You are here
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

ஆசிரிய முகமூடி அகற்றி…

ச. மாடசாமி | அறிவியல் வெளியீடு,

சென்னை- 86 | பக்.72 ரூ.60 | போன் : 044-28113630பிராங் மக்கோர்ட் (1930-2009) அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ஆங்கில ஆசிரியர்.
மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை. மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் தம் வகுப்பறையை மக்கோர்ட் திறந்து வைத்தார்.
அவை கற்பனை நிறைந்த வகுப்பறைகளும் கூட. வெவ்வேறு நாட்டுச் சமையல் குறிப்புகளுக்கு இசையமைத்துப் பாடி மகிழ்ந்த வகுப்பறைகள்.
மட்டன் அரை கிலோ, மிளகாய்ப் பொடி 100 கிராம், உப்பு  இரு  சிட்டிகை என வரும் அட்டவணையை இசைக்கருவிகளோடு பாட்டாகப் பாடி அமர்க்களப்படுத்திய வகுப்பறைகள்.
மக்கோர்ட் மகா சாமர்த்தியசாலி. ஆனால் எழுதும்போது அப்பாவிபோல் எழுதுகிறார். எளிமையாகவும் வெளிப்படையாகவும் அமைந்த அவர் எழுத்தை வாசிப்பது நாட்டுப்புறக் கதை கேட்பதுபோல ஒரு குதூகலமான அனுபவம்.
அவர் எழுதிய Teacher Man நூலின் வாசிப்பு அனுபவம் இது. மொழிபெயர்ப்பு அல்ல. மக்கோர்ட்டின் வார்த்தைகளோடு என் வார்த்தைகளையும் கலந்தே இந்நூலை எழுதியிருக்கிறேன்.
மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள்- நடந்து சலித்த பாதையில் இருந்து விலக, விடுபட இந்நூலை வாசிப்பது அவசியம்.
ச.மாடசாமி

தோட்டாக்கள் பாயும் வெளி

ந. பெரியசாமி | புதுஎழுத்து காவேரிப்பட்டினம் |   பக்.68 | ரூ.70 போன்: 90421 58667

ஆசைகொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல் ஓட்டித் திரிந்தேன். வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள். தள்ளிப் பழகி சிறுசிறு காயங்களுடன் பெடல் அடித்துக் கொண்டிருந்தேன். விடாப்பிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனைகளோடு தொடர்ந்தேன். அதன் நுணுக்கங்கள் பிடிபட வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன். இது என் கவிதைகளுக்கும்  பொருந்தும்… என்று தன் தொகுப்பின் முன்னுரையில் எழுதும் ந.பெரியசாமி நதிச்சிறை, மதுவாகினி ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கெனவே கொடுத்தவர். தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்கிவரும் ஒரு படைப்பாளி. புதுவிசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பவர்.
தனது மன அவசங்களையும், புறஉலகின் யதார்த்தங்களையும், சமூகத்தின் மீதான கோபதாபங்களையும், அடர்த்தியான கவிதை மொழியில் வெளிப்படுத்தும் இவர் குழந்தைமையின் அன்பிலும், கருணையிலும் மனம் நெகிழ்பவர். தோட்டாக்கள் பாயும் வெளி என்னும் இவருடைய மூன்றாவது தொகுப்பு நல்ல சில கவிதைகளை உள்ளடக்கிய பிரதி. இருளும் ஒளியும் என்ற தலைப்பிலான அவருடைய ஒரு கவிதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மரம்
தன் நிழலைக் கிடத்தி
இரண்டாகக் கிழித்தது என்னை.
அம்மணச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன்
வெய்யில் சுட்டது.
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
சுருங்கியது மர நிழல்.
– சிகப்பு

நூல் ஏணி

 ரவிக்குமார் | மணற்கேணி பதிப்பகம்

சென்னை- 5 | பக்.96 | ரூ.80 | போன்: 9443033305

நன்றியுணர்வுக்குப் பெயர்போன சமூகம் தலித் சமூகம்.  தான் சாப்பிட்ட பழைய சோற்றுக்காகத் தனது உயிரையே தாரை வார்த்த தலித்துகளை நாம் அறிவோம். தினையிலும் சிறிய அளவு உதவியை ஒருவர் செய்தால்கூட அதை தினந்தோறும் சொல்லி மகிழும் மனம் தலித்துகளுடையது. அதற்குச் சான்று பகர்வதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு.
தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலர் தம்மை பாதித்த, தம் மீது செல்வாக்கு செலுத்திய தலித் அல்லாத ஆசிரியர்களை இங்கே நினைவுகூர்ந்துள்ளனர். சமத்துவத்தின்மீது மதிப்புக் கொண்ட அந்த ஆசிரியர்களின் முன்னுதாரணம் மேலும் பல ஆசிரியர்களை அந்தத் திசை நோக்கி ஈர்க்கும் என நம்புகிறேன்.
ஃப்ரான்ஸ் நாட்டின் கல்வியைச் சீரமைப்பதற்கான பரிந்துரைகளை அந்த நாட்டு அரசாங்கம் கோரியபோது அந்நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் பியர் பூர்தியூ என்பவர் ஒன்பது பரிந்துரைகளை முன்வைத்தார். ÔÔகல்வி என்பது வாழ்நாள் முழுதும் நீடிக்க வேண்டும். வேலையில் சேர்வதோடு படிப்பை முறித்துவிடக்கூடாது’’ என்பது அவர் முன்வைத்த பரிந்துரைகளில் ஒன்று. அது நமது நாட்டுக்கும் பொருந்தும். இதன் பொருள் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதல்ல. அவர்கள் தம்மை எப்போதும் மாணவர்களாக உணர வேண்டும் என்பதுதான் இதற்கு உண்மையான அர்த்தம். தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் இந்த நூலை ஒரு மாணவராக இருந்து கற்க வேண்டும் என வேண்டுகிறேன்.

Related posts