You are here
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் – 18

பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம்

என். குணசேகரன்

அறிவுத்துறை வளர்ச்சியை உயர்ந்த சிகரங்களை நோக்கிக் கொண்டு சென்ற பெருமை மார்க்சியத்திற்கே உரியது. தத்துவம், சமூகவியல், பொருளியல், வரலாற்றியல் அனைத்திலும் வளமிக்க சிந்தனைகள், மகத்துவமிக்க பங்களிப்புகள், எல்லையற்று விரிவடைந்து வரும் விவாதப்பரப்பு என மார்க்சியம் இடையறாது இயங்கி வருகின்றது. இவ்வாறு விண்ணைத்தாண்டி வளரச் செய்திடும் பணியை அறிவுத்துறையில் செயல்படும் அறிவாளர்களும், புரட்சி இலட்சியத்துடன் களப்பணி ஆற்றுவோரும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முக்கியமானவர் அமெரிக்க மார்க்சியரான பால் ஸ்வீசி.
ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பதவியையும், எதிர்கால வாய்ப்புக்களையும் உதறிவிட்டு, 1949ம் ஆண்டு மற்றொரு மார்க்சிய அறிஞரான லியொ ஹூயுபெர்மன் உடன் சேர்ந்து ‘மன்த்லி ரிவ்யூ’ துவங்கினார். தற்கால முதலாளித்துவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து அயராது எழுதி வந்தவர்  பால் ஸ்வீசி.  உலக முதலாளித்துவத்தின் குரலான வால்ஸ்ட்ரீட் (ஜிலீமீ கீணீறீறீ ஷிtக்ஷீமீமீt யிஷீuக்ஷீஸீணீறீ) பத்திரிகை 1972ம் ஆண்டில் “முற்போக்கு பொருளாதார பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் பால் ஸ்வீசி” எனக் குறிப்பிட்டது.
மன்த்லி ரிவ்யூ ஆசிரியராக அவர் பணியாற்றிய முறையும் வித்தியாசமானது. இன்று, மார்க்சிய, இடதுசாரி ஊடக உலகில் பணியாற்றுவோர் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அவரது ஆசிரியப்பணி அமைந்தது.
கட்டுரைகள் எழுதியது மட்டுமல்லாது, ஏராளமான கடிதப்பரிமாற்றங்களை அவர் மேற்கொள்வார். ஒரு இளைஞராக, சிறிதளவு முற்போக்கு எண்ணங்கொண்டவராக இருந்தாலும், முதலாளித்துவ வேர்களைக் கண்டறிய அவர் முனைப்புக் காட்டினால்,  பால் ஸ்வீசி அவருக்கு கடிதம், கட்டுரைகள் மூலம் உதவி செய்வார்.  மன்த்லி ரிவ்யூ பத்திரிகையை இடதுசாரி, மார்க்சிய கல்விக்கான ஊடகமாகவும் அவர் பயன்படுத்தினார்.  இதனால் ஏராளமான மார்க்சிய இளம் ஆராய்ச்சியாளர்களும், களப்பணியாளர்களும் அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் உருவானார்கள்.
“ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம்”  என்ற சொற்றொடர்கள் உணர்த்தும் கருத்தாக்கம் முக்கியமானது. இது பற்றி சி.ரைட் மில்ஸ்
(C.Wright Mills) உடன் ஒரு ஆழமான விவாதத்தில் ஸ்வீசி ஈடுபட்டார். இந்த விவாதத்தின் ஊடாக அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் தன்மைகளை பால்ஸ்வீசி துல்லியமாக வரையறை செய்தார்.
அமெரிக்க சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவது, ‘ஆளும் வர்க்கம்’ என்பதையும், அது உற்பத்தி இயக்கத்தின் சொத்து, வருமானம், இலாபம் அனைத்திலும் ஏகபோகக்கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது என்பதையும் பால் ஸ்வீசி அழுத்தமாக வலியுறுத்தி வந்தார். “அமெரிக்க முறைமையைப் பற்றிய சிந்தனைகள்” என்ற கட்டுரையில்அமெரிக்க ராணுவ மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதாரம், வர்க்க சுரண்டல் அனைத்திலும் ஆளும் வர்க்கம் நிர்ணயிக்கிற பங்கினை வகிக்கிற நிலையை விளக்கினார். ஆட்சியில் இருக்கும் கட்சிகளையும், நபர்களையும் விமர்சிக்கிற போது, சமூகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்  “ஆளும் வர்க்கம்” என்ற அடிப்படையை மார்க்சிய இயக்கத்தைச் சார்ந்தோர் மறந்து விடக்கூடாது என்பதற்கு பால் ஸ்வீசியின் சிந்தனை வழிகாட்டுகிறது. இந்த வகையில் அவர் ஏகபோக மூலதனம், அரசியல், ராணுவ வல்லமை, பொருளாதாரத்துறை எனப் பல துறைகளில் மேலாதிக்கம் செலுத்தக்கூடியது என்பதை விளக்கினார்.   இவ்வாறான ஆய்வுகள் மூலம்  அவர்,  மார்க்சியத்தை மேலும் வளப்படுத்தியதோடு,  மார்க்சிய சமூகவியலுக்கும் அவர் பங்களிப்பு செய்துள்ளார்.
அவரது ‘முதலாளித்துவ வளர்ச்சியின் தத்துவம்’ என்ற நூல் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள உதவிடுகிற ஒரு வழிகாட்டி. அவரது பல கருத்துக்கள் கடுமையான விவாத்தை ஏற்படுத்தியது. இலாப விகிதத்தின் வீழ்ச்சி பற்றிய அவரது கருத்தின் மூலம் மார்க்சியத்திலிருந்து பால் ஸ்வீசி நழுவி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
உபரி மதிப்பு, நிலப்பிரபுத்துவம், ஐரோப்பிய முதலாளித்துவம் உருவான வரலாறு ஆகியனவற்றில் பால் ஸ்வீசியின் கருத்துக்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இன்றுவரை அவை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன.  அவரது உற்ற நண்பரும்,  “ஏகபோக மூலதனம்” நூலின் இணை ஆசிரியருமான பால்.பேரான் (றிணீuறீ தீணீக்ஷீணீஸீ)அறிவு ஜீவிகளைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் உண்மையான அறிவுஜீவிக்கு,  இரண்டு குணங்கள் தேவை என்றார்.  உண்மைகளை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து சொல்லும் துணிவு,  சமூக மாற்று இலட்சியத்தில் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகிய இரண்டும் ஒரு அறிவுஜீவிக்கு அவசியமானவை என்றார். இந்தப் பாரம்பரியத் துடன்தான் பால் ஸ்வீசி 1949-ல் நிறுவிய மன்த்லி ரிவ்யூ இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
முதல் இதழில் “ஏன் சோசலிசம்” என்ற சரித்திரப் புகழ் பெற்ற கட்டுரையை எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிலிருந்து துவங்கி இன்று ஆசிரியராக இருக்கும் ஜான் பெல்லாமி போர்ஸ்டர் வரை துணிவும், இலட்சிய உறுதியும் கொண்ட ஏராளமான மார்க்சிய அறிவுஜீவிகளை மன்த்லி ரிவ்யூ உருவாக்கியுள்ளது.
1950-ஆம் ஆண்டுகளில் மெக்கார்த்தியிசம் எனும் கம்யூனிச எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒவ்வொரு சிறு அசைவையும், பொருளாதார இயக்கக்கூறுகளையும் துணிவுடன், உயர்ந்த அறிவியல் தரத்துடனான கட்டுரைகளை மன்த்லி ரிவ்யூ வெளியிட்டது. ஒரு கட்டத்தில் பால்ஸ்வீசி சிறைக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டது.
உலகத் தொழிலாளர் இயக்கங்களுக்கும் உலகக் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்களுக்கும் ஒரு கையேடு போன்று மன்த்லி ரிவ்யூ செயல்படுவதை பால்ஸ்வீசி விரும்பினார். இலத்தீன் அமெரிக்காவில் போராடும் இயக்கங்களுக்கு பெரும் உத்வேகத்தை மன்த்லி ரிவ்யூ அளித்தது.
சிலியில் ஆலெண்டே தலைமையில் சோசலிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபோது அந்த மாற்றத்தை பால் ஸீவீசி அகமகிழ்ந்து வரவேற்றார். ஆலெண்டே பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டார்.
‘ராணுவ வல்லமையை வளர்த்துக் கொண்டால்தான் நீங்கள் நீடிக்க முடியும்’ என்று ஆலெண்டே அரசுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அந்தக் குறைபாடு நீடித்ததால் அமெரிக்க அரசு ஆலெண்டே ஆட்சியைக் கவிழ்த்து, ஆலெண்டேவையும் படுகொலை செய்தது.
கியூபாவிற்கும் ஏராளமான ஆலோசனையையும், அறிவுரைகளையும் பால் ஸ்வீசி தொடர்ந்து அளித்து வந்தார். அமெரிக்காவில் வசித்துக் கொண்டு எவ்வித அச்சமுமின்றி உறுதியான ஆதரவினை காஸ்ட்ரோவிற்கு அவர் அளித்து வந்தார்.
வாழ்நாள் முழுவதும் சோசலிச இலட்சியத்திற்காக வாழ்ந்த மார்கசிய மேதையான பால் ஸ்வீசி தனது  இறுதி  நாட்களில் முதலாளித்துவத்தின் உலகமய கட்டத்தைப் பற்றி ஆழமான பல சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார். இதையொட்டி 1994ம் ஆண்டில் வெளிவந்த  “நிதி மூலதனத்தின் வெற்றி” என்ற கட்டுரை முக்கியமானது. ஏகபோக மூலதனத்தின் வளர்ச்சிப் போக்கில்,  நிதிமூலதனம் மேலாதிக்கம் செலுத்தும் நிலை வந்துள்ளதை அவர் விளக்கினார்.  மார்க்சிய இயக்கவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கம், முதலாளித்துவ  எதிர்ப்புப் போராட்டங்களை சரியான திசைவழியில் முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது.  தனியார்மயம், நலத்திட்டங்களை வெட்டுவது,  இயற்கை வளங்களை சூறையாட அனுமதிப்பது, அனைத்து மட்டத்திலும் ஊழல் என்ற பலவகையான அரசின் செயல்பாடுகளில் நிதிமூலதன மேலாதிக்கம் அடிப்படையாக இருப்பதைப் புரிந்துகொள்ள அவரது சிந்தனைகள் உதவுகின்றன.
உலகமயம் என்பதை முதலாளித்துவத்தை வளர்க்கப் பயன்படுத்தப்படும் நடைமுறை என்று பார்ப்பது தவறு. முதலாளித்துவத்தை அடியோடு எதிர்க்காமல்  நவீன தாராளமயத்தை மட்டும் எதிர்க்கும் பலருக்கும் இந்தப்புரிதல் உள்ளது.
“உலகமயம் என்பது முதலாளித்துவத்திற்குள் உள்ளடங்கிய இலக்கு விசை; அதுவே   மூலதனக்குவியல்” என்று ஸ்வீசி எழுதினார்.
கருத்து மாறுபாடுகள் பல இருந்த போதிலும் நவீன முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கும், ஏகபோக மூலதனக் குவியலை அடிப்படையாகக் கொண்ட இன்றைய முதலாளித்துவத்தை அகற்றி சோசலிசம் காண அவரது எழுத்துக்கள் தொடர்ந்து வழிகாட்டுகின்றன. ஒரு மார்க்சிய அறிவு ஜீவி,  தனது அறிவுத்துறைப் பணியையும், களப்பணியையும் இணைத்துச்  செய்திட வேண்டுமென்ற பாடத்தை பால்ஸ்வீசி நமக்கு கற்றுத்தந்துள்ளார்.

Related posts

One thought on “விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் – 18

  1. […] பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கா… […]

Comments are closed.