட்டி செய்து கொடுத்திருந்த பெரிய அழுக்குத் துணியால் செய்யப்பட்ட கழுதைப் பொம்மையினை தாய் குழந்தையினை அணைத்து தூங்குவதுபோலவே தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கனவின்  விந்தை வணங்கி எழுப்பாமலேயே நாங்கள் கிளம்பிவிட்டோம்.
பஞ்சகல்யாணி என அழைக்கப்படும் அரக்கு நிறக் கழுதை என் பால்ய நிலமெங்கும் புழுதி பரப்பிய படி  ஓடிக் கொண்டே இருக்கிறது. குட்டிக்கழுதைகளின் அழகில் ஏங்கித் திரிந்த நண்பர்கள் பலருடன் நான் அலைந்திருந்தேன். சொரி சிரங்கு பிடித்த பலருக்கும் குணமாக அன்று காய்ந்த கழுதை விட்டைகள் தேய்ப்பது வழக்கமாக இருந்தது. செண்பகவள்ளி தன் அத்தையொருவரைப் பற்றி சொன்னபோது தீரா மழை நாளொன்றில் தாய்க்கழுதையொன்று பிரசவித்த சில நாட்களில் இறந்துவிட குட்டியை  தன் குழந்தையாக நினைத்து தன் முலைப்பால் கொடுத்து  போற்றிய என் அத்தை என்றும் அவளே நோய்வாய்ப்பட்ட கழுதை களுக்கு சாம்பல் பூசி மந்திரப் பாடல்பாடும் தாதி என்பதையும் பின்னாளில் நான் புரிந்து கொண்டேன். மான்களுக்கு தன் முலைப் பாலூட்டும் பழங்குடிப் பெண்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் எனும் புத்தகத்தில் அவரது 30 களில் நடந்த காட்சி ஒன்றினைப் பதிவு செய்திருப்பார். மதுரை பழங்கா நத்தம் வயலில் தனித்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றிற்கு பெண்ணொருத்தி தனது முலைப்பால் கொடுத்துக் கொண்டிருப்பதனையும் அதைக் கண்ட மதுரகவி தன் கதர் சால்வையினை மரியாதை நிமித்தமாக அவள் அருகில் விரித்து வணங்கிச் சென்ற காட்சியினைப் பதிவு செய்துள்ளார்.
பாஸ்கரதாஸின் மாணவி அமரர் கமலவேணி தம்முன்னோர்கள் கொடுத்துப் போன பொம்மைகளை கலைவாழ்வின் அதி உயிர்கள் என்று கருதி அதன் கதைகளைச் சொன்னபோது தீ விபத்தொன்றில் தனது பெடல் ஆர்மோனியம் எரிந்து போனதாகவும் அதன் ஆன்ம உயிர்ப்புக்காக தினம் பொம்மைகளே பாடுவதாகவும் அவற்றின் தேகங்களை உரசி கண்களில்  பூசிக்கொள்வதே தினசரியின் துவக்கமென்றார். அன்றைய நாடக நடிகர் நடிகைகளிடம் மரப்பாச்சி பொம்மைகள் வைத்திருப்பதாகவும் தங்களுக்குள் அவைகள் நினைவுப் பரிசுகளாக பரிமாறிக் கொள்ளப்படும் என்றும் நினைவுபடுத்தினார்.
ஒருமுறை கிராமக் கொடை விழா முடிந்த நாளில் பள்ளி வந்த குழந்தைகள் என் கதை வகுப்ப¤ல் உடல் உறுப்புக்களை களிமண்ணில் செய்து பொம்மைகளைத் தூக்கி வந்திருந்தனர். மாரியம்மன் மற்றும் அம்மன் கோயில் வழிபாட்டில் மக்கள் தமக்கோ தம் குழந்தை களுக்கோ உடல் குறைவோ நெடுநாள் நோயோ ஏற்பட்டால் பலரும் நேர்ச்சையாக அம்மனுக்கு கை, கால், முகம், பாதம் எனப் பல உறுப்புக்களை சிறு பொம்மை வடிவமாகச் செய்து காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு.
இப்பொம்மைகள் மக்களின் வாழ்வோடு இணைந்த பொம்மைகளின் பண்பாடு எனலாம். அம்மனின் தல விருட்சமான வேம்பு மரத்தில் பொம்மைகள் உறங்குவதற்கென்றே குழந்தைப் பேற்றின் அடையாளமாய் நேர்ச்சையாய் கிராமங்கள் தோறும் பொம்மைத் தொப்பிகள் ஆடிக் கொண்டிருக்கும். பொம்மைகளின் ராணி என்ற தலைப்பில் 4ஆம் வகுப்பினர் பலரும் விரும்பிக் கதை எழுதியதில் மேகவர்ஷா எனும் காரியாபட்டி மாணவி பொம்மைகளின்  உலகில் அழுக்கேறி  தனித்துவிடப் பட்ட பொம்மைகள் பலவும் கூடி தங்கள் ராணிக்காக காத்திருக்க அங்கு சென்ற ராணி அழுக்கேறிய அவை களை தம் கண்ணீரால் துடைத்தெடுத்து குழந்தைகளிடம் அழைத்துச் செல்வதை நீண்டகதையாக எழுதி என் கோமாளி வேஷத்திற்கு பரிசாகத்தந்தாள். உலகின் உன்னதப் பரிசு என்றே அவற்றைச் சொல்வேன். எனது பித்த நிலத்தின் பொம்மைகள்  நாடகத்திற்காக அம்மா அக்காவின் கடிதங்களால் கிழித்துச் செய்யப்பட்ட முகமூடி ஒன்றுடன் நான் ஒத்திகையால் நடித்தபோது பெயர் தெரியா யுவதி ஒருத்தி பாசிகளால் பின்னப்பட்ட பொம்மையொன்றை பரிசாகக் கொடுத்தபோது பொம்மையின் தேகம் கண்ணீரின் உப்பில் நனைந் திருந்தது. பின்னாளிலேயே யுவதி திபெத்தியப் பெண் என்று அறிந்து கொண்டேன். மொழிதாண்டி அவளது உரையாடல் என் நாடகநிலமெங்கும் உறவுக் கொடிகளால் படர்ந்தலைகிறது. தானியக்குதிரில் தவசங்களுக்குத் துணையாக அம்மா வைத்துப்போன மரப்பாச்சியைத் தூக்கி நடிகனின் உடலில் நின்று காத்திருக்கிறேன்.

Related posts