You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…

– டாக்டர்ஜேன்கூடல்

நேர்காணல்: மரியன்ஷெனால்

தமிழில்: இரா. நடராசன்

உலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக் கொண்ட விஷயம் மனிதக் குரங்குகள் பற்றிய சமூக ஆய்வு. காரல் சாகன் தனது அறிவியல் கட்டுரை ஒன்றில் (அது நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது) உயிரைப் பணயம் வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி என்று அதையே வர்ணித்தார். மனிதக் குரங்குகளான உராங்கொட்டான், கொரில்லா, சிம்பன்ஸிகளுடனே வாழ்ந்து வருடக்கணக்கில் அவற்றின் வாழ்க்கை ரகசியங்களை சமூகவியல் சாதனைகளை உலகிற்கு கொண்டு வருதல் சாதாரண வேலையல்ல. 1960ம் ஆண்டு மனிதக்  குரங்கிலிருந்து தொடங்கிய மனிதத் தோற்றம் குறித்த கல்வியாளர்  (Paleanthropologist)  லூயிஸ் லீக்கி தனது மாணவிகள் மூவரை இப்பணிக்கு கானகம் நோக்கி அனுப்புகிறார். லீக்கியின் தேவதைகள் (Leakey’s Angels) என்று அவர்களை அறிவியல் உலகம் அழைத்தது. அவர்களில் ஒருவர்தான் டாக்டர் ஜேன் கூடல். கானகத்தில் சிம்பன்சி மனிதக் குரங்குகளோடு இத்தனை ஆண்டுகளாகக் கலந்து வாழ்ந்து மனித இனத் தோற்றம் குறித்த மிக ஆழமான ஒரு ஆய்வை கள ஆராய்ச்சியை புதிய வாழ்முறையை அறிவியலுக்கு வழங்கி வருகிறார் கூடல். இம்மாதிரி கானக வாழ்வியல் ஆய்வாளர்களுக்கு ட்ரிமேட்ஸ் (Trimates) அதாவது ப்ரிமேட்ஸ் (primeds) விலங்குகளோடு கலந்து வாழும் ஆய்வாளர் என்று பெயர். உலகின் முதல் ட்ரிமேட் ஜேன் கூடல்தான்.
ஜேன் மோரிஸ் கூடல், 1934ல் ஏப்ரல் 3 அன்று லண்டனில் பிறந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1965ல் எந்த அடிப்படைப் பட்டமும் இன்றி நேரடியாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு எதினாலஜி எனும் மனிதத் தோற்ற இயலில் பிஎச்.டி. பட்டம் வென்றார் கூடல். அவ்விதம் நேரடி முனைவர்பட்டம் முடித்த உலகின் எட்டாவது (ரஷ்ய விஞ்ஞானி பாவ்லோவ் உட்பட) நபர் ஜேன் கூடல். கோம்போ (தான்சானியா) காடுகளில் இன்று வரை தொடர்ந்து சிம்பன்சிகளோடு அவர் வாழ்ந்து வருகிறார். உலகில் எவ்வளவோ இயற்கை கள ஆய்வாளர்கள் இருந்தும் அவர்கள் அனைவரிடத்திலிருந்தும் ஜேன் கூடல் வேறுபடுகிறார். சிம்பன்சிகள் தங்களது ஒரு இனக்குழு உறுப்பினராக கூடலை ஏற்றன என்பதே அந்த வேற்றுமை. அவ்விதம் மனிதக் குரங்குகளின் குடும்ப (குழு) உறுப்பினராக சிலகாலம் ஏற்கப்பட்ட இன்று வரையான ஒரே மனிதர் ஜேன் கூடல்தான்.   ஏனைய அனைத்துக் கள ஆய்வாளர்களிடமிருந்து அவரது ஆய்வு முற்றிலும் வேறுபட்டது. அவர் காகிதங்கள் மற்றும் குறிப்பெடுக்கும் எந்தக் கருவியும் இன்றி தனது அனுபவங்கள் மூலம் உலகிற்கு பரிணாமத்தின் முக்கிய படி நிலையைக் குறித்த நமது அறிவை  ஆழப்படுத்தியவர். தனது ஜேன்கூடல் பவுண்டேஷன் மற்றும் கூடல்கல்வியகம் மூலம் உலகின் லட்சக்கணக்கான இளைஞர்களை கானக பாதுகாப்பு நோக்கி தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தூண்டியவர். சிம்பன்சி மட்டுமல்ல பல்லுயிர் பாதுகாப்பு குறித்த பெரிய போராளியாக தன்னை முன்வைத்து அரசுகளுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தி கானகப் பராமரிப்பில் தனது வாழ்வை முழுமை செய்யும் கூடல் பொது அரங்குகளுக்குள் தன்னை முன் வைத்த அபூர்வ நேர் காணல் இது.                                                                                                                  (www.feminist.com)

கே: ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிம்பன்சிகளுடன் கலந்து மிக ஆழமான உயிரின சமூக ஆய்வில் முற்றிலும் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள். அதன் அடிப்படைகளை முதலில் சொல்லுங்கள்.
ப: மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்குமான பரிணாமப் படி நிலை பற்றி அவற்றின் முதல் மாதிரி ஒன்றைப் பார்த்தறியாத காலத்தில் சார்லஸ் டார்வினால் நிலை நாட்ட முடிந்தது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் மனிதக் குரங்குகள் ஆசிய ஆப்பிரிக்க கானகங்களிலிருந்து ஐரோப்பாவ¤ற்கு வந்தடைந்தன. பெரிய உடல்வாகு மனிதக் குரங்குகள் குறுகிய உடல்வாகு மனிதக் குரங்குகள் என பிரித்தறிகிறோம். இப்போது ஹோமினிட்ஸ் எனும் வகைப்பாடு அவைகளைக் குறிப்பது. மனிதனுக்கும் ஹோமினிட் உயிரினங்களுக்கும் இடையில் இருந்த படிநிலை மனித உறவு உயிர்களைத் தோற்றவியலாளர்கள் ஹோமினின் என்றழைக்கிறார்கள். வால்உதிராத மர வானரங்களிலிருந்து மனிதக் குரங்குகள் வேறுபடுகின்றன. காரணம் அவைகளின் நீடித்த வாழ்நாளாகவும் இருக்கலாம். குறிப்பாக அதிக எடைகொண்ட உடல்வாகினால் அவை கீழ்க்கிளைகளில் தங்கிவிட்டன. நீளும் வாழ் ஆண்டுகளின் காரணமாக அதிக எடை கொண்ட பெருத்த மூளை கொண்டவை அவை.

கே: தற்போது வாழும் உயிரினங்களில் மனித நடத்தைகளுக்கு மிக அருகே உறவுப் பாலமாக இருப்பவை சிம்பன்ஸிகள் அல்லவா?
ப: பொதுவாக பெரிய மனிதக் குரங்குகள் மூன்று வகை. உராங்கொட்டான், கொரில்லாக்கள் மற்றும் சிம்பன்சிகள். பெயர் சுட்டுவதுபோல இவை இருக்கும் குரங்கு வகைகளிலேயே பெரியவை. சில ஆண் கொரில்லாக்கள் 200 கிலோ எடை வரை கூட பெரிதான உடல்வாகு கொண்டவை. இவை பிறவிலங்கினங்கள் போல இல்லாமல் மரத்திலோ, தரையிலோ மெத்தைபோல இலை இருகுகூடுகள் அமைத்து படுக்கையாகப் பயன்படுத்துகின்றன. இனக்குழுக்களாக வாழ்கின்றன. இவை மட்டும் ஒன்றையொன்று விரட்டிச் செல்லும்போது மனிதர் போலவே சிரிப்பொலியை நீ¦ங்கள் கேட்கலாம். அடிவயிறு கை அடி போன்ற பாகங்களில் கிச்சு கிச்சு மூட்டினால் மனிதன் போலவே இவை சிரிக்கும் எனுமளவு நமக்கு நெருக்கமான உடல்வாகு உண்டு. அதிலும் சிம்பன்சி நம்மோடு சமிக்ஞை உரையாடல் மேற்கொள்ளுமளவு மொழிப் புரிதல் கொள்ளமுடிகிறது. கண்ணாடிகாட்டினால் தனது முகத்தை இனங்கண்டு பிடிக்க சிம்பன்சியால் முடியும். இனக்குழு அரசியலின் மிகக் கச்சிதமான விதிகளையும் மனித இயல்பு பலவற்றின் ஆதாரக் கூறுகளையும் நாம் சிம்பன்சி குடும்பக்குழு அமைப்பில் காண்கிறோம். இந்த விஷயத்தில் மட்டுமல்ல. 99 சதவிகிதம் சிம்பன்சிகளின் மரபணுக்கள் மனித மரபணுக்களிடமிருந்து வேறுபடவில்லை.

கே: உங்களது ஆய்வு எப்படித் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே உங்களுக்கு மனிதக் குரங்குகளைப் படித்துப் பழகிப் போனது என வாசித்திருக்கிறேன். அது உண்மையா?
ப: என் மிகச் சிறு வயதில் என் தந்தை எனக்கு ஒரு சிம்பன்சி பொம்மையைத் தான் பரிசாக வழங்கினார். நான் டெடி கரடியோடு குழைந்த குழந்தை அல்ல. சிம்பன்சிக்கு நான் ஜுபிலி என்று பெயரிட்டு என் விளையாட்டுகளின் கற்பனை தோழமையாக்கினேன். அந்த பொம்மை உண்மையான சிம்பன்சியின் அளவினதாக இருந்தது. என் தாயின் தோழியர்களில் சிலர் அதைக் கண்டு பயந்தனர். விலங்குகள் குறித்த எனது ஈர்ப்பு ஜுபிலியை அணைத்தபடி படுத்துறங்கிய எனது மழலைப் பருவத்திலிருந்து தொடங்கிவிட்டது. பதினைந்து வயதில் விலங்கியல் என்னை ஆப்பிரிக்காவை நோக்கி ஈர்த்தது. 1957 என்று நினைக்கிறேன். கென்யாவில் மழை விளாசிய ஒரு அதிகாலை மனிதத் தோற்றஇயல் வல்லுநர் லூயிஸ் லீக்கியின் முன்நின்றிருந்தேன். விலங்குகளுடனான அவரது முனைப்புகள் பற்றி என் கென்ய நண்பர் வழியே அவரது பண்ணையில் சுற்றித் திரிந்த நாட்களில் அறிந்து கொண்டிருந்தேன். லூயிஸ்சும் அவரது துணைவியர் மேரிலீக்கியும் உருவில் பெரிய வகை மனிதக் குரங்குகள் குறித்த சமூகவியல் நேரடிக் கள ஆய்வில் தீவிரமாகப் புள்ளி விபரங்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். என்னையும் ஒரு ஆய்வாளராக ஏற்று எனக்குப் பயிற்சி அளித்தார்கள். லூயிஸ் என்னை தான்சானியா சென்று சிம்பன்சி ஆய்வுகளில் ஈடுபட என் தாயை துணைக்கு அழைத்துக் கொண்டு செல்ல அனுமதியுடன், அனுப்பினார் வருடம் 1960.

கே: ஆனால் உங்களோடு மேலும் இருவர் கள ஆய்வில் இணைந்திருந்தார்கள் அல்லவா?
ப: ஆமாம். மூவகைப் பெரிய உருக் குரங்குகளுக்கு ஆய்வு செய்ய நாங்கள் மூவர். நான் தான்சானியா போனதுபோல, டியான்ஃபோஸி கொரில்லாக்களை ஆய்வு செய்ய காங்கோ சென்றார். பைருத் கால்டிகாஸ்,  உராங்கொட்டான் ஆய்வுகளுக்காக போர்னியோவுக்கு அனுப்பப்பட்டார். எங்கள் நோக்கம் அவைகளோடு கலந்து சிலகாலம் பாதுகாப்பான தொலைவில் கிட்டேயே வாழ்ந்து அவைகளது நடத்தைகளை உன்னிப்பாகப் பதிவு செய்தல். இது மாதிரி இன்று பல விலங்கினங்கள் குறித்து ஆய்வுகள் உள்ளன. ஆனால் அன்று எங்களுக்கு முன்னால் அப்படி ஒரு ஆய்வு இருக்கவில்லை. அதனால் லீக்கியின் ஆரம்பகாலப் பதிவுகள், மனிதப் பண்பாட்டியல், பரிணாமவியலை சமூக கலாச்சார அடிப்படைகளோடு இணைக்க ஆய்வாளர்கள் திரட்டி இருந்த சில விபரங்கள் தவிர வேறு எந்த உதவியும் இல்லை. எனக்கான ஆய்வு முறைகள் பதிவு செய்யும் அமைப்பாக்கம் என எல்லாவற்றையும் நானேதான் உருவாக்கிக் கொண்டேன்.

 கே: உங்களுக்கு முன் நடந்த அந்தப் புள்ளி விபர சேகரிப்புகள் ஆய்வுப் பதிவுகள் ஏன் உங்களுக்குப் பயன்படவில்லை.
ப: ஒரு முக்கியப் பிரச்சனை.. அந்த விபரங்கள் எல்லாமே விலங்குக் காட்சி சாலைகளில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சிகளை நீண்டநேரம் கண்காணித்துப் பதிவு செய்யப்பட்டிருந்தன. சிம்பன்சி மனிதனைப் போல இனமாக குடும்பமாக குழுவாக வாழும் உயிரினம். நமது பெரிய குழுவின் ஒரு நபராக பங்களிப்பாளராகவே நாம் நமது நடத்தைகளை முன் வைக்கிறோம். அவ்வாறு இன்றி தனிமைக் கூண்டில் அகப்பட்ட ஒரு காட்சி சிம்பன்சியின் அங்க அசைவுகள் உங்களுக்கு ஏற்படுத்தும் ஒரே அர்த்தம் அச்சம்… கோபம்.. அளவற்ற ஆத்திரச் செயல்பாடு தவிர வேறு ஏதுமில்லை. சிம்பன்சியைக் கம்பிகளுக்கு மறுபக்கம் இருந்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் அதன் இயல்பிற்கு தங்களைப் பார்வையாளராக்கி கல்லெறிந்தால் என்ன செய்யும், கழி எரிந்தால் என்ன செய்யும் என ஒரு நோக்கமும் இல்லாத பரிசோதனை களை உளவியலாளர் மாதிரி செய்திருக்கிறார்கள். இது இரண்டாம் பிரச்சனை.
கே: ஆனால் நீங்கள் சிம்பன்சிகளின் வாழிடத்திற்கே சென்று ஆய்வு செய்தீர்கள் அல்லவா?
ப: அது மட்டுமே அல்ல. 1960ல் கோம்பே தேசியப் பூங்கா என இன்று தான்சானியாவில் அழைக்கப்படும் கானகத்தில் கசகெலா சிம்பன்சி குழுமத்தை ஆய்வு செய்ய நான் ஆரம்பித்த அந்த நாட்களில் எனக்கு கல்லூரிக்கல்வி கூட கிடையாது. அறிவியலாளர்கள் போல நான் ஆராய்ச்சி செய்யவில்லை. நான் அவர்களோடு வாழ்வதென்று முடிவு செய்தேன். எனது ஆய்வு வேறுபட்டதற்கு அதுவே பிரதான காரணமாகிப் போனது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இன்று வரை என் ஆய்வுமுறையே சரி என நிரூபணமாகி உள்ளது.

கே: இதை சற்று விரிவாக விளக்க முடியுமா?
ப: உதாரணமாக அவர்களுக்கு ஏனைய ஆய்வாளர்கள்போல் நான் எண் இடவில்லை. பெயர் வைத்து அழைத்துப் பழகினேன். மனிதர்கள் தான் ஆளுமைத்திறன் வளர்த்துக் கொள்பவராகவும், இன்பதுன்பம் சார்ந்து எண்ண அலை மிக்கவராகவும் இருப்பர் என்பது உண்மையல்ல. டேவிட் கிரேபியர்ட், கிகி,.மைக், கோலியாத்… ஃபிஃபி  (fifi)இவர்களெல்லாம் எனது சிம்பன்சி தோழர்கள். எனது வாழ்முறையில் இவர்களுக்காக நான் கண்ட மாற்றம் இவர்களை எனது அற்புத சகாக்கள் ஆக்கியது. டார்வின் ஒரு லட்சம் முறை வெற்றிபெற்றதை நான் வாழ்ந்தறிந்தேன்.
கே: அவர்களது இனக்குழு உங்களை ஒரு அங்கத்தினராக ஏற்றது அல்லவா?
ப:என்னை முதலில் ஏற்றது டேவிட் கிரேபியர்ட்தான். சில வாரங்கள் கடந்த பின் நான் நீட்டிய கடலை விதைகளை முதலில் ஏற்றுப் பிறகு வேண்டாமென முடிவு செய்து அதைத் தூக்கி எறியாமல் என் கையைப் பிடித்து நீட்டி என் உள்ளங்கையில் வைத்து அழுத்தி மூடி என்னை சகா ஆக்கிக் கொண்ட தருணம் என் வாழ்வின் என் ஆய்வின் வெற்றித் தருணம். அந்த இனக்குழுக்கள் தலைமை ஆண் சிம்பன்சிகளால் கடும் சட்டங்களுடன் ஆளப்படுகின்றன என்பதையும் அந்த ஆல்ஃபா ஆண் (நான் வைத்த பெயர்) அந்தக் குழுவில் யார் என்பதையும் நான் விரைவில் அறிந்தேன். அந்த சிம்பன்சி தான் கோலியாத் டேவிட்டின் நண்பன். அதே குழுவில் பெரிய ஆண் ஹம்ப்ரி. கிகி எனும் பெண் சிம்பன்சிக்கு குழந்தை இல்லை. ஆனால் அக்குழுவின் குழந்தைகளை ஒரு தாதியாகப் பார்த்துக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம். ஃபிஃபி தான் பிரதான தாய். ஆனால் ஃபுளோ என்றும் ஒரு பெண் (சிம்பன்சி) உண்டு. நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம்.

கே: ஒரு சிம்பன்சி இனக்குழுவிற்குள் அனுமதிக்கப்பட்ட முதல் மனிதர் நீங்கள். எவ்வளவு காலம் அக்குழுவில் இணைந்திருந்தீர்கள். இப்போதும் தொடர முடிகிறதா?
ப: இருபத்திரண்டு மாதங்கள் நான் அந்த சிம்பன்சி குழுவில் உள்ளதிலேயே கீழான படிநிலைவாசியாக வாழ அனுமதிக்கப்பட்டேன். உண்மையில் டார்ஜான் சினிமாவில் வருவதுபோல நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். அப்படி சினிமாக்களில் லாவகமாக மனிதன்  கைப்பிடித்து நடந்து தோளில் ஏறிக் குதித்து விளையாடும் அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் ஏதோ சிம்பன்சி என்றால் ஆபத்தற்ற நட்பு ரக மனிதக் குரங்குகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. அது பொய். சிம்பன்சி ஆண் குரங்குகள் பயங்கர வளர்ச்சி அடைந்த முரட்டு விலங்குகள், அலறிக் கூப்பாடுபோட்டு திடீரென்று கடும்பலத்தோடு இனக்குழுவில் யாவரையும் உதைத்துக் கடித்து  துவம்சம் செய்யும் அந்தக் கானக வன்முறையாளனைத் தோளில் அனாயாசமாக சுமந்து மரம் விட்டு மரம் தாவ நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். அந்த இனக்குழுவில் நான் நுழைந்து ஏற்கப்பட்ட மூன்றாம் நாள் மைக் எனும் ஆண் சிம்பன்சி மிகவும் தந்திரமான தனது தாக்குதல்களால் என்னையும் சேர்த்து பதினாறு பேர் இருந்த அந்த இனக்குழுவில் கோலியாத்தை வீழ்த்தி ஆல்ஃபா தலைமை ஆண் சிம்பன்சியானது. இது போன்ற ஏறத்தாழ எழுநூறு சிறியதும் பெரியதுமான சம்பவங்களை நான் பதிவு செய்திருக்கிறேன். மனித இனக்குழு அரசியல் போலவே அங்கு இனக்குழுக்களின் இட ஆக்கிரமிப்பிலிருந்து பலவற்றை நேரடியாக அறிய முடிந்தது. ஆரம்பத்திலேயே புரோடோ என்ற ஃபிஃபியின் இரண்டாவது வயதான ஆண் சிம்பன்சி என்னை ஆக்ரோஷமாய் தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. புரோடோ ஆல்ஃபா தலைமை ஆண் சிம்பன்சி ஆன போது, என்னை அந்த இனக்குழுவிலிருந்து வெளியேற்றியது என்றால் சிம்பன்சிகளின் நடத்தை இயல்புகளை நீங்கள் கணித்துக் கொள்ளலாம். அவர்கள் மனிதர்கள் போல வாழ்கிறார்கள்.

கே: சிம்பன்சி ஆய்வில் உங்களது முக்கிய கண்டுபிடிப்புகள் என்ன?
ப: முதல் பத்தாண்டுகள் என்று கூட சொல்லலாம். நான் சிம்பன்சிகள் மிகவும் சாதுவான நட்பு மிக்க சமூக நடத்தை கொண்டவை என்றே கணித்தேன். ஆனால் முதல் விஷயம் அவர்களுக்குள் கூட்டமாகத் திட்டமிட்டு ஒரு ச¤ம்பன்சியைத் ‘தீர்த்துக் கட்டுவதை’ப் பார்த்தேன். சிம்பன்சிகள் கூட்டமாக வேட்டையாடுகின்றன. மறைந்து காத்திருக்கும் தனது சகாக்களை நோக்கி சிறு விலங்குகளை ஒரு சிம்பன்சி விரட்டுகிறது. தருணம் பார்த்து மற்றவர்கள் தாக்குகிறார்கள். வேட்டைக்கு கருவியாக கழி, கற்கள் பயனாகும் என்பதைப் பிறகு ஒரு நாள் அறிகிறேன். மனிதக் குரங்கு மனிதனாய் உருவெடுத்த இடைநிலைப் படியில் ப்ரிமேட்ஸ் (primates) இடத்தில் இருப்பவை சிம்பன்சிகள். புலோ என்கிற பெண் சிம்பன்சிக் குழுவில் தன் கை உயர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக மற்ற பெண் சிம்பன்சிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பலவற்றை திட்டமிட்டுக்  கொல்வதை நான் பார்த்தேன். டார்வினுடைய ‘‘காலத்திற்கு பொருத்தமானவையே தங்கிப் பிழைக்கும்” என்கிற பதத்திற்கு புது அர்த்தத்தை நான் கண்டேன். சமிக்ஞைகள் மூலம் அவைகளது மொழி கலாச்சாரம் அறிந்து நான் வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில், அவர்களது தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி பெற்ற, வாழ்ந்து பிற்கால மனித ஆக்கிரமிப்பால் அழிந்த அடுத்த படிநிலையான ஹேமினிட்ஸ் (Honinids) வகை மனித உயிரிகள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் எப்படி அழிந்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பலவற்றை வரிசைப்படுத்தி உணர முடிந்திருக்கிறது. சிம்பன்சிகள் புலாலும் உண்ணும்  என்பதே பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. 1986ல் சிக்காக்கோவில் மனிதக் கயவர்களால் பிடித்துக் கூண்டிடப்பட்ட 60 சிம்பன்சி குட்டிகளைப் பார்த்தபோது நான் சிம்பன்சி இனத்தைக் காப்பாற்றி கானக அழிவுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை டெமாஸ்கஸ் மாநாட்டில் எடுத்தேன். வேகமாக மனிதக் குரங்கு இனங்களை மனிதனே பேரழிவுக்கு உட்படுத்துகிறான் என்பதும் முக்கிய கண்டுபிடிப்பாகி இப்போது மொத்தமே உலகில் 2117 சிம்பன்சி எண்ணிக்கைத் தான் மிச்சமுள்ளது. பில்லியன் கணக்கான மனிதத் தொகையோடு ஒப்பிட்டுப் பாருங்கள் நாம் அவர்களை அழித்து வரும் வேகம் புரியும்.

கே: உங்கள் புதிய புத்தகம் ஹோப் ஃபார் அனிமல்ஸ் அண்டு தேர் வேர்ல்டு (Hope for animals and their world)  விரிவாக வன விலங்குப் பாதுகாப்பு குறித்துப் பேசுகிறது. நமது நகர் மயமான வாழ்முறை அன்றாட நுகர்வு அமைப்பு இவை கானக அழிவோடு தொடர்புடையது என்று பதறி  இருக்கிறீர்கள். அது குறித்து சொல்லுங்கள்.
ப: காடுகள் அழிவு என்பது வெறும் மரம் வெட்டி விற்கும் விஷயமல்ல. உயிரின அழிவாக அது இன்னமும் உணரப்படவில்லை. உலகிலேயே இந்தப் பேரழிவை முன்னெடுத்துச் செல்வதில் உங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பெரிய பங்கு உள்ளது. ஒரு அமெரிக்கப் பிரஜை நுகரும் நாள் ஒன்றுக்கான உணவு எண்ணையிலிருந்து பயன்படுத்துகிற உடல் வாசனைத் திரவியம் வரை உலக கானக அழிவுக்குத் துணைபோவதை யாருமே உணரவில்லை. அதீத நுகர்வு யுகத்தில் காங்கோவுக்கோ, காம்பியாவுக்கோ போய் கானகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றில்லை. உங்கள் அன்றாட வாழ்வின் அவசியமற்ற பொருட்களை பட்டியலிட்டுப் பாருங்கள். வாங்கிப் பயன்படுத்த தூக்கி எறி மறுபடி வாங்கு எனும் விற்பனை கலாச்சாரம் இறுதியாக முற்றிலும் அழிப்பது மிச்சமுள்ள கானகங்களைத்தான். இவ்வகைகள் அழிவுக் காலநிலையில் அதிர்ச்சி மாறுதல்களை ஏற்படுத்தும் யதார்த்தம் புரிந்த பிறகும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நாடுகள் மீது பழியை சுமத்தும் போக்கும் இவ்வகை அழிவைத் தடுக்கப் பாடுபடும் நிதியங்களின் மீது திட்டமிட்டு வழக்குப் போடும் கொடுமையும் தொடர்கிறது. நான் அடுத்த தலைமுறையிடம் முறையிடுவதெனத் தீர்மானிக்கிறேன்.

கே: அதற்கான அமைப்புதான் ரூட்ஸ் அண்டு ஷுட்ஸ் (Roots and Shoots)  அல்லவா?
ப: எனக்கு கிடைத்த ஆதரவு… எனக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது சிம்பன்சி இன பாதுகாப்பிற்கு கிடைத்ததுதான். அதைக் கொண்டு கூடல் கல்வியகம்(Jane goodal Institute)
மற்றும் இளைய தலைமுறையினருக்கான ரூட்ஸ் அண்டு ஷுட்ஸ் நாங்கள் தொடங்கினோம். குழந்தைகள் எப்போதுமே விலங்கு நேசிப்பாளர்களாக. பேரழிவு பற்றி புரிந்ததுமே எதிர்ப்பாளராக மாறி களத்தில் இறங்க முயற்சிக்கிறார்கள். ரூட்ஸ் அண்டு ஷுட்ஸ் அமைப்பில் இன்று உலகெங்கும் 10,000 குழுக்கள் உள்ளன. அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க சிறுசிறு செயல்திட்டங்களைக் கையில் எடுக்கும் இனக்குழுக்கள் அதற்கான நிதி சிறு அளவில் திரட்டிப் பிடிவாதமான முனைப்புடன் அவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கிருந்தபடி செயலில் இறங்குகிறார்கள். எங்கோ காங்கோ காடுகளின் ஒரு உயிரினப் பாதுகாப்பிற்கு தத்தெடுத்து அதேசமயம் உள்ளூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கையிலெடுக்கும் இந்த சிறுவயது தலைமுறை மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்..

கே: இவ்விஷயத்தில் அரசியல் ரீதியிலான செயல்பாடு தனிமனித செயல்பாடு இவைகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?
ப: இது மிகவும் அவசியமான கேள்வி. நாங்கள் வெறுமனே ஒரு பேனரைக் கட்டி கூப்பாடுபோட்டு  முழக்கமிட அவர்களைப் பயன்படுத்தவில்லை. உள்ளூர் அதிகார அமைப்பிடம் ஒரு விஷயத்தை முறையிடும் மனு கடிதங்கள் எழுதவும் பாதிப்படைந்த பொது ஜனங்களிடம் சென்று முறையாக கையெழுத்துப் பெற்று ஒரு விஷயத்தை எப்படித் தீர்வை நோக்கி எடுத்துச் செல்வது என்பதை அவர்களுக்கு பயிற்சி கொடுத்து களத்தில் இறங்கப் பழக்குகிறோம். உலக அளவில் யோசி உள்ளூர் அளவில்  செயல்படு (Think globaly, act Locally)
என்பது மாதிரி அல்ல இது. உள்ளூர் அளவிலான பிரச்சனைகளுக்கு உலக அளவிலான பேரழிவு வர்த்தகமே காரணம் என்பதை உணர்ந்து செயல்படுவது இது. மனித வாழ்வில் குறுக்கிடு. உள்ளூர்  அழிவில் குறுக்கிடு. சாதாரண மனிதர்கள், அடிநிலை உழைப்பாளிகளிடம் செவிமடு.. செயல்படு.

கே: டார்வின் கோட்பாடு இன்று கூட பொருத்தமானதுதான் என்று கருதுகிறீர்களா?
ப: கோடிக்கணக்கான அளவில் பாறைப் படிவ ஆதாரங்கள் நேரடியாக நம் கண்முன் தெரியும் யதார்த்த உண்மைகள் கடந்தும் இக்கேள்வி தேவையா என்று ஆச்சரியமாக உள்ளது. டார்வின் கோட்பாடு ஒரு அறிவியல். அதற்கு நேற்று ஒரு பொருத்தம் இன்று ஒரு பொருத்தம் என ஏதுமில்லை. நமது வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடும் சொல்கிறது. டார்வின் கோட்பாடே சரி.

கே: மனித இனம் இன்னமும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறதா?
ப: இருக்கலாம். முதலில் உடலியல் பரிணாமம், பிறகு மொழி அறிவியல் சமூக பொருளாதார பரிணாமம். இப்போது இப்புவியின் உயிரினப் பாதுகாப்பும் அவற்றோடு நாமும் இணைந்து புவி பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரத் தலைப்படும் ஒருவகைப் புரிதலும்கூட பரிணாமப் படிநிலைதான்.  பல ஆயிரம் வருட பரிணாமவளர்ச்சி என்பது இது எல்லாம் தான். அறிவியல் இவற்றையும் முனைந்து விளக்கும் ஆற்றல் பெற்றுள்ளதே. இப்படி உங்களைக் கேட்க வைத்துள்ளதே… டார்வின் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார் என்று தான் அர்த்தம்.

Related posts