You are here

நமஸ்தே திலீப்குமார்!

கீரனூர் ஜாகிர்ராஜா

இவ்வளவு காலமாக திலீப்குமாரை எழுத முடியாமல் போய்விட்டதற்காக இந்த சந்தர்ப்பத்தில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். 90களில் எழுத வந்த எல்லோரையும்போல நானும் அவருடைய ‘கடிதம்Õ கதையைத் தான் முதன் முதலாக வாசித்தேன். தொடக்கத்தில் அவருடைய பெயரைக் கேள்விப்பட்டபோது இந்தி நடிகர் திலீப்குமார்தான் என் நினைவில் வந்து நீங்கினார். கூடவே சாய்ரா பானுவும். “எவ்வளவுக்கு சினிமா மோகமென அறிந்து கொள்வீராக..” அப்போது ‘சாய்ரா பானுவை உங்களுக்குத் தெரியாது’ என்று ஒரு சிறுகதை கூட எழுத முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். இந்த சாய்ராபானு பால்யத்தில் என்னை அலைக்கழித்த 17 பெண்களில் ஒருத்தி. என் உறவின் முறையும்கூட. முதலில் குறிப்பிட்ட சாய்ராபானு திலீப்குமாரின் காதல் மனைவி, நடிகை, அவர்கள் நட்சத்திரத் தம்பதிகள். நடிகர் திலீப்குமாருக்கு இப்போது வயது 91. சமீபத்தில் அவர் இறந்துவிட்டதாகக் கிளப்பிவிடப்பட்ட வதந்திக்கு ‘‘இல்லை. யூசுப் சாஹெப் நலமாக இருக்கிறார்’’ என்று அமிதாப்ஜி தனது ட்விட்டரில் பதிந்திருக்கிறாராம். அந்த திலீப்குமார் என் தாத்தாவுக்குப் பிடித்த நடிகர். இந்த திலீப்குமார் எனக்குப் பிடித்த சிறுகதைக்காரர்.
ஆர்.பி.பாஸ்கரனின் நேர்த்தியான பூனை ஓவிய அட்டையுடன் திலீப்குமாரின் ‘கடவு’ தொகுதி என் கைக்கு வாய்த்தபோது ஒரு புதையல் கிடைத்ததுபோல்  அதைக் கொண்டாடி மகிழ்ந்தேன். வழக்கம்போலவே தஞ்சாவூர் பயணத்தின்போதுதான் அதை வாசித்தேன்.  பெருங்களத்தூரிலிருந்து பஸ் ஏறி, வண்டி சேத்தியாதோப்பில் நின்றபோது அநேகமாக எல்லாக் கதைகளையும் வாசித்து முடித்திருந்தேன். கானல், கடிதம், நிகழ மறுத்த அற்புதம், மனம் எனும் தோணி பற்றி போன்ற சில கதைகளை ஏற்கெனவே இதழ்களில் உதிரி உதிரியாக வாசித்திருந்தேன். ஆனாலும் மறுவாசிப்பில் அவை என்னை அயர்ச்சிக்குள்ளாக்காமல், புதிய தரிசனங்களை அள்ளி வழங்கிக் கொண்டேயிருந்தது. 7 மணி நேரத்திற்கும் அதிகமான களைப்பூட்டும் பஸ் பிரயாணத்தை அன்றைக்கு திலீப்குமாரால் உன்னதமான அனுபவமாக மாற்றிக் காட்ட முடிந்தது. இது ஒரு பெரிய வித்தைதான். இந்த வித்தைக்கார கலைஞர்கள் சிறுகதையாளர்கள் தமிழுக்கு கிடைத்தது ஒரு பாக்கியம்தான். தமிழ் வாங்கி வந்த வரம்தான்.
கடந்து செல்லத் துடிக்கும் இந்த 2014ஆம் ஆண்டு, நிறைய சிறுகதைகளை வாசிக்கவும், அவற்றைக் குறித்து எழுதவும் பேசவும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. ஜெயமோகனின் வெண்கடல், எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன். அ. வெண்ணிலாவின் பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும், திலீப்குமாரின் கடவு, இப்படிச் சில. சமீபத்தில் எழுத்தாளர் கோணங்கியை மதுரைக்கு அடுத்த சமணமலையில் சந்தித்து விரிவானதொரு நேர்காணலைச் செய்ய முடிந்தது. அதற்காக அவருடைய ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ தொகுப்பைப் புரட்டிப் பார்கவும், சில கதைகளை மீண்டும் படிக்கவும் செய்தேன்.
நான் கொஞ்சமாக சிறுகதைகள் எழுதுகிறவன். நிறைய சிறுகதைகளை வாசிக்கிறவன். பல தடவை பத்திரிகைகள் கேட்ட பொழுதெல்லாம், என்னால் உடனடியாக ஒரு சிறுகதையை எழுதி அனுப்ப இயலாமல் போயிருக்கிறது. ஆனால் மனதில் எப்போதும் கதைகள் நதிபோல சலசலத்து ஓடிக் கொண்டுதானிருக்கும். 80க்கும் மேற்பட்ட சிறுகதைத் தலைப்புகளை டைரியில் எழுதி வைத்துக்கொண்டு அதைத் தாழ்வாரக் கிழவி சுருக்குப்பையைத் தடவித்தடவிப் பார்த்துக்கொள்கிற மாதிரி பார்த்துக்கொள்கிறேன்.  80 தலைப்புகளுக்கும் நிஜமாகவே கதைகள் என்னிடம் இருக்கின்றனதான்.  ஆனால் அவை புற்றில் உறைந்த பாம்புகளாகவே இருக்கின்றன. வெளிக்கிளம்ப யாராவது முட்டையோ,  பாலோ வைக்கவேண்டுமோ என்னவோ.
சிறுகதைகள் வாழ்வின் ஏதோ ஒரு கீற்றை நமக்கு சுவைக்கத் தருகின்றன. நாவல், வாழ்வின் அகண்ட பிரதேசத்தை  அதன்  கரிப்புடனும், கசப்புகளுடனும் நமக்கு தரிசிக்கத்  தருகிறது என்று கொண்டாலும், வாசித்து முடித்த பல சிறுகதைகளிலிருந்து என்னால் பல நாவல்களை விரித்துப் பார்க்க முடிந்திருக்கிறது. என்றால் எத்தனை  நாவல்கள் இன்னும் எழுதப்படாமலேயே இருக்கின்றன.
‘கடவு’ கதையில் வரும் கங்குப் பாட்டியை திலீப்குமாரால் ஆயிரம் பக்கங்களுக்கு நாவலாக எழுதிவிட முடியும். அவள்தான் எத்தனைக்குப் பூரணமான மனுஷி. தமிழ்ச் சிறுகதைகளில் இப்படியொரு பேரனுபவக் கிழவியைச் சந்தித்து வெகுநாட்களாயிற்று.  அவள் தன் மரணத்தை ஒவ்வொரு முறையும் ஒத்திப் போட்டபடியே இருப்பது ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் வசிப்பவர்களுக்கு வேண்டுமானால் சலிப்பூட்டுகிற விஷயமாகப் படலாம். ஆனால் மரணத்திற்கும் அவளுக்குமான அந்த இடைவெளி நீடித்தபடியே இருப்பதில் ஒரு சூட்சுமம் ஒளிந்து கிடக்கிறது. கோணங்கி தன் உரையாடலில் சொன்னார். ‘‘மூதாதைகளின் சாவு அத்தனை சுலபமாக நிகழ்ந்துவிடக்கூடாது. எனக்கு அந்தக் கிழவியின்  குரல்வளை வேண்டும்ÕÕ
கங்குப்பாட்டி தன் இளமையில் திடீரென்று  காணாமல் போய் பல வருஷங்களுக்குப் பிறகு எங்கோ பம்பாயின் வீதிகளில் கர்ப்பிணியாய் அலைந்தபோது, கருக்கலைப்பு செய்து மீண்டும் அக்ரஹாரத்திற்கு அழைத்து வரப்படுகிறாள். நீண்ட நாட்கள் பேசாமல்  கிடந்து ஒரு நாள் பேசத் தொடங்கி பேசு பேசு என்று பேசுகிறாள் அக்ரஹாரப் பெண்களுக்கு கதை சொன்னாள். பாட்டுப் பாடினாள். விடுகதை போட்டாள். மருதாணி இட்டு விட்டாள். மயில்படம் வரைய, ஊறுகாய் போட, சொல்லித் தந்து அவர்கள் எல்லோரையும் ஒரே வாரத்தில் அரவணைத்துக் கொண்டாள். நம்ம ஊர் மாத்ரு பூதம் போல கூடுவிட்டுக்கூடு பாய்ந்து அவர்களுக்கான பல ‘பலான’ சந்தேகங்களை நிவர்த்தி செய்தாள். ஆணுறுப்பை ‘வஸ்து’ என்றும், பெண்ணுருப்பை ‘கபில வஸ்து’ என்றும் சங்கேத மொழியால் விளித்தாள். ஒருநாள் அப்பெண்களில் ஒருத்தி ஓடிவந்து பாட்டியிடம் சொல்கிறாள். ‘‘என் மாமியார் உன்னைக் கண்டபடி திட்டுகிறாள் பாட்டி. வண்டை வண்டையாகப் பேசும் துக்கிரி முண்டை. அவள் உடம்பும் அழுக்கு மனசும் அழுக்கு…’’ பாட்டி அதற்கு பதில் சொல்கிறாள். ‘‘உன் மாமியார் சொன்னால் சரியாகத்தானிருக்கும். என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவிலிருக்கும்  எல்லா ஜாதி நாய்களும் என்னை துவம்சம் செய்திருக்கிறார்கள். நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து என் உறுப்பிலும், ஆசனவாயிலும் மாறி மாறிக் குறிகள் நுழைந்து கொண்டேயிருக்கும். மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து… இந்தக் கஷ்டமெல்லாம், அக்ரஹாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவையைச் சுற்றிக் கொண்டு, புருஷனுக்குக்கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி புரியும் சொல். அவள் கிடக்க¤றாள் விடு..’’ இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.  இந்த மட்டிலும் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் கங்குப் பாட்டியை வாசகர்கள் அவசியம் சந்திக்க வேண்டும். அது கடமை.
‘கானல்’ வார்த்தைகளால் உணர்த்திவிட முடியாத ஒரு அவஸ்தையைப் பேசும் கதை. புணர்ச்சியில் திருப்தியுறாத பெண்ணையும், அதனாலேயே குற்ற உணர்வில் தவிக்கும் ஆணையும் நம்முடைய கதைக்காரர்கள் இத்தனைப் பரந்த வெளியில் எங்காவது ஒரு மூலையிலேனும் சித்தரித்திருக்கிறார்களா என்ன? திலீப்குமார் அதைச் செய்திருக்கிறார். அந்த இருவருமே கணவன் மனைவியல்ல. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் துடித்தவர்கள். திட்டம் தோல்வியில் முடிகிறது. எப்போதும் போல, அதற்கு ஆண் பொறுப்பாளியாகிறான். திலீப்குமார் ஒரு கட்டத்தில் அவர்களை உரையாட வைக்கிறார். இயலாமையின் குரலில் ஆண் பேசிக் கொண்டே செல்கிறான். பெண்ணோ, ஒருவித அலட்சிய மௌனத்தையே பதிலாகச் சிந்துகிறாள். கடைசியில் அவன் சொல்கிறான். ‘‘நாம் இன்று சந்தித்திருக்கவே கூடாது.’’ அவள் சொல்கிறாள் ‘‘நாம் என்றுமே சந்தித்திருக்கக்கூடாது.’’
துளியளவும் விரசமில்லாமல் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இதையே சிலர் எழுதியிருந்தால் ‘ஒரு பாடு குறிகளை’ மார்புகளை முனங்கலை வீச்சத்தை வரைந்து தள்ளியிருப்பார்கள்.  திலீப் ஒரு தேர்ந்த கதைக்காரர் என்பதை தொகுப்பின் இதுபோன்ற சில கதைகள் உறுதிப்படுத்துகின்றன.
‘கடிதம்Õ நுட்பம் கூடிய கதை. திலீப் 70களின் இறுதியிலிருந்து எழுதி வருகிறார். அந்தக் காலக் கணையாழி திரட்டுக்களைப் புரட்டுகிறவர்களுக்கு அவர் அடிக்கடி தட்டுப்படுவார். ஆனால் ‘கடிதம்Õ இந்தியா டுடேவில் பிரசுரமான கதை. (ஏனோ இந்தியா டுடே இப்போதெல்லாம் தன்னுடைய இலக்கியச் சேவையை நிறுத்திக் கொண்டது. புதிய பார்வையும் ‘புதிய’ பாதையைத் தேர்ந்து கொண்டு விட்டது. சுபமங்களா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வந்த இதழ் என¢று அதைச் சொன்னவர்கள் திகைத்துப் போயிருக் கிறார்கள்.)
சவுக்கார்பேட்டை வாசியாகிய மன்மோகன்தாஸ் துவாரகா தாஸ் பணக்காராகிய கண்ஷியாம்ஜிக்கு எழுதுகிற, அல்லது எழுத வைக்கிற கடிதத்தில், தன் துயரை மட்டுமல்ல தன் சமூகத்தின் அவலங்களையும் சேர்த்து ஒப்பிக்கிறார். திலீப் ஒவ்வொரு கதையிலும் ஒரு உத்தியைப் பிரயோகிப்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். இந்தக் கதையில் உத்தியாகப் பயன்படுவது கடிதம். இன்னொரு அணுகுமுறை கூரிய அங்கதம். துருத்திக் கொண்டிருக்காமல் அங்கதத்தை கதைகளில் பொருத்தமாகக் கையாளும் முறை திலீப்பின் திறமை. எந்தெந்தக் கதைக்கு  எவ்வளவு என்று அதற்கொரு கணக்கும் வைத்திருப்பார் போல. கங்குப் பாட்டியைச் சொல்லும் கடவு கதையில் தொடக்கம் முதலே ஹாஸ்யம் பொங்கி வழிகிறது. கானலில் கறாரான தன்மை. பகடி துளியும் வெளிப்படுவதில்லை. இயலாமையும், குற்ற உணர்வும் கூடிய அந்தக் கதையில் அவர் கிச்சுக்கிச்சு மூட்டியிருந்தாலும் நம்மால் சிரித்திருக்க முடியாது. கடிதமும்கூட இயலாமையையும், பெருமூச்சுக்களையும் சித்தரிக்கிற கதைதான். இதிலும் அங்கதம் வெளிப்பட்டிருக்கிறதுதான். ஆனால் அளவு, தொனி வித்தியாசப்பட்டிருக்கிறதை வாசகர்களால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
‘நிகழ மறுத்த அற்புதம்Õ கதையோ கவிதை மாதிரி. கவிதை மாதிரி என்ன கவிதையேதான். தன்னை விட்டுப் பிரிந்து செல்ல முடிவு எடுத்துவிடும் மனைவியைத் தடுத்து நிறுத்தி கவிஞனும், குடிகாரனுமாகிய கணவன் பிதற்றும் அத்தனை வரிகளும் கவிதைதான். இதில் திலீப் தானெழுதிய ஒரே ஒரு வரியை கதைக்கான உத்தியாகப் பயன்படுத்துகிறார்.‘‘திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை’’  என்பதுதான் அந்த வரி. அவனுடைய ஒவ்வொரு கூற்றுக்குமிடையில் இந்த வரி பிரயோகிக்கப்படுகிறது. இது கதைக்கு ஒரு கூடுதல் கவர்ச்சியை உருவாக்குகிறது.
‘‘என் உடலெங்கும் படர்ந்த உன் வெப்பமான மூச்சுக் காற்றின் அலாதியான போதை, ஒரு சிவந்த திரட்சியான சர்ப்பத்தைப் போல் நீ என் மீது படர்ந்திருந்தது எதையும் மறக்கவில்லை’’
திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை.
‘‘ஆனால் பார், காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. உணர்வுகளின் பிரவாகத்தில் எதுவும் பதிவாவதில்லை.’’
திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை.
இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது கதை. பார்க்கப் போனால் கதையென்று இதில் ஒன்றுமில்லை. ஆனால் கதையாக நிற்கிறது.
‘மனம் எனும் தோணி பற்றி’ கதையும் ராகுல் கே.நாயக் எனும் ஏழை குஜராத்தி இளைஞனொருவனின் கனவுகளை நகை உணர்வு படியச் சித்தரிக்கிறது. தன்னை வலியக் காதலிப்பவளின் மேல் வியர்வை வாடை வீசியதால் அவளின் காதலைப் புறக்கணிக்கிறான் அவன். அவள் அவனுடைய வேலைக்கே உலை வைக்கிறாள். பிறகொரு சந்தர்ப்பத்தில் இருவரும் இணைகிறார்கள். இந்த வெகுளியான பாத்திர வார்ப்புகளுக்கிடையில் திலீப் ஒரு உளவியல் அணுகுமுறையைக் கையாள்கிறார். இதிலும் ‘நிகழ மறுத்த அற்புதம்’ கதையிலிருக்கும் உரையாடல் பாணி தொடர்கிறது.  இலக்கியம் சார்ந்த விஷயங்களைப் படைப்புகளாக்கும்போது சில இமயங்களுக்கு அது ஒவ்வாமையாக இருக்கிறது. அதைப் படைப்பு என்று பார்க்காமல் எழுத்தாளன் தன்னையே எழுதிக் கொள்வதாக ஒரு குழந்தைத்தனமான விமர்சனத்தை இவர்கள் முன்வைப்பதை சகித்துக் கொள்ள முடிவதில்லை. திலீப்குமாரின் கதைகளில், இலக்கிய உலகம் எவ்வித மனத்தடைகளுமின்றி விவரணம் பெறுகிறது. இதைச் ‘சுய பகடி’ என்று கொள்ளலாம். கேரளத்தில் பஷீரிலிருந்து இன்றைக்குள்ள யுவ படைப்பாளிகள் வரை சுயபகடியை, அரட்டைகளை, விமர்சனங்களைத் தம் படைப்புகளில் சரளமாகக் கையாளுகிறவர்கள் தாம்.
‘‘இந்தக் கிழட்டு முண்டைக்கு ஒரு சாவு வரமாட்டேன் என்கிறது. இதோடு ஏழாவது தடவை’’ பப்லிப் பாட்டி தாழ்ந்த குரலில், அசூயையுடன் கறுவினாள்… என்று தொடங்கும் கதை ‘அக்ரஹாரத்தில் பூனை’. கிழட்டு முண்டைக்கு சாவு வரமாட்டேன் என்கிறது என்று பாட்டி கறுவுவது ஒரு பூனையைக் குறிப்பிட்டுத்தான். ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் தத்துவார்த்தக் காரணங்களால் வெகுகாலம் பூனைகள் நுழையாமலே இருந்தன. அக்ரஹார வாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். அவர்கள் பஷூ பட்சிகளிடம் அன்பு பாவிப்பவர்க ளென்றாலும் பாலித்தின் பைகளையும், சினிமா போஸ்டர்களையும் தின்று கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத் தான் முக்கியத்துவம். ஆனாலும் ஒரு சமயத்தில் மேற்கூறிய கிழட்டுப் பெட்டைப்பூனை அக்ரஹாரத்தில் நுழைந்து 24 மத்திய வர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள்  வாழும் 25ஆம் எண் கட்டடத்தில் முதல் மாடியில் 9ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லிப் பாட்டி பூஜைக்காக எடுத்துவைத்த முழுக் கிண்ணப் பாலை நக்கித் தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் திரும்பிக் கொண்டிருந்தது. அது பப்லிப் பாட்டி கண்ணிலும் பட்டுவிட்டது.  அன்று முதல் பாட்டிக்கும் பூனைக்கும் போராட்டம்தான். பூனையை அக்ரஹாரத்திற்குள் நுழையவிடாமல் தடுக்க பாட்டி செய்யும் தந்திரங்கள் பலித்ததா இல்லையா என்பதைக் காட்டிலும், இந்தக் கதையில்  திலீப்குமார் புஷ்டிமார்க்கிகளை விமர்சனத் தொனியில் அணுகு வதையே முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘முதுமைக் கோளம்Õ ஒரு நல்ல மொழிபெயர்ப்புச் சிறுகதையைப் படித்த உணர்வைக் கிளர்த்தியது. கிறிஸ்தவப் பின்புலமும் திலீப் கையாண்டிருக்கும் மொழிநடையும் என்னை இவ்வாறு உணர வைத்ததோ என்னவோ? ஆனால் திருமதி ஃபிளாரன்சும், அவளுடைய மகன் சாலமனும்  நம் யதார்த்த வாழ்வில் எதிர்ப்படும் சகஜமான ரூபங்களே. முதியோர் இல்லங்களின் ஆயிரக்கணக்கான தூர்ந்துபோன ஜன்னல்களில் திருமதி ஃபிளாரன்ஸின் கவலை தோய்ந்த முகங்களை இன்றையச் சூழலில்  நம்மால்  கண்டெடுக்க முடியும். தனிமை உருவாக்கும் வினோத பிம்பங்களைப் படைப்பாளியால் உருமாற்றி உள்வாங்கிக் கொள்ள இயலும். ஆனால் சாதாரணர்களுக்கு அது நரகம். ஆயினும் திருமதி ஃபிளாரன்ஸ் வானத்துடனும் நட்சத்திரங்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்கிறாள். எதன் மீதாவது அந்தக் கொடி படர்ந்துதானே ஆக வேண்டும்?
மொழி வழியாக ஒரு குஜராத்தியான திலீப்குமாருக்குள் இயங்கும் ‘தமிழ் மனம்Õ என்னை வியக்க வைக்கிறது. இது அசாதாரணமானது.  ‘கண்ணாடி’ கதையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். பழனியம்மாளும், மாரியப்பனும், அந்த ஜெகதீஸ்வரிக் குழந்தையும் எண்ணற்ற தமிழ் உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் பிரதி பிம்பங்கள். பசியும், வறுமையும் தரித்திர வாழ்வும் தான் அவர்களது உடைமைகள். ஒரு டீத் தண்ணியும், பீடியும்தான் மாரியப்பன்களின் அன்றாடக் கனவு. திலீப் இதைப் பிரமாதமாகத் தன் கதையில் நிறுவி விடுகிறார். ஈயம் பூசுவதற்காக ஒரு வீட்டுக்குச் செல்லும் பழனியம்மாள், அந்த வீட்டிலுள்ள நிலைக் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கிற காட்சியில் நான் கிட்டத்தட்ட சிதைந்துபோய்விட்டேன். அவள் அதுவரை கண்ணாடியில் தன்னை முழுமையாகப் பார்த்துக் கொண்டவளில்லை.  திலீப் அதை இவ்வாறு எழுதுகிறார்.
‘‘பழனியம்மாளுக்குப் பகீரென்றது. அந்த உருவம் ஒல்லியாய்க் களைத்துக் காணப்பட்டது. அதன் இடது கண்ணுக்குக் கீழே இருந்த மச்சம்  அதை இன்னும் கோரமாக்கியது. இரக்கமற்ற காலம் உடலைத் தின்று விட்டிருந்ததோடு, மனதின் யௌவனத்தையும் திருடிச் சென்றிருந்தது. அந்நிமிஷத்தின் சிந்தனையற்ற மௌனம் அவளை வதைத்தது என்றாலும் பழனியம்மாள் அதில் லயித்துத்தான் போனாள்.’’
திலீப்பின் அநேக கதைகளுக்கான இயங்குதளம் சென்னை  தங்கச்சாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள அக்ரஹாரம்தான். குல்லாய் அணிந்த குஜராத்தி வயோதிகர்கள், ஆபீஸிலிருந்து  விடுபட்ட நடுத்தர வயது கால்சட்டைக்காரர்கள், கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கும் பருமனான குடும்பப் பெண்கள், சிறுமிகள், பையன்கள், வெள்ளைச் சேலையணிந்து முக்காடிட்டுக் கொண்டிருக்கும் நெட்டையும், குட்டையுமான விதவைகள், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கோவில் கோபுரம், தெப்பக்குளம், அதன்பாசி, அதன் பிளாஸ்டிக் தாமரைகள், பள்ளிக்கூட மணிக்கூண்டு..  என்று அவருடைய சித்தரிப்புகளால் விரியும் உலகம் விஸ்தீரனமானது. குஜராத்திகளில் பெரும்பாலோர் வணிகர்கள், வெண்ணெயும் கிழங்கும் உண்டு கொழுத்த பணக்காரர்கள் என்கிற நம் பொதுப்புத்திக்கு முரணான தரித்திரம் பீடித்த பல குஜராத்திகளையும் திலீப் நமக்கு கூரிய விமர்சனப்பாங்குடன் அறிமுகப்படுத்துகிறார்.
சுயகரிசனம் என்பதே அவரிடமில்லை. அவருடைய கிண்டல் கத்திகள் பாயாத குஜராத்திகளே கிடையாது. இந்த நேர்மைபடைப்பாளிகளுக்கு அவசியமென்பேன். இந்த இடத்தில் அரசியல் காரணங்களுக்காக நம்மவர்கள் பிரயோகிக்கிற ‘வந்தேறிகள்’ வாசகங்களும் நினைவுக்கு வராமலில்லை.
‘மூங்கில் குருத்து’ கதை சற்று வித்தியாசமாக கோயமுத்தூரைக் களமாகக் கொண்டு இயங்குகிறது. ‘ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்Õ கதையில் வரும் தோழர் கே. சந்தேகமில்லாமல் மறைந்த எழுத்தாளர் ஜி.நாகராஜன்தான். அவருடைய ‘குணசித்திரத்தை’ திலீப் அனுபவப்பூர்வமாகச் சித்தரிக்கிறாரோ என்றும் தோன்றியது. அத்தனை தத்ரூபம். ஏற்கெனவே சி.மோகன் எழுதிய ‘நடை வழிக்குறிப்புகளில்’ ஜி.என்.னை தரிசித்திருக்கிறேன். போதாக்குறைக்கு ப்ரகாஷும், மற்றவர்களும் ஏற்கெனவே தம்பங்குக்கு என் மனதில் ஆணி அடித்து அவரை மாட்டி வைத்திருக்கிறார¢கள். எனினும் அவர் ஒரு பெரிய ஆளுமை. அவருக்கு திலீப் செய்கிற அஞ்சலியாகவும் இந்தக் கதையை நேர்மறையாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ‘கடவு’ தொகுப்பின் வாசிப்பனுபவம் என்னைப் பலவிதமான பாதைகளுக்கு இழுத்துச் சென்றது. திலீப்பின் கதைகள் யதார்த்தவாதத்தின் காத்திரமான விளைச்சல். இதை ஒரு இனவரைவியல் என்கிற குறுகிய சட்டகத்திற்குள் அடைத்து வைத்துப் பார்க்க என்னால் இயலவில்லை. யதார்த்தத்தைத் தாண்டிய அதிபுனைவிற்குள் இவருடைய கதைகள் ஏன் இயங்கவில்லை என்கிற கேள்வியும் அவசியமற்றது. மனத்தடையற்ற, சுயவிமர்சனத் தன்மையுடன் கூடிய படைப்புகள்  இவை. இந்த இடத்தில் திலீப் மொழியைக் கையாளும் லாவகத்தைக் குறிப்பிடவில்லையானால் இக்கட்டுரை நிறைவு பெறாது. அத்தனைக்குச் சரளமான, களிப்பூட்டுகிற மொழிவளம். தமிழர்கள் எனப் பெருமைப் பட்டுக்கொள்ளும் எழுத்தாளர்களே பொறாமைப்படுகிற மாதிரி.
நமஸ்தே திலீப்குமார்!

Related posts