You are here

தூரத்துப் புனைவுலகம் 13: மறக்க வேண்டிய ஞாபகங்கள்

ம. மணிமாறன்

நம்முடைய மனதிற்குள் ஆழமாக உருவாகி இறுதிப்படும் சகலவிதமான முன்தீர்மானங் களுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிட முடியாது. மனங்கள் தகவமைக்கப்படுகின்றன. வெகு இயல்பாக நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். நம்முடைய தேர்வுகளுக்கும், ரசனைக்கும் கூட இப்படியான பழக்கங்களே பின்புலமாக இருந்து வருகின்றன. வாசிப்பதற்கான புத்தகங்களைத் தெரிந்தெடுப்பதிலும் கூட இப்படியான மனநிலைகள் இருக்கத்தான் செய்கிறது. முதல் பார்வையில் தவறவிட்டமைக்காக பின்னாட்களில் வருந்தும்படியான சூழல் எல்லோர் வாழ்விலும் ந¤கழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தவறிப்போன காதல், தவறிப்போன நட்பு, தவறிப்போன புத்தகங்களையும்கூட மறுமுறை எதிர்கொள்ளும்போது மனம் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. மகிழ்ச்சியோடு குற்ற உணர்ச்சியும் இயைந்தே சூழ்ந்திருக்கும் நிமிடங்களாகி விடுகின்றன அப்போதைய நேரம் முழுவதும்.
முதல் பார்வையில் தவறவிட்ட பொக்கிஷங்களின் குறியீடு ‘‘அனார்யா.’’ வாங்கிப் பலநாட்கள் ஆன பிறகும் வாசிக்காமல் வைத் திருக்கும் புத்தகங் களைப் புரட்டு உடனே என எனக்குள் கட்டளை பிறக்கிறது. அனார்யாவை மட்டுமல்ல வாசிக்கத் தவறிய அல்லது ஓரங்கட்டிய புத்தகங்களின் படை வரிசை என்னை அச்சுறுத்துகிறது. பின் அட்டைக் குறிப்புகளை மட்டும் வாசித்துவிட்டு இதேபோல எத்தனை எத்தனை இலக்கியங்களை இழந்திருக்கிறேனோ தெரியவில்லை. வாசித்திடும் எவருடைய மனதின் சமநிலையையும் கலைத்துப்போடும் அசாத்தியமான வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பு ‘‘அனார்யா’’. சரண்குமார் லிம்பாலே தனக்குப் பிறந்த குழந்தைக்கு ‘அனார்யா’ எனப் பெயர் சூட்டுவதோடு இந்த சுயசரிதை நிறைவடைகிறது. அனார்யா என்றால் நாதியற்றவன் என்று அர்த்தமாம். தாய், தந்தை உற்றார், உறவினர் உடனிருந்திடும் போதும் கூட பிறந்த குழந்தைக்கு நாதியற்றவன் எனப் பெயர் வைத்திடும் மனநெருக்கடிக்குள் சிக்கிச் சீரழிந்த வாழ்க்கை சரண்குமாருடையது.
மகாராஷ்டிர உதிரிகளின் வாழ்க்கையிது. மதம், சாதி, குடும்பம் என மனிதர்கள் மீது விழுகிற அடையாளங்கள் சிலருக்கு கௌரவத்தையும், பெருமிதத்தையும் தருகிறது. அவமானத்தையும், வன்மத்தையும் தங்களின் மீது சுமத்துகிற இந்த அடையாளங்களைக் கண்டு எரிச்சலுற்ற மனிதனின் குரலே ‘‘அனார்யா’’. அனார்யாவை எஸ்.பாலச்சந்திரன் மொழிபெயர்த்திருக்கிறார். புரட்சிகர ஆளுமைகளான வால்டர் பெஞ்சமின், பாட்ரீஸ் லுமூம்பா, ஃப்ரான்ஸ் ஃபனான் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்ப்படுத்தித் தந்தவர். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும், ஆப்ரிக்க இலக்கியங்களையும் தமிழுக்குத் தந்து கொண்டிருப்பவர் எஸ். பாலச்சந்திரன். அவருடைய மொழிபெயர்ப்பு சுயசரிதையான ‘நாதியற்றவனை’ என்.சி.பி.ஹெச். நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
தொன்னூறுகளுக்குப் பிறகான இந்திய இலக்கியங்களில் கவனம் பெறத் துவங்கிய தலித் இலக்கியங்களுக்கு என்று ஒரு தொடர்ச்சியும், வரலாறும் இருக்கிறது. அறிவர் அம்பேத்கரின் எழுத்துக்களின் அறிமுகமும், பல்கலைக்கழகங்களை எட்டியிருந்த முதல் தலைமுறை அறிவாளிகளின் வாழ்வனுபங்களும் இணைந்தே தலித் இலக்கியங்கள் உருவாகின. தலித் அரசியல், தலித் கோட்பாடு, தலித் அழகியல் என யாவும் விவாதிக்கப்பட்ட பிறகும்கூட பெரும் தயக்கம் தலித் படைப்பாளிகளிடம் இருக்கவே செய்தது. எதை எழுதுவது, தங்களின் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இழிவை எழுதி என்னசெய்து விடப் போகிறோம் என்றிருந்த தயக்கத்தைக் கலைத்துப் போட்ட படைப்புகளைக் கன்னட இலக்கிய கர்த்தாக்களே முதலில் உருவாக்கினர். ஊரும் சேரியும், புதைந்த காற்று, கவர்ன்மென்ட் பிராமணன் போன்ற படைப்புகள் இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்ட பிறகுதான் தலித் கதைகள் உருவாகின.
எல்லாப் படைப்பாளிகளையும் போலவே தான் தலித் படைப்பாளிகளும் பால்யத்தைத் தான் எழுதுகின்றனர். பாட்டியின் மடியில் தலை வைத்தபடி கதை கேட்டுக் கொண்டே நிலவையும், காற்றையும் ரசித்து சோறுண்ணுகிற வாழ்க்கை லபிக்கவில்லை எங்களுக்கு என்று எரிச்சல்படும்போது வெளிப்படுகிற கோபத்தின் மொழிகளாகின்றன கதைகள். பால்யம் பிரியத்தையும் அன்பையும் தங்கு தடையின்றி யாவருக்கும் வழங்குவதில்லை. அழுக்கும், பசியும், துயரமும் சூழ்ந்திடும் வாழ்க்கையில் உழன்று கிடப்பவர்கள் தங்களுடைய பிள்ளைப் பிராயத்துக் கதைகளை எவரிடம் பகிர்ந்து கொள்வார்கள். மறக்கவே விரும்புகிறோம் நாங்கள் எல்லாவற்றையும். ஊரென்று நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் இடத்தில் இருந்து எங்களைப் பிய்த்து எறிந்து வெளியே தள்ளீனீர்களே? எந்தவிதக் கூச்சமுமில்லாமல் சாதியின் பெயரால் இன்றுவரை இயல்பாக அதனை செய்து கொண்டே இருக்கிறீர்களே! எத்தனை நாளைக்கு நீங்கள் எங்கள் மீது ஏற்றிய சுமைகளையும், துயர்களையும் சகித்துக் கொண்டிருப்போம் என கொதித்துக் கேட்கின்றனர் தலித் படைப்பாளிகள் இந்திய நிலமெங்கும்.
பிறப்பிலிருந்து  தன்னுடைய ஒவ்வொரு நொடியையும் சாதியத்தின் சுவடின்று எதிர்கொள்ள முடியவில்லை. பள்ளிநாட்களில் சரண்குமார் லிம்பாலேவின் சுற்றுலாப் பயணம் இதனை உணர்த்திடப் போதுமானதாக இருக்கிறது. பேருந்து நின்றவுடன் ஆசிரியர்கள் அறிவிக்காமல் குழுக்கள் பிரிகின்றன. தனித்தனியே மரநிழலில் தலித்களில் கூட மஹர்கள் தனியே, மங்குகள் தனியே அமர்ந்து கொள்கின்றனர். லிங்காயத்துக் குழந்தைகளுடன், பாட்டீல் வீட்டுப் பிள்ளைகள் அமர்ந்து கொள்கின்றனர். பசிய இலைகளுடன் கொளுத்துக் கிடக்கும் நிழலில் ஆசிரியர்களும் மேல்சாதி என்றறியப்படுகிற குழந்தைகளும் அமர்ந்துவிடுகிறார்கள். இலைகளற்றதால் நிழல்பரப்பிடத் தகுதியற்ற மரத்தின் கீழ் அமர்ந்து தங்களுடைய சாப்பாட்டு மூட்டையைப் பிரிக்கின்றனர் தலித் குழந்தைகள். இறைவனின் வீட்டில் குழந்தைகள் மலர்கள் என்றொரு வசனம் இருக்கிறது. ஆனால் நாங்கள் இறைவனின் வீட்டு மலர்களல்ல. ஊர்மக்கள் வீசியெறியும் குப்பைகள் நாங்கள். எங்களுடைய வகுப்பறையில் நாங்கள் எதிர்கொண்ட துயர்மிகு வார்த்தைகள் இன்று வரையிலும் என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. ‘‘டேய் வேசி மகனே எழுதுடா நல்லா மாட்டுக்கறின்னா திங்கத் தெரியும், இப்ப எழுத முடியலையாக்கும்‘‘ என்கிற ஆசிரியரின் குரலை இன்று வரையிலும் பள்ளிக்கூட சுவர்களை பார்க்கும்போதெல்லாம் கேட்டே தீர வேண்டியுள்ளது  என்கிற சரணின் வார்த்தைகளை வாசித்திடும் பொழுது நம் மனதிற்குள் உருவாகும் சித்திரம் சகிக்க முடியாததாக இருக்கிறது.
தலித்கள் என்றறியப்பட்ட மஹர் சாதியினர் என்றாலும் மங் சாதியினராக இருந்தாலும் ஊரோடு தொடர்பு கொள்வது வெகு சில வழிகளில்தான்.  திருமணச் சடங்குகளில் மீந்து போகிற உணவை புசிப்பதற்காகவும் இறந்து விழுகிற மாடுகளை அப்புறப்படுத்திடும் பணியினை விரும்பிச் செய்வதற்காகவுமே ஊருக்குள் செல்ல முடிகிறது. புறவாசல் வழியாக எச்சில் சோற்றைத் தின்பதற்காக நுழைந்த பிள்ளை நாட்களை மறக்கவே விரும்புகிறார்¢கள் சரண்குமாரும் மற்றவர்களும். இறந்துவிடுகிற மாடுகளை மஹர்கள் குடியிருப்புகளுக்குத் தூக்கி வருவது மாமிசத்தின் மீதான விருப்பத்தை நிறைவேற்றிட மட்டுமல்ல. அதையும் தாண்டி தங்களுடைய பறைக் கருவிகளின் மீது கொழுப்பினைத் தடவி அதனை வலுவேற்றிடவும் தான் என்பது ஒரு நுட்பமான பதிவு. விழாக்களின்போது தலித்களுக்கு  தொலைதூரத்தில் உணவு வழங்குகிற பாட்டீல்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்ணீர் தருவதில்லை. மஹர் சாதிப் பெண்களை வல்லுறவிற்கு உள்ளாக்கும் அவர்கள் மஹர்களின் வீடுகளில் சாப்பிடுவதேயில்லை. நீர் அரசியல் குறித்து ஆழமாக விவாதிக்க வேண்டும். சுத்தம் என்பதை மேல்சாதிக்கான குறியீடாக்கிக் கொள்வதால் சகலவற்றையும் சுத்தமாக்கிடும் தண்ணீர் தலித்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுக்குளங்களுக்குள் ஒன்றாகப் பரவிக் கிடக்கும் தண்ணீரைச் சென்றடைவதற்கான வழிகள் தனித்தனியே பிரிந்து கிடக்கின்றன. மாடுகள் புரண்டெழும் குட்டை யென்றாலும் அது மறுக்கப்படுகிறது. கோயில் நுழையவும் பொதுக்குளங்களில் நீர் எடுக்கவும் தலித்கள் இன்றுவரையிலும் போராடித் தீர்க்க வேண்டியிருக்கிறது.
‘‘அனார்யா’’ நாவல் முழுவதும் பசி ஒரு வஸ்துவைப் போல அலைந்து கொண்டேயிருக்கிறது. விருந்துகளில் எங்களுக்குத் தரப்படும் பாயசத்தை வெயிலில் காயவைத்து, அது கெட்டியான பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்வோம். எங்களுக்கு பசியேற்படும்போதெல்லாம் புளியங்காய் களைச் சாப்பிடுவதைப் போல சப்பிச் சாப்பிடுவோம். சரண்குமார் லிம்பாலேவின் பாட்டி சாந்தாமாயியின் பசித்தலையும் வயிறு மிகவும் குரூரமானது. மாட்டுக்கு வைக்கப்படுகிற கம்பரிசையை அது தின்று சாணி போடுகிறது. சாணியில் செரிக்காமல் கிடக்கிற கம்பரிசியை எடுத்து சேகரித்து கழுவி மாவாக்கி கழிகிண்டி சாப்பிடுகிறாள். மாட்டுச் சாணத்தில் கிடந்த கம்பரிசையைக் கூட தேடி எடுத்து கழுவிச் சாப்பிடும் சாந்தா மாயி தான் தன்னுடைய பேரன் சரண் பிணங்கள் போகிற பாதையில் கொட்டப்பட்ட கம்பரிசையை எடுத்து வந்தபோது அதனை ஆற்றில் கொட்டச் சொல்கிறாள். பசி வந்திட பத்தும் பறந்துபோகும் என்பது நிஜம் தான். ஆனால் உருவேற்றி மனங்களில் நிரப்பப்பட்டுள்ள சடங்குகளும், ஆச்சாரங்களும் பசியைவிட வலிமையானவை. இப்படியான சடங்குகளாலும், தொன்மக் கதைகளாலும் தான்சாதி எனும் வக்கிரம் கட்டமைக்கப் பட்டுள்ளது.
பிறந்த பொழுதிலிருந்தே பட்டினி கிடப்பதுதான் எங்களுடைய விதியாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் எந்த உணவையும் சாப்பிடாமலே எங்கள் சகோதரிகள் தூங்கிவிடுவார்கள். அம்மா தூங்குவதற்கு முன்பு எப்போதும் தண்ணீர் மட்டுமே குடிக்கிறாள். தாதா பீடி குடிப்பதன் மூலம் தன் பசியைப் போக்கிக் கொள்வார். சந்தை நாளன்று எங்களுடைய சகோதரிகள் பெரும்பாலும் தின்பண்டங்களை மட்டுமே திருடுவார்கள். எவரும் திருடுவதில்லை. பசியைத் தணிப்பதற்காக மட்டுமே திருடர்கள் ஆக உருமாறிப்போகிறார்கள். சரணின் சகோதரிகள் விருந்து கிடைக்கும் நாட்களின் போது தன்னுடைய தாயிடம் கேட்கும் கேள்விகள் மிகவும் வலுவானவை. அம்மா கடவுள் ஏன் நமக்கு கண் இரண்டு, கால் இரண்டு, காது இரண்டு படைத்ததைப் போல வாயையும், வயிறையும் இரண்டாகப் படைக்கவில்லை? கேள்விகளும், ஞானங்களும் பிறந்திடும் பசியின் நிமிடங்கள் அனார்யாவெங்கும் பரவிக் கிடக்கிறது.
மற்றைய தலித் வாழ்க்கைப் பகுதி கண்டிருக்கச் சாத்தியமற்ற வாழ்வை எதிர்கொள்கிறது சரணின் குடும்பம். தாதா என்றறியப்படுகிறவர் ஒரு முஸ்லிம். அவர் சரணின் பாட்டிக்குப் பிரியமானவர். ஒருவகையில் அந்தக் குடும்பத்தின் பசியைத் துரத்திடப் பேருந்து நிலையங்களில் மூட்டை தூக்குகிறவர். சரணின் பாட்டி சாந்தாமாஜிதான் நிஜத்தில் ‘‘அனார்யா’’வின்  கொதிக்கும் பக்கங்களை நிரப்பிச் செல்கிறவள். மாசாமயி சரணின் தாய். மஹராகப் பிறந்து பாட்டீல் களுக்கு வைப்பாட்டியாக வாழ்ந்து கொண்டிருப்பவள். தன்னுடைய தந்தையின் பெயரென ஊனுமந்த் பாட்டீலின் பெயரை எழுதியமைக்காக ஊரே திரண்டு சரணையும், அவருடைய ஆசிரியரையும் திட்டித் தீர்க்கிறது. பாட்டியும், தாயும் சாராயம் காய்ச்சி விற்பவர்களாகவும், பாட்டீல்களின் காம இச்சைக்குத் தன்னுடலை தின்னக் கொடுப்பவர்களாகவும் வாழ்ந்து தீரே வேண்டியிருக்கிறது. இங்குதான் சரண் எதிர்கொள்ளும் சிக்கல் உருவாகிறது. அவனுடைய மதம் எது என்பதில் எந்த ஒரு நிச்சயமான தன்மையும் வெளிப்படவில்லை. தாதாவின் நி¤ழலில் பஸ்ஸ்டாண்டிலேயே திரிகிற பையன் என்பதால் அவனை மற்றவர்கள் முஸ்லிம் என்று நினைக்கிறார்கள். சாந்தமாயியின் பேரன் என்பதால் சாதியில் மஹர் தான் என்று அறியப்படுகிறான். மாசாமயியின் பிள்ளை என்பதால் பாட்டீலின் வைப்பாட்டியின் மகனாகிறான். நான் யார் என்ற கேள்வியை நாவல் எங்கும் தேடியலைகிறான் சரண். அது அவன் கல்லூரியில் கல்வி கற்றுத் திரும்பி பணியில் சேர்ந்த நாள் வரையிலும்கூட தொடர்கிறது.
தலித் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில் இருந்தே சரணின் மனைவி வந்தபோதிலும், அவர்களும்கட சரண் சுத்தமான மஹர் இல்லையே என்று எண்ணுவார்களோ என தனக்குள் தவிக்கிறான். புறவயமாக நாவல் நகரும்போதிலும்கூட சரணின் மனதிற்குள் கொதித்தெழும் கேள்விகள் வாசக மனதினைப் புரட்டிப் போடுகிறது.
பிரியமற்ற தாயுடன் வாழவேண்டிய நிர்பந்தத்தை எதிர்கொள்ள முடியாத துயரம் மனதில் படிந்தே கிடக்கிறது. ஒரு நாள் இரவில் ஹனுமந்த் பாட்டீல் என்கிற சரணின் அப்பா என்று நம்பப்படுகிறவனும் மாசாமாயியுடன் இப்போது இருந்து வருபவனுமான காகாவும் ஒன்றாக சாராயம் குடிக்கிறார்கள். மாசாமாயி தான் இருவருக்கும் சாராயம் ஊற்றித் தருகிறாள். பலமுறை தன் தாயுடன் உடலுறவில் காகா ஈடுபடுவதை கண்ணுற்ற சரணின் கொதித்திடும் வார்த்தைகளை அவன் மட்டுமே அறிவான். ‘‘உணவுக்கும், காம வெறிக்கும் இடையில் மாசாமயி சிக்கிக் கொண்டாள். என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. என் அம்மாவை யார் காப்பாற்றுவார்கள்? யாராவதொரு வரின் காமவெறியைத் தீர்க்கும் பொருளாக களங்கப் படுத்தப்பட்டவளாக, அவள் சாகப் போகிறாள். ஆனால் நாங்கள் என்ன செய்வது? என் மீது உண்மையான அன்பைக் காட்டியதில்லை என் அம்மா. உண்மையான அர்த்தத்தில் அவள் என் அம்மாவே அல்ல.
அவளின் ஒரு பாதிதான் என் அம்மா. மறுபாதி பாட்டீலின் வைப்பாட்டி. நான் குடித்திருக்க வேண்டிய பால், பாட்டீலை அவளுடைய கைகள் தழுவிக் கொண்டிருந்தபோதே உலர்ந்து விட்டது. என் அம்மா என்னிடமிருந்து பறித்துக் கொள்ளப் பட்டாள்..’’ இந்த வரிகளைக் கடந்து வாசித்திட முடியாது தடுமாறினேன். எப்படியான வாழ்க்கையைப் பசியும், சாதியும்  மனித குலத்திற்கு வழங்கியிருக்கிறது என்கிற பெருந்துயர் நம்மைப் பெரும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ‘‘அனார்யா’’வை வாசித்த பிறகான நாளில் சோறும், வெள்ளைத் துணிகளும் அரக்க வடிவம் எடுத்து நம்மை நிலைகுலையச் செய்யப்போவது மட்டும் நிஜம்.
அனார்யாவிற்குள் காட்சிப்படுகிற பஸ்ஸ்டாண்ட் வெறும் பஸ்வந்து போகிற இடமல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது. எல்லாம் கலைந்து வெளியேறிய பிறகு சிதறிக்கிடக்கும் பயணச்சீட்டுகளே இருளில் ஒதுங்கிக் கிடப்பவர்களின் குறியீடு. வயிறு புடைத்து பேருந்து முழுக்க பொருட்களாக நிறைந்து வர வேண்டும் என்று காத்திருக்கிறது குடும்பமே. பல நாட்களில் ஒற்றைப் பொருள் கூட அற்று வருகிற பஸ் அவர்களுக்கு ஒரு மலடியைப் போலத் தோன்றுகிறது. ஒரு டீக்கு கூட வழியில்லாத நாளினை உருவாக்கித் தந்த அந்த பொருட்களற்ற பேருந்தை அவர்கள் சபிக்கிறார்கள். உணவும் சாராயமும்  இன்றைக்கு நிச்சயம் என்று வரப்போகிற பஸ்ஸிற்காக பெரும் நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கிறார் தாதா.
என்ன மாதிரியான வாழ்க்கையிது. இருபத்தைந்து வயது நிரம்பிய இளைஞனுக்கு கூட தன்னுடைய அண்ணன்களையும், அப்பாவையும் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் உயிருடன்தான் இருக்கிறார்கள். ஒரே பேருந்தில் அவர்கள் பயணம் செய்தால்கூட அவனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாது. தங்களுடைய வாழ்க்கை சாதியால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உணர்ந்த பிறகு பழைய மரபுகளுக்கு எதிரான போரினைத் துவங்கியிருக்கிறார்கள். போரில் தோல்வியடைந்தாலும் கூட அடி பணியமாட்டார்கள். மறுமுறையும் போர் புரிவார்கள். பெற்ற கல்வியும், பௌத்தமும் தனக்குப் பெரும் நம்பிக்கையாய் இருக்கிறது என்கிறார் சரண்.

Related posts