You are here
கடந்து சென்ற காற்று மற்றவை 

இலட்சியங்கள் கனவுகள் மயக்கங்கள்

ஒரு இதழில் கட்டுரை எழுதுவதற்காக எழுத்தாளர் அமரர் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலை சமீபத்தில் மீண்டும் ஒருமுறை வாசிக்க நேர்ந்தது. அல்லது வாய்த்தது.அந்த வாசிப்பு அனுபவம் பகிர்ந்துகொள்ளத் தக்கது .
அதற்கு முன்னதாக, என்னுடைய சிறிய முன்னுரை ஒன்று உள்ளது.
நான் குறிஞ்சி மலரை முதன் முதலாக வாசித்தது 1972இல். கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். முதலில் நா.பா.வின் பொன்விலங்கு வாசித்தேன்.அதன் இயல்பான அடுத்த கட்டமாக குறிஞ்சி மலரைக் கையில் எடுத்தேன். இவ்விரு நாவல்களும் என் வாழ்க்கையில்  திருப்புமுனையை ஏற்படுத்திய நாவல்கள் என்பேன். பொன்விலங்கில் வரும் சத்தியமூர்த்தியையும் குறிஞ்சி மலரின் நாயகன்  அரவிந்தனையும் அப்போது நான் கதாபாத்திரங்களாக உணரவில்லை. கதையில் இருந்த அவர்களின்  ‘பூமிக்கு வந்த அசல் வடிவமாக’ என்னையே நான் உணர்ந்தேன். உண்மை, நேர்மை, சத்தியம், லட்சியம், இலக்கியம் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு அரவிந்தன் அன்று ஜி.வி.என்.கல்லூரிக்கு  சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். கோவில்பட்டித் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தான். கவிதைகள் எழுதிக் கொண்டும் அவற்றை நடந்து செல்லும்  வழியெங்கும்  விதைத்துக்கொண்டும் திரிந்தான். லட்சியவாத சமுத்திரத்தில் நீந்திக்கொண்டிருக்க மேலும் விருப்பம் கொண்டு வி.எஸ்.காண்டேகரின் நாவல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அதன் நீட்சியாக காந்திஜியின் மீது அளவற்ற பக்தி கொண்ட இளைஞனாக என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு அக்டோபர் 2 மற்றும் ஜனவரி 30 களில் மௌன விரதம் / உண்ணாவிரதம்  இருந்து, சக மாணவர்களின்  கேலிப்பொருளாக ஆனாலும் தலை நிமிர்ந்து, சிறு புன்னகையால் அவர்களைப் புறந்தள்ளி நடந்து கொண்டிருந்தேன். பக்கம் பக்கமாக டைரிகளில் எழுதித்தள்ளிக்கொண்டிருந்தேன்.
குறிஞ்சி மலர் நாயகி பூரணியும் நானும் மழைக்கால மாலைப்பொழுதுகளில் ஒரு குடையின் கீழ் பலமுறை நடந்திருக்கிறோம் – கண்ணியமான இடைவெளியுடன்.அப்படி நடந்து சென்றபோதுகளில் பூரணியின் மஞ்சள்நிறப் பாதங்களைப் பார்த்தபடியேதான் நான் நடப்பேன். என்னுடைய கவிதைகளை நான் சொல்லிக் கேட்க அவளுக்கு மிகவும் பிடிக்கும். பூரணியின் கால்களில் செருப்பிருக்காது.ஆகவே நானும் மூன்றாமாண்டு படிக்கும்வரை செருப்பணியாத பாதங்களோடுதான் நடந்துகொண்டிருந்தேன்.
பூரணி இலக்கியச்சொற்பொழிவுகளுக்காக இலங்கைக்குப் போயிருந்த நாட்களில், நான் நாட்டுக்காக உயிரைவிட வேண்டும் என்று முடிவு செய்து, இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன். ஆகையால் என்னை ராணுவத்துக்கு வழியனுப்ப பூரணியால் வர இயலவில்லை. முருகானந்தமும், மங்களேஸ்வரி அம்மாளும் மீனாட்சிசுந்தரம் அய்யாவும், வசந்தாவும் ரயில் நிலையத்துக்கு வந்து வழியனுப்ப, நான் இமயமலை உச்சியில் நதுல்லா செக்டரில் இந்திய-சீன எல்லையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தேன். நீளநீளமான கடிதங்களில் பூரணியுடன் வாதித்துக் கொண்டிருந்தேன் -என் லட்சியங்களை.
நிற்க. சென்ற மாதம் குறிஞ்சி மலரை  மீண்டும் வாசிக்கையில் ஒருவித மனப்பிறழ்வு ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும்.ஒரு மனிதனாக, ஒரு மனசோடு அதை வாசிக்க முடியவில்லை. ஆம்.இரண்டு பேராக அதை வாசிக்க வேண்டியிருந்தது. இன்றைய நானும் அன்றைய நானுமாகப் பிளவுண்ட மனநிலைகளுக்குள் மாறி மாறிப்போய்க்கொண்டிருந்தேன்.தமிழ் சினிமாக்களில் வரும் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியாக (ரா..ரா….) மாறி வாசித்தேன். பூரணி மதுரைத்தெருவில் மயங்கி விழவும் கரெக்டாக மங்களேஸ்வரி அம்மாள் வருவதும் அக்காட்சியை கரெக்டாக நேரில் பார்க்கும் அரவிந்தன் அதைக் கவிதையாக எழுதுவதும் தமிழ் சினிமாவில் வருவதுபோல எனக்குப் பெரும் நகைப்பை உண்டாக்குவதாக இருந்தது. நம்பும்படியாக நாவலில் எதுவுமே இல்லாததுபோல இருந்தது. அன்று மயக்கம் தந்த பூரணியின் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் இன்று வாசிக்கையில், நான் அறவே ஒதுக்கும் பக்தி ரசம் சொட்ட ஆண்களைப்போலவே மேடைத்தமிழில் பேசும்  பெண் சொற்பொழிவாளர்களில் ஒருத்தியாக ச்சேய்….என்று பூரணியைக் காட்டியது.இருந்தாலும் பழைய காதலியை விட்டுக்கொடுக்க விரும்பாத ஒரு மனசும் உள்ளே கூடவே ஓடிவந்து இம்சைப்படுத்திக் கொண்டிருந்தது. சரி.. இது பிடிக்கலேன்னா அரவிந்தனுக்காக உருகும் அவளோட  மனசைப்பாரு..அவளுடைய சத்திய ஆவேசத்தைப் பாரு..  என்று ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. இன்றைய நான், அது காட்டும் ஒவ்வொன்றையும் யதார்த்தவாதப் புறங்கையால் தள்ளிக்கொண்டேயிருக்க, நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு பெரிய வெறுமை உணர்வு மனதைக் கவ்விக்கொண்டது. இதைப்படித்தா  அவ்வளவு கனவுகளோடு அலைந்தாய் என்று என்னை நானே கேலியோடு பார்க்க நேர்ந்தது. ஒரு சின்ன லட்சியவாத நாவலில் தடுக்கி விழும் பூஞ்சையாகவா நான் இருந்தேன் என்கிற வெட்க உணர்வும்கூட வந்தது.
ராணுவ வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு மிடறு மது அருந்திய இரவில் என் மனச்சாட்சி – (அரவிந்தன் எப்படிக்குடிக்கலாம்?)  என்னைக் கொன்று எடுக்க, குற்ற மனதோடு ஒருவாரம் அலைந்து, பின் அதை மறக்க என்று மீண்டும் ஓர் இரவில் மீண்டும் ஒரு மிடறு (ஒரு பெக்) அருந்த.. ஒவ்வொரு மிடறும் எனக்குள் இருந்த காந்திஜியை நகர்த்தி நகர்த்தி வெளித்தள்ளியே விட்டதை நினைத்து சிரிப்பும் வேதனையும் ஒருசேர வந்தது.  இப்படித்தான் எல்லோரும் காந்தியை வெளியேற்றிவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள் போலும். ஒரு மிடறு உள்ளே போனதும் ஓடிப்போகிறவராக அவரும் இருக்கலாமா?
இப்போது அறிவியல் பூர்வமாக யோசித்துப் பார்க்கிறேன். 1972இல் நான் குறிஞ்சி மலர் வாசித்த நாட்களில் என்னைப்போலவே ஒரு இளைஞன்- சக மாணவன்-கிருஷ்ணசாமி என்று பெயர். நா.பா.வை வாசித்துக் கொண்டிருந்தான். அவ்வாசிப்பு அலை வரிசையால் நாங்கள் இருவரும் நண்பர்களானோம். நாங்கள் வாசித்ததை விவாதிப்பதும் மீண்டும் வேறொன்றை வாசிப்பதும் என்று கனவுலகில் மிதந்தோம். அதே சமயம் அவனும் பூரணியை விரும்பியதால் அவனை உள்ளூர வெறுக்கவும் செய்தேன்.ஆணின் காதல் எப்போதும் உடமை உணர்வு கொண்டதல்லவா?
தவிர, என்னுடைய தமிழ்ப்பேராசிரியர்-
சிங்காரவேலர்-என்னைக் காண்டேகரின்  எரிநட்சத்திரம் நாவலில் வரும் தீவிர இளைஞனாக உயர்த்தி வைத்து நான் இல்லாதபோது என் சக மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டு  இன்னும் உணர்ச்சிவசப்பட்டவனாகி, அப்புறம் அவர் கட்டமைத்த அந்தப் பிம்பத்தைக் காக்கும் பொறுப்பும் சேர்ந்துகொண்டது. அன்று பேனா நண்பர்கள் என்றொரு பொது சமூகம் இருந்தது. இன்றைய முகநூல் நட்புபோல.அதில் எனக்கு ஓரிரு பெண் நண்பர்களும் இருந்தார்கள். பூரணி மீது ரொமான்ஸ் கொள்ள முகம் காணாத  அந்தப் பேனாப் பெண்களின் உறவும் அன்றைய மனநிலைக்குப் பின்புலமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
வாசிப்பு அனுபவம் என்பது புத்தகத்தை மட்டும் பொறுத்த விஷயமல்ல. வாசிப்பவரின் வாசிக்கும் காலத்து மனநிலையும் அவரது அன்றைய அறிவும் அறியாமையும் குறிப்பாக வயதும், அன்று அவர் நம்பும்  லட்சியங்களும் கோட்பாடுகளும் அவர் வளரும் சுற்றுச்சூழலும் அக்கால அரசியலும் பண்பாடும் எனப் பல காரணிகள் இருக்கின்றன. சுமாரான புத்தகம் மகத்தான புத்தகமாக ஒருவருக்குப் படுவதும் மகத்தான புத்தகத்தை ஒருவர் வாசிக்க முடியாமல் போவதும் இதுபோன்ற காரணங்களால்தான் என்று சொல்லத்தோன்றுகிறது.
சென்ற நவம்பர் 21ஆம் தேதி, சிவகாசியில் ஒரு கல்யாணத்தில் இருந்தபோது, அந்த மரணச்செய்தி வந்தது. தோழர் பெரியசாமி காலமாகிவிட்டார். 20 ஆம் தேதி கும்பகோணத்தில் மகன் வீட்டில் இறந்த அவர் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊரான ராமச்சந்திராபுரம் என்கிற பட்டிக்குக் கொண்டு வருகிறார்கள். நானும் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், தோழர்கள் சாமுவேல்ராஜ், அர்ஜூனன் என ஒரு குழு ராமச்சந்திராபுரத்துக்குச் சென்றோம்.
1926 இல் விருதுநகர் மாவட்டத்தின் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் பிறந்தவர் தோழர் எஸ்.பெரியசாமி. கைநெசவு செய்வதை பாரம்பரியத் தொழிலாகக்கொண்ட உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்த அவர் இளம் வயதிலேயே காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் பொதுவாழ்வில் இணைந்தவர். காந்திஜி மதுரைக்கு வந்தபோது ராமச்சந்திராபுரத்திலிருந்து ஒரு இளைஞர் படையை அழைத்துச்சென்று தரிசித்து  வந்தவர். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தந்திக்கம்பிகளை அறுத்துக் கிணற்றில் போட்டு கம்பத்தைச் சாய்த்து அதில் பங்கேற்றவர். பிரிட்டிஷ் காவலர்களின் கையில் பிடிபடாமல் தலைமறைவாக மேற்குத்தொடர்ச்சி மலைகளில் திரிந்தவர். வத்திராயிருப்பில் தோழர் பி.சீனிவாசராவின் பேச்சைக்கேட்டு மனப் போராட்டத்துக்கு ஆளாகி காந்திஜியை விட்டு விலகிக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். 1946 ஜுன் மாதம் வத்திராயிருப்பில் நடைபெற்ற கிசான் சபா மூன்றாவது மாநில மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றித் தலைவர்களின் உரைகளைக் கேட்டு மேலும் பிடிப்புள்ள கம்யூனிஸ்ட்டாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.
விடுதலைக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது ‘‘எல்லாம் முடியவில்லை.முன்னேறுவோம் தோழர்களே” என்று சொன்ன கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்ட காலம் வந்தது. அரசைக் கவிழ்க்க சதி செய்தார்கள் என்கிற பேரில் ஊர் ஊருக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது சதி வழக்குகளை ஜோடித்து கைதுசெய்து சிறையிலடைத்த நாட்களில் இராமநாதபுரம் சதி வழக்கில் ஆயுதம் தாங்கிக் கலகம் செய்ததான பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேர்களில் ஒருவராக தோழர் பெரியசாமி மதுரைச் சிறையில் மூன்றரை ஆண்டுகாலம் அடைபட்டிருந்தார்.  அந்த நாட்களில் மகத்தான  கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளே நடத்திய அரசியல் வகுப்புக்களைக் கேட்டு உரம்பெற்றார். அதே நாட்களில் பொய்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தோழர்  பாலு  தூக்கிலிடப்பட்ட நாளில் தோழர் பெரியசாமி அங்கிருந்தார். தூக்கிலிட அழைத்துச் செல்வதற்கு முதல் நாள் சிறையில் கைதிகள்  யாரும் தூங்கவில்லை. தோழர் பாலு உரத்த குரலில் இரவெல்லாம் பாடிக்கொண்டிருந்தார்:
“செங்கொடி என்றதுமே -எனக்கோர்
ஜீவன் பிறக்குதம்மா-அது
நம்கொடி என்பதிலோர் -வீர
நாதம் பிறக்குதம்மா…
என்ற வரிகளை நாளை தூக்கிலேறப்போகும்  தோழர் பாலு பாடியபோது கதறி அழுத தோழர்களில் பெரியசாமியும் ஒருவர். கண்ணீரைத்துடைத்துவிட்டுக் கம்பீரமாக தோழர்கள் இன்குலாப் முழக்கமிட்டபோது  உயர்ந்த முஷ்டிகளில் தோழர் பெரியசாமியின் கரங்களும் இருந்தது.
சிறைமீண்ட பிறகு காங்கிரசின் கொள்கைகளால் நசிந்து கிடந்த நெசவுத்தொழில் உழைப்பாளி மக்களைக் குடும்பம் குடும்பமாக பட்டினிச்சாவுக்குள் தள்ளிக்கொண்டிருந்தது. எண்ணற்ற மனுக்களை ராஜாஜி அரசாங்கம் குப்பையில் போட்டது. பட்டினிச் சாவைக் கண்டுகொள்ளவில்லை. மில் முதலாளிகளுக்கு ஆதரவான காங்கிரஸ் கைத்தறி நெசவாளர்களை எப்படிக் கண்டுகொள்ளும்? ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பட்டினிப்பட்டாளத்தின்  பாதயாத்திரை என்ற பேரில், கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின்படி, தோழர் குருசாமி தலைமையில் 103 பேர் கொண்ட குழுவாக, 1952 அக்டோபர் 25ஆம் தேதி புறப்பட்ட நடைப்பயணம் 450 மைல்கள் நடந்து தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்தபடி சென்னை சேர்ந்தது. டிசம்பர் 4 ஆம் நாள் முதல்வர் ராஜாஜியை சந்தித்தது. அவர் பட்டினிப்பட்டாளத்தைக் கேலி பேசியதோடு எந்தக்கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. கோரிக்கை நிறைவேறாமல் திரும்புவதில்லை என்கிற உறுதியோடு சென்னையிலேயே இக்குழு தங்கி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தது. ராஜாஜி அரசு மேலும் மனம் இறுகி இத்தோழர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி போன்றவர்களின் தொடர் முயற்சியால் போராட்டம் வென்றது. கைத்தறிக்கு ரிபேட், மில் துணிகளுக்கு சிறப்பு வரி, நெசவாளர்கள் பட்டினி தீர கஞ்சித்தொட்டி திறப்பு என்கிற வெற்றியோடு தோழர் பெரியசாமியும் தோழர்களும் ஊர் திரும்பினார்கள்.
கட்சியின் பணிகளில் முன்னைவிடவும் தீவிரமாகப் பணியாற்றும் உரத்தை தோழர் பெரியசாமி இப்போது பெற்றிருந்தார். இப்போராட்டம் பற்றி விரிவாக ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர் கே.அர்ஜுனன் “கைத்தறி நெசவாளர்களின் பட்டினிப் பட்டாளப் போராட்டம் மீண்டும் உயிர்த்தெழுந்த வரலாறு” என்னும் சிறுநூலில் எழுதியிருக்கிறார். பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக அது வந்துள்ளது.
1964இல் கம்யூனிஸ்ட் கட்சி  தத்துவார்த்தப் பிரச்சனைகளால் இரண்டாக உடைந்தது. கட்சிப் பிளவால் மனம் சிதைந்த  எண்ணற்ற தோழர்களில் ஒருவராக தோழர் பெரியசாமி இருந்தார். இரு கட்சியோடும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் கும்பகோணம் சென்று அங்கு சிறு ஜவுளிக்கடை வைத்துக்கொண்டு இரு கட்சிக்கும் இணக்கமான தோழராக வாழ்ந்து வந்தார். 2002இல் மார்க்சிஸ்ட் கட்சி பட்டினிப்பட்டாளத்தின் பாதயாத்திரை  50ஆவது ஆண்டுவிழா நடத்தியபோது  கும்ப கோணத்திலிருந்து தோழர் பெரியசாமியை அழைத்து வந்து கௌரவப்படுத்தியது.
அவர் தனது சொந்த சேமிப்பிலிருந்து சில லட்சம் ரூபாய்களைச் செலவழித்து, 1952இல் பாத யாத்திரை துவக்கிய இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை சாலையில் பட்டினிப்பட்டாளப் பாதயாத்திரை நினைவு நூலகம் ஒன்றைக் கட்டினார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மான அலுவலகம் ஒரே கட்டிடத்தில் இயங்கவேண்டும் என்கிற அவரது ஆசையால் நூலகத்துக்கு அருகிலேயே இன்னொரு கட்டிடத்தைக் கட்டி நடுவில் சுவர் வைத்து  இரண்டாகப்பிரித்து (2007இல்)இரு கட்சிகளிடமும் சாவிக்கொத்தைக் கொடுத்தார். நூலகம் இன்றும் மக்கள் பயன்பாட்டில் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அக்கட்டிடத்தில் இயங்குகிறது. கூட்ட அரங்கை இரு கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன.
கட்சி இரண்டானதை சாகும்வரை ஏற்றுக்கொள்ளாத மனம் அவருடையது. கட்டிடம் ஒன்றாகக் கட்டிக் கொடுத்து இரு கட்சித் தோழர்களும் ஓரிடத்தில் இயங்குவதையாவது பார்க்க ஆசைப்பட்ட உள்ளம் அவருடையது.தத்துவத்தால் பிரிந்தவர்களை கட்டிடத்தால்  இணைக்க விழைந்த எளிய நல்ல உள்ளம் மறைந்துவிட்டது. இறப்பதற்கு முந்தின நிமிடம்வரை  கம்யூனிஸ்டாக – ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோழனாகத் தன்னை உணர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொண்டவராகவே வாழ்ந்தவர் தோழர் பெரியசாமி. அவரது பேரன் தன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த சலவைத் தொழிலாளியின் மகளை விரும்புவதை அறிந்து குடும்பத்தின் தயக்கங்களை உடைத்து சமீபத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறார். கம்யூனிஸ்ட் உணர்வோடுதான் இறுதிவரை வாழ்ந்திருக்கிறார்.
ஒன்றுபட்ட இயக்கம் பற்றிய நிறைவேறாத அவரது கனவின் ஏக்கம் அவரது முகத்தில் படிந்திருப்பதை அவரது உடலுக்கு மாலை அணிவித்தபோது கண்டேன்.அந்த ஏக்கத்தைத் துடைத்துவிட மனம் துடித்தது. சஞ்சலப்பட்ட மனதோடு இந்த நிமிடம் வரை அவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
(தொடரும்)

Related posts