You are here
நூல் அறிமுகம் 

தேவ.பேரின்பனின் தமிழர் வளர்த்த தத்துவங்கள் பரந்த வெளியில் நின்று பேச வேண்டிய பிரதி

நா. விச்வநாதன்

இந்திய மரபென்பது வைதிக மரபாகத்தான் தொடக்க காலத்திலிருந்தே கற்பிக்கப்பட்டு வந்து அதுவே நிலை பெற்றுவிட்டது. தத்துவம் என்றாலே ஆன்மிகம் பக்தி என்ற கருத்தே முன்னிலைப்படுத்தப் பட்டது. பல்வேறு சமூகங்கள் இணைந்த ஒரு நிலப்பரப்புக்கான பொது அடையாளங்கள் இந்த மரபிலிருந்தே பெறப்பட்டது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இது நடந்திருக்கிறது என்பதை ஏற்க வேண்டும். தமிழர் தத்துவம் என்ற அழுத்தமான சொல்லாடல் இல்லாமல் ஆனது. அரசர்களும் அவர்களுக்கு அடுத்த படிநிலையிலிருந்த அல்லது அவர்களுக்கு இணையாக இருந்தவர்களும் உபதேசித்ததே ஞானம் என்றானது. அறம் என்று சொல்லப் பட்டது. அடித்தட்டு மக்களுக்கோ உழைப்புதவிர வேறெதுவும் தேவையில்லை என்ற கருத்து உருவானது. வறியவர்களுக்கு அறம் எப்போதுமே கூற்றாகவே இருந்திருக்கிறது. தண்டனைக் குரியவர்கள் என எளிய மக்கள் அடையாளப்படுத்தப் பட்டனர். இது ஒருவிதத்தில் எளிய மக்களை சமூகத்திலிருந்து விலக்கம் செய்வதே. இவற்றைக் கவனத்தில் கொண்டே தத்துவ மரபு பற்றிப் பேச வேண்டும். அதுவும் தமிழர் தத்துவ மரபென்பது எடுத்துக்கூற மிகவும் சிக்கலானது என்பதையும் ஏற்க வேண்டும்.
தத்துவம் என்பது அறிந்து மேதமையை வெளிப்படுத்தி பெருமை பேசுவதற்கானது அல்ல. அது வாழ்க்கை முறை. அறிதலின் சிறப்பு. உண்மையாக அது எல்லாவற்றையும் கடந்ததல்ல. புழக்கத்தில் இல்லாத சொற்களைக் கையாண்டு மருட்டுவதல்ல. மேட்டுக்குடிகளுக்கோ படிப்பாளிகளுக்கோ மட்டுமே உரித்தானவையல்ல. விரிவுரையும் விளக்கமும் சொல்கின்ற ஒன்றல்ல. வாழ்வைச் செறிவோடு வாழச் செய்யும் உந்து சக்தியைத் தரவல்லது. சரியாகச் சொல்வதனால் வாழ்வோடு கலந்து விடுவது.
தேவபேரின்பனின் தமிழர் வளர்த்த தத்துவங்களை வாசிக்கும் போது இவைகளை மனதில் கொண்டிருப்பது அவசியம். இது தமிழர் தத்துவக்களத்தில் விரிவான விவாதத்திற்கு வகை செய்கிறது. இந்துத்துவம் என்ற கலாச்சாரம் ஆன்மிக வரலாறு இவை இந்தியத் தத்துவ மரபாகக் கூறப்பட்டவற்றைத் தீவிரமான பார்வைக்கு உட்படுத்துகிறது. இருபது கட்டுரைகளும் வேறுவேறு தலைப்புகளைக் கொண்டிருந்தாலும் தமிழர் தத்துவத்தை அதன் இருத்தலைப் பேசுகின்றன. இந்தியத் தத்துவமரபாகப் பேசப்பட்டதை தமிழ்  மரபிலிருந்து வேறுபடுத்திக்காட்ட முயன்றிருக் கின்றன.
நால்வகை வருண அடிப்படையில் உயர் வகுப்பினராகப் பழந்தமிழகத்தில் பார்ப்பனர்கள் இருந்தனர் என்பது உண்மை. ஆனால் தொழில் அடிப்படையில் விதிக்கப்பட்ட சமூகம் பின்னர் ஏற்றத்தாழ்வுகளுள்ள அமைப்பாக மாறிவிட்டது. தொல்காப்பியரும் பகுப்புமுறை நால்வருணம் என்று பேசினாலும் அவர்கள் யார் எவர் எந்தப் படிநிலைகளில் இருந்தனர் என்று அழுத்தமாகச் சொல்லவில்லை. தொல்காப்பியம் கூறும் தமிழகம், தமிழக எல்லைகள் பரப்பளவு வேறுவேறானவை. அந்தணர்களைவிட அரசர்கள் உயர் நிலையில் இருந்ததுபோல் அரசர்களைக் காட்டிலும் அந்தணர்கள் உயர்நிலையில் இருந்தனர் என்பதும் உண்மை. நால்வருணத்தினரில் வைசியர்களும் மேல் நிலையில் இருந்ததுண்டு. மேலாண்மை என்பது மாறிமாறி வருவதுதான்.
வள்ளுவரின் பார்வையே வேளாண்குடி, அரசன் இவர்களை நோக்கியே இருந்தது. நிலஉடைமைச் சமூகத்தில் நிலவிய வாழ்வுமுறை வேளாண் குடிகளை முன்னிலைப்படுத்தியே. உணவளித்த உலகு புரப்பவன் வித்துமிடல் வேண்டும் கொய்வோ விருந்தோம்பி மிக்கில் மிகைவான் புலம் என்ற குறள் விருந்தோம்பல் அதிகாரத்தில் வந்தாலும் வேளாண் குடி மரபைச் சிறப்பிக்க முனைந்த ஒன்றே. எல்லாத்தேடலையும் விட அன்னத்தைத் தேடும் தேடல் சிறப்பானது என்னும் உபநிடதம். உடம்பு, உயிர் இருந்தால் மட்டுமே கடவுள் பிரம்மம் ஆன்மாவெல்லாம். எனவே வேளாண் குடிகள் கொடையாளிகள் என்ற கருத்து முன்னிறுத்தப்பட்டது. இது அழகிய வாழ்வியல் முறை. வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற பழமொழி இப்படி வந்ததுதான். அரசன் அந்தணர் படிநிலையில் முதலில் இருந்தாலும் வேளாண் சமூகமே ஆதிக்க சமூகமாக இருந்தது. வள்ளுவத்தில் அந்தந்த அதிகாரத்திற்குள் இருக்கும் குறட்பாக்களை அதற்குள் மட்டும் புகுத்தி விளக்கம் கூற முற்படுவது சரியானதல்ல. எல்லாப் பரப்பிலும் விவாதிக்க வேண்டும்.  திருக்குறள் முறைவைப்பினால் நேரிட்ட குறைபாடு வள்ளுவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தடையாகவே இருக்கிறது.
அரசன் என்பவன் ஆணையிடும் அதிகாரம் பெற்றவன். வள்ளுவரின் தத்துவப் பார்வையில் வேளாண் குடிச் சிறப்பு பற்றி கூறினாலும் அரசனின் கடமை என்று தனியாக வகுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். எனவே வள்ளுவம் அரச வளர்ச்சிக்கு ஏற்பவே நின்றது. நில உடைமைச் சமூகத்தின் அரசனே அறத்தின் வடிவம். அரசன் சொல்வதும், செய்வதும் என எல்லாமே அறம்தான். இதுவே தமிழரின் பொது அறமாக வற்புறுத்தப்பட்டது. வேளாண்குடி மதிப்பு என்பது வேறு, அரசனின் அதிகாரம் என்பது வேறு. வள்ளுவம் எளிய மக்களைப் பற்றிப் பேசினாலும் அரசனைச் சார்ந்தே எல்லாம் என்ற கருத்தியல் முதன்மைப்படுத்தப்பட்டது. அரசன் என்பவன் கடவுளின் அவதாரம். திருக்குறளின் மேன்மையே எளிய மக்களும் சமூகத்திற்கு இன்றியமையாதவர்கள் என்ற கருத்தைப் பதிவு செய்ததுதான். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்று வள்ளுவம் பேசும்போது மன்னனின் தன்னிச்சையான ஆட்சி என்பதை விமர்சிப்பது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஆரம்பகால நிலை இது.
திணைக் கோட்பாடுகள் முற்றிலுமாக அழிந்தபிறகும் அதன் எச்சங்கள் இருக்கவே செய்யும். அவை வலுவாக நிலைபெறவும் கூடும். குறிஞ்சி முல்லை மருதம் முதலான நிலத்திற்கேயுரிய கடவுள்கள் உணவு, சடங்குகள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் பரவின. கோயில்களைப் பொது அடையாளமாகப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. சமூகத்தின் எல்லா அம்சங்களும் கோயிலோடு இணைக்கப்பட்டன. வேளாண் குடியின் விளைச்சலில் பெரும்பகுதி கோயிலுக்கு என்றானது.  மீதி அரசனுக்குச் சென்றது. விவசாயக் குடிகளைக் காப்பாற்றும் கடமை அரசனுக்குச் சென்றது. பிற சமூகங்கள் உடைமை உரிமையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டன. பல்வேறு தீயவிளைவுகளை ஏற்படுத்தினாலும் அந்தணர் மேல்நிலையாக்கம் பற்றிய புரிதல் இங்குப்போது மானதாயில்லை.
அந்தணர்களுக்கு வேதம் ஓதுதல் ஒதுவித்தல் என்பனவான  உடலுழைப்புசாராத பணிகளின் மூலமாக அரசனுக்கு கிட்டத்தில் உட்கார்ந்து அவன் சார்பாக ஆணையிடும் மறைமுக உரிமைகளைப் பெற்றுவிட்டனர். போரிலிருந்து விலக்கு, போரின்போது பகை நாட்டு மன்னனாலும் அந்தணர்கள் பேணப்பட வேண்டும் ஊறு நேரக்கூடாது போன்ற தனி அறங்கள் வகுத்துவிட்டனர். அந்தணர் என்போர் அறவோர் என்று வள்ளுவரும் சிறப்பளிப்பது இதனால்தான். சடங்குகளைச் செய்யும் முழு உரிமையையும் அவர்கள் பெற்றிருந்தனர். திராவிடக் கருத்தியல் அந்தணர்களைக் கடுமையாகத் தாக்கினாலும் இன்றளவும் கூட அவர்களின் மேலாண்மையை அசைக்க முடியவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் இடம் பெயர்ந்தாலும் அவர்களின் மேலாண்மையைக் கைக்கொள்ள அடுத்த படி நிலைச் சமூகம் வந்துவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தணர்களின் வெற்றிடத்தை இட்டு நிரப்ப ஏதோ ஒரு சமூகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பொது நோக்கம் தனக்குக் கீழுள்ள சமூகத்தை அடக்கியாளுதல் என்பதுதான். இடதுசாரிகள் இதில் தெளிவாகவே இருந்தகாலம் ஒன்றுண்டு.
கருத்து முதல்வாதத்தின் வளர்ச்சி என்பது தெய்வங்களை உருவாக்குவதும் அவற்றைப் பேணுவதும் வளர்ப்பதுமான தொழிலைச் செய்த பிராமணர்களின் வளர்ச்சி என்பதுதான். உண்மையில் வேத மதம் தமிழகத்தை ஆக்கிரமித்திருந்தது. தமிழர் மரபின் ‘நீர்’ பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘தீ’ என்பதான கருத்து முன்நிறுத்தப்பட்டது. வேள்விகள் புதுப்புதுப் பெயர்களில் மகிமைப்படுத்தப்பட்டன. தொல்குடி மக்களின் தொன்மங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் இவையனைத்துமே வைதீகத்தை உரசிக் கொண்டே நின்றன. வேள்வி அனைத்துச் சமூகத்தினருக்குமாக ஆக்கப்பட்டது. அந்தணர்கள் ஆச்சாரியர்களாகி அனைத்து சமூகச் சடங்குகளிலும் வேள்விகளைப் புகுத்திவிட்டனர். நாம் எளிதாகப் பேசுவது போல வைதீகம் திடீரென வந்துவிடவில்லை. வெகு சீராக அழுத்தமான நடைப்போட்டு மண்சார்ந்த பண்பாட்டு தத்துவச் செறிவுகளை செரித்துக் கொண்டே வளர்ந்தது. அதிகாரம் இடைநிலை மக்களிடம் வந்திருந்தாலும் இதுபோன்ற வரவுகளைத் தடுக்கவிரும்பாமல் அனுமதித்தனர். அதற்கும் மேலாக ஒரு ஈர்ப்பும் கொண்டிருந்தனர். கோயில்களுக்கு வரும் கூட்டமோ சடங்குகளை ஆதரித்துச் சிரத்தையோடு செய்யும் திரளோ பிராமணர்கள் இல்லை. தேவ பேரின்பன் இந்த எதார்த்தத்தைக் கவனிக்க மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. எளிய மக்களின் கடவுள்கள் மேல் நிலையாக்கம் பெற்றதை அங்கீகரித்தனர். தமிழ், சடங்கு, பூஜை முறைகளிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு வடமொழி புகுத்தப்பட்டதை மென்மையாக ஏற்றுக் கொண்டனர். தீப்பாச்சி அம்மன் எனப்படும் தீப்பாய்ந்த அம¢மன் அக்னிப் பிரவேச  சீதாதேவியாக ஆனதை உதாரணமாகக் கொள்ளலாம். மாரியம்மன், காளியம்மன், முருகன், சுடலைமாடன் கருப்புசாமி கோயில்களில் பூசகர்களாக அந்தணர்கள் புகுத்தப்பட்டதும் நடந்திருக்கிறது. இவைகளை ஆவேசமாக எதிர்க்கும் எந்த முயற்சியும் அறவே இல்லை. அந்தணர்கள் பூசை செய்யும் கோயில்களே மகிமை பெற்றன. இது அந்தணரல்லாதோர் ஏற்படுத்திய ஏற்பாடுதான்.
தேவபேரின்பனின் கட்டுரைகளைத் தனித்தனியாகப் பிரித்து ஆராயவோ திறனாய்வு செய்யவோ முற்படுவது சரியாக இருக்காது. ஒட்டுமொத்தமான ஒரு பார்வைதான் சரியானதாக இருக்கும். ஏனெனில் இவை பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாக இருப்பதால் இந்த முறையே சரியாக இருக்கும். சமணத்தின் இறுக்கம், கடினத்தன்மை, நோன்பு முறைகள், விதிகள், குளிக்காதிருத்தல், உவோசனை எனும் முடி மழித்தல், திகம்பரம் போன்றவை எளிய மக்களை மருட்டின. சமணம் அந்நியப்பட்டும் போனது. வாழ்வதற்கான எளிய முறைகள் இல்லை. அரசமரமாக உச்சத்தில் இருந்தது. அரசன் சமயம் மாறியபோது சமணம் பலவீனப்பட்டது. மக்களின் அச்சம் என்பதுதான் கடவுட் கோட்பாட்டின் அடிப்படை. கடவுளின் இருப்பை மறுத்து புத்தமும் மக்களிடமிருந்து விலகிப் போனது. ‘இரண்டல்ல’ என பிரம்மத்தைப் பேசிய அத்வைதம் கடவுள் மறுப்பு இயக்கமே. என்றாலும் காலப் போக்கில் சைவத்தோடு தொடர்புபடுத்திக் கொண்டது. சம்பந்தர் போன்றவர்கள் இதைச் செம்மையாகச் செய்தனர். வேத மரபு சைவத்துள் புகுத்தப்பட்டது. சமணர்களையும், பௌத்தர்களையும் சம்பந்தர் ஒரு போர் புரிவதைப்போலவே எதிர்கொண்டார். வெற்றியும் பெற்றார். ‘‘புத்தரொடு பொறியில் சமணும், புறம் கூற நெறி நில்லா’’ என்று கடுமையாகப் பேசுவார். தனது ஒவ்வொரு பத்தாவது பதிகத்திலும் சமண பௌத்தத்தைக் கடுமையாகச் சாடியதை ஒரு முறையாகவே கொண்டிருந்தார். ஆக இவை அகற்றப்பட்டாலும் சமண பௌத்தத்தின் சிறந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு வைதீகம் தழைத்தே வந்திருக்கிறது.
இன்னொன்றையும் கூற வேண்டும். பௌத்தம், சமணம், சைவம் முதலானவை பல்வேறு கூறுகளாகப் பிரிந்ததும் நடந்தது. இதற்கான காரணங்களாக தத்துவப் போதாமை, அல்லது நிறுவனத் தன்மையைக் கைப்பற்றுதல் என நிறைய உள்ளன. வீரசைவம், காளாமுகம், காபாவிகம் முதலியவை பிறந்தன. வழிபாட்டு முறையிலும் சாகதம் முதலான ஆறு அல்லது எட்டுக் கூறுகளாக மாற்றங்கள் ஏற்பட்டன. வைணவமும் அவ்வாறே சமணமும் பலகூறுகளானது. பௌத்தம் ஏகப்பட்ட பிரிவுகளாகப் பிரிந்தது. அத்வைதமும் பலவாக மாறியது. விபூதியை அத்வைதம் கைக் கொண்டது.
சித்தர் மரபென்பது சைவமரபுதான். சைவத்தின் இறுக்கத்தைத் தளர்த்தி எளிய மக்களிடம் கொண்டு சென்றதால் புனிதம் போயிற்றென்ற கருத்து முன்வைக்கப்பட்டு கலகக்காரர்கள் எனப் பெயர் பெற்றனர். கட்டற்ற சுதந்திரம் மருத்துவம் முதலான மக்களின் தேவைகளை முதன்மைப்படுத்தினர். சைவத்தின் பிரதான அம்சம் பயணம். ஒரு வகையில் அது பிரச்சாரமுமே. சித்தர்களும் பயணிகளே. சைவத்தின் புரியாத பகுதிகளை, புதிரான பகுதிகளை விடுவித்து அல்லது புறந்தள்ளி பவித்ரம் என்றதை கடுமையாக உடைத்து எளிய மக்களிடம் சென்றனர்.
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரை செய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரை செய்த முப்பது உபதேசம்
மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாமே
என்ற திருமூலரைப் பார்க்க வேண்டும். சங்க காலத் தத்துவங்கள் என்ற பகுதியில் வலுவாக முன் வைக்கப்படுவது கருத்து முதல்வாதம் என்பது தேவபேரின்பனின் கூற்று. அறம் முன்னிருத்தப்பட்டது. அறமே அனைத்தினும் மேலானது. ஆனால் அகம் அதனினும் மேலானது. தமிழர்களின் வாழ்வே அகம் சார்ந்ததுதான். காதல் உடன்போக்கு எனத் தொடங்கி சிறப்பிக்கப்பட்டது. அறநூலாளர்களால் விலக்கி வைக்கப்பட்ட காமத்தை வள்ளுவர் தனிப் பகுதியாகவே எழுதி மேன்மைப்படுத்துகிறார். தமிழரின் தத்தவச் செழுமைக்கு அகம் சார்ந்த பாடல்கள் முதற்காரணம்.
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் (தொல்.பொரு27) மனம் பொருந்திய வழிப் பரத்தையர் மாட்டும் இன்ப முள் தாரும் எனவும் பொருந்தா வழி மனைவியர் மாட்டும் இன்பமின்றாம் எனவும் கொள்க. இதை திணை வாழ்க்கையோடும் பொருத்திய் பார்க்கலாம்.
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேரும் காலைத் திணைக்குரிய பொருளே என்பதையும் பார்க்க வேண்டும். நால் வருணம் தமிழகத்தில் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அழுத்தமாகவே இருந்தது, ஓதல் பகையே தூது பிரிவே (அகத்திணை 27) என்ற வரிகளைச் சான்றாகக் காட்ட வேண்டும். அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன  என்பதால் அந்தணர்க்கும் அரசர்க்கும் மட்டுமே உரியவையாகச் சொல்லப்படுகின்றன.
ஒரு சிறந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் அது சமூகத்திற்கானதாகிவிடுகிறது என்பதுதான் சரி. உரிமை என்ற பதம் இருந்தாலும் மக்களுக்கானது என்னும்போதுதான் சிறப்பும் முழுமையும் பெறும். கண்டுபிடிப்பாளரிடமிருக்கும் உரிமை தானாகவே விலகிவிடும். உலகின் நீட்சி என்பது இது சார்ந்ததுதான். தத்துவம் என்பதற்கும் இது பொருந்தும். ஒரு தத்துவத்தை விமரிசிப்பதற்கு இடதுசாரிப் பார்வையோ வலது சாரிப் பார்வையோ மதம் சார்ந்த அல்லது மதம் சமயம் சாராத பார்வையோ சரிய ன்று. பொதுப் பார்வை என்பதுதான் சரி. தேவபேரின்பனை இவ்வாறுதான் அணுக வேண்டும்.

தமிழர் வளர்த்த தத்துவங்கள்
தேவ.பேரின்பன் | பாரதி புத்தகாலயம்
பக்: 215 | ரூ.140

Related posts